மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 15 நவம்பர், 2019



அதியரும் கொங்குநாடும்

வாணவராயர் அறக்கட்டளைச் சொற்பொழிவு

கோவையில், மாதந்தோறும், வாணவராயர் அறக்கட்டளையினர் ஏற்பாட்டில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. பெரும்பாலும் அவை, வரலாறு தொடர்புடையனவாய் அமைவது வழக்கம். அவ்வகையில், 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் நா. மார்க்சிய காந்தி அவர்கள் மேலே கண்ட தலைப்பில் உரையாற்றினார்.  அது பற்றிய ஒரு பதிவு இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

முனைவர் நா. மார்க்சிய காந்தி

முனைவர் நா. மார்க்சிய காந்தி அவர்கள் தமிழகத் தொல்லியல் துறையில் சேர்ந்து பணியாற்றிய முதல் பெண்மணி என்பது சிறப்புக்குரியது. இச்செய்தியை அவர், 2014-ஆம் ஆண்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ஆற்றிய உரையில் சுவையாகக் குறிப்பிடுகிறார்.  கல்வெட்டுத் துறை அவரை எவ்வாறு ஈர்த்துப் பிடித்தது என்பதை அவர் கூற்றிலேயே இங்கு காணலாம். அவருடைய உரையில் உளம் திறந்த ஒரு நேர்மையும் எளிமையும் காணக்கிடைக்கின்றன. இந்த முழு உரையையும் கேட்பவர் கல்வெட்டியலில் ஆர்வம் கொள்ளாமல் இருக்க இயலாது.

“ தமிழ் படித்துவிட்டு இந்தத் துறைக்கு வந்ததே ஒரு கொடுப்பினை. 1972-73 காலகட்டத்தில், கல்வெட்டுகள் படிப்பதில் ஆற்றல் உடையவர்கள் மட்டுமல்ல, படிக்கத் தெரிந்தவர்களாகக்கூட விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்தனர். தில்லியில் “தொல்லியல் பள்ளி” (SCHOOL OF ARCHAEOLOGY) என்னும் ஒரு பயிற்சி நிறுவனம் மட்டிலுமே இருந்தது. சமற்கிருதம் அல்லது வரலாறு படித்தவர்கள் மட்டுமே அதில் சேர்ந்து பயிலமுடியும். பிற மொழிப் படிப்புப் படித்தவர்க்கு அங்கு இடமில்லை. இந்திய அளவிலான கல்வெட்டுகளின் எண்ணிக்கையில், தமிழ்நாட்டில் மட்டுமே ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் கல்வெட்டுகள் இருக்கும் நிலை. இந்தப் புரிதலில், கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் ஒன்றைத் திரு. நாகசாமி அவர்கள் ஏற்படுத்தினார். தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் விருப்பமுடைய முதுகலைத் தமிழ் மாணவர்களைச் சேர்ப்பது பயிற்சியை மகிழ்ச்சியோடு செய்வதாக இருக்கும் என்ற புரிதலில், தமிழ் முதுகலைப் படிப்புப் படீத்தவர்கள் சேரலாம் என்ற நிலையை அவர் உருவாக்கினார். ஆண்டுக்கு எட்டுப்பேர் சேர்ப்பதாகத் திட்டம். பயிற்சி  நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே நான் படித்தேன். பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள்ளேயே, இந்த அறிவுப்புலத்துக்குக் கிடைத்த அறிமுகம் பிடிவாதமாய் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டது. வேறு வாய்ப்புகள் கிடைத்தும் இதை விட்டுப் போக இயலவில்லை. தமிழ் நாட்டில் உள்ள கல்வெட்டுகளைப் படித்துப் புரிந்துகொள்ளவே வாழ்நாள் போதாது. ”

இனி, கோவை உரையிலிருந்து…….

கொங்கு நாட்டு அதியர்கள்

பழங்காலத்தில், கொங்குநாட்டில் சிறு சிறு தலைவர்கள் மிகுதியும் இருந்தனர். இவர்கள், குடி மரபுத் தலைவர்கள், ஊர்க்கிழார்கள் எனப் பல பெயர்களால் அறியப்பட்டவர்கள். அவ்வாறான தலைவர் மரபுகளுள் சிறந்த ஒரு மரபு அதியர் மரபு. சங்க நூல்களில் அதியரைப் பற்றிய பாடல்கள் என நாற்பத்து நான்கு உள்ளன. மூவேந்தர்களை அடுத்த ஒரு நிலையில் வைத்துப் பாடப்பெற்ற தலைவர்கள் அதியர் ஆவர். தமிழகத்தின் வடவெல்லையில் அவர்களது இருப்பிடம் அமைந்திருந்தது. மேற்கு மலைத் தொடரும் கிழக்கு மலைத்தொடரும் இணையும் பகுதி அவர்கள் பகுதி. கனிம வளங்களும், காட்டு வளங்களும் நிறைந்த பகுதி. மலைபடு பொருள்களின் வளத்தால் வணிக வழிகள் நிறைந்த பகுதியாகத் திகழ்ந்தது. குறு நாடு என்னும் நாமக்கல் பகுதி அதியர் நாடாக அறியப்படுகிறது.

நடுகல் வழிபாடு

இடைக்காலத்தைச் சேர்ந்த சமண, பௌத்தத் தடயங்கள் இங்கு கிடைத்துள்ளன. நடுகல் வழிபாடு மிகுதியாக இருந்த பகுதி அதியர் பகுதி. பூசல் என்னும் சிறு போர்கள் மிகுதியும் நிகழ்ந்துள்ளன. எனவே, நடுகற்களும் மிகுதி. நடுகற்களில் அதிய மரபுத் தலைவர்கள் பேசப்படுகிறார்கள். ஒட்டம்பட்டி, இருளப்பட்டி ஆகிய ஊர்களில் இவ்வகை நடுகற்கள் உள்ளன.

குடைவரைக் கோயில்

பல்லவர், பாண்டியர் போன்று அதியரும் 6-7-ஆம் நூற்றாண்டில் நாமக்கல் பகுதியில் வைணவம் சார்ந்த குடைவரைக் கோயிலை எழுப்பியிருக்கிறார்கள்.

கங்கரோடு போர்

கங்கர்கள் தர்மபுரியைத் தாண்டிப் படையெடுத்து வந்துள்ளனர். அவர்கள் அதியரைத் தாக்கியுள்ளனர். ஆனால், அதியர் கங்கரை அடிப்படுத்தினர். தலைக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் எல்லைக்காவல் பணி அதியர் பணியாக இருந்தது.


சோழர் தொடர்பு

குறும்பனையூர் அதியன் ஒருவன், திறை கொடாது சோழரை எதிர்த்த செய்தி பெரியபுராணத்தில் காணப்படுகிறது.  அதியர், அரசியல் அறிவு நிரம்பப்பெற்றவர்கள்; சோழர், அதியர்களிடம் பெண்ணெடுக்கும் வகையில் சோழருடன் உறவு பேணப்பட்டது. பதிற்றுப்பத்தில் அதியர், வேளிர் குடியில் பெண்ணெடுத்த செய்திக் குறிப்பு உள்ளது. அதியரும் சேரரும் மழவர் என்று போற்றப்படுகின்றனர். வீரமும் இளமையும் உள்ளவர் மழவர். சோழர்களின் வீழ்ச்சிக் காலமான 12-13-ஆம் நூற்றாண்டில் அதியர் சிற்றரசர்களாய்த் திகழ்ந்தனர். அதியமானார் என்னும் பெயருடன் சோழ அரசர் போலத் தோற்றம் கொண்டிருந்தனர்.  இராஜராஜ அதியமான் என்னும் பெயரும், விடுகாதழகிய பெருமாள்  என்னும் பெயரும் அறியப்படுகின்றன. இராஜராஜ அதியமானின் மகன் விடுகாதழகிய பெருமாள் என்று கூறப்படுகிறது. பேரரசர்கள், அதியரைப் பயன்படுத்தி -  அதியர் துணையுடன் -  போசளரைத் தடுக்கின்றனர். 

சமணத்துக்கு ஆதரவு

அதியர் சமணர்களுக்கு ஆதரவு தந்தவர்கள். வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருமலையில் அதியர் கல்வெட்டு உள்ளது. கோட்டைக் கோயிலுக்கு அதியனே நேரில் வந்து நீர்வார்த்து நிவந்தங்கள் அளித்திருக்கிறான். எழினி, அஞ்சி ஆகியவை சங்ககாலத்தில் அதியருக்கு வழங்கிய பெயர்களாகும். புகழ் பெற்ற ஜம்பை பிராமிக்கல்வெட்டில் அஞ்சி என்னும் பெயர் உள்ளது.

”ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி”

என்பது கல்வெட்டு வரி. “ஸதியபுதோ”  என்பதில் உள்ள ’சதிய’  என்னும் சொல், தொல் திராவிடமொழிச் சொல் வடிவமாகும். ‘அதிய’ என்பதன் பழம் வடிவம். “ஸதியபுதோ”  என்னும் சொல் மௌரியப் பேரரசன் அசோகனின் கல்வெட்டில் காணப்படும் பிராகிருதச் சொல்லாகும்.  மௌரியர்கள் மலைகளில் வழியை அமைத்துக்கொண்டு வந்தார்கள் என்னும் குறிப்பு சங்க நூல்களில் காணப்படுகிறது.

நாமக்கல் குடைவரைக் கோயில்

அதியர், நாமக்கல்லில் இரண்டு குடைவரைக் கோயில்களை எழுப்பியுள்ளனர். நாமக்கல்லின் பழம்பெயர் திரு ஆலைக்கல் என்பதாகும். கி.பி. 860-இல் இக்குடைவரைக் கோயில்கள் எழுப்பப்பட்டன. இரண்டுமே வைணவக் கோயில்கள். ஒன்றில் பால நரசிம்மர் அமைதியான தோற்றத்துடன்.  ஹரிஹர மூர்த்தியின் உருவமும் இதில் உள்ளது. இன்னொன்றில் அனந்த சயனச் சிற்பம். பல்லவர், பாண்டியர் கால அனந்த சயனச் சிற்பங்களில் காணப்படாத ஒரு சிறப்புக்கூறு இந்தச் சிற்பத்தில் காணலாம். நாகத்தின் முகத்தில் சிம்ம முகம் இருப்பதே அச்சிறப்புக்கூறு. திருமாலின் ஆயுதங்கள் மனித உருவமாக வடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றின் கீழே பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்பானது. இங்கு வாமனச் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது. வாமனச் சிற்பத்தைச் சுற்றிலும் பல உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவை மார்க்கண்டேய புராணத்தில் வரும் பாத்திரங்களாகும்.  மாவலிச் சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்தபோது வாமன அவதாரம் நிகழ்ந்தது. எனவே, வாமனர் சிற்பத்தொகுதியில் குதிரை உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. 

பல்லவ கிரந்தம்

நாமக்கல் குடைவரைக் கோயிலில் பல்லவ கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.  கோயிலின் பெயர் “அதியேந்திர விஷ்ணுகிருகம்”. இது பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. அதியனின் சிறப்புப் பெயரான “அதிய அன்மயன்”  என்னும் பெயரும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. சமற்கிருதப் பெயரான “அதிய அன்மய”  என்பது தமிழ்ப்பெயர்களில் உள்ள “அன்”  விகுதி சேர்த்து எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற குடைவரைக் கோயில்கள்

தான்தோன்றி மலையில் உள்ள முழுமை பெறாத அரைகுறைக் குடைவரைக் கோயில் அதியர் பணி எனக் கருதப்படுகிறது. இதுவும் ஒரு வைணவக் கோயிலாகும். கோயிலின் பூதவரி  பார்க்கும்படியுள்ளது.

கூத்தம்பூண்டியிலும் முழுமை பெறாத ஒரு குடைவரைக்கோயில் உள்ளது. இதுவும் அதியர் பணியே.

அதியரின் இறுதிக்காலம்

தலைக்காட்டுப் பகுதியில் நடந்த ஒரு போர் பற்றிய கல்வெட்டில் அதியமான் ஒருவனின் பெயரும், அவன் போரில் இறந்த  செய்தியும் காணப்படுகிறது.  அதியரின் இறுதிக்காலங்களில் அதியமான் குலத்தவர், கொங்குச் சோழரின் கீழும், பாண்டியரின் கீழும் அதிகாரிகளாகப் பணியாற்றினர். 



முடிவாக

அதியர் வணிகத்தில் சிறந்தவராய்த் திகழ்ந்தனர். அதியர் காலத்தில் வணிக வழிகள் பல இருந்துள்ளமைக்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. தகடூரிலிருந்து காஞ்சி வரையில் சென்ற ஒரு பெருவழி அதியமான் பெருவழி என்னும் பெயரால் வழங்கியது. மற்றொரு பெருவழி பற்றிய கல்வெட்டில் “நாவல் தாவளம் 27”  என்னும் எழுத்துப்பொறிப்பு காணப்படுவதோடு “27”  என்னும் எண்ணைக் குறிக்கும் வகையில் குறியீட்டுக் குழிகள் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு கல்வெட்டில், “மகதேசன் பெருவழி”  என்னும் பெயர் காணப்படுகிறது.




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.

திங்கள், 28 அக்டோபர், 2019



கருநாடகத்தில் ஒரு தமிழ்க்கல்வெட்டு
முடி ஈசுவரர் கோயில் - ஹுலுகுடி (தொட்டபல்லாபூர்)

முன்னுரை

இன்று (28-10-2019), முகநூல் பதிவுகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த வேளையில் கண்ணில் பட்டுக் கருத்தைக் கவர்ந்தது ஒரு கல்வெட்டின் படம். INSCRIPTION STONES OF BANGALORE  என்னும் குழுமத்தின் உறுப்பினர் ஒருவர் இப்படத்தைப் பதிவிட்டு, அது பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் சுட்டி ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். கல்வெட்டுப்படம் கருத்தைக் கவர்ந்ததே அது ஒரு தமிழ்க்கல்வெட்டு என்பதாலாகும். படத்தைப் பதிவிறக்கம் செய்து அதன் பாடத்தைப் படித்துவிட்டு அதனோடு தொடர்புடைய செய்திகளைச் சுட்டி வழி இணையத்தில் (teamgsquare.com) சென்று அறிந்த செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தொட்டபல்லாபூர்-ஹுலுகுடி (DODDABALLAPUR – HULUKUDI)

வெங்களூர் என்று தமிழ்க்கல்வெட்டுக் குறிப்பிடும் பெங்களூரு மாநகரிலிருந்து எண்பது கல் (கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது தொட்டபல்லாபூர்.  இவ்வூருக்கருகில் அமைந்த ஒரு சிற்றூர் ஹுலுகுடி. இவ்வூரை ஹுலுகடி என்றும் அழைக்கிறார்கள். ’ஹுலு’ (ஹுல்லு) என்பது புல்லையும், ’கடி’ என்பது குச்சியையும் குறிக்கிறது என்கிறார்கள். இங்கு ஒரு சிறிய மலை உள்ளது.  மலையின் மேல், வீரபத்திர சுவாமி  கோயில் என்னும் பெயரில் ஒரு குகைக்கோயில் அமைந்துள்ளது.

ஹுலுகுடி மலைக்கோட்டை


                                              
கண்காணிப்புக் கொத்தளம்
                                                      

                                          

  
சிதைந்துள்ள நிலையில் கோட்டைச் சுவர்கள்
                                                
ஹுலுகுடி மலை மேல், அழிந்துபோன ஒரு கோட்டையின் எச்சங்கள் உள்ளன. மலைமீது ஏறிச்செல்லும் பாதையெங்கும் சிதைந்து போன கோட்டைச் சுவரின் கற்கள் சிதறிக்கிடக்கின்றன. கண்காணிப்புக் கொத்தளம் ஒன்று அதன் வடிவம் மாறாமல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நிற்கிறது. வீரபத்திர சுவாமி குகைக் கோயிலுக்கு வழி காட்டிய கோயில் பூசையாளர் கூற்றிலிருந்து கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளோடு கூடிய வழி தற்காலத்தே கோயிலின் அறக்கட்டளையினரால் அமைக்கப்பட்டதென்றும், பழைய வழி வேறொன்று இருப்பதாகவும் அறிகிறோம். 


நந்திக் கோயில்
                                                


நந்திச் சிற்பம்
                                         


பழையவழியில் ஏறிச்செல்கையில் நந்திச் சிற்பம் அமைந்துள்ள நந்திக் கோயில் ஒன்றுள்ளது.  ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்ட பெரிய நந்தி. இன்னும் சற்றுக் கடந்து சென்றால் பெரிய உருண்டைக் கற்பாறையைக் காணலாம்  மாமல்லபுரத்தில் காணப்படுகின்ற வெண்ணெய் உருண்டைப் பாறையைப் போன்றே தோற்றமளிக்கும் இப்பாறையும் வெண்ணெய்ப் பாறை என்று அழைக்கப்படுகிறது. கீழிருந்து மேலே செல்லும் வழியில் கற்றூண்களால் அமைந்த தோரணவாயில் ஒன்று அழகுறக் காட்சியளிக்கிறது. 


வெண்ணெய்க் கல் உருண்டை
                                                                                                          


ஹுலுகுடி சிவன்  கோயிலும் பாறைக்கல்வெட்டும்


                                            

மலைமேல் சிதைந்துபோன சிவன் கோயில் ஒன்றுள்ளது. .இக்கோயிலின் பக்கவாட்டில் ஒரு பாறையில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.  கல்வெட்டின் படமும் பாடமும் கீழ்க்கண்டவாறு:


                                   
தமிழ்க்கல்வெட்டு



கல்வெட்டின் பாடம்

1 ஸ்வஸ்தி ஸ்ரீமந் மஹாமண்டலேஶவர த்ரிபுவனமல்ல      தழைக்காடுகொண்ட
2    புஜபல வீரகங்க பொய்ஶல தேவர் ராஜ்யமாள் ஸம்வத்ஸரத்
3    தில் விக்கிரமசோழ மண்டலத்தின் மண்ணைநாட்டுக் கா
4    முண்டந் விருதராயபயங்கர மண்ணைநாடாழ்வாந் மகந்.. ..
5    நாந விருதராய பயங்கர மண்ணைநாடாழ்வாநேந் புற
6    கொடியில் மலைக்குக் கிழக்கில் சிகரத்தில் முடீஶவரமுடை
7    மஹாதேவருடை(ய விமாநம்) உதகபூர்வம் பண்ணிநேன் சிவ
8    ப்ராஹ்மணன் (பெண்ணை) பட்டந் மகன் (பன்ம) பட்டநுக்கு விருதரா
9    ய பயங்கர மண்ணைநாடாழ்வாநேந் எந் வம்ஶமும்  பன்ம
10  பட்டந் வம்ஶமுள்ளளவும் பூஜிப்பாறாகவும் பன்ம
11  பட்டந் தந்ணையும் தன் வம்ஶத்தாரையும் முடீஶவ
12  ரமுடையாரை பூஜிக்க வேண்டாவென்றவன் கங்(கையி)
13  டைய்க் குமரிடைய்க் குராற்பசுவைக் கொ(ன்ற) [வன்பு)
14  (குந்) னரகம் புகுவான் இவை (றா?)மாசாரி எழுத்து

  
குறிப்பு :  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.


கல்வெட்டுச் செய்திகள்

கல்வெட்டின் காலமும் அரசனும்

கல்வெட்டு, தழைக்காடுகொண்ட வீரகங்க பொய்சல தேவர் என்று குறிக்கும் அரசன் ஹொய்சல விஷ்ணுவர்த்தன் ஆவான். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1108-1152.  கல்வெட்டில், ஆட்சியாண்டு தரப்படாததாலும், சக ஆண்டுக்குறிப்பு இல்லாததாலும் கல்வெட்டு எந்த ஆண்டைச் சேர்ந்தது எனத் துல்லியமாகக் கணிக்க இயலாது.  கல்வெட்டில் குரிப்பிடப்படும் அரசன் விஷ்ணுவர்த்தன் என்பதால், கல்வெட்டின் காலம் 12-ஆம் நூற்றாண்டு என்றாகிறது.

சோழர் ஆட்சியின் தாக்கம்

கருநாடகப்பகுதியில் சோழரின் ஆட்சியைத் தொடர்ந்து ஹொய்சலர் ஆட்சி அமைந்தாலும், சோழர் ஆட்சியின்போது ஏற்பட்டிருந்த தமிழ்மொழியின் முதன்மைத் தன்மையும் பெருந்தாக்கமும் தமிழகத்தை ஒட்டி அமைந்த கருநாடகத்தின் இந்தப்பகுதியில் மக்களிடையே மேலாண்மை செலுத்தியது எனலாம். அதன் காரணமாகவே, சோழர் ஆட்சியின்போது பொறிக்கப்பட்டதைப் போன்றே, தொடர்ந்து வந்த ஹொய்சலர் ஆட்சியிலும் தமிழ் மொழியில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன எனக் கருதவேண்டியுள்ளது.  ஹொய்சலஎன்பதைத் தமிழ்ப்படுத்துகையில் ‘போசல  என்று திரியும். இந்தத் திரிசொல் கல்வெட்டிலும் காணப்படுவது  கருதத்தக்கது. முதலாம் இராசராசன் கருநாடகத்தின் சில பகுதிகளைத் தன் ஆட்சியின்கீழ் கொணர்ந்தபோது, சோழர் ஆட்சிப்பகுதி, சோழ நாட்டின் ஆட்சிப்பிரிவுகளைப் போல் ‘முடிகொண்ட சோழமண்டலம்  என்னும் பெயர் பெற்றது. பின்னர், 12-ஆம் நூற்றாண்டில் விக்கிரம சோழன் காலத்தில்  விக்கிரம சோழமண்டலம்  எனப் பெயர்மாற்றம் பெற்றது எனக் கல்வெட்டின் வாயிலாக அறிகிறோம்.

விக்கிரம சோழமண்டலம் – மண்ணை நாடு

மண்டலத்தை அடுத்து நாட்டுப் பிரிவுகள் இருந்தன. கல்வெட்டில், இப்பகுதி (தொட்டபல்லாபூர்)  மண்ணை நாடு என்னும் பெயரில் வழங்கியது.  மண்ணை நாட்டுப் பிரிவின் ஆட்சித்தலைவனாக இருந்தவன் “மண்ணை நாடாழ்வான்  என்னும் காமுண்டன் ஆவான். சோழர் காலத்துத் தலைவர்க்கு வழங்கிய நாடாழ்வான் என்னும் நாட்டுத்தலைவன் பெயர் போசலர் காலத்திலும் தொடர்ந்தது எனலாம்.

புறக்கொடி

தற்போது, ஹுலுகொடி (HULUKODI) என்றும் ஹுலுகடி (HULUKADI)  என்றும் பெயர்கொண்டுள்ள இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில், “புற(க்)கொடி  என்று வழங்கியது. இப்பெயரே, காலப்போக்கில் “புலுகொடியாகிப் பின்னர் “ஹுலுகொடி  எனத் திரிந்தது எனலாம். கன்னட மொழியின் “ஹஎழுத்தை முதலாகக் கொண்ட பெயர்கள் “ஹகரத்தை இழந்து “பகரமாக மாற்றம் பெறுதலும், “ப”கரம் “ஹ”கரமாக மாற்றம் பெறுதலும் இயல்பு.

கோயிலின் பெயரும், இறைவன் பெயரும்

புறக்கொடி ஊரின் மலைமீது (முடியில் அல்லது சிகரத்தில்) கோயில் அமைந்ததால் முடீசுவரம் (முடி-ஈசுவரம்)  என்னும் பெயர் ஏற்பட்டது. ஈசுவரம் என்பது சிவன் கோயிலைக்குறிக்கும் சொல். இறைவன் பெயரும் கோயிலின் பெயராலேயே முடீசுவரர் என்று வழங்கியது. கல்வெட்டு, முடீசுவரமுடைய மஹாதேவர் எனக் குறிப்பிடுவது இதன் காரணமாகவே. இறைவனின் இப்பெயர், தமிழகத்தில் புதுக்கோட்டைக்கருகில் அமைந்துள்ள குடுமியான் மலைக்கோயிலின் பெயரையும் இறைவனின் சிகாநாதர் என்னும் பெயரையும் நினைவூட்டுகிறது. சிகையும் முடி(குடுமி)யைக் குறித்தது; சிகரமும் முடியைக் குறித்தது. புறக்கொடியில் கோயில், மலையின் கிழக்குப் பகுதியில் இருந்தது.

கோயிலை எடுப்பித்தவன் மேலே குறிப்பிட்ட மண்ணை நாடாழ்வான் ஆவான். இதைக் கல்வெட்டு, முடீவரமுடைய மஹாதேவருடைய விமாநம் உதகபூர்வம் பண்ணிநேன்  எனச் சொல்கிறது. கோயிலைப் பாதுகாத்தலையும், வழிபாட்டுக் கடமைகளையும் நிறைவேற்றும் பொறுப்பை முறையே மண்ணை நாடாழ்வானும், கோயில் பூசையாளன் சிவப்பிராமணன் பன்மபட்டனும் ஏற்கிறார்கள். இதைக் கல்வெட்டு, “மண்ணை நாடாழ்வாநேந் எந் வம்சமும் பன்மபட்டந் வம்சமுள்ளளவும் பூஜிப்பாறாக   என்று குறிப்பிடுகிறது.

கோயிலின் காப்பு, வழிபாடு ஆகியவை தடையின்றிக் காலந்தோறும் தொடரவேண்டும் என்பதையே மேற்குறித்த கல்வெட்டு வரிகள் சுட்டுகின்றன. இந்தத் தன்மத்துக்குத் தீங்கு செய்வார் உண்டாகில் அவர்கள் கங்கை-குமரி இடையில் உள்ள நிலப்பகுதியில் பசுவைக் கொன்றவர் அடையும் நரகத்தை அடைவார்கள் என்று கல்வெட்டின் இறுதிப் பகுதி குறிப்பிடுகிறது. கல்வெட்டின் இம்மரபுத் தொடரை “ஓம்படைக்கிளவி  என்று குறிப்பிடுவர்.  கல்வெட்டைப் பொறித்த சிற்பியின் பெயர் இராமாச்சாரி  என்பதாகக் கல்வெட்டின் தொடர்  “இவை (றா)மாசாரி"  புலப்படுத்துகிறது.


பார்வை :   1  INSCRIPTION STONES OF BANGALORE  குழுமம்


                      2   TEAMGSQUARE  இணைய தளம்.




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

ஞாயிறு, 20 அக்டோபர், 2019



கமுதி அய்யனார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டு

முன்னுரை

நண்பர் திரு. இராஜகுரு, இராமநாதபுரத்தில் இருந்துகொண்டு தொல்லியல் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுவருபவர். அப்பகுதியில் வெளிப்படாத தொல்லியல் எச்சங்களையும், கல்வெட்டுகளையும் தேடிச் செய்திகள் கொணர்ந்து வெளிப்படுத்தித் தொல்லியல் கழகத்தின் ஆண்டு வெளியீடான “ஆவணம்”  - வரலாற்றுப் பதிவுகள் கொண்ட -  இதழில் பதிவு செய்துவருபவர். அத்தோடு, பள்ளி மாணாக்கர்க்குத் தொல்லியல், வரலாறு ஆகியன பற்றிய புரிதலை ஏற்படுத்தி அவர்களைக் கொண்டே சிறு வரலாற்றுக் கட்டுரைகளை எழுத வைத்து நூலாக்கி மகிழ்ந்தவர். 

வட்டெழுத்தின் மேல் எனக்கேற்பட்ட ஓர் ஈர்ப்பினால், வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் வட்டெழுத்துகளில் அமைந்த கல்வெட்டுப் படங்களைத் தேடிச் சேர்த்து வருகிறேன். அந்த வகையில், நண்பர் திரு. இராஜகுரு அவர்கள் அண்மையில், என் வேண்டுகோலை ஏற்று ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டின் படத்தை அனுப்பியிருந்தார். கல்வெட்டு, மிகவும் அருமையானதொரு எழுத்தமைதியைக் கொண்டதாகவும், அழகாகவும் இருந்தது.  வட்டெழுத்துகளைக் கற்று, படிக்கவும் எழுதிப்பழகவும் பயிற்சி செய்வோருக்கு மிகவும் பயன்படுகின்ற ஒரு பாடப்பகுதி என அதைக் குறிப்பிடலாம். தமிழ் பிராமி எழுத்திலிருந்து தமிழகத்தில் முதலில் கிளைத்துப் படர்ந்த எழுத்து முறை வட்டெழுத்தாகவே இருக்கும் எனக் கருதுகிறேன். பல்லவர், தமிழ்க் கிரந்த எழுத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முன்பே, இந்த வட்டெழுத்து, கி.பி. 4-ஆம் நூற்றாண்டு அளவில் தமிழக மக்களிடையே புழக்கத்தில் இருந்த வழக்கெழுத்து என்பதில் ஐயமிருக்காது என நம்புகிறேன். காரணம், முற்காலப் பல்லவர், ஆந்திரப்பகுதியில் அரசு இருக்கை அமைத்துக்கொண்டு காஞ்சியைக் கைப்பற்றிய நிலையில், ஆந்திரப்பகுதியில் நிலக்கொடை அளித்த செய்திகளை ஆவணப்படுத்தி வெளியிட்ட செப்பேடுகளில் ஒன்றான சிம்மவர்மனின் விழவட்டிச் செப்பேட்டில், அக்காலத்தே வழக்கிலிருந்த வட்டெழுத்திலிருந்து சிறப்பு “ழகரத்தை எடுத்துக் கையாண்டுள்ளனர் என்பதே. செப்பேட்டின் அந்தப் பகுதியைக் கீழுள்ள படத்தில் காண்க.

நண்பர் இராஜகுரு அவர்கள் அனுப்பியிருந்த மேற்படி வட்டெழுத்துக் கல்வெட்டினைப் பற்றிய பகிர்வே இக்கட்டுரை.

கமுதி அய்யனார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஒரு கோயில் வழிவிட்ட அய்யனார் கோயில் ஆகும். இக்கோயிலில் காணப்படும் தனிக்கல் ஒன்றில் வட்டெழுத்துகளாலான கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டினைப் படித்துக் கல்வெட்டுப்பாடத்தை 2003-ஆம் ஆண்டு “ஆவணம்  இதழில் பதிவு செய்துள்ள தொல்லியல் அறிஞர் முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள், இக்கல்வெட்டின் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிடுகிறார். தமிழ் பிராமி எழுத்திலிருந்து பிரிந்து முறையாக வளர்ச்சியுற்ற வட்டெழுத்து, சோழர், தமிழ் எழுத்தைத் தம் ஆட்சிப்பரப்பு முழுதும் நிலை நிறுத்திய பின்னர், தன் (நல்ல) நிலையில் இருந்து வழுவத்தொடங்கிற்று எனலாம். எழுத்துக்கெழுத்துத் தெளிவான வேறுபாடு கொண்டிருந்த - மக்கள் எழுத்தான – வட்டெழுத்துகளை, மக்களே அக்கறைக் குறைவினால், ஒரே வடிவத்தில் இரண்டு மூன்று எழுத்துகளை எழுதியும், வேகமாக எழுதும் ஒரு போக்கைக் கையாண்டும் குழப்பிப் பயன்பாட்டைக் குறைத்துவிட்டனர் எனலாம். அல்லது சோழர் நடைமுறைப்படுத்திய தமிழ் எழுத்தின் ஆதிக்கத்தால் வட்டெழுத்துப்பயன்பாட்டில் தொய்வும், குறைபாடும் ஏற்பட்டன எனலாம். கமுதிக் கல்வெட்டு, வட்டெழுத்தின் நிறைவான வடிவத்தைக் கொண்ட நிலையில் சிறப்புப் பெற்றதாக அமைகிறது. எழுத்துகள் மிக அழகாக எழுதப்பட்டுள்ளன. முன்னரே குறித்தவாறு, இக்கல்வெட்டு எழுத்துகள் பயிற்சி மாணவர்க்கேற்றவை.





கல்வெட்டின் பாடம் (கட்டுரை ஆசிரியர் படித்தவாறு) :

1    ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடை
2    கு யாண்டு
3    ம் யாண்டு கும்ப ஞா
4    லாகத் திருப்பாற்..
5    அரிகேரி ஈச்வர(தே)
6    ர்க்கு நொந்தா விளக்(கு)
7    கு இவ்வூர் தேவ(னா)
8    நங்கை ஆயின தி(ரு)
9    மகள் சோநைப் பிரா(ட்)
10   த்தி வைத்த நிறைகு(றை)
11   ழங்காசு பதினை
12   காசினால் காசின்வாய்த் திங்
13   கள் நாழி நெய்ப் பொலியா(க)
14   த்திங்கள் பதினைந்நாழி
15   நெய்யாலும் நிசதிப்ப
16   டி உரிய் நெய்யால் ஒரு நொந்
17   தா விளக்கு முட்டாமே எரி
18   ப்பதாக இத்தளிஇல் அக
19   நாழிகையார்க்கு நெய்ப்பொ
20   லி ஊட்டாகக் குடுத்த ..


குறிப்பு :   சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம். 


கல்வெட்டுச் செய்திகள்

கல்வெட்டின் காலம்

கல்வெட்டு, பாண்டியர் காலக் கல்வெட்டு. கல்வெட்டில் காணப்பெறும் “கோச்சடை  என்னும் பெயர் கோச்சடையவர்மன் என்னும் பாண்டிய அரசனைக் குறிக்கிறது. சடையவர்மன், மாறவர்மன் ஆகிய இரு பட்டப்பெயர்களும் பாண்டிய அரசர்கள் ஒருவரை அடுத்து இன்னொருவர் எனச் சூட்டிக்கொள்கின்ற பெயர்களாகும். அரசனுடைய இயற்பெயரும் அவனது ஆட்சி ஆண்டும் எழுதப்பட்ட வரிகள், கல்வெட்டு ஒரு புறமாக உடைந்துவிட்ட காரணத்தால் புலப்படாது போயின. யாண்டுஎன்னும் சொல் இரு முறை கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. ஒன்று, அரசனின் ஆட்சியாண்டையும் மற்றொன்று, தமிழ் வட்ட ஆண்டையும் குறிப்பனவாய்க் கொள்ளலாம். ‘கும்ப ஞா  என்னும் சொல், கும்ப ஞாயிறு என்பதைக்குறிக்கும். கும்ப ஞாயிறு, மாசி மாதத்தைக் குறிக்கும். இடைக்காலக் கல்வெட்டுகளில், மாதங்களின் பெயர்களைக் குறிக்க, இன்றுள்ள வழக்குப்போல சித்திரை, வைகாசி என எழுதப்படுவதில்லை. மாறாக, வான நூல் அடிப்படையில் மேஷம் முதல், மீனம் முடிய உள்ள பன்னிரண்டு இராசிப்பெயர்களால் குறிக்கப்பட்டன.  சித்திரை மாதம், ஞாயிறு (சூரியன்)  மேஷராசியில் இருக்கும். எனவே, சித்திரை மாதம் மேட ஞாயிறு ஆனது. தொடர்ந்து ஞாயிற்றின் இடம்பெயர்தலை அடிப்படையாகக் கொண்டு மீதி மாதங்களின் பெயர்கள், மீதி இராசிப் பெயர்களை ஏற்று அமையும்.

திருப்பா(பொ)ற்புனத்து அரிகேசரி ஈசுவரர்

அடுத்து, கல்வெட்டில் வருவது ஓர் ஊரின் பெயர் (வரி 4). திருப்பாற்  என்பதாக ஒரு குறைச் சொல்லாய் நிற்கிறது. கல்லின் உடைந்துபோன பகுதியில் மீதி எழுத்துகள் இருக்கும். இதே கல்லின் பின்புறத்தில் பொறிக்கப்பட்ட முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஒன்று, ஊரின் பெயரை திருப்பொற்புனம் என்று குறிப்பிடுவதாகச் சாந்தலிங்கம் அவர்கள் தம் பதிவில் குறித்திருக்கிறார். (ஒரே கல்லில் பாண்டியரின் கல்வெட்டும் சோழரின் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளமை  வியப்பளிக்கிறது.) வட்டெழுத்துக் கல்வெட்டில், திருப்பாற்என்று தெளிவாக உள்ளதால் ஊர்ப்பெயர் திருப்பாற்புனம் என்று கருத வாய்ப்பு உண்டு. அல்லது, வட்டெழுத்துக் கல்வெட்டில் பிழையாக எழுதியுள்ளனர் என்றும் கருதலாம்.

கோயிலில் எழுந்தருளிய இறைவனின் பெயர் அரிகேசரி ஈசுவரர் என்பதாகும். பராந்தகனின் கல்வெட்டிலும் இப்பெயரே உள்ளது.

கொடை-கொடைப் பொருள்- கொடையாளி

அடுத்து வரும் வரிகளில் (வரி-6, மற்றும் வரி-10-11) நொந்தாவிளக்கும், “ழங்காசு பதினை  ஆகிய குறைச் சொற்களும் வந்துள்ளன. கோயிலில் நொந்தாவிளக்கெரிக்கப் பழங்காசு பதினைந்து கொடையாக அளிக்கப்பட்டது என்னும் செய்தி தெளிவாகிறது. 

கொடை கொடுத்தவர் பெயர் சோனைப்பிராட்டி என்பதாகக் கல்வெட்டுச் சொற்களிலிருந்து  அறியலாம். சோனைப்பிராட்டியின் தாய் பெயரும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், முழுப்பெயரையும் அறிய இயலாதவாறு கல் உடைந்து போயுள்ளது. அவள் பெயர் நங்கை எனலாம். அவள், ஒரு வேளை கோயிலின் தேவரடியாராக இருக்கலாமோ என்னும் ஐயத்தைக் கல்வெட்டில் வரும் தொடர் “இவ்வூர் தேவ…..நங்கை ஆயின திரு…  எழுப்புகிறது. அடுத்து, த்தி வைத்த  என்னும் தொடர் (வரி-10), மேற்படி சோனைப் பிராட்டி என்பவள் தன் தாய் நங்கையின் நலம் வேண்டி விளக்குக் கொடை அளிக்கிறாள் எனக் குறிப்பதாய்க் கருதலாம். ஒருவரின் நலத்துக்காக என்றும், அரசரின் நன்மைக்காக என்றும் ஒரு நிவந்தம் கோயிலுக்கு அளிக்கப்படுகையில் சாத்திஎனக் கல்வெட்டில் குறிப்பது வழக்கு. நிறைகு………..ழங்காசு   என்னும் தொடர் “நிறைகுறையாப் பழங்காசு   என விரியும். சரியான நிறையுடைய பழைய நாணய வகை என்பது பொருள். 

முதலீடும் வட்டியும்

கொடையாளி,  முதலீடாக வைத்தது பழங்காசு பதினைந்து ஆகும். இக்காசு பதினைந்துக்குப் பொலியாக (வட்டியாக) மாதந்தோறும் பதினைந்து நாழி நெய் பெறப்படும். எனவே, காசு ஒன்றுக்குப் பொலி ஒரு நாழி நெய். நாழி என்னும் முகத்தல் அளவினைச் சென்ற நூற்றாண்டின் “படி  என்னும் அளவீட்டுடன் ஒப்பிடலாம். பதினைந்து காசுக்கு மாதம் பதினைந்து நாழி நெய் என்பதிலிருந்து, ஆண்டுக்கு நூற்றெண்பது நாழி நெய் என்பது பெறப்படும். ஒரு நாழிக்கு இரண்டு உரி என்னும்  கணக்கீட்டுப்படி, நூற்றெண்பது நாழிக்கு முன்னூற்று அறுபது உரி. ஆண்டு முழுதும் முன்னூற்று அறுபது உரி நெய் அளிக்கப்பட்டது. அதாவது ஒரு நாளில் ஓர் உரி. இதைக்  கல்வெட்டு நிசதிப்படி உரிய் நெய்யால்  (வரி-16)  என்று குறிக்கிறது. கல்வெட்டின் இச்செய்தி மற்றும் கணக்கிடுதல் முறை இரண்டிலிருந்தும், ஓர் ஆண்டுக்கு முன்னூற்று அறுபது நாள் என்பதாக அக்காலத்தே கணக்கிட்டுள்ளனர் என அறிகிறோம். ஒரு காசுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு நாழி நெய் வட்டி என்பதனைக் குறிக்க “காசின்வாய்  என்னும் தொடர் கல்வெட்டில் பயன்படுத்தப்படுகிறது. இது கல்வெட்டு வழக்குக்கே உரிய ஒரு சொல்லாட்சி. பொலி ஊட்டு என்பது வட்டி வருவாயைக் குறிக்கும் சொல்லாகும் (வரி-20). 

தன்மம் தடைபடாதிருத்தல்

விளக்கெரிக்கும் அறச் செயல், ஆண்டாண்டு தோறும் தடையின்றி நிறைவேற்றப்படல் வேண்டும் என்பதைக் குறிக்கக் கல்வெட்டில் வரும் சொல் “முட்டாமே  என்பதாகும். எனவே, நொந்தாவிளக்கு முட்டாமே எரிப்பதாக  என எழுதப்பட்டுள்ளது. முட்டாமே=முட்டாமல். முட்டாமல் விளக்கெரிதலைக் கண்காணிக்கும் பொறுப்பு கோயிலின் ‘அகநாழிகையார்க்குள்ளது.  அகநாழிகை என்பது கோயிலின் கருவறையைக் குறிக்கும். ‘அகநாழிகையார்என்பவர், கருவறைப் பூசையாளர். பூசனை, பூசாரி ஆகிய சொற்கள் சமற்கிருதம் சார்ந்தன. பூசை என்பதற்கு நல்ல தமிழ்ச் சொல் வழிபாடு. பல்லவ அரசன் முதலாம் பரமேசுவரன் காலத்துக் கூரம் செப்பேடு (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு) பூசையாளரைத் “தளி வழிபாடு செய்வார்என்று குறிக்கிறது. கல்வெட்டுகளில் அகநாழிகை, உண்ணாழிகை என இரு தொடர்களும் பயின்றுவரும். உள்+நாழிகை-> உண்ணாழிகை.

கோயிலுக்கு இன்னொரு பெயர் தளி

கோயிலைக் குறிக்கும் பழம்பெயர் தளி என்பது. பல்லவர் காலத்திலேயே (கி.பி.7-ஆம் நூ.ஆ.)  ‘தளி  என வழங்கியதை மேலே குறிப்பிட்டுள்ளோம். தளி என்னும் சொல்லாட்சி, கோயில்கள் செங்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட காலத்தில் இருந்த வழக்கு எனக் கருதலாம். கூரம் செப்பேடு, ஒரு மண்டபம் கட்டவேண்டி நிலம் ஒதுக்கப்பட்டதைக் கூறும்போது,  (செங்கல்) சூளை பற்றிக் குறிப்பிடுகிறது. எனவே, கூரம் கோயில் முதலாம் பரமேசுவரன் காலத்தில் செங்கல் கட்டுமானத் தளியாக இருந்தமை அறிகிறோம். (செங்கற்கள் செய்யும்  தொழில் இடம், சூளை என்னும் பெயரால் வழங்கும் மரபு பண்டு தொட்டே - 7-ஆம் நூற்றாண்டு -  இருந்தது என்பதைக் காண்கிறோம்.)  கமுதி வட்டெழுத்துக் கல்வெட்டு, தனிக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளதையும் கல்வெட்டில் தளிஇல் அகநாழிகையார்க்குஎன வரும் தொடரையும் நோக்குகையில், கல்வெட்டில் குறிப்பிடப்பெறுகின்ற அரிகேசரி ஈசுவரம் என்னும் பெயரில் ஒரு செங்கற்கட்டுமானச் சிவன் கோயில் இருந்துள்ளமை புலப்படுகிறது.

சூளை என்னும் சொல் வழக்கு, பண்டைய காலத்தில் இருந்தாலும், செங்கல் என்னும் சொல் பழங்கல்வெட்டுகளில் பயின்று வருகிறதா எனத் தெரியவில்லை. தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி நூலில் இச்சொல் காணப்படாததால் செங்கல் சொல் வழக்கு பண்டு (கல்வெட்டுகளின் அடிப்படையில்) இல்லை எனலாம். ஆனால், இட்டிகை என்னும் சொல் செங்கல்லைக் குறித்தது என்பதைத் திருக்கோடிக் காவல் கோயில் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். இக்கோயில் முன்னர் ஒரு செங்கல் கட்டுமானக் கோயிலாக இருந்துள்ளது. உத்தம சோழனின் தாயாரான செம்பியன்மாதேவி இக்கோயிலைக் கற்றளியாக மாற்றிக் கட்டுவித்தபோது பொறிக்கப்பட்ட கல்வெட்டில், செங்கற் கட்டுமானத்தை “இட்டிகைப்படையாலுள்ள ஸ்ரீகோயில்  எனக் குறிப்பிடுகிறது. (க.வெ. எண் : 292  SII Vol-XIX)  மேலும், செங்கற்கட்டுமானமாய்க் கோயில் இருந்தபோது தனிக்கற்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளின் படிகளைப் (பாடம் அல்லது வாசகம்) புதிதாகக் கட்டிய ஸ்ரீவிமானத்தில் மீண்டும் பொறிக்கச் செய்துள்ளார்கள் என்பதையும் இக்கல்வெட்டு கூறுகிறது. வெவ்வேறு கல்லால் பலவிடத்திலாய்க் கிடந்த அவையெல்லாம் இந்த ஸ்ரீவிமானத்தின்மேல் ஏற வெட்டிக்கொள்க என்று அருளிச் செய வெட்டினபடி முன் கிடந்த படிகளில் இது ஒரு படி   என்னும் முன்னுரையோடு பழங்கல்வெட்டு  (பாண்டியனின் கல்வெட்டு) உள்ளவாறே பொறிக்கப்பட்டது. புதிய கல்வெட்டில் “தனிக்கல்  என்னும் சொல் காணப்படுதலும் கருதத்தக்கது.

வட்டெழுத்துக் கல்வெட்டின் எழுத்தமைதி


கீழே இரு ஒளிப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  முதல் படம்,  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உள்ள திருநாதர் குன்றில் இருக்கும் சமணக்கல்வெட்டின் படம். வட்டெழுத்தின் வளர்ச்சி நிலையின் முதல் கட்டத்தைச் சேர்ந்தது. 



திருநாதர் குன்று - 5-ஆம் நூற்றாண்டு
இதில், இறுதி வரியைக் காட்டும் படம் கீழே உள்ளது.  இதன் பாடம் :

சி ரி க ரு  நி சீ  தி  கை.

இவற்றில்,  சி,   ரி,   நி,   தி   ஆகிய  எழுத்துகள்  இகர உயிர்மெய் எழுத்துகள். இவற்றில் இகரத்தைக் குறிக்கும்  இணைப்புக் குறிகள்,  மூல எழுத்துகளின்  தலைப்பகுதியில் வலமிருந்து இடமாக மேல்நோக்கிச் செல்லும் வளைவுகளால் அமைந்திருக்கக் காணலாம்.


                                               சி    ரி                  நி                   தி 



இரண்டாம் படம்,  தூத்துக்குடி மாவட்டம், கழுகு மலையில் உள்ள சமணக் கல்வெட்டின் படம்.  வட்டெழுத்தின் வளர்ச்சி நிலையின் இரண்டாம்  கட்டத்தைச் சேர்ந்தது.  இது முதிர்ந்த நிலை.  


கழுகுமலை -  8-9 நூற்றாண்டு
இதன் பாடம் :

       ஸ்ரீ அச்சணந்தி
       தாயார் குணமதி
       யார் செய்வித்
       த திருமேனி
      

இவற்றில்,  தி,  வி,   னி   ஆகியன இகர உயிர்மெய் எழுத்துகள்.    இவற்றில் இகரத்தைக் குறிக்கும்  இணைப்புக் குறிகள்,  மூல எழுத்துகளின்  பக்கவாட்டுப் பகுதியில்  வளைவுக் கோடுகளைக் கொண்டுள்ளன.   இவை வட்டெழுத்தின் முழு வளர்ச்சியில் அமைந்தவை. 


                                                                       தி




                                                                 
                                                                           வி



                                                                        னி



இவ்வெடுத்துக்காட்டுகள்,  வட்டெழுத்தின் இரண்டு கட்ட எழுத்தின் வடிமைப்பாகும்.   கமுதி வட்டெழுத்துக் கல்வெட்டில் உள்ள எழுத்துகளை  இவற்றுடன்  ஒப்பிடும்போது, கமுதிக் கல்வெட்டின் வட்டெழுத்து இரண்டாம் கட்ட  முதிர்ந்த நிலையில் அமைந்திருந்தாலும்  இகர உயிர்மெய் எழுத்துகளில்  இணைப்பு வளைவுகள்  முதல் நிலையைச் சேர்ந்தவையாகவே இருப்பதைக் காண்கிறோம். 


                                                                           சி
                                 


              
                                                                         தி



                                                                         வி



கமுதிக் கல்வெட்டில் மொழியும், இலக்கணமும்

வரி 16 :       உரிய்


பதினாறாம் வரியில் உள்ள உரி   என்னும் சொல் ,    கல்வெட்டில்  “உரிய்”   என  யகர மெய்யை இறுதியில் இணைத்துக்கொண்ட நிலையில் எழுதப்பட்டுள்ளது.  இதற்கான இலக்கணக் குறிப்பு  தெரியவில்லை.  ஆனால், இவ்வாறு எழுதும் வழக்கு, தொல் தமிழ் எழுத்தான தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் இருப்பதைக் காணலாம்.  கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளம் பிராமிக் கல்வெட்டில்,  “கணிய்”  என்றும், அதே நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமங்கலம் பிராமிக்கல்வெட்டில் “அந்தைய்”  என்றும்  பொறிக்கப்பட்டுள்ளன.  படங்கள் கீழே :


கணிய்



அந்தைய்

வரி 18 :       தளிஇல்   

கல்வெட்டின் பதினெட்டாம் வரியில்  ”தளிஇல்”    என்று பொறிக்கப்பட்டுள்ளது.   தமிழ் மொழி இலக்கணப்படி,  தளி,  இல்  ஆகிய இரு சொற்கள் புணரும்போது,   ”தளியில்”    என்றமையும்.   அதாவது, இரு சொற்களுக்கும் இடையில் உடம்படு மெய்யாக யகர மெய் தோன்றும். ஆனால்

கல்வெட்டில், யகர மெய்  இடையில் வராமல் இரு சொற்களும் இயல்பு நிலையில் உள்ளன. கல்வெட்டுகளில் இவ்வாறு  அமைவது  இயல்பாக இருப்பதை ஒரு சில கல்வெட்டுகளில் காண்கிறோம்.  எடுத்துக்காட்டாக,  ஆனைமலை வட்டெழுத்துக்கல்வெட்டில்,  ”மாறன் எயினன்”  என்னும் சொல் ”மாறன்னெஇனன்”  என்று எழுதப்பட்டிருக்கும்.  எனவே, இரு உயிர் எழுத்துகளை  இணைப்பின்றி  உள்ளவாறே எழுதும் வழக்கும் கல்வெட்டுகளில் இருந்துள்ளதை அறிகிறோம்.  (கல்வெட்டுகளில் சந்திப்பிழை என்ரும் கொள்ளலாம்).

முடிவாக,  கமுதி  அய்யனார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டு  பல சிறப்புக்கூறுகளைக் கொண்டுள்ளது என்பதிலும் வட்டெழுத்துப் பயிற்சி மேற்கொள்வோருக்கு அருமையனதொரு களமாக அமைந்துள்ளது என்பதிலும்  ஐயமில்லை.





பார்வை நூல்கள் :

1.   தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி
      சாந்தி சாதனா, சென்னை - வெளியீடு.
2    கல்லெழுத்துக் கலை       -  நடன. காசிநாதன்
      வெளியீடு- மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

3   EPIGRAPHIA INDICA Vol-I

4   EPIGRAPHIA INDICA Vol-XXIV

5   SOUTH INDIAN INSCRIPTIONS Vol-XIX

6   ஆவணம் - ஆண்டிதழ்-2003
     வெளியீடு - தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.

7   தமிழ் - பிராமி கல்வெட்டுகள்
     வெளியீடு - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.

நன்றி : திரு. இராஜகுரு,  தொல்லியல் ஆய்வாளர், இராமநாதபுரம்.

படங்கள் உதவி :   திருச்சி பார்த்தி.
                                     இணையம்.






துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.