பனப்பட்டி பெருமாள் கோவில்
கல்வெட்டு
து.சுந்தரம், கோவை.
கொங்கு
நாடு பண்டைய நாளில் கால்நடை வளர்ப்பு மிகுதியும் நடைபெற்ற பகுதியாக இருந்தது.
சோழர்களின் ஆட்சிக்கீழ் வந்தபிறகு வேளாண்மை முதன்மை பெற்றது. கொங்கு நாடு என்றதும்
உடன் நினைவுக்கு வருவன கொங்கு வேளாளர்களும் அவர்தம் விருந்தோம்பும் பண்புமே ஆகும்.
கொங்கு நாட்டுக் கோவில் கல்வெட்டுகளில் மிகுதியும் குறிப்பிடப்படுபவர்களும்
வேளாளர்களே என்றால் மிகையன்று. கல்வெட்டுகளில், கொங்கு வேளாளர்கள் அளித்த கொடை பற்றிய
செய்திகள் நிறைய வருவதைக் காண்கிறோம். அச்செய்திகளில், அவர்கள் வெறும் வெள்ளாளர்
என்னும் தொடரால் குறிப்பிடப்படுவதில்லை. அவர்களுடைய குலப்பிரிவுகளைக் குறிக்கும் அடை அல்லது ஒட்டு இணைந்தே இருப்பதைப் பார்க்கிறோம்.
கோவைப்பகுதியில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டை ஒட்டிய கல்வெட்டுகளில் சாத்தந்தை,
கொற்றந்தை, குலாந்தர், விச்சர், மலையர், பையர், செம்பர், செட்டர், பிள்ளர்,
கருந்தொழி ஆகிய குலப்பிரிவுகள் குறிப்பிடப்பெறுகின்றன. பிற்காலத்தைய
கல்வெட்டுகளில் பொன்ன கோத்திரம், பவள கோத்திரம், கூரை குலம், செங்கண்ண குலம்,
செம்பூத்த கோத்திரம் ஆகிய பல்வேறு குலப்பிரிவுகள் சுட்டப்படுகின்றன.
பழங்கல்வெட்டுகளில் வெள்ளாளன் என்றும், பிற்காலத்துக் கல்வெட்டுகளில் கவுண்டன்
என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
அத்தகைய
பிற்காலத்துக் கல்வெட்டுகள் மூன்று, கோவை-வடசித்தூர் அருகே அமைந்துள்ள பனப்பட்டியில்
இருக்கும் பெருமாள் கோவிலில் கண்டறியப்பட்டுள்ளன. இக்கட்டுரை ஆசிரியர், வடசித்தூர்
பகுதியில் கல்வெட்டு ஆய்வு மேற்கொண்டபோது இவை அறியப்பட்டன. பனப்பட்டி பெருமாள்
கோவிலில் தற்போது திருப்பணி நடைபெற்றுவருகிறது. கோவில் திருப்பணிக்குழு,
கல்வெட்டுகள் உள்ள பழங்கற்களைப் புறக்கணிக்காமல் பாதுகாப்போடு வைத்திருக்கிறார்கள்
என்பது பாராட்டுக்குரிய ஒன்று. மூன்று கல்வெட்டுகளிலுமே, கலியுக ஆண்டு, சாலிவாகன
ஆண்டு (அதாவது சக ஆண்டு), மற்றும் அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி ஆண்டின் தமிழ்ப்பெயர்
ஆகியன தரப்பட்டுள்ளதால், கல்வெட்டின் காலத்தை ஆங்கில ஆண்டில் சரியாகக்
குறிப்பிடமுடிகிறது.
முதல்
கல்வெட்டின் காலம் கி.பி. 1872. பிரஜோத்பத்தி வருடம், பங்குனி மாதம், 16-ஆம் தேதி.
பனப்பட்டியிலிருக்கும் கரிய வரதராயப்பெருமாள் கோவிலின் கர்ப்பக்கிருக மண்டபத்தை
வள்ளியறச்சல் ஊரில் காணியுடைய ஆந்தை குல வம்சத்தில் உள்ள அயினாக்கவுண்டன் மகன்
கருமாண்டாக்கவுண்டன் மகன் இளச்சிய கவுண்டன் கட்டிவைத்தார் என்னும் செய்தியைக்
கல்வெட்டு தெரிவிக்கிறது.
இரண்டாம் கல்வெட்டின் காலமும் கி.பி. 1872. பிரஜோத்பத்தி வருடம், பங்குனி மாதம் 16-ஆம் தேதி.
இக்கோவிலின் கருட கம்பத்தை முகவனூரில்
காணியுடைய மணிய குலத்தைச்சேர்ந்த குப்பாண்டாக்கவுண்டன் மகன் நல்லிக்கவுண்டன் மகன்
நஞ்சப்ப கவுண்டன் நாட்டி வைத்தார் எனக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு
இரண்டு கற்களில் வெட்டப்பட்டுள்ளது. முதல் கல்லில் மூன்று வரிகளும், இரண்டாம்
கல்லில் மீதியுள்ள நான்கு வரிகளும் எழுதப்பட்டுள்ளன.
மூன்றாம்
கல்வெட்டின் காலம் கி.பி. 1874. ஸ்ரீமுக வருடம், பங்குனி மாதம், 10-ஆம் தேதி
வெள்ளிக்கிழமை. இக்கோவிலின் அர்த்தமண்டபத்தைப் பரஞ்சேர்வழி என்னும்
ஊரைச்சேர்ந்த செம்ப குல கோத்திரத்தில் உள்ள செல்லப்ப கவுண்டன் மகன் நஞ்சப்ப
கவுண்டன் மகன் மன்றாயன் பாளையத்தில் இருக்கும் நல்லிக்கவுண்டன்
என்பவர் கட்டிக்கொடுத்துள்ளார் எனக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்தக்கல்வெட்டு
இரண்டு கற்களில் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
கல்வெட்டுகளில் எழுத்துப்பிழைகள் உள்ளன. பிரஜோத்பத்தி வருடம் “பிறசோப்பதி” என்றும், கருட கம்பம் “கிறட
கம்பம்” என்றும், கர்ப்பக்கிருகம் “கெற்பகிறி” என்றும், அர்த்த மண்டபம்
“அற்த்தகிரி மண்டபம்” என்றும் எழுதப்பட்டுள்ளன
மேலே
குறிப்பிட்ட கல்வெட்டுகள் தவிர பழங்கல்வெட்டுகள் எவையேனும் தென்படுமா
எனத்தேடியதில், கோவில் வளாகத்தில் ஒரு துண்டுக்கல்வெட்டு கிடைத்தது. அது,
பழங்கோவிலின் அதிட்டானத்தில் இருக்கும் குமுதப்படையின் துண்டுப்பகுதி. அதிலிருந்த
நான்கு வரிகளில் இரண்டு வரிகள் மட்டுமே படிக்கக்கூடிய நிலையில் இருந்தன. அவற்றில்
செய்தி எதுவும் கிடைக்கவில்லை எனினும் கொங்குச்சோழ அரசனான விக்கிரம சோழன் பெயர் காணப்பட்டது.
கல்வெட்டின் காலத்தைக் கணிக்கவும், அதன் மூலம் கோவிலின் பழமையை அறியவும் இது
மிகவும் துணை நின்றது. இந்த விக்கிரம சோழன் மூன்றாம் விக்கிரம சோழனாக இருக்க
வாய்ப்பு மிகுதி. இவனுடைய ஆட்சிக்காலம் கி.பி. 1273 – 1305. எனவே, பனப்பட்டி
கரியவரதராசப்பெருமாள் கோவிலின் மூல வடிவம் ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்தது
எனக்கருத இடமுண்டு.
கல்வெட்டுகளில் வரும் வெள்ளாளர்கள் பரஞ்சேர்வழி, வள்ளியறச்சல், முகவனூர்
ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள். (இவ்வூர்கள் திருப்பூர்
மாவட்டம் காங்கயம் வட்டத்தில் அமைந்துள்ளன.) அவர்கள் வழியினர் தற்போது பனப்பட்டியில்
வாழ்கிறார்கள் என்பதும், அவர்களுடைய குலதெய்வக்கோயில்கள் பரஞ்சேர்வழியிலும்,
வள்ளியறச்சலிலும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை. கல்வெட்டில் வரும் முகவனூர்
தற்போது மோகனூர் என வழங்கப்படுகிறது என்பதாக அறிகிறோம்.
கல்வெட்டுகளின் பாடங்கள்
-------------------------------------------------
கல்வெட்டு எண்: 1. - இரண்டு கற்களில் இருந்தவற்றை இணைத்துப்படித்தது.
ஸ்ரீமது கலியுக சகாற்தம் 4975 சாலியவாகன ச(கா)
ற்தம் 1796 மேல்ச்செல்லா நின்ற ஸ்ரீமுகா வரு. பங்கினி மீ 10
தேதி சுக்கிறவாரம் பூச நச்செத்திறம் கூடிய சுபதினத்தில் பறஞ்சேற்வ(ழி)
காணி செம்பகுல கோத்திறத்திலுள்ள செல்லப்ப கவுண்டன் மகன்
நஞ்சப்ப கவுண்டன் மகன் மன்னாறயன் பாளையத்திலேயிறுக்கும் நல்லி
க்கவுண்டன் பணப்பட்டியிலேயிறுக்கும் கரியவறதறாயப்பெருமா(ளி)
ன் அ(ற்)த்தகிரி மண்டபங்கட்டிவைத்த உபயம் ஸ்ரீ வினாயகன் து(ணை).
கல்வெட்டு எண்: 2 - முழுக்கல்.
ஸ்ரீமது கலியுக சகாற்தம் 4973 சாலியவாகன சகா
ற்தம் 1794 மேல்ச்செல்லாநின்ற பிறசோப்பதி வரு.
பங்கினி மீ 16 தேதி வள்ளியறச்சல் காணி ஆந்தைகுல
வம்முசத்திலுள்ள அயினாக்கவுண்டன் மகன் கரு
மாக்கவுண்டன் மகன் யிளச்சிய கவுண்
டன் பணப்பட்டியிலிருக்கும் கரியவறதறாயப்பெரு
ள் கெற்பகிறி மண்டபங்கட்டி வைத்தது உபயம் உ
கல்வெட்டு எண்:3 - முதல் மூன்று வரிகள் - ஒரு கல்லில்;
மீதி நான்கு வரிகள் - இரண்டாவது கல்லில்.
ஸ்ரீமது கலியுக சகாற்தம் 4973 சாலிய
வாகன சகாற்தம் 1794 மேல்ச்செல்லா
நின்ற பிறசோப்பதி வரு. பங்கினி மீ 16 தேதி காணி
முகவனூரு மணிய குலம் குப்பாண்டாக்கவுண்டன் மகன்
நல்லிக்கவுண்டன் அவரிட மகன் நஞ்சப்ப கவுண்டன்
பனப்பட்டியிலிருக்கும் கரியவறதறாயப்பெருமாளுக்
கு கிறட கம்பம் நட்டி வைத்தது உபயம் உ
-------------------------------------------------
கல்வெட்டு எண்: 1. - இரண்டு கற்களில் இருந்தவற்றை இணைத்துப்படித்தது.
ஸ்ரீமது கலியுக சகாற்தம் 4975 சாலியவாகன ச(கா)
ற்தம் 1796 மேல்ச்செல்லா நின்ற ஸ்ரீமுகா வரு. பங்கினி மீ 10
தேதி சுக்கிறவாரம் பூச நச்செத்திறம் கூடிய சுபதினத்தில் பறஞ்சேற்வ(ழி)
காணி செம்பகுல கோத்திறத்திலுள்ள செல்லப்ப கவுண்டன் மகன்
நஞ்சப்ப கவுண்டன் மகன் மன்னாறயன் பாளையத்திலேயிறுக்கும் நல்லி
க்கவுண்டன் பணப்பட்டியிலேயிறுக்கும் கரியவறதறாயப்பெருமா(ளி)
ன் அ(ற்)த்தகிரி மண்டபங்கட்டிவைத்த உபயம் ஸ்ரீ வினாயகன் து(ணை).
கல்வெட்டு எண்: 2 - முழுக்கல்.
ஸ்ரீமது கலியுக சகாற்தம் 4973 சாலியவாகன சகா
ற்தம் 1794 மேல்ச்செல்லாநின்ற பிறசோப்பதி வரு.
பங்கினி மீ 16 தேதி வள்ளியறச்சல் காணி ஆந்தைகுல
வம்முசத்திலுள்ள அயினாக்கவுண்டன் மகன் கரு
மாக்கவுண்டன் மகன் யிளச்சிய கவுண்
டன் பணப்பட்டியிலிருக்கும் கரியவறதறாயப்பெரு
ள் கெற்பகிறி மண்டபங்கட்டி வைத்தது உபயம் உ
கல்வெட்டு எண்:3 - முதல் மூன்று வரிகள் - ஒரு கல்லில்;
மீதி நான்கு வரிகள் - இரண்டாவது கல்லில்.
ஸ்ரீமது கலியுக சகாற்தம் 4973 சாலிய
வாகன சகாற்தம் 1794 மேல்ச்செல்லா
நின்ற பிறசோப்பதி வரு. பங்கினி மீ 16 தேதி காணி
முகவனூரு மணிய குலம் குப்பாண்டாக்கவுண்டன் மகன்
நல்லிக்கவுண்டன் அவரிட மகன் நஞ்சப்ப கவுண்டன்
பனப்பட்டியிலிருக்கும் கரியவறதறாயப்பெருமாளுக்
கு கிறட கம்பம் நட்டி வைத்தது உபயம் உ
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக