மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 24 பிப்ரவரி, 2014

மருதூர்-திம்மம்பாளையம் கல்வெட்டுகள்
                                                      து.சுந்தரம், கோவை
         கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் செந்தில் குமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் காரமடைப்பகுதியில் தொல்லியல் கள ஆய்வுப்பணியில் அண்மையில் ஈடுபட்டனர். அது சமயம், காரமடைக்கருகில் மருதூரில் உள்ள பசுவேசுவரர் கோவிலைக் காண நேரிட்டது. அக்கோவிலில், கருவறை அடித்தளப்பகுதியில் கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. ஊர் மக்களிடம் இக்கோவிலைப்பற்றியும் கல்வெட்டுகள் பற்றியும் கேட்டறிந்ததில் கோவில் பழமையான ஒன்று என்றும், கல்வெட்டுகளைச் சிலர் வந்து பார்த்துப்போயுள்ளனர்; ஆனால், கல்வெட்டுகளில் என்ன செய்திகள் சொல்லப்பட்டன என்று இதுவரை ஊர் மக்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினர். கல்வெட்டின் ஒளிப்படங்கள்  எடுத்து ஆராய்ந்து பார்த்ததில், அவை தமிழகத்தொல்லியல் துறையினரால் 2003-ஆம் ஆண்டு படிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. நான்கு கல்வெட்டுகள் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன.

         தொல்லியல் சின்னங்களையும், கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தல், அதன்வாயிலாகத்தெரியவரும் வரலாற்றுச் செய்திகளை வெளிக்கொணர்தல், மற்றும் அத்தகைய தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க ஒரு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல் ஆகிய பணிமுயற்சிகளில்  நாங்கள் ஈடுபட்டுவருவதால் மருதூர் மக்களுக்குத் தம் ஊரில் அமைந்துள்ள கோவிலின் பழமை, கல்வெட்டுகள் சொல்லும் செய்திகளைத் தெரியப்படுத்தவே  இச்செய்திக்கட்டுரை.

         எங்கோ ஒரு மூலையில், ஒரு சிற்றூரில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கோவிலும் வரலாற்றுச்செய்திகளைத் தாங்கியிருப்பதைக்காண்கிறோம். அந்த வகையில், மருதூரும் இடம் பெற்றுள்ளது. தமிழகத் தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்ட கல்வெட்டுச் செய்திகளிலிருந்து பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன.

    அ) இக்கோவில் கல்வெட்டுகள், கொங்கு நாட்டை ஆட்சி செய்த                   கொங்குப்பாண்டியர்களில் ஒருவரான சடையவர்மன் சுந்தரபாண்டியன்             காலத்தைச் சேர்ந்தவை. சுந்தரபாண்டியனின் ஆட்சிக்காலம் கி.பி. 1285            கி.பி. 1305 ஆகும். எனவே, இக்கோவில் எழுநூறு ஆண்டுப்பழமை             வாய்ந்தது என அறிகிறோம்.

    ஆ) தற்போது பசுவேசுவரர் என்று வழங்கும் இறைவனின் (சிவன்) பெயர் கல்வெட்டில் மருதவனப்பெருமாள் எனக்குறிக்கப்படுகிறது.
கட்டுரை ஆசிரியர் குறிப்பு: பழங்காலத்தில், இப்பகுதி மருதமரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாக இருந்திருக்கலாம். எனவே, இறைவன் பெயரும் மருதவனப்பெருமாள் என்று அமைந்திருக்கக்கூடும். இந்த ஊரின் பெயரும் “மருதூர் என அமைந்துள்ளதை நோக்குமிடத்து இக்கருத்து வலுப்பெறுகிறது.
    இ) இவ்வூரில் பானை வனையும் குயவர் மரபினர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) இக்கோவிலுக்கு சந்தியா தீப விளக்கு எரிப்பதற்காகப் பணம் பத்து கொடையாக அளித்துள்ளார். குயவர் மரபினர் அக்காலத்தே “வேட்கோவர்  என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர். மற்றொரு வேட்கோவர், செயபாலன் வயிரதேவர் என்பவர் நூறு பணம் கொடையாக அளித்துள்ளார். கொடை எந்த அறச்செயலுக்காக என்பது தெரியவில்லை. கல்வெட்டு, “காணியுடைய வேட்கோவரில்  எனக்குறிப்பிடுவதால், இவ்வூரில் இருந்த வேட்கோவர் நில உரிமையுடைவர்களாக இருந்திருக்கிறார்கள் எனத்தெரியவருகிறது.
கட்டுரை ஆசிரியர் குறிப்பு: அக்காலத்தே, ஊர் நிலங்கள் யாவும் அரசின் உடைமையாக இருந்தன. அரசு, ஒரு சிலருக்கு நிலம் காணியாக வழங்கி உரிமையாக்கும். நிலத்தின் விளைச்சலிலிருந்து அக்காணியாளர்கள் அரசுக்கு நிலவரி செலுத்துவர்.
    ஈ)  ஒரு துண்டுக்கல்வெட்டில் “கொம்மை காமிண்டர்களோம் என்னும் தொடர் வருகின்றது. “காமிண்டர்  என்பது  நிலக்கிழார் பட்டத்தைக்குறிக்கும். கொம்மை என்பது அந்த நிலக்கிழார்களின் (வேளாளர்கள்) ஒரு குலப்பிரிவைக்குறிப்பதாகலாம்.
    உ)  கல்வெட்டில் “குளிகை என்னும் தொடர் வருகின்றது. இது அக்காலத்தே வழங்கிய ஒரு வகை நாணயத்தைக்குறிக்கும்.
    ஊ)  சந்தியா தீப விளக்கு எரிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பணத்தைக் கோவிலின் பணியாளர்களான சிவப்பிராமணர்கள் பெற்றுக்கொண்டு ( கல்வெட்டு, “கைக்கொண்டோம்”  எனக்குறிப்பிடுகிறது.) விளக்கெரிக்கும் அறச்செயலின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். கல்வெட்டில், “திருநட்ட னான சித்திரமேழிப்பட்டன்”  மற்றும் “ விக்கிரமசோழ பட்டன் ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன.




புதிய கல்வெட்டு :-  தொல்லியல் துறை 2003_ஆம் ஆண்டு தொகுத்த கல்வெட்டுகளைத்தவிர ஒரு புதிய கல்வெட்டுப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் தெரிய வரும் செய்தி பின்வருமாறு.

அ) இக்கல்வெட்டும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச்சேர்ந்தது.
     ஆ) மூடுதுறை என்னும் ஊர்ப்பகுதி கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. மருதூரின் சுற்றுப்பகுதியில் மூடுதுறை அமைந்திருக்கக்கூடும்.

   இ) கோவிலுக்கு இரு கலம் நெல் கொடை அளிக்கப்பட்டிருக்கிறது. கொடை அளித்தவர் கைக்கோளர் பிரிவைச்சேர்ந்தவராக இருக்கக்கூடும்.


திம்மம்பாளையம் கல்வெட்டு: 

மேற்படி ஆய்வுக்குழுவினரால் திம்மம்பாளையம் மாகாளியம்மன் கோவிலின் வாயில்படி அருகே ஒரு துண்டுக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. கல்வெட்டு முழுமையாக இல்லை. உடைந்த கல்லில் பெரிய எழுத்துகளாலான ஆறுவரிகள் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ளது. 1915-ஆம் ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு. ஏறத்தாழ நூறாண்டுப்பழமையான ஒன்று. கல்வெட்டின் பாடம் (வாசகம்) பின்வருமாறு:

           1915 வரு
           சூலை மீ
           2 தேதி
           ஊ . நஞ்
           சுண்ட
           கவுண்

தற்போது ஊர் மணியமாக இருப்பவர் புஜங்க கவுண்டர் என்பவர் ஆவார். அவருடைய பாட்டனார் நஞ்சுண்ட கவுண்டர் என்பவர் இங்கு அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலையும், அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவிலையும் புதுப்பித்துக்கட்டினார் என்பது ஊர்ச்செய்தி. கல்வெட்டு, இவ்விரு கோவிலகளின் திருப்பணி நடைபெற்ற காலம் 1915, ஜூலை 2-ஆம் தேதி என்பதைத்தெரிவிக்கிறது.


        

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

புதன், 19 பிப்ரவரி, 2014

கானூர் பாறைக்கல்வெட்டு
                                                       து.சுந்தரம், கோவை.


         தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் கல்வெட்டுகள் அவ்வவ்வூர்களில் அமைந்துள்ள கோவில்களின் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகியவற்றின் சுவர்ப்பகுதிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மைக் கல்வெட்டுகள் சில, ஊர்ப்பகுதியில் கோவில்களின் முன்புறத்திலோ, எல்லைப்புறத்திலோ அல்லது ஏதேனும் வேளாண் நிலத்திலோ ஒரு தனிப்பாறைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. மற்றும் சில கல்வெட்டுகள், கோவில் மண்டபத்தூண்கள், கருடகம்பம் எனக் கொங்குப்பகுதியில் அழைக்கப்படும் விளக்குத்தூணின் மண்டபப்பகுதிகள், கோவில் படிக்கட்டுகள், ஏரி குளங்களின் மதகுகள் போன்றவற்றிலும் பொறிக்கப்படுகின்றன.

         இக்கட்டுரை ஆசிரியரான கல்வெட்டு ஆராய்ச்சியாளர், அவிநாசி  அருகில் இருக்கும் கருவலூர்ப்பகுதியில் ஆய்வுக்காகச் சென்றிருந்தபோது, மேலே குறிப்பிட்ட தனிப்பாறைக் கல்வெட்டு ஒன்றைக்காண நேரிட்டது. கருவலூருக்கு மிக அருகில் மூன்று அல்லது நான்கு கி.மீ. தொலைவில் உள்ள கஸ்பா கானூர் என்னும் சிற்றூரில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் மண் படிந்த நிலையில் ஒரு பாறைக்கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அண்மையில் இருக்கும் கருவலூர் பெருமாள் கோவிலில் ஒரே ஒரு கல்வெட்டு, தொல்லியல் துறையினரால் 2003-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்பகுதியில் இந்தத் தனிப்பாறைக் கல்வெட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 2006-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டிருக்கும் “கோவை மாவட்டக்கல்வெட்டுகள்”  நூலில் இந்தத் தனிக்கல்வெட்டுப்பதிப்பு காணப்படவில்லை. அவிநாசியைச்சேர்ந்த கல்வெட்டு அறிஞர் பேராசிரியர் மா. கணேசன் அவர்கள் இந்தக்கல்வெட்டைப் படித்திருக்கிறார். ஆனாலும், இந்தக் கல்வெட்டைப்பற்றிய விவரங்கள், கல்வெட்டில் இருக்கும் செய்திகள், வரலாற்றுச் சின்னமாகத் தங்கள் ஊரில் இக்கல்வெட்டு அமைந்திருக்கும் சிறப்பு ஆகியவை பற்றி இச் சிற்றூர் மக்களுக்குத் தெரியவரவில்லை. எனவே, இப்போது கல்வெட்டு விவரங்கள் இவ்வூர் மக்களைச் சென்றடைந்தால், ஊரார் வரலாற்றை அறிந்துகொள்வதோடு, தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வும் பெறுவர் என்னும் காரணத்தால் இக்கட்டுரை எழுதப்படுகிறது. கல்வெட்டு வாசகங்களை ஆய்வு செய்ததில் கீழ்வரும் செய்திகள் அறியப்படுகின்றன.



         கல்வெட்டு மொத்தம் பதினெட்டு வரிகளைக் கொண்டுள்ளது. எல்லா வரிகளும் குறைந்த சிதைவுகளோடு, படிக்கக்கூடிய நிலையில் அமைந்துள்ளது. கல்வெட்டு, கொங்குச்சோழ அரசனான வீரராசேந்திரனின் இருபத்தாறாவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. எனவே, கல்வெட்டு, கி.பி. 1233-ஆம் ஆண்டைச்சேர்ந்தது. 780 ஆண்டுகள் பழமையுடையது. கருவலூரில் இருந்த  வீரராசேந்திர ஈசுவரம்”  என்னும் பெயரமைந்த சிவன் கோவிலுக்கு, கோவிலைச்சேர்ந்த சிவனடியார் துறவிகளில் ஒருவரான ஈசுவர தேவன் என்பவர், கோவிலின் உச்சிச் சந்தி வழிபாட்டுக்கு வேண்டிய தினை அரிசி நாள்தோறும் ஒரு சோழிய நாழி  அளவு கிடைக்குமாறு முதலீடாக நான்கு அச்சுக்காசுகள் கொடையாக அளித்துள்ளார். இந்த நான்கு அச்சுக்காசுகளைப் பெற்றுக்கொண்ட கோவில் சிவப்பிராமணர் திருநட்டன் என்னும் சித்திரமேழிப்பட்டன் என்பவர் இந்த தன்மத்தைச் சூரியனும் சந்திரனும் உள்ளவரை தொடர்ந்து நிறைவேற்றுவதாக உறுதியளிக்கிறார். இந்தத் தன்மம் நடைபெறுவதைக் கோவிலின் நிர்வாகத்தைச் சேர்ந்த பன்மாகேசுவரர் என்பார் கண்காணித்து வருவர்.
          
        கல்வெட்டு, “ கருவலூர் ஆளுடையார் வீரராசேந்திர ஈசுவரமுடையார்
கோயில் “ என்று குறிப்பிடுகிறது. இதிலிருந்து, கருவலூரில், அரசனின் பெயரால் சிவன் கோவில் கட்டப்பட்டிருந்தது தெரியவருகிறது. கருவலூரில் உள்ள பெருமாள் கோவில் கல்வெட்டு பெருமாள் கோவிலை “ வீரராசேந்திர விண்ணகரம் “ எனக்குறிப்பிடுவதால் அரசன் வீரராசேந்திரன் தன் பெயரால் சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும்  ஆக இரண்டு கோவில்களைக் கட்டியுள்ளான் என அறிகிறோம். தற்போது, கருவலூரில் உள்ள சிவன் கோவிலில் கல்வெட்டு எதுவும் இல்லாத காரணத்தால் கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் சிவன் கோவிலும் தற்போதுள்ள சிவன் கோவிலும் ஒன்றுதானா என்பது ஆய்வுக்குரியது. கோவில்களில் தங்கி, இறைத்தொண்டு செய்யும் சிவனடியார்களான துறவிகளைக் கல்வெட்டு, கும்பிட்டிருக்கும் தவசியர் எனக்கூறுகிறது. கோவில் பூசைகள், ஆறு சந்திக்காலங்களில் நடைபெற்று வந்தன. கல்வெட்டுகள் அவற்றை, சிறுகாலைச் சந்தி (சூரிய உதய காலத்தில் செய்யும் பூசை), காலைச்சந்தி, உச்சிச்சந்தி, அந்தி (மாலைச்சந்தி), இராக்காலம், அர்த்தயாமம் (நள்ளிரவு) எனக்குறிப்பிடுகின்றன. கோவில் வழிபாடுகளுக்கு, அரிசி, கண்பு(கம்பு), தினை ஆகிய தானியங்களும், காய்கறிகள், அடைக்காய்(பாக்கு), இலை(வெற்றிலை) ஆகியவையும், மற்றும் எண்ணை ஆகியனவும் கொடையாக அளிக்கும் வழக்கம் இருந்தது.



இங்கே, கோவில் தவசி, தினை அரிசியைக் கொடையாக அளித்துள்ளார். கொடை நிவந்தத்தை நடத்த ஒப்புக்கொண்ட கோவில் பிராமணர் கோவிலில் பணி செய்யும் உரிமை பெற்றவர் என்பது “ காணி உடைய சிவப்பிராமணன் “ என்னும் கல்வெட்டுத் தொடர் வாயிலாக அறிகிறோம். மேலும் சிவப்பிராமணர்
“காசுவ கோத்திரத்தைச்சேர்ந்தவர் எனக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. கல்வெட்டுகளில் பெரும்பாலும் சிவப்பிராமணர்களின் கோத்திரத்தைக் குறிப்பிடுவது  வழக்கம். இங்கு, “காசுவ கோத்திரம் என்பது “காஸ்யப  கோத்திரத்தைக்குறிக்கும். கொடையாக அளிக்கப்படும் தினைத் தானியத்தின் அளவு கல்வெட்டில் “சோழிய நாழி”  எனச் சுட்டப்படுகிறது. நாழி என்பது அக்காலத்தே இருந்த முகத்தல் அளவைக்குறிக்கும் சொல்லாகும். சோழிய நாழி என்பது அப்போது வழக்கில் இருந்த அளவுக்கருவியின் பெயரைக்குறிக்கும்.   நாராய நாழி, காண நாழி, பரகேசரி நாழி “ என்பன போன்ற பலவகை நாழிக்கருவிகள் அக்காலத்தே வழக்கில் இருந்தன. “அச்சுஎன்பது ஒருவகை நாணய வகையாகும்.

         இறுதியாக, கொடை நிவந்தமானது தடையின்றி நெடுங்காலம் நடைபெறவேண்டும் என்பதற்காகக் கோவில்களுக்கு அளிக்கப்படும் நிவந்தங்களைக் கண்காணிப்பதற்காகப் “பன்மாகேச்வரர்கள்”  என்னும் சிவனடியார்கள் நியமிக்கப்பெற்றிருந்தனர்.

         ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த, கோவில் சார்ந்த வாழ்க்கை நிலையைச் சொல்லுகின்ற ஒரு கல்வெட்டு தம் ஊரில் இருப்பதற்காகக் கானூர் மக்கள் பெருமை கொள்ளும் அதே வேளையில், அக்கல்வெட்டை முறையாகப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் எண்ணத்தில் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.



 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.






மறையூர் தென்காசி நாதர் கோயில் பாறைக்கல்வெட்டு

       உடுமலை-மூணாறு பாதையில் கேரளப்பகுதியில் அமைந்துள்ளது மறையூர். இங்குள்ள தென்காசி நாதர் சிவன் கோயிலில் ஒரு பாறைக்கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டை ஆய்வு செய்ததில் தெரியவரும் செய்திகளை இங்கு பார்ப்போம். இக்கல்வெட்டு ஒரு சரிவான பெரிய பாறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. பாறை,  கல்வெட்டு வரிகள் முழுதும் மறைக்கப்படாமல் தெரியுமாறு, சுவரோடு சுவராகப் பதிக்கப்பெற்றுள்ளது. வரிகளைப்பிரிக்கும் வகையில் கிடைக்கோடுகள் ( Horizontal Lines) செதுக்கப்பட்டு, அக்கோடுகளுக்கிடையில் எழுத்துகள் அழகாகப்பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துகள் சற்றே பெரிதாகவும் காணப்படுகின்றன.

       கல்வெட்டின் இரு புறமும் வணிகக்கல்வெட்டுக்கே உரிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. விளக்கின் அடிப்பீடத்தைப்போன்ற வடிவமும்,அதற்குமேல் தண்டுப்பகுதியும்,உச்சியில் சூலம் போன்ற பகுதியும் செதுக்கப்பட்டுள்ளன. இது புறச்சான்று. அகச்சான்றாக, கல்வெட்டு வரிகளில் “அங்ககாறன்என்னும் சொற்றொடர் வருகின்றது. நானாதேசிகள்,பதினெண்விஷயத்தார்(பதினெண்பூமியார்),ஐநூற்றுவர் ஆகிய பல வணிகர் குழுக்கள் தென்னாடு முழுவதும் இயங்கி வந்துள்ளன. இவ்வணிகர் குழுக்கள் எல்லாவற்றுக்கும் பொது மையமாக நிர்வாகச்சபை இருந்த இடம் கருநாடகப்பகுதியில்  அய்ஹொளெ என்னும் பகுதியாகும். தமிழ்க்கல்வெட்டுகளில் இது ஐயப்பொழில்,அய்யம்பொழில் என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. அய்ஹொளெ வணிகர் சபை, ஆங்கிலத்தில் Guild of  Merchants  என்பதற்கொப்பான ஒரு மையச்சபையாகும். தமிழ்க்கல்வெட்டுகளில் இச்சபை “சமையம்”, “சமையத்தார்என்னும் தொடர்களால் குறிக்கப்படுகிறது. இச்சபையே, நிவந்தங்கள்,கொடைகள் ஆகியன குறித்து ஆணைகளைப்பிறப்பிக்கும். இந்த ஆணைகள், “சமையக்கணக்கர்களால் எழுதப்பட்டன.

       மேற்சொன்ன வணிகர் குழுக்களில் வீர பணஞ்சியர், கவறையர்,அங்ககாறர் ஆகிய பிரிவினர் இருந்தனர் என்பது கருநாடகப்பகுதியில் உள்ள கன்னடக்கல்வெட்டுகளிலும், தமிழ்க்கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புகளிலிருந்து தெரியவருகிறது. சான்றாக, சாம்ராஜ் நகர் பகுதியில் கெம்பனபுரம் ஊர் தமிழ்க்கல்வெட்டில், கவறையீசுவரமுடையார் கோயிலுக்கு விளக்கெரிக்கக் கொடை அளித்துள்ள செய்தி காணப்படுகிறது.

    
      கிருஷ்ணராஜ நகர் தமிழ்க்கல்வெட்டு ஒன்று கங்கமண்டலதேசி என்னும் அங்ககாறன், அங்ககாறீசுவரம் என்னும் கோயிலை எடுப்பித்தான் எனக்கூறுகிறது. இக்குறிப்புகளின்படி, அங்ககாறன் என்னும் வணிகர் பிரிவு இருந்தது உறுதியாகிறது. மறையூர் கல்வெட்டில், பெருமாள் நாயன் அங்ககாறன் என்பவன் பெயர் குறிப்பிடப்படுகிறது. அவன் ஏதேனும் ஒரு கொடை அளித்திருக்கலாம். அது பற்றிய எழுத்துகள் படிக்க இயலாதபடி உள்ளன. கல்வெட்டில், மலை மிகை/மிசை நாடு குறிப்பிடப்படுகிறது. கேரளப்பகுதி, தமிழ்க்கல்வெட்டுகளில் “மலை நாடு”, “மலை மண்டிலம்எனக்கூறப்படுகிறது. எனவே கேரளப்பகுதியான மறையூர்க்கல்வெட்டில் “மலை மிகை/மிசை நாடுஎன வருவது பொருந்துகிறது. மேலும், மறையூர், கல்வெட்டில் “மரவூர்என்று குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் இறைவனை திருநாஞ்சியப்பன்எனக்கல்வெட்டு கூறுகிறது.  காரையாற்றைச்சேர்ந்த பிள்ளையான் இராசாக்கள் நாயனான கண்டன் வுச்சி நாராயணதேவன் என்பான் இக்கோயிலுக்கு தோப்பு ஒன்றைக்கொடையாகக்கொடுத்தான் என்பது கல்வெட்டுச்செய்தியாகும். கண்டன் என்னும் பெயர், சேர நாட்டில் மிகுதியாகப்பயின்ற பெயராகும். கண்டன் பழுவேட்டரையர் என்னும் பெயரை வைத்து, பழுவேட்டரையர்கள் சேர மரபினராகலாம் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுவதை நோக்குக.
       கல்வெட்டின் இறுதியில், ஓம்படைக்கிளவி என்னும் பகுதியில், இந்த தர்மத்தைக்காப்பவன் புண்ணிய பலனைப்பெறுவான் எனக்குறிப்பது வழக்கம். அது போலவே, இக்கல்வெட்டிலும் வருவதைப்பார்க்கிறோம். “இந்தத்தோப்பு ரக்‌ஷிப்பானொருவன் என்பது கல்வெட்டுத்தொடராகும்.
                 கல்வெட்டின் காலத்தைக்கணிக்கப் போதுமான சான்று இல்லை. காரணம், கல்வெட்டுப்பாடத்தில் அரசர்களின் பெயர்களோ, கலியுக ஆண்டு, சாலிவாகன ஆண்டு ஆகியவற்றின் குறிப்புகளோ காணப்படவில்லை. எனினும், கல்வெட்டின் எழுத்தமைதியைக்கொண்டு, இக்கல்வெட்டின் காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டுக்குப்பிந்தையதாகலாம் எனக்கருத இடமுண்டு.  எனினும், கல்வெட்டில் “இராசாக்கணாயனானஎன்னும் தொடர், இக்கல்வெட்டின் காலத்தைக்காண உதவுகிறது. “இராசாக்கள் நாயன் என்பது  மாறவர்மன் விக்கிரமபாண்டியனின் சிறப்புப்பெயராகும். இவ்வரசன் அரியணை ஏரிய ஆண்டு கி.பி. 1282-83 என வரலாற்றுக்குறிப்பு உண்டு. கொடை கொடுத்தவன் இவ்வரசனின் அதிகாரியாக இருக்கலாம். இக்குறிப்பின்படி, கல்வெட்டின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு எனக்கருதலாம்.
          முடிவாக, மேற்குறித்த செய்திகள், கல்வெட்டின் முதலாய்வு மூலம் தெரியவருகின்றவையாகும். இச்செய்திகளை உறுதிப்படுத்தவும், தெளிவாகத்தெரியாத பகுதிகளில் உள்ளவற்றை  வெளிக்கொணரவும் இக்கல்வெட்டு மீளாய்வு செய்யப்படவேண்டும்.

மறையூர் கல்வெட்டு பாடம்

  1. ஸ்வஸ்திஸ்ரீ மலை மிசை நாட்டு மரவூர் திருநாஞ்சியப்பற்கு
  2. ஸ்வஸ்திஸ்ரீ மேல்(வகை) நாட்டில்
  3. காரையாற்றில் பிள்ளையான்
  4. இராசாக்கணாயனான மலை
  5. கொண்ட தேச ............  கொ
  6. ண்ட கண்டன் வுச்சிநாராயணதேவன்
  7. வைப்பித்த திருத்தோப்பு ...........
  8. ப பொ    .... ........   பெரு
  9. மாள் நாயனங்ககாறன் வ .......
  10. இந்தத்தோப்பு ரக்‌ஷிப்பானொருவன் திருநா ......  பல
  11. (நி)வந்தக(ளு)க்கும் கறியமுது நடத்திநின்ற .....    போகவும்



வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

வலங்கை,இடங்கை சில குறிப்புகள்



      வலங்கை இடங்கைப்பிரிவுகள் எப்போது தோன்றின, எந்தச்சூழ்நிலையில் தோன்றின, இரு பிரிவுகளும் எவ்விதம் வேறுபட்டுச்செயல்பட்டன என்பவை சரியாக அறியப்படவில்லை. ஆனாலும் வழிவழி வந்த செய்திகளைக்கொண்டு திரு,குரோல் (Crole)  என்பவர் குறிப்பிடுவது: கரிகாலச்சோழன், இரு பிரிவுகளுக்கும் முறையே தொண்ணூற்றெட்டுக்குடிகளை (Tribes)  ஒதுக்கி அவர்களுக்குத்தனித்தனியே கொடிகளையும், அவர்களுடைய விழாக்களிலும், ஈம நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்திக்கொள்ளத் தனித்தனியே இசைக்கருவிகளையும் அமைத்துக்கொடுத்தான். இந்த வேறுபாடுகள், தொடக்கத்தில் அரசியல் காரணமாக ஏற்பட்டன. அல்லது, இரு சாராரிடையே பூசல்கள் எழாவண்ணம் தடுக்கவும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இவையே, சில நூற்றாண்டுகளாகப்பிரச்சினைக்குரிய கலகங்களுக்கான, கிள்ர்ச்சிகளுக்கான மூலகாரணங்களாக அமைந்துவிட்டன. இவ்வுட்பிரிவுகள் பற்றிய விரிவான செய்திகள் Madras Manual of Administration Vol-III   நூலில் காணலாம்.

      வலங்கைப்பிரிவினருள் அடங்கும் சில குடிகள் வருமாறு:
      வேளாளன்,கோமட்டி,சாலியன்,கன்னடியன்,கள்ளிறக்குவோர்,பறையர்
      இடங்கைப்பிரிவினருள் அடங்கும் சில குடிகள் வருமாறு:
      பள்ளி,செட்டி,கம்மாளர்,சக்களர் (Chuckler)
எம்.ஸ்ரீநிவாச அய்யங்கார் தமது ‘தமிழர் ஆய்வு’  நூலில், இவ்விரு பிரிவினருக்கிடையே  நிலவிய பகைமை தோன்றியதற்கான மூலத்தைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

      இப்பிரிவுகளைப்பற்றிய பண்டைய செய்திகள் நமக்கு இலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவுமே தெரிய வருகின்றன. மிகப்பழமையான குறிப்பென்று சொல்லவேண்டுமானால், முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டுகளில் ஒன்றையே சுட்டவேண்டியிருக்கும். அதில் வலங்கைப்பிரிவு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ‘தொண்டைமண்டல சதகம்என்னும் நூலில், ‘கண்ணாளர் குறும்படக்கி என்னும் குறிப்பு உள்ளது. உழவுத்தொழில் செய்த வெள்ளாளரும், கலைத் தொழில்நுட்பத்தினரான (Artisans) கம்மாளரும் நட்புடன் இருந்திருக்கவில்லை என்பது இதனால் புலப்படுகிறது. உழவருக்கு வேண்டிய தொழிற்கருவிகளைச்செய்து கொடுக்கும் நிலையில் இருந்ததால் கம்மாளர் என்போர் உழவர்களின் பணிமகன்களே (Servants) என்று உழவர் எண்ணித் தம் மேலாதிக்கத்தைக் காட்டியிருக்கவேண்டும்.

      கி.பி.1893-ஆம் ஆண்டுக்கல்வெட்டுத்தொகுதியில் உள்ள கல்வெட்டு எண் 562, 1905-ஆம் ஆண்டுத்தொகுதியில் உள்ள கல்வெட்டு எண் 151, மற்றும் தென்னிந்தியக்கல்வெட்டுகள் தொகுதி மூன்றில் உள்ள பசுபதீசுவரம் கல்வெட்டு ஆகிய கல்வெட்டுகளிலிருந்து உணரக்கூடிய செய்தி, கம்மாளர்கள் சமுதாயச்சூழ்நிலையில் உரிமைக்குறைபாடுகளைச் (Social disadvantages) சந்தித்தார்கள் என்பதுதான். மேற்சொன்ன கல்வெட்டுகளில், கம்மாளர்கள் சில வரிசைகளை (மரியாதைச்சின்னங்களை)ப் பெற்றார்கள் என்னும் செய்தி சொல்லப்படுகிறது. அவ்வரிசைகளாவன:
1.        காலில் செருப்பணிந்து வெளியே செல்லலாம்.
2.        பேரிகை (drums)  கொட்டவும், சங்கு ஒலிக்கவும் அனுமதி.
3.        ஓடு வேய்ந்த வீடுகள் கட்டிக்கொள்ளலாம்.
4.        வீடுகளுக்கு இரண்டு வாசல்கள் அமைத்துக்கொள்ளலாம்.
இவ்வரிசைகளை, அரசனுடைய சிறப்பு ஆணையால்தான் பெறமுடிந்தது. அதே சமயம், வலங்கைப்பிரிவினர் படைப்பிரிவுகளில் உயர்பதவிகளைப்பெற அனுமதிக்கப்பட்டனர். வலங்கைப்படைப்பிரிவுகள் (Regiments)  மிகுதியும் இருந்தன. இது முதலாம் இராசராசன் காலத்தில்.

      கவிச்சக்கரவர்த்தி கம்பரும் தம் ‘ஏர் எழுபது’  நூலில், ஏழு பாடல்களில் கைவினைக்கலைஞர்களை (artisan) ப்புகழ்ந்து பாடியுள்ளார். உழவர்பற்றிக்குறிப்பிடவில்லை. எனவே, வலங்கை,இடங்கை வேறுபாடுகள் அல்லது பகைமை பெரும்பாலான அளவில் உழவுத்தொழிலை மேற்கொண்ட வெள்ளாளர்களுக்கும், தொழில் வினைக்கலைஞர்களான கம்மாளர்களுக்கும் இடையில்தான் மிகுதியாக இருந்தன என அறியலாம். வலங்கை,இடங்கை ஆகிய இரு பெயர்ப்பிரிவுகள் ஏற்பட்டதே  இந்த இரு பிரிவு மக்களும் தம் சமூக வேறுபாடுகளை அரசன் முன் வைத்துத்தீர்வுக்கு அணுகியபோதுதான். இயல்பாகவே, அரசன் இவ்விரு முறையீட்டாளர்களையும் தன் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருத்தி விசாரணை செய்ததுதான் பிரிவுப்பெயருக்குக்காரணமாய் அமைந்திருக்கும். இந்த முறையீடுகளும், அரசன் தீர்ப்பும் காஞ்சியில் நடந்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது. காஞ்சியில்தான் இந்த வலங்கை,இடங்கை வேறுபாடுகள் மிகுதியாக அடையாளம் காணப்படுகிறன. வலங்கை-இடங்கைக்கோயில்கள், வலங்கை-இடங்கை மண்டபங்கள்,வலங்கை-இடங்கை நடனப்பெண்டிர் எனப்பலவகைச்சான்றுகளைப்பார்க்கிறோம். தீர்வு சொன்ன அரசன் இன்னார் எனத்தெரியவில்லை. கல்வெட்டுகளில் இவ்விருவகைப்பிரிவுகள் சுட்டப்பட்டாலும் அவற்றில் ஒவ்வொன்றிலும் அடங்கியிருந்த 98 உட்பிரிவுகள் விளக்கப்படவில்லை. 98 இடங்கைச்சாதியரும் தம்முள் நிலவும் ஒற்றுமையை வலுப்படுத்தும் முகத்தான், தமக்குள் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டனர். இது நடந்த காலம் மூன்றாம் குலோத்துங்கனின் 40-ஆவது ஆட்சியாண்டாகும். (கி.பி.1218).
ஒரு கால கட்டத்தில், தாழ் நிலையில் இருந்த உட்பிரிவினர் சிலர் வலங்கை,இடங்கை ஆகிய இரு வகையினருமே கோயில்களுக்குக்கொடையளிக்கக்கூடாது எனத்தடை செய்யப்பட்டிருந்தனர். முதலாம் தேவராயரின் மகனான விஜய பூபதிராய உடையார் என்னும் அரசன், திருவண்ணாமலையில் இருக்கும் இடங்கை,வலங்கையார் இரு பிரிவினருமே கோயிலுக்குக்கொடை அளிக்கலாம் என ஆணை பிறப்பித்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. (க.வெ.எண்: 564/1902).


----  உதவிய நூல் : இந்தியத்தொல்லியல் ஆய்வுத்துறை ஆண்டறிக்கை 1920-21.

மேலும் ஒரு சில செய்திகள்:

காஞ்சிபுரத்தில், இடங்கைப்பிரிவினர் தேரோட்டத்திருவிழா ஏற்பாடு செய்கின்றனர். அப்போது, தேர்த்திருவிழாவை நிறுத்த எண்ணிய வலங்கைப்பிரிவினர் ஒரு மந்திரவாதியின் உதவியால் நிறுத்திவிடுகின்றனர். இதன் எதிர்ச்செயலாக, இடங்கைப்பிரிவினர் மற்றொரு மந்திரவாதியின் உதவியால், அவன் மனைவியைப்பலிகொடுத்து மீண்டும் தேரை ஓடச்செய்கின்றனர். உதவிய மந்திரவாதியைத்தங்கள் சாதிப்பிள்ளை எனக்கூறி அவனுக்குச்சில உரிமைகளை வழங்கியுள்ளனர் இடங்கைப்பிரிவினர். அந்த இடங்கைப்பிரிவினருள் ஓர் இனமாகத் தேவேந்திரப்பள்ளரும் குறிக்கப்ப்பட்டுள்ளனர்.

செங்குந்தர் வெற்றிப்பட்டயம் என்னும் பட்டயத்தில், வலங்கை-இடங்கை வகுப்பினர்  வழக்கு ஒன்றைப்பற்றிய செய்தி கூறப்படுகிறது.. அதில், எழுகரை நாடு படையாட்சி, கம்மாளர், நகரத்தார், பள்ளர் (பழமர்), ஆகியோர் இடங்கைப்பிரிவினராகச்சுட்டப்பெறுகின்றனர்.

வலங்கை உய்யக்கொண்டார் என்பவர் சோழ அரசகுலத்தொடர்புடைய போர் வீரர்களாவர். இவரே பின்னாளில் நாடார் குலப்பிரிவினராக அறியப்படுகிறார்கள். இவர்கள் காளியைக்குலதெய்வமாகக்கொண்டவர்கள்.
ஐநூற்றுவர் (வணிகர்) இவர்களுக்குப்பலவகையான சிறப்புகளைச்செய்தனர். ஐநூற்றுவர் தம்தோள்களில் இவர்களைத்தூக்கிச்சுமந்ததால் இவர்கள்  “செட்டி தோளேறும் பெருமாள்”  என்னும் சிறப்புப்பெயர் பெற்றனர். இக்குறிப்பு வலங்கை மாலை நூலில் காணப்படுகிறது.
ஆங்கிலக்குறிப்புகளிலிருந்து தமிழாக்கம் :    து. சுந்தரம்,
                                           கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
                                           கோவை.

                                           அலை பேசி : 94449-39156
கோவை-பேரூர் தமிழ்க்கல்லூரி
 கீரணத்தம் தெய்வசிகாமணி கவுண்டர்-மருதம்மாள் நினைவு அறக்கட்டளை
சிறப்புச்சொற்பொழிவு முனைவர் இரா.பூங்குன்றன்,  கல்வெட்டறிஞர்.
தலைப்பு : கொங்கு நாட்டுக்கோயில்கள்

                                                                  கட்டுரை வடிவம் :  து.சுந்தரம்,கோவை


கோயில் கட்டும் மரபு சங்ககாலம் தொடக்கம். ஆனைமலையில் கல்பதுக்கை ஒன்றில் கோயில் கருவறை போன்ற சதுர அமைப்பு உள்ளது. மாமல்லபுரத்தில் அண்மையில் முருகன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்முருகன் கோயில் பற்றிப்பல்லவமன்னன் தந்திவர்மனின் கல்வெட்டில் குறிப்பு காணப்படுகிறது. தமிழகக்கோவில்கள் கடவுள் வழிபாட்டிற்காக மட்டும் அமைந்தவை அல்ல. மக்கள் சமுதாயத்துக்குப்பயன் தருகின்றவகையில் அவை இயங்கின. கோவில் பண்டாரங்கள் மக்களுக்குக் கடன் வழங்கியுள்ளன. நாட்டில் பஞ்சம் நிலவிய காலங்களில் கோவில் நகைகள் பயன்பட்டிருப்பதைச்செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அந்த நகைகளை மக்களே மீண்டும் கோவிலுக்குத்திருப்பியளித்தனர். கோவில்கள் எத்துணை இன்றியமையாதன என்பதைப் பட்டினப்பாலை வரிகள் உணர்த்தும். குளந்தொட்டு வளம் பெருக்கிக்கோயிலொடு குடி நிறீ“ என்பது அந்த வரி.

தமிழகத்தின் பிற பகுதிக்கோயில்களுக்கும் கொங்கு நாட்டுக்கோயில்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன.  கொங்கு நாட்டில் கோயில் உருவாக்கும் மரபு தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு முன்பே தோன்றிவிட்டது எனலாம். நாமக்கல் குடைவரைக்கோயிலான அதியேந்திர விஷ்ணுகிருஹம் மற்றும் கரூர் தான்தோன்றி குடைவரைக்கோயில் ஆகியன முக்கியமானவை. அதியேந்திர விஷ்ணுகிருஹத்தில் அனந்தசாயி இறையுரு;தான்தோன்றியில் உயரமான விஷ்ணு இறை உருவம். தாராபுரம் அருகில் ஒரு குடைவரை அமைப்பு, தொடங்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளது. கொங்கு நாட்டில் சைவம் அப்பகுதி மக்களின் தேவைகளுக்கேற்ப நெகிழ்ந்து கொடுக்கும் (Flexibility)  தன்மையதாய் குடிக்கோயில்கள் மற்றும் குலக்கோயில்களின் கூறுகளை ஏற்று நின்றது. கருவூர் வஞ்சியில் சமயக்கணக்கர்களின் சமயத்தத்துவ வாதங்கள் நிகழும் பட்டிமன்றங்கள் இருந்துள்ளன.

பேரூர் பட்டீசுவரர் கோயில் இறைவன் இயற்கையாய்த்தோன்றிய தூணாக இருந்து லிங்கமாக மாற்றம் பெற்றுள்ளது. ஒரு பட்டயத்தில், பேரூர் கோயிலைக்கட்ட முற்பட்ட கரிகாலச்சோழனை வனதேவதை வனத்தை அழிக்கக்கூடாது எனக்கேட்டதாகவும், கரிகாலனின் வேண்டுதலுக்குப்பின்னர் அனுமதித்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொங்கு நாட்டில் பெண் தெய்வ வழிபாடு முதன்மையானதாக இருந்துவந்துள்ளது. தாய்த்தெய்வம், கொற்றவை தெய்வம் ஆகிய பெண்தெய்வ வழிபாடு மிகுதியாக உள்ளது. கொல்லிமலையில் கொற்றவைக்கோயில் இருந்துள்ளது. அங்குள்ள அறப்பளீசுவரர் கோயில் கொற்றவைப்பழங்குடி வழிபாட்டின் கூறுகளைக்கொண்டுள்ளது.  கொல்லியில் இருபது நவகண்டச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இது அங்குள்ள பழங்குடி வழிபாட்டின் ஒரு பகுதியாகும். கொங்கில், ஒரு கொள்கைக்காகத் தலை வெட்டிக்கொள்ளும் மரபு அதிகம் இருந்துள்ளது. சேவூர்,அவிநாசி ஆகிய கோயில்களில் தூண்களில் தலைவெட்டி வீரன் சிற்பங்கள் காணப்படுகின்றன. கொற்றவை, அணங்கு எனப்படுகிறாள். அணங்குடை நெடுமுடி”  என்பது சங்க இலக்கிய வரி.  ஆதாழியம்மன் சமணக்கோயிலில் இருந்த தீர்த்தங்கரர் சிலை பெண்ணுருவமாக மாற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இது பெண்தெய்வ பண்டைய வழிபாட்டின் எச்சம்.

கொங்கு நாட்டில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து கட்டுமானக்கோயில்கள் கட்டப்பட்டன. தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல, கோயில்கள் வழிபாட்டிற்காகவும், மக்கள் நலனுக்காகவும் கட்டப்பட்டன. சில சமயங்களில், அரசனின் பெருமையைக்காட்டவும் கட்டப்பட்டன. அரசன் ஒருவனுடைய பிறந்த நாளும், சூரிய கிரகணமும் ஒன்றாக அமைந்த காரணத்தால் தீங்கு விளையும் என நம்பப்பட்டது. தீங்கு நேராதிருக்க அவ்வரசன் கோயிலைக்கட்டினான். இது கொங்கு நாட்டில் நடந்தது. இறந்துபட்ட அரசர் நினைவாகவும் கோயில்கள் எழுப்பப்பட்டன. அவை பள்ளீப்படைக்கோயில்கள் என அழைக்கப்பட்டன. மேல்பாடியில் உள்ள அரிஞ்சிகையீசுவரம் சுந்தரசோழரின் தந்தையான அரிஞ்சய சோழரின் நினைவாக எழுப்பப்பட்டது. பிரமதேசத்தில் உள்ள ராஜேந்திர ஈசுவரம் முதலாம் இராசேந்திரன் மற்றும் அவன் மனைவி ஆகிய இருவரின் நினைவாகக்கட்டப்பட்டது. தொண்டைமானாற்றூர் பள்ளிப்படை ஆதித்தசோழனுக்காக எழுப்பப்பட்டது. ஆனால், பள்ளிப்படைக்கோயில்கள் மக்களால் போற்றப்படவில்லை. சில அழிந்தே போயிருக்கவேண்டும். பள்ளிப்படைக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளின் எண்ணிக்கையும் குறைவே. இருகூரில் உள்ள செப்பேடு, “மூத்த அப்பாட்டைப்பள்ளிப்படையைக் குறிப்பிடுகிறது.

இருகூர்ச்செப்பேடு, தென்கொங்கை ஆண்ட வீரகேரளர்க்கும், வட கொங்கை ஆண்ட கொங்குச்சோழர்க்கும் இடையே நடந்த போர் பற்றிக்குறிப்பிடுகிறது. உடுமலை அருகில் உள்ள காரைத்தொழுவில் வஞ்சகர் வஞ்சகன் கோட்டை இருந்ததாகச்செப்பேடு குறிப்பிடுகிறது. இச்செப்பேட்டைப்பற்றிக் கோவை கிழார் தம் நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இச்செப்பேடு இருகூர் நஞ்சுண்டேசுவரர் கோயில் சிவப்பிராமணர் வீட்டில் இருந்தது. பூங்குன்றன் அவர்களால் படிக்கப்பட்டது.

கோயில்கள்மேல் அரசர்கள் மிகுந்த அக்கறை காட்டினார்கள். கொங்குச்சோழன் வீரராசேந்திரன், வீரகேரளருடன் போரிட்டு சில அழிவுகள் ஏற்பட்டதற்குப்பிராயச்சித்தமாகக்கோயிலுக்கு வைகாவி நாட்டு (அதாவது பழனியைச்சேர்ந்த) இரட்டையம்பாடி ஊர் வரிகளை அளித்தான்.

கொங்கு நாட்டில் மடங்கள் செல்வாக்கான நிலையில் இருந்துள்ளன. கொழுமத்தில் திருத்தொண்டத்தொகையான் மடம், அவிநாசியில் மாணிக்கவாசகர் மடம் ஆகியவை இருந்தன. மடங்கள், கோயில் நிர்வாகத்தை ஏற்ற செய்திகளும் உண்டு.

லகுலீச பாசுபதம், சைவ சமயத்தில் ஒரு பிரிவு. சைவத்தின் சில குறைபாடுகளைக்களைந்து, சற்றே தீவிரத்தன்மையுடைய அமைப்பாக லகுலீசபாசுபதம் விளங்கியது. இதைத்தோற்றுவித்தவர் குஜராத்தைச்சேர்ந்த லகுலீசர் ஆவார். குஜராத்தில் காயாரோஹணம் என்னும் இடத்தில் தோற்றம். எனவே, தமிழகத்தில் காரோணம்”  என்னும்  பெயர் எங்கெல்லாம் வழங்குகிறதோ அங்கெல்லாம் பாசுபதத்தின் தொடர்பு உள்ளதை அறியலாம். பாசுபதம் தமிழகத்தில் காணப்பட்ட இடங்களில் புதுக்கோட்டை தேவர்மலையும் ஒன்று. காளாமுகம் என்பதும் காபாலிகம் என்பதும் பாசுபதத்தைக்குறிக்க வந்த தொடர்களே. கொங்கு நாட்டில் பாசுபதம் இருந்துள்ளது. பாசுபதம் பெரும்பாலும் நகரங்களிலேயே காணப்பட்டது. சேவூர் கபாலீசுவரர் கோயிலும், ஈரோடு கபாலீசுவரர் கோயிலும் காபாலிகர்கள் உருவாக்கியவையே. தர்மபுரியில் உள்ள காளாமுகக்கோயிலில் நுளம்ப மன்னனின் கன்னடக்கல்வெட்டில் ராசி என்னும் பெயர் காணப்படுகிறது. ராசி என்று முடியும் பெயர் காளாமுகத்தோடு தொடர்புடையது. லகுலீசர் சிற்பங்கள் தமிழகத்தில் நான்கு இடங்களில் மட்டுமே காணப்பட்டன. மாமல்லபுரம் தர்மராஜர் ரதத்தில் லகுலீசர் உருவம் உள்ளது. பேரூரில் ஒரு லகுலீசர் சிற்பம் கிடைத்துள்ளது. தற்போது அது கோவை அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. லகுலீசர் சிற்பம் அமர்ந்த நிலையில் கையில் தடி(லாங்கணம்)யுடன் காணப்படும்.

பாசுபதத்தின் தொடர்ச்சியாக, வீர சைவம் தொன்ன்றியது. வீர சைவம் கருநாடகத்தில் தோன்றியது. கொங்கு நாட்டில் வீர சைவ மடங்கள் நிறைய உள்ளன.
கொங்கு நாட்டில், சமணம் செல்வாக்குடன் விளங்கியது. வணிகர்கள் பெரும்பாலும் சமணத்தைச்சேர்ந்தவர்களாயிருந்தனர். கொங்கு நாட்டில் காணப்படும் அமணலிங்கேசுவரர் கோயில்களனைத்தும் சமணப்பள்ளிகளாகும். திகம்பர சமணம், சுவேதம்பர சமணம் என இரு பிரிவுகள் உள்ளன. திகம்பர சமணம், பெண்களுக்கு வீடுபேறு(மோட்சம்) இல்லை என்னும் கொள்கையுடையது. மற்றுமொரு பிறப்பில் ஆணாகப்பிறந்த பின்னரே வீடுபேறு அடையலாம். துறவறத்தை முதன்மையாகக்கொண்ட திகம்பர சமணத்தில் பேய் ஓட்டுதல், பில்லி சூனியம் ஆகியவற்றுக்கு இடமில்லை. சுவேதம்பர சமணம் பெண்களுக்கும் வீடுபேறு, பெண் துறவறம் ஆகியனவற்றை உள்ளடக்கியது. கொங்கின் இயக்கி வழிபாடு  சமணத்தின் தாய் வழிபாடாகும். தேசி சங்கம், கஸ்த சங்கம், திராவிட சங்கம், யாப்பணிய சங்கம் ஆகியவை சமணத்தில் இருந்த நான்கு சங்கங்கள் ஆகும். இவற்றில், திராவிட சங்கம் பழனி மானூரில் தோற்றுவிக்கப்பட்டது. ஐவர் மலை திராவிட சங்கத்தோடு தொடர்புடையது. இங்கு 9-ஆம் நூற்றாண்டுச்சிற்பத்தொகுதி உள்ளது. சமண வணிகர்கள், காசாயம் என்னும் ஒரு வரியைக்கட்டியுள்ளனர். எனவே, இவர்கள், காசாயக்குடியினர் என் அழைக்கப்பட்டனர்.

கோவை முட்டம்-கோட்டைக்காடு பகுதியில் பௌத்தம் இருந்த தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கொங்கு நாட்டில் தாய்த்தெய்வ வழிபாடுதான் முதன்மையானது என முன்பே பார்த்தோம். கொற்றவை வழிபாடும் தாய்த்தெய்வ வழிபாடேயாகும். அது போலவே கன்னி வழிபாடும் கொங்கு நாட்டில் நிலவியது. கொற்றவையும் ஒரு கன்னித்தெய்வமே. உடுமலை அருகில் உள்ள மறையூர் குகையில் காணப்படும் பெண் தெய்வ ஓவியம் கொற்றவையாகும். அருகில் மான்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன. சிங்கத்தைப்போலவே மானும் கொற்றவையின் வாகனங்களில் ஒன்று. மான் வாகனத்துடன் கொற்றவை காணப்படுவது தமிழகத்தில் மட்டும்தான். கன்னி வழிபாட்டில் ஏழு கன்னிகைகள் முன்னிலை பெறுகிறார்கள். சப்தமாதர் (ஏழு கன்னிகையர்) சிற்பங்கள் கொங்கு நாட்டில் பரவலாகக்காணப்படுகின்றன. ஏழு பிடாரி அம்மன் கோயில்களும் கொங்குப்பகுதியில் உள்ளன. கன்னிமை கற்புடைமையைக்காட்டிலும் உயர்ந்தது என்றும், கன்னிமையின் சக்தி உயர்ந்தது என்றும் நம்பப்பட்டது. கோவை கோட்டைக்காட்டிலும், ஈரோடு மகிமாலேசுவரர் கோயிலிலும் சக்தி உருவங்கள் காணப்படுகின்றன.

உள்ளூர்த்தாய்த்தெய்வங்களை (நாட்டார் வழக்கு) விட்டுக்கொடுக்காமல் பிராமணியமாக்கி- அதாவது சமஸ்கிருதமாக்கி (பெருஞ்சமயக்கோயில்களில் காமகோட்டம் என்னும் கோட்பாடு)- பெண் தெய்வத்துக்குத்தனியே கோட்டம் அல்லது கோயில் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

கி.பி.8-ஆம் நூற்றாண்டிலேயே காம கோட்டம் பற்றிய குறிப்பு வருகிறது. காமகோட்டத்தை அழித்தவர்கள் பாவம் கொள்வார்கள் எனக்கல்வெட்டில் செய்தி உள்ளது.(கல்வெட்டு இருக்குமிடம்: வந்தவாசிக்கருகில் உள்ள சாத்தமங்கலம்) கொங்கு நாட்டில் சிவன் கோயில்கள் எல்லாவற்றிலும் காமகோட்டம் உண்டு. பெண்தெய்வ வழிபாடுதான் முதலில்; பின்னரே சிவ வழிபாடு. கொங்கு குலங்கள் வழிபட்டது பெண்தெய்வங்கள்தான்.  

முதன்மைச்சோழர் தம் மெய்க்கீர்த்திகளில், தாம் போர் செய்து பெற்ற வெற்றிகளைப்பொறித்துவைத்தார்கள். ஆனால், கொங்குச்சோழர் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி மெய்க்கீர்த்தி அமைத்தார்கள் என்பதைப்பார்க்கிறோம். பிரம்மியம் வலஞ்சுழி நாதர் கோயிலில் செவ்வியல் எழுத்தில் மெய்க்கீர்த்தி எழுதப்பட்டுள்ளது. அதில் மக்கள் நலம் முன்னிறுத்தப்படுகிறது. “அல்லவை கடிந்து”,  குடிபுறங்காத்துப் பெற்ற குழவிக்குற்ற நற்றாய்போல”  அரசன் செங்கோலோச்சினான் என்று அதில் வருகிறது.

கொங்கு நாட்டுக்கோயில் கட்டடக்கலை எளிதானது. கருவறையும், அதன்மேல் விமானமும் அடிப்படை. நாமக்கல் அருகில் சீனிவாச நல்லூர், கருவூர் பெரிய சோமூர், கொல்லிமலைக்கோயில்கள் கொங்கு நாட்டுக்கோயில் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகள். இராசராசனின்  பாட்டியாரான செம்பியன் மாதேவி கொல்லிமலையைச்சேர்ந்தவர். அவருக்கு மாதேவடிகள் என்றொரு பெயர் உண்டு. அவர் மேல் கொண்ட மதிப்பால் அப்பெயரை இராசராசன் தன் மற்றொரு மகளுக்கு வைத்தான். (குந்தவை, இராசராசனின் தமக்கையார் பெயர் கொண்ட ஒரு மகள் என்பது ஏற்கெனவே தெரிந்த ஒன்று.) கொங்கு நாட்டுக்கட்டட மரபை மழபாடி வரை காணலாம்.

கால் நடை வளர்ப்பு முதன்மையாயிருந்த கொங்கு நாட்டில், கால் நடை வளர்ப்போர் அமைத்துக்கொண்ட அமைப்பு மன்றம் எனவும், மன்றத்தை ஆள்வதற்குள்ள உரிமை மன்றாட்டு எனவும் கூறப்பட்டன. மன்றாட்டு பெற்றவர்கள் மன்றாடிகள். மன்றாடிகள் கோயில் நிர்வாகத்திலும் பங்கு கொண்டிருந்தனர். பேரூர்க்கோயில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கும் செய்தியில் மன்றாடிகள் குறிப்பிடப்படுகிறார்கள். கோயில் நிர்வாகத்திலிருக்கும் சிவாச்சாரியார்கள், மன்றாடிகள் ஆகியோர் அரசனிடம், கோயில் பண்டாரம் அழிந்துபோனதை அறிவித்து வேண்டுதல் வைக்கிறார்கள். அரசன், ஓர் ஊரினைக்கொடையாக அளிக்கிறான்.

கொங்கு நாட்டில்தான் கோயில் கருவறை “ ஸ்ரீ வயிறு “  என அழைக்கப்பட்டதைக்காண்கிறோம். சேவூர்க்கோயில் கல்வெட்டில் இச்சொல் இடம் பெறுகிறது. கொங்கு நாட்டுப்பகுதியின் சிறப்புகளை அங்குள்ள கோயில்கள் எடுத்துச்சொல்லும் வகையாகக்கோயில் சிற்பங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலும், கோயிலின் கொடுங்கைப்பகுதியில் அத்தகு சிற்பங்கள் உள்ளன. சேவூர்க்கோயில் ஜகதி, குமுதம் ஆகிய பகுதிகளில் சிறு சிற்பங்கள் உள்ளன. சேரமான் பெருமாள் நாயனாருடன்  சுந்தரர் போகின்ற காட்சி (யானையிலும், குதிரையிலும்) அன்னூர்க்கோயில் குமுதத்தில் உள்ளது. கீரனூரில் மூதேவியின் தனிச்சிற்பம் உள்ளது.

கொங்கு நாட்டுக்கோயில்களில் தேவகோட்டங்களில் சிற்பங்கள் வைக்கும் மரபு இல்லை. இது பாண்டிய மரபைத்தழுவியது. (சோழ நாட்டுக்கோயில்களில் தேவகோட்டங்களில் சிற்பங்களைக்காணலாம்.)

கொங்கேழ் கோயில்கள் என்று சொல்லக்கூடிய ஏழு கோயில்களைப்பற்றி அன்னூர்க்கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.

கடத்தூர் கோயில் கல்வெட்டொன்றில் ‘ஹிஜிரி’  ஆண்டு பற்றிய குறிப்பு காணப்படுகிறது.





கட்டுரையாக்கம் : து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.