மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

பெருந்துறைப் பகுதியில் ஒரு தொல்லியல் பயணம்

முன்னுரை
அண்மையில் 2018, மார்ச்சு மாதத் தொடக்கத்தில் (பவானி) குமாரபாளையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கின் ஒரு நாள் நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது, பவானி, ஈங்கூர், காஞ்சிக்கோவில், பரஞ்சேர்வழி ஆகிய ஊர்களின் தொன்மைக் கோயில்களுக்கும் தொல்லியல் தடயங்கள் அமைந்துள்ள சில இடங்களுக்கும் செல்லும் வாய்ப்பை உருவாக்கிக்கொண்டேன். அதுபோழ்து அறிந்துகொண்ட தொல்லியல் செய்திகளின் பகிர்வு இங்கே.

காஞ்சிக்கோவில்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை-கவுந்தப்பாடி சாலையில் அமைந்துள்ள ஊர் காஞ்சிக்கோவில். இது பழங்கொங்கு நாட்டின் இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளுள் ஒன்றாக விளங்கியது. காஞ்சிக்கூவல் நாடு என்றும் இதற்கு இன்னொரு பெயர் வழங்கியது.  இவ்வூரில் இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று, நீலகண்டேசுவரர் கோயில்; மற்றது சீதேவியம்மன் கோயில். முதலில் சென்று பார்த்த கோயில் சீதேவியம்மன் கோயில். வேளாளர்களில் செம்பன் குலத்தாருக்கும் முளசி கண்ணன் குலத்தாருக்கும் உரிய கோயிலாக இது திகழ்கிறது. இவர்களில் செம்பன் குலத்தார், கோயிலின் முதல் காணியாளர் ஆவர். காணி என்னும் ஒருவகை உரிமை, கொங்குச் சோழர் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்துள்ளது என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.

குதிரைச் சிற்பங்கள்-குலக்குறியீடு
கோயிலில் நுழைந்ததும், நம் வலப்பக்கத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் மூன்று குதிரைச் சிற்பங்கள் நம் பார்வையை ஈர்ப்பன. சுடுமண்ணாலும், காரையாலும் செய்யப்பட்ட இது போன்ற குதிரைச் சிற்பங்களைப் பெரும்பாலும் எல்லா அம்மன் கோயில்களிலும் அமைப்பது மரபு. இக்குதிரைகளுக்குச் செம்பொன், முளசி கண்ணன், கண்ணன் என்று பெயர்கள். இப்பெயர்கள், வேளாளர் குலங்களின் சார்பாக அமைந்தன எனலாம். (செம்ப குலம் என்பது, செம்பொன் குலம் என்பதன் திரிபாகலாம்.)




பரிவாரத் தேவதைகள்
கோயிலில், ஒரு மேடையில் கடவுளர் சிலைகள் சில நிறுவப்பட்டுச் சுவரில் அவற்றின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. தேவதைகள், வேடன் சின்னாரி, வீரமாத்தியம்மன், பச்சியாத்தாள், மாகாளியம்மன் ஆகியவை அப்ப்பெயர்கள். அவற்றுள் தேவதைகளில் இரு சிற்பங்களும், வேடன் சின்னாரி எனப்பெயரிட்ட சிற்பமும் தொல்லியல் பார்வையில் நடுகற்கள் என்னும் நினைவுக்கற்களாகத் தோற்றமளிக்கின்றன.

                            பரிவாரத் தேவதைகள்


புலிகுத்திக்கல் சிற்பம்
மேற்படி சிற்பத்தொகுதிக்கு அருகில் தனிக்கல்லில் வடிக்கப்பட்ட புலிகுத்திக்கல் ஒன்றும் காணப்படுகிறது. வீரன் ஒருவன் புலியைத் தன் இரு கைகளிலும் உள்ள குறுவாள்கள் கொண்டு நெஞ்சுப்பகுதியிலும், வாய்ப்பகுதியிலும் குத்துவது போன்ற தோற்றம். வாள்கள் வெளியில் தோன்றவில்லை. புலி, தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி முன்னங்கால்களால் வீரனைத் தாக்கும் கோலத்தில் உள்ளது. கொங்குப்பகுதியில் காணப்படும் பெரும்பாலான புலிகுத்திக்கற்கள் இது போன்ற அமைப்பையே கொண்டுள்ளன. இச்சிற்பம் வழிபாட்டில் உள்ளது. சிற்பத்தின் பீடப்பகுதியில், எட்டு வரிகளைக் கொண்ட கல்வெட்டெழுத்துகள் காணப்படுகின்றன.  பத்தாண்டுகளுக்கு முன்னரே, கல்வெட்டு அறிஞர் புலவர் இராசு அவர்கள் கல்வெட்டைப் படித்துள்ளார் என்னும் செய்தியைக் கோயில் பூசையாளர் சொன்னார்.  இந்தக் கல்வெட்டு, தொல்லியல் துறை வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் காணப்படவில்லை. இயல்பு நிலையில், கல்வெட்டு எழுத்துகள் புலப்படவில்லை. வழக்கம் போல், மாவு பூசிக் கல்வெட்டைப் படித்தேன்.  கல்வெட்டுப் பாடம் கீழ்வருமாறு :

கல்வெட்டின் பாடம்

1         சிண்ணா மூப்ப
2         ன் மகன் ச
3         டைய மூப்பன் ப
4         ண்ணி வச்ச சி
5         லை
6         செம்பனு(ம) கண்
7         ணனுக் குடுத்த
8         காணியாச்சி


                                             புலிகுத்திக்கல் சிற்பம் - கல்வெட்டுடன்


வழக்கமாகப் புலிகுத்திக்கற்கள், கால்நடைகளைக் காக்கும் வீரன், புலியுடன் போராடிப் புலியைக் கொல்லும் நிகழ்வில் இறந்துபட அவன் நினைவை ஊர்மக்கள் சிலையெடுத்து வழிபடும் மரபில் வந்தவை. அந்த மரபில் செம்பன் என்னும் வீரன் இறந்துபட, நினைவுக் கல் எழுப்பியவர் சிண்ணா மூப்பன் மகன் சடைய மூப்பன் ஆவார். இறந்துபோன வீரனின் மகனாகிய கண்ணனுக்கு நிலக்கொடை (காணியாச்சி) அளித்ததாகக் கருதலாம். செம்பன், கண்ணன் ஆகிய வேளாளர் குலப்பெயர்கள் கல்வெட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
  
தனிக்கல் கல்வெட்டு
குதிரைச் சிற்பங்களின் பீடத்தினருகில் தரைப்பகுதியில் ஒரு தனிப் பலகைக் கல்லில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. புலவர் இராசு அவர்கள் இதையும் படித்திருக்கிறார். இக்கல்வெட்டின் பாடமும் தொல்லியல் துறை வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் காணப்படவில்லை. இந்தக் கல்வெட்டு, மாவு பூசிய பின்பும் படிக்க இயலாதவாறு தேய்ந்து போயுள்ளது. எனவே, இக்கல்வெட்டில் அமைந்துள்ள செய்தி யாது என்பது புலப்படவில்லை.

                          தனிப் பலகைக்கல் கல்வெட்டு


காஞ்சிக்கோவில் நீலகண்டேசுவரர் கோயில்
சீதேவியம்மன் கோயிலுக்குச் சற்று அருகிலேயே அமைந்துள்ளது நீலகண்டேசுவரர் கோயில். கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்னும் பகுதிகளைக் கொண்டுள்ளது. கோயிலின் முகப்பில், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றுக்கும் முன் மண்டப நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட வெளியில் நிழல் குடை போலத் தற்கால அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே, முன்புறத் தோற்றம் ஒரு கொட்டகை போலக் காட்சியளிக்கிறது. கோயிலை வலம் வரும்போதுதான், கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகிய கட்டிடக் கூறுகளைக் காண இயலும். கோயில் கற்றளியாக இருப்பினும், சுவர்ப்பகுதியில் கல்வெட்டுக்ள் எவையுமில்லை. கருவறை விமானம் நாகர (சதுர) அமைப்பைக் கொண்டுள்ளது. சுவர்களில் அரைத்தூண்களும் கோட்டங்களும் உள்ளன. கோட்டங்களில் சிற்பங்கள் இல்லை. கோயில் வளாகத்தில், தனிப்பலகைக் கல் ஒன்றில் கல்வெட்டு உள்ளது. ஆனால், அக்கல்லின்மீது நெடுங்காலம் சுண்ணம் பூசி, எழுத்துகள் புலப்படாவண்ணம் செய்துள்ளனர். இந்தக் கல்வெட்டின் பாடமும் தொல்லியல் துறை வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் காணப்படவில்லை. மாவட்ட வரிசையில் வெளிவருகின்ற கல்வெட்டு நூல்களில், பல கல்வெட்டுகள் இவ்வாறு ஏனோ தவிர்க்கப்படுகின்றன. தென்னிந்தியக் கல்வெட்டுகள்”  என்னும் பெயரில் முன்பு எப்போதோ வெளிவந்த நூலகளில் அவை உள்ளன எனக் காரணம் குறிப்பிடப்பட்டாலும், கல்வெட்டு ஆர்வலர்களுக்குத் தற்போது ஒரே இடத்தில் கல்வெட்டுகளைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை.

                         நீலகண்டேசுவரர் கோயில்


                               பலகைக் கல் - கல்வெட்டு (சுண்ணம் பூசிய நிலையில்)


சீனாபுரம்-சமணக்கோயில்
பெருந்துறைக்கருகில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் சீனாபுரம். தொல்லியல் பற்றித் தெரிந்துகொள்ளும் முன்னர், சீனாபுரம் என்னும் ஊர் எப்படி அமைந்தது என்பதான சிந்தனையே எழவில்லை. இந்த ஊருக்கும் சீனத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? எதுவும் இல்லைதான்.  சமண சமயம் கருநாடப் பகுதியிலிருந்து தமிழகம் புகுந்தபோது அருகில் உள்ள விஜய மங்கலம் ஊர், பெரியதொரு சமண மையமாகத் திகழ்ந்தது. சமண சமயம், ஜைனம் என்னும் பெயர் கொண்டது. அதன் காரணமாக ஜைனபுரம் என்றும் ஜினபுரம் என்றும் பெயர்கொண்ட ஊர் தமிழ் ஒலிப்பில் சினபுரம் என்றும், சீன புரம் என்றும் காலப்போக்கில் மருவியிருத்தல் கண்கூடு. இந்தச் சீனாபுரத்தில் சமணத்தின் முதல் தீர்த்தங்கரராகிய ரிஷபதேவர் கோயில் அமைந்துள்ளது. நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றிய பவணந்தி முனிவர் வாழ்ந்து வழிபட்ட இடம் இக்கோயில். நான் சென்றிருந்த போது கோயில் மூடிய நிலையில் இருந்ததால் கோயிலினுள் சென்று ரிஷபதேவரின் சிற்பத்திருமேனியைக் காண இயலவில்லை. தோற்றத்தில் சிறியதொரு கோயில். கருவறையும், அர்த்தமண்டபமும் கொண்ட எளிமையான அமைப்பு. ஒரு நீள் சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. அடித்தளத்தில் சிறு பகுதி மட்டுமே கற்களால் ஆனது. மேல்பகுதி முழுதும் செங்கல்லாலும் சுதையாலும் கட்டப்பட்டுள்ளது. சுவர்ப்பகுதியில், மிக எளிமையான, வேலைப்பாடற்ற அரைத்தூண்களும், கோட்டங்களும் உள்ளன. கோயில் வெளிப்புறம் முழுதும் மஞ்சள் வண்ணம் பூசப்பெற்றுள்ளது. தமிழ் நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையினர் வைத்துள்ள செய்திப் பலகை, இக்கோயிலை ஆதீசுவரர் கோயில் எனச் சுட்டுகிறது. பூனா ஜெயின் சங்கம், மதுரை ஜெயின் மரபு மையம் ஆகிய இரு அமைப்பினரும் சேர்ந்து வைத்துள்ள பலகைத் தூணிலும் சமணக்கோவில் என்னும் பொதுப்பெயர் ஒன்றால் கோயில் குறிக்கப்படுகிறது. சமணத்தின் முதல் தீர்த்தங்கரராகிய ரிஷபதேவர் கோயில் என்றோ ஆதி நாதர் கோயில் என்றோ குறிப்பிட்டிருந்தால் வரலாற்று ஐயம் எழாது.

                         சீனாபுரம்-சமணக்கோயில்


                           சீனாபுரம்-சமணக்கோயில் - பக்கவாட்டுத் தோற்றம்


ஈங்கூர் அல்லாளீசுவரர் கோயில்
பெருந்துறை-சென்னிமலைச் சாலையில் பெருந்துறையை அடுத்து அமைந்துள்ள ஊர் ஈங்கூர். இங்குள்ள சிவன் கோயில் அல்லாளீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அல்லாள   என்னும் பெயர் இங்கு கருதத்தக்கது. தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் இறைவன் பெயர் பல்வேறு பெயர்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அல்லாள   என்னும் பெயர் வட சொல்லாகத் தோன்றவில்லை. எந்தத் தமிழ்ச் சொல்லோடு தொடர்புடையது என்று சிந்திக்கத் தூண்டியது.

                             ஈங்கூர் அல்லாளீசுவரர் கோயில்


அல்லாள கருநாடகத்துடன் தொடர்புடைய பெயரா?
கருநாடக் கல்வெட்டுகள் அடங்கிய “எபிகிராஃபியா கர்நாடிகா”  நூல்கள் சிலவற்றை அவ்வப்போது படிப்பதுண்டு. மைசூர்ப் பகுதியில் (கங்க நாட்டில்) காணப்படும் தமிழ்க் கல்வெட்டுகள் இருக்கும் மேற்படி “எபிகிராஃபியா கர்நாடிகா”  நூல்களைப் பார்வையிட்டபோது, “அல்லாள தேவர் “அல்லாள நாதர்  என இரு வகையாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் இறைவன் பெயர், வரதராசப்பெருமாள் கோயில்களிலேயே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவை பற்றிய சில குறிப்புகள் இங்கே :


தி.நரசிபுர் வட்டம் ஹெம்மிகெ ஊர் -  வரதராசப் பெருமாள் கோயில்.
கல்வெட்டு எண். 249  கி.பி. 1530.  இறைவன் பெயர் அல்லாள நாதர்

குண்டுலுப்பேட்டை வட்டம் தெற்கணாம்பி ஊர் - வரதராசப் பெருமாள் கோயில். கல்வெட்டு எண். 115  கி.பி. 1504.  இறைவன் பெயர் அல்லாள நாதர்.  

நஞ்சன்கூடு வட்டம் ஹுல்லஹள்ளி ஊர் - வரதராசப் பெருமாள் கோயில்.
கல்வெட்டு எண். 138  16-ஆம் நூற்றாண்டு.. இறைவன் பெயர் அல்லாள நாதர்

மேற்சுட்டிய எடுத்துக்காட்டுகளிலிருந்து, வரதராச(ர்) என்னும் இறைவன் பெயர் கல்வெட்டுகளில் அல்லாள(ர்) எனக் குறிப்பிட்டுளதைக் காணலாம். இக்கல்வெட்டுகளின் காலம் போசளர் காலமாக இருப்பதையும் நோக்குகையில், போசள அரசர்களான “வல்லாள(ர்) பெயரோடு தொடர்புடையதாகத் தோன்றுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஈங்கூர் கோயில் கல்வெட்டில் “வல்லாளயீசுரமுடையார் என்று குறிப்பிட்டுள்ளதைச் சுட்டலாம்.

அல்லாள -  தமிழ்ச் சொல்லோடு தொடர்புடையதா?
வரதராசப் பெருமாள் என்னும் பெயரை வரம் தரும் பெருமாள் என்று பொருள் கொள்ளலாம். தமிழில் இதை அருள் தருகின்ற “அருளாளர் என்றும் அருளாளப் பெருமாள்என்றும் கருதலாம். எனவே, “அல்லாள”  என்பது அருளாள”  என்பதன் திரிபு எனக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அருளாளர் என்பது பெரும்பாலும் பெருமாளுக்குரிய சொல்லாக இருப்பதைக் காணும்போது, ஈங்கூர் சிவன் கோயில் இறைவற்கும் இதே பெயர் அமைந்தது சற்றே வியப்பைத் தருகிறது. இறைவியின் பெயர், வடிவுள்ள மங்கை என்னும் அழகிய தமிழ்ச்சொல்லால் அமைந்துள்ளது சிறப்பு.

கல்வெட்டு
ஈங்கூர் சிவன் கோயிலில் ஒரே ஒரு கல்வெட்டு, படியெடுக்கப்பட்டுத் (இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை : 173/1967-68.) தமிழகத் தொல்லியல் துறை வெளியீடான “ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்நூலில் (தொடர் எண் : 1085அ/2003) பதிக்கப்பட்டுள்ளது. மேற்படிக் கல்வெட்டு, கோயிலின் அதிட்டானப்பகுதியில், முப்பட்டைக் குமுதப் படையில் பொறிக்கப்பட்டுள்ளது. இயல்பான நிலையில், கல்லின் நிறத்தோடு எழுத்துகளும் ஒன்றிப்போய்விட்டதால் கல்வெட்டு முழுதும் படிக்கும் வகையில் இல்லை. தேய்மானம் உள்ளது. கல்வெட்டின்  மீது மாவு பூசிப் படித்தவாறு அதன் பாடம் இங்கே தரப்படுகிறது :

கல்வெட்டின் பாடம்

படம்-1
வரி 1 (ஸ்வஸ்த்திஸ்ரீ ம(ன்) ம(ஹா)
வரி 2  (க)ருணையில் பி(ரப)

படம்-2
மண்டலீசுர  சிக்கராய உடையார் திருவிரா(ச்சியம்)
(வ)வருசம் வல்லாளயீசுரமுடையா...


                                   கல்வெட்டுகள்





கல்வெட்டின் செய்தி-மேற்படி நூலில் உள்ளவாறு :
மைசூர் உடையார் மரபினரான சிக்கராய உடையார் (1673-1704) காலத்தில் நஞ்சராயர் கொங்கு நாட்டில் அதிகாரம் செய்யும்போது ஈங்கூர் ஊரும் ஊரவரும் வல்லாளீஸ்வரமுடையார்க்குக் குளம் அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

பரஞ்சேர்வழி தீர்த்தங்கரர் சிற்பம்
பரஞ்சேர்வழி, காங்கயம் வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூரில் மத்தியபுரீசுவரர் கோயில் என்னும் பெயரில் ஒரு பழமையான சிவன் கோயில் உள்ளது. கொங்குச் சோழன் இரண்டாம் விக்கிரம சோழனின் (1256-1265) ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 1261) ஒன்று திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் பதிவாகியுள்ளது. (இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை : 559/1908.). அக்கல்வெட்டு, இறைவன் பெயரை “நாயனார் நட்டூர் அமர்ந்தார் என்று குறிப்பிடுகிறது. எத்துணை அழகிய தமிழ்ப்பெயர்! ஆனால், இன்று மத்தியபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றது எவ்வாறு? விஜயநகரர்,நாயக்கர் கால ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கும், சமற்கிருதம் போற்றப்பட்டதற்கும் இது போன்ற எண்ணற்ற சான்றுகளைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

மேற்படிக் கல்வெட்டில் இவ்வூர், பரண்சேர்பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி”  என்னும் பெயர் சமணத் தொடர்பைக் குறிக்கிறது. ஒரு சமணப்பள்ளி 13-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இங்கு இருந்திருக்கக் கூடும். தற்போது சமணப்பள்ளி இருந்தமைக்கான சான்றுகள் இல்லையெனினும், இக்கருத்தை சார்ந்து நம்மை நகர்த்தும் வகையில் இங்கு ஒரு சமணச் சிற்பம் இருப்பதைக் காணலாம். சாலையின் ஓரத்தில் ஒரு மேடையில் நிறுவப்பட்ட பலகைக் கல் சிற்பம், தீர்த்தங்கரர் ஒருவருடையது. அர்த்த பரியங்காசனம்”  என்னும் சிறப்புப் பெயரால் அமைந்த ஓர் இருக்கையில் அமர்ந்துள்ள நிலையில் இச்சிற்பத்தின் தலைக்கு மேல் முக்குடை காணப்படுகிறது. முகம் முழுதும் தேய்ந்து கண்கள், மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளின் புடைப்பு ஒரு சிறிதும் புலப்படவில்லை. கல்வெட்டியல் அறிஞர் புலவர் இராசு அவர்கள், தம் “கொங்கு நாடும் சமணமும்”  நூலில் இச்சிற்பம் மகாவீரருடையது எனக் குறிக்கிறார்.

                         பரஞ்சேர்வழி  தீர்த்தங்கரர் சிற்பம்


பரஞ்சேர்வழி ஆதியம்மன் கோயில்
மேற்படி தீர்த்தங்கரர் சிற்பத்துக்கருகில் சாலையின் எதிர்ப்புறம் மிகப் பழமையான தோற்றத்துடன் ஒரு கோயில் காணப்படுகிறது. சாலையில் நிறுத்தப்பட்ட பலகையில் ஆதி அம்மன் கோயில் என்று எழுதப்பட்டுள்ளது. (புலவர் இராசு அவர்கள், தம் “கொங்கு நாடும் சமணமும் நூலில், இக்கோயிலை ஆயி அம்மன் கோயில் என்று குறிக்கிறார்.) கோயில், செங்கல், சுதை ஆகியவற்றின் கட்டுமானத்தால் ஆனது. ஒரு தள விமானம், சாலை அமைப்புக் கொண்டது. ஒரு சிறிய கருவறையும், அதை ஒட்டி ஒரு அர்த்தமண்டபமும் கொண்டது. முகப்பு வாயிலை மறைத்தவண்ணம் ஒரு திரைச்சீலை. திரைச்சீலையை நீக்கிப்பார்த்தாலும் உள்ளே உள்ள இருட்டில் அம்மனின் உருவம் புலப்படவில்லை. கோவை வாணவராயர் அறக்கட்டளையினர் நடத்திவருகின்ற வரலாற்று உலா ஒன்றில், 2017, திசம்பர் மாதம் இக்கோயிலுக்குச் சென்றிருந்தபோது, முகப்பு வாயிலின் கல்லால் ஆன நிலைக்கால் பகுதியில் புலப்படாத ஒரு கல்வெட்டு தற்போது புலப்பட்டது. காரணம், கற்பரப்பு முழுதும் சுண்ணப்பூச்சு இருந்தமையே. இன்று ஆர்வலர்கள் யாவரோ சுண்ணப்பூச்சை அகற்றிக் கல்வெட்டினைப் படிக்கும் வண்ணம் நல்லதொரு பணியைச் செய்துள்ளனர். அவர்கள் படித்தனரா என்பது தெரியவில்லை. ஆனால், உழைப்பும் முயற்சியும் இன்றி ஒரு கல்வெட்டு எனக்குக் கிடைத்தது. கல்வெட்டில் காலக்குறிப்பு எதுவும் இல்லை. பிற்காலக் கல்வெட்டுதான். எழுத்தமைதி, எகர-ஏகார/ஒகர-ஓகார வேறுபாடின்மை ஆகியவற்றின் அடிப்படையில், கல்வெட்டு 19-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம்.

                      பரஞ்சேர்வழி  ஆதியம்மன் கோயில்


கல்வெட்டின் பாடம் :

நிலைக்கால்-ஒன்று

1         பறஞ்
2         சேற்                 (கல்வெட்டில் செற்)
3         வழி
4         க்கிரா
5         மத்
6         துக்க
7         ணக்கு
8         திருப்பா
9         யத்தூ
10     ர் சோழி             (கல்வெட்டில் சொழி)
11     யப் பிறா
12     மணரி
13     ல் மாண்
14     டவியா
15     கோத்தி                (கல்வெட்டில் கொ)
16     ரம் போ                (கல்வெட்டில் பொ)
17     தாயான
18     சூஷ்த்தி
19     ரம் வீர
20     நாரண
21     ய்யன்
22     குமார(ன்)


நிலைக்கால்-இரண்டு 

23     திம்ம
24     ணய்ய
25     ன் ...
26     ........
27     (அம்மன்)
28     சன்ன
29     தியில்
30     மண்ட
31     பம் திரு
32     நிலைக்
33     கால்



       பரஞ்சேர்வழி  ஆதியம்மன் கோயில் - நிலைக்கால் கல்வெட்டு










கல்வெட்டுச் செய்தி
கல்வெட்டில் இவ்வூர் பரஞ்சேர்வழி என்று குறிக்கப்பெறுகிறது (வல்லின “றகரம் பயன்படுத்தப்பெற்றுள்ளது). இக்கிராமத்தின் கணக்கர் பதவியிலிருந்த சோழியப்பிராமணரான வீர நாரணய்யன் மகன் திம்மணய்யன் கோயிலின் மண்டபத்தையும், நிலைக்காலையும் கட்டுவித்தார். இவர் மாண்டவிய கோத்திரத்தையும், போதாயனச் சூத்திரத்தையும் சேர்ந்தவர். இந்தச் சிறப்புச் செய்தி, சோழர் காலத்திலிருந்து பிராமணர்கள் கோத்திரம், சூத்திரம் ஆகியவற்றைத் தம் அடையாளமாக வெளிப்படுத்தி வந்த மரபுத் தொடர்ச்சியைக் காட்டுகிறது. 

கோயிலின் வளாகத்தில் ஆணும் பெண்ணுமாய் உள்ள மூன்று சிற்பத்தொகுதிகள் காணப்படுகின்றன. இவை சதிக்கல் வகையைச் சார்ந்த நினைவுக்கற்களை ஒத்துள்ளன.

பரஞ்சேர்வழி
கரியகாளியம்மன் கோயிலும் கொங்கு வேளாளர் குலங்களும்
இக்கோயிலின் கட்டுமானம் பழமையானதல்ல. எனினும், கொங்கு வேளாளர்கள், கொங்குச் சோழர் ஆட்சியிலிருந்து இருப்ப்வர்கள். தங்கள் குடி மரபின் வழியில் தம் குலக்கோயில்களை அமைத்துக் கொண்டு வழிபட்டு வருபவர்கள். கோயில்கள் பிற்காலக் கட்டுமானங்களாயிருப்பினும், மரபு பழமையானது. கி.பி. 12-14 நூற்றாண்டளவில் கொங்குச் சோழர்களின் கல்வெட்டுகளில், கொடையாளிகளாகப் பல வேளாளர் குலப்பெயர்கள் காணப்படுகின்றன. இந்தப்பகுதியில் (பெருந்துறை வட்டம்) உள்ள கல்வெட்டுக்ளில் காணப்படும் பெயர்கள் ஒரு சில :

கல்வெட்டு உள்ள ஊர்              குலப்பெயர்

பொன்னிவாடி                   செவ்வாயர், ஆந்தை
பார்ப்பனி                       காடை
திங்களூர்                       பனைங்காடர், வண்ணக்கர்
வள்ளிஎறிச்சல்                  கணக்கன்
நத்தக்காரை                     பயிறகள்
ஆதியூர்                         தூறர், குண்டெலிகள்
குன்னத்தூர்                     சாத்துவாயர், கொள்ளி, கணவாளர்,  
                                தேவந்தை, சாத்தந்தை

கரியகாளியம்மன் கோயில், ஆறு குலத்தவரின் கோயில். செம்பகுலம், ஓதாள குலம், ஆடகுலம், ஆவகுலம், விழியகுலம், பயிரகுலம் அகியன அவை. இந்த ஆறு குலத்தவர்க்கும் உரிய ஆறு குதிரைகள் பெரிய சிற்பங்களாகக் கோயிலில் நிற்கின்றன.

                     பரஞ்சேர்வழி  கரியகாளியம்மன் கோயில்

                     ஆறு குலத்தவர்க்கும் உரிய ஆறு குதிரைகள்




பெருந்துறை வட்டம், வெள்ளோடு என்னும் ஊரில் உள்ள சர்வலிங்கேசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று இங்கே நினைவுக்கு வருகிறது. இக்கல்வெட்டு சற்றுச் சிறப்பானது. கொங்கு நாட்டின் 24 நாடுகளுள் ஒன்றான பூந்துறை நாட்டுச் சபையார் 32 ஊரவரும் வெள்ளோட்டில் ஒன்று கூடிச் சர்வலிங்கேசுவரர் கோயிலில் தைப்பூச விழாவைப் பதினொரு நாள் கொண்டாட முடிவு செய்தனர். தைப்பூச விழாவுக்கும், அந்தணருக்கு உணவிடவும் தேவையான பொருள்களாக அரிசி, பருப்பு, நெய், பழம், வெல்லம், எண்ணெய், மிளகு, உப்பு, தேங்காய், இளநீர், பாக்கு, வெற்றிலை, மஞ்சள், சந்தனம், கற்பூரம், பரிமளம் ஆகியவையும் ஆயிரத்தெட்டுப் பணமும் கொடையளிக்கின்றனர். தீர்மானத்தில் கையொப்பம் இட்டவர்களாக 24 ஊர்களைச் சேர்ந்த 24 பேர், 16 குலப் பெயர்களோடு  இடம்பெறுகிறார்கள். இக்கல்வெட்டு, உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராய உடையார் காலத்தது. இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 1482-1510.


முடிவுரை
பெருந்துறைப் பகுதி, பழங்கொங்கு நாட்டின் இருபத்து நான்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்றான பூந்துறை நாட்டைச் சேர்ந்தது. பரஞ்சேர்வழி, காங்கய நாட்டைச் சேர்ந்தது. இரண்டும் அடுத்தடுத்திருக்கும் வகையில் உள்ள சில ஊர்களில் தொல்லியல் சார்ந்த பல இடங்களைக் கண்டு, பல செய்திகளைத் தெரிந்துகொண்ட ஒரு நிறைவு, ஊர் திரும்புகையில் ஏற்பட்டது.










துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

7 கருத்துகள்:

  1. மூப்பன் என்பது பள்ளர்களை குறிக்கும் ..தென் மாவட்ட பள்ளர்களை குடும்பர் என்றும் சோழ நாட்டு பள்ளர்களை மூப்பன் என்று தான் அழைப்பார்கள்...

    பதிலளிநீக்கு
  2. சின்ன மூப்பன் ,பெரிய மூப்பன் ,காணியாளன் ,சடைய மூப்பன் போன்றவை சோழ மண்டல பள்ளர்களின் உட்பிரிவாகும் இவர்கள்

    பதிலளிநீக்கு
  3. 🇵🇹🇵🇹 ⚔️கவுண்டர் கொங்கு புலிகள்⚔️ 🇵🇹🇵🇹

    பதிலளிநீக்கு
  4. அட பாவிகளா எல்லார் வரலாற்றையும் திருடி நாசமா போவிங்க

    பதிலளிநீக்கு
  5. மேற்கண்டவை எல்லாம்
    கவுண்டரின் கல்வெட்டு கல்வெட்டு திருடும் கும்பலை
    கொங்கு ஈசன் விடமாட்டார்

    பதிலளிநீக்கு
  6. பனைங்காடர், வண்ணக்கர் என்பவர் யார் ?

    பதிலளிநீக்கு