மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 21 ஜூன், 2018

தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள்-5


தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில்தஞ்சைப்பெரியகோயிலில் உள்ள 
கல்வெட்டுகளின் சில படங்கள் அழகுற வெளியிடப்பட்டிருந்தனகல்வெட்டு எழுத்துகளைச் 
சிற்பிகள் வடித்ததில் இருந்த அழகும்தெளிவும் கல்லின் சிவப்பு வண்ணப் பின்னணியில் 
பொலிந்தன.  கல்வெட்டு எழுத்துகளில் பயிற்சி இல்லாதவர்கள் கூடப் படங்களைப் பார்த்துக்கொண்டே படித்துவிடக்கூடும். ஒரு பன்னிரண்டு ஒளிப்படங்களில் உள்ள எழுத்துப்
பொறிப்புகளின் பாடங்களை அவற்றில் உள்ள வரிகளின்படி தந்துள்ளேன். (சற்றே படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க.கண்டும் படித்தும் மகிழ்க:

குறிப்பு:  அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்ட எழுத்துகள் படத்தில் காணப்படாவிட்டாலும்கல்வெட்டில் உள்ளவையேபொருள் எளிதில் விளங்கவேண்டி இங்கே காட்டப்பட்டுள்ளன.

சுற்றுலாத் துறையின் இணையதளத்தில் இரு படங்கள் தனித்தனியே  காட்டப்பட்டிருப்பினும்,
இரண்டுமே ஒரே கல்வெட்டின் பகுதிகளே. எனவே, இரண்டின் பாடத்தையும் தொடர்ச்சியாகப் படித்துப்பார்க்க வேண்டும்.


                                                                       முதல் படம்



இரண்டாம் படம்







முதல் படத்தின் பாடம்:
 உடையார்க்கு கீழாக
2   ச்செய்த முசலக
     3   ன் ஒன்று||-  பா
     4   தாதிகேசாந்தம்
     5   தின் ஐய் விரலே 
     6   மூன்று தோரை உச
     7   ரத்துக் கனமாகச் செ
     8   ய்த இவர் நம் பிராட்டியார் உமா
     9   பரமேச்வரியார் திருமேனி

இரண்டாம் படத்தின் முதல் மூன்று வரிகள், முதல் படத்தின் 
இறுதி மூன்று வரிகளாக  ஏற்கெனவே வந்துவிட்டன. எனவே,
அவை நீங்கலாக ,

இரண்டாம் படத்தின் பாடம்:

1   ஒருவர் ரத்ந ந்யாசஞ்செய்
2   து இவர் எழுந்தருளி நின்ற ஒ
3   (ரு விரலே ஒ/இரு தோரை)


குறிப்பு:  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.

விளக்கம்;   (இரு படங்களையும் இணைத்த நிலையில்)

கல்வெட்டு, முசலகன் என்னும் செப்புருவச் சிலையினைச் செய்தது பற்றியும், இறைவி
உமா பரமேசுவரியார் திருமேனியைச் செய்தது பற்றியும் கூறுகிறது.  முசலகன் என்பது 
முயலகன்.  தமிழில் ச, ய எழுத்துகள தமக்குள் இடம் மாறுவன.  எடுத்துக்காட்டாக, 
முயல்-முசல்
உயரம்-உசரம்   (மேற்படிக் கல்வெட்டில் உள்ள சொல்)
வாயில்-வாசல்
மயக்கல்-மசக்கல்   (கல்வெட்டுகளில் காணப்பெறும் சொல்)
தேயம்-தேசம் 


முயலகன், ஆடவல்லான் (நடராசர்) சிற்பங்களில் கீழ்ப்பகுதியில் இருக்கும் ஒரு 
உருவம்.  ஒரு முயலகனின் செப்புருவம் செய்யப்பட்டது.
அடுத்து, இறைவி உமா பரமேசுவரியாரின் செப்புத்திருமேனி,  பதினைந்து விரல், 
மூன்று தோரை உயரத்தில் செய்யப்பட்டது. விரல், தோரை என்பன நீட்டல் அளவைப்
பெயர்களாகும்.  
ஒரு விரல் =  முக்கால் அங்குலம்;
12 விரல் =  ஒரு சாண்= 9 அங்குலம்.
தோரை = நான்கு விரற்கிடை 
தோராயமாக, இறைவியின் செப்புத்திருமேனி 20 அங்குல உயரமுடையது எனலாம். 
செப்புத் திருமேனி, கனமாகச் செய்யப்பட்டது எனக் கல்வெட்டு குறிக்கிறது.  அதாவது,
உள்புறப் பொள்ளல் இல்லாதது என்பதைக் குறிக்கவே “கனமாகச் செய்தது”
என்னும் தொடர்.

இறைவி எனக் குறிப்பதைக் கல்வெட்டு “நம் பிராட்டியார்”   என்று குறிக்கிறது.
கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில்,  இறைவியைக் குறிக்க “திருக்காமகோட்டத்து 
நாச்சியார்”  என்னும் சொற்றொடர் ஆளப்படுகிறது

உமா பரமேசுவரியார் திருமேனி, செப்புச் சிற்பமாக இருப்பினும், ஒரு திருமேனி என்று
கூறாது ”திருமேனி ஒருவர்”  என உயர்வு குறித்த சொல் கல்வெட்டில் ஆளப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது. 

ஐ என்னும் ஒற்றை எழுத்து ஐந்து என்பதைக்குறிப்பதும்,  இந்த “ஐ ”  எழுத்து யகர மெய் பெற்று 
வருவது, தமிழகத்தின் சமணக் குகைத் தளங்களில்  காணப்படும் தமிழ்த்தொல்லெழுத்தான
தமிழி (தமிழ் பிராமி)யில் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் காணப்பெறும் ஒரு முறையை 
ஒத்திருப்பது ஆய்வுக்குரியது. 

பிரதிஷ்டை செய்தலை நல்ல தமிழில் எழுந்தருளி நிற்றல் என்று கல்வெட்டு
குறிப்பதையும் கருதுக.

பாதாதிகேசாந்தம் - பாதம்+ஆதி+கேசம்+அந்தம்.    அதாவது, பாதம் (அடி) முதல்,
கேசம் (முடி) வரை என்பதைக் குறிக்க வந்த சமற்கிருதச் சொல்.  எனவே, கிரந்தத்தில்
எழுதப்பட்டுள்ளது என்பதை நோக்குக.

ரத்நந்யாசம் என்பது திருமேனிப் பீடத்தில் இரத்தினக் கற்கள் பதித்தலைக் குறிக்கும்.



                                                              
                                                             




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

1 கருத்து:

  1. இரண்டையும் சேர்த்துப் படிக்கவேண்டும் என்ற உத்தியுடன் பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு