மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 24 ஜூன், 2014

        அக்கசாலை கல்வெட்டு - கணக்கம்பாளையம்       
                                                       து.சுந்தரம், கோவை.


         அண்மையில், சத்தியமங்கலத்துக்கருகில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான இராமசாமி, தொல்லியல் ஆய்வாளரான கருப்புசாமி ஆகியோருடன் இக்கட்டுரை ஆசிரியர் சத்திப்பகுதியில் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வு மேற்கொண்டபோது, இராமசாமி அவர்கள் பங்களாபுதூர் அருகில் அமைந்துள்ள கணக்கம்பாளையத்தில் பகவதியம்மன் கோயிலில் ஒரு பலகைக் கல்லில் கல்வெட்டு உள்ளதைப்பற்றிக் குறிப்பிட்டார். சத்தி-அத்தாணி சாலையில் பங்களாபுதூருக்குச் சற்று முன்புள்ள பிரிவுச்சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கணக்கம்பாளையம் ஊரும் அதனை அடுத்துச் சற்றுத்தொலைவில் பகவதியம்மன் கோயிலும் உள்ளன. மூவரும் கோயிலை அடைந்தோம்.

         கோயில், சுற்றுச் சுவர் கொண்டு பெரிய வளாகத்துடன் அமைந்திருந்தது. நுழைவு வாயிலுக்கு அருகிலேயே நிறுத்திவைக்கப்பட்ட  நிலையில் ஒரு பலகைக்கல்லில் கல்வெட்டு காணப்பட்டது. ஆண்டுக்கணக்காக, கோயிலுக்கு வெள்ளையடிக்கும்போது இக்கல்லிலும் வெள்ளை அடித்ததனால் கல்லின் பரப்பு முழுதும் சுண்ணாம்புப்பற்று படிந்து எழுத்துகள் இருப்பதே தெரியாவண்ணம் தோற்றமளித்தது. வெகு நேரம் கல்லிலிருந்த சுண்ணாம்புப் பூச்சைச் சுரண்டியெடுத்தபின்னர் ஒருவாறு எழுத்துகள் புலப்பட்டன. மொத்தம் பன்னிரண்டு வரிகள் இருந்தன. ஏழு வரிகளும் நேர்த்தியாக ஒன்றன்கீழ் ஒன்றாக இருக்குமாறு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குறிப்பேடுகளில் உள்ளது போல, கிடைமட்டக்கோடுகள் செதுக்கப்பட்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. முதல் ஏழு வரிகள் சற்றே தெளிவாக இருந்ததால் கல்வெட்டின் ஏழு வரிப்பாடத்தைப் படித்து, கல்வெட்டு தெரிவிக்கும் முதன்மையான செய்திகளை அறிய இயன்றது. பின் ஐந்து வரிகள் மிகவும் தேய்ந்துபோன நிலையில் படிக்க இயலவில்லை.  

         ஸ்வஸ்திஸ்ரீ”  என கல்வெட்டு மரபில் கல்வெட்டு தொடங்குகிறது. முதல் மூன்று வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்து அரசன் பற்றிய செய்தி இருந்ததால், கல்வெட்டின் காலத்தைச் சரியாகக் கணிக்க முடிந்தது. அரசன், கொங்கு நாட்டை ஆண்ட கொங்குச் சோழர்களில் ஒருவனான இரண்டாம் குலோத்துங்கன் ஆவான். அவனுடைய ஆட்சிக்காலம் கி.பி. 1196 முதல் கி.பி. 1207 வரை என்று தமிழகக் கல்வெட்டுத்துறையினர் நூலில் குறிப்புள்ளது.
கல்வெட்டில் அரசனின் ஆட்சியாண்டு இருபத்துமூன்றாவது எனக்குறிக்கப்படுவதால், கல்வெட்டின் காலம் கி.பி. 1219-ஆம் ஆண்டு என்பது பெறப்படுகிறது. எனவே, கல்வெட்டு எண்ணூறு ஆண்டுப்பழமையானது. எழுகரை நாட்டுக் கம்மாளர்கள், குளமாணிக்கம் என்னும் ஊரில் சில வரி நீக்கங்களைக் கொடையாக அளித்துள்ளனர் என்னும் செய்தி காணப்படுகிறது. குளமாணிக்கம் என்னும் ஊரின் பெயர் கல்வெட்டில் “குளமாணிக்கமான அக்கைசாலை நல்லூர்  எனக்குறிப்பிடப்படுகிறது. அக்கசாலை  என்பதுதான் சரியான வழக்கு. அக்கசாலை என்னும் சொல் குறிப்பாக காசு, பொன்னணிகலன்கள் செய்யுமிடத்தைக் குறிக்கும். பொன்னால் அணிகலன்கள் செய்யும் பொற்கொல்லரும் அக்கசாலைகள் என அழைக்கப்பட்டார்கள். குளமாணிக்கமான அக்கசாலை நல்லூர் எனக் கல்வெட்டு குறிப்பிடுவதை ஆராயும்போது, குளமாணிக்கம் என்னும் பழம்பெயருள்ள ஊரில் அக்கசாலையான காசு அச்சடிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டதால் அக்கசாலை நல்லூர் என்னும் புதிய பெயர் வழங்கியிருக்கக்கூடும் என்பது பெறப்படுகிறது. இக் குளமாணிக்கம் என்னும் ஊர் தற்போதைய கணக்கம்பாளையமாக இருக்கக்கூடும். இவ்வூரில் காசு(நாணயம்) அச்சடிக்கும் சாலை இருந்ததாக மக்களால் கருதப்படுகிறது.

         எழுகரை நாடு என்பது ஏழூர் நாடு என்றும் கல்வெட்டுகளில் வழங்குகின்றது. இது தற்போதைய நாமக்கல் வட்டத்தில் அமைந்த பகுதி என்று கொங்கு நாட்டு வரலாறு பற்றி கோவை கிழாரான கோ.ம. இராமச்சந்திரன் செட்டியார் மற்றும் புலவர் குழந்தை ஆகியோர் எழுதிய நூல்களில் குறிப்பிடப்படுகிறது. எனவே எழுகரை நாட்டுக் கம்மாளர்கள் குளமாணிக்கத்தில் அக்கசாலையில் பணிபுரிந்திருக்கின்றனர் எனக்கருதலாம். கல்வெட்டு குறிக்கும் கொடை பற்றிய செய்திகள் துல்லியமாக அறியப்படவில்லை எனினும், அக்கசாலைக் கம்மாளரைப்பற்றி நாம் அறிய இக்கல்வெட்டு துணை நின்றது. அக்கசாலைகள் என்போர் ஒரு குழுவாக இயங்கிவந்துள்ளனர் எனக் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம். அவர்கள் கோயில்களுக்குக் கொடை அளித்துள்ளார்கள். பிள்ளையார் கோயில்களையும், சிவன்கோயில்களையும் கட்டுவித்துள்ளனர் என்ற செய்தியும் கல்வெட்டுகள் வாயிலாகத்தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாக, கொற்கையில் அக்கசாலை பிள்ளையார் கோயில், நெல்லை நகரத்தில் அக்கசாலை வினாயகர் கோயில், மானாமதுரையில் அக்கசாலை ஸ்ரீஅன்னதானப்பிள்ளையார் கோயில், கோவை மாவட்டம் சேவூரில் அக்கசாலீசுவரம் கோயில் ஆகிய கோயில்களைக் கட்டுவித்துள்ளார்கள் என அறிகிறோம். மேலே குறிப்பிட்ட சேவூரிலும்  நாணயம் அச்சடிக்கும் ஒரு நாணயச்சாலை இருந்துள்ளது.

         கி.பி. 1656-58 காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த பிரான்சு நாட்டுப்பயணி பெர்னியர் என்பார் தம் குறிப்பில் இவ்வாறு கூறுகிறார்:
“கர்நாடகாவில்  பொன் அணிகலன்கள் செய்யும் கைவினைக்கலைஞர்கள் அக்கசாலிகா என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரி செலுத்தியவர்களாக இருக்கிறார்கள். அரசர்களிடமிருந்து நல்கை (மானியம்-grant)  பெற்றவர்களாக இருக்கிறார்கள். கொடை அளிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கோயில்களையும் கட்டுவித்திருக்கிறார்கள்.  பெர்னியரின் கூற்று இன்றும் மெய்யாவதைக் காண்கிறோம். அக்கசாலி, அக்கசாலெ, அக்கசாலிகெ என்னும் குலப்பெயர்கள் தற்காலத்திலும் கருநாடகத்தில் உண்டு. இக்குலப்பெயர்களை அங்கு தம் பெயருடன் பின்னொட்டாகச் சேர்த்து வழங்குகிறார்கள். தமிழகத்தில் அவ்வாறு இல்லை. தொழிலை முன்னிட்டு வழங்கிய அக்கசாலை என்னும் குழுப்பெயர் நிலைத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அக்கசாலைகளே கருநாடகத்துக்கு இடம் பெயர்ந்திருப்பரோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது. இது ஆய்வுக்குரியது.

         கன்னடக்கல்வெட்டுகளிலும் அக்கசாலைகள் குறிப்பிடப்படுகிறார்கள். மைசூர் மாவட்டம் குண்டலுப்பேட்டை ஊரில் இராமேசுவரர் கோவில் கல்வெட்டொன்று, கேதவ்வெ என்னும் ஒரு ஆடல் மகளைத் தேவரடியாராகக் கோவிலுக்குக் கொடுத்ததைப்பற்றிச் சொல்லுகிறது. அவளுடைய வாழ்க்கைச் செலவை ஏற்றுக்கொண்ட வீரபாஞ்சாலர்கள் என்னும் நாட்டார் தம் ஊர்களில் ஒவ்வொன்றிலும் உள்ள கம்மாளர்களான தச்சர், அக்கசாலெகள் (பொற்கொல்லர்) மற்றும் கஞ்சகாரர் (வெண்கலம்,பித்தளை உலோகங்களில் வேலை செய்யும் கலைஞர்கள்) ஆகியோர் ஆண்டொன்றுக்குக் குறிப்பிட்ட பணம் கொடுக்கவேண்டும் என்று உடன்படிக்கை செய்கிறார்கள். வீரபாஞ்சாலர்கள் பஞ்சகம்மாளர்கள் எனத்தெரிகிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 1372. மேற்படி குண்டலுப்பேட்டை வட்டத்தில் ஹுலிகனமரடி என்னும் ஊரில் வெங்கடரமணர் கோயில் மணியில் வீராச்சாரி என்னும் அக்கசாலெ அந்த மணியைக் கொடையாக அளித்ததாகப் பொறிக்கப்பட்டுள்ளது. சாமராஜ நகர்   வட்டம் தெள்ளனூர் மகா காளியம்மன் கோயில் கல் தோரணவாயிலைக் கால்கோஜ என்ற அக்கசாலெ கட்டுவித்தான் என அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு.

(கட்டுரை ஆசிரியர் குறிப்பு: கால்கோஜ என்னும் பெயரில் உள்ள “ஓஜஎன்னும் பின்னொட்டும் கண்மாளர்களுக்கு வழங்கிவந்துள்ளதைக் காண்கிறோம். கோலாப்பூர் பகுதியில் பாமனி என்னும் ஊரில் அமைந்துள்ள ஜைனக்கோயிலின் வாயில் நிலைக்காலில் காணப்படும் கல்வெட்டில் கல்வெட்டை எழுதிய சிற்பியின் பெயர் “ அக்கசாலெ கோவியோஜஎன்று காணப்படுகிறது. ஓஜாஎன்ற பின்னொட்டுடன் பெயரைக்கொண்டுள்ள வடஇந்தியர் கண்மாள மரபுடையவர்களாக இருக்கக் கூடும். தமிழகத்தில் உள்ள தெலுங்கு மொழி பேசும் பொற்கொல்லர்கள் தம்மை “ஓஜலவாருஎன்று குறிப்பிட்டுக்கொள்வதை இன்றும் காணலாம். குறிப்பாக கொங்கு நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழகப் பொற்கொல்லர்களைத் தெலுங்கு மொழிப் பொற்கொல்லர்கள் அடையாளப்படுத்தும்போது கொங்கோஜலவாரு என அழைப்பது குறிப்பிடத்தக்கது.)

        
          மேற்படி சாமராஜ நகர் வட்டத்தில் சாகடெ என்னும் ஊரில் பசவேஸ்வரர் கோயிலில் மண்டபத்தூண் ஒன்றினை  உம்மத்தூரைச் சேர்ந்த ஹொனிமய்ய என்ற அக்கசாலெ கட்டுவித்ததாக அங்குள்ள ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதே போல், கிருஷ்ணராஜபேட்டை வட்டத்தில் வசந்தபுரம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயில் கல்வெட்டு, நில விற்பனை ஆவணம் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டவர்களில் லக்கோஜ அக்கசாலெ, சபயோஜ அக்கசாலெ ஆகியோர் பெயர்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1312. மண்டியா மாவட்டம் ராயசெட்டிபுரம் என்னும் ஊரில் சோமேசுவரர் கோவிலில் உள்ள போசள (ஹொய்சல) அரசன் வீர சோமேசுவரன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டில் வீரசைவர்க்கென உருவாக்கப்பட்ட ஒரு கிராமம் பல விருத்திகளாகப்பகுக்கப்பட்டு, பல வீரசைவர்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி உள்ளது. அவ்வீர சைவர்கள் பட்டியலில் அக்கசாலெ மல்லோஜ என்பவரின் மகன்கள் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

         அக்கசாலைகளைப் பற்றிய ஆய்வுச் சிந்தனையில், கணக்கம்பாளையம் கல்வெட்டுச் செய்தியிலிருந்து வெகுவாக விலகிவிட்டோம். கணக்கம்பாளையம் கல்வெட்டு, இரண்டு சுவையான செய்திகளை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒன்று, இராமாநுஜரின் வரலாற்று நிகழ்ச்சி. கணக்கம்பாளையத்தில் அமைந்துள்ள கரிவரதராசப்பெருமாள் கோயிலில், இராமாநுஜர் திருவரங்கத்திலிருந்து மைசூர் மாவட்டம் மேல்கோட்டைக்குப் பயணமாகச் சென்ற வழித்தடத்தின் வரைபடத்தை வைத்திருக்கிறார்கள். இராமாநுஜர் வெள்ளை ஆடை உடுத்திக்கொண்டு சீடர் சிலருடன் காவிரிக்கரையோரமாகப் பயணப்பட்டு, பவானியை அடைந்து பின்னர் பவானி ஆற்றங்கரை வழியே சென்று, நம் கல்வெட்டு அமைந்துள்ள கணக்கம்பாளையத்துக்கு வடக்கே உள்ள எக்கரை மலையைக்கடந்து, தொண்டனூரைக்கடந்து மேல்கோட்டையை அடைந்தார் என்னும் குறிப்பு அவ் வரைபடத்தில் காணப்படுகிறது. கணக்கம்பாளையம், இராமாநுஜரின் வரலாற்றோடு தொடர்புடைய ஓர் ஊர் என்பது நமக்குப் புதிய செய்தி.

         மற்றது, அமெரிக்கநாட்டுப் பெருஞ்செல்வர்  மூன்றாம் ராக்கபெல்லர் பற்றியது. தொல்லியல் அறிஞர் திரு. சுப்பராயலு அவர்கள் தம் கட்டுரை ஒன்றில் குறிப்பிடும் செய்தி. 1992-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் நடைபெற்ற கண்காட்சியில் ராக்கபெல்லர் தம்முடைய சேர்ப்பாகக் (collection)  காட்சியில் வெண்கலத்தால் ஆன புத்தர் படிமம் ஒன்றையும் வைத்திருந்தார். இப்படிமம், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தது; கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்னும் குறிப்பும் இருந்தது. படிமத்தின் பதுமப்பீடத்தில் எழுத்துகள் காணப்படவே, அதனை ஒளிப்படம் எடுத்து ஆய்வு செய்ததில் அது கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் இராசேந்திரப்பெரும்பள்ளியைச் சேர்ந்த அக்கசாலைப்பெரும்பள்ளி கோயிலுக்கு திருவுத்சவத்துக்காகச் செய்த அக்கசாலை ஆழ்வார் என்னும் பெயரமைந்த திருமேனி என்றும் தெரிய வந்தது. எனவே, அக்கசாலைகள் நாகப்பட்டினத்து புத்தப்பள்ளியில் (புத்த விகாரை) தம் பெயரால் சிறு கோயிலொன்றைக் கட்டுவித்து புத்தர் திருமேனியை எழுந்தருளுவித்த செய்தியை அறிகிறோம்.
         மேலே குறிப்பிட்ட புத்தவிகாரை, முதலாம் இராசராசன் காலத்தில்   ஸ்ரீவிஜயத்து (தற்போதைய மலேசியப்பகுதி)  அரசன் நாகப்பட்டினத்தில் கட்டுவித்தது என்பதும், பின்னாளில் சைனப் பகோடா என அழைக்கப்பட்டுவந்த அவ்விகாரை கி.பி. 1867-இல் இடிக்கப்பட்டது  என்பதும் சிறப்புச் செய்திகள்.

         வரலாற்றின் பல கட்டங்களை நினைவூட்டிய பெருமை நமது அக்கசாலைக் கல்வெட்டு பெற்றுள்ளது. இக்கல்வெட்டினை கணக்கம்பாளையம் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் க.வீ. வேதநாயகம் அவர்கள் முன்னரே அறிந்திருக்கிறார் என்பதாகக் கேள்விப்படுகிறோம். எனினும் கல்வெட்டு சுட்டும் செய்தியினை வெளிப்படுத்தும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.


துணை நின்ற அறிஞர்களும் நூல்களும்:
  1. கோவை மாவட்டக் கல்வெட்டுகள் தமிழக அரசுத் தொல்லியல் துறை வெளியீடு.
  2. எபிகிராபியா கர்நாடிகா சில தொகுதிகள். மைசூர்ப்பல்கலை வெளியீடு.
  3. குழந்தைகளுக்காக பகவத் ராமாநுஜர் கணக்கம்பாளையம் முனைவர்  க.வீ. வேத நாயகம் அவர்கள்.
  4. தகவல் உதவி : முனைவர். சு.இராசகோபால் அவர்கள், தொல்லியல், கல்வெட்டு அறிஞர், சென்னை.
  5. தகவல் உதவி : முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள், தொல்லியல், கல்வெட்டு அறிஞர், மதுரை.






து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.  









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக