கமுதி அய்யனார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டு
முன்னுரை
நண்பர் திரு. இராஜகுரு, இராமநாதபுரத்தில்
இருந்துகொண்டு தொல்லியல் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுவருபவர். அப்பகுதியில் வெளிப்படாத
தொல்லியல் எச்சங்களையும், கல்வெட்டுகளையும் தேடிச் செய்திகள் கொணர்ந்து வெளிப்படுத்தித் தொல்லியல் கழகத்தின் ஆண்டு வெளியீடான “ஆவணம்”
- வரலாற்றுப் பதிவுகள் கொண்ட - இதழில்
பதிவு செய்துவருபவர். அத்தோடு, பள்ளி மாணாக்கர்க்குத் தொல்லியல், வரலாறு ஆகியன பற்றிய
புரிதலை ஏற்படுத்தி அவர்களைக் கொண்டே சிறு வரலாற்றுக் கட்டுரைகளை எழுத வைத்து நூலாக்கி
மகிழ்ந்தவர்.
வட்டெழுத்தின் மேல் எனக்கேற்பட்ட
ஓர் ஈர்ப்பினால், வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் வட்டெழுத்துகளில் அமைந்த கல்வெட்டுப் படங்களைத்
தேடிச் சேர்த்து வருகிறேன். அந்த வகையில், நண்பர் திரு. இராஜகுரு அவர்கள் அண்மையில், என் வேண்டுகோலை ஏற்று ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டின் படத்தை அனுப்பியிருந்தார். கல்வெட்டு, மிகவும் அருமையானதொரு எழுத்தமைதியைக் கொண்டதாகவும், அழகாகவும் இருந்தது. வட்டெழுத்துகளைக் கற்று, படிக்கவும் எழுதிப்பழகவும்
பயிற்சி செய்வோருக்கு மிகவும் பயன்படுகின்ற ஒரு பாடப்பகுதி என அதைக் குறிப்பிடலாம்.
தமிழ் பிராமி எழுத்திலிருந்து தமிழகத்தில் முதலில் கிளைத்துப் படர்ந்த எழுத்து முறை
வட்டெழுத்தாகவே இருக்கும் எனக் கருதுகிறேன். பல்லவர், தமிழ்க் கிரந்த எழுத்தைப் பயன்பாட்டுக்குக்
கொண்டுவரும் முன்பே, இந்த வட்டெழுத்து, கி.பி. 4-ஆம் நூற்றாண்டு அளவில் தமிழக மக்களிடையே
புழக்கத்தில் இருந்த வழக்கெழுத்து என்பதில் ஐயமிருக்காது என நம்புகிறேன். காரணம், முற்காலப்
பல்லவர், ஆந்திரப்பகுதியில் அரசு இருக்கை அமைத்துக்கொண்டு காஞ்சியைக் கைப்பற்றிய நிலையில்,
ஆந்திரப்பகுதியில் நிலக்கொடை அளித்த செய்திகளை ஆவணப்படுத்தி வெளியிட்ட செப்பேடுகளில்
ஒன்றான சிம்மவர்மனின் விழவட்டிச் செப்பேட்டில், அக்காலத்தே வழக்கிலிருந்த வட்டெழுத்திலிருந்து
சிறப்பு “ழ”கரத்தை எடுத்துக்
கையாண்டுள்ளனர் என்பதே. செப்பேட்டின் அந்தப் பகுதியைக் கீழுள்ள படத்தில் காண்க.
நண்பர் இராஜகுரு அவர்கள் அனுப்பியிருந்த
மேற்படி வட்டெழுத்துக் கல்வெட்டினைப் பற்றிய பகிர்வே இக்கட்டுரை.
கமுதி அய்யனார் கோயில் வட்டெழுத்துக்
கல்வெட்டு
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில்,
கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஒரு கோயில் வழிவிட்ட அய்யனார் கோயில் ஆகும்.
இக்கோயிலில் காணப்படும் தனிக்கல் ஒன்றில் வட்டெழுத்துகளாலான கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டினைப் படித்துக் கல்வெட்டுப்பாடத்தை 2003-ஆம் ஆண்டு “ஆவணம்”
இதழில் பதிவு செய்துள்ள தொல்லியல் அறிஞர் முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள்,
இக்கல்வெட்டின் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிடுகிறார். தமிழ் பிராமி
எழுத்திலிருந்து பிரிந்து முறையாக வளர்ச்சியுற்ற வட்டெழுத்து, சோழர், தமிழ் எழுத்தைத்
தம் ஆட்சிப்பரப்பு முழுதும் நிலை நிறுத்திய பின்னர், தன் (நல்ல) நிலையில் இருந்து வழுவத்தொடங்கிற்று
எனலாம். எழுத்துக்கெழுத்துத் தெளிவான வேறுபாடு கொண்டிருந்த - மக்கள் எழுத்தான – வட்டெழுத்துகளை,
மக்களே அக்கறைக் குறைவினால், ஒரே வடிவத்தில் இரண்டு மூன்று எழுத்துகளை எழுதியும், வேகமாக
எழுதும் ஒரு போக்கைக் கையாண்டும் குழப்பிப் பயன்பாட்டைக் குறைத்துவிட்டனர் எனலாம்.
அல்லது சோழர் நடைமுறைப்படுத்திய தமிழ் எழுத்தின் ஆதிக்கத்தால் வட்டெழுத்துப்பயன்பாட்டில்
தொய்வும், குறைபாடும் ஏற்பட்டன எனலாம். கமுதிக் கல்வெட்டு, வட்டெழுத்தின் நிறைவான வடிவத்தைக்
கொண்ட நிலையில் சிறப்புப் பெற்றதாக அமைகிறது. எழுத்துகள் மிக அழகாக எழுதப்பட்டுள்ளன.
முன்னரே குறித்தவாறு, இக்கல்வெட்டு எழுத்துகள் பயிற்சி மாணவர்க்கேற்றவை.
கல்வெட்டின் பாடம் (கட்டுரை ஆசிரியர்
படித்தவாறு) :
1
ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடை
2
கு யாண்டு
3
ம் யாண்டு கும்ப ஞா
4
லாகத் திருப்பாற்..
5
அரிகேஸரி ஈச்வர(தே)
6
ர்க்கு நொந்தா விளக்(கு)
7
கு இவ்வூர் தேவ(னா)
8
நங்கை ஆயின தி(ரு)
9
மகள் சோநைப் பிரா(ட்)
10
த்தி வைத்த நிறைகு(றை)
11
ழங்காசு பதினை
12
காசினால் காசின்வாய்த் திங்
13
கள் நாழி நெய்ப் பொலியா(க)
14
த்திங்கள் பதினைந்நாழி
15
நெய்யாலும் நிசதிப்ப
16
டி உரிய் நெய்யால் ஒரு நொந்
17
தா விளக்கு முட்டாமே எரி
18
ப்பதாக இத்தளிஇல் அக
19
நாழிகையார்க்கு நெய்ப்பொ
20
லி ஊட்டாகக் குடுத்த ..
குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.
கல்வெட்டுச் செய்திகள்
கல்வெட்டின் காலம்
கல்வெட்டு, பாண்டியர்
காலக் கல்வெட்டு. கல்வெட்டில் காணப்பெறும் “கோச்சடை” என்னும் பெயர் கோச்சடையவர்மன் என்னும் பாண்டிய
அரசனைக் குறிக்கிறது. சடையவர்மன், மாறவர்மன் ஆகிய இரு பட்டப்பெயர்களும் பாண்டிய அரசர்கள்
ஒருவரை அடுத்து இன்னொருவர் எனச் சூட்டிக்கொள்கின்ற பெயர்களாகும். அரசனுடைய இயற்பெயரும்
அவனது ஆட்சி ஆண்டும் எழுதப்பட்ட வரிகள், கல்வெட்டு ஒரு புறமாக உடைந்துவிட்ட காரணத்தால்
புலப்படாது போயின. ’யாண்டு’ என்னும் சொல் இரு முறை கல்வெட்டில்
எழுதப்பட்டுள்ளது. ஒன்று, அரசனின் ஆட்சியாண்டையும் மற்றொன்று, தமிழ் வட்ட ஆண்டையும்
குறிப்பனவாய்க் கொள்ளலாம். ‘கும்ப ஞா’ என்னும் சொல், கும்ப ஞாயிறு என்பதைக்குறிக்கும்.
கும்ப ஞாயிறு, மாசி மாதத்தைக் குறிக்கும். இடைக்காலக் கல்வெட்டுகளில், மாதங்களின் பெயர்களைக்
குறிக்க, இன்றுள்ள வழக்குப்போல சித்திரை, வைகாசி என எழுதப்படுவதில்லை. மாறாக, வான நூல்
அடிப்படையில் மேஷம் முதல், மீனம் முடிய உள்ள பன்னிரண்டு இராசிப்பெயர்களால் குறிக்கப்பட்டன.
சித்திரை மாதம், ஞாயிறு (சூரியன்) மேஷராசியில் இருக்கும். எனவே, சித்திரை மாதம் மேட ஞாயிறு ஆனது. தொடர்ந்து ஞாயிற்றின் இடம்பெயர்தலை
அடிப்படையாகக் கொண்டு மீதி மாதங்களின் பெயர்கள், மீதி இராசிப் பெயர்களை ஏற்று அமையும்.
திருப்பா(பொ)ற்புனத்து
அரிகேசரி ஈசுவரர்
அடுத்து, கல்வெட்டில்
வருவது ஓர் ஊரின் பெயர் (வரி 4). ”திருப்பாற்”
என்பதாக ஒரு குறைச் சொல்லாய் நிற்கிறது. கல்லின் உடைந்துபோன பகுதியில்
மீதி எழுத்துகள் இருக்கும். இதே கல்லின் பின்புறத்தில் பொறிக்கப்பட்ட முதலாம் பராந்தகனின்
கல்வெட்டு ஒன்று, ஊரின் பெயரை திருப்பொற்புனம் என்று குறிப்பிடுவதாகச் சாந்தலிங்கம்
அவர்கள் தம் பதிவில் குறித்திருக்கிறார். (ஒரே கல்லில் பாண்டியரின் கல்வெட்டும் சோழரின்
கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளமை வியப்பளிக்கிறது.)
வட்டெழுத்துக் கல்வெட்டில், ”திருப்பாற்”
என்று தெளிவாக உள்ளதால் ஊர்ப்பெயர் திருப்பாற்புனம் என்று கருத வாய்ப்பு உண்டு.
அல்லது, வட்டெழுத்துக் கல்வெட்டில் பிழையாக எழுதியுள்ளனர் என்றும் கருதலாம்.
கோயிலில் எழுந்தருளிய
இறைவனின் பெயர் அரிகேசரி ஈசுவரர் என்பதாகும். பராந்தகனின் கல்வெட்டிலும் இப்பெயரே உள்ளது.
கொடை-கொடைப் பொருள்-
கொடையாளி
அடுத்து வரும்
வரிகளில் (வரி-6, மற்றும் வரி-10-11) நொந்தாவிளக்கும், “ழங்காசு பதினை”
ஆகிய குறைச் சொற்களும் வந்துள்ளன. கோயிலில் நொந்தாவிளக்கெரிக்கப் பழங்காசு
பதினைந்து கொடையாக அளிக்கப்பட்டது என்னும் செய்தி தெளிவாகிறது.
கொடை கொடுத்தவர்
பெயர் சோனைப்பிராட்டி என்பதாகக் கல்வெட்டுச் சொற்களிலிருந்து அறியலாம். சோனைப்பிராட்டியின் தாய் பெயரும் கல்வெட்டில்
குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், முழுப்பெயரையும் அறிய இயலாதவாறு கல் உடைந்து போயுள்ளது.
அவள் பெயர் நங்கை எனலாம். அவள், ஒரு வேளை கோயிலின் தேவரடியாராக இருக்கலாமோ என்னும்
ஐயத்தைக் கல்வெட்டில் வரும் தொடர் “இவ்வூர் தேவ…..நங்கை ஆயின திரு…”
எழுப்புகிறது. அடுத்து, ”
த்தி வைத்த” என்னும் தொடர் (வரி-10), மேற்படி சோனைப்
பிராட்டி என்பவள் தன் தாய் நங்கையின் நலம் வேண்டி விளக்குக் கொடை அளிக்கிறாள் எனக் குறிப்பதாய்க் கருதலாம். ஒருவரின் நலத்துக்காக என்றும், அரசரின் நன்மைக்காக என்றும் ஒரு நிவந்தம்
கோயிலுக்கு அளிக்கப்படுகையில் ”சாத்தி” எனக் கல்வெட்டில் குறிப்பது வழக்கு.
”நிறைகு………..ழங்காசு”
என்னும் தொடர் “நிறைகுறையாப் பழங்காசு” என விரியும்.
சரியான நிறையுடைய பழைய நாணய வகை என்பது பொருள்.
முதலீடும் வட்டியும்
கொடையாளி, முதலீடாக வைத்தது பழங்காசு பதினைந்து ஆகும். இக்காசு
பதினைந்துக்குப் பொலியாக (வட்டியாக) மாதந்தோறும் பதினைந்து நாழி நெய் பெறப்படும். எனவே,
காசு ஒன்றுக்குப் பொலி ஒரு நாழி நெய். நாழி என்னும் முகத்தல் அளவினைச் சென்ற நூற்றாண்டின்
“படி” என்னும் அளவீட்டுடன் ஒப்பிடலாம். பதினைந்து
காசுக்கு மாதம் பதினைந்து நாழி நெய் என்பதிலிருந்து, ஆண்டுக்கு நூற்றெண்பது நாழி நெய்
என்பது பெறப்படும். ஒரு நாழிக்கு இரண்டு உரி என்னும் கணக்கீட்டுப்படி, நூற்றெண்பது நாழிக்கு முன்னூற்று
அறுபது உரி. ஆண்டு முழுதும் முன்னூற்று அறுபது உரி நெய் அளிக்கப்பட்டது. அதாவது ஒரு
நாளில் ஓர் உரி. இதைக் கல்வெட்டு ”நிசதிப்படி உரிய் நெய்யால்”
(வரி-16) என்று குறிக்கிறது.
கல்வெட்டின் இச்செய்தி மற்றும் கணக்கிடுதல் முறை இரண்டிலிருந்தும், ஓர் ஆண்டுக்கு முன்னூற்று
அறுபது நாள் என்பதாக அக்காலத்தே கணக்கிட்டுள்ளனர் என அறிகிறோம். ஒரு காசுக்கு மாதம்
ஒன்றுக்கு ஒரு நாழி நெய் வட்டி என்பதனைக் குறிக்க “காசின்வாய்”
என்னும் தொடர் கல்வெட்டில் பயன்படுத்தப்படுகிறது. இது கல்வெட்டு வழக்குக்கே
உரிய ஒரு சொல்லாட்சி. பொலி ஊட்டு என்பது வட்டி வருவாயைக் குறிக்கும் சொல்லாகும் (வரி-20).
தன்மம் தடைபடாதிருத்தல்
விளக்கெரிக்கும்
அறச் செயல், ஆண்டாண்டு தோறும் தடையின்றி நிறைவேற்றப்படல் வேண்டும் என்பதைக் குறிக்கக்
கல்வெட்டில் வரும் சொல் “முட்டாமே” என்பதாகும். எனவே, ”நொந்தாவிளக்கு முட்டாமே எரிப்பதாக” என எழுதப்பட்டுள்ளது. முட்டாமே=முட்டாமல். முட்டாமல்
விளக்கெரிதலைக் கண்காணிக்கும் பொறுப்பு கோயிலின் ‘அகநாழிகையார்க்கு’ள்ளது. அகநாழிகை என்பது கோயிலின் கருவறையைக் குறிக்கும்.
‘அகநாழிகையார்’ என்பவர், கருவறைப்
பூசையாளர். பூசனை, பூசாரி ஆகிய சொற்கள் சமற்கிருதம் சார்ந்தன. பூசை என்பதற்கு நல்ல
தமிழ்ச் சொல் வழிபாடு. பல்லவ அரசன் முதலாம் பரமேசுவரன் காலத்துக் கூரம் செப்பேடு
(கி.பி. 7-ஆம் நூற்றாண்டு) பூசையாளரைத் “தளி வழிபாடு செய்வார்” என்று குறிக்கிறது. கல்வெட்டுகளில்
அகநாழிகை, உண்ணாழிகை என இரு தொடர்களும் பயின்றுவரும். உள்+நாழிகை-> உண்ணாழிகை.
கோயிலுக்கு இன்னொரு
பெயர் தளி
கோயிலைக் குறிக்கும்
பழம்பெயர் தளி என்பது. பல்லவர் காலத்திலேயே (கி.பி.7-ஆம் நூ.ஆ.) ‘தளி’ என வழங்கியதை மேலே குறிப்பிட்டுள்ளோம். தளி
என்னும் சொல்லாட்சி, கோயில்கள் செங்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட காலத்தில் இருந்த வழக்கு
எனக் கருதலாம். கூரம் செப்பேடு, ஒரு மண்டபம் கட்டவேண்டி நிலம் ஒதுக்கப்பட்டதைக் கூறும்போது, (செங்கல்) சூளை பற்றிக் குறிப்பிடுகிறது. எனவே,
கூரம் கோயில் முதலாம் பரமேசுவரன் காலத்தில் செங்கல் கட்டுமானத் தளியாக இருந்தமை அறிகிறோம்.
(செங்கற்கள் செய்யும் தொழில் இடம், சூளை என்னும்
பெயரால் வழங்கும் மரபு பண்டு தொட்டே - 7-ஆம் நூற்றாண்டு - இருந்தது என்பதைக் காண்கிறோம்.) கமுதி வட்டெழுத்துக் கல்வெட்டு, தனிக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளதையும் கல்வெட்டில்
’தளிஇல் அகநாழிகையார்க்கு’ என வரும் தொடரையும் நோக்குகையில், கல்வெட்டில் குறிப்பிடப்பெறுகின்ற
அரிகேசரி ஈசுவரம் என்னும் பெயரில் ஒரு செங்கற்கட்டுமானச் சிவன் கோயில் இருந்துள்ளமை
புலப்படுகிறது.
சூளை என்னும்
சொல் வழக்கு, பண்டைய காலத்தில் இருந்தாலும், செங்கல் என்னும் சொல் பழங்கல்வெட்டுகளில்
பயின்று வருகிறதா எனத் தெரியவில்லை. தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி நூலில் இச்சொல்
காணப்படாததால் செங்கல் சொல் வழக்கு பண்டு (கல்வெட்டுகளின் அடிப்படையில்) இல்லை எனலாம். ஆனால், இட்டிகை என்னும் சொல்
செங்கல்லைக் குறித்தது என்பதைத் திருக்கோடிக் காவல் கோயில் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.
இக்கோயில் முன்னர் ஒரு செங்கல் கட்டுமானக் கோயிலாக இருந்துள்ளது. உத்தம சோழனின் தாயாரான
செம்பியன்மாதேவி இக்கோயிலைக் கற்றளியாக மாற்றிக் கட்டுவித்தபோது பொறிக்கப்பட்ட கல்வெட்டில்,
செங்கற் கட்டுமானத்தை “இட்டிகைப்படையாலுள்ள ஸ்ரீகோயில்” எனக் குறிப்பிடுகிறது.
(க.வெ. எண் : 292 SII Vol-XIX) மேலும்,
செங்கற்கட்டுமானமாய்க் கோயில் இருந்தபோது தனிக்கற்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளின்
படிகளைப் (பாடம் அல்லது வாசகம்) புதிதாகக் கட்டிய ஸ்ரீவிமானத்தில் மீண்டும் பொறிக்கச்
செய்துள்ளார்கள் என்பதையும் இக்கல்வெட்டு கூறுகிறது. ”வெவ்வேறு கல்லால் பலவிடத்திலாய்க் கிடந்த அவையெல்லாம்
இந்த ஸ்ரீவிமானத்தின்மேல் ஏற வெட்டிக்கொள்க என்று அருளிச் செய வெட்டினபடி முன் கிடந்த
படிகளில் இது ஒரு படி” என்னும் முன்னுரையோடு பழங்கல்வெட்டு (பாண்டியனின் கல்வெட்டு) உள்ளவாறே பொறிக்கப்பட்டது.
புதிய கல்வெட்டில் “தனிக்கல்” என்னும் சொல் காணப்படுதலும் கருதத்தக்கது.
வட்டெழுத்துக்
கல்வெட்டின் எழுத்தமைதி
கீழே இரு ஒளிப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் படம், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உள்ள திருநாதர் குன்றில் இருக்கும் சமணக்கல்வெட்டின் படம். வட்டெழுத்தின் வளர்ச்சி நிலையின் முதல் கட்டத்தைச் சேர்ந்தது.
திருநாதர் குன்று - 5-ஆம் நூற்றாண்டு |
இதில், இறுதி வரியைக் காட்டும் படம் கீழே உள்ளது. இதன் பாடம் :
சி ரி க ரு நி சீ தி கை.
இவற்றில், சி, ரி, நி, தி ஆகிய எழுத்துகள் இகர உயிர்மெய் எழுத்துகள். இவற்றில் இகரத்தைக் குறிக்கும் இணைப்புக் குறிகள், மூல எழுத்துகளின் தலைப்பகுதியில் வலமிருந்து இடமாக மேல்நோக்கிச் செல்லும் வளைவுகளால் அமைந்திருக்கக் காணலாம்.
சி ரி நி தி சி ரி க ரு நி சீ தி கை.
இவற்றில், சி, ரி, நி, தி ஆகிய எழுத்துகள் இகர உயிர்மெய் எழுத்துகள். இவற்றில் இகரத்தைக் குறிக்கும் இணைப்புக் குறிகள், மூல எழுத்துகளின் தலைப்பகுதியில் வலமிருந்து இடமாக மேல்நோக்கிச் செல்லும் வளைவுகளால் அமைந்திருக்கக் காணலாம்.
இரண்டாம் படம், தூத்துக்குடி மாவட்டம், கழுகு மலையில் உள்ள சமணக் கல்வெட்டின் படம். வட்டெழுத்தின் வளர்ச்சி நிலையின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தது. இது முதிர்ந்த நிலை.
கழுகுமலை - 8-9 நூற்றாண்டு |
இதன் பாடம் :
ஸ்ரீ அச்சணந்தி
தாயார் குணமதி
யார் செய்வித்
த திருமேனி
இவற்றில், தி, வி, னி ஆகியன இகர உயிர்மெய் எழுத்துகள். இவற்றில் இகரத்தைக் குறிக்கும் இணைப்புக் குறிகள், மூல எழுத்துகளின் பக்கவாட்டுப் பகுதியில் வளைவுக் கோடுகளைக் கொண்டுள்ளன. இவை வட்டெழுத்தின் முழு வளர்ச்சியில் அமைந்தவை.
தி
னி
இவ்வெடுத்துக்காட்டுகள், வட்டெழுத்தின் இரண்டு கட்ட எழுத்தின் வடிமைப்பாகும். கமுதி வட்டெழுத்துக் கல்வெட்டில் உள்ள எழுத்துகளை இவற்றுடன் ஒப்பிடும்போது, கமுதிக் கல்வெட்டின் வட்டெழுத்து இரண்டாம் கட்ட முதிர்ந்த நிலையில் அமைந்திருந்தாலும் இகர உயிர்மெய் எழுத்துகளில் இணைப்பு வளைவுகள் முதல் நிலையைச் சேர்ந்தவையாகவே இருப்பதைக் காண்கிறோம்.
சி
தி
கமுதிக் கல்வெட்டில் மொழியும், இலக்கணமும்
வரி 16 : உரிய்
பதினாறாம் வரியில் உள்ள உரி என்னும் சொல் , கல்வெட்டில் “உரிய்” என யகர மெய்யை இறுதியில் இணைத்துக்கொண்ட நிலையில் எழுதப்பட்டுள்ளது. இதற்கான இலக்கணக் குறிப்பு தெரியவில்லை. ஆனால், இவ்வாறு எழுதும் வழக்கு, தொல் தமிழ் எழுத்தான தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் இருப்பதைக் காணலாம். கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளம் பிராமிக் கல்வெட்டில், “கணிய்” என்றும், அதே நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமங்கலம் பிராமிக்கல்வெட்டில் “அந்தைய்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. படங்கள் கீழே :
வரி 18 : தளிஇல்
கல்வெட்டின் பதினெட்டாம் வரியில் ”தளிஇல்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி இலக்கணப்படி, தளி, இல் ஆகிய இரு சொற்கள் புணரும்போது, ”தளியில்” என்றமையும். அதாவது, இரு சொற்களுக்கும் இடையில் உடம்படு மெய்யாக யகர மெய் தோன்றும். ஆனால்
கல்வெட்டில், யகர மெய் இடையில் வராமல் இரு சொற்களும் இயல்பு நிலையில் உள்ளன. கல்வெட்டுகளில் இவ்வாறு அமைவது இயல்பாக இருப்பதை ஒரு சில கல்வெட்டுகளில் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, ஆனைமலை வட்டெழுத்துக்கல்வெட்டில், ”மாறன் எயினன்” என்னும் சொல் ”மாறன்னெஇனன்” என்று எழுதப்பட்டிருக்கும். எனவே, இரு உயிர் எழுத்துகளை இணைப்பின்றி உள்ளவாறே எழுதும் வழக்கும் கல்வெட்டுகளில் இருந்துள்ளதை அறிகிறோம். (கல்வெட்டுகளில் சந்திப்பிழை என்ரும் கொள்ளலாம்).
முடிவாக, கமுதி அய்யனார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டு பல சிறப்புக்கூறுகளைக் கொண்டுள்ளது என்பதிலும் வட்டெழுத்துப் பயிற்சி மேற்கொள்வோருக்கு அருமையனதொரு களமாக அமைந்துள்ளது என்பதிலும் ஐயமில்லை.
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.
கல்வெட்டின் பதினெட்டாம் வரியில் ”தளிஇல்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி இலக்கணப்படி, தளி, இல் ஆகிய இரு சொற்கள் புணரும்போது, ”தளியில்” என்றமையும். அதாவது, இரு சொற்களுக்கும் இடையில் உடம்படு மெய்யாக யகர மெய் தோன்றும். ஆனால்
கல்வெட்டில், யகர மெய் இடையில் வராமல் இரு சொற்களும் இயல்பு நிலையில் உள்ளன. கல்வெட்டுகளில் இவ்வாறு அமைவது இயல்பாக இருப்பதை ஒரு சில கல்வெட்டுகளில் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, ஆனைமலை வட்டெழுத்துக்கல்வெட்டில், ”மாறன் எயினன்” என்னும் சொல் ”மாறன்னெஇனன்” என்று எழுதப்பட்டிருக்கும். எனவே, இரு உயிர் எழுத்துகளை இணைப்பின்றி உள்ளவாறே எழுதும் வழக்கும் கல்வெட்டுகளில் இருந்துள்ளதை அறிகிறோம். (கல்வெட்டுகளில் சந்திப்பிழை என்ரும் கொள்ளலாம்).
முடிவாக, கமுதி அய்யனார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டு பல சிறப்புக்கூறுகளைக் கொண்டுள்ளது என்பதிலும் வட்டெழுத்துப் பயிற்சி மேற்கொள்வோருக்கு அருமையனதொரு களமாக அமைந்துள்ளது என்பதிலும் ஐயமில்லை.
பார்வை நூல்கள் :
1. தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி
சாந்தி சாதனா, சென்னை - வெளியீடு.
2 கல்லெழுத்துக் கலை - நடன. காசிநாதன்
வெளியீடு- மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3 EPIGRAPHIA INDICA Vol-I
4 EPIGRAPHIA INDICA Vol-XXIV
5 SOUTH INDIAN INSCRIPTIONS Vol-XIX
6 ஆவணம் - ஆண்டிதழ்-2003
வெளியீடு - தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
7 தமிழ் - பிராமி கல்வெட்டுகள்
வெளியீடு - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
நன்றி : திரு. இராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர், இராமநாதபுரம்.
படங்கள் உதவி : திருச்சி பார்த்தி.
இணையம்.
3 EPIGRAPHIA INDICA Vol-I
4 EPIGRAPHIA INDICA Vol-XXIV
5 SOUTH INDIAN INSCRIPTIONS Vol-XIX
6 ஆவணம் - ஆண்டிதழ்-2003
வெளியீடு - தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
7 தமிழ் - பிராமி கல்வெட்டுகள்
வெளியீடு - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
நன்றி : திரு. இராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர், இராமநாதபுரம்.
படங்கள் உதவி : திருச்சி பார்த்தி.
இணையம்.
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக