மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

சுமை தாங்கி
                                                       து.சுந்தரம், கோவை.


         கடந்துவிட்ட ஓரிரு நூற்றாண்டுகளில், சாலை ஓரங்களில் சுமைதாங்கிக் கற்களை நட்டுவிக்கும் மரபு தமிழகத்தில் இருந்துள்ளதைக் காண்கிறோம். அம்மரபு தற்போது முற்றிலும் ஒழிந்துபோனது. எனினும், இன்றும் நாட்டுப்புறங்களில் சுமைதாங்கிகள் பழமையின் எச்சங்களாகக் காட்சியளிக்கின்றன. காண்பதும் அரிதாகி விட்ட நிலை. கோயில் கல்வெட்டுகளே அவற்றின் அருமையும் பெருமையும் அறியப்படாமல் திருப்பணியின்போது உடைக்கப்பட்டுத் தளத்தோடு தளமாக மூடப்பட்டு வரும் காலச் சூழலில் சுமை தாங்கிகள் நிலைத்து நிற்கா என்பதில் ஐயமில்லை. எங்கோ ஒன்றிரண்டு கற்கள் அருங்காட்சியாய்க் காணப்படுகின்றன.

         சாலை ஓரம் மரங்கள் இருந்த ஒரு காலத்தில், மக்களும் வழிநடையாக நடந்து சென்ற காலத்தில் தம் உடைமைகளைத் தலையிலோ அல்லது தோளிலோ சுமந்து சென்றபோது, சற்றே இளைப்பாற்றிக்கொள்ளத் துணை நின்றவை இச்சுமை தாங்கிகள். தொண்டுள்ளம் கொண்டோர் இத்தகைய சுமை தாங்கிகளை நிறுத்தினர். அறச்செயல்களை முப்பத்திரண்டு எனப் பட்டியலிடுகின்றன சில நூல் குறிப்புகள். அப்பட்டியலில் சுமைதாங்கிகளை நிறுத்தும் பணியும் உள்ளதா எனத்தெரியவில்லை. அவ்வாறில்லையெனில் முப்பத்துமூன்றாவது அறமாகக் கொள்ள சுமைதாங்கியும் தகுதி பெற்றதுதான்.

கவிஞரும் எழுத்தாளருமான வண்ணதாசன் கூறுவது இங்கு படித்துச் சுவைக்கற்பாலது. (இணையத்தில் படித்தது)

         ஒரு சுமைதாங்கியின் முக்கியத்துவம், எந்த ஒரு நடுகல்லின் முக்கியத்துவத்துக்கும்  குறைந்தது அல்ல. நிழல் மரங்களுக்கு அருகில் நடப்பட்டு இருக்கிற சுமைதாங்கிகளுக்குப் பெரிய வடிவமைப்புகள் எதுவும் அவசியம் இல்லை. இரண்டு கல் தூண்கள், மேலே குறுக்கே ஒரு கல்பாலம். நின்றவாக்கில் உங்கள் தலைச்சுமைகளை இறக்கிக்கொள்ளலாம். தகிப்பாறிய பின் தோள் மாற்றிய சுமையுடன் மேலும் பயணம் தொடரலாம். அதெல்லாம் ஒரு காலம்.

         மனிதன் சுமையைத்  தாங்குகிறான். அம் மனிதனே சுமையாக உருக்கொள்வது ஒரு தாய் கருவைச் சுமக்கும்போதுதான் நிகழ்கிறது. ஆனாலும் தாய்மை கருவைச் சுமையாகவே ஏற்பதில்லை. அத்தகைய தாய்,  கருவைச் சுமந்த நிலையில் உயிர் துறக்க நேர்தல் கொடிது. சுமையை இறக்கிக்கொள்ளாமலே உயிர் நீங்குதலால் அவளுக்கு ஏற்படும் துன்பம் நீங்கவேண்டி அவளுக்கு எடுக்கும் நினவுக்கல் ஒரு சுமைதாங்கி வடிவில் அமைக்கப்படுவதும் இங்குள்ள மரபுதான். அம்மரபுப்படி எடுக்கப்பட்ட சுமைதாங்கிக் கல் கோவைப்பகுதியில் இதுவரை காணக்கிடைக்கவில்லை அல்லது நான் அறியக்கூடவில்லை. இப்போது அத்தகைய சுமைதாங்கிகல்லைக் காணும் வாய்ப்பு எதிர்பாரா வண்ணம் கிடைத்தது. கல்வெட்டுகளைத்தேடிப் பயணம் செய்தவாறிருக்கும் என் இயல்பை அறிந்த உறவினர் அன்னூர் வேலுச்சாமி அவர்கள் கொடுத்த தகவலின்படி, அவிநாசி அருகே உள்ள சேவூரை அடுத்திருக்கும் நடுவச்சேரி சென்றிருந்தேன். உடன், வரலாற்று ஆர்வலர் அவிநாசி-சங்கர் இணைந்துகொண்டார். நாங்கள் சென்ற இடம் நடுவச்சேரியைச் சேர்ந்த கருக்கங்காட்டுப்புதூர் என்னும் குறுஞ்சிற்றூர். சாலையோரம் அந்த சுமைதாங்கிக் கல் ஏறத்தாழ ஐந்தரை அடி உயரத்தில் உயர்ந்து நின்றது. வண்ணதாசன் குறிப்பிட்டதுபோல இரு தூண் கற்கள்; மேலே ஒரு கல் பாலம். தூண் கற்களில் ஒன்றில் மேற்பகுதியில் பத்துப்பதினொன்று வரிகளில் கலவெட்டு எழுத்துகள் காணப்பட்டன. எழுத்துகளைத்தொடர்ந்து கீழ்ப்பகுதியில் புடைப்புச் சிற்பமாக கருவுற்ற ஒரு பெண்ணின் உருவம்.

         பெரும்பாலும் சுமைதாங்கிக் கற்களில் அவற்றைச் செய்வித்தவர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். நோக்கம் அனைவரும் அறிந்ததுதான். அது போலவே இந்தச் சுமைதாங்கிக் கல்லிலும் செய்தவர் பெயர் எழுதப்பட்டுள்ளது என்றாலும், இச்சுமைதாங்கியில் வடிக்கப்பட்டுள்ள கருத்தாங்கிய பெண்ணுருவம், நோக்கம் இன்னதென்று எழுதப்படாத நிலையில் உண்மையான நோக்கத்தைக் குறிப்பால் சுட்டி நின்றது. கல்வெட்டின் பாடத்தை இங்கே தந்துள்ளேன்:
         
                     கடவுள் துணை
                    1936 வரு ஏப்ர
                    ல் மச 23 தியதி
                    கருக்கங்காட்
                    டுப்புதூர் கோ
                    யமுத்தூர் ரா
                    ய(ப்பன்) இருளப்ப நா
                    டார் செய்துவை
                    த்த சுமைதா
                    ங்கி | பக்கத்தில் தண்ணீ
                            ர் பந்த(லும்)

                            கிண(று)

         கருக்கங்காட்டுப்புதூரைச் சேர்ந்த (இராயப்பன் மகன்?) இருளப்ப நாடார் என்பவர் இச் சுமைதாங்கியைச் செய்துள்ளார் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. கூடுதல் செய்தியாக, கிணறு வெட்டித் தண்ணீர்ப்பந்தல் அமைத்ததாகவும் கல்வெட்டு குறிக்கிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை  வெளியிட்டுள்ள, துறையின் பொறுப்பாணையர் முனைவர் சீ.வசந்தி அவர்கள் பதிப்பித்த “சோழர் சமுதாயம்”  என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள  தண்ணீர்ப்பந்தல் பற்றிய செய்திகள் இங்கே மனங்கொள்ளத்தக்கவை.

“தண்ணீர்ப்பந்தல்கள் பொதுவாகக் கோயில்களில், மக்கள் கூடும் மண்டபங்களில், பெருவழிகளில், மடங்களில் மற்றும் சோலை சூழ்ந்த இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. தண்ணீர்ப்பந்தலைப் பராமரிக்க நிலம் அளிக்கப்பட்டது. பராமரித்தோருக்கு ஊதியம் வழங்கப்பட்டது. இறந்தவர் உயிர்களின் தாகம் தீர்க்கும் பொருட்டும் தண்ணீர்ப்பந்தல்கள் நிறுவப்பட்டன. பிரம்மதேசத்தில் முதலாம் இராசேந்திரன் இறந்த இடத்தில் அவன் மனைவி வீரமாதேவி உடன் கட்டை ஏறி இறந்ததால் அவளின் உடன் பிறந்தானாகிய சேனாபதி மதுராந்தகன் பரகேசரி மூவேந்த வேளான் என்பவன் இறந்த அவ்விருவர் உயிர்களின் தாகம் தீர்க்கும் பொருட்டுத் தண்ணீர்ப்பந்தல்  நிறுவியதாகக் கல்வெட்டில் கூறப்படுகிறது.   

         நமது கருக்கங்காட்டுப்புதூர் சுமைதாங்கிக் கல்வெட்டும் அவ்வாறே கருச்சுமையோடு இறந்த பெண்ணின் நீர் வேட்கையைத் தீர்க்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இக்கருத்தை உள்ளடக்கியே தண்ணீர்ப்பந்தலும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெத்தானூர் மற்றும் ஈசாந்தை ஆகிய ஊர்ப்பகுதிகளில் இத்தகைய சுமைதாங்கிக்கற்கள் அமைக்கப்பெற்றிருப்பதை இணையச் செய்தி ஒன்று கீழ்வருமாறு குறிக்கிறது:

          “ பிள்ளை பெறாமல் கருப்பத்துடன் இறந்த பெண்ணின் பொருட்டு, 
           அவள் வயிற்றுப்பாரத்தால் உண்டான வருத்தம்
           நீங்குமாறு அமைக்கப்பெற்ற சுமைதாங்கிக்கல்

இச்சுமைதாங்கிகளின் ஒளிப்படங்களும் இங்கே  பார்வைக்குத் தரப்பட்டுள்ளன.
கருக்கங்காட்டுப்புதூர் சுமைதாங்கிக் கல்வெட்டு 1936-ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பதாலும், எனவே நூறு ஆண்டுகள் பழமை என்னும் தகுதி பெறாததாலும் இதைத் தொல்லியல் சின்னம் என்னும் பெயரால் குறிக்க இயலாது. எனினும், தொல்லியல் கடந்து சோழர் கால மரபை ஒட்டியிருப்பதாலும், வாழ்வியல் மரபைக் கொண்டிருப்பதாலும் இச்சுமைதாங்கியை நடுகல் கல்வெட்டாகவே கருதித் தொல்லியல் தகுதியை இதற்கு அளிக்கலாம் எனக்கருதுகிறேன்.

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலை பேசி: 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக