மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 20 ஜனவரி, 2015



சாமளாபுரத்தில் புதியதொரு கல்வெட்டு
                                                       து.சுந்தரம்,கோவை


         அண்மையில், சாமளாபுரத்திலிருக்கும் வேலுச்சாமி மற்றும் சின்னையன் ஆகியோர், சாமளாபுரம் பகுதியில் சோழீசுவரர் கோயில், பெருமாள் கோயில் போன்ற இடங்களில் கல்வெட்டுகள் கிடைக்கக்கூடும் என அழைத்திருந்தனர். தொல்லியலில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் அஞ்சல்துறை செந்தில்குமார், ஆசிரியர் கிருஷ்ணகுமார் ஆகியோருடன் சாமளாபுரம் சென்றிருந்தேன். நொய்யலாற்றின் கரையில் சோழீசுவரர் கோயில் அமைந்திருந்தது. கோயிலில் கல்வெட்டுகள் காணப்படவில்லை. பழமையான கோயில் புதுப்பிக்கப்பட்டு (முழுதும் கல் கட்டுமானப்பணியே) மிக அழகாகப் பேணப்படுகிறது. அங்கே சோழீசுவரர் கோவிலில் சுற்றுச்சுவரில் கருங்கல்லைக்கொண்டு (Granite) அமைக்கப்பட்ட பெரியதொரு கல்வெட்டு. 1999-ஆம் ஆண்டில் திருப்பணியின்போது பதிக்கப்பட்டது. அதில் கோவிலின் தலவரலாறு எழுதப்பட்டிருந்தது. சோழர் பூர்வ பட்டயம் என்னும் நூலைச் சான்றாகக் காட்டி (நூல் இருக்குமிடம் என்று தஞ்சைப்பல்கலைத் தொல்லியல் துறையைச் சுட்டியிருக்கிறார்கள்) தலவரலாற்றை எழுதியுள்ளனர். வரலாறு கீழ்வருமாறு செல்கிறது.

         உறையூர்ச் சோழன் ஒருவன் கொடுங்கோலனாக இருந்தான். காஞ்சிக்கருமாரி அவனை மண்மாரி பொழிந்து அழிக்கவே, அவனுடைய மனைவியர் சிங்கம்மாளும், சாமளம்மாளும் கொங்கு நாடு பெயர்ந்து அங்கே ஒரு பிராமணர் குடியிருப்பில் உழைத்து வாழ்ந்து வந்தனர் ஏற்கெனவே கருவுற்றிருந்த சிங்கம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்து பன்னிரண்டு அகவை ஆகியது. இந்நிலையில், சோழ நாடும்,தொண்டை நாடும் அரசனின்றி அல்லலில் இருப்பதால் திருவாரூரில், அரசகாரியத்தார் கூடிப்பேசி, காசி சென்று விசாலாட்சி அன்னையை வழிபட்டு, யானை, திருமஞ்சனக்குடம், மாலை ஆகியவற்றோடு வந்து யானையையே அரசனைத் தேர்ந்தெடுக்க வேண்டினர். யானை கொங்குநாடு வந்து சிங்கம்மாளின் மகனை மாலையிட்டுத் தேர்ந்தெடுத்தது. சிங்கம்மாள் அரசனுக்கு கரிகாலன் எனப்பெயரிட்டு, சோழ நாடு திரும்பினர். அப்போது வாழ்த்தி வழியனுப்பியவர்கள் இராம பட்டரும், சந்திர பட்டரும் ஆவர். சிங்கம்மாள் சிங்கநல்லூர் என்ற குடியிருப்பையும், சாமளம்மாள் சாமளாபுரம் என்ற குடியிருப்பையும் உருவாக்கியதாகவும் அவற்றை முறையே இராம பட்டருக்கும் சந்திர பட்டருக்கும் நிவந்தமாகக் கொடுப்பதாக சிங்கம்மாள் உறுதியளித்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
  
         சோழ அரசன், சாமளாபுரம் வந்து சோழீசுவரர் கோவிலைக்கட்டுவித்துக் குளங்களையும் வெட்டுவித்து சாமளம்மாள் பெயரில் அக்கிராமத்தைச் சந்திர பட்டருக்கு வழங்கினார். இராம பட்டருக்கு சிங்க நல்லூர் கிடைத்தது. இதுவே சாமளாபுரம் உருவான வரலாறு. சோழீசுவரர் கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது எனக் கோயில் தலவரலாற்றில் குறிப்பிடும் அதே வேளையில் அரசன், கல்லணை கட்டிய கரிகாலன் அல்லன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே காலக்குறிப்பு தவறாகத் தோன்றுகிறது.
தொல்லியல் துறையைச் சேர்ந்த அறிஞர் பூங்குன்றன் அவர்கள், மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குக் கரிகாலன் என்னும் விருதுப்பெயர் இருந்தது எனக் குறிப்பிடுகிறார். இம் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக்காலம் கி.பி. 1178 முதல் கி.பி. 1218 வரை. எனவே சோழீசுவரர் கோவில், ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும். ஆனால் இதைச் சரிபார்க்க, கோவிலில் கல்வெட்டுச் சான்றுகள் எவையும் இல்லை.
         கல்வெட்டு ஆய்வுப்பயணத்தின் ஒரு கட்டமாக சாமளாபுரத்தில் அமைந்திருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்றபோது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. கோவிலின் வளாகத்தில் மதிற்சுவரை ஒட்டி ஒரு கல்வெட்டைக் கண்டறிந்தோம். கோவிலைச் சேர்ந்தவர்கள், கோவிலைப் புதுப்பிக்கும்போது இக்கல்வெட்டைப் பாதுகாப்பாக விட்டு வைத்திருக்கிறார்கள் என்பதே பெருமையும் அருமையுமான செயலாகும். சற்றேறக்குறைய ஐந்தரை அடி உயரமும் இரண்டு அடி அகலமும், ஒன்றேகால் அடிப் பருமையும் கொண்ட பெரியதொரு கல்லில் எழுத்துகள் காணப்பட்டன. பெருமளவு பரப்பில் கல் பொரிந்துபோய் எழுத்துகள் மறைந்துபோயிருந்தன. கல்லின் முதன்மைப்பரப்பிலும், பக்கவாட்டுப்பரப்பிலும் (பருமைப்பரப்பிலும்) எழுத்துகள் வெட்டப்பட்டிருந்தன. கல்லைத் தூய்மைப்படுத்தி ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.
         கல்வெட்டு படிக்க எளிதாயில்லை. வரிகளில் தொடர்ச்சியும் காணப்படவில்லை. கணினியில் உருவப்பெருக்கம் செய்து வலிந்து படித்துப்பார்க்கையில் வியப்பு மேலிட்டது. வாயறைக்கா நாடு என்னும் நாட்டுப்பெயர் காணப்பட்டது. வாயறைக்கா நாட்டில் தற்போதைய பல்லடம் வட்டம் இருந்துள்ளது. ( சாமளாபுரமும் இப்பகுதியில் இருக்கிறது. ) வாயறைக்கா நாட்டவர் (நாட்டுச்சபையினர்) ஒரு நிவந்தம் (கொடை) அளிப்பது பற்றிப்பேசி சம்மதித்து அதை ஆவணப்படுத்தியதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. நாட்டுக்கணக்கு ஆவணத்தை எழுதிப்பதிவு செய்கிறான்.

 நாட்டவரோம்”, சம்மதித்து”, இட்டுக்குடுத்தோம்”,  “நாட்டுக்கணக்கு என்னும் தொடர்கள் இப்பொருளை உணர்த்துகின்றன. அளிக்கப்பட்ட கொடை, நிலம், காடு ஆகியனவாக இருக்கலாம். இதை காடும் எல்லையும் நாங்காத்துக் குடுப்போமாகவும்  என்னும் தொடரால் அறிகிறோம். இவற்றுக்கெல்லாம் தலையாயதாக “இந்த அகரமும்”,  “சாமளதேவிச் சதுர்வேதிம...  என்னும் தொடர்களே நமக்கு வியப்பை அளித்தவை. ஏனெனில், சோழன் பூர்வ பட்டயத்தில் குறிப்பிடப்பட்ட சாமளாபுரம் என்னும் பிராமணர் குடியிருப்பு கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் சாமளதேவிச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரில் இருந்துள்ளமை பட்டயத்தில் இருக்கும் செய்திக்குச் சான்றாயமைகிறது.

அகரம் என்பதும், சதுர்வேதிமங்கலம் என்பதும் பிராமணக் குடியிருப்பைக் குறிக்கும் சொற்களாகும். அகரம் என்னும் சொல் வழக்கு மருவி அக்ரகாரம்”  எனப் பிற்கால வழக்காக மாறியிருக்கும் என்பது கண்கூடு.  கல்வெட்டின் தொடக்கவரிகளும், மையப்பகுதி வரிகளும் கிடைக்கப்பெறாமையால் அரசன் பெயர் தெரியவில்லை. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டும், கல்வெட்டின் அமைப்பு மற்றும் பயிலும்  சொற்கள் ஆகியன கொண்டும் கல்வெட்டின் காலத்தைக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டாகக் கொள்ள வாய்ப்புள்ளது. அரசனும் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்க வாய்ப்புள்ளது. சோழன் பூர்வ பட்டயத்தில் இதற்குச் சான்றுகள் எவையேனும் உள்ளனவா என ஆய்வு செய்யவேண்டும். கல்வெட்டும் மீளாய்வு செய்யப்படவேண்டும்.

         சோமனூர் நண்பர் வேலுச்சாமி, அண்மையில் தம் வீட்டருகே வயலில் ஒரு பழங்காலத் தாய்த்தெய்வச் சிலையைக் கண்டுபிடித்ததாகவும், அதை மண்ணில் சிறிதளவு புதையுண்ட நிலையிலேயே வைத்துச் சிறு குடிசை போன்ற கீற்றுக்கூரை அமைத்து வழிபாடு செய்து வருவதாகவும் கூறி அங்கு எங்களை அழைத்துச்சென்று காட்டினார். அருகிலேயே, நொய்யலாற்றின் நீர்வழிப்பாதையாக அமைந்த இராஜவாய்க்கால் இருந்தது. தற்போது நீர் இல்லை. இராஜவாய்க்காலுக்கு மறுகரையில் சிறிது தொலைவிலேயே  நொய்யலும் அதன் கரையில் சோழீசுவரர் கோயிலும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தாய்த்தெய்வச் சிலை கிடைத்த வயல் ஊராரால் கோபாலய்யர் தோட்டம் என்று அழைக்கப்படுவது எண்ணத்தக்கது. இப்பெயர், அப்பகுதியில் பிராமணர்க்கு நிலங்கள் இருந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. சிலை கிடைத்த இடம் பழைய அக்ரகாரம் என்பதால் சிலை பழஞ்சிலை என்பதை எளிதில் உணரலாம். அருகில் இருக்கும் இராஜவாய்க்கால் பழங்கால வாய்க்காலாக இருக்குமா என்பதைச் சான்றுகள் கிடைத்தால் உறுதி செய்ய இயலும்.
  
         பெருமாள் கோயில் வளாகத்தில் மேலும் இரு கல்வெட்டுகள் கிடைத்தன. உடைந்த நிலையில் இருந்த இரண்டு துண்டுக்கற்களில் அக்கல்வெட்டு எழுத்துகள் தேய்ந்துபோன நிலையில் இருந்ததால் படிக்க இயலவில்லை. இக்கல்வெட்டுகளும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

         முடிவாக, சாமளாபுரம் சாமளாதேவிச் சதுர்வேதிமங்கலம்என்ற பெயரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதைக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். சோழீசுவரர் கோயிலும் பழமையானதென்று அறிகிறோம். மேலும் சான்றுகள் கிடைக்கும்போது இன்னும் பல புதிய செய்திகள் வெளிவரும் வாய்ப்பு உள்ளது.
















து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.



























புதன், 7 ஜனவரி, 2015

சின்னவீரம்பட்டி - தனிக்கல்வெட்டு


         தற்காலத்தே, பல்வேறு அறக்கட்டளைகளும் தொண்டு நிறுவனங்களும் மக்கள் பயனுறும் வகையில் பல அறச்செயல்களை மேற்கொள்ளுவதைக் காண்கிறோம். கடந்தகாலங்களில், பல அறச்செயல்கள் தனியொருமனிதரால் நிகழ்த்தப்பெற்றன. அவ்வகையில், தனிமனிதர் பலர், தண்ணீர்ப்பந்தல்களை அமைத்தும் கிணறுகளை வெட்டியும் தொண்டாற்றியுள்ளனர். அவ்வாறான ஓர் அறச்செயலைச் சின்னவீரம்பட்டியில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது.

         கோவைப்பகுதியில் பேருந்து நடத்துநராகப் பணியிலிருக்கும் தங்கவேலு என்பவர் சின்னவீரம்பட்டி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலுக்கருகில் ஒரு தனிக்கல்லில் கல்வெட்டு இருப்பதாகத் தெரிவித்த செய்தியின் அடிப்படையில், இக்கட்டுரை ஆசிரியர் உடுமலைக்கருகில் உள்ள சின்னவீரம்பட்டிக்கு நேரில் சென்று கல்வெட்டை ஆராய்ந்து பார்த்தார். உடுமலை-திருப்பூர் சாலையில் அமைந்துள்ள சின்னவீரம்பட்டியில் பேருந்து நிறுத்தத்திலேயே சாலையை ஒட்டி, ஒரு சுமைதாங்கிக்கல்லும், ஒரு தனிக்கல்லும் காணப்பட்டன. சாலையின் எதிர்ப்புறத்தில் மாகாளியம்மன் கோயில் அமைந்திருந்தது. தனிக்கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.  தூசியும் புழுதியும் படிந்த நிலையில் எழுத்துகள் படிக்கும் நிலையில் இல்லை. எனவே, கல்லை நீர் கொண்டு கழுவித் தூய்மையாக்கி, சுண்ணப்பொடியால் பூசிய பிறகே எழுத்துகள் தெளிவாகத் தெரிந்தன. கல்லைத் தூய்மைப்படுத்துவதில் அங்கிருந்த பள்ளிச் சிறார்கள் ஆர்வமுடன் உதவினர். கல்வெட்டைப் படித்துப்பார்த்ததில் பின்வரும் செய்தி இருந்தது.

         சின்னவீரம்பட்டியில் இருக்கும் பெரிய நாச்சிய கவுண்டர் குமாரர் நாச்சிய கவுண்டர் என்பவர் தருமத்துக்கு கிணறு வெட்டி வைத்துள்ளார். இவர் பவள குலத்தைச் சேர்ந்த, தளவாய்பட்டினத்துக் காணியாளர் ஆவார். (தளவாய்பட்டினம், தாராபுரம்  வட்டத்தில் அமைந்துள்ளது).  இவருடைய காணி குல தெய்வம் காளியம்மன் என்பதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கிணறு வெட்டிமுடித்து கல்வெட்டு பொறிக்கப்பட்டது 1916-ஆம் ஆண்டு, டிசம்பர் 4-ஆம் தேதி. கல்வெட்டின் இறுதியில் இத்தேதி, 4.12.1916 எனப்பொறிக்கப்பட்டுள்ளது. இத் தேதிக்கு இணையாகத் தமிழ் ஆண்டு நள வருடம், கார்த்திகை மாதம் 20-ஆம் தேதி திங்கள் கிழமை எனத்தரப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டுத் தேதியும், ஆங்கில ஆண்டுத் தேதியும் சரியாகப் பொருந்துகின்றன. கல்வெட்டு குறிப்பிடும் கிணறு, கல்வெட்டின் அருகிலேயே அமைந்துள்ளது. தரைக்கு மேலே கற்களைக்கொண்டு எழுப்பப்பட்ட சுற்றுச்சுவருடன் கிணறு அமைந்துள்ளது. சுற்றுச் சுவர், கிணறு அமைத்த காலத்திலேயே கட்டப்பட்டிருக்கவேண்டும் எனக்கருதலாம். ஏறத்தாழ, நூறு ஆண்டுகளாகியும் கிணற்றில் நீர் இருப்பதும், இன்றளவும்  நீர் மக்கள் பயன்பாட்டில் இருப்பதும் சிறப்புக்குரியன. கிணற்றின் மேற்பரப்பு முழுதும் இரும்புக்கம்பிவலை கொண்டு மூடப்பட்டுள்ளது. மின் இயந்திரம் கொண்டு நீர் இறைக்கப்பட்டு, கிணற்றையொட்டிக் கட்டப்பட்டுள்ள தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக எந்நேரமும் நீர் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

         அருகிலேயே குடியிருக்கும் பணி நிறைவு பெற்ற பள்ளி ஆசிரியர் சிவசுப்பிரமணியம் என்பவர் தெரிவித்த செய்தி: கிணற்றை வெட்டிய நாச்சிய கவுண்டரின் வழித்தோன்றல் தற்போதைய ஊர்ச்சபைத் தலைவராக இருக்கிறார். கிணறு வெட்டப்பட்ட காலத்தில், திருவண்ணாமலைக் கோயிலுக்குச் செல்லும் அடியார் கூட்டத்தினருள் சில பிரிவினர் பயணம் செய்து ( கால் நடைப்பயணமாகவோ, மாட்டு வண்டிப் பயணமாகவோ இருக்கக்கூடும். ), ஒரு பிரிவினர் பழநி நோக்கியும், இன்னொரு பிரிவினர் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை நோக்கியும், மற்றுமொரு பிரிவினர் கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை நோக்கியும் செல்வார்கள். அவ்வாறு வருகின்ற பயண அடியார்கள் சின்னவீரம்பட்டி வழியாகச் செல்வது வழக்கமாகையால் அவ்வடியார்களின் வேட்கை மற்றும் பிற தேவைகளைத் தீர்க்கும் நற்பணியை இக்கிணறு ஆற்றியுள்ளது.

         இக்கல்வெட்டுக்கருகிலேயே அமைந்துள்ள சுமைதாங்கிக் கல்லிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. இதையும் படித்துப்பார்த்ததில், இதே ஊரைச் சேர்ந்த காணி சின்னாயக் கவுண்டர் என்பவர் இச் சுமைதாங்கிக் கல்லை உபயமாகச் செய்து வைத்தார் என்னும் செய்தி தெரிய வருகிறது. இந்தக் கல்வெட்டில் கல்வெட்டு பொறிக்கப்பட்ட நாள் சக ஆண்டு 5021, ரௌத்தரி வருடம், பங்குனி மாதம் 10-ஆம் தேதி புதன் கிழமை எனக் காணப்படுகிறது. இதற்கு இணையான ஆங்கிலத் தேதி 23.3.1921 ஆகும். இவ்வழியே பயணம் செய்த அடியார்களுக்கு இச்சுமைதாங்கியும் பயன்பட்டு வந்துள்ளதை இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.












து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.




ஞாயிறு, 14 டிசம்பர், 2014

சுமை தாங்கி
                                                       து.சுந்தரம், கோவை.


         கடந்துவிட்ட ஓரிரு நூற்றாண்டுகளில், சாலை ஓரங்களில் சுமைதாங்கிக் கற்களை நட்டுவிக்கும் மரபு தமிழகத்தில் இருந்துள்ளதைக் காண்கிறோம். அம்மரபு தற்போது முற்றிலும் ஒழிந்துபோனது. எனினும், இன்றும் நாட்டுப்புறங்களில் சுமைதாங்கிகள் பழமையின் எச்சங்களாகக் காட்சியளிக்கின்றன. காண்பதும் அரிதாகி விட்ட நிலை. கோயில் கல்வெட்டுகளே அவற்றின் அருமையும் பெருமையும் அறியப்படாமல் திருப்பணியின்போது உடைக்கப்பட்டுத் தளத்தோடு தளமாக மூடப்பட்டு வரும் காலச் சூழலில் சுமை தாங்கிகள் நிலைத்து நிற்கா என்பதில் ஐயமில்லை. எங்கோ ஒன்றிரண்டு கற்கள் அருங்காட்சியாய்க் காணப்படுகின்றன.

         சாலை ஓரம் மரங்கள் இருந்த ஒரு காலத்தில், மக்களும் வழிநடையாக நடந்து சென்ற காலத்தில் தம் உடைமைகளைத் தலையிலோ அல்லது தோளிலோ சுமந்து சென்றபோது, சற்றே இளைப்பாற்றிக்கொள்ளத் துணை நின்றவை இச்சுமை தாங்கிகள். தொண்டுள்ளம் கொண்டோர் இத்தகைய சுமை தாங்கிகளை நிறுத்தினர். அறச்செயல்களை முப்பத்திரண்டு எனப் பட்டியலிடுகின்றன சில நூல் குறிப்புகள். அப்பட்டியலில் சுமைதாங்கிகளை நிறுத்தும் பணியும் உள்ளதா எனத்தெரியவில்லை. அவ்வாறில்லையெனில் முப்பத்துமூன்றாவது அறமாகக் கொள்ள சுமைதாங்கியும் தகுதி பெற்றதுதான்.

கவிஞரும் எழுத்தாளருமான வண்ணதாசன் கூறுவது இங்கு படித்துச் சுவைக்கற்பாலது. (இணையத்தில் படித்தது)

         ஒரு சுமைதாங்கியின் முக்கியத்துவம், எந்த ஒரு நடுகல்லின் முக்கியத்துவத்துக்கும்  குறைந்தது அல்ல. நிழல் மரங்களுக்கு அருகில் நடப்பட்டு இருக்கிற சுமைதாங்கிகளுக்குப் பெரிய வடிவமைப்புகள் எதுவும் அவசியம் இல்லை. இரண்டு கல் தூண்கள், மேலே குறுக்கே ஒரு கல்பாலம். நின்றவாக்கில் உங்கள் தலைச்சுமைகளை இறக்கிக்கொள்ளலாம். தகிப்பாறிய பின் தோள் மாற்றிய சுமையுடன் மேலும் பயணம் தொடரலாம். அதெல்லாம் ஒரு காலம்.

         மனிதன் சுமையைத்  தாங்குகிறான். அம் மனிதனே சுமையாக உருக்கொள்வது ஒரு தாய் கருவைச் சுமக்கும்போதுதான் நிகழ்கிறது. ஆனாலும் தாய்மை கருவைச் சுமையாகவே ஏற்பதில்லை. அத்தகைய தாய்,  கருவைச் சுமந்த நிலையில் உயிர் துறக்க நேர்தல் கொடிது. சுமையை இறக்கிக்கொள்ளாமலே உயிர் நீங்குதலால் அவளுக்கு ஏற்படும் துன்பம் நீங்கவேண்டி அவளுக்கு எடுக்கும் நினவுக்கல் ஒரு சுமைதாங்கி வடிவில் அமைக்கப்படுவதும் இங்குள்ள மரபுதான். அம்மரபுப்படி எடுக்கப்பட்ட சுமைதாங்கிக் கல் கோவைப்பகுதியில் இதுவரை காணக்கிடைக்கவில்லை அல்லது நான் அறியக்கூடவில்லை. இப்போது அத்தகைய சுமைதாங்கிகல்லைக் காணும் வாய்ப்பு எதிர்பாரா வண்ணம் கிடைத்தது. கல்வெட்டுகளைத்தேடிப் பயணம் செய்தவாறிருக்கும் என் இயல்பை அறிந்த உறவினர் அன்னூர் வேலுச்சாமி அவர்கள் கொடுத்த தகவலின்படி, அவிநாசி அருகே உள்ள சேவூரை அடுத்திருக்கும் நடுவச்சேரி சென்றிருந்தேன். உடன், வரலாற்று ஆர்வலர் அவிநாசி-சங்கர் இணைந்துகொண்டார். நாங்கள் சென்ற இடம் நடுவச்சேரியைச் சேர்ந்த கருக்கங்காட்டுப்புதூர் என்னும் குறுஞ்சிற்றூர். சாலையோரம் அந்த சுமைதாங்கிக் கல் ஏறத்தாழ ஐந்தரை அடி உயரத்தில் உயர்ந்து நின்றது. வண்ணதாசன் குறிப்பிட்டதுபோல இரு தூண் கற்கள்; மேலே ஒரு கல் பாலம். தூண் கற்களில் ஒன்றில் மேற்பகுதியில் பத்துப்பதினொன்று வரிகளில் கலவெட்டு எழுத்துகள் காணப்பட்டன. எழுத்துகளைத்தொடர்ந்து கீழ்ப்பகுதியில் புடைப்புச் சிற்பமாக கருவுற்ற ஒரு பெண்ணின் உருவம்.

         பெரும்பாலும் சுமைதாங்கிக் கற்களில் அவற்றைச் செய்வித்தவர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். நோக்கம் அனைவரும் அறிந்ததுதான். அது போலவே இந்தச் சுமைதாங்கிக் கல்லிலும் செய்தவர் பெயர் எழுதப்பட்டுள்ளது என்றாலும், இச்சுமைதாங்கியில் வடிக்கப்பட்டுள்ள கருத்தாங்கிய பெண்ணுருவம், நோக்கம் இன்னதென்று எழுதப்படாத நிலையில் உண்மையான நோக்கத்தைக் குறிப்பால் சுட்டி நின்றது. கல்வெட்டின் பாடத்தை இங்கே தந்துள்ளேன்:
         
                     கடவுள் துணை
                    1936 வரு ஏப்ர
                    ல் மச 23 தியதி
                    கருக்கங்காட்
                    டுப்புதூர் கோ
                    யமுத்தூர் ரா
                    ய(ப்பன்) இருளப்ப நா
                    டார் செய்துவை
                    த்த சுமைதா
                    ங்கி | பக்கத்தில் தண்ணீ
                            ர் பந்த(லும்)

                            கிண(று)

         கருக்கங்காட்டுப்புதூரைச் சேர்ந்த (இராயப்பன் மகன்?) இருளப்ப நாடார் என்பவர் இச் சுமைதாங்கியைச் செய்துள்ளார் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. கூடுதல் செய்தியாக, கிணறு வெட்டித் தண்ணீர்ப்பந்தல் அமைத்ததாகவும் கல்வெட்டு குறிக்கிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை  வெளியிட்டுள்ள, துறையின் பொறுப்பாணையர் முனைவர் சீ.வசந்தி அவர்கள் பதிப்பித்த “சோழர் சமுதாயம்”  என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள  தண்ணீர்ப்பந்தல் பற்றிய செய்திகள் இங்கே மனங்கொள்ளத்தக்கவை.

“தண்ணீர்ப்பந்தல்கள் பொதுவாகக் கோயில்களில், மக்கள் கூடும் மண்டபங்களில், பெருவழிகளில், மடங்களில் மற்றும் சோலை சூழ்ந்த இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. தண்ணீர்ப்பந்தலைப் பராமரிக்க நிலம் அளிக்கப்பட்டது. பராமரித்தோருக்கு ஊதியம் வழங்கப்பட்டது. இறந்தவர் உயிர்களின் தாகம் தீர்க்கும் பொருட்டும் தண்ணீர்ப்பந்தல்கள் நிறுவப்பட்டன. பிரம்மதேசத்தில் முதலாம் இராசேந்திரன் இறந்த இடத்தில் அவன் மனைவி வீரமாதேவி உடன் கட்டை ஏறி இறந்ததால் அவளின் உடன் பிறந்தானாகிய சேனாபதி மதுராந்தகன் பரகேசரி மூவேந்த வேளான் என்பவன் இறந்த அவ்விருவர் உயிர்களின் தாகம் தீர்க்கும் பொருட்டுத் தண்ணீர்ப்பந்தல்  நிறுவியதாகக் கல்வெட்டில் கூறப்படுகிறது.   

         நமது கருக்கங்காட்டுப்புதூர் சுமைதாங்கிக் கல்வெட்டும் அவ்வாறே கருச்சுமையோடு இறந்த பெண்ணின் நீர் வேட்கையைத் தீர்க்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இக்கருத்தை உள்ளடக்கியே தண்ணீர்ப்பந்தலும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெத்தானூர் மற்றும் ஈசாந்தை ஆகிய ஊர்ப்பகுதிகளில் இத்தகைய சுமைதாங்கிக்கற்கள் அமைக்கப்பெற்றிருப்பதை இணையச் செய்தி ஒன்று கீழ்வருமாறு குறிக்கிறது:

          “ பிள்ளை பெறாமல் கருப்பத்துடன் இறந்த பெண்ணின் பொருட்டு, 
           அவள் வயிற்றுப்பாரத்தால் உண்டான வருத்தம்
           நீங்குமாறு அமைக்கப்பெற்ற சுமைதாங்கிக்கல்

இச்சுமைதாங்கிகளின் ஒளிப்படங்களும் இங்கே  பார்வைக்குத் தரப்பட்டுள்ளன.
கருக்கங்காட்டுப்புதூர் சுமைதாங்கிக் கல்வெட்டு 1936-ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பதாலும், எனவே நூறு ஆண்டுகள் பழமை என்னும் தகுதி பெறாததாலும் இதைத் தொல்லியல் சின்னம் என்னும் பெயரால் குறிக்க இயலாது. எனினும், தொல்லியல் கடந்து சோழர் கால மரபை ஒட்டியிருப்பதாலும், வாழ்வியல் மரபைக் கொண்டிருப்பதாலும் இச்சுமைதாங்கியை நடுகல் கல்வெட்டாகவே கருதித் தொல்லியல் தகுதியை இதற்கு அளிக்கலாம் எனக்கருதுகிறேன்.













து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலை பேசி: 9444939156.

செவ்வாய், 2 டிசம்பர், 2014




குளம் தொட்டு உளம் தொட்டவர்க்கு ஒரு கல்வெட்டு
                                                      து.சுந்தரம், கோவை


         நம் பள்ளிப்படிப்பில், பேரரசர் அசோகர் (அசோகர் மட்டுமல்ல, பல அரசர்கள்) சாலை ஓரங்கள் அனைத்திலும் நிழல் தரும் மரங்களை நட்டுவித்தனர் என வரலாற்றுப் பாடத்தில் படித்ததுண்டு. அது போலவே, அரசர்கள் குளம் வெட்டினர் என்பதும் வரலாற்றுப்பாடச் செய்தி. அவற்றை அறம் என்றே கருதிச் செய்தனர். சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், கரிகாலன்,
“காடுகொன்று நாடாக்கிக்
      குளந்தொட்டு வளம்பெருக்கி
ஆண்டதாகக் கூறுகிறார்.(இவை பரிபாடல் வரிகள்.) அரசரைப்பின்பற்றி அரசு அதிகாரிகளும் ஊர்ப்பெரியவர்களும், செல்வ வணிகர்களும் குளங்கள் வெட்டி மக்கள் தொண்டாற்றினர். அரசர்காலத்து அத்தகைய மரபைப் பிற்காலம் வரை தொடர்ந்து நிறைவேற்றியவர்கள் பலர். செல்வ வளமும், அறம் சார்ந்த மனமும் நிறைந்தவர்கள் ஆங்காங்கே ஊர்களில் “குளம் தொட்டு மக்கள் உளம் தொட்டிருக்கிறார்கள்.

         கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் கோவைப்பகுதியில் ஒரு சிற்றூரில் குளம் அமைத்த செய்தியைச் சொல்லும் கல்வெட்டு ஒன்றைப்பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. மருத்துவம் சொல்லும் கல்வெட்டு என்று ஒரு கல்வெட்டைச் சரவணம்பட்டியில் செப்டம்பர் மாதம் பார்த்துவிட்டு வருகின்ற வழியில், விளாங்குறிச்சி சிற்றூர் வழியே வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். ஊரின் பெயரை விளமரத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம். அல்லது வேளான்குறிச்சி என்பது விளாங்குறிச்சி எனத்திரிந்ததாகக் கொள்ளலாம். ஊரில் அரசமரம் ஒன்றைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மேடைப்பகுதியில் (சிற்றூர் என்றாலே ஓர் அரசமரமேடையோ அல்லது ஆலமரமேடையோ நினைவுக்கு வராமல் போகாது) வயதில் மூத்தவர்கள் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பழங்கோயில் ஏதேனும் இருக்குமா எனக் கேட்க எண்ணம் ஏற்பட்டது. உடனே, இரு சக்கர வண்டியை நிறுத்தி, அப்பெரியவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். அருகிலே படைவெட்டி அம்மன் கோயில் இருப்பதாகவும் அங்கே கல்வெட்டு இருப்பதாகவும் சொன்னார்கள். தற்செயலாக ஒரு கல்வெட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

         படைவெட்டி அம்மன் கோயிலுக்குச் சென்றேன். பிற்பகல் இரண்டு மணியிருக்கலாம். கோயில் திறந்திருந்தது. அக்கோயில், முதலியார் குலத்தவர்க்கான குலக்கோயில் என்று தகவல் பலகை குறிக்கிறது. கோயிலின் செயலாளர் இராமகிருஷ்ணன் என்பவர் அங்கே இருந்தார். கோயிலின் சுற்றாலையில் இருந்த கல்வெட்டைக் காட்டினார். மூன்று அல்லது மூன்றரை அடி உயரத்தில் நல்ல பருமனோடு கூடிய பலகைக்கல். கல்லின் மேல்பகுதி உயரத்துக்குச் சமனாக நிலத்தடியிலும் கல் பதிந்துள்ளது என அவர் கூறினார். கல்வெட்டின் அப்போதைய தோற்றத்தில் எழுத்துகள் படிக்க இயலாதவாறு இருந்தன. வெள்ளைச் சுண்ணத்தைப்பூசிக் காயவைத்தபின்னர் படிக்க இயன்றது.  பதினொரு வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. கல்வெட்டின் பாடத்தைக் கீழே தந்துள்ளேன்.

               வெள்ளையா
              ன் முதலியார்
              ஊர் மணியம்
              சறுவதாரி வரு.
              மாகளி 15 வி
              ழங்குறிச்சி
              குடியானவ
              ர்கள் குழம் க
              ட்டின உபை
              யம் நஞ்சசெ
              ட்டி கற்பகம்

         நஞ்சசெட்டி, கற்பகம் இணையர்(தம்பதியர்) விளாங்குறிச்சியில் வேளாண்மை செய்யும் குடியானவர்களுக்காகக் குளம் வெட்டிக் கொடுத்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. 18-19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் பெரும்பாலும் கலியுக ஆண்டு அல்லது சாலிவாகன ஆண்டு குறிப்பிடப்படும். ஆனால், இக்கல்வெட்டில் அவ்வாறான குறிப்பு இல்லை. தமிழ் ஆண்டான சர்வதாரி (கல்வெட்டில் சறுவதாரி) குறிப்பிடப்படுகிறது. சர்வதாரி ஆண்டு கி.பி. 1888-ஆம் ஆண்டுடன் பொருந்துவதால் கல்வெட்டின் காலம் கி.பி. 1888 எனக்கொள்ளலாம். கல்வெட்டில் மார்கழி மாதம் மாகளிஎனக்குறிப்பிடப்படுகிறது. அரசர் அல்லது ஆட்சியினர் சார்பாக இயங்கும் அதிகாரிகளை முன்னிலைப்படுத்தியே கல்வெட்டுகளின் முற்பகுதி அமைந்திருக்கும். கொங்குச் சோழர், மற்றும் விஜய நகரர் கல்வெட்டுகளில் அரசர் பெயரும், நாயக்கர் கல்வெட்டுகளில் மண்டலாதிபதியின் பெயரும் குறிப்பிடப்படுவது போல இக்கல்வெட்டில் ஊர்த் தலைவர் பெயரை முன்னிலைப்படுத்திக் கல்வெட்டு தொடங்குகிறது.
              ஊர்த் தலைவராக (மணியமாக) வெள்ளையான் முதலியார் பெயர் காணப்படுகிறது. ஊர்ப்பெயர் விழங்குறிச்சி எனச் சிறப்பு ‘ழகரத்தோடு குறிக்கப்படுகிறது. இக்கல்வெட்டு, கோவைத்தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ளது என்றும், “தினகரன்நாளிதழார் இக்கல்வெட்டு பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளனர் என்றும் இராமகிருஷ்ணன் கூறினார்.  இவர் கவிச்சிற்பி இளம்விழியன் என்னும் பெயரில் ஒரு கவிஞராக அறியப்படுகிறார். இவர் இந்த அம்மன்மீது முப்பது பாடல்கள் கொண்ட “படைவெட்டியம்மன் அந்தாதி ஒன்று இயற்றியுள்ளார். பார்வைக்கு ஒரு பாடல்:

               காசு பணமொன்றே கண்ணிற் தெரிவதென
              மாசு மனத்து மனிதரிடை பேசும்
              நிறை மொழியாம் பைந்தமிழ் என்நெஞ்சிற் பதிய
              நிறைவாய் அருள்புரிவாய் நீ

குடியானவர்களின் நலம் கருதிய நஞ்சசெட்டியின் தொண்டுள்ளம் குளம் தொட்டதால் (வெட்டியதால்) வேளாண்மக்களின் உளம் தொட்ட சிறப்பை மேற்படி கல்வெட்டு உணர்த்துகிறது.























து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.


புதன், 19 நவம்பர், 2014

நெகமம் பத்ரகாளியம்மன் கோவில் கல்வெட்டு
                                                        து.சுந்தரம்,கோவை

         அண்மையில், நெகமம் (கோவைக்கும் பொள்ளாச்சிக்கும் இடையில் அமைந்துள்ள ஓர் ஊர்) அருகே பட்டணத்தில் கண்டெடுக்கப்பட்டு கோவை தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு ஒன்றில் நெகமம் ஊரில் வணிகர்களுடைய சங்க அமைப்பு இயங்கியிருக்கலாம் என்று கருதத்தக்க சான்றுகள் இருந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தோம். நெகமத்தில் இதற்கான சான்றாகக் கல்வெட்டுகள் எவையும் கிடைக்காத சூழ்நிலையில், தற்போது ஒரு சான்று கிடைத்துள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் நெகமம் மற்றும் நெகமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகையில், நெகமம் சந்தைக்கு மிக அணித்தாயுள்ள பத்ரகாளியம்மன் கோவிலை ஆராய்ந்து பார்க்கும்போது, கோயிலின் கருவறைக்கு அடுத்தாற்போல் உள்ள அர்த்தமண்டபத்தின் நிலைக்கால் ஒன்றின்மீது எழுத்துகள் காணப்பட்டன. கற்களால் அமைக்கப்பட்ட நிலைக்கால்கள் முழுவதும் காவி வண்ணத்தில் வழவழப்பாக ஆயில் பெயிண்ட் “ என்னும் எண்ணை வண்ணப்பூச்சால் எழுத்துகளின் சீர்மையான வடிவம் மறைந்துவிட்டிருந்தது. கல்வெட்டை ஒளிப்படம் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் பின் வரும் செய்திகள் புலனாயின.

நெகமம் பத்ரகாளியம்மன் கோவில் - கல்வெட்டுப்பாடம்
                                                        



.................தேவற்(கு)
........... (யா)ண்டு ஒ
ன்பதாவது
நியமத்து
வியாபாரி
(தேவன்) பி                         
ள்ளனான அ
திராசராச சீ
லை செட்டி
யிட்ட திருனி
லை காலிரண்
டும் அதிரா
ச(ராச) சிலை
(செட்டி) தன்
மம்


         நெகமம் என்னும் ஊர்ப்பெயர் கல்வெட்டில் “நியமம்  என்று குறிக்கப்பட்டிருக்கிறது. வணிகக்குழுக்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஓர் அமைப்பே “நிகமம்  ஆகும். அது போன்ற ஒரு வணிகச்சங்கம் நெகமத்தில் இயங்கிவந்துள்ளது இதனால் உறுதிப்படுத்தப்படுகிறது. “நியமத்து வியாபாரி என்று கல்வெட்டு வரியில் வருவதாலும் நெகமம் ஒரு வணிக நகரமாக இருந்தது என உறுதியாகக் கருதலாம். கல்வெட்டின் காலத்தை வழக்கமாகக் கண்டறிய, கல்வெட்டின் தொடக்க வரிகள்தாம் துணை நிற்கும். ஏனெனில், தொடக்கவரிகளில் ஆட்சியில் இருக்கும் அரசனின் பெயரும், அரசனது ஆட்சியாண்டும் அதாவது அரசன் பட்டத்துக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆயின என்னும் குறிப்பும் காணப்படும். இங்கே, கல்வெட்டின் தொடக்க வரிகள், கல் பொளிவின் காரணமாகச் சிதைந்து போயுள்ளமையால், அரசனின் பெயர் காணப்படவில்லை. ஆனால், அரசனின் ஆட்சியாண்டு ஒன்பதாவது என்னும் குறிப்பு உள்ளது. எனவே, கல்வெட்டின் காலத்தைத்துல்லியமாகச் சொல்ல இயல்வில்லை எனினும் கோவைப்பகுதியில்  கொங்குச்சோழனான வீரரசேந்திரனின் கல்வெட்டுகள் மிகுதியாகக் கிடைப்பதால் இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி. 1216 எனக் கருத வாய்ப்புண்டு. மேலும், கல்வெட்டின் எழுத்தமைதியை நோக்குமிடத்து, கல்வெட்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது எனக்கொள்வதில் தவறில்லை. கோவிலும் எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக்கொள்ளலாம்.
         அடுத்து, வியாபாரியின் பெயர் தேவன் பிள்ளனான அதிராசராச சிலை செட்டி  எனக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. அவருடைய இயற்பெயர் தேவன் பிள்ளன் என்பதாகும். சிறப்புப்பெயராக “அதிராசராச என்று கூறப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளாகவோ, அல்லது அரசின் சார்பாகவோ செல்வாக்குள்ள ஒருவருக்கு இது போல் இயற்பெயரோடு ஒரு சிறப்புப்பெயர் அமைந்துவருவது மரபாகக் கல்வெட்டில் காணப்படுகிறது. தேவன் கந்தனான தொண்டைமானேன், சோழன் கூத்தனான வீரராசேந்திர இருங்கோளனேன் ஆகிய பல பெயர்கள் இவ்வாறு கல்வெட்டுகளில் வருவதைப்பார்க்கிறோம். இங்கு நமது கல்வெட்டில், அதிராசராச  என்னும் சிறப்புப்பெயர் அரசனைக்குறிப்பதாகும். இது வீரகேரள அரசனான அதிராஜராஜன் என்பவருடைய பெயரால் அமைந்த சிறப்புப்பெயராகலாம். அடுத்து, “சிலைசெட்டி என்னும் பெயரில் அமைந்த செட்டி”  என்பது அவர் வணிகர் அல்லது வியாபாரி என்பதைத் தெளிவுபடுத்துகிறது. “சிலைசெட்டி  என்பது வணிகர்களில் ஒரு வகையினரைக் குறிக்கின்றது எனலாம். சேவூர் கபாலீசர் கோவில் கல்வெட்டில் “மாந்தோட்டத்தில் வியாபாரி ஈசானச் சிலைசெட்டி பொன்னம்பலக்கூத்தன்”  எனவும், (மேட்டுப்பாளையம்) வெள்ளியங்காடு பதினெண்பூமீசுவரர் கோயில் கல்வெட்டில் குலோத்துங்கச் சிலைசெட்டி”  எனவும் வருகின்ற தொடர்களை ஒப்புநோக்கலாம். வணிகர்கள் “பதினெண்பூமியார்”,  “நானாதேசியார்”,  “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்”  ஆகிய பல்வேறு வகையினராகக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்கள். அவர்களில் “சிலைசெட்டிகள் ஒரு உட்பிரிவினராக இருக்கலாம். அல்லது “சீலை செட்டி எனக்கொண்டால், அந்த வியாபாரி ஒரு துணி வணிகராக இருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது. நெகமம் பகுதியில் நெடுங்காலமாக நெசவுத்தொழில் நடைபெற்று வந்துள்ளது என்பது நாம் அறிந்த ஒன்று. துணி வணிகர் என்னும் கருத்துக்கு இது வலு சேர்க்கிறது என்றாலும் இக்கருத்து ஆய்வுக்குரியது.

         அடுத்து, திருனிலைக்காலிரண்டும் அதிராசராச சிலைசெட்டி தன்மம் என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் நிலைக்கால்களைக் கோவிலுக்குக் கொடையளித்துள்ளார் என்பது கல்வெட்டின் முதன்மைச்செய்தியாய் அமைகிறது. முடிவாக, ஒரு வியாபாரி கோயிலின் நிலைக்காலிரண்டு கொடையாக அளித்துள்ளார் என்னும் கல்வெட்டுச் செய்தியின் மூலம், நெகமம் ஒரு வணிக நகரமாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.


         கோவிலின் அதிட்டானப்பகுதியில் பழங்காலக் கல்வெட்டு ஒன்று காணப்பட்டது. அதன் எழுத்தமைதியைக் கருத்தில் கொண்டு அது கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனகருதலாம். எழுத்துகளின் தெளிவின்மை காரணமாகப் படிக்க இயலவில்லை. இருப்பினும் “பண்டாரத்தில் என்னும் தொடரைப்படிக்க முடிந்தது. ஏதோ ஒரு கொடைக்காகக் கோயில் பண்டாரத்தில் காசோ அல்லது பொன்னோ செலுத்தப்பட்டிருக்கலாம். அதன் ஒளிப்படம் இங்கே தரப்பட்டுள்ளது.



நன்றி :   சிலைசெட்டி”  என்பதைச் “சீலைசெட்டிஎனப் பாடம் கொண்டு துணி வணிகர் நெகமத்தில் இருந்தனர் என்னும் கருத்துத் தந்துதவிய மதுரை தொல்லியல் அறிஞர் திரு. சொ. சாந்தலிங்கம் அவர்களுக்கு நன்றி.

























து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலை பேசி : 9444939156.