அதியரும் கொங்குநாடும்
வாணவராயர் அறக்கட்டளைச் சொற்பொழிவு
கோவையில், மாதந்தோறும், வாணவராயர்
அறக்கட்டளையினர் ஏற்பாட்டில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. பெரும்பாலும்
அவை, வரலாறு தொடர்புடையனவாய் அமைவது வழக்கம். அவ்வகையில், 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்
நடைபெற்ற நிகழ்ச்சியில், தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் நா. மார்க்சிய காந்தி
அவர்கள் மேலே கண்ட தலைப்பில் உரையாற்றினார்.
அது பற்றிய ஒரு பதிவு இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
முனைவர் நா. மார்க்சிய காந்தி
முனைவர் நா. மார்க்சிய காந்தி அவர்கள்
தமிழகத் தொல்லியல் துறையில் சேர்ந்து பணியாற்றிய முதல் பெண்மணி என்பது சிறப்புக்குரியது.
இச்செய்தியை அவர், 2014-ஆம் ஆண்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ஆற்றிய உரையில் சுவையாகக்
குறிப்பிடுகிறார். கல்வெட்டுத் துறை அவரை எவ்வாறு
ஈர்த்துப் பிடித்தது என்பதை அவர் கூற்றிலேயே இங்கு காணலாம். அவருடைய உரையில் உளம் திறந்த
ஒரு நேர்மையும் எளிமையும் காணக்கிடைக்கின்றன. இந்த முழு உரையையும் கேட்பவர் கல்வெட்டியலில்
ஆர்வம் கொள்ளாமல் இருக்க இயலாது.
“ தமிழ் படித்துவிட்டு இந்தத் துறைக்கு
வந்ததே ஒரு கொடுப்பினை. 1972-73 காலகட்டத்தில், கல்வெட்டுகள் படிப்பதில் ஆற்றல் உடையவர்கள்
மட்டுமல்ல, படிக்கத் தெரிந்தவர்களாகக்கூட விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்தனர்.
தில்லியில் “தொல்லியல் பள்ளி” (SCHOOL OF ARCHAEOLOGY) என்னும் ஒரு பயிற்சி நிறுவனம்
மட்டிலுமே இருந்தது. சமற்கிருதம் அல்லது வரலாறு படித்தவர்கள் மட்டுமே அதில் சேர்ந்து
பயிலமுடியும். பிற மொழிப் படிப்புப் படித்தவர்க்கு அங்கு இடமில்லை. இந்திய அளவிலான
கல்வெட்டுகளின் எண்ணிக்கையில், தமிழ்நாட்டில் மட்டுமே ஐம்பது விழுக்காட்டுக்கு மேல்
கல்வெட்டுகள் இருக்கும் நிலை. இந்தப் புரிதலில், கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் ஒன்றைத்
திரு. நாகசாமி அவர்கள் ஏற்படுத்தினார். தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் விருப்பமுடைய
முதுகலைத் தமிழ் மாணவர்களைச் சேர்ப்பது பயிற்சியை மகிழ்ச்சியோடு செய்வதாக இருக்கும்
என்ற புரிதலில், தமிழ் முதுகலைப் படிப்புப் படீத்தவர்கள் சேரலாம் என்ற நிலையை அவர்
உருவாக்கினார். ஆண்டுக்கு எட்டுப்பேர் சேர்ப்பதாகத் திட்டம். பயிற்சி நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே நான் படித்தேன்.
பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள்ளேயே, இந்த அறிவுப்புலத்துக்குக் கிடைத்த அறிமுகம் பிடிவாதமாய்
என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டது. வேறு வாய்ப்புகள் கிடைத்தும் இதை விட்டுப் போக இயலவில்லை.
தமிழ் நாட்டில் உள்ள கல்வெட்டுகளைப் படித்துப் புரிந்துகொள்ளவே வாழ்நாள் போதாது. ”
இனி, கோவை உரையிலிருந்து…….
கொங்கு நாட்டு அதியர்கள்
பழங்காலத்தில், கொங்குநாட்டில் சிறு
சிறு தலைவர்கள் மிகுதியும் இருந்தனர். இவர்கள், குடி மரபுத் தலைவர்கள், ஊர்க்கிழார்கள்
எனப் பல பெயர்களால் அறியப்பட்டவர்கள். அவ்வாறான தலைவர் மரபுகளுள் சிறந்த ஒரு மரபு அதியர்
மரபு. சங்க நூல்களில் அதியரைப் பற்றிய பாடல்கள் என நாற்பத்து நான்கு உள்ளன. மூவேந்தர்களை
அடுத்த ஒரு நிலையில் வைத்துப் பாடப்பெற்ற தலைவர்கள் அதியர் ஆவர். தமிழகத்தின் வடவெல்லையில்
அவர்களது இருப்பிடம் அமைந்திருந்தது. மேற்கு மலைத் தொடரும் கிழக்கு மலைத்தொடரும் இணையும்
பகுதி அவர்கள் பகுதி. கனிம வளங்களும், காட்டு வளங்களும் நிறைந்த பகுதி. மலைபடு பொருள்களின்
வளத்தால் வணிக வழிகள் நிறைந்த பகுதியாகத் திகழ்ந்தது. குறு நாடு என்னும் நாமக்கல் பகுதி
அதியர் நாடாக அறியப்படுகிறது.
நடுகல் வழிபாடு
இடைக்காலத்தைச் சேர்ந்த சமண, பௌத்தத்
தடயங்கள் இங்கு கிடைத்துள்ளன. நடுகல் வழிபாடு மிகுதியாக இருந்த பகுதி அதியர் பகுதி.
பூசல் என்னும் சிறு போர்கள் மிகுதியும் நிகழ்ந்துள்ளன. எனவே, நடுகற்களும் மிகுதி. நடுகற்களில்
அதிய மரபுத் தலைவர்கள் பேசப்படுகிறார்கள். ஒட்டம்பட்டி, இருளப்பட்டி ஆகிய ஊர்களில்
இவ்வகை நடுகற்கள் உள்ளன.
குடைவரைக் கோயில்
பல்லவர், பாண்டியர் போன்று அதியரும்
6-7-ஆம் நூற்றாண்டில் நாமக்கல் பகுதியில் வைணவம் சார்ந்த குடைவரைக் கோயிலை எழுப்பியிருக்கிறார்கள்.
கங்கரோடு போர்
கங்கர்கள் தர்மபுரியைத் தாண்டிப்
படையெடுத்து வந்துள்ளனர். அவர்கள் அதியரைத் தாக்கியுள்ளனர். ஆனால், அதியர் கங்கரை அடிப்படுத்தினர்.
தலைக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் எல்லைக்காவல் பணி அதியர் பணியாக இருந்தது.
சோழர் தொடர்பு
குறும்பனையூர் அதியன் ஒருவன், திறை
கொடாது சோழரை எதிர்த்த செய்தி பெரியபுராணத்தில் காணப்படுகிறது. அதியர், அரசியல் அறிவு நிரம்பப்பெற்றவர்கள்; சோழர்,
அதியர்களிடம் பெண்ணெடுக்கும் வகையில் சோழருடன் உறவு பேணப்பட்டது. பதிற்றுப்பத்தில்
அதியர், வேளிர் குடியில் பெண்ணெடுத்த செய்திக் குறிப்பு உள்ளது. அதியரும் சேரரும் மழவர்
என்று போற்றப்படுகின்றனர். வீரமும் இளமையும் உள்ளவர் மழவர். சோழர்களின் வீழ்ச்சிக்
காலமான 12-13-ஆம் நூற்றாண்டில் அதியர் சிற்றரசர்களாய்த் திகழ்ந்தனர். அதியமானார் என்னும்
பெயருடன் சோழ அரசர் போலத் தோற்றம் கொண்டிருந்தனர். இராஜராஜ அதியமான் என்னும் பெயரும், விடுகாதழகிய
பெருமாள் என்னும் பெயரும் அறியப்படுகின்றன.
இராஜராஜ அதியமானின் மகன் விடுகாதழகிய பெருமாள் என்று கூறப்படுகிறது. பேரரசர்கள், அதியரைப்
பயன்படுத்தி - அதியர் துணையுடன் - போசளரைத் தடுக்கின்றனர்.
சமணத்துக்கு ஆதரவு
அதியர் சமணர்களுக்கு ஆதரவு தந்தவர்கள்.
வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருமலையில் அதியர் கல்வெட்டு உள்ளது. கோட்டைக் கோயிலுக்கு
அதியனே நேரில் வந்து நீர்வார்த்து நிவந்தங்கள் அளித்திருக்கிறான். எழினி, அஞ்சி ஆகியவை
சங்ககாலத்தில் அதியருக்கு வழங்கிய பெயர்களாகும். புகழ் பெற்ற ஜம்பை பிராமிக்கல்வெட்டில்
அஞ்சி என்னும் பெயர் உள்ளது.
”ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி
ஈத்த பளி”
என்பது கல்வெட்டு வரி. “ஸதியபுதோ” என்பதில் உள்ள ’சதிய’ என்னும் சொல், தொல் திராவிடமொழிச் சொல் வடிவமாகும்.
‘அதிய’ என்பதன் பழம் வடிவம். “ஸதியபுதோ” என்னும்
சொல் மௌரியப் பேரரசன் அசோகனின் கல்வெட்டில் காணப்படும் பிராகிருதச் சொல்லாகும். மௌரியர்கள் மலைகளில் வழியை அமைத்துக்கொண்டு வந்தார்கள்
என்னும் குறிப்பு சங்க நூல்களில் காணப்படுகிறது.
நாமக்கல் குடைவரைக் கோயில்
அதியர், நாமக்கல்லில் இரண்டு குடைவரைக்
கோயில்களை எழுப்பியுள்ளனர். நாமக்கல்லின் பழம்பெயர் திரு ஆலைக்கல் என்பதாகும். கி.பி.
860-இல் இக்குடைவரைக் கோயில்கள் எழுப்பப்பட்டன. இரண்டுமே வைணவக் கோயில்கள். ஒன்றில்
பால நரசிம்மர் அமைதியான தோற்றத்துடன். ஹரிஹர
மூர்த்தியின் உருவமும் இதில் உள்ளது. இன்னொன்றில் அனந்த சயனச் சிற்பம். பல்லவர், பாண்டியர்
கால அனந்த சயனச் சிற்பங்களில் காணப்படாத ஒரு சிறப்புக்கூறு இந்தச் சிற்பத்தில் காணலாம்.
நாகத்தின் முகத்தில் சிம்ம முகம் இருப்பதே அச்சிறப்புக்கூறு. திருமாலின் ஆயுதங்கள்
மனித உருவமாக வடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றின் கீழே பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்பானது.
இங்கு வாமனச் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது. வாமனச் சிற்பத்தைச் சுற்றிலும் பல உருவங்கள்
வடிக்கப்பட்டுள்ளன. இவை மார்க்கண்டேய புராணத்தில் வரும் பாத்திரங்களாகும். மாவலிச் சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்தபோது வாமன
அவதாரம் நிகழ்ந்தது. எனவே, வாமனர் சிற்பத்தொகுதியில் குதிரை உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.
பல்லவ கிரந்தம்
நாமக்கல் குடைவரைக் கோயிலில் பல்லவ
கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. கோயிலின்
பெயர் “அதியேந்திர விஷ்ணுகிருகம்”. இது பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. அதியனின்
சிறப்புப் பெயரான “அதிய அன்மயன்” என்னும் பெயரும்
பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. சமற்கிருதப் பெயரான “அதிய அன்மய” என்பது தமிழ்ப்பெயர்களில் உள்ள “அன்” விகுதி சேர்த்து எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற குடைவரைக் கோயில்கள்
தான்தோன்றி மலையில் உள்ள முழுமை
பெறாத அரைகுறைக் குடைவரைக் கோயில் அதியர் பணி எனக் கருதப்படுகிறது. இதுவும் ஒரு வைணவக்
கோயிலாகும். கோயிலின் பூதவரி பார்க்கும்படியுள்ளது.
கூத்தம்பூண்டியிலும் முழுமை பெறாத
ஒரு குடைவரைக்கோயில் உள்ளது. இதுவும் அதியர் பணியே.
அதியரின் இறுதிக்காலம்
தலைக்காட்டுப் பகுதியில் நடந்த ஒரு
போர் பற்றிய கல்வெட்டில் அதியமான் ஒருவனின் பெயரும், அவன் போரில் இறந்த செய்தியும் காணப்படுகிறது. அதியரின் இறுதிக்காலங்களில் அதியமான் குலத்தவர்,
கொங்குச் சோழரின் கீழும், பாண்டியரின் கீழும் அதிகாரிகளாகப் பணியாற்றினர்.
முடிவாக
அதியர் வணிகத்தில் சிறந்தவராய்த்
திகழ்ந்தனர். அதியர் காலத்தில் வணிக வழிகள் பல இருந்துள்ளமைக்குச் சான்றுகள் கிடைத்துள்ளன.
தகடூரிலிருந்து காஞ்சி வரையில் சென்ற ஒரு பெருவழி அதியமான் பெருவழி என்னும் பெயரால்
வழங்கியது. மற்றொரு பெருவழி பற்றிய கல்வெட்டில் “நாவல் தாவளம் 27” என்னும் எழுத்துப்பொறிப்பு காணப்படுவதோடு
“27” என்னும் எண்ணைக் குறிக்கும் வகையில் குறியீட்டுக்
குழிகள் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு கல்வெட்டில், “மகதேசன் பெருவழி” என்னும் பெயர் காணப்படுகிறது.
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
கோவை.
அலை பேசி : 9444939156.
அருமையான உரைப் பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குதமிழ் விக்கிபீடியா நவம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.
தங்கள் பணி பற்றி நன்கு அறிவேன் ஐயா. அவ்வப்போது தங்களுடைய கட்டுரைகளுக்குப் பின்னூட்டமாக எழுத இயலாமல் போவதற்குத் தாங்கள்தாம் பொறுத்துக்கொள்ளவேண்டும். விக்கி பீடியா போட்டியில் தாங்கள் தெரிவு செய்யப்படுதல் வேண்டும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு