மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 19 ஜூலை, 2018



எழுத்துடை நந்தி

முன்னுரை
திருப்பூரில் இயங்கி வருகின்ற வீரராசேந்திரன் தொல்லியல்-வரலாற்று ஆய்வு மையத்தினர், பல்லடம் பகுதியில் சென்ற ஆண்டு அருமையான இரண்டு தொன்மைச் சிற்பங்களைக் கண்டறிந்து செய்திகள் வெளியிட்டதோடு அவற்றைத் தொல்லியல் கழகத்தாரின் ஆண்டிதழான “ஆவண”த்திலும் பதிவு செய்திருந்தனர். கோவை-திருப்பூர் பகுதியில் களப்பணித் தேடல்கள் மூலம் தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்துவது, அவற்றைப் பதிவு செய்வது போன்ற பணிகளில் மேற்சொன்ன அமைப்பினரும், நானும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மேற்குறித்த இரு சிற்பங்களை நேரில் ஒரு முறை கண்டு அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துகளைப் படிக்கவும் அவை கூறும் செய்திகளைப் பொதுத்தளத்தில் பகிர்ந்து கொள்ளவும் விருப்பம் உண்டாயிற்று. அதற்கான வாய்ப்பு இந்த (2018) ஜூலையில் ஏற்பட்டது. அதன் பகிர்வு இங்கே:

பயணம்
கண்டறியப்பட்ட இரு சிற்பங்களுள், ஒரு சிற்பம் நந்திச் சிற்பம். கோயில்களில் எங்கும் காணக்கிடைப்பதுதான். எங்காவது, இடிபாடுற்ற கோயில்களிலும், ஒரு காலத்தில் கோயில் இருந்திருக்கக் கூடும் என்பதற்கான எச்சங்களைக்கொண்ட ஊர்ப்புற வெளிகளிலும் நந்திச் சிற்பங்கள் தனியே காணப்படுவதுண்டு.  ஆனால், இந்த நந்திச் சிற்பங்களில் எழுத்துப்பொறிப்பினைக் காண இயலாது. நந்திச்சிற்பத்தின் பீடப்பகுதியில் எழுத்துப்பொறிப்புகளைப் பார்க்கவியலும். ஆனால், அதன் உடல் பகுதியில் எழுத்துகள் அமைவது பெரும்பாலும் இல்லை. மிக அரிதாக, ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் எழுத்துப்பொறிப்புடன் ஒரு நந்திச் சிற்பம் கிடைத்துள்ளதாக அறிகிறோம். அதனை அடுத்து தமிழகத்தில், எழுத்துப்பொறிப்புடன் நந்திச் சிற்பம் கிடைத்துள்ளது மேற்குறித்த அமைப்பினர் கண்டறிந்த சிற்பமே. எனவே, அச்சிற்பம் மிக அரிதான ஒன்று என்பதில் ஐயமில்லை. அதைக்காணும் ஆவலில் நண்பர் பல்லடம் பொன்னுசாமியுடன் தொடர்புகொண்டு அதன் அமைவிடம் பற்றிக் கேட்டபோது, அவரும் உடன் வருவதாகக் கூறி என் பயணத்தில் பல்லடத்தில் இணைந்துகொண்டார். வீரராசேந்திரன் வரலாற்று மையத்தில், தொல்லியல் தடயங்களைத் தேடிக் களப்பணி மூலம் சுற்றிக்கொண்டிருக்கும் உறுப்பினர்களுள் அவரும் ஒருவர். அவர் உடன் வருவது பயண இலக்கைச் சென்றடையும் என் பயணத்தை எளிதாக்கியது. கோவை-திருச்சி சாலையில் பல்லடம், அதனை அடுத்து அவிநாசிபாளையம் என்று பயணம் தொடர்ந்தது. (இந்த இடத்தில், பயணம்என்னும் சொல்லைச் சிலர் கையாள்கின்ற முறை ஒன்று நினைவுக்கு வருகிறது. பயணத்தைக் குறிக்கும் “செலவு என்னும் சொல் “செல்  என்னும் வினையின் அடிப்படையில் பிறந்த சொல். ஆனால், பயணம் என்னும் சொல்லுக்கு வினை வடிவில் வேர் எது வாயிருக்கும் என எண்ணுவதுண்டு. ஆனால், புலப்படவில்லை. பயணம் என்னும் பெயர் வடிவச் சொல்லைச் சிலர் வினை வடிவாக மாற்றி எழுதுவதைக் கண்டிருக்கிறேன். பயணித்தேன், பயணித்தான்  என்பது போன்று எழுதுகிறார்கள். “மரணித்தான்  என்னும் வினை வடிவமும் அது போன்றதே. மரணம் என்பது பெயர்ச்சொல். பெயர்ச்சொல்லை வினை வடிவத்துக்கு இவ்வாறு மாற்றி எழுதுவது இயல்பாகத் தோன்றவில்லை; வலிந்து ஆக்கிய ஒரு சொல்லாகவும், இது பிழையானது என்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது. இவ்வகைப் பெயர்ச்சொல்லை வினை வடிவிலான ஒரு துணைச்சொல்கொண்டு கையாள்கிறோம். பயணம் செய்தான், பயணம் மேற்கொண்டான், பயணப்பட்டான் என்று வழங்குகின்றோம். அது போலவே, மரணமுற்றான், மரணமடைந்தான் என்று வழங்குகிறோம். இவ்வகை வழக்கு இயல்பாயுள்ளதைக் காண்க). 

முதியானெரிச்சல்-நீலியம்மன் கோயில்
அவிநாசிபாளையத்தை அடுத்து, சற்று நேரத்தில் கண்டியன்கோயில், அலகுமலை ஆகிய இடங்களுக்குச் செல்லும் பிரிவுச் சாலைகள் வந்தன. அவற்றைக் கடந்த பின்னர் வருகின்ற ஒரு பிரிவுச்சாலையில் உள்நுழைந்து சென்றோம். முதியானெரிச்சல் என்னும் ஊர் வந்தது.  இங்குள்ள நீலியம்மன் கோயிலில் பழமயான ஒரு கொற்றவைச் சிற்பம் உள்ளதாக நண்பர் கூறி அழைத்துச் சென்றார். முதியானெரிச்சல் மிகச் சிறிய ஒரு கிராமம். நான் இதுவரை கேள்விப்படாத, சென்று பார்த்திராத ஒரு கிராமம். இது போன்று ஒரு வட்டத்தின் (தாலூகா) உட்கிடையாகப் பல குக்கிராமங்களில், பல நூறு ஆண்டுகளாக நாட்டுப்புற மக்கள் வழிபட்டு வருகின்ற தாய்த்தெய்வக்கோயில்கள் அமைந்துள்ளன. உட்கிடைப்பகுதி மக்களுக்கு மட்டுமே இத்தகைய கோயில்கள் தெரிந்திருக்கும். நண்பரைப்போன்றவரின் தேடுதல் வழியாகவே இக்கோயில்கள் வரலாற்று ஆர்வலர்களுக்குத் தெரியவரும். சில கோயில்கள், குலவழிபாட்டுக் கோயில்களாகவும் அமையும்.

                                  
கோயிலை நோக்கிப்பயணம்-மண்பாதை

நீலியம்மன் கோயில் அமைந்திருக்கும் இடம் மிக அமைதியான ஒரு சூழலைக்கொண்டிருந்தது. பெரியதொரு ஆலமரமே அந்த இடத்தின் முதன்மையான காட்சி மையம். தொன்றுதொட்டு, மரம், வழிபடு தெய்வமாக இருக்கும்; அல்லது மரத்தடிச் சூழலே கோயிலாகவும், அங்கு வைக்கப்படும் கற்களே கடவுளர்களாக இருக்கும். நாட்டார் மரபில் கோவிலின் தொடக்கத்தோற்றம் இதுதான். இங்கு நாங்கள் பார்த்த ஆலமரம் பழமையானது. ஏராளமான விழுதுகள். தாய் மரத்தின் அடிப்பகுதி நெருப்புப் பிடித்ததன் காரணத்தால் பெரும்பகுதி அழிவு கண்டிருந்தாலும், அதன் விழுதுப்பகுதிகளே தனித்தனி மரங்களாகத் தாய் மரத்தைத் தாங்கி நின்றன. மரத்தின் உயரம் அதன் பழமையைச் சுட்டியது. மரத்தின் அடியில், கற்களைக்கொண்டு அமைத்த ஒரு மேடை. அதில், ஏழு சிறு கற்களும், ஐந்து பெரிய கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. இந்த ஒட்டுமொத்த அமைப்பு கன்னியாத்தா, கருப்புசாமி என அழைக்கப்பட்ட வழிபடு தெய்வங்கள். முன்புறத்தில் ஒரு கல்லும், நிறுத்தப்பட்ட ஒரு வேலும்.

ஆலமரத்தடி-கன்னியாத்தா, கருப்பராயன்


நீலியம்மன் கோயில்


நீலியம்மன் கோயில்-இன்னொரு தோற்றம்

நீலியம்மன் சிற்பம்
ஆல மரத்தின் அருகில், நீலியம்மன் கோயில். நான்கு சுவர்களும், ஒரு மேற்கூரையும் உள்ள ஒரே ஒரு கருவறையில், நீலியம்மன் கொற்றவையாக வீற்றிருக்கும் தோற்றம். பழமையான சிற்பம். எட்டுக்கைகள். வலது காலைக் குத்தாக மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டவாறு அமர்ந்திருக்கும் நிலை. இந்த ஆசனத்தைச் சிற்பக்கலை   உத்குடி ஆசனம் என்று குறிப்பிடும். அம்மனின் முகத்தில், கண்கள், மூக்கு, செவிகள் ஆகியனவற்றில் தெளிவான செதுக்கல் இல்லை. கொற்றவைக்குள்ள ‘ஜுவாலா மகுடம்  என்னும் தழல் முடியும் தெளிவாகச் செதுக்கப்படவில்லை. தலையைச் சுற்றித் திருவாசி போன்ற ஒரு தோரண அமைப்பு தெரிகிறது. செவிகளில் குண்டலங்கள் இருப்பதும் தெளிவாகப் புலப்படவில்லை. கழுத்தில் அணிகலன்கள்  புலப்படுகின்றன. ஓர் அணிகலன் மார்புப்பகுதிக்குக் கீழேயும் தொங்கலாகக் காணப்படுகிறது. வலப்புறமுள்ள நான்கு கைகள் நன்கு தெரிகின்றன. அவை ஏந்தியுள்ள ஆயுதங்களும் தெளிவாகத் தெரிகின்றன. முன்புற வலக்கையில் நீண்ட தண்டம். வேல் என்றும் கொள்ளலாம். இன்னொரு கை மடக்கி உயர்த்திய நிலையில் உடுக்கை ஏந்தியுள்ளது. மற்ற இரு கைகளில் ஒன்றில் கட்கம் என்னும் வாள் உயர்த்திப்பிடித்த நிலையில் உள்ளது. நான்காவதாக உள்ள கையில், தரையை நோக்கித் தாழ்ந்த நிலையில் வளைவுள்ள குறுவாள் போல ஓர் ஆயுதம். இது, “வாங்கு  என்னும் ஆயுதம் என்று பூசையாளரான செல்வி என்னும் பெண்மணி கூறினார். இது புதிய பெயராய்த் தோன்றியது. கட்டுவாங்கம் என்னும் ஆயுதமும் கடவுளர் கையில் ஏந்துகின்ற ஆயுதங்களில் ஒன்று. கட்டுவாங்கத்தைத் தான் பூசையாளர் பெண்மணி ‘வாங்குஎனக்குறிப்பிட்டுள்ளார். நூல்கள் வாயிலாக மட்டுமே நாம் அறிய நேரிடும் ஓர் ஆயுதத்தின் பெயர் இன்றும் ஊர்ப்புறத்தில் (நாட்டுபுறத்தில்) எளிய மக்களின் வழக்கில் இருப்பது கண்டு வியப்பேற்பட்டது.


நீலியம்மன் சிற்பம்
இடப்பக்கமுள்ள கைகளில் முன்கையில் கபால ஓடு. அதனை அடுத்த கையில் மணி. அதனை அடுத்து மேற்புறமாக உள்ள கையில் இருக்கும் ஆயுதம் இன்னதெனத் தெரியவில்லை. அதனை அடுத்துள்ள மேற்புறக்கை எதையும் ஏந்தியிருக்கவில்லை. ஆனால், விரல்களை விரித்துச் சாய்த்தவாறுள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தார் வெளியிட்டுள்ள கடவுளர்களின் கை முத்திரைகளில் இடம் பெற்றுள்ள “விஸமயமுத்திரையில் இந்தக் கை உள்ளது. கீழே தொங்கவிட்ட காலும், காலின் கீழுள்ள உருவமும் சிதைந்துள்ளன. கருவறையில் இரண்டு பிள்ளையார் சிற்பங்களும் உண்டு. நீலியம்மனின் எதிரே ஒரு சூலம்.
  
கோயில் வளாகம்
அம்மன் கோயிலும், ஆலமரமும் இருக்கும் கோயில் வளாகத்தினுள் அரளிச் செடிகள். வளாகத்தின் சுற்றுமதிலாகக் பெருங்கற்களை அடுக்கியிருக்கிறார்கள். இவையெல்லாம் பழமையான அமைப்புகள். கோயில் பூசையாளராக இருக்கும் பெண்மணி செல்வியைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறவேண்டியுள்ளது. முதியானூர் ஊர்மக்கள் போதிய அக்கறை எடுத்துக்கொள்ளாததால், கோயிலில் முறையாக ஆண் பூசையாளர் இல்லை; முறையான பூசையும் இல்லை. கோயிலுக்கருகில் குடியிருக்கும் செல்வி மட்டுமே நாள்தோறும் விளக்கேற்றித் தனக்குத் தெரிந்தவாறு பூசை செய்து வருகிறார். கோயிலில் சுடுமண் குதிரைச் சிற்பங்கள் ஒரு காலத்தில் இருந்துள்ளன என்றும் செல்வி சொன்னார். சிற்பத்தின் ஓரிரு ஓட்டுத்துண்டுகளையும் காண்பித்தார். கோயில் வளாகத்தில் வெள்ளருகு என்னும் செடியை நண்பர் காண்பித்தார். இச்செடியை நான் முன்னர் பார்த்ததில்லை. எனவே, ஒளிப்படமாகப் பதிந்துகொண்டேன்.

வெள்ளருகுச் செடி

ஒரு காலத்தில் குதிரைச் சிற்பங்கள் இருந்தன

சின்னாரியபட்டி- கம்பத்தீசுவரர் கோயில்
முதியானூரிலிருந்து அடுத்த பயணம் பூசாரிபாளையம் வழியே சின்னாரியபட்டி என்னும் ஊரிலிருக்கும் கம்பத்தீசுவரர் கோயிலை நோக்கித் தொடர்ந்தது. அங்குதான் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட, எழுத்துப்பொறிப்புள்ள நந்திச் சிற்பம் உள்ளது. வீரராசேந்திரன் வரலாற்று ஆய்வு  மையத்தினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, முள் மரங்களும் புதர்களும் சூழ்ந்து காடு போல் இருந்த இப்பகுதியில் கோயில் கட்டுமானங்களைக் கண்டறிந்துள்ளனர். மிகுந்த முயற்சி எடுத்துக் கோயில் பகுதியைச் சீராக்கி, ஊர் மக்களிடம் கோயிலின் பழமையைச் சுட்டிக்காட்டி அவர்களைக்கொண்டு சீரமைப்புப் பணிகளைச் செய்யவைத்துக் கோயிலைத் தற்போதுள்ள நிலைக்குக் கொணர்ந்திருக்கிறார்கள். சீரமைப்புப் பணியின்போது எழுத்துப் பொறிப்புகளுடன் கூடிய நந்திச் சிற்பம் தோண்டி எடுக்கப்பட்டது. அது போன்றே, எழுத்துபொறிப்புகளுடன் கூடிய ஒரு பழமையான அய்யனார் சிற்பமும் கண்டறியப்பட்டது. அய்யனாரின் சிற்பத்துடன் வேறு சில சிற்பங்களும் கிடைத்துள்ளன.


கருடகம்பம்

விளக்குத்தூண் கட்டுவித்தவர்

கோயிலின் அமைப்பு
கோயிலின் முன்புறத்தில் கருடகம்பம் என்னும் அமைப்பு உள்ளது. ஒரு சிறு மண்டபத்தின் நடுவிலிருந்து மேலெழும்பி நிற்கும் கல் தூணைக் கொங்குப்பகுதியில் ‘கருடகம்பம்என்று அழைக்கின்றனர். இது விளக்குத்தூணாகப் பயன்படுகிறது. உச்சியில் விளக்கேற்றப்படும். இக்கோயிலின் இந்த விளக்குத்தூண், மற்ற கோயில்களை ஒப்பிடும்போது  உயரம் மிகுதியாகத் தோற்றமளிக்கிறது. முப்பது அடிக்கும் மேல் உயரம் உடையது. வழக்கமாக விளக்குத்தூண்களில் தூணின் அடிச்சதுரப்பகுதியில் பிள்ளையார், சூலம், சிவலிங்கத்தின் மீது பால் சொரியும் பசு, முருகன் போன்றவைதாம் புடைப்புச் சிற்பங்களாக வடித்திருப்பார்கள். ஆனால், இத்தூணின் ஒரு சதுரப்பகுதியில், கூப்பிய கைகளுடன் ஆள் ஒருவருடைய சிற்பம் காணப்படுகிறது. தலையின் வலப்பக்கம் உள்ள கொண்டை, காதணிகள், முகத்தில் இருக்கும் பெரிய மீசை, இடுப்பளவில் நின்றுவிடுகின்ற ஆடைக்கட்டு, கழுத்திலும், கைகளிலும் காணப்படும் எளிய அணிகலன்கள் ஆகியவற்றைக் கொண்டு இச்சிற்பம் நாயக்கர் காலத்தது எனக்கணிக்கலாம். விளக்குத்தூண் கட்டுவித்தவர் உருவமே இது என்பதில் ஐயமில்லை. இவ்வமைப்பு மற்ற கோயில்களில் காணப்படுவதில்லை. மற்ற விளக்குத்தூண் அமைப்பில், அதன் மண்டபத்தூணின் அடிப்புறத்தில் மட்டுமே கட்டுவித்தவரின் உருவச் சிலை வடிக்கப்பட்டிருக்கும். 


கோயிலின் தோற்றம்-நுழைவு வாயிலிலிருந்து


கோயிலின் வேறு தோற்றம்-அதிட்டானமும், சுவர்க்கோட்டங்களும்

விளக்குத் தூணைக்கடந்து நுழைவாயில். இது ஒரு கட்டுமானமல்ல. கோயிலின் முழு வளாகத்தையும் சுற்றிப் பெரிய கற்களை அடுக்கி அமைக்கப்பட்ட சுற்று மதிலின் இடைவெளியே நுழைவாயில். உள்ளே நுழைந்ததும் நடுவில் முதன்மைக் கோயிலான கருவறையும், அர்த்த மண்டபமும் சேர்ந்த கம்பத்தீசுவரர் கோயில். இறைவனின் பெயர், மாதேசிலிங்கம் என்னும் இன்னொரு பெயரையும் கொண்டுள்ளது. கோயில், கல் கட்டுமானம். கருவறையில் இலிங்கத்திருமேனி. ஜகதி, முப்பட்டைக்குமுதம், கண்டம், பட்டிகை, கண்டம், வேதி என்னும் அதிட்டானக்கூறுகளைக்கொண்ட அமைப்பு. கருவறைச் சுவரில் ஒரு கோட்டம் (கோஷ்டம்); அர்த்தமண்டபத்தில் ஒரு கோட்டம். சுவர்களில் அரைத் தூண்கள். அரைத்தூண்களின் கால்கள், அதிட்டானத்தின் முப்பட்டைக் குமுதம் வரையிலும் இறங்கியிருத்தலால், இக்கோயிலின் அதிட்டானம் ‘பாதபந்தஅதிட்டான வகையைச் சேர்ந்தது என எளிதில் கணிக்க முடிந்தது. (கணிப்புக்கு உதவிய நூல் : முனைவர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்.”) கருவறை விமானம் ஒரு தளமுடைய திராவிட விமானம். அர்த்த மண்டபத்தின்  முன்புறம் நந்தி மண்டபம். அர்த்த மண்டபத்துக்கும் நந்தி மண்டபத்துக்கும் இடையில் தரையில் நம் இலக்கான எழுத்துப்பொறிப்புள்ள நந்திச் சிற்பம். கோயில் வளாகத்தில் வேறு இடத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.


கோயிலின் உட்புறத்தோற்றம்

கம்பத்தீசுவரர் கருவறைக்கு இடப்பக்கம் இறைவியின் சன்னதி. மங்களாம்பிகை என்பது இறைவியின் பெயர். வளாகத்தில், முருகன், பிள்ளையார், காலபைரவர் ஆகியோருக்குத் தனியே சிறு சிறு சன்னதிகள்.

எழுத்துடை நந்தி



நந்திச் சிற்பம் -  எழுத்து புலப்படா நிலையில்

நந்திச் சிற்பம் -  எழுத்துடன்

எழுத்துடை நந்திச் சிற்பம் அழகானது. மிகுதியான வேலைப்பாடுகள் இல்லை. கழுத்தில் மணி இணைத்த ஓர் அணிகலன் புலப்படுகிறது. சிறிய திமிலும், குறுங்கொம்புகளும் உள்ளன. தலையைக் கவிழ்த்துப் புன்னகை பூக்கும் இந்தத் தோற்றம் இப்பகுதியில் வேறெங்கும் காண்பதற்கில்லை. நந்தியின் பின் முதுகில் வால் பக்கத்திலிருந்து தொடங்கி, மடித்த பின்னங்காலுக்கு மேற்புறமுள்ள தொடைப்பகுதி வரையிலான பரப்பில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் பார்வைக்கு எழுத்துகள் புலப்படவில்லை. மாவு பூசிய பின்னரே எழுத்துகள் புலப்பட்டன. எட்டு வரிகளில் எழுதப்பட்ட கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு:

கல்வெட்டின் பாடம்

1    ஸ்வஸ்திஸ்ரீ
2    பெரும்பால
3    (*) றிச்சல்லி
4    ருக்கு[ம்]  பிராம
5    ணந் தேவ
6    நக்கனாந
7    காமிண்ட
8        நே[ன்]

கல்வெட்டு ஓர் அண்மைப் பார்வை

விளக்கம்:

மேற்குறித்த வரலாற்று ஆய்வு மையத்தினர், தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநரான முனைவர் பூங்குன்றன் அவர்களைக் கொண்டு கல்வெட்டினைப் படிக்கச் செய்து நாளிதழ்களில் செய்தி வெளியிட்டுள்ளனர்.  பெரும்பாலகுறிச்சல்லியைச் சேர்ந்த காமிண்டன் தேவ நக்கனேன் என்பவரால் இந்த எழுத்துடை நந்தி எடுப்பிக்கப்பட்டது என்பது செய்தி. இந்த தேவ நக்கன் இப்பகுதியை ஆண்ட அதிகாரி என்பதாகவும், அவருடைய  கால்நடையோ அல்லது அந்தக் கிராமத்திலுள்ள கால்நடைகளோ நோய்வாய்ப்பட்டபோது அந்த நோய் குணமானதும் அதற்கு உருவாரமாகச் செய்து வைத்ததாக இருக்கலாம்; இந்த நடைமுறை இன்றும் கொங்குப்பகுதியில் நீடிக்கிறது என்பதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டுப்பாடத்தில், மூன்றாம் வரியில், முதல் எழுத்துக்குத் தலைமாறாக (பதிலாக) அடைப்புக்குறிக்குள் உடுக்குறியைக் (ASTERISK MARK) காட்டியுள்ளேன். அதாவது, நான் படிக்கையில் இந்த எழுத்து, தெளிவாகத் தெரியவில்லை. இன்ன எழுத்தாக இருக்கலாம் என்று யூகம் செய்யவும் இயலவில்லை. பூங்குன்றன் அவர்கள் இந்த எழுத்தை “குஎனப்படித்துள்ளார். அவ்வாறெனின், ஊர்ப்பெயர் “பெரும்பால குறிச்சல்என்றாகும். கல்வெட்டின் தொடர் “பெரும்பால குறிச்சல்லிருக்கு(ம்)  என்றாகும். நாளிதழில் செய்தியாளர் எழுதும்போது, “பெரும்பால குறிச்சல்லியைச் சேர்ந்த என்று இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்த்து எழுதியதால், ஊர்ப்பெயர் “பெரும்பால குறிச்சல்லி  என்றாகும். இவ்வாறு, ஊர்ப்பெயரில் மாற்றம் அல்லது பாட பேதம் ஏற்படும்.  கொங்குப்பகுதியில், ‘குறிச்சி  என்னும் பெயர் கொண்ட ஊர்கள் மிகுதியாக உள்ள போக்கினை எண்ணுகையில், கல்வெட்டில் காணப்பெறும் ஊர், “பெரும்பால குறிச்சிஎன்பதாக அமையக்கூடும் என்றும் கல்வெட்டில் பிழையாக எழுதப்பட்டுள்ளது என்றும் கொள்ளலாம். கல்வெட்டை நேரில் படித்துப் பாடத்தை எழுதிக்கொண்டிருக்கையில், மேற்சொன்ன இரண்டாம் வரி-முதல் எழுத்து “எ  என்பதாக இருக்கலாம் என மீள் சிந்தனையில் தோன்றியது. அவ்வாறெனில், ஊர்ப்பெயர் “பெரும்பால (எ)றிச்சல்  என்றாகும். “எறிச்சல்”, “எரிச்சல்  ஆகிய பெயர்கள் கொண்ட ஊர்களும் கொங்குப்பகுதியில் பரவலாக இருப்பதைக் காணலாம். செலக்கெரிச்சல், வள்ளியெறிச்சல், நெருப்பெரிச்சல் போன்ற ஊர்ப்பெயர்களைச் சான்றாகக் குறிப்பிடலாம். காட்டின் ஒரு சிறு பகுதியை எரித்துப் பண்படுத்தி விளைநிலமாக்கிய ஊர்ப்பகுதியே எரிச்சல் என்னும் பெயரால் வழங்கியது. கல்வெட்டு அமைந்துள்ள இந்த சின்னாரியபட்டியை அடுத்துள்ள ஊரே “முதியானெரிச்சல்  என்று மேலே அவ்வூரின் நீலியம்மன் கோயிலைப் பற்றிக் குறிப்பிடுகையில் பார்த்தோம். எனவே, கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் ஊரின் பெயரைப் “பெரும்பால எறிச்சல்  எனக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. கோயில் அமைந்திருக்கும் பகுதி பழங்காலத்தில் பெருமளவு பெரும்பூளைச் செடிகள் நிறைந்ததாய் இருக்கவேண்டும் என்று கருதுமாறு தற்போதும் செடிகள் உள்ளன. கல்வெட்டில் உள்ள சொல்லைப் பெரும்பால எறிச்சல்  என்று கொண்டால் அதனைப் பெரும்பூளைச் செடிகள் நிறைந்த காட்டுப்பகுதியோடு தொடர்பு படுத்திப்பார்க்கவும் வாய்ப்புள்ளது. 


பெரும்பூளைச் செடி

அடுத்து, கல்வெட்டுப்பாடத்தின் நான்காம் வரியில், “ம்எழுத்தையும் அடைப்புக்குறிக்குள் காட்டியுள்ளேன். இம்முறை அடைப்புக்குறி – சதுரக் கோட்டினால் அமைந்தது – மாறியுள்ளது. இந்தக் குறியைத் தொல்லியல் துறையின் நூல்களில் பயன்படுத்துகையில், கல்வெட்டில் இக்குறிக்குள் காட்டபெறும் எழுத்து, கல்வெட்டில் பொறிக்கப்படவில்லை என்பதற்காகவும், ஆனால் கல்வெட்டின் பொருள் வெளிப்படும் வகையில் நிரப்பப்படும் எழுத்து என்பதற்காகவும் கையாண்டுள்ளதைக் காணலாம்.

அடுத்து, கல்வெட்டின் இறுதி வரியில், அடைப்புக்குறிக்குள் காட்டியுள்ள “ன்எழுத்து, பிறை வடிவ அடைப்புக்குறிக்குள் உள்ளது. இவ்வகை அடைப்புக்குறி, கல்வெட்டில் எழுத்து உள்ளது என்பதையும், ஆனால் எழுத்து இன்னதென்று அறுதியாகத் தெரியவில்லை என்பதையும், யூகமாகக் காட்டப்பெற்றுள்ளது என்பதையும் சுட்டி நிற்கும்.

மேற்சொன்னவை, கல்வெட்டுகளைப் படிக்கையில், சரியாகப் பொருள் கொள்ளும் ஆய்வு முயற்சிக்குத் துணை புரியும். நாளிதழ்ச் செய்தியாளர், நந்திச் சிற்பத்தைச் செய்வித்தவர் “தேவநக்கனேன்  என்று குறிப்பிட்டுள்ளார். தேவ நக்கன் என்பதுதான் சரியான பெயராக அமையும். நக்கனேன் என்பது இலக்கண அமைப்பில் தன்மை இடத்தைக் குறிக்கும். கல்வெட்டுகளில் இவ்வாறு தன்மைச் சுட்டு, பெருமளவில்  பயில்வதைக் காணலாம்.

“பாண்டி மண்டலத்து திருக்கானப்பேற்றில் காளை பெருமாளான அதளையூர் நாடாழ்வானேன்   (அவிநாசிக் கல்வெட்டு 786/2003)

தெரிந்த கைக்கோள சேநாபதிகளிற் தனபால ராயநேந்  (அன்னூர்க் கல்வெட்டு 816/2003)

தவிர, நாளிதழ்ச் செய்தியாளர், காமிண்டன் தேவ நக்கனேன்என எழுதியுள்ளார். இது பிழை. கல்வெட்டில் “தேவ நக்கனாந காமிண்டநே(ன்)என்றுள்ளதால், அவருடைய இயற்பெயர் தேவ நக்கன் என்பதும், காமிண்டன் அவருடைய அதிகார நிலை குறித்த சிறப்புப் பெயர் என்பதும் பெறப்படும்.  காமிண்டன் என்பது இடைக்காலத்துக் கல்வெட்டுகளில் காணப்படும் ஒரு பெயராகும். தலைமைப் பொறுப்பில் உள்ளவரைக் குறிக்கும் ஒரு சொல். ஊர்த்தலைவர், ஒரு சிரு பகுதியின் ஆட்சித் தலைமை பெற்றவர் என்பதைக் குறிக்க இப்பெயர் வழக்கில் இருந்தது. கருநாடகக் கல்வெட்டுகளிலும் இச்சொல் மிகுதியாகப் பயில்வதைக் காண்கிறோம். “காமுண்டன்  என்பது இப்பெயரின் இன்னொரு வடிவம்.  காலப்போக்கில், கருநாடகத்தில் இப்பெயர் “கவுட(ர்)எனவும், தமிழகத்தில் “கவுண்டன்  எனவும் மருவி வழங்குகிறது. கல்வெட்டில், “பிராமணந் தேவநக்கனாந காமிண்டநே(ன்)  என்றிருப்பதால், இந்த தேவ நக்கன் ஒரு பிராமணர் என்பதும் ஊர்த்தலைவராய் இருந்தவர் என்றும் கருதலாம். கல்வெட்டின் எழுத்தமைதியின் அடைப்படையில், இது கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம்.

பத்துக்குடி ஓதாளர் பணி
கம்பத்தீசுவரர் கோயில், இப்பகுதியில் இருக்கும் கண்டியன் கோயிலைத் தாய்க்கோயிலாகக் கொண்டு, ஓதாளர் குலத்துப் பத்துக்குடியினரால் கட்டப்பெற்றது என்று ஒரு வழக்காறு உள்ளது. அதற்கேற்ப, நந்தி மண்டபத்தின் அடிப்பகுதியில் பத்துக்குடி ஓதாளரையும் அவர்களின் தலைவரையும் புடைப்புருவங்களாகச் செதுக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.


பத்துக்குடி ஓதாளரும் தலைவரும்

கோயிலின் புத்தாக்கம்
கம்பத்தீசுவரர் கோயில், அதன் பழமையான கட்டுமானத்தோடு பேணுவாரின்றி, வழிபாடின்றிப் புதர் சூழ்ந்த நிலையில் இருந்த நிலையில், திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் வரலாற்று ஆய்வு மையத்தினரின் முயற்சியால், திருப்பூரில் இயங்கிவரும் உழவாரப்படை அமைப்பினரின் உதவிகொண்டும், ஊராரின் உதவிகொண்டும் புத்தாக்கம் பெற்றுள்ளது.  தற்போது பூசையாளர் ஒருவரைப் பணியில் அமர்த்தியுள்ளனர்.


கோயிலின் புறக்கணிக்கப்பட்ட பழைய தோற்றம்
கோயிலின் புதுத்தோற்றம்
அய்யனார் சிற்பமும் கல்வெட்டும்
கம்பத்தீசுவரர் கோயிலுக்கு வெளியே ஒரு தொல்லியல் எச்சமான அய்யனார் சிற்பம் ஒன்றுள்ளது என்றும், அச்சிற்பத்தின் பின்புறம் எழுத்துப் பொறிப்பு உள்ளது என்றும் நண்பர் கூறி அங்கு அழைத்துப்போனார். கோயிலுக்கருகிலேயே ஒரு சுனைக்குளமும் அதனை ஒட்டிய மேடும் காணப்பட்டன. மேட்டின் மீது சில சிற்பங்கள் உடைந்த உறுப்புகளோடு காணப்பட்டன. இரு பெண் தெய்வச் சிற்பங்கள், ஒரு நந்தி, ஒரு சிவலிங்கப்பீடம், ஓரிரு நாகச் சிற்பங்கள் ஆகியவற்றுக்கிடையில் ஒரு பெரிய அய்யனார் சிற்பமும் இருந்தது. மேற்படி வரலாற்று ஆய்வு மையத்தினர் நாளிதழில் தெரிவித்தவாறு அய்யனார் சிற்பம் மூன்றேகால் அடி நீளமும், இரண்டரை அடி உயரமும் உடையது. பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம். மையத்தில்  அய்யனார் சிற்பம் பெரிய உருவில். அவரின் இரு புறமும் பூரணை, புஷ்கலை இருவரின் உருவங்கள் சிறிய வடிவில். மேற்புறத்தில் சிறிய வடிவில் சாமரம் வீசும் பெண்ணுருவம். அய்யனாரின் சிற்பம் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. இடக்காலைக் குத்திட்டு வைத்தும், வலக்காலைத் தொங்கவிட்டும் உத்குடி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். தலையில் சடை முடி, “ஜடாமண்டலம்  என்னும் சிற்பக்கலைக்கூற்று வடிவத்தில் உள்ளது. இடக்கையைக் குத்திட்ட காலின் முழங்காலின் மீது படியவிட்டு, விரல்களும் உள்ளங்கையும் தரையை நோக்கித் தளர்ந்து தொங்கிய நிலையில் வைத்திருக்கிறார். சிற்பக்கலை இலக்கணத்தில் இந்த அமைப்பைத் தண்ட ஹஸ்தம்என்பர். “கஜஹஸ்தம்  என்னும் இலக்கணமும் பொருந்துவதாகக் கொள்ளலாம். வலக்கை முன்கை மடிந்த நிலையில் செண்டு என்னும் ஆயுதத்தை ஏந்தியுள்ளது. முகத்தில் மூக்குப்பகுதி உடைந்திருக்கின்றது. செவிகளில் தடித்த குண்டலங்கள். கழுத்தில் மூன்றடுக்குகளாக அணிகலன்கள். இடது தோளிலிருந்து இறங்கி இடைப்பகுதி வரை வந்து பின்புறமாகத் திரும்பும் முப்புரி நூல். இடையில் உதரபந்தம் என்னும் அணி. இடையில் அணிந்திருக்கும் ஆடைக்கட்டு, அமர்ந்திருக்கும் பீடத்தில் தொங்கலாகத் தாழ்ந்துள்ளது. இடையாடையின் மீதும் இரு அணிகலன்கள்; ஒன்றில் பதக்கமும் உள்ளது. தோள்களிலும், முன்கைகளிலும் வளைகள். கால்களில், சிலம்பை ஒத்த கழல்கள். பீடத்தின் கீழே, பன்றி உருவமும், அதன் பின்னால் நாய் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. அய்யனார் சிற்பம், சடை மண்டலத்தை ஒட்டி மேலிருந்து கீழாக முழுதும் உடைந்து விரிசல் கண்டுள்ளது. உடைந்த விரிசல் பகுதியில் சிமெண்ட்டுப் போன்ற பூச்சு கொண்டு ஒட்டவைத்திருக்கிறார்கள். இடக்கையின் தோளருகே கல்லின் துண்டம் உடைந்து விழுந்துள்ளது. அய்யனார் சிற்பத்தின் அருகிலேயே இப்பகுதியில் கிடைத்த முதுமக்கள் தாழி ஒன்றையும் வைத்திருக்கிறார்கள். சின்ன ஆரியபட்டிக்கருகில் பெருங்கற்கால வாழ்விடப்பகுதியும் (சாம்பல் மேடு என்று கிராமத்தில் குறிப்பிடுவர்) உள்ளது என நண்பர் தெரிவித்தார்.


சுனைக்குளம்


அய்யனார் சிற்பம் உள்ள மேடு


அய்யனார் சிற்பம் - அண்மைத்தோற்றம்
பெருங்கற்கால முதுமக்கள் தாழி
அய்யனார் பற்றி
தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் அவர்களிடம் பல்வேறு சமயங்களில் அய்யனார் பற்றிக் கேள்விகள் கேட்டு அவர் கூறிய பல்வேறு செய்திகளை நினவிலிருந்து மீட்டு நோக்குகிறேன். அய்யனார், நாட்டார் வழக்காற்றில் வணங்கப்படும் சிறு தெய்வங்களுள் ஒருவர். தொன்மைக் காலத்தில், இனக்குழு, அதைத் தொடர்ந்த பழங்குடி ஆகிய சமூக நிலைகளில் குழு அல்லது குடித் தலைவர் ஒருவரை, அவர் இறந்த பின்னர் வழிபடுகின்ற மரபில் அய்யனார் வழிபாட்டையும் சேர்க்கலாம். பல்வேறு குழுக்களும் பல்வேறு குடிகளும் தமக்கென ஓர் அய்யனாரை வழிபட்டு வந்திருக்கின்றனர். அய்யனார் ஒரு பொதுச் சொல். ஐயன்”  என்னும் சொல் குறிக்கும் தலைவன் என்னும் பொருளில் வணங்கப்படுபவரே அய்யனார். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அய்யனார் வழிபாடு இருந்துவருகின்றது. குறிப்பிட்ட சாரார் வணங்கும் கடவுளாக அய்யனாரைக் கருதவியலாது. வேட்டுவக் குடிகள் வணங்கிய அய்யனார் பெருமளவில் காணப்படுகிறார். அய்யனார் சிற்பங்களில் காணப்பெறும் நாய் உருவம் வேட்டைக் குடிகளோடு தொடர்புடையது. மேலே, சின்ன ஆரியபட்டியில் உள்ள அய்யனார் சிற்பமும் வேட்டைக்குடியினரின் தெய்வமாகவே கொள்ளவேண்டும். வேட்டைத்தலைவனின் வேட்டை நிகழ்வுகளில் நாய் தவிர்க்க இயலாத ஓர் அங்கம். சின்ன ஆரியபட்டியில் நாம் காணும் பன்றியின் உருவம், வேட்டைப் பொருள் என்னும் அடைப்படையில் செதுக்கப்பட்டிருக்கவேண்டும். சில அய்யனார் சிற்பங்களோடு குதிரை இணைந்திருக்கும். சிலவற்றில் யானை உருவம் தொடர்பு படுத்தப்பெறும். இவையெல்லாம், தொடக்ககால அய்யனாரைப் பெருஞ்சமயத்தார் தம் சமயத்துள் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் காலப்போக்கில் ஏற்பட்டவை. குதிரையைச் சமணத்தாரும்(ஜைனரும்), யானையைப் பௌத்தரும் இணைத்துக்கொண்டார்கள் என்பர். பழங்குடிகளைப் பெருஞ்சமயத்தார் தம்முடன் இணைத்துக்கொள்ளும்போது அப்பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்து அவர்களைத் தக்கவைக்கும் முயற்சியின் வெளிப்பாடுகளே இவை. அய்யனாருக்கு இரு மனைவியரைப் புனைந்தாக்கியது பிற்காலத்திய சமய, பண்பாட்டு மாற்றங்களின் விளைவு எனலாம். ஆங்காங்கே, பெருவழிகளை ஒட்டி அமைந்திருந்த அய்யனார் கோயில்களில் அய்யனாரை வழிபட்ட வணிக மக்களும், அய்யனாரை அவர்களுக்கான தெய்வமாக்கினர் எனலாம். தொடக்கம் இதுதான் என்றோ, அய்யனார் இன்னாருக்குரியர் என்றோ வரையறைக்குள் கொணரவியலாப் பரவலாக வழிபடுகின்ற தெய்வமே அய்யனார். அவர் ஒரு காவல் தெய்வம் என்ற கருத்து நிலைத்துள்ளது. கால்நடைச் சமுதாயத்தில் நிரை கவர்தல், நிரை மீட்டல் ஆகிய நிகழ்வுகளின் போதும் அய்யனார் வழிபாடு இணைந்துள்ளது என்று கருதலாம். அது போன்ற ஒரு நடுகல் சிற்பக்கல்வெட்டில் - ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் இருந்த இச்சிற்பம் தற்போது ஈரோடு கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் உள்ளது - ஐயன் குறிக்கப்பெறுவதை காண்கிறோம். காங்கயம் பகுதியில் – முல்லை நிலப் பண்பாடு நிலவிய பகுதி – பத்தாம் நூற்றாண்டளவிலான அய்யனார் சிற்பங்கள் நிறையக் கிடைத்துள்ளன. தஞ்சைப் பகுதியில், சுனாம்பேடு என்னும் ஊரின் குளக்கரையில் கிடைத்த அய்யனார் சிற்பமே காலத்தால் முற்பட்டது. இந்த அய்யனார் சிற்பத்தில், நாயின் உருவத்தோடு சேவலின் உருவமும் உள்ளது.


எகிப்து மம்மியில் செண்டு
அய்யனார், தம் கையில் செண்டு என்னும் ஓர் ஆயுதம் தாங்கியிருப்பார். இது ஒரு நீள்தண்டும், தண்டின் உச்சிப்பகுதியில் சுருள் வடிவில் சாட்டை என்று சொல்லத்தக்க ஓர் அமைப்பும் கொண்ட ஓர் ஆயுதம்.  இது அய்யனாருக்கே உரியது என்பது போல, வேறு கடவுளர் உருவங்களில் காணப்படாத ஒன்று. ஒரு சிற்றரசன் அல்லது குறுந்தலைவன் என்னும் நிலையின் குறியீடாகவே இதைக்கொள்ளவேண்டும். இந்தச் செண்டாயுதம், எகிப்திய அரசன் ஒருவனுடைய கல்லறையில் சவப்பெட்டியிலும் காணப்படுவது வியப்பை அளிக்கும் செய்தி. இது பொன்னால் செய்யப்பட்ட ஒன்று. அரசனுக்குரியதோர் ஆயுதம் என்பதுதான் பொதுக் கருத்து.

அய்யனார் சிற்பத்தின் பின்புறம்
சின்ன ஆரியபட்டி அய்யனார் சிற்பத்தின் பின்புறத்தில், மூன்று வரிகளில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் காணப்படுகின்றன. அதன் பாடம் கீழ் வருமாறு:

அய்யனார் சிற்பக் கல்வெட்டுப் பாடம்:

1    இராசிங்க பல்ல(வரை)
2    யந் ஏறினபோது (*)
3    நேன் வேட்கோ


இக்கல்வெட்டில், ஸ்வஸ்திஸ்ரீ  என்னும் மரபுத்தொடர் கூடக் காணப்படவில்லை. இராசிங்க பல்லவரையன் என்னும் உள்ளூர்த் தலைவன் அல்லது ஓர் அரச அதிகாரி, இப்பகுதியின் அதிகாரப் பதவியில் அமர்ந்தபோது, இச்சிற்பம் செய்விக்கப்பட்டது என்று பொருள் கொள்ளலாம். தென்னவதரையன், பல்லவதரையன் (பல்லவரையன்) என்பன அரசனின் கீழுள்ள அதிகாரிகளின் பெயர்களாக வருவதைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். சிற்பத்தைச் செய்வித்தவனின் பெயர் காணப்படவில்லை. பெயருக்குப் பின்னால் இன்னானேன் என்று குறிப்பிட வரும் “நேன்  என்னும் ஒட்டுச் சொல் மட்டிலும் உள்ளது. ஆனால், அதனை அடுத்து “வேட்கோஎன்னும் ஒற்றைச் சொல் உள்ளது. இது செய்வித்தான் வேட்கோ என்னும் குயவர் குடியைச் சேர்ந்தவன் என்னும் பொருள் தருகின்றது. வேறு விரிவான விளக்கங்கள் பெறப்படவில்லை. இக்கல்வெட்டிலும், மேலே குறிப்பிட்ட நந்திச் சிற்பக்கல்வெட்டிலும் அரசர் பற்றிய குறிப்பு இன்மையால், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கொங்குச் சோழர் ஆட்சி முடிவின்போது – பாண்டியர் ஆட்சி அமையுமுன்னர் – ஏற்பட்ட அரசரில்லாச் சூழ்நிலையின்போது இக்கல்வெட்டுகள் வெட்டப்பட்டிருக்கக்கூடும் என்று கருதலாம்.


நந்தியின் பின்புறம் - கல்வெட்டு


முடிவுரை
கோவை, திருப்பூர் ஆகிய கொங்குப்பகுதியில், நாட்டுப்புறங்களில் உட்கிடையாய் அமைந்த சின்னச் சின்ன ஊர்களில் மிகுதியும் வெளிப்படாத பல வரலாற்றுச் சின்னங்களும், கல்வெட்டுகளும் இன்னும் காணக் கிடைக்கின்றன என்பது கொங்குப்பகுதியின் வரலாற்றுப்பழமைக்குச் சான்று பகர்வதாகும். ஆங்காங்கே, பரவலாகத் தொடர்ந்து கண்டறியப்படும் அய்யனார் சிற்பங்களும், கொற்றவைச் சிற்பங்களும் கொங்குப்பகுதியின் நாட்டார் பண்பாடு  மற்றும் வழிபாட்டுத் தொன்மையை எடுத்துக்கூறுவனவாய் உள்ளன என்பதில் ஐயமில்லை.




  நன்றி :  திரு.பூங்குன்றன், தொல்லியல் அறிஞர் அவர்களுக்கு.





துரை.சுந்தரம், கல்வெட்டு ஆய்வாளர், கோவை.
அலைபேசி:  9444939156.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக