மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 7 ஜனவரி, 2015

சின்னவீரம்பட்டி - தனிக்கல்வெட்டு


         தற்காலத்தே, பல்வேறு அறக்கட்டளைகளும் தொண்டு நிறுவனங்களும் மக்கள் பயனுறும் வகையில் பல அறச்செயல்களை மேற்கொள்ளுவதைக் காண்கிறோம். கடந்தகாலங்களில், பல அறச்செயல்கள் தனியொருமனிதரால் நிகழ்த்தப்பெற்றன. அவ்வகையில், தனிமனிதர் பலர், தண்ணீர்ப்பந்தல்களை அமைத்தும் கிணறுகளை வெட்டியும் தொண்டாற்றியுள்ளனர். அவ்வாறான ஓர் அறச்செயலைச் சின்னவீரம்பட்டியில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது.

         கோவைப்பகுதியில் பேருந்து நடத்துநராகப் பணியிலிருக்கும் தங்கவேலு என்பவர் சின்னவீரம்பட்டி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலுக்கருகில் ஒரு தனிக்கல்லில் கல்வெட்டு இருப்பதாகத் தெரிவித்த செய்தியின் அடிப்படையில், இக்கட்டுரை ஆசிரியர் உடுமலைக்கருகில் உள்ள சின்னவீரம்பட்டிக்கு நேரில் சென்று கல்வெட்டை ஆராய்ந்து பார்த்தார். உடுமலை-திருப்பூர் சாலையில் அமைந்துள்ள சின்னவீரம்பட்டியில் பேருந்து நிறுத்தத்திலேயே சாலையை ஒட்டி, ஒரு சுமைதாங்கிக்கல்லும், ஒரு தனிக்கல்லும் காணப்பட்டன. சாலையின் எதிர்ப்புறத்தில் மாகாளியம்மன் கோயில் அமைந்திருந்தது. தனிக்கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.  தூசியும் புழுதியும் படிந்த நிலையில் எழுத்துகள் படிக்கும் நிலையில் இல்லை. எனவே, கல்லை நீர் கொண்டு கழுவித் தூய்மையாக்கி, சுண்ணப்பொடியால் பூசிய பிறகே எழுத்துகள் தெளிவாகத் தெரிந்தன. கல்லைத் தூய்மைப்படுத்துவதில் அங்கிருந்த பள்ளிச் சிறார்கள் ஆர்வமுடன் உதவினர். கல்வெட்டைப் படித்துப்பார்த்ததில் பின்வரும் செய்தி இருந்தது.

         சின்னவீரம்பட்டியில் இருக்கும் பெரிய நாச்சிய கவுண்டர் குமாரர் நாச்சிய கவுண்டர் என்பவர் தருமத்துக்கு கிணறு வெட்டி வைத்துள்ளார். இவர் பவள குலத்தைச் சேர்ந்த, தளவாய்பட்டினத்துக் காணியாளர் ஆவார். (தளவாய்பட்டினம், தாராபுரம்  வட்டத்தில் அமைந்துள்ளது).  இவருடைய காணி குல தெய்வம் காளியம்மன் என்பதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கிணறு வெட்டிமுடித்து கல்வெட்டு பொறிக்கப்பட்டது 1916-ஆம் ஆண்டு, டிசம்பர் 4-ஆம் தேதி. கல்வெட்டின் இறுதியில் இத்தேதி, 4.12.1916 எனப்பொறிக்கப்பட்டுள்ளது. இத் தேதிக்கு இணையாகத் தமிழ் ஆண்டு நள வருடம், கார்த்திகை மாதம் 20-ஆம் தேதி திங்கள் கிழமை எனத்தரப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டுத் தேதியும், ஆங்கில ஆண்டுத் தேதியும் சரியாகப் பொருந்துகின்றன. கல்வெட்டு குறிப்பிடும் கிணறு, கல்வெட்டின் அருகிலேயே அமைந்துள்ளது. தரைக்கு மேலே கற்களைக்கொண்டு எழுப்பப்பட்ட சுற்றுச்சுவருடன் கிணறு அமைந்துள்ளது. சுற்றுச் சுவர், கிணறு அமைத்த காலத்திலேயே கட்டப்பட்டிருக்கவேண்டும் எனக்கருதலாம். ஏறத்தாழ, நூறு ஆண்டுகளாகியும் கிணற்றில் நீர் இருப்பதும், இன்றளவும்  நீர் மக்கள் பயன்பாட்டில் இருப்பதும் சிறப்புக்குரியன. கிணற்றின் மேற்பரப்பு முழுதும் இரும்புக்கம்பிவலை கொண்டு மூடப்பட்டுள்ளது. மின் இயந்திரம் கொண்டு நீர் இறைக்கப்பட்டு, கிணற்றையொட்டிக் கட்டப்பட்டுள்ள தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக எந்நேரமும் நீர் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

         அருகிலேயே குடியிருக்கும் பணி நிறைவு பெற்ற பள்ளி ஆசிரியர் சிவசுப்பிரமணியம் என்பவர் தெரிவித்த செய்தி: கிணற்றை வெட்டிய நாச்சிய கவுண்டரின் வழித்தோன்றல் தற்போதைய ஊர்ச்சபைத் தலைவராக இருக்கிறார். கிணறு வெட்டப்பட்ட காலத்தில், திருவண்ணாமலைக் கோயிலுக்குச் செல்லும் அடியார் கூட்டத்தினருள் சில பிரிவினர் பயணம் செய்து ( கால் நடைப்பயணமாகவோ, மாட்டு வண்டிப் பயணமாகவோ இருக்கக்கூடும். ), ஒரு பிரிவினர் பழநி நோக்கியும், இன்னொரு பிரிவினர் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை நோக்கியும், மற்றுமொரு பிரிவினர் கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை நோக்கியும் செல்வார்கள். அவ்வாறு வருகின்ற பயண அடியார்கள் சின்னவீரம்பட்டி வழியாகச் செல்வது வழக்கமாகையால் அவ்வடியார்களின் வேட்கை மற்றும் பிற தேவைகளைத் தீர்க்கும் நற்பணியை இக்கிணறு ஆற்றியுள்ளது.

         இக்கல்வெட்டுக்கருகிலேயே அமைந்துள்ள சுமைதாங்கிக் கல்லிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. இதையும் படித்துப்பார்த்ததில், இதே ஊரைச் சேர்ந்த காணி சின்னாயக் கவுண்டர் என்பவர் இச் சுமைதாங்கிக் கல்லை உபயமாகச் செய்து வைத்தார் என்னும் செய்தி தெரிய வருகிறது. இந்தக் கல்வெட்டில் கல்வெட்டு பொறிக்கப்பட்ட நாள் சக ஆண்டு 5021, ரௌத்தரி வருடம், பங்குனி மாதம் 10-ஆம் தேதி புதன் கிழமை எனக் காணப்படுகிறது. இதற்கு இணையான ஆங்கிலத் தேதி 23.3.1921 ஆகும். இவ்வழியே பயணம் செய்த அடியார்களுக்கு இச்சுமைதாங்கியும் பயன்பட்டு வந்துள்ளதை இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக