இராசேந்திர சோழனுக்கு உணவு சமைத்த பெண்மணி யார்?
குமரி நகரில் ஒரு கோயில்
கோயில் கல்வெட்டுகளிலிருந்து பல்வேறு
செய்திகளை அறிந்துகொள்கிறோம். அரசன், அவனுடைய போர் வெற்றிகள், கோயிலுக்கு வழங்கப்பட்ட
கொடைகள் எனப் பல்வகையான செய்திகள். ஆனால்,
குமரி மாவட்டத்துக் குமரியில் இருக்கும் குகநாதசுவாமி கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு
முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. கங்கையும் கடாரமும் கொண்ட பேரரசன் முதலாம் இராசேந்திர
சோழன், யார் சமைத்த உணவை உண்டான் என்னும் ஒரு சுவையான செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.
குமரியில் உள்ள குகநாதசுவாமி கோயிலின் அர்த்தமண்டபத்தில் தெற்கு அதிட்டானத்தில் இக்கல்வெட்டு
பொறிக்கப்பட்டுள்ளது.
T.A. கோபிநாத ராவும் குகநாதசுவாமி
கோயிலும்
திருவாங்கூர் தொல்லியல் வரிசை நூல்
தொகுதிகளில் எட்டாம் தொகுதியில், தொல்லியல் அறிஞர் T.A. கோபிநாத ராவ் அவர்கள் சோழர்
கல்வெட்டுகள் ஆறு என்னும் தலைப்பில் தொகுத்துள்ள கல்வெட்டுகளில் மேற்படிக் கல்வெட்டும்
ஒன்று. குமரியில் நாம் அறிந்த கோயில் குமரி அன்னையின் கோயில் மட்டுமே. 1911-ஆம் ஆண்டு
பதிப்பிக்கப்பட்ட இந்த நூல் தொகுதியில் ராவ் அவர்கள் குறிப்பிடும்போது, ”குகநாதசுவாமி
கோயில், தற்போது கன்னியாகுமரியின் பிராமணக் கிராமத்திலிருந்து அரைப் பர்லாங்கு தொலைவில்
அமைந்துள்ளது. கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கோயிலின் சுற்றுப்பகுதி
முழுதும் வௌவால்களும், பாம்புகளும் கொண்ட ஒரு குகை போலத் தோற்றமளிப்பதால் இக்கோயிலைக்
குகநாதசுவாமி கோயில் என அழைக்கிறார்கள் போலும்”
எனக் குறிப்பிடுவது கருதத்தக்கது. அவர் காலத்தில், தொல்லியல் சார்ந்த பணிச்
சூழல் எவ்வாறு இருந்தது என்றும், எல்லாவகையான இடர்ப்பாடுகளையும் சந்தித்துக் கொண்டே
பணியாற்றியவர்களின் கடமை உணர்வையும் நாம் ஒருவாறு உணர இயலும். 1911-ஆம் ஆண்டில் வௌவால்களும்
பாம்புகளும் சூழ்ந்து சிதைவுற்ற நிலையில் இருந்த அக்கோயிலின் இன்றைய நிலை என்ன என்று
அறிய இணையத்தில் தேடியபோது, கோயில் புதுப்பொலிவுடன் மீளக் கட்டப்பெற்றுள்ளதைக் காண்கிறோம்.
தமிழ் நாட்டுச் சுற்றுலாத்துறையின் தளத்தில்,
இக்கோயிலை முதலாம் இராசராசன் கட்டுவித்தான் என்னும் குறிப்பு உள்ளது. இந்தத் தளத்தில்
உள்ள கோயிலின் ஒளிப்படங்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. சில முக நூல் பதிவுகளில்
உள்ள படங்களும் அவ்வாறே. படங்களைக் காணும்போது, முக நூல் பதிவுகளில் சிலர் குறிப்பிட்டவாறு
கோயில், வட இந்தியப் பாணியில் அமைந்த தோற்றத்தைத் தருகிறது. ஓர் ஆசிரமத்தைப்போலத் தோற்றமளிப்பதாகவும்
ஒருவர் குறிக்கிறார். கல்வெட்டுகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
கல்வெட்டுப் பாடம்
குறிப்பு: சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.
1 ஸ்வஸ்தி ஸ்ரீ பூர்வ்வதேசமும் கங்கையுங் கடாரமுங்கொண்டருளின கோ
2 ப்பரகேசரி பன்மராயின உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்
3 கு யாண்டு இருபத்து நாலாவது ராஜராஜப்பாண்டி நாட்டு
உத்த
4 ம சோழவளநாட்டுப் புறத்தாய நாட்டு குமரி ராஜராஜ [ஈ]
ச்வர
5 ம் உடையார்க்கு உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர்க்கு
திருவமுது அடும்
6
பெண்டாட்டி அருமொழிதேவ வளநாட்டுப் புலியூர் நா [ட்]
டுப் பாலையூர் தி
7 ட்டை சோழகுலவல்லி வைச்ச திருநூந்தாவிளக்கு ஒன்றுக்கு
வைச்ச சா
8
வா மூவாப் பேராடு ஐம்பது இவ்வாடு ஐம்பதுங்கொண்டு இத்தேவர்
கல்வெட்டுச் செய்திகள்
முதலாம் இராசேந்திரன் பரகேசரிப்
பட்டம் சூடியவன். கல்வெட்டில் அவனது நீண்ட மெய்க்கீர்த்திப் பகுதி இல்லை. கீழ்த்திசை
நாட்டையும் கங்கையையும் கடாரத்தையும் வென்றவன் என்று மட்டுமே சுருங்கச் சொல்கிறது.
கல்வெட்டின் காலம் அவனுடைய இருபத்து நாலாவது ஆட்சியாண்டான கி.பி. 1036-ஆம் ஆண்டு. குமரிப்
பகுதி ராஜராஜப்பாண்டி நாட்டில் (மண்டலப்பிரிவில்) உத்தம சோழ வளநாட்டில் புறத்தாய நாட்டைச்
சேர்ந்ததாக இருந்தது. மேற்படி குகநாதசுவாமி கோயில் 11-ஆம் நூற்றாண்டில் ராஜராஜ ஈச்வரம்
என்னும் பெயர் பெற்றிருந்தது. இக்கோயிலில் நுந்தாவிளக்கு எரிப்பதற்காக ஐம்பது ஆடுகளைக்
கொடையாக அளித்த பெண்மணி இங்கு குறிப்பிடத்தக்கவள். அவளுடைய பெயர் சோழகுலவல்லி என்பதாகும்.
அவள் சோழநாட்டு அருமொழிதேவ வளநாட்டைச் சேர்ந்த புலியூர் நாட்டுப் பாலையூர் திட்டையைச்
சேர்ந்தவள். தற்போது தஞ்சைக்கருகில் திட்டை என்னும் ஊர் உள்ளது. இருப்பினும், “இடைக்காலத்
தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்” என்னும் நூலில், புலியூர் நாடு திருவாரூர்ப் பகுதியில்
இருந்ததாகக் குறிப்புள்ளது. எனவே, சோழகுலவல்லி என்னும் இந்தப் பணிப்பெண் திருவாரூர்ப்
பகுதியைச் சேர்ந்தவள் எனலாம்.
இந்தச் சோழகுலவல்லி என்பவள், இராசேந்திர சோழனின் பணிப்பெண்களுள்
ஒருத்தி. பணிப்பெண்களில் சற்றுச் சிறப்புப் பெற்ற பெண்மணி. இராசேந்திர சோழனுக்கே உணவு
சமைக்கும் பணியில் இருந்தவள். இதை, ” உடையார்
ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர்க்கு திருவமுது அடும் பெண்டாட்டி” என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. “அடுதல்”/”அட்டுதல்”
என்பது சமைத்தலைக் குறிக்கும் சொல்லாகும். உணவு சமைக்கும் இடம் “அட்டில் பள்ளி” என்றும்,
‘அடுக்களம்” என்றும் “மடைப்பள்ளி” என்றும் பலவாறாகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும்.
தற்போதைய வழக்கில் நாம் அடுக்களை என்று குறிக்கிறோம். ”பெண்டாட்டி” என்னும் சொல் சோழர் காலத்தில், பணிப்பெண்களைக் குறித்தது.
சமையற்கூடங்களில் பணி செய்யும் பெண்களைக் கல்வெட்டுகள் “மடைப்பள்ளிப் பெண்டாட்டி” என்று
குறிப்பிடும். சோழர் காலக் கல்வெட்டுகளில் “வேளத்துப் பெண்டாட்டி” என்னும் சொற்றொடரும்
காணப்படுகிறது. இது அரண்மனைப் பணிப்பெண்டிரைக் குறிப்பதாகலாம். வேளம் என்பது (அரண்மனையில்?)
பணிப்பெண்களின் இருப்பிடத்தைக் குறிக்கும். (கட்டுரை ஆசிரியர் கருத்து : வேளம் என்பது வேளகம் என்பதன் திரிபாகலாம். திருவாங்கூர்
தொல்லியல் வரிசை நூலின் நான்காம் தொகுதியில் பதிப்பாசிரியர், கோட்டயம் ஊரின் பழம்பெயர்
கோட்டையகம் என்று குறிக்கிறார். இக்கருத்தை அடியொற்றிப் பார்க்கையில், வேளகம் என்பது
வேளம் எனத் திரிந்திருக்கக் கூடும் எனக் கருதத் தோன்றுகிறது).
துணை நின்ற நூல்கள்:
1 TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES.
2 இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்.
(கி.பி. 800 - 1300)
- எ.சுப்பராயலு, கௌ. முத்துசங்கர், பா. பாலமுருகன்
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
கோவை.
அலைபேசி : 9444939156.
புதிய செய்தி அறிந்தேன். உங்கள் கருத்தினை அடைப்புக்குறிக்குள் தந்துள்ள விதம் அருமை.
பதிலளிநீக்கு