பள்ளிப்புரம் கோட்டை - PALLIPPURAM FORT
முன்னுரை
”திருவாங்கூர் தொல்லியல் வரிசை” (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES) என்னும் பெயரில்
பதிப்பிக்கப்பட்ட தொல்லியல் நூல் தொகுதியில், தற்போதையத் தமிழகத்தின் தென்கோடிப் பகுதி
மற்றும் பழந்தமிழ்நாட்டின் சேர நாட்டுப்பகுதி ஆகிய நிலப்பரப்பில் காணப்படுகின்ற தொல்லியல்
எச்சங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் பற்றிய அரிய வரலாற்றுப் பதிவுகள் கூறப்படுகின்றன.
இந்த நூலின் தொகுதிகளில் சில படிக்கக் கிடைக்கும்போது, சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும்
விழைவு தவிர்க்க இயலாததாகின்றது. சங்க காலத்துத்
தமிழகத்தின் முப்பெரும் நாடுகளுள் ஒன்றாகச்
சேர நாடு அமைந்திருப்பினும், சங்ககாலத்துக்குப் பின்னர் இடைக்காலத்திலிருந்து
சேர நாட்டின் மொழி, மக்கள் பண்பாடு ஆகியவற்றில் தனித்தொரு மாற்றம் இருப்பதாகவே தோன்றுகிறது.
மொழி தமிழாகவும், எழுத்து வட்டெழுத்தாகவும் இருந்த நிலை மெல்ல மாற்றம் பெற்று மொழி
மலையாளமாகவும், வட்டெழுத்திலிருந்து பிரிந்து தமிழ்-கிரந்த எழுத்தின் துணையோடு எழுத்தும்
மலையாளமாகவும் புது உருவம் கொள்கின்றன. இந்த மாற்றங்களை, தமிழ் வேரின் அருகிலிருந்து
அடையாளம் காணக் கணக்கற்ற தரவுகளை உள்ளடக்கியதாக மேற்படி நூல் தொகுதி அமைகிறது. வட்டெழுத்துக் கல்வெட்டுகள் மற்றும் வட்டெழுத்துச்
செப்பேடுகள் ஆகியன பற்றிப் பகிர்ந்துகொள்வதற்கு நிறையச் செய்திகள் உள்ளன. சிலவற்றைப்
பகிர்ந்துகொண்டும் வருகிறேன். இங்கே, அண்மையில் படித்த 15-ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் செய்தி ஒன்றின் பதிவைப்
பகிர்ந்துகொள்கிறேன்.
T.A. கோபிநாத ராவ்
திருவாங்கூர் அரசின் தொல்லியல் துறைத்
தலைவர்களாக (கண்காணிப்பாளர் பதவியில்) இருந்த மூன்று அறிஞர்களில் ஒருவர் T.A. கோபிநாத
ராவ் அவர்கள். மற்ற இருவர் K.V. சுப்பிரமணிய ஐயர், A.S. இராமநாத அய்யர் ஆகியோர். இம்மூவருமே
மேற்படி ”திருவாங்கூர் தொல்லியல் வரிசை”
(TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES) நூல் தொகுதிகளின் ஆசிரியர்களாவர். நூலின்
வரிசைகளில் பதினொன்றாம் வரிசையில் “பள்ளிப்புரம் கோட்டை அல்லது இந்தியாவில் உள்ள காலப்பழமையில்
முதலிடம் பெறும் ஐரோப்பியக் கட்டிடம்” என்னும்
தலைப்பில் ஒரே ஒரு ஆய்வுக்கட்டுரை இடம்பெறுகிறது. எழுதியவர் T.A. கோபிநாத ராவ் அவர்கள்.
பள்ளிப்புரம் கோட்டை
கொச்சித் தீவொன்றில் கட்டப்பெற்ற
கோட்டை பள்ளிப்புரம் கோட்டை. முன்னரே கூறியவாறு இந்தக் கட்டிடம் இந்தியாவிலேயே, ஐரோப்பியர்
எழுப்பிய மிகப் பழமையான கட்டிடம் என கோபிநாதராவ் குறிப்பிடுகிறார். இக்கட்டுரையில்
அடிக்குறிப்பில், இக்கோட்டையைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் யாவும் ஃபிரான்சிஸ் டே
(FRANCIS DAY) என்பவர் எழுதிய ”பெருமாள்களின்
நாடு” (LAND OF THE PERMAULS’) என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டவை என்று குறிப்பிடுகிறார்.
நம் கட்டுரையும் கோபிநாதராவ் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் எனலாம்.
வாஸ்கோ ட காமா (VASCO de GAMA)
1498-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம்
நாள். கடல் வழிப் பயணம் மேற்கொண்ட வாஸ்கோ ட காமா என்னும் போர்த்துகீசியரின் கண்களுக்கு
இந்திய நிலம் புலப்பட்ட நாள். அடுத்து இரு நாள்களில் மே, 20 அன்று கோழிக்கோட்டில் நுழைவு.
வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இறங்கிய இடம்
வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இறங்கிய இடம்
பாண்டிபோ (BONTAYBO) என்னும் ”மூர்”
(MOOR) இனத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியோடு
காமா, கோழிக்கோட்டு அரசர் சமூத்திரியைச் (ZAMORIN) சந்தித்துப்பேசுகிறார். பாண்டிபோவுக்குப்
போர்த்துகீசிய மொழியும், மலையாள மொழியும் தெரிந்திருந்தது. அதனாலேயே, காமா சமூத்திரியிடம்
பேச இயன்றது. காமாவும் சமூத்திரியும் பேசி உடன்படிக்கையை எட்டுகின்றனர். போர்த்துகீசியர்
மலபார் பகுதியில் வணிகம் நடத்தலாம். மலபார் பகுதியில் ஏற்கெனவே மூர் இனத்தவர், அரபு
நாட்டிலிருந்து வந்து வணிகம் நடத்தத் தொடங்கிவிட்டவர்கள். மலபார்ப் பகுதியில் மிளகு,
நறுமணப் பொருள்களின் வணிகத்தில் இவர்கள் போட்டியேதுமின்றி நிலைகொண்டவர்கள். காமா, அரசர்
சமூத்திரியிடம் வணிக ஒப்பந்தம் ஏற்படுத்தியதும் மூர் மக்கள் கலக்கமுறுகின்றனர். காமா
தலைமையில் வந்த போர்த்துகீசியர், ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாட்டின் பிரதிநிதிகளாக வணிகம் செய்ய வந்தவர் அல்லர் என்றும்,
உண்மையில் அவர்கள் கடற்கொள்ளையர் என்றும் அரசரிடம் கூறி அரசரின் மனத்தில் நஞ்சு கலக்கின்றனர்.
போர்த்துகீசியரோடு அரசருக்கிருந்த உறவில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, காமா 1499-ஆம்
ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நாடு திரும்புகிறார்.
மீண்டும் போர்த்துகீசியர் வருகை
1500-ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம்
15-ஆம் நாளில் போர்ச்சுகல் நாட்டின் கடற்படைத் தளபதி காப்ரல் (PEDRO ALVAREZ
CABRAL) தலைமையில் கோழிக்கோடு நோக்கி மீண்டும் ஒரு பயணம் தொடங்கியது. கடற்பயணத்தில்
நேரும் பல பேரின்னல்களைக் கடந்து கப்பல்கள் கோழிக்கோடு அடைந்தன. இம்முறை சமூத்திரி
நட்புக்காட்டியதுடன் ஓர் ஒப்பந்தத்தையும் முடிக்கிறார். அதன்படி, தளபதி காப்ரல் கோழிக்கோட்டில்
ஒரு தொழிற்சாலையைத் திறக்கிறார். ஆனால், இப்போதும் ஒரு சிக்கல் எழுகிறது. மூர் வணிகர்களுக்கு
வணிகப்பொருள்களைக் குறைவின்றி வழங்கிய அளவுக்குப் போர்த்துகீசியருக்கு அரசர் சமூத்திரி
வழங்கவில்லை. சினமுற்ற தளபதி காப்ரல், கடலில் வணிகப்பொருள்களோடு இருந்த, மூர் இனத்து
வணிகரின் கப்பலொன்றைத் தாக்கி, ஆள்களைக்கொன்று வணிகப்பொருள்களைக் கைப்பற்றினான். கரையில்
இருந்த மூர் இனத்து வணிகர் இதை எதிர்க்கவே, தளபதி காப்ரல் மேலும் சினந்து கோழிக்கோடு
நகரின்மீது ஒரு தாக்குதலை நிகழ்த்தி 600 பேரைக் கொன்றான். இதன் விளைவாக அவன் கோழிக்கோட்டைவிட்டு
அகலவேண்டியதாயிற்று.
அங்கிருந்து பயணப்பட்ட தளபதி காப்ரல்
கொச்சி நகரை அடைந்தான். இது நிகழ்ந்தது கி.பி.1500, டிசம்பர் மாதம் 20-ஆம் நாள். கொச்சி
அரசர், அயலாரைப் பணிவன்புடன் வரவேற்று வணிகம் செய்யப் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து
ஒரு தொழிற்சாலையையும் தளபதி காப்ரலுக்கு அளித்தார். இதைக் கேள்வியுற்ற சமூத்திரி, போர்த்துகீசியரை
விரட்ட, 1500 பேர்கள் அடங்கிய கப்பற்படையைக் கொச்சியை நோக்கி அனுப்பினார். சமூத்திரியின்
படை கொச்சியை நெருங்கியதும் இச்செய்தியைக் கொச்சி அரசர் தளபதி காப்ரலுக்குத் தெரிவித்ததோடு, தாக்குதலின்போது உதவுவதாகவும் கூறியிருந்தார். தளபதி
காப்ரல் இந்தப் படையை எதிர்த்துத் துரத்தினான். ஏனோ சமூத்திரியின் படை போர்த்துகீசியரோடு
நேரடியாக மோதாமல் அகன்றது. இதற்குப் பின்னர்
தளபதி காப்ரலும் கொச்சிக்குத் திரும்பாமல் நாட்டை நோக்கிப் புறப்பட்டான். போர்த்துகீசியரின்
முதல் கொச்சித் தொடர்பு இவ்வாறு நிகழ்ந்தது.
போர்த்துகீசியரின் வருகை-மூன்றாம்
முறையாக
மூன்றாம் முறையாகப் போர்த்துகீசியர்
அணியொன்று மீண்டும் காமாவின் தலைமையில் 1502-ஆம் ஆண்டு, மார்ச்சு மூன்றாம் நாள் புறப்படுகிறது.
போர்ச்சுகல் நாட்டு அரசரே, சமூத்திரிகளைத் தாக்கும் திட்டத்துடன் காமாவை அனுப்புகிறார்.
வாஸ்கோவின் உறவினரான ஸ்டீஃபன் ட காமா (STEPHEN de GAMA) அவருடன் இணைந்துகொள்கிறார்.
கோழிக்கோட்டை அடைந்து தாக்குகின்றனர். ஃபிரான்சிஸ் டே தம் நூலில், காமாவின் அடாத செயல்களைப்
பற்றிக் குறிப்பிடுகிறார். தாக்குதலின்போது கொடுமைகள் நிகழ்கின்றன. அரசுத் தூதுவர்கள்
தூக்கிலிடப்படுகின்றனர். கிறித்தவ நாடுகளின் வரலாற்றில் ஒரு கறையாக இந்நிகழ்வு அமைந்ததாயும் மானுடத்துக்கே இது ஒரு இழிவு என்றும் ஃபிரான்சிஸ் டே குறிப்பிடுகிறார். காமா, பின்னர் கொச்சிக்குச் சென்று வணிகத் தொழிற்சாலை ஒன்றை அமைத்து
ஒரு வணிகர் பிரிவை அங்கே இருத்திவிட்டுச் செப்டம்பர் மாதத்தில் தாயகம் திரும்புகிறான்.
கொச்சி மீது போர்
கொச்சி அரசர் போர்த்துகீசியருடன்
வணிக நிமித்தம் இணைந்து செயல்பட்டமை கொச்சி அரசர்க்குத் தீங்காய் முடிகின்றது. கோழிக்கோட்டு
அரசர் சமூத்திரியின் பகைமையை வலுக்கச்செய்தது.
பெரும்படையுடன் சமூத்திரி கொச்சி மீது படையெடுப்பு நிகழ்த்துகிறார். கொச்சி
அரசர், கொச்சிக்கருகில் உள்ள வைப்பீன் (VYPEEN) என்னும் தீவில் அடைக்கலம் புகுகின்றார்.
கொச்சி அரசரின் நல்லூழ் காரணமாகப் போர்த்துகீசியரின் கப்பற்படைப் பிரிவு ஒன்று ஃபிரான்சிஸ்கோ
ட ஆல்புக்கர்க் (FRANCESCO de ALBUQUERQUE) என்னும் தளபதியின் தலைமையில் 1503, செபடம்பர்
20-ஆம் நாள் மேலைக்கடற்கரை வருகிறது. சமூத்திரியின் படைகளைத் தோற்கடித்து, கொச்சி அரசரை
அவரது பதவியில் அமர்த்தியது. சமூத்திரியின் நட்பு அரசரான பிராமண அரசரின் ஆட்சிப்பகுதியான
எடப்பள்ளியும் போர்த்துகீசியரால் கைப்பற்றப்படுகிறது. கொச்சி அரசரும் போர்த்துகீசியரின்
நட்புக் கிடைத்த மகிழ்ச்சியில், அவர்கள் கொச்சியில் ஒரு கோட்டை கட்டிக்கொள்ள ஒப்புதல்
அளிக்கிறார். 1503, செபடம்பர் 26-ஆம் நாள் பணி தொடங்கி, அக்டோபர் முதல் நாள் கோட்டைக்கு
“மானுவல்” (MANUEL) என்று பெயரும் சூட்டப்படுகிறது. இது அப்போது போர்ச்சுகல் நாட்டை
ஆண்டுகொண்டிருந்த அரசரின் பெயராகும்.
பள்ளிப்புரம் கோட்டை
அடுத்த சில ஆண்டுகளில் கொடுங்கலூர்
மற்றும் பள்ளிப்புரம் கோட்டைகள கட்டப்பெறுகின்றன. கடலிலிருந்து கழிமுகப்பகுதிக்குள்
நுழையும் கட்டுப்பாட்டு வாயில் போன்று பள்ளிப்புரம் கோட்டை பயன்பட்டது எனலாம். கோட்டைக்
கட்டிடம் மிகவும் பெரிதான அமைப்பில்லை. கண்காணிப்புக்கும் காவலுக்கும் நிறைய ஆள்கள்
தேவையில்லை. இதைப்பற்றி காஸ்பர் கொரியா (GASPER CORREA) எழுதியுள்ள குறிப்பில், “பள்ளிப்புரம்
கோட்டை 1507-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அளவில் சிறியதாயினும் கழிமுகத்தின் வாயிலாகத்
திகழ்ந்தது; காவலுக்கு இருபது வீரர்களே இருந்தனர். அமைப்பில் எண்கோண வடிவுடையது. எண்
முகப்புகளிலும் பீரங்கி நிறுத்தும் இடவமைப்புக்கொண்டது. இதுவே இந்தியாவில் ஐரோப்பியரின்
மிகப் பழமையான கட்டிடமாக இருக்கக்கூடும்” என்று
உள்ளது. பள்ளிப்புரம் கோட்டை கட்டப்படும்போதும் அதற்குப் பின்னரும் அலிக்கோட்டை அல்லது
ஆயக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. எல்லோரது குறிப்பிலும் இது எண்கோண வடிவக் கோட்டை
என்றிருப்பது வியப்பே. காஸ்பர் (GASPER) எழுதிய குறிப்பிலும்ம், ஃபிரான்சிஸ் டே
(FRANCIS DAY) எழுதிய குறிப்பிலும் எண்கோண வடிவக் கோட்டை என்றே உள்ளது. உண்மையில் இக்கோட்டை
அறுகோண வடிவம் கொண்டதாகும்.
பள்ளிப்புரம் கோட்டை - முன்புறத் தோற்றம்
பள்ளிப்புரம் கோட்டை - முன்புறத் தோற்றம்
மேலைக் கடற்ரையில் போர்த்துகீசியரின்
ஆதிக்கம் தொடங்கிய காலக்கட்டத்தில் கட்டப்பெற்ற மூன்று கோட்டைகளில் இன்று எஞ்சியிருப்பது
பள்ளிப்புரம் கோட்டை ஒன்றே. கொச்சிக் கோட்டை இருந்த தடயமே இன்றில்லை. ஒரு காலத்தில்
பெயர்பெற்று விளங்கிய கொடுங்கலூர்க் கோட்டையின் எச்சங்கள் இன்று ஒரு மண் மேட்டுக்குள்
அடக்கம். அறுபது அல்லது எழுபது கஜம் நீளத்தில் கோட்டையின் இடிந்த சுற்றுச் சுவரும்,
வாயில் பகுதியும், நிலவறையும் இந்த மண்மேட்டுக்குள் புதையுண்டு காணப்படுகின்றன. நிலவறை, வெடி மருந்துக் கிடங்காகப் பயன்பட்டிருக்கவேண்டும்.
முழுதும் சிதைந்து அழிந்துபோகாமல் இருக்கும் ஐரோப்பியரின் கட்டுமானம் பள்ளிப்புரம்
கோட்டை ஒன்றே.
பள்ளிப்புரம் கோட்டை - இன்னொரு தோற்றம்
பள்ளிப்புரம் கோட்டை - இன்னொரு தோற்றம்
கொச்சிக்கு வடக்கில் இருக்கும் தீவு
வைப்பீன் தீவு. இத்தீவின் வடகோடியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் பள்ளிப்புரம். இந்தத்
தீவு பதின்மூறு மைல் நீளம் கொண்டது. அகலம், ஆங்காங்கே ஒரு மைல் முதல் மூன்று மைல் வரையிலும்
மாறிக் காணப்படும். கடலோடு வந்து கலக்கும் பல்வேறு நீர்க்கால்களால் கொண்டு சேர்க்கப்பட்ட
வண்டல் மண்ணால் இத்தீவு உருவானது என்று கருதப்படுகிறது. முதன்முதலாகப் போர்த்துகீசியர்
நுழைந்த சமயத்தில், இத்தீவு கொச்சி அரசரின் உடைமையாய் இருந்தது. வைப்பீன் தீவின் வட
கோடியில் கட்டப்பெற்ற இக்கோட்டை, அயலார் கப்பல்கள் பெரியாற்றின் வாய்ப்பகுதி வழியே
நுழையாவண்ணம் கண்காணித்துக் காக்கும் துறைபோல இயங்குவதற்காகவே கட்டப்பெற்றது. இக்கோட்டைக்கு
நேர் எதிரே பெரியாற்றின் எதிர்க்கரையில் கொடுங்கலூர்க் கோட்டை கட்டப்பெற்றுள்ளது.
பள்ளிப்புரம் கோட்டை - செய்திப் பலகை
பள்ளிப்புரம் கோட்டை - செய்திப் பலகை
முன்னரே குறித்தவாறு, பள்ளிப்புரம்
கோட்டை அறுகோண வடிவிலான கட்டிடம் ஆகும். மூன்று அடுக்குகளைக்கொண்டது. கீழ்மட்ட அடுக்கு
அல்லது தரைமட்ட அடுக்கின் (LOWEST
FLOOR/GROUND FLOOR) கட்டிடப்பகுதி, கோட்டை அமைந்துள்ள தரைப்பகுதியோடு ஒட்டி அமையவில்லை.
தரைப்பகுதியின் மட்டத்திலிருந்து ஓர் ஐந்தடி உயரத்துக்கு மேடை போலமைத்து அதன் மீதுதான்
கோட்டையின் கீழடுக்கு தொடங்குகிறது. இந்த மேடைப்பகுதியின் கீழே ஒரு நிலவறை
(CELLAR) அமைக்கப்பட்டுள்ளது. நிலவறைக்குச் செல்லும் சாய்தளப் பாதை வடக்கிலிருந்து
தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இப்பாதை மூன்றடி அகலமும் மூன்றடி உயரமும் கொண்ட குறுகலான
பாதையாகும். பாதையைக் கடந்து முடிந்ததும் உள்ள நிலவறை ஏழடிக்கு ஏழடிச் சதுரப் பரப்பும்
நான்கடி உயரமும் கொண்டது. வெடி மருந்து (GUN POWDER) போன்ற பொருள்களைச் சேமித்து வைக்க
இந்த நிலவறை பயன்பட்டிருக்கவேண்டும். கோட்டையின் நுழைவாயில் ஐந்தேகால் அடி நீளமும்,
ஏழடி உயரமும் அமைந்த கருங்கல் (GRANITE) கட்டுமானம். பரப்பும், வடிவமும் நன்கு செதுக்கிச்
செம்மைப்படுத்தப்பட்ட கருங்கற்களே கட்டுமானத்துக்குப் பயன்பட்டன. நுழைவாயிலின் மேற்பகுதி,
வளைவான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விட்டப்பகுதி செம்மையான வார்ப்புக்கொண்டது.
நுழைவாயிலுக்குப் பின்புறம், அதன் நீளம் ஐந்தேகால் அடியிலிருந்து ஏழே கால் அடியாக விரிகிறது.
கட்டிடச் சுவரை அணுகுமுன்பே மேற்குப் புறத்தில் ஒரு கிணறு காணப்படுகிறது. மூன்றே கால்
அடிச் சதுரமும், பதினாறடி ஆழமும் உடைய கிணற்றுச் சுவரின் அகலம் அரை அடி. T.A. கோபிநாத
ராவ் அவர்கள் ஆய்வு செய்த பொழுதில், கிணற்றில் இரண்டடி ஆழத்துக்குத் தண்ணீர் இருந்துள்ளது.
தண்ணீர் குடிக்கும் நிலையில் நன்கிருந்ததாகப் பள்ளிப்புரம் மக்கள் கூறியுள்ளனர் என்றும்
ஆனால் தற்போது கிணறு பயன்படுத்தப்பெறாமல் பேணுதலின்றிக் கிடக்கின்றது என்றும் ராவ்
அவர்கள் குறிப்பிடுகிறார்.
கிணற்றின் வடக்குத் திசையிலிருந்து
கட்டிடப்பகுதி இருக்கும் மேடைப்பகுதியைச் சென்றடையும் வண்ணம் நான்கு படிகள் உள்ளன.
படிகளைக் கடந்தவுடன் வடபுறத்தில், நிலவறையை நோக்கிச் செல்லும் ஒரு திறப்பு உள்ளது.
மேடைப்பகுதியின் மையத்தில், மூன்றடி விட்டமுள்ள வட்ட வடிவக் கற்பலகை ஒன்று காணப்படுகிறது.
இது தூணின் அடிப்பகுதியாகலாம். எனில், இந்த மையக் கல் பீடத்திலிருந்து ஆரக்கால்கள்
போல மர விட்டங்கள் பிரிந்து சென்று கட்டிடத்தின் இரண்டு தளத்தையும் தாங்கியிருத்தல்
வேண்டும்.
பள்ளிப்புரம் கோட்டை - வேறு தோற்றங்கள்
பள்ளிப்புரம் கோட்டை - வேறு தோற்றங்கள்
கோட்டைக் கட்டுமானம்-விரிவான விளக்கம்
கட்டிடம் அறுகோணவடிவில், ஆறு முகப்புகளைக்
கொண்டது எனக் கூறியிருந்தோம். இவ் ஆறு முகப்புகளும், வெளிப்புறத்தில் முப்பத்திரண்டு
அடி நீளமும், முப்பத்து நான்கு அடி உயரமும் கொண்டவை. இந்த முகப்புகளில் ஒவ்வொன்றிலும்
பீரங்கியை நுழைத்துச் சுடுகின்றவகையில் ஒரு புழை அல்லது பெரிய துளை அமைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் முழு வடிவிலான துளையமைப்பும், இரண்டாம் தளத்தில்
தளத்தின் சுற்று மதிலின் மேற்புற விளிம்பில் ”ப” வடிவிலான துளையமைப்பும் காணப்படுகின்றன.
முதலிரண்டு துளைகளும் இரண்டுக்கு இரண்டரை அடிக் கணக்கிலான அளவுள்ளவை. ஆறு முகப்புகளிலும்
சேர்த்துப் பதினெட்டு துளைகளில் பதினெட்டுப் பீரங்கிகளை நிறுத்தி வைக்க முடியும். கோட்டையின்
எல்லாத் திசைகளிலிருந்தும் வருகின்ற தாக்குதல்களை எதிர்கொள்ளவும், கோட்டையிலிருந்து
பீரங்கித்தாக்குதல் நிகழ்த்தவும் இந்தப் பாதுகாப்பு அமைப்பு போதுமானதாய் இருந்துள்ளது
எனலாம். இந்தப் பீரங்கித் துளைகளுக்கருகில் காணப்படும் சிறு சிறு துளகள், நாம் ஏற்கெனவே
குறிப்பிட்ட ஆரக்கால்கள் பதிக்கப்பட்ட இடங்களைக் குறிக்கும். மரத்தால் ஆன இந்த ஆரக்கால்களின்
எச்சங்கள் எவையும் தற்போது காணப்படவில்லை. மரச்சட்டங்கள் காலப்போக்கில் அழிந்துபோயிருக்கலாம்;
அல்லது, ஊர் மக்கள் அவ்வப்போது அவற்றைப் பிரித்துக்கொண்டுபோய் பயன்படுத்தியிருக்கக்கூடும்.
இதில் இரண்டாவதாகச் சொன்னதே நடந்திருக்க வாய்ப்புள்ளதாக
ராவ் அவர்கள் கருதுகிறார். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: ராவ் அவர்கள் கருதுவதே மிகச் சரியானதாய் இருக்கும்.
ஏனெனில், கங்கை கொண்ட சோழபுரத்தில், அரச மாளிகை இருந்த மாளிகைமேட்டுப் பகுதியிலிருந்து
அரண்மனைக் கட்டுமான எச்சங்களாய்க் கிடைத்த செங்கற்கள் அவ்வூர் மக்களால் வீடு கட்டப்பயன்பட்டன
என்பது அகழாய்வின்போது கண்டறிந்த ஒன்று.)
கோட்டை வாயிலை ஒட்டிய உள்பகுதியில்
பன்னிரண்டடிக்கு ஐந்தேமுக்கால் அடிப்பரப்புள்ள வெளி ஒன்று உள்ளது. இது தரைமட்டத்தில்
உள்ளது. இங்கிருந்து நேரே நிலவறைக்கோ அல்லது கட்டிடம் அமைந்துள்ள மேடைப்பகுதிக்கோ எளிதாகச்
செல்லலாம். அதற்காகவே இந்த வெளியிடத்தை விட்டிருக்கலாம்.
கோட்டைக் கட்டுமானத்துக்கு LATERITE என்னும் கல்லும் (செம்புறாங்கல்?) GRANITE என்னும்
கருங்கல்லும், மரமுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமானச் சுவர்கள் காரைப்பூச்சுக்கொண்டவை.
நுழைவாயிலும், மேடைப்பகுதியின் மையப்பகுதியில் காணப்படுகின்ற வட்டவடிவக் கற்பலகையும்
மட்டுமே கருங்கற்பணி. கோட்டையின் ஆறு பக்கங்களிலும் புதர்களும் மரங்களும் மிகுதியாக
வளர்ந்துள்ளன. சுவர்களின் மீதும் பெரிய பரப்பில் அவை படர்ந்துள்ளன. பெரிய அளவில் கட்டிடம்
சேதமுறவில்லை எனினும், இதே நிலை தொடர்ந்தால் கட்டிடம் அழிய வாய்ப்புள்ளது. நிலவறையை
நோக்கிச் செல்லும் பாதையின் மேற்புறத்தில் ஓரிரு கற்கள் பெயர்ந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.
கோட்டையின் மீது வளர்ந்து படர்ந்திருக்கும்
ஆலமரங்களும் புதர்ச்செடிகளும் கோட்டைக்கு ஓர் அழகான தோற்றத்தைத் தருகின்றன. ஆனால்,
அழிவிலிருந்து இக்கோட்டை பாதுகாக்கப்பட இந்த மரங்கள், புதர்ச் செடிகளை வேரோடு ஒழிக்கப்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிப்புரம் என்னும் இச்சிறிய ஊர்ப்பகுதி
மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. வடக்குப் பகுதி திருவாங்கூர் அரசுக்கும், நடுப்பகுதி
பிரிட்டிஷ் அரசுக்கும், தென்பகுதி கொச்சி அரசுக்கும் சொந்தமாயுள்ளன. கோட்டை, திருவாங்கூர்
எல்லைப்பகுதியில் உள்ளதால், கோட்டையை ஒரு பழங்காலச் சின்னம் என்னும் அடிப்படையில் திருவாங்கூர்
அரசே பாதுகாத்து வருகின்றது.
கோட்டையின் வரலாறு
போர்த்துகீசியர்கள், கொச்சி அரசன்
வீரகேரளவர்மனை அரச பதவியிலிருந்து கீழிறக்கிவிட்டு அவனுடைய அத்தையை ஆட்சியில் இருத்துகிறார்கள்.
வீரகேரளவர்மன், இலங்கையில் இருக்கும் டச்சுக்காரர்களின் உதவியை நாடுகிறான். அவனை மீண்டும்
அரசனாக்கினால், மலபார் பகுதியில் டச்சுக்காரர்களுக்கு மிளகு வணிகத்தில் நிறையச் சலுகைகள்
அளிப்பதாக உறுதியளிக்கிறான். கொச்சி அரசனின் அமைச்சனாய் இருந்தவன் பாலியத்து அச்சன்.
இவனுடைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கொச்சி அரசர்க்கு அமைச்சர்களாகப் பரம்பரையாகப் பணியாற்றியவர்கள்.
இந்த பாலியத்து அச்சனுக்கும் போர்த்துகீசியருக்கும் ஏதோ ஒரு தனிப்பகை இருந்த காரணத்தால்
இவனும் வீரகேரளவர்மனுடன் இணைந்து டச்சுக்காரர்களைப் போர்த்துகீசியருக்கு எதிராகத் தூண்டும்
பணியில் ஈடுபடுகிறான். டச்சுக்காரர்களைக் கொச்சிமீது தாக்குதல் நடத்த வைக்கின்றனர்.
டச்சுக் கடற்படைத்தலைவன் ரிக்லாஃப் வான் கோயன்ஸ் (RYKLOF VAN GOENS) தலைமையில்,
1662-ஆம் ஆண்டில் கொச்சிமீது தாக்குதல் நடக்கிறது. ஆனால், இத் தாக்குதலில் டச்சுக்காரர்களுக்கு
வெற்றி கிடைக்கவில்லை. டச்சுக்கடற்படை, வடக்கு நோக்கிப் பயணப்பட்டு கொடுங்கலூர்க் கோட்டையைத்
தாக்கிக் கைப்பற்றுகிறது. அடுத்த ஆண்டில் இன்னும் கூடுதல் வலுவுள்ள கடற்படைகொண்டு கொச்சி
தாக்கப்பட்டது. போர்த்துகீசியர் இத்தாக்குதலுக்கு அடிபணிய நேரிடுகிறது. கொச்சிக்கோட்டையை
டச்சுக்காரர்களுக்கே விட்டுக்கொடுக்கிறார்கள்.
இவ்வாறாக, மலபார்ப் பகுதியில் போர்த்துகீசியரின் ஆதிக்கம் மறைந்தது. போர்த்துகீசியரின்
அனைத்து உடைமைகளும் டச்சுக்காரர்களின் உடைமைகளாயின.
இந்தச் சூழ்நிலையில் ஹைதர் அலியின்
நுழைவு நிகழ்கிறது. நாளும் ஹைதர் அலியின் அதிகாரமும் ஆதிக்கமும் வளர்ந்து வரும் காலம்.
கி.பி. 1773-ஆம் ஆண்டு ஹைதர் அலி கோழிக்கோட்டுக்குள் நுழைகிறான். ஏழு ஆண்டுகளுக்கு
முன்னரே, 1766-இல், கொடுங்கலூர்க் கோட்டையையும் அலிக்கோட்டையையும் விலைக்கு வாங்கும்
முயற்சியில் ஹைதர் அலி டச்சுக்காரர்களோடு பேச்சு நடத்தியிருக்கிறான். கொச்சி அரசையும்,
திருவாங்கூர் அரசையும் கைப்பற்ற கொடுங்கலூர்க் கோட்டையே திறப்புச் சாவி என்பதை அவன்
அறிந்திருந்ததாலேயே இந்த முயற்சி. ஆனால், ஏதாயினும் ஒரு காரணத்தால் இந்த முயற்சி பலனளிக்காமலே
போனது. மலபார்க் கடற்கரைப் பகுதிகளில் சிறு சிறு நாட்டுப்பகுதிகளைத் திப்பு கைப்பற்றிக்
கொண்டிருக்கும் இந்த வேளையில், கொடுங்கலூர்க் கோட்டையையும், ஆயக்கோட்டையையும் (பள்ளிப்புரம்
கோட்டை), திருவாங்கூர் அரசு தக்கவைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் இருந்தது. திருவாங்கூர்
அரசன் மார்த்தாண்ட வர்மன் இவ்விரு கோட்டைகளையும் வாங்கிய சூழ்நிலையும் இங்கு முதன்மை
பெறுகிறது. திருவாங்கூர் அரசின் கையேட்டைத் (MANUAL) தொகுத்த நாகமய்யா என்பவரின் வாய்மொழியாகவே
இதன் பின்னணியைக் காண்போம்.
நாகமய்யாவின் கையேட்டு ஆவணம்
டச்சுக்காரர்களிடமிருந்து கொடுங்கலூர்க்
கோட்டை மற்றும் ஆயக்கோட்டை வாங்கியமை:
1789-ஆம் ஆண்டின் போது, திப்பு கோயம்புத்தூரிலிருந்து ஒரு படையுடன் புறப்படுகிறான்.
20,000 தரைப்படை வீரர்கள், 10,000 ஈட்டி எறிவீரர்கள் ஆகியோரும், 5,000 குதிரைகள்,
20 பீரங்கிகள் ஆகியவையும் படையில் அடக்கம். முன்னர் 1766-இல் ஹைதர் அலி முயன்றது போலவே,
கொடுங்கலூரையும் ஆயக்கோட்டையையும் விலைக்கு வாங்கிவிடத் திப்புவும் பாலக்காட்டில் டச்சுக்காரரோடு
பேச்சு நடத்துகிறான். இவ்விரு கோட்டைகளும் திருவாங்கூர் அரசுக்குப் பாதுகாப்பு அரண்களாக
விளங்கக்கூடியவை. எனவே, திருவாங்கூர் அரசன்
தன் அரசுக்காக இக்கோட்டைகளை டச்சுக்காரரிடமிருந்து வாங்க எண்ணித் தன் அமைச்சனான திவான்
கேசவ பிள்ளையை டச்சுக்காரரோடு பேச்சு நடத்த ஆணையிடுகிறான். திருவாங்கூர் அரசுக்கும்
பிரிட்டிஷாருக்கும் இடையில் ஏற்கெனவே ஓர் ஒப்பந்தம் உண்டு. அதன்படி, பிரிட்டிஷ் படைகள்
திருவாங்கூர் அரசுக்கு எல்லைப் புறத்தில் மட்டுமே உதவும். இக்கோட்டைகள் திப்புவின்
கைக்குள் சென்றுவிட்டால், திருவாங்கூர் அரசின் உள்பகுதியில் பிரிட்டிஷார் உதவ இயலாது.
எனவே, இவ்விரு கோட்டைகளும் திருவாங்கூர் அரசுக்கு மிகத்தேவை. டச்சு ஆளுநர், திவானுடன் கலந்து பேசி, இக்கோட்டைகள்
இரண்டையும் திருவாங்கூருக்கு விற்பதன் மூலம் திப்புவின் படைகளைத் தடுக்க முடியும் என்னும்
முடிவுக்கு வருகிறார். ஒப்பந்தமும் 1789-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் நாள் நிறைவேறுகிறது.
இந்த ஒப்பந்தத்துக்கு டச்சு நாட்டு பட்டாவியா (BATAVIA) அரசின் ஒப்புதலும் பின்னர்
முறையாகப் பெறப்படுகிறது. இந்த ஒப்பந்த ஆவணம் மதராசில் (இன்றைய சென்னை) உள்ள புனித
ஜார்ஜ் கோட்டையில் பின்னாளில் கிடைத்துள்ளது.
ஒப்பந்தத்தின் விரிவான செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன:
டச்சு அரசு- திருவாங்கூர் அரசு ஒப்பந்தம்
“மேன்மைமிகு திருவாங்கூர் அரசராகிய
வஞ்சி பால மார்த்தாண்ட ராம வர்மன் தன் அமைச்சரும் திவானுமாகிய மதிப்புக்குரிய கேசவ
பிள்ளையை, இந்திய நெதர்லாண்ட் ஆளுநரும், நெதர்லாண்ட் கும்பினியாரின் மலபார்க்கரைப்
படைத்தளபதியும் ஆன வணக்கத்துக்குரிய ஜான் ஜெரார்ட்
வான் ஏஞ்சலெக்கிடம் (JOHN GERARD VAN
ANGELHECK) கொடுங்கலூர்க் கோட்டையையும் ஆயக்கோட்டையையும்
வாங்கும் எண்ணத்துடன் அனுப்புகிறார். கோட்டைகளோடு அவற்றின் தோட்டங்களும் நிலங்களும்
விற்பனையில் அடங்கும். கீழ்க்காணும் வரம்புகளோடு (நிபந்தனை) ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
“திவான் கேசவ பிள்ளை, தம் அரசருக்காக
வாங்குகிறார்; ஆளுநர் வான் ஏஞ்சலெக் (VAN
ANGELHECK) தம் கும்பினி சார்பாகத் திருவாங்கூர் அரசருக்கு முந்நூறாயிரம் சூரத் பணத்துக்கு கொடுங்கலூர்க் கோட்டையையும்
ஆயக்கோட்டையையும் விற்கிறார். இந்த விற்பனையில், தற்போதிருக்கும் பீரங்கி முதலான தளவாடங்களும்
வெடி மருந்துகளும் அடங்கும். சிறிய ஆயுதங்கள் இவற்றில் சேரா.
”டச்சுக் கும்பினியாரின் கலங்களோ
(படகுகள்/நாவாய்கள்) கொச்சி அரசின் கலங்களோ, கொச்சி மக்களின் கலங்களோ மேற்கண்ட கோட்டைகளைக்
கடந்து ஆற்றில் செல்வதற்குத் தடை இருக்கக்கூடாது. கலங்களில் ஏற்றிச் செல்லும் பொருள்களுக்கும்
வரி இருக்கக் கூடாது. மரக்கட்டைகளையும், மூங்கில்களையும் ஆற்றின் வழியில் கொண்டுபோகவும்
தடை இருக்கக் கூடாது. எரிபொருளாகிய விறகுககளைக் கொச்சி நகருக்குக் கொண்டுசெல்வதிலும்
தொல்லை இருக்கக்கூடாது. சுங்கம் போன்ற வரி இருக்கக்கூடாது.
“’பலிபோர்ட்டோ’ (PALIPORTO) என்னும்
இடத்திலுள்ள தொழு நோயாளிகளுக்கான இல்லம்
(LEPER’S HOUSE), அதன் கட்டிடப்பகுதிகள், தோட்டம், வெற்று நிலம் ஆகியவற்றோடு டச்சுக்
கும்பினிக்கு முழு உடைமையாகிறது.
“கொடுங்கலூரில் நெடுங்காலமாகக் கும்பினியின்
கீழ் இருந்துவரும் ’ரோமிஷ் சர்ச்’ (ROMISH CHURCH) என்னும் மாதாகோயில், தொடர்ந்து கும்பினியர்
வசமே இருக்கும். திருவாங்கூர் அரசின் தலையீடு எதுவும் மாதாகோயிலில் இருக்கக் கூடாது.
மாதாகோயிலைச் சார்ந்துள்ள கிறித்தவர்கள் கும்பினியாருக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கவேண்டும்.
அவர்கள்மீது எவ்வித வரியும் விதிக்கக்கூடாது.
“பலிபோர்ட்டோ’ (PALIPORTO) என்னும்
இடத்தில் அமைந்துள்ள சமயத்தலைவரின் இல்லம் (PARSON’S HOUSE) – டச்சு ஆளுநர், மாதா கோயிலுக்கு
அன்பளிப்பாகக் கட்டிக்கொடுத்தது – மாதா கோயிலின் உடைமையாகவே தொடரவேண்டும்.
“தனிப்பட்ட முறையில் தோட்டம் நிலம்
ஆகியவற்றைப் பெற்றுள்ள கிறித்தவர்கள், முன்பு கும்பினியாருக்குக் கட்டுப்பட்டிருந்தது
போலவே இருப்பர். கும்பினியார்க்குச் செலுத்திய வரித்தொகையையே தற்போது திருவாங்கூர்
அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டவர். கூடுதலாக அவர்கள்மீது வரியேதும் விதிக்கப் படமாட்டாது.
”கோட்டையை ஒப்படைக்கும் முன்னரே
திருவாங்கூர் அரசர் 50,000 ரூபாய்ப் பணத்தைக் கும்பினியாருக்குச் செலுத்த வேண்டும்.
மீதிப்பணத்தை நான்கு தவணைகளில், ஆண்டுதோறும் 62,500 ரூபாய்ப் பண மதிப்புள்ள மிளகுப்
பொருளாகச் செலுத்தவேண்டும். மிளகு வணிகர்களான டேவிட் ரஹபாய், (DAVID
RAHABOY), இஃப்ராயிம் கோஹென் (EPHRAIM
COHEN), அனந்த செட்டி ஆகியோர் இதற்குப் புணை ஏற்கவேண்டும்.
“இந்த ஒப்பந்தம் கொச்சிக் கோட்டையில்
கொல்லமாண்டு 974-இல் கர்க்கடக (ஆடி) மாதம் 19-ஆம் நாள் அல்லது கி.பி. 1789-ஆம் ஆண்டு
ஜூலை 31-ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.
ஒப்பந்தம், திருவாங்கூரைச் சேர்ந்த
பிரிட்டிஷ் குடிமகனான பௌனி (POWNEY) என்பவர்
முன்னிலையில் கையெழுத்தானது .
பள்ளிப்புரம் டச்சுக்காரர் கட்டுவித்த மாதாகோயில்
பள்ளிப்புரம் போர்த்துகீசியர் கட்டுவித்த மாதாகோயில்
முடிவுரை
”கோட்டையின் மீது வளர்ந்து படர்ந்திருக்கும்
ஆலமரங்களும் புதர்ச்செடிகளும் கோட்டைக்கு ஓர் அழகான தோற்றத்தைத் தருகின்றன. ஆனால்,
அழிவிலிருந்து இக்கோட்டை பாதுகாக்கப்பட இந்த மரங்கள், புதர்ச் செடிகளை வேரோடு ஒழிக்கப்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று கோ[பிநாத
ராவ் அவர்கள் கூறியுள்ளார். அவர் கூற்றுபடி பள்ளிப்புரம் கோட்டை பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
இன்றளவும் கோட்டை ஒரு தொல்லியல் வரலாற்று எச்சமாக நிலைத்திருக்கிறது. தற்போதைய நிலையை
அறிய இணையத்தில் பார்த்ததில் சில படங்கள் கிடைத்தன. அவற்றை மேலே காணலாம்.
கோபிநாத ராவ் அவர்கள், ”திருவாங்கூர்
தொல்லியல் வரிசை” (TRAVANCORE
ARCHAEOLOGICAL SERIES) நூல் தொகுதியில் ஒரு வரிசையாகவே பள்ளிப்புரம் கோட்டையைப் பற்றிய
ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொல்லியல் சின்னங்களை ஆய்வு செய்வது எப்படி என்று
நாம் கற்றுக்கொள்ளும் அளவு நுட்பமாகவும், துல்லியமாகவும் இக்கோட்டையைப் பார்வையிட்டு
விரிவான செய்திகளை அளித்துள்ளார்.
வைப்பீன் தீவு - பள்ளிப்புரம் கோட்டை அமைப்பு - வரை படம்
பள்ளிப்புரம் கோட்டை அமைப்பு - வரை படம்
தவிர, வைப்பீன் தீவின் இருப்பிடத்தைக் குறிக்கும் வகையில் ஒரு வரைபடம், கோட்டையின் திட்ட அமைப்பு, அதன் முன்புற அமைப்பு, அதன் குறுக்கு வடிவத் தோற்றம் , வாயிலின் அமைப்பு, நிலவறையை நோக்கிப் போகும் பாதையின் அமைப்பு, தற்போது காணப்படும் வட்டவடிவக் கல்லிலிருந்து எழும்பும் தூணிலிருந்து எவ்வாறு மரத்தாலான ஆரக்கால்கள் கிளை பிரிந்து இரு தளங்களின் கூரைப்பகுதிகளைத் தாங்கி நின்றிருக்கக் கூடும் என்ற ஆய்வுப்பார்வை ஆகிய அனைத்தையும் காட்சிப்படுத்தும் வரைபடம் எனப் பல கூறுகளை உள்ளடக்கியதாய் அவரது ஆய்வுக்கட்டுரை அமைந்திருப்பது மிகச் சிறப்பு.
“செய்யுந்தொழிலே தெய்வம்” என்னும் முன்னோர் மொழியை எத்துணை ஈடுபாட்டோடு பின்பற்றி உழைத்திருக்கிறார் என்பதை அவரது ஆய்வுக்கட்டுரை நமக்கு உணர்த்துகிறது. தொல்லியல் துறை, முன்னாள்களில் எத்துணைச் சிறப்பாக இயங்கிவந்துள்ளது என்பதைத் துறையின் முன்னாள் வெளியீடுகளே நமக்கு உணர்த்துகின்றன.
வைப்பீன் தீவு - பள்ளிப்புரம் கோட்டை அமைப்பு - வரை படம்
பள்ளிப்புரம் கோட்டை அமைப்பு - வரை படம்
தவிர, வைப்பீன் தீவின் இருப்பிடத்தைக் குறிக்கும் வகையில் ஒரு வரைபடம், கோட்டையின் திட்ட அமைப்பு, அதன் முன்புற அமைப்பு, அதன் குறுக்கு வடிவத் தோற்றம் , வாயிலின் அமைப்பு, நிலவறையை நோக்கிப் போகும் பாதையின் அமைப்பு, தற்போது காணப்படும் வட்டவடிவக் கல்லிலிருந்து எழும்பும் தூணிலிருந்து எவ்வாறு மரத்தாலான ஆரக்கால்கள் கிளை பிரிந்து இரு தளங்களின் கூரைப்பகுதிகளைத் தாங்கி நின்றிருக்கக் கூடும் என்ற ஆய்வுப்பார்வை ஆகிய அனைத்தையும் காட்சிப்படுத்தும் வரைபடம் எனப் பல கூறுகளை உள்ளடக்கியதாய் அவரது ஆய்வுக்கட்டுரை அமைந்திருப்பது மிகச் சிறப்பு.
“செய்யுந்தொழிலே தெய்வம்” என்னும் முன்னோர் மொழியை எத்துணை ஈடுபாட்டோடு பின்பற்றி உழைத்திருக்கிறார் என்பதை அவரது ஆய்வுக்கட்டுரை நமக்கு உணர்த்துகிறது. தொல்லியல் துறை, முன்னாள்களில் எத்துணைச் சிறப்பாக இயங்கிவந்துள்ளது என்பதைத் துறையின் முன்னாள் வெளியீடுகளே நமக்கு உணர்த்துகின்றன.
வரலாறு கற்போம். வரலாற்றுத் தடயங்களைக் காப்போம்.
---------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக