மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 8 பிப்ரவரி, 2018

அரவக்குறிச்சிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்

முன்னுரை
அண்மையில் அறிமுகமான நண்பர் சுகுமார் பூமாலை. அரவக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்தவர். சென்னையில், ஒளிப்படக் கலைஞராகத் தன்னிச்சைப்  பணி. வரலாற்றிலும், தொல்லியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு அவை பற்றிய  அறிவை வளர்த்துக்கொண்டதோடு , தேடுதல்கள் மூலம் தம்முடைய பகுதியில் தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்து வருகிறார். அவ்வாறு தாம் கண்டறிந்த பல செய்திகளைத் தம்முடன் நேரில் பார்வையிட அழைப்பு விடுத்திருந்தார். 30, ஜனவரி 2018 அன்று அவரோடு இணைந்து அவர் காண்பித்த தொல்லியல் தடயங்களைப் பார்வையிட்டது பற்றிய ஒரு பதிவு இங்கே.

அரவக்குறிச்சி
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி ஒரு வட்டம். குறிச்சி என்னும் பின்னொட்டுக் கொண்ட ஊர்கள் தமிழகத்தில் நிறைய உண்டு. அவை, குறிஞ்சி நிலச் சூழலில் அமையும் ஊர்கள் என்று பொதுவாகக் கருதலாம். அரவக்குறிச்சி என்றும் அரவங்குறிச்சி என்றும் இரு வகையில் வழங்குகிறது. இரண்டிலுமே முதற்சொல் அரவம் அல்லது அரவு. அரவு என்பது பாம்பை மட்டிலுமே குறிக்கும். ஆனால், அரவம் என்பது பாம்பு என்பதோடு தமிழையும் குறிக்கும். ஊர்ப்பெயர்க் காரணம் இவற்றோடு தொடர்புடையதா இல்லையா எனத் தெரியவில்லை. கோவையிலிருந்து பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில், தென்னிலை, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி என்பதான சாலைப்பயணம். அரவக்குறிச்சியின் சுற்றுப்பகுதியில் அமராவதி, குடகனாறு ஆகிய ஆறுகள் அமைந்துள்ளன. இவை தவிர, நல்காசி ஆறு எனறோர் ஆறு இங்கே உண்டு. இது நங்காஞ்சி ஆறு என்றும் வழங்குகிறது. இரண்டு வழக்காறுகளிலுமே ஊர்ப்பெயர்கள் இயல்பாக அமைந்துள்ளன. காசியும், காஞ்சியும். காசிக்குச் சென்ற பலன்/புண்ணியம் கிட்டும் ஊர் என மக்கள் கருதுவதாக நண்பர் கூறினார்.

குதிரை குத்திப்பட்டான் கல்
அரவக்குறிச்சி கரூர் சாலையில், அரவக்குறிச்சிக்கருகில் கரடிப்பட்டி என்றொரு சிற்றூர். அங்கு, நல்காசி(நங்காஞ்சி) ஆற்றின் கரையோரம் ஒரு கோயில்; புலிகுத்தி அம்மன் கோயில் என்பது மக்கள் வழக்கில் உள்ள பெயர். நண்பர், அங்கிருப்பது நடுகல் சிற்பங்களுள் ஒன்றான குதிரை குத்திப்பட்டான் சிற்பம் என்று சொல்லி அழைத்துச் சென்றார். ஒரு மண்டபத்தில் மேடையமைத்துச் சிற்பத்தை நிறுத்தியிருக்கிறார்கள். சிற்பத்தை நேரடியாக நிறுத்தாமல் ஒரு சுவரைப் பின்புலமாக அமைத்து நிறுத்தியுள்ளனர். சிற்பம, நாலேகால் அடி உயரமும் இரண்டேமுக்கால் அடி அகலமும் கொண்ட ஒரு பலகைக் கல்லில் புடைப்புருவமாக வடிக்கப்பட்டுள்ளது. வீரன் ஒருவன் தன் இடக்கையால் குதிரையின் வாயைப் பிடித்தவாறும், வலக்கையால் குறுவாளைக்கொண்டு குதிரையைத் தாக்குகின்ற நிலையிலும் காணப்படுகிறான். குதிரை தன் பின்னங்கால்களில் நின்றவாறு முன்னங்கால்களை உயர்த்தி வீரனைத் தாக்குகின்ற தோற்றத்தில் உள்ளது. வீரன் தன் இடையாடைக்கச்சிலும் ஒரு வாளினை வைத்திருக்கின்றான். அவனது இடையாடை முழங்கால் வரையில்கூட அமையுமாறு பெரிதாக இல்லை. சிற்றாடை. ஆடையமைப்பு அழகுறத் தோன்றுகிறது. முகமும், வலக்காலும் முன்புறம் நேர்ப்பார்வையில் உள்ளன. இடக்கால், முன்புறப்பார்வையில் அமையாமல் பக்கவாட்டில் முன்னோக்கி அடியெடுத்து வைக்கும் கோணத்தில் உள்ளது. ஆலிடா ஆசனம் என்று சிற்பக் கலையில் சுட்டப்படும் ஒரு தோற்றநிலையை ஒத்துள்ளது. வீரனின் தலைமுடி நேர்க்கொண்டையாயுள்ளது. காதிலும், மார்பிலும், கைகளிலும் அணிகள் காணப்படுகின்றன. முகத்தின் உறுப்புகள தெளிவாகத் தெரியாவண்ணம் தேய்மானம் கொண்டுள்ளது. மொத்தத்தில் அழகான சிற்பம். சிற்ப அமைதியைக் கொண்டு, நாயக்கர் காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது எனக்கருதலாம். இந்த நடுகல்லைத், திருப்பூர்ப் பகுதியில் உள்ள ஒரு குடியினர் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் வரலாற்று மையத்தினர் இந்நடுகல்லைப் பற்றிய செய்தியை நாளிதழ்களில் வெளியிட்டு இதன் வரலாற்றுப் பின்னணியையும் தொன்மையையும் மக்களிடையே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

                         குதிரை குத்திப்பட்டான் கல்

தி இந்து”  ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில் ஒரு பகுதி கீழே:

‘Rare’ hero stone discovered
TIRUPUR:, JUNE 13, 2016 00:00 IST

A team of archaeologists attached to Tirupur-based Virarajendran Archaeological and Historical Research Centre has discovered a hero stone, which is estimated to be nearly 800-years-old.
It was erected for a person who died fighting horses belonging to a cavalry from neighbouring territory that invaded the village.
The memorial was found near a river bank at Karadipatti hamlet situated on the border of Tirupur and Karur districts.
“This is a rare sculpture for a ‘hero’ who died fighting horses trained for combating people after the chieftain and his cavalry from the neighbouring territory invaded to loot the resources in the said village.

நடுகல் சதிக்கல்
அடுத்து நாங்கள் பார்த்தது ஒரு நடுகல் சிற்பம். மேற்குறித்த சாலையிலேயே சிறிது தொலைவு சென்றதும், நாகம்பள்ளிப் பிரிவு என்றொரு பிரிவுச்சாலைக்கருகில் நடுகல் உள்ளது. குறிப்பாக அந்த இடத்தை மக்கள் தகரக்கொட்டகைப் பேருந்து நிறுத்தம் என்றழைக்கிறாகள். சாலைக்கருகில் ஒரு பழைய மண்டபம். மண்டபத்தை ஒட்டி இரண்டரை அடி உயரமும், இரண்டடி அகல்மும் உள்ள பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம். இரு கைகளையும் கூப்பியவாறுள்ள ஆண், பெண் உருவங்கள். ஆண் உருவத்தின் தலை முடிக் கொண்டை தெளிவாகத் தெரியவில்லை. தலைப்பாகை போன்ற அமைப்பாக இருக்கலாம். பெண்ணுருவத்தில் தலைமுடி வலப்புறக் கொண்டை அமைப்பில் உள்ளது. இரண்டு உருவங்களிலும், முகத்தின் உறுப்புகள தெளிவாகப் புலப்படவில்லை. இரு உருவங்களிலும் அணிகலன்கள் உள்ளன. ஆடை அமைப்பு எளிமையாய் உள்ளது. இரு உருவங்களின் தலைப்பகுதிகளுக்கிடையில் ஒரு சிவலிங்கம் காணப்படுகின்றது. இருவரும் மேலுலகம் அடைந்தனர் என்பதன் குறியீட்டாகவே இச் சிவலிங்க உருவம். இது ஒரு சதிக்கல் சிற்பம். வீரன் இறந்துபட்டதும், அவன் மனைவியும் உடன்கட்டை ஏறுதல் மரபில் உயிர் நீத்ததன் காரணமாக எடுக்கப்பட்ட நினைவுக்கல். கல்லின் பீடப்பகுதியில் எழுத்துகள் காணப்படுகின்றன. ஆனால் பீடப்பரப்பு மட்டமாக இழைக்கப்படாததாலும், எழுத்துகளின் தேய்மானத்தாலும் கல்லெழுத்துகளைப் படிக்க இயலவில்லை. இருப்பினும், “பெண்”,  “அம்மா”  ஆகிய சொற்களை இனம் கண்டுகொள்ள முடிந்தது. சதி மரபில் உயிர்நீத்த பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கவேண்டும்.

                      நடுகல்  சதிக்கல்


மலைக்கோவில்
அடுத்து நாங்கள் சென்ற இடம் மலைக்கோவிலூர். மலைக்கோவில் இங்குள்ளதாலேயே ஊர்ப்பெயரும் மலைக்கோயிலூர் என அமைந்தது. ஒரு சிறிய குன்றுப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில். கற்றளிக்கோயில். கொங்குச் சோழர் காலத்தது. கொங்குச் சோழர் மற்றும் கொங்குப் பாண்டியர் கல்வெட்டுகள் இங்குள்ளன. கல்வெட்டுகள் இன்னும் பதிவாகவில்லை என்றே தோன்றுகிறது. நண்பர் சொன்ன குறிப்புகளின்படி, இக்கோயில் நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உரிய பேணுதல் இன்றிச் சிதைவுற்றுள்ளது. வாரம் ஒரு முறை, இந்தப்பகுதியில் உள்ள வெஞ்சமாங்கூடல் கோயிலின் பூசையாளர் வந்து நடை திறந்து பூசை செய்துவிட்டுப் போகும் நிலை உள்ளது. மற்ற நேரங்களில் பூட்டப்பட்டுள்ளது. சிவலிங்கத்திருமேனியாக இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியன எப்போதும் பூட்டப்பெற்றிருந்தாலும் கோயில் வளாகம் முற்றும் நாள் முழுதும் எவரும் வந்து போகும் வகையில் உரிய பாதுகாப்பின்றிக் கிடக்கின்றது.

                 மலைக்கோவில்  - சில தோற்றங்கள்



                        பிரநாளம்


குன்றுமேட்டின் தொடக்கத்தில் ஒரு மரத்தடி மேடையில் பிள்ளையார் குடிகொண்டுள்ளார். குறட்டு வாசல் திண்ணையுடன் கூடிய நுழைவாயில் மண்டபத்தை அடையக் கற்களாலான படிகள். நுழைவாயிலைக் கடந்து உள் நுழைந்ததும் நந்தி மண்டபம். இந்த நந்தி மண்டபம் கோயிலின் தெற்குச் சுவரை நோக்கியமைந்துள்ளது. கோயிலினுள் நுழையவும் தெற்கு நோக்கிய வாசலே. பூட்டப்பெற்றிருந்தது. எனவே அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் காண இயலவில்லை. அர்த்த மண்டபத்தின் கிழக்குப்பகுதிச் சுவரில் ஒரு கற்சாளரம் உள்ளது. சாளரம் வழியாகப் பார்த்தால், கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம், சற்று நேரம் இருளில் பழகிய கண்களுக்குப் புலப்படுகிறது. சாளரத்துக்கு எதிரே ஒரு நந்தி மண்டபத்தில் உள்ள நந்தி, சாளரம் வழியே சிவலிங்கத்திருமேனியைக் காணுமாறு அமைத்திருக்கிறார்கள். கருவறைச் சுவர்களில் தேவ கோட்டங்கள் உண்டு. அர்த்தமண்டபச் சுவர்களில் இல்லை. தேவ கோட்டங்களில் பிற்கால இணைப்பாகத் தென்முகக் கடவுள், அண்ணாமலையார்(இலிங்கோத்பவர்) ஆகிய சிற்பத் திருமேனிகள். கற்றளியின் அதிட்டானப் பகுதி, தரை மட்டத்தில் ஜகதி, முப்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுவர்களின் அரைத்தூண்களில் சோழர் காலப் போதிகை அமைப்பு உள்ளது. அடுத்துள்ள கூரைப்பகுதியில், கூடுகளும், யாளி வரிசையும் காணப்படுகின்றன. கற்றளி அமைப்பைச் சுற்றிலும் செங்கற்களாலான சன்னதிகள். முருகன், பிள்ளையார், சண்டேசுவரர், கால வைரவர் ஆகியோர்க்கு. சண்டேசுவரர் சன்னதிக்கு எதிரே, கருவறையின் வடக்குப்பக்கத்தில், கருவறையின் தளத்திலிருந்து திருமஞ்சன நீர் வெளியேறப் பயன்படும் பிரநாளம் என்னும் உறுப்பு உள்ளது.

கல்வெட்டுகள்
அர்த்தமண்டபத்தின் நுழைவாயிலின் நிலைக்கால்கள் இரண்டிலும் இரு கல்வெட்டுகள், பிள்ளையார் சன்னதிச் சுவரில் ஒரு கல்வெட்டு, தூண் ஒன்றின் சதுரப்பகுதியில் ஒரு கல்வெட்டு, சாளரத்தின் கீழ் அதிட்டானத்துப் பட்டிகையில் ஒரு கல்வெட்டு, சண்டேசுவரர் சன்னதிக்கு எதிரே பிரநாளத்துக்கருகில் அதிட்டானத்துக் குமுதத்தில் ஒரு கல்வெட்டு என ஆறு கல்வெட்டுகள் இக்கோயிலில் கண்டறியப்பட்டன. கல்வெட்டுகள் பல இடங்களில் தேய்மானம் கொண்டுள்ளதால் முழுமையாகப் படிக்க இயலாவிடினும், நான்கு கல்வெட்டுகள், கல்வெட்டுகள் எந்த அரசர்கள் காலத்தில் வெட்டப்பட்டன என்னும்  பயனுள்ள செய்தியைத் தருகின்றன. மேலும், கல்வெட்டுகளின் காலத்தில் நடைமுறையில் இருந்த, கொங்கு மண்டலத்தின் நாட்டுப் பிரிவுகள் யாவை என்னும் செய்தியும் நமக்குக் கிட்டுகின்றது. கொங்குச்சோழனான வீரராசேந்திரனின் கல்வெட்டுகள் மூன்றும், கொங்குப்பாண்டியன் வீரபாண்டியனின் கல்வெட்டு ஒன்றும் ஆக நான்கு கல்வெட்டுகள் மேற்குறித்த செய்திகளைக் கூறுகின்றன.

கொங்குச் சோழன் வீரராசேந்திரன்
கொங்குச்சோழனான வீரராசேந்திரனின் ஆட்சிக்காலம் கி.பி. 1207-1256. இவன் தன் ஆட்சிக்காலத்தில், தென் கொங்கில் 1207 முதல் 1221 வரையிலும், பின்னர் வடகொங்கு, தென்கொங்கு ஆகிய இரு பகுதிகளையும் சேர்த்து 1256 வரையிலும் ஆட்சி செய்துள்ளான். நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த அரசன் இவன் ஒருவனே. இக்கோயிலில் கிடைக்கும் இவ்னது கல்வெட்டுகள், இவனுடைய 14-ஆம் ஆட்சியாண்டில் ஒன்று, 18-ஆம் ஆட்சியாண்டில் இரண்டு என அமைகின்றன. 14-ஆம் ஆட்சியாண்டு, கி.பி. 1221 ஆகும். எனவே, கோயிலின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதும், கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதும் கல்வெட்டுச் சான்றுகளால் பெறப்படுகிறது.  

கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் கல்வெட்டு-1
பிள்ளையார் சன்னதிச் சுவரில் ஒற்றைக்கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டு கி.பி. 1221-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இதன் பாடம் கீழ் வருமாறு:

1         ஸ்வஸ்தி சிரீ கோவிராச கெசரி ப
2         ந்மரான திரிபுவன சக்கரவத்திக
3         சிரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு பதிநா
4         லாவது (வீர)சோழமண்டலத்து வெங்கால நாட்
5         டுப் பழநாகந் பள்ளி வெள்ளாழரில் அந்துவ
6         ரில் (பெவ)க்கந் வஞ்சிவேளா(னா)ன ...கோயிலில்
7         .....இ..............................


வீரராசேந்திரனின் கல்வெட்டு-பிள்ளையார் சன்னதிச் சுவர்

விளக்கம்:
கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் பதிநாலாவது ஆட்சியாண்டான கி.பி. 1221-இல் பழநாகந் பள்ளி என்னும் ஊரைச் சேர்ந்த அந்துவன் குலத்து வெள்ளாளரில் வஞ்சி வேளான் என்பவன் இக்கோயிலுக்கு ஒரு நிவந்தம் (கொடை) அளித்துள்ளான் என்பது கல்வெட்டுச் செய்தியாகும். சோழர்கள் காலத்தில் தமிழகம் மண்டலம், கோட்டம், நாடு ஆகிய நிருவாகப் பிரிவுகளைக் கொண்டிருந்தன. கரூர்ப் பகுதி வீரசோழ மண்டலம் என்னும் மண்டலப் பிரிவின்கீழ் இருந்துள்ளது. கொங்கு நாடு இருபத்து நான்கு நாட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் கரூர்ப் பகுதி வெங்கால நாட்டின்கீழ் அமைந்திருந்தது. கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் பழநாகன் பள்ளி என்னும் ஊர் தற்போது நாகம்பள்ளி என்னும் பெயரில் அமைந்துள்ளது. இக்கோயில் உள்ள பகுதி இன்றும் நாகம்பள்ளி ஒன்றியத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாற்றறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தம்முடைய “சமணமும் தமிழும்நூலில் பழநாகந் பள்ளியைப் பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:

"பழநாகப்பள்ளி:  கரூர் தாலூகா நாகம்பள்ளி கிராமத்தில் உள்ள மகாபலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ள சாசனம் திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் காலத்தில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில் பழநாகப்பள்ளிக் கோயிலுக்கு திருவிளக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இதில் குறிக்கப்பட்ட பழநாகப்பள்ளி என்பது சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை. இதனால் இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.”
       
  கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் கல்வெட்டு-2
அர்த்தமண்டபத்து வாயிலின் நிலைக்கால்கள் இரண்டில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் முதலாவது கல்வெட்டு கி.பி. 1225-ஆம் ஆண்டைச் சேர்ந்தது.  இதன் பாடம் கீழ் வருமாறு:

1         (ஸ்வஸ்)தி ஸ்ரீ கோவி(ராச)
2         கேசரி பந்ம(ரான)
3         (திரி) புவந சக்(கரவத்தி)
4         (க)ள் ஸ்ரீ வீரரா(சேந்)
5         திர தேவற்கு யா(ண்)
6         டு பதிநெட்டா(வது)
7         (வீ)ர சோழ மண்(டலத்)
8         து வெங்கால..........
9         பழநாக(ந் பள்)ளி
10     (வே)ளாழந் ஆ(ந்தை)
11     (க)ளில்.............
12     (நான) புருஷ(மா)
13     (ணி)க்க(நேன்)
14     .....................வ..............
15     .............(ஆ)ளுடை(யாற்)
16     (கு) வச்ச சந்(தி)
17     (விளக்)கொந்(றுக்)
18     கு ஒடுக்கிந பொ(ன்)
19     ...............கழஞ்சு.....
20     கோயில் கா(ணி)
21     (உ)டைய சிவ
22     (பிராமண)ந் ....


   வீரராசேந்திரனின் கல்வெட்டு- நிலைக்கால்-1


விளக்கம்:
கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் பதினெட்டாவது ஆட்சியாண்டான கி.பி. 1225-இல் பழநாகந் பள்ளி என்னும் ஊரைச் சேர்ந்த (ஆந்தை) குலத்து வெள்ளாளரில் புருஷமாணிக்கன் என்பவன் இக்கோயிலுக்கு சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்காக கழஞ்சு என்னும் பொன் கொடையாக அளித்துள்ளான். இப்பொன்னைக் கோயிலில் பூசை செய்யும் உரிமை (கோயில் காணி) பெற்ற சிவப்பிராமணன் ஒருவன் பெற்றுக்கொண்டு மேற்படி சந்தி விளக்கு எரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான் என்பது கல்வெட்டு தெரிவிக்கும் செய்தியாகும்.

கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் கல்வெட்டு-2
அர்த்தமண்டபத்து வாயிலின் நிலைக்கால் கல்வெட்டுகளில் இரண்டாவது கல்வெட்டும் கி.பி. 1225-ஆம் ஆண்டைச் சேர்ந்தது.  இதன் பாடம் கீழ் வருமாறு:

1         ஸ்வஸ்தி ஸ்ரீ (கோ)
2         விராசகே(சரி)
3         (ப)ந்மராந திரி(பு)
4         (வந) சக்கரவத்திகள்
5         (ஸ்ரீ)வீரராசேந்தி
6         (ர தேவ)ற்கு யாண்டு
7         (ப)திநெட்டா


    வீரராசேந்திரனின் கல்வெட்டு- நிலைக்கால்-2


விளக்கம்:
கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் பதினெட்டாவது ஆட்சியாண்டான கி.பி. 1225-இல் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கொடை பற்றிய செய்திகள் தெரியவில்லை. முதல் ஏழு வரிகளுக்குப் பின்னர் எழுத்துகள் தேய்ந்துள்ளதால் முழுச் செய்தியும் அறியக்கூடவில்லை.

கொங்குப்பாண்டியன் வீரபாண்டியனின் கல்வெட்டு
தூண் ஒன்றின் சதுரப்பகுதியில் ஒரு கல்வெட்டு இருப்பதாக முன்னர் குறிப்பிட்டோம். தென்முகக் கடவுளின் கோட்டச் சிற்பத்தின்கீழ் படிக்கட்டாகக் கிடத்தப்பட்டுள்ள ஒரு தூணின் இரண்டு சதுரப்பகுதிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது கொங்குப் பாண்டியர்களில் வீரபாண்டியனின் கல்வெட்டாகும். கல்வெட்டில் இவனது ஆட்சியாண்டு குறிக்கப்பெற்ற பகுதியில் எழுத்துகள் தேய்ந்துள்ளதால் கல்வெட்டின் காலத்தைத் துல்லியமாகச் சொல்ல இயலவில்லை. வீரபாண்டியனின் ஆட்சிக்காலம் கி.பி. 1265-1285. எனவே, கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது பெறப்படுகிறது. இதன் பாடம் கீழ் வருமாறு:

முதல் சதுரப்பகுதி

1         கோப்பர
2         கேசரி பன்
3         மரான திரி
4         (பு)வனச் (சக்ர)
5         வத்திக
6         (ள்) ஸ்ரீ வீ(ர)
7         (பா)ண்டி(ய)
8         தேவற்கு
9         (யா)ண்டு...
10     ...வது வீ(ர)
11     சோழ ம
12     (ண்)டலத்

இரண்டாம் சதுரப்பகுதி -  மேற்படிக்கல்வெட்டின் தொடர்ச்சி.

13     து வெங்
14     கால நாட்
15     டு ...நாக
16     (ந்ப)ள்ளி

     வீரபாண்டியனின் கல்வெட்டு - தூண்


விளக்கம்:
அரசன் பெயர், வெங்கால நாட்டுப்பெயர், (பழ)நாகந்பள்ளி என்னும் ஊர்ப்பெயர் ஆகியவை மட்டுமே கல்வெட்டில் காணப்படுகின்றன. கொடை பற்றிய செய்திகள் அமைந்த பகுதியில் எழுத்துகள் முற்றிலும் தேய்ந்துவிட்டதால் செய்திகள் அறியப்படவில்லை.

புங்கம்பாடி - சிவன்கோயில்
மலைக்கோவிலைப் பார்த்துக் கல்வெட்டுகளையெல்லாம் ஒளிப்படம் எடுத்தபின்னர் நாங்கள் சென்ற இடம் புங்கம்பாடி. புங்கம்பாடி செல்லும் வழியில் கொளிஞ்சிவாடி என்னும் சிற்றூர்ப் பகுதியில் தொல்லியல் சின்னங்களுள் ஒன்றான நெடுங்கல் (MENHIR)  ஒன்றைக்கண்டோம். மிகவும் உயரமானதொன்றல்ல. அடுத்து, புங்கம்பாடியில் இருக்கும் பழமையான சிவன் கோயிலைப் பார்வையிட்டோம். கோயில் பழமையான தோற்றத்தைக் கொண்டிருந்தது. கோயிலின் பெரிய வளாகத்தை உள்ளடக்கி நெடிதுயர்ந்த ஒரு சுற்றுமதில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கட்டுமானம் பழமையை எடுத்துக்காட்டிற்று. மதிற்சுவரின் அடித்தளத்தில் மூன்று வரிசை கல்கட்டுமானம். அதனை அடுத்துச் செங்கல் கட்டுமானம். காரைப்பூச்சு ஏதுமின்றி செங்கல் மட்டுமே தோற்றமளித்தது. செங்கல் கட்டுமானத்தில் காணப்பட்ட நேர்த்தியும் தோற்றப் பொலிவும் குறிப்பிடத்தக்கவை. சுவரின் உச்சியில் செங்கற்கள் கலையழகுடன் வடிவமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும், இது போன்ற சுற்றுமதிலைக் கூத்தம்பூண்டி பாண்டியர்காலக் கோயிலில் கண்டது நினைவுக்கு வந்தது. நுழைவாயிலில் தூண்களோடு கூடிய குறட்டு வாசல் அமைப்பு இரு புறமும் திண்ணையோடு - உள்ளது. அதன் இருபுறமும் இரு சன்னதிகள், சூரிய சந்திரர்க்கு.

      புங்கம்பாடி - சிவன்கோயில் - சில தோற்றங்கள்


           கோயில் மதிற்சுவரின் அழகிய தோற்றங்கள்



குறட்டு வாசலையடுத்து நந்தி மண்டபம். அதனையடுத்து முன்மண்டபம். முன்மண்டபத்தின் உட்பகுதியில் உள்ள கற்றூண்களில், இக்கோயிலின் உருவாக்கத்துக்குத் துணை நின்ற பாளையக்காரத் தலைவர்கள் அல்லது ஜமீந்தார்களது உருவச் சிலைகள் காணப்படுகின்றன. சிற்பங்களில் தலைப்பாகையும், தலையின் ஒரு பக்கமாகச் சரிந்த கொண்டை முடியும், காதணிகளோடு கூடிய நீண்ட  செவிகளும்பெரிய மீசையும், கழுத்தணிகளும், இடையில் குறு வாளும் என அமைந்த தோற்றம் நாயக்கர் காலச் சிற்பக்கலையின் தொடர்ச்சியைக் காட்டுவனவாக உள்ளன.

கோயிலின் கருவறை விமானம், ஒரு தள விமானம் ஆகும். நாகரம் என்னும் சதுர அமைப்பைக்கொண்ட விமானம். முறையான பேணுதல் இன்றி கருவறையின் மேற்கூரை, விமானத்தின் செங்கற்தளம் ஆகியவை சிதைவுற்றுள்ளன. கூரைப் பகுதிகளில் செடிகள் முளைத்துள்ளன. முன்மண்டபத்தின் தென்பகுதிச் சுவர்ப்பகுதியில், முற்றாகக் கற்கள் கட்டுமானத்திலிருந்து கழன்று விழுந்துவிட்டிருக்கின்றன. கற்கள் விழுந்த நிலை, சுவர்கள் எவ்வாறு உறுதியாக எழுப்பப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. சுவரின் உட்புறமும், வெளிப்புறமும் உறுதியான கற்கள் நடுவில் இடைவெளி விட்டு அடுக்கப்படுகின்றன. இடைவெளியில் சிறு சிறு கற்களும் சுண்ணாம்புக் காரையும் கலந்து இருபுறக் கற்களையும் பிணைக்கின்றன. இயல்பாகக் கரடு முரடாக இருக்கும் கற்கள், நம் பார்வை படும் பரப்பில் நன்கு செதுக்கப்பட்டும் இழைக்கப்பட்டும் சமனாக்கப்படுகின்றன.

கல்வெட்டுகள்
கோயிலில் இரு கல்வெட்டுகள் உள்ளன. முன்மண்டப வாயிலின் இடப்பக்கம் சுவரில் ஒரு கல்வெட்டு. மற்றொன்று மடப்பள்ளிச் சுவரில். முன்மண்டபச் சுவர்க் கல்வெட்டு கி.பி. 1702-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. மடப்பள்ளிச் சுவர்க் கல்வெட்டு மிகவும் அணமைக் காலத்தது. கல்வெட்டில் காலக்குறிப்பேதுமில்லை. கோயில் முந்நூறாண்டுப் பழமை கொண்டது என்பதை மேற்படிக் கல்வெட்டுச் சான்றால் அறிகிறோம்.

முன்மண்டபச் சுவர்க் கல்வெட்டு

1         ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாத்தம் வரு. 1624 கலியுக சகார்த்தம் வரு.
2         4803 ...கு செல்லாநின்(ற) சித்திரபானு வரு. ஆனி மாசம் 13 தேதி சுக்கிறவார(த்)தில்
3         த்ரயோதெசி ரோகிணி ..(இ) சூல நாம யோகம் ......
4         ................இப்படீபட்ட சுபதினத்தில்

                 முன்மண்டபச் சுவர்க் கல்வெட்டு

 விளக்கம்:
கல்வெட்டில் காலக்குறிப்பு உள்ளது. சாலிவாகன ஆண்டு 1624, கலியுக  ஆண்டு 4803 ஆகியன குறிக்கப்பெறுகின்றன. இரு ஆண்டுக்கணக்குகளும் கி.பி. 1702-ஆம் ஆண்டைச் சரியாகச் சுட்டுகின்றன. இந்த ஆண்டில் கோயில் திருப்பணி நடைபெற்றதாகக் கருதலாம். அறுபது ஆண்டுகள் கொண்ட வட்டத்தில் வருகின்ற தமிழ் ஆண்டான சித்திரபானு ஆண்டும் கி.பி. 1702-உடன் பொருந்துகிறது. மாதம் (ஆனி), கிழமை (சுக்கிறவாரம்), திதி (திரயோதசி), நட்சத்திரம் (ரோகிணி), யோகம் (சூலம்) ஆகிய பஞ்சாங்கக் குறிப்புகள் இக்கல்வெட்டில் தரப்பட்டுள்ளன. கரணம் என்னும் குறிப்பு மட்டும் இல்லை.

மடப்பள்ளிச் சுவர்க் கல்வெட்டு

1         தடவை கோயில் காணியாளனாகிய
2         ஆண்டியப்ப பிள்ளை குமாரன்
3         குமாரசுவாமி பிள்ளையவர்கள்
4         மீனாட்சி சுந்தரேசுபரர்
5         சன்னதி கட்டிவிச்ச
6                   உபயம்

                                            மடப்பள்ளிச் சுவர்க் கல்வெட்டு


விளக்கம்:
கல்வெட்டு மிகவும் அண்மைக்காலத்தது என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். காலக் குறிப்புகள் கல்வெட்டில் இல்லை. கோயிலின் திருப்பணியாக மீனாட்சி சுந்தரேசுவரரின் சன்னதியைக் கட்டுவித்த செய்தியைக் கல்வெட்டு கூறுகிறது. திருப்பணி செய்தவர், மன்னர் காலத்தில் கோயிற்காணி உரிமை பெற்ற ஒருவரின் குடி வழியினர் என்பதைத் “தடவை கோயில் காணியாளனாகிய என்னும் தொடர் குறிக்கிறது. அவர் தற்போது “தடா கோயில்  என்று அழைக்கப்பெறும் ஊரினர். “தடா கோயில்  என்று தற்போது அழைக்கப்பெறும் ஊர், பண்டைய நாள்களில் தடவை கோயில் என்னும் பெயரால் வழங்கிற்று என்பதை இக்கல்வெட்டால் அறிகிறோம்.

குடகனாற்றுப் பாறைக்கல்வெட்டுகள்
புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் கோயிலைப் பார்த்துவிட்டு, அடுத்து நாங்கள் சென்ற இடம் குடகனாற்றுப் பாலம். புங்கம்பாடி ஆத்துமேடு-மேல்கரை என்று மக்கள் குறிப்பிடும் அந்த இடத்தில் பாலத்தடியில், பாறைப்பரப்பில் இரு கல்வெட்டுகளை நண்பர் கண்டறிந்து வைத்துள்ளார். தொல்லியல் தடயங்களைத் தேடும் ஆர்வமும் அறிவும் உடையவர்கள் மட்டுமே இவை போன்ற கல்வெட்டுகளை இனம் காண முடியும். புதிய கண்டுபிடிப்புகள் தருகின்ற மகிழ்ச்சி இந்தப் பாறைக்கல்வெட்டுகளைக் கண்டபோதும் எழுந்தது. இரு கல்வெட்டுகளில் ஒன்று அரபு எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது. வேற்று மொழிக் கல்வெட்டுகள் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று. மற்ற கல்வெட்டு தமிழ்க்கல்வெட்டு. தமிழ்க்கல்வெட்டின் எழுத்துகள் நேர்த்தியாகப் பொறிக்கப்படவில்லை. எழுத்துகளும் பல காரணங்களால் தேய்ந்துவிட்டன. எனவே, தமிழ்க்கல்வெட்டு சுட்டும் செய்திகள் தெரியவில்லை

அரபு எழுத்துக் கல்வெட்டு
அரபு எழுத்துகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நன்கு தெளிவாக உள்ளது. இசுலாமியர் தொடர்புடைய இக்கல்வெட்டு, இப்பகுதிக்கும் இசுலாமியர்க்கும் இருக்கும் பழம் வரலாறு பற்றியதாக இருக்கவேண்டும் என்னும் கருத்தில், இக்கல்வெட்டுப் படத்தின் அச்சுப்படியைக் காட்டிப் பலரிடத்தும் கருத்துக் கேட்டது ஒரு தனி அனுபவம். எவ்வாறு தமிழ்க்கல்வெட்டு எழுத்துகளைத் தமிழ் தெரிந்தவர் என்ற முறையில் எல்லாரும் படிக்க இயலாதோ கல்வெட்டு எழுத்துகளைப் படிப்பதற்குச் சற்று அடிப்படைப் பயிற்சி தேவை அவ்வாறே, அரபு எழுத்துகளைக் கல்வெட்டுப் படத்தின் வாயிலாகப் படித்தல் கடினம் என்பதைப் பலரும் பல வழிகளில் படித்துப் பொருள் காண முயன்றதில் உணர்ந்தேன். ஐம்பது பேருக்கும் மேல் கல்வெட்டைப் படித்து உதவினார்கள் என்பது இந்த அரபுக் கல்வெட்டு நிகழ்த்திக்காட்டிய சிறப்பு. கோவையில் நான் சந்தித்த, பெரிய மசூதியின் மௌல்வி அவர்கள், முகமது இஸ்மாயில் ஆகியோர் நன்றியோடு நினைவுகூரத்தக்கவர்கள். இணையக் குழுவான “மின்தமிழ் குழுவின் மூலம் இக்கல்வெட்டைப் படித்ததில் திரு. அமீர் அவர்களும், அவருடைய நண்பர் குழாமும் அளப்பரிய உதவி அளித்துள்ளனர்.

                 அரபு எழுத்துக் கல்வெட்டு

அரபுக்கல்வெட்டின் பாடம்

அல்லாஹு  
அல் பஷுர்   
உமர்
ஹாரீய்


மேற்படிப் பாடத்தை இறுதி வடிமாகக் கொண்டாலும், தற்கால அரபு மொழி எழுத்துகளின் உருவ, ஒலி வடிவங்களும், கல்வெட்டில் உள்ள பழங்காலத்து  எழுத்துகளின் உருவ, ஒலி வடிவங்களும் மாறுபடுவதால், பல்வேறு வழிகளில் இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற மூன்று பாடங்கள் கீழ் வருமாறு:

1)
ALLAHU

AL SANNATH

AAHATH  AAZIHI
   
அல்லாஹூ
அல் சன்னத்
அஹத் ஆஷிஹீ

இதன் பொருள், அல்லா எனக்கு கொஞ்சம் பொறுமை கொடு ”  என்பதாகும்.

2)
அல்லாஹு அப்தி 
அல்பஷீருல் மாதி

இதன் பொருள் அல்லாவின் அடிமையாகிய நான் எழுதுகிறேன்/
எழுதுகின்ற நான் அல்லாவின் அடிமை  என்பதாகும்.

3)
அல்லாஹு
....................
அல் முபாரக்

முபாரக் என்பது ஒருவரின் பெயராகலாம்.

அரபுக்கல்வெட்டு மூலம் தெரிய வரும் செய்திகள்
அரபு வணிகர்-தென்னிந்தியாவில்
அரபு நாட்டில் கலீஃபாக்களின் ஆட்சி அமையும் முன்னரே, தென் மேற்கு இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் அரபு வணிகர்கள் நிலை கொண்டுள்ளனர். பத்தாம் நூற்றாண்டில் தென்னிந்தியா முழுவதும் பரவலாக அரபு வணிகர்கள் தம் வாழ்விடத்தை அமைத்துக்கொண்டனர். அவர்களுடைய தலைவனை அவ்வப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசர்களே நியமித்துள்ளனர். இத்தலைவர்கள், அவர்களின் சமூகச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கும் அதிகாரம் அல்லது உரிமை பெற்றவர்கள். அரபு வணிகருக்குப் பின்னர் இந்தியாவின் கடல் வணிகத்தில் பங்கு கொண்ட ஐரோபிய வணிகர் போலல்லாது, அரபு வணிகர்கள் (நம்)நாட்டு வணிகருடன் நல்லிணக்கமும் வணிக உறவும் கொண்டிருந்தனர். அமைதிவிரும்பிகளாய் இங்கு நிலைகொண்டு தங்கிவிட்ட இந்த அரபு வணிகர்கள் நாட்டு வணிகருடன் மண உறவும் கொண்டு வாழ்ந்துள்ளனர். இவ்வகை மண உறவில் பிறந்த குழந்தைகள் அரபு மக்களால் பயசிரா” (BAYASIRA)  என அழைக்கப்பெற்றனர். இவ்வகை பயசிரா”  சமுதாயத்தினர் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயரகளில் அறியப்படுகிறார்கள். கொங்கணி முஸ்லிம்கள் (கொங்கணக் கரை), நவயத்துகள் (கனரா கரை), மாப்பிளா (மலபார் கரை), சுளியர், மரக்காயர், லெப்பை (சோழமண்டலக் கரை), ஜோனகர் (தஞ்சாவூர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். இந்து அரசர்களிடையேயும், முஸ்லிம் அரசர்களிடையேயும் இந்த அரபு வணிகருக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. காரணம் குதிரை வணிகம். அரசர்களுக்குப் போரில் குதிரைகள் தேவையாயிருந்தன. எனவே குதிரை வணிக அரேபியரை எல்லா அரசரும் நாடினர்; அரபு வணிகரும் இதன் காரணமாகத் தம் வணிகப் பரப்பை விரிவுபடுத்தி ஒருங்கிணைந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டிலேயே அரபு வணிகரின் குடியேற்றம் மதுரை, சோழமண்டலம் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. மதுரை அரசர் ஒருவரின் செப்பேடு ஒன்றில் அரபு வணிகருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் பற்றிய குறிப்புள்ளது. இவர்கள், பதினோராம் நூற்றாண்டில் சமூக, அரசியல் செல்வாக்குப் பெற்றனர். அமைச்சராக ஒருவர் இருந்ததும், பாண்டிய அரசரின் கீழ் பலர் பணியாளர்களாய் இருந்ததும் அறியப்படுகின்றன. கல்வெட்டுகளில் “பரதேசிகள் என்று குறிப்பிடப்பெறுபவர் அரபு வணிகரே என்றும் கருதப்படுகிறது.

அரபு வணிகர் கரூர்ப்பகுதியில்
குதிரை வணிகத்தில் ஈடுபட்ட அரேபியர்கள் ஆற்றுப்படுகைகளில் சந்தை அமைத்துக் கூடினார்கள். கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற பகுதிகளில் குடியேறிய அரபு வணிகர் தம் வணிகப் பயணத்தின்போது மேற்குறித்தவாறு, ஆற்றுப்படுகைகளில் கூடித் தங்கினார்கள். சில இடங்களில் தம் தங்குமிடங்களை விலை கொண்டு  சொந்தமாக்கியிருக்கக் கூடும். தம் பேராலோ, தம் குடும்பத்தவர் பேராலோ அல்லது தம் வணிகக் கூட்டாளியின் பெயராலோ அந்த இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் அங்கே தம் கொடி மரங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியனவற்றைப் பதிவு செய்தார்க்ள். கரூரில் அமராவதி ஆற்றுப்படுகை, அரவக்குறிச்சியில் குடகனாற்றுப்படுகை ஆகியன வணிகச் சந்தைகள் அமைத்த இடங்களாய் இருந்துள்ளமை தெளிவு. இவ்வகையில்தான், நாம் கண்டறிந்த அரபுக்கல்வெட்டில் வணிகர்கள் தம் பெயர்களைப் பொறித்துள்ளார்கள். கல்வெட்டில் காணும்

அல்லாஹு  
அல் பஷுர்   
உமர்
ஹாரீய்

ஆகிய பெயர்கள்  வணிகர்களின் பெயர்களே. கரூர்ப் பகுதி வணிகர் பகுதி என்பதற்கு இங்குக் கிடைத்த கி.பி. 2-3 நூற்றாண்டுக் காலத் தமிழிக் (தமிழ் பிராமி) கல்வெட்டுகளில் பொன் வாணிகன், எண்ணெய் வாணிகன் ஆகியோர் பெயர்கள் வருவதே சான்று. வணிகப் பெருவழியில் கரூர்ப் பகுதி இருந்துள்ளமை மற்றும் இங்குக் கிடைத்த இன்றுவரை கிடைக்கும் - உரோம நாணயங்கள் வணிகப் பின்னணிக்கு வலுவான சான்றுகள்.  இவ்வாறு வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அரியதொரு அரபுக்கல்வெட்டு அரவக்குறிச்சியில் புங்கம்பாடியில் கண்டறியப்பட்டுள்ள்மை கொங்கு நாட்டுப் பெருமைக்குச் சிறப்புச் சேர்க்கிறது என்பதில் ஐயமில்லை.

சமணக்குன்றும் முருகன் கோயிலும்
பயணத்தின் இறுதியாக நாங்கள் சென்று பார்த்தது மொட்டை ஆண்டவர் திருக்கோவில். அரவக்குறிச்சி வட்டத்தில் கணக்குவேலம்பட்டி என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள இடம் ஒரு சிறிய கரட்டுக் குன்று இருக்குமிடம் ஆகும். குன்று நோக்கியுள்ள சிறிய ஏற்றப்பாதையில் மேலே செல்லுமுன் சமதளத்திலேயே  மிகப்பெரியதொரு பாறை காணப்படுகிறது. மதுரை-ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள பாறை போலச் சரிந்து பெரிய சுவர் போலத் தோற்றமளிக்கிறது. பாறையில் சற்றேறத்தாழ ஏழு அடி உயரத்துக்கு மூன்று சமணச்சிலைகள் ஒரே இடத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று சிற்பங்களும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றன. நடுவில் ஓர் ஆண் உருவமும், அதன் இரு பக்கங்களிலும் இரு பெண் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. நடுவில் ஆணும், பக்கங்களில் இரு பெண்களும் காணப்படுவதால், சமண வரலாறு அறியாத கிராமத்து மக்கள், இந்தச் சிற்பத் தொகுதியை முருகன், வள்ளி, தேவயானை ஆகிய கடவுள்களாகக் கருதி முருகன் கோயில் எனப் பெயரிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.

சமணச் சிற்பங்கள்
சிற்பங்களை ஆய்வு செய்ததில், இச்சிற்பங்கள் சமணச் சிற்பங்கள் என்பது புலப்பட்டது. நடுவில் இருக்கும் ஆண் சிற்பத்தின் தலைக்கு மேல் சமணத்துக்கே உரிய முக்குடை அமைப்புக் காணப்படுகிறது. சமணத் தீர்த்தங்கரர் சிலைகளில் இது போன்ற முக்குடை அமைப்பைக் காணலாம். இங்கு, சிற்பத்தில் ஆடை அணியாத சமணத்துறவியின் நின்ற கோலமும், அவரின் தலைக்குமேல் காணப்படும் முக்குடை அமைப்பும் இச் சிற்பம் ஒரு சமணத் தீர்த்தங்கரரின் சிற்பம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

சிற்பங்களில் இருப்போர் யார்?

1) பாகுபலியும் அவரின் சகோதரிகள் இருவரும்
சமணத் தீர்த்தங்கரரின் இரு பக்கங்களிலும் இரு பெண்ணுருவங்கள் உள்ளன. சமணத்தில் இரு பெண்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆதி நாதர் என்னும் ரிஷபதேவர் ஆவார். இவர் ஒரு அரசர். இவருக்கு மக்கள் இரு மகன்களும், இரு மகள்களும். பாகுபலி மூத்த மகன்; பரதன் இளைய மகன். பிராமி, சுந்தரி இருவரும் மகள்கள். ஆட்சியை மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு ரிஷபதேவர் துறவறம் மேற்கொள்கிறார். சக்கரவர்த்தியாகும் எண்ணத்தில் பரதன், பல நாட்டு அரசர்களை வெல்கிறார் உடன்பிறந்த பாகுபலியையும் கொல்ல நினைக்கிறார். மனம் வெறுத்த பாகுபலி, தன் பங்குக்கான ஆட்சிப்பரப்பையும் உடன்பிறந்தானுக்குத் கொடுத்துவிட்டுக் காட்டுக்கு ஏகித் தவத்தில் ஈடுபடுகிறார். சகோதரிகள் பிராமி, சுந்தரி ஆகிய இருவரும், தவத்தைக் கைவிடுமாறு பாகுபலியை   வேண்டிக்கொள்கின்றனர். இந்ந்கழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நடுவில் பாகுபலியும், அவரது பக்கங்களில் அவரது சகோதரிகளும் நின்றுகொண்டிருப்பது போன்ற தோற்றத்தில், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இராஜஸ்தானில் ஜோத்பூர், கருநாடகத்தில் அய்ஹொளெ, எலோராக் குடைவரை, பாதாமிக் குடைவரை, தமிழகக் கழுகுமலை ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம்.

மேற்குறித்த சமணச் சிற்பங்களின் தோற்ற அமைப்பை ஒப்புநோக்கிப் பார்க்கையில், அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச்சிற்பத்தின் நடுவில் இருப்பவர் பாகுபலி என்னும் சமணத்துறவி என்பதாகவும், அவருக்கு இரு பக்கங்களிலும் நிற்கும் பெண் சிற்பங்கள் பாகுபலியின் சகோதரிகளான பிராமி, சுந்தரி ஆகியோர் என்பதாகவும் கருத நேர்கிறது..

சிற்பங்களில் இருப்போர் யார்?

2) ரிஷபதேவரும் அவரின் மகள்கள் இருவரும்
ஆதிநாதர் என்னும் ரிஷபதேவர், சமணத்தில் முதலாம் தீர்த்தங்கரர் எனப்பார்த்தோம். தீர்த்தங்கரர் என்னும் உயர்நிலை பெற்ற இருபத்து நான்கு பேரின் சிற்ப,ஓவிய உருவங்களுக்கு அடையாளமாக அவர்களின் தலைக்கு மேல் முக்குடை அமைப்புக் காணப்படும். பார்சுவ நாதருக்கு மட்டும் முக்குடையும் அதன்கீழே அவரைக் காக்கின்ற நாகமும் தலைமேல் காட்டப்பட்டிருக்கும். பாகுபலி தம் தந்தையாகிய ரிஷபதேவரைப் பின்பற்றித் துறவறம் பூண்டு தனிப்பெரும் சிறப்பைச் சமணத்தில் பெற்றிருப்பதால் அவருக்கு ஒரு குடை காட்டப்படுவதுண்டு. ஆனால், அவர் தீர்த்தங்கரர் அல்லர் என்னும் காரணத்தால் அவருக்கு முக்குடை இராது. பாகுபலியின் நீண்ட தவம் காரணமாக அவர் உடலைச் சுற்றிக் கொடிகள் படர்ந்தமையால், பாகுபலியின் சிற்ப உருவங்களில் ஆடையற்ற அவரது உடலைச் சுற்றிக் கொடிகள் தோன்றுமாறு சிற்ப வேலைப்பாடு  காணப்படும். இந்த அமைப்பு, மாறா அமைப்பு. எனவே, அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச் சிற்பம், முக்குடையோடு இருப்பதாலும், சிற்பத்தின் உடலில் சுற்றிய கொடிகள் இன்மையாலும் தீர்த்தங்கரரான ரிஷபதேவரே என்று கருத நேர்கிறது. மேலும், ரிஷபதேவர் தம் மகள்களுக்கு எண்ணும் எழுத்துமாகிய கல்வியைப் புகட்டியவர் என்று ஸ்ரீபுராணத்தில் குறிப்பிடப்பெறுகிறது. பெண் கல்வி என்பது சமணர் போற்றும் ஒரு கருத்து. பெண் கல்வியின் மேன்மையையும், அருமையையும் தமிழ்ச் சமணர் போற்றியதன் குறியீடாகவே சமணரான இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் காட்டியுள்ள கவுந்தியடிகளைக் கொள்ளலாம். ரிஷபதேவர், தம் மகள்களுக்குக் கல்வி கற்பிக்கையில், பிராமிக்குத் தம் வலக்கையால் எழுத்தையும், இடக்கையால் எண்ணையும் (கணிதத்தையும்) கற்பித்ததாக ஸ்ரீபுராணம் குறிப்பிடுகிறது.

ஸ்ரீபுராணத்திலிருந்து சில வரிகள்
பகவான் ....................   ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.
அங்ஙனம் காட்டி அவருள்  பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், ........... அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.
சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணிதஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையும் உபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. 

தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டன;எழுதப்படுகின்றன. தமிழில் எண்கள் வலமிருந்து இடமாகச் சுட்டப்பட்டன. இன்றும் எண்களின் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் ஆகிய பகுப்புகளில், வலப்புறம் முதலிடத்தில் ஒன்று, அடுத்து, வலப்புறத்திலிருந்து இடப்புறமாகப் பத்து, நூறு, ஆயிரம் என எண்கள் எழுதப்படுவது ஆராயத்தக்கது. தொல்காப்பியத்திலும், எழுத்து இடமிருந்து வலப்புறமாகவும், எண்கள் வலமிருந்து இடப்புறமாகவும் படிக்கப்படுதலைப் பற்றிய குறிப்பு உள்ளது. அரவக்குறிச்சியின் சமணச் சிற்பத்தில், தீர்த்தங்கரருக்கு வலப்புறம் நிற்கும் (ஒளிப்படத்தைப் பார்க்கும் நம் பார்வையில் அல்ல) பிராமி தன் வலக்கையை எழுதும் பாணியில் உயர்த்தி வைத்துள்ளதையும், இடக்கையை, எழுதப்படுகின்ற ஏட்டினை ஏந்தும் பாணியில் தாழ்த்தி வைத்துள்ளதையும் காணலாம். இதைப் பிராமி என்பவள் எழுத்தைக் கற்றதைக் குறிப்பால் உணர்த்தும் குறியீடாகக் கொள்ளலாம். தீர்த்தங்கரருக்கு இடப்புறம் நிற்கும் சுந்தரியின் சிற்பத்தில், சுந்தரி தன் இடக்கையை உயர்த்தியும், வலக்கையைத் தாழ்த்தியும் வைத்துள்ளதைக் காணலாம்.

             பழஞ்சிற்பம்-திருத்துவதற்கு முன்னர் - தோற்றம் 


சிற்பத்தொகுதியில் நடுவில் இருப்பவர் ரிஷபதேவரா? அல்லது பாகுபலியா?
கீழ்க்காணும் தரவுகள் ஆய்வுக்குரியன.

1         ஆண் சிற்பத்தில் முக்குடை காணப்படுகிறது.
2         ஆண் சிற்பத்தில் உடலில் கொடிகள் காணப்படவில்லை.
3         பெண்கள் இருவரின் கைப்பாணி அல்லது முத்திரை, ஆதிநாதர்  எண்ணும் எழுத்தும் கற்பித்த மகள்களாகச் சுந்தரி, பிராமி இருவரைக் குறிப்பதாக உள்ளது.


மேற்காணும் தரவுகள், அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச் சிற்பம் ஆதிநாதருடையது என்னும் முடிவை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இரு வேறு கருதுகோள்களையும் ஆய்வறிஞர்கள் சிலர் இன்னும் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். ஆய்வு என்பது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முடிந்து போவதல்ல. மீளாய்வுகள் தொடரும் நிலையில், நாம் எட்டிய (அல்லது நாம் எட்டியதாக எண்ணிய ) முடிவுகள் மாறக்கூடும். தமிழகத்தில், ஆதிநாதர், மகள்களான பிராமி, சுந்தரி ஆகியோர்  இணைந்த அரிய சிற்பம் இது ஒன்றே எனக் கருதலாம். இவ்வரிய சமணச் சிற்பம் கொங்குப்பகுதியில் அமைந்துள்ளது என்பது கொங்கு நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

சமணச் சிற்பத்தின் காலம்
சமணம், தமிழகத்தில், குறிப்பாகப் பாண்டிநாட்டிலும் கொங்குப்பகுதியிலும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்கோடு இருந்துள்ளது என்று வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாக அறிகிறோம். இதன் அடிப்படையில், இச் சமணச் சிற்பத்தின் காலத்தைக் கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாகக் கொண்டு செல்லலாம். சிற்பத்தின் பழமையான ஒளிப்படம் ஒன்று, மிகுதியான சிதைவுகளைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒட்டு மொத்தச் சிற்ப அமைதியையும் சமணத்தின் மறுமலர்ச்சிக் காலத்தையும் கருத்தில்கொண்டால், சிற்பத்தின் காலம் கி.பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டு எனக் கருதக் கூடுதல் வாய்ப்புள்ளது. தமிழகத் தொல்லியல் துறையினர் இச் சிற்பத்தை மீளாய்வு செய்து மேலும் புதிய செய்திகளை வெளிக்கொணர ஆவன செய்யவேண்டும்.

             சமணக்குன்று -  சமணச் சிற்பம் - திருத்தியபின்னர்



பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு
மேற்குறித்த சமணச் சிற்பத்தொகுதியைக் கடந்து சிறு குன்றுப்பாதையில் சற்றே மேலே ஏறிச் சென்றால் சமதளமாகக் காணப்படும் பெரிய பாறைப்பரப்பு. ஓரிடத்தில் பசிய இலைகள் படர்ந்து நிற்கும் சுனை நீர்ப்பள்ளம். மற்றோரிடத்திலும் சிறிய சுனை ஒன்று. பாறைப்பரப்பைக் கடந்து சற்று மேலே சென்றால், பெரிய குன்றுப்பாறையின் கீழ் சிறிய குகைத் தளம். சமணத்துறவிகள் தங்கியிருக்கும் படுக்கையும் காணப்படுகிறது. குகைத் தளத்துள் நீர் புகுந்துவிடாமல் பாறையின்மீது மழைநீர் வடிந்து வெளியேறக் கல்லில் விளிம்பு வெட்டியிருக்கிறார்கள். குகை அமைப்பு மிகச் சிறிது. மற்ற இடங்களில் இருப்பதுபோல், பாறையே கூரையாக மடிந்து காணப்படும் சூழல் இங்கு இல்லை. இதுபோன்ற இடங்களில், கூரை போன்ற செயற்கை அமைப்பு உருவாக்கப்படும். அதற்கேற்றவாறு, பாறையில் குழிகளை அமைப்பது வழக்கம். பாறையில் அத்தகைய குழிகள் காணப்படுகின்றன.

                    சுனை நீர்ப்பள்ளம்

குகைத்தளத்திலிருந்து  திரும்பும் வழியில் பாறைச் சமதளத்தில் தாம் கண்டுபிடித்த வட்டெழுத்துக் கல்வெட்டினைத் தேடிக்கொண்டிருந்தார் நண்பர். செந்நிறம் கொண்ட பாறை முழுதும் வரிவரியாக ஓவியம் போல, எங்கு பார்த்தாலும் எழுத்துப்போலவே தோற்றமளித்து நம்மை மயங்கவைத்தது. முடிவில் கல்வெட்டு இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. நிறைய எழுத்துகள் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஆறு எழுத்துகள் கொண்ட ஒரு வரியும் அதன்கீழ் ஒன்றன்கீழ் ஒன்றாக இரண்டு எழுத்துகளுமே தற்போது காணப்படுகின்றன. கல்வெட்டு அறிஞர் திரு.பூங்குன்றன் அவர்களிடம் இக்கல்வெட்டின் படத்தைக் காண்பித்துக் கருத்துக் கேட்டபோது, இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாகும் எனக் கூறினார். கல்வெட்டின் பாடத்தைப் படிப்பது இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது.

               வட்டெழுத்துக் கல்வெட்டு



முடிவுரை 
அரவக்குறிச்சிப் பகுதியில் இதுவரை வெளிப்படாத தொல்லியல் தடயங்களான, மலைக்கோயில் சிவன்கோயில் கல்வெட்டுகள், நடுகல், புங்கம்பாடிச் சிவன் கோயில் கல்வெட்டு, குடகனாற்றுப் பாறை அரபுக் கல்வெட்டு, சமணக் குகைத்தளம், ஆதிநாதர் சிற்பம், வட்டெழுத்துக் கல்வெட்டு ஆகியவற்றைக் கண்டு அவை பற்றிய பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு மிகுந்த மகிழ்வையும் நிறைவையும் அளித்த்து. தொல்லியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடும், பாராட்டுக்குரிய வரலாற்று ஆர்வலர் சுகுமாரன் பூமாலை போன்ற இளைஞர்கள் நிறைய முன்வரவேண்டும்.


துணை நின்றவை :

1  இணையச் செய்திகள்
2  சமணமும் தமிழும்- மயிலை சீனி.வேங்கடசாமி

நன்றி . துணை நின்றவர்கள் :

1  கோவை - பெரிய மசூதியின் மௌல்வி
2  திரு. முகமது இஸ்மாயில், கோவை.
3 ”மின்தமிழ்”  இணையக்குழுவினர்
4 திரு. அமீர்
5 திரு. அமீர் அவர்களின் நண்பர் குழாம். மற்றும் 
  இமாம் அவர்கள். 
6 திரு. அர.பூங்குன்றன், தொல்லியல் அறிஞர். 
7 திரு. பானுகுமார், சமண அறிஞர், சென்னை.
8 திரு நா.கணேசன், தமிழறிஞர், ஹூஸ்டன்.
9 திரு. கனக அஜித தாஸ், சென்னை.
10 திரு. இராமச்சந்திரன், தொல்லியல் துறை (பணி நிறைவு), சென்னை.

 நன்றி.  தொல்லியல் தேடலுக்கு மூலமாய் நின்றவர்:
திரு. சுகுமார் பூமாலை.

-----------------------------------------------------------------------------------------
 துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156. 

1 கருத்து: