மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 10 ஜூலை, 2018

திருப்பட்டூர் அய்யனார் கோயில் 


முன்னுரை
அண்மையில், திருச்சி அருகில் அமைந்துள்ள சிறுகனூரில் இருக்கும் ஸ்ரீஇராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் நடந்த கல்வெட்டியல் பயிற்சி நிகழ்வுக்காகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர் திரு. ச.பாபு. கல்லூரி உதவிப்பேராசிரியர். தஞ்சைப்பல்கலை வழி தொல்லியல்-கல்வெட்டியல் படித்தவர். முதல் நாள் கல்வெட்டு எழுத்துகள் கற்பித்தலும், அடுத்த நாள், கல்வெட்டு எழுத்துகளை நேரடியாகக் கண்டு படித்தல் முயற்சியும் நடந்தன. சிறுகனூருக்கு அருகிலுள்ள திருப்பட்டூர் அய்யனார் கோயில் கல்வெட்டு எழுத்துகளே நேரடிப் படித்தலுக்குக் களம் அமைத்தன. அவ்வமயம், திருப்பட்டூரில் உள்ள பிற கோயில்களையும் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. திருச்சிப்பகுதியில் அமைந்திருக்கும் தொல்லியல்-வரலாறு தொடர்பான இடங்களைப் பார்க்க இதுவே முதல் வாய்ப்பாகவும் இருந்தது. அதன் பகிர்வு இங்கே.

                                         அய்யனார் கோயிலின் முன்புறத்தோற்றம்


திருப்பட்டூர்
சிறுகனூரிலிருந்து நான்கு கல் (கி.மீ.) தொலைவில் இருக்கும் ஊர் திருப்பட்டூர். இங்கு, பிரம்மபுரீசுவரர் கோயில், அரங்கேற்ற அய்யனார் கோயில், வரதராசப்பெருமாள் கோயில் என்னும் விண்ணகரம், காசி விசுவநாதர் கோயில் ஆகிய பல கோயில்கள் உள்ளன. அய்யனார் கோயிலில் கல்வெட்டுப்படித்தல் நடைபெற்றதெனினும், முதலில் சென்றுபார்த்தது பிரம்மபுரீசுவரர் கோயிலே. அன்று, கோயிலில் மக்களின் கூட்டமிகுதி காரணமாக வரிசையில் நின்று இறைவனைக் கண்டு வெளிவர மட்டுமே இயன்றது. கோயிலின் கட்டிடக்கலைக்கூறுகளையோ, சிற்பக்கலைக்கூறுகளையோ கண்டு ஒளிப்படம் எடுக்க இயலவில்லை. கோயிலில் கல்வெட்டுகளும் காணப்படவில்லை. பிரம்மனுக்குத் தனிச் சன்னதி என்னும் சிறப்பைக்கொண்டுள்ள ஒரு கோவில்.

திருப்பட்டூர்-அய்யனார் கோயில்
கல்வெட்டியல் பயிற்சி வகுப்பினை முடித்துக் கல்வெட்டுகளை நேரில் பார்த்துப் படித்தலுக்குத் தெரிந்தெடுத்த இடம் சிறுகனூருக்கு அருகிலேயே இருந்த திருப்பட்டூர் அய்யனார் கோயிலாக அமைந்தது. கோயிலைப் பார்த்ததும் ஒரு வியப்பு. அய்யனார் கோயில் என்னும் பெயரில் ஒரு பெரிய கற்றளியைப் பார்ப்பது இதுவே முதன்முறை. மூன்று நிலைக் கோபுரம். அதையொட்டிச் சுற்றுச் சுவரோடு கூடிய ஒரு தனிக்கோயில். உள்ளே நுழைந்ததும், சிவன் கோயில்களில் நந்தி மண்டபம் இருப்பதுபோல, ஒரு மண்டபம். அதில், ஒரு யானைச் சிற்பம். அழகான சிற்பம். நுண்மையான செதுக்கல் வேலைப்பாடுகள் காணப்படவில்லை. எனினும், உருண்டு திரண்டு மொழுக்கென்று வடிக்கப்பட்ட அழகான சிற்பம். முன்புறத்தோற்றத்தில், உருண்ட தலைப்பகுதி. அதில் மிகுந்த புடைப்பின்றி  ஒரு நெற்றிப்பட்டம் காணப்பட்டது. கண்கள் இருக்கும் பகுதியில், கண்கள் நன்கு செதுக்கப்படவில்லை. யானையின் செவிகள் நன்கு தெளிவாயுள்ளன. வாய்ப்பகுதியில் தொங்கு சதையும், வாயிலிலிருந்து முன்புறமாக வெளிப்படும் தந்தங்களும் தெளிவாக வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், தந்தங்கள் சிறியவை. எனவே, பக்கவாட்டுத் தோற்றத்தில், தந்தங்கள் துதிக்கையின் வடிவப்பரப்பைத் தாண்டாதவாறு காணப்படுகின்றன. யானையின் துதிக்கை, தரையைத் தொடுமளவு உள்ளது. மற்ற கோயில்களின் அமைப்பைப் போல், வாகன மண்டபத்தின் நேர் எதிரே நுழைவாயில் இல்லை. மாறாக, அர்த்தமண்டபத்தின் சுவர்ப்பகுதியே காணப்பட்டது. அதில், கோட்டம் (கோஷ்டம்) என்னும் கோயிலின் கட்டிடக் கூறும், கோட்டத்தின் நடுவில் ஒரு பலகணியும் உள்ளன. இப்பலகணியின் வழியே மூலவரைக் காணுகின்ற வகையில் ஓர் அமைப்பு.   யானையின் முகம் பலகணி வழியாக அய்யனாரைப் பார்த்துக்கொண்டிருக்கும் அமைப்பு. கோயிலின் அதிட்டானப் பகுதி எளிமையானதொன்று. சுற்றுப்பாதையின் தரைப்பகுதியில் சற்றே மறைந்து கீழிறங்கிய நிலையில் அதிட்டானத்தின் கண்டப்பகுதி தெரிந்தது. அடுத்து மேலே, முப்பட்டைக் குமுதமும்,  கண்டம், பட்டிகைப் பகுதிகளும் உள்ளன. ஜகதிப்பகுதி தரையின் கீழ் புதைந்துபோயுள்ளது. சுவர்ப்பகுதியில், ஆங்காங்கே, தூண்களும், கோட்டங்களும். கோட்டங்களில் சிற்பங்கள் இல்லை. எளிமையான வேலைப்பாடு.  கூரைப்பகுதியில், கர்ண கூடுகளும் அவற்றுக்கு மேலே யாளி வரிசை போன்று சதுரக்கற்களின் வரிசையும் காணப்படுகின்றன. 

                                            கோயிலின் உள்புறத்தோற்றம் 


                                                          யானை வாகனம்



பலகணி
கோட்டம்-அதிட்டானம்-எளிய அமைப்புடன்


கோயில் மூலவர் - அரங்கேற்ற அய்யனார்
கோயிலில் மூலவராக, அமர்ந்த நிலையில் அய்யனாரும் அவரது இரு புறங்களில் அவரது இரு மனைவியரான பூரணையும், புஷ்கலையும். கோயில் மூலவரான அய்யனார் “அரங்கேற்ற அய்யனார்  என்னும் பெயர் கொண்டு விளங்குகிறார். இப்பெயர்க் காரணம் பற்றி அறியவரும் செய்திகளாவன:

சுந்தரருடன் திருக்கயிலாயம் சென்ற சேரமான் பெருமாள் நாயனார், திருக்கயிலாய ஞான உலா என்னும் சிற்றிலக்கிய நூலை இயற்றினார்.  இந்த நூலை, ஈசன், மக்கள் அறியும்படி திருப்பட்டூரில் பிறந்த சாத்தன் அய்யனார் என்பவரைக்கொண்டு திருப்பட்டூரில் அரங்கேறச் செய்தார் என்று கருதப்படுகிறது.  இந்த அய்யனாரே அரங்கேற்ற அய்யனார் என்னும் பெயரில் இவ்வூரில் எழுந்தருளியுள்ளார். 


கோயில் கல்வெட்டுகள்
கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய இரு பகுதிகளிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரண்டாம் இராசேந்திரன், குலோத்துங்கன் ஆகியோரின் கல்வெட்டுகள் இங்குள்ளனவென்று குறிப்புகள் உள்ளன. வழக்கமாக நான் கையாளுகின்ற ஒரு வழியில், மைதா மாவைக் கல்வெட்டு எழுத்துகள் மீது பூசி, ஒரு சில பகுதிகளைப் பயிற்சி மாணவர்க்குப் படித்துக்காட்டினேன். ஒளிப்படங்களும் எடுத்துக்கொண்டேன்.  அவ்வாறு எடுத்த ஒளிப்படங்களைக் கொண்டு, கல்வெட்டுகளின் பகுதிகளைப் படித்ததில் தெரியவரும் செய்திகள் கீழே:

கல்வெட்டு- பாடம்-1


கல்வெட்டுப் பாடம்-1

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள்
2 தேவற்கு யாண்டு 4-வது (தநு) நாயற்று
3 து தசமியும் செவ்வாக்கிழமையும் பெற்[ற]
4 ட கரை இரா[ச]ரா[ச] வளநாட்டுத் திருப்பிட[வூர்]
5 (கா)ன …… சபையும் திருப்பி[டவூர்] ……பிள்……
6 பந் தெற்றி உடைய நாயனார் கோயிற்
7 வரர் ஸ்ரீ மாகேச்0வ[ர] கங்காணி செய்வா
8 [கோ]யிற் கணக்கனுக்கு இந்த கோயிற்காணி
9 [பி]ராமணன் காச்0யபன் மூவாயிரத்தொரு
10 [ம]ணவாள பட்டனேன் வெட்டி
11 [நா]யனார் திருவிளக்கில் செலவிலி சு(ற்ற)……
12 டி விட்ட புறையோம்பியில் மன்றாடி
13 வெம்பனை நான்குடி விற்று போ…..னில் இவன் ஆட்டை
14 க்கு சூலநாழியா[ல்] நெய் நாழி உரியும் நான் கைக்கொண்டு
15 இவ்வாண்டு முதல் குன்றமெறிந்த பெருமாள் கோயிலிலே

கல்வெட்டுச் செய்திகள்
மேலே காட்டிய கல்வெட்டு வரிகளில் உள்ள திரிபுவனச் சக்கரவத்திகள்” என்னும் தொடரிலிருந்து, இக்கல்வெட்டு குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு எனக் கருதலாம். ஆனால் மூன்று குலோத்துங்கர்கள் இருப்பதால் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற அரசன் எந்தக் குலோத்துங்கன் என்பது தெளிவில்லை. யாண்டு 4-வது   என்னும் தொடர் அரசனின் நான்காம் ஆட்சியாண்டைக் குறிப்பது. எனவே, கல்வெட்டின் காலம் கி.பி.  1074, 1137, 1182 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஒன்றாகலாம். எழுத்தமைதியும் 12-ஆம் நூற்றாண்டு எனக்கருதுமாறுள்ளது. தமிழில் உள்ள அறுபது ஆண்டுகளைக் கொண்ட வட்டத்தின் ஆண்டுப்பெயர் கல்வெட்டில் இடம் பெறவில்லை. ஆனால், தமிழ் மாதம், “தநு நா(ஞா)யறு  என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. தனு ஞாயிறு, மார்கழி மாதத்தைக் குறிக்கும். சோழர் காலக் கல்வெட்டுகளில், மேழம் தொடங்கி மீனம் வரையுள்ள பன்னிரண்டு இராசிப் பெயர்களே சித்திரை தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதங்களைக் குறித்தன.  திருப்பட்டூர், சோழர் காலத்தில்  இராசராசவளநாட்டில் இருந்துள்ளது என்றும், திருப்பட்டூரின் பழம்பெயர் திருப்பிடவூர் என்பதும் கல்வெட்டு வாயிலாக நாம் அறியலாகும். தெற்றி உடைய நாயனார் கோயில் என்பது இந்த அய்யனார் கோயிலைக் குறிப்பதாகலாம். கோயிலுக்கு விளக்கெரிக்கக் கொடை அளிக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த நிவந்தத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்ற மணவாள பட்டன் என்பான் மன்றாடி (இடையன்) ஒருவனிடமிருந்து நாள் ஒன்றுக்கு ஒன்றரை நாழி நெய் ஓர் ஆட்டைக்கு (ஆண்டுக்கு)ப் பெற்று விளக்கெரிக்கிறான். நெய்யை அளக்கச் சூல நாழி என்னும் அளவுக்கருவி பயன்பட்டது. இந்த மணவாள பட்டன் கோயிற் காணி (கோயிலில் பூசை உரிமை) உடையவன்.  இவனுடைய கோத்திரம் காச்0யப என்பதாகும். இவனுடைய பெயரில் முன்னொட்டாக வருகின்ற “மூவாயிரத்தொரு” என்பது பிராமணக் குடிக்குழுவினர் பெயர்களுள் ஒன்றைக்குறிக்கும்.  நாலாயிரவன், எண்ணாயிரவன் எனப் பிராமணப்  குடிப்பெயர்கள் பல, கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இராசேந்திர சோழன் கங்கைக் கரையிலிருந்து சைவ ஆச்சாரியர்களைக் கொணர்ந்து தன் தலைநகரில் குடியேற்றினான். பல்லவர்களும் நர்மதைப் பகுதியிலிருந்து வேதம் வல்லாரைத் தமிழகத்தில் குடியேறச் செய்தனர். அஷ்ட ஸஹஸ்ர, பிருஹத் சரண, வடம ஆகிய பெயர்கள், இவ்வாறு இடம்பெயர்ந்து தமிழகத்தில் குடிபுகுந்த பிராமணரைக் குறிப்பனவே. இந்த இடத்தில், உ.வே.சா. அவர்களின் கூற்று நினைவுக்கு வருகிறது. என் சரித்திரம்” என்னும் தம் நூலில், “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ரம் என்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப்பிரிவைச் சேர்ந்தவன் நான்.  அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை எண்ணாயிரத்தார் என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்கவேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்ட ஸகஸ்ரம் என்ற பெயரே அவர்களுக்கு நிலைத்துவிட்டது” என்று குறிப்பிடுகிறார். சோழர்கால எண்ணாயிரவர் கி.பி. 19-ஆம் நூற்றண்டில் உ.வே.சா. காலத்திலும் தொடர்ந்து குடிப்பெயரைக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   விளக்கெரிக்கும் இந்நிவந்தத்தை நிறைவேற்றும் செய்தியை மணவாள பட்டன், கோயிலின் நிருவாகத்தாரான ஸ்ரீகார்யம், ஸ்ரீமாகேசுவர கங்காணி, கோயில் கணக்கை எழுதுகின்ற கோயிற்கணக்கன் ஆகியோருக்குத் தெரிவித்துப் பதிவு செய்வதைக் கல்வெட்டு குறிக்கிறது. கல்வெட்டில் வருகின்ற “குன்றமெறிந்த பெருமாள் கோயில்  எந்தக் கோயிலைக் குறிக்கிறது என்பது தெளிவாகவில்லை.

கல்வெட்டு- பாடம்-2

கல்வெட்டுப் பாடம்-2

ஸ்ரீராஜராஜதேவந் தலை உடை
2 பூர்வபக்ஷ …….. செம்பியதரை[யன்]
3 பெற்ற ரேவதி நாள் …… த்துணைப்பெரு[மாள்]
4 திருப்பிடவூர் நாட்டு தே….. டையான் திருச்சி..
5 பிள்ளையார் (திருவேம்)
6 ஸ்ரீகாரியம் செய்[வார்]
7 செய்வார் தேவகன்மி …
8 உடைய சிவப்பி[ராமணன்]
9 மூவாயிரத்தொருவன் நாயகனான ம..
10 வெட்டினபடியாவது இந்நாய[னார்]
11 சுற்றடை  நெ(யி)ல் நான்கு
12 மன்றாடி பணகுடையான்


கல்வெட்டுச் செய்திகள்
இக்கல்வெட்டும் மேலே கண்ட முதற்கல்வெட்டுப் போன்றதொன்று எனலாம். கோயிலில் பணி செய்கின்ற தேவகன்மியரில் ஒருவனான, கோயிற் காணியுடைய சிவப்பிராமணன் மூவாயிரத்தொருவன் நாயகன், நிவந்தம் ஒன்றை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கல்வெட்டிக்கொடுக்கிறான். நிவந்தம் விளக்கெரிப்பதே ஆகலாம்; ஏனெனில், மன்றாடி பணகுடையான் என்பவன் குறிக்கப்பெறுகிறான். கல்வெட்டில் வருகின்ற ஸ்ரீராஜராஜ தேவந் என்னும் பெயர், இரண்டாம் இராசராசனை அல்லது மூன்றாம் இராசராசனைக் குறிக்கலாம். இவர்களின் ஆட்சியாண்டுகள் முறையே  கி.பி. 1146-1173, 1178-1218. எனவே, கல்வெட்டின் காலம் கி.பி. 12-13 –ஆம் நூற்றாண்டாகலாம்.  திருப்பிடவூர், ஒரு நாட்டுப்பிரிவாகவும் இருந்துள்ளது. செம்பியதரையன் என்பவன் நிவந்தம் அளித்தவன் ஆகலாம். பெயரைக் கொண்டு, இவன் ஓர் உயர் அரசு அதிகாரி எனக்கொள்ளலாம்.


கல்வெட்டு- பாடம்-3


கல்வெட்டுப் பாடம்-3

தலை உடையான் பாமான தேவர் எழுத்து இவை ஆண்மகன் அரசூருடையான் சுந்தரபாண்(டியன் எழுத்து)
2 செம்பியதரையன் எழுத்து இவை மேலை சூருடையான் சேரமான் தோழன் எழுத்து இவை
3 துணைப்பெருமாள் எழுத்து இவை மேலை சூருடையான் சமைய மந்திரி எழுத்து இவை மேலை
4 திருச்சிற்றம்பல வேளான் எழுத்து இ[வை] மருத்தூருடையான் நம்புசெய்வான் எழுத்து
5 இவை எதிர்மலை உடையான் வன்னாவுடையான் இவை ஆண்ம[கன்]சூருடையான்
6 ப்பெருமாள் எழுத்து இவை வந்தலை உடையான் வீரராசேந்திர சோழ வேளான் எழுத்து
7 [இ]வை நல்லூருடையான் தென்னகோன் எழுத்து இவை (ச0டையான் ஆதன்ம ஆழகியான்
8 இவை சிறுவளைப்பூருடையான் ஆவத்துக்காத்தான் எழுத்து இவை குளகானத்துடையான்
9 வல்லவரையன் எழுத்து …உடையான் அஞ்சாதபெருமாள் எழுத்து
10 இவை சாத்தனுடையான் பிச்சாண்டான் [எழுத்து]
11 இவை சாத்தனுடையான் சம்பந்தப்பெருமாள் [எழுத்து]
12 விசையரையன் எழுத்து  இவை உம்பளக்கானத்துடை[யான்  எழுத்து]
13 இவை சாத்தனுடையான் தே(வ)ப்பெ[ருமாள்] எழுத்து இவை மருதத்[தூர்]
14 குளகானத்துடை[யான் எழுத்து]
15 பழனதியரையர் எழுத்து
16 நம்பு செய்வான் எழுத்து ஆதன்ம அழகியான்…


கல்வெட்டுச் செய்திகள்
கல்வெட்டுகளின் இறுதியில், நிவந்தங்களின் விளக்கமான குறிப்புகளுக்குப் பின்னர், சான்றொப்பம் இடுவோரின் பெயர்கள் பட்டியலாகத் தரப்படும். பட்டியலில் உள்ள பெயர்கள் மிகுதியாகக் காணப்படின் நிவந்தங்கள் பெரிய அளவினையுடையதாகவும், பெரிய அதிகாரிகளின் தொடர்பு கொண்டதாகவும் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு கல்வெட்டின் பகுதியே இது. பலரின் பெயர்களிலிருந்து பெரிய அதிகாரிகள் குறிக்கப்பெறுவதைக் காண்கிறோம். தவிர, பல ஊர்ப்பெயர்களையும் காண்கிறோம். அரசூருடையான், நல்லூருடையான், வந்தலை உடையான், சிறுவளைப்பூருடையான் என்பன ஊர்ப்பெயர் குறித்த ஆள்களின் பெயர்கள். சிறப்பான பகுதி என்னவெனில், சாத்தனுடையான்  என்னும் தொடர் மூன்று பெயர்களில் காணப்படுகிறது. இத்தொடர், ஊர்ப்பெயரைக் குறிப்பதாய்க் காணப்பெறவில்லை. சாத்தன் என்னும் அய்யனாருடன் உள்ள ஏதோவொரு தொடர்பைக் குறிக்கிறது எனலாம். இது ஆய்வுக்குரியது.

கல்வெட்டுப் பாடம்-4

1 செம்பாதியும் இந்த நிலம் அறுவேலியும் விற்றுக் குடுத்துக்கொள்வதான
  எம்மிலிசைந்த விலைப்பொருள் ளன்றாடு நற்காசு நூறு இக்காசு நூறும்
  ஆவணக்களியே கைச்செல(வ)றக்கொண்டு விடக்கடவோமாகவும்
2 லியுந் நீர்க்கோ(வை)யுட்பட இக்குளமிரண்டும் நத்தத்திற் செம்பாதியும்
  விலைக்கற விற்றுப் பொருளறக்கொண்டு விற்று விலையாவணஞ் செய்து
  குடுத்தோம் இப்போகழியுடையார்



                                                                                       கல்வெட்டு-4 





கல்வெட்டுச் செய்திகள்
கோயிலுக்கு நிலம் கொடையாக அளிக்கப்படும் செய்தியைச் சொல்லும் ஒரு கல்வெட்டுப் பகுதி. ஊர்ச்சபையினர் நிலத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கோயிலுக்களிப்பதான ஒரு நடைமுறை இங்கு குறிப்பிடப்பெறுகிறது. விலைப் பொருள் நூறு காசுகள் என்னும் இசைவு ஏற்படுகிறது. இக்காசு, இந்நிகழ்வு நடைபெறும் காலத்தே புழக்கத்தில் இருக்கும் காசு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டி “அன்றாடு நற்காசு  என்னும் தொடர் பயன்படுத்தப்பெறுகிறது. ஆங்கிலத்தில் “IN VOGUE  என்னும் தொடருக்கு இணையானதாகக் கொள்ளலாம். நிகழ்வின்போது ஆட்சியில் இருக்கும் அரசனைக் குறிக்கவும் இதுபோன்ற ஒரு தொடர் கல்வெட்டுகளில் பயில்வதைக் காணலாம். அத்தொடராவது : “அன்றாள் கோ”.   அதாவது, ஆட்சியில் இருக்கும் அரசன். இது போன்ற நிலவிற்பனை பற்றிய கல்வெட்டுகளில் பயிலும் “ஆவணம்” என்னும் சொல் விலை என்னும் பொருளுடையது. ஆவணக்களி என்பது ஆவணக்களமாகும்; அதாவது ஊரறிய விற்பனை நடைபெறுமிடம். விலையாவணம் என்பது, விற்றதற்கும், விலைப்பொருள் செலுத்தப்பட்டதற்கும் கொடுத்த எழுத்துச் சான்றைக் குறிக்கும். விற்கப்படும் நிலம் ஆறு வேலி அளவுடையது. இரு குளங்களும் நத்தத்தில் பாதியும் இந்த நிலத்தில் அடங்கும். நத்தம் என்பது குடியிருப்புக்கான நிலம். செம்பாதி என்னும் சொல்லாட்சி கருதத்தக்கது. சரி பாதி என்னும் பொருளுடைய இச்சொல்லை மதுரைப்பகுதியில் ஆங்கில வாடை அறியாதோர் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். கல்வெட்டில் காணப்பெறும் ‘போகழியுடையார்’ என்னும் தொடர் குறிப்பது யாரை எனப் புலப்படவில்லை.

                                                                                       கல்வெட்டு-5





கல்வெட்டுப் பாடம்-5

1 பிலவங்க வருஷம் மாசி …. வார்த்தறை புண்ணிய காலத்து கோட்டை
  வங்கிஷத்து சிக்கண நாயக்கர் குமாரர் கெம்பமாயண நாயக்கர் திருப்பிட ஊர்
  மஹாசெனங்களில்
2 நானாகோத்திரத்தில் பேர் விபரத்தில் குடுத்த பட்டையம் நாலுக்கு மேற்படி
  ஊர் நஞ்செய் நிலத்தில் கீழை மதகுப் பாச்சலில் சேத்த இழுவைப்படியால் குழி
  ……. இதுவும் புஞ்செ[ய்] குழி……. இந்த
3 நஞ்செ[ய்] குழி ரெண்டாயிரமும் இயக்கு இட்டு அளந்து நிறுத்தின தாழை 
  ஓடைக்குக் கிழக்கு நாதத்தோணி களருக்கு வடக்குக் கீழை மேட்டு
  வாய்க்காலுக்கு மேற்கு ஏரிகரைக்குத் தெற்கு நான்கு எல்லைக்கு உட்பட்ட
  நஞ்செய்
4 குழி இரண்டாயிரமும் புஞ்செய் குழி இரண்டாயிரமும் முன் நடந்து வருகிற
  தேவதானம் திருவிடை ஆட்டம் பட்டவிறுத்தி பூதானம் நஞ்செய் புஞ்செய்
  இறையிலியும் அனுப்பித்துக் கொள்ளவும் இத்தன்மத்துக்கு அகிதம் பண்ணி
5 னவன் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்திலே போகக்
  கடவன்
6 நஞ்செய்க்கு அளவுகோல் அடி 27 புஞ்செய்க்கு அளவுகோல் அடி 30


கல்வெட்டுச் செய்திகள்
இக்கல்வெட்டு நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. கல்வெட்டின் எழுத்தமைதியும், சொல் நடையும் சோழர் காலக் கல்வெட்டுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளதைக் காணலாம். விசயநகரப் பேரரசின் ஆட்சியும், அதைத் தொடர்ந்த நாயக்கர் ஆட்சியும் தெலுங்கர்களால் நடத்தப்பெற்றதன் விளைவாகத் தமிழ்மொழி சீர்குலைவுற்றது என்பதை மறுக்கவியலாது.  சோழர் காலக் கல்வெட்டில் பயின்ற சில சொற்கள் இக்கல்வெட்டில் (நாயக்கர் காலத்தில்) மாற்றம் பெற்றதைக் கீழே காண்க:

யாண்டு, ஆட்டை - வருஷம்
ஊரோம் – மஹாசெனங்கள்

கல்வெட்டு, நிலக்கொடையைக் குறிக்கிறது. நன்செய் நிலம் இரண்டாயிரம் குழி; புன்செய் நிலம் இரண்டாயிரம் குழி. நிலத்துக்கு எல்லைகள் குறிப்பிடப்படுகின்றன. திருப்பட்டுர், திருப்பிடவூர் என்றே நாயக்கர் காலத்திலும் வழங்கிற்று. கல்வெட்டின் காலம் கி.பி.16-17 நூற்றாண்டு எனலாம். தேவதானம், சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கும்; திருவிடையாட்டம், விண்ணகரத்துக்கு (பெருமாள் கோயிலுக்கு) அளிக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கும். இவ்விரண்டு வழக்குச் சொற்களும் சோழர் காலந்தொட்டு இருப்பவை. ஆனால், பட்ட விருத்தி என்பது விசயநகரர்/நாயக்கர் காலத்தில் புகுந்தது. வேதம் பயில்வோருக்குக் கொடுத்த கொடை நிலம்.  இந்த நிலக்கொடைக்குக் கெடுதி செய்வோர் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர் என்னும் கருத்து விசயநகரர்/நாயக்கர் காலக் கல்வெட்டுகளில் காணப்படுவது. கல்வெட்டின் இறுதியில், நிலத்தை அளக்கப் பயன்பட்ட அளவுகோலைப்பற்றிய குறிப்பு உள்ளது. நன்செய் நிலத்துக்கு 27 அடி அளவுகோலும், புன்செய் நிலத்துக்கு 30 அடி அளவுகோலும் பயன்பட்டன. சோழர் காலத்தில், 12, 16 அடிக் கோல்கள் பயன்பாட்டில் இருந்தன.  வங்கிஷம் என்பது வம்சம் என்பதன் திரிபு. அகிதம் என்பது தீமையைக் குறிக்கும்.

                                                                    கல்வெட்டு-6 - நிலைக்கால் -1





கல்வெட்டுப் பாடம்-6-1 
(நுழைவாயில் கோபுர நிலைக்காலில் காணப்படுவது)

1 ஸ்வஸ்தி
2 ஸ்ரீ இந்த
3 திருக்கோ
4 புரம் எ(டு)
5 ப்பித்தா
6 ந் தெற்றி
7 ஆதித்த
8 னா ந
9      
10      த்த
11 ப்பிச்ச
12 ன் இது
13 திரு (ஆம்)
14 பபாடி
15 நாட்டா
16 ன் இ
17 த்தந்ம
18 ம் ரக்ஷி
19 த்தாந் உ
20 டைய
21 ஸ்ரீபாத
22 ம் எந்த
23 லை மே
24 லது ||-


கல்வெட்டுச் செய்திகள்
கோயிலின் வாயிற்புறக்கோபுரத்தின் நிலைக்கால்கள் இரண்டிலும் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் முதல் கல்வெட்டு மேலே குறித்தது. கோபுரத்தை எடுப்பித்தவன் தெற்றி ஆதித்தன் என்னும் …..பிச்சன் ஆவான். தெற்றி ஆதித்தன் என்பது அவனின் இயற்பெயர். தெற்றி” என்னும் பெயர் முதல் கல்வெட்டில் காணப்பெறும் இறைவர் பெயருடன் தொடர்புடையது எனலாம். அவனுடைய சிறப்புப் பெயர் தெளிவாகப் புலப்படவில்லை. பிச்சன் என்று முடிகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி, இதன் காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டாகலாம் எனக்கருதும் வண்ணம் உள்ளது. ஆம்பபாடி என்னும் ஒரு நாட்டுப்பிரிவும் குறிக்கப்படுகிறது.

                                                      கல்வெட்டு-6 - நிலைக்கால்-2


கல்வெட்டுப் பாடம்-6-2 
(நுழைவாயில் கோபுர நிலைக்காலில் காணப்படுவது)

 ஸ்வஸ்தி
2  ஸ்ரீ அரை
3  யன் ராஜ
4  ராஜனான
5  மதுராந்த
6  க இளங்
7  கோவே
8  ளான் |||-


கல்வெட்டுச் செய்திகள்
இரண்டாம் நிலைக்காலில் உள்ள இக்கல்வெட்டு,  அரையன் ராஜராஜனான மதுராந்தக இளங்கோ வேளான் என்னும் பெயரை மட்டும் கொண்டுள்ளது. நுழைவாயிற் கோபுரம் எடுப்பித்ததில் இவன் பங்கு என்ன என்னும் குறிப்பு கல்வெட்டில் இல்லை.  இப்பெயரில், அரையன் ராஜராஜன் என்பது அவனது இயற்பெயர். மதுராந்தக இளங்கோ வேளான் என்பது சிறப்புப் பெயர். தெற்றி ஆதித்தன், அரையன் ராஜராஜன் ஆகிய இருவருமே அரசு அதிகாரிகளாய் இருந்திருக்க வேண்டும்.

யனைவாகனச் சிற்பமண்டபத்தின் தூண்களிலும், எதிரில் உள்ள பலகணியின் இரு புறங்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் தெளிவாயில்லை.

முடிவுரை
கோயிலின் கல்வெட்டுகள் முழுவதையும் படம் எடுத்தோ, படியெடுத்தோ மீண்டும் படித்த பின்னரே, கோயிலைப்பற்றியும், இறைவராக எழுந்தருளியுள்ள அய்யனார் பற்றியும் மேலும் பல செய்திகள் புலப்படும். தற்போது படித்த கல்வெட்டுகளில் அய்யனார் பெயர் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுகள் யாவும் மீளாய்வு செய்யப்படவேண்டும்.

கல்வெட்டுகளை மாணாக்கருக்குப் படித்துக்காட்டிய பின்னர், அவர்களுக்குப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சிகளை முடித்தோம். கல்வெட்டுகளின் எழுத்துகள், கல்வெட்டுப் பாடங்கள், அவற்றின் செய்திகள் ஆகியவற்றின் அறிமுகம் கிடைத்த நிலையில் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் திரு.சிவலிங்கம் அவர்கள் கல்வெட்டுகளின் அருமையை அறிந்து வியந்து மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சிகளின் போது முழுதும் இருந்து மாணாக்கருக்குச் சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.  நிகழ்வுகளில், புத்த பிக்கு மௌரியர் புத்தா அவர்கள் உடன் இருந்தார். இவர், தென் இந்தியாவில் பௌத்தம் பற்றிய தொல்லியல் ஆய்வினை மேற்கொண்டு வருபவர். தம் ஆய்வு குறித்த  நூலொன்றினையும் வெளியிட்டுள்ளார்.  












துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

1 கருத்து: