மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 27 மார்ச், 2019


கடம்பூர் பகுதியில் தொல்லியல் தடயங்கள்

முன்னுரை

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தர்மராஜ் அவர்கள் ஒரு நாளிதழ் செய்தியாளர். செய்திகளுக்காக ஆங்காங்கே பயணம் செய்துகொண்டிருப்பவர். அவர் புதிய இடங்கள், புதிய காட்சிகள் என்று தேடும் பயணங்களில் சத்தியைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களுக்கும் அவ்வப்போது பயணம் மேற்கொள்வது வழக்கம். அது போன்ற ஒரு பயணத்தில், சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கடம்பூர் மலைக்கிராமத்தில் நடுகற்கள் சிலவற்றைப் பார்த்ததாகவும், வாய்ப்பிருந்தால் வந்து பாருங்கள் எனவும் கூறியிருந்தார். சத்திப்பகுதியில் ஏற்கெனவே அறிமுகமாயிருந்த நண்பர் இராமசாமி அவர்களும் கடம்பூர் செல்ல ஆர்வம் காட்டியிருந்தார். நாங்கள் மூவரும் முன்னரே, 2016-ஆம் ஆண்டு சில நண்பர்களுடன், நீரில் மூழ்கிய டணாயக்கன் கோட்டைக் கோயிலை – நீர் வற்றியதால் - வெளியே தெரிந்த நிலையில் சென்று பார்த்திருக்கிறோம்.  தற்போது நாங்கள் மூவரும் இணைந்து கடம்பூர் செல்ல முடிவாயிற்று.  

மலைச் சாலையில் பயணம்

10-12-2018 அன்று பயணம் தொடங்கியது. கோவையிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரப்பயணத்தில் சத்தி-அத்தாணி சாலையில் அமைந்த, ”நால் ரோடு”   என்று மக்கள் பேச்சு வழக்கில் குறிப்பிடும் சாலைக் கூடலை அடைந்தேன். தமிழகத்தின் நீண்ட சாலைகளில் ஆங்காங்கே நான்கு சாலைகள் இணையும் (அல்லது பிரியும்) இடங்கள் உண்டு. சாலைகள் இணைவதால் கூட்டுச் சாலை என அழைப்பது பொருத்தமாயிருக்கும். ஆனால், நாட்டுப்புற மக்களும் தற்காலத்தே சாலை, வழி ஆகிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாது “ரோடு” என்னும் ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தப் பழகிவிட்டனர்.  எனவே, கூட்டுச் சாலை, மக்கள் வழக்கில் நால் ரோடு என்றும் சிற்சில ஊர்களில் கூட்டு ரோடு என்றும் அழைக்கப்படுகிறது. காலை பத்து மணி அளவில் நான் கூட்டுச் சாலையை அடையும்போது நண்பர்கள் இருவரும் அங்கு வந்திருந்தனர். பயணம் மகிழுந்தில். கூட்டுச் சாலையில் ஒரு சாலை கடம்பூர் நோக்கிச் செல்கிறது. கடம்பூர், சத்தியை அடுத்துள்ள மலைத்தொடரில் அமைந்த ஒரு கிராமம். எனவே, கூட்டுச் சாலையிலிருந்து சற்றுத் தொலைவுப் பயணத்தில்  மலைச்சாலை தொடங்கியது. காலை பத்து மணி ஆகியிருந்த போதும் அன்று வெயில் இல்லை. மெலிதான பனி மூட்டம், வளைவான சாலை, ஒரு பக்கம் - மலைப்பாறைகளை உடைத்துச் சாலை அமைத்திருந்ததால் -  பாறைச்சுவர், மறுபக்கம் மரங்கள் அடர்ந்த மலைச் சரிவு என மலைப்பாதைகளுக்கே உரிய காட்சி அழகுகள். குளிர்ந்த காற்று.  சமவெளியில் நகரங்களுக்கே உரிய கட்டிடக்குவியல்கள், மரங்களை இழந்த மொட்டைச் சாலைகள், சாலைகளில் ஊரும் ஊர்திகளின் குவியல்கள், அவை வெளிப்படுத்தும் மாசுப்புகை, நடந்து செல்லும் மனிதர் வானத்தை அண்ணாந்து ஒரு முறையேனும் பார்க்க இயலாதவாறு நம் பார்வையை எதிரில் சாலையில் நிலை குத்தவைக்கும் சாலைப் போக்குவரத்தின் நெருக்கடி எனப் பலவும் நம்மைச் சூழ்ந்து நடத்தும் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு எங்கோ புதியதொரு உலகுக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வு அந்த மலைச்சாலைப் பயணத்தில் ஏற்பட்டது.

                                                        மலைச்சாலைப் பயணக்காட்சிகள் சில












மல்லியம்மன் கோயில்

கூட்டுச்சாலையிலிருந்து அரை மணிப் பயணத்தில் நாங்கள் சேர்ந்த இடம் மல்லியம்மன் கோயில். சாலையின் மலைச் சுவர்ப்பக்கம் பாறைச் சரிவில் கூரையுடன் கூடிய ஒரு சிறிய அறைதான் மல்லியம்மன் கோயில்.  கோயிலை ஒட்டிப் பாறைக்கற்களால் அமைந்த, மழைக்காலங்களில் மட்டுமே அருவியாகத் தோற்றமளிக்கும் நீர் வழிந்தோடும் பாதை.  அண்மையில் பெய்த பெருமழையின்போது காட்டருவி நீர், கோயிலை மூடியவண்ணம் பாய்ந்தோடியுள்ளது என்றார் நாளிதழ் நண்பர். 


மல்லியம்மன் கோயில்


மல்லியம்மன் 


மல்லியம்மன் கோயிலுக்கு எதிரே 


மேலே தொடரவிருக்கும் மலைச் சாலைப்பயணத்துக்கு முன்னர் இந்த அம்மனை வணங்கியே ஊர்திகள் செல்வது வழக்கம். ஒவ்வொரு மலைச் சாலையிலும் இவ்வகையான சிறு தெய்வங்களின் கோயில்களைக் காணலாம். மல்லியம்மன், காடுறை தாய்த் தெய்வத்தின் ஒரு வடிவம். நாட்டார் வழக்கிலும், பழங்குடிகள், காடுவாழ் குடிகள் ஆகியோர் மரபிலும் வந்த வழிபாட்டுத் தொடரெச்சங்களே இது போன்ற சிறு தெய்வக் கோயில்கள். மக்கள் நம்பிக்கையில் இத்தெய்வங்கள் காவல் தெய்வங்கள்; இத்தெய்வங்களின் மீது பல்வேறு புனைவுகள் சாத்தப்படுகின்றன. கோபால் என்னும் பெயருடைய கோயில் பூசையாளர் – ஓர் இளைஞர் -  மல்லியம்மனைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். இந்த மலைத்தொடரில் மேலே இரண்டு மலை அடுக்குகளின் உச்சியைக் கடந்து சென்றால் மல்லியம்மன் துர்கம் என்னும் ஓரிடம் உள்ளது. அங்கு இயற்கையின் வியப்புக்குரிய பல கூறுகளும், காட்சிகளும் உள்ளனவாம். குகைகள், சுருங்கைகள் மட்டுமல்லாது, தொல்லியல் தொடர்பான வேறு சிலவும் இருப்பதாக அவர் கூறியது மிகுந்த வியப்பை அளித்தது. ஒரு வேளை, கற்கால மக்களின் வாழ்விடங்களும், பாறை ஓவியங்களும் அங்கிருக்கக் கூடும். ஆங்கிலேயர் காலத்துத் தடயங்களும் அங்கிருப்பதாக அவர் கூறினார்.

கோயிலுக்கு எதிரில் ஆங்காங்கே குரங்குகள். பயணம் செல்வோர் அவற்றுக்குப் பல தின்பண்டங்களைக் கொடுத்துப் பழக்கியதால், அவை எதிர்பார்ப்போடு ஊர்திகளின் அருகில் வர முயல்வதைக் கண்டோம்.

கடம்பூர்

மேற்கொண்டு இருபது நிமிடப்பயணத்தில் கடம்பூர் மலைக்கிராமத்தை அடைந்தோம். கடம்பூரைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. பசவணபுரம், மாக்கம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர் ஆகியன ஒரு சில ஊர்ப்பெயர்கள். இவை அனைத்தும், கடம்பூர் உட்படக் குத்தியாலத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தவை. கடம்பூரில், அரசு மருத்துவ மனை, வனச் சரக அலுவலகம் ஆகியவை உள்ளன. கடம்பூரை அடைந்ததும் பேருந்து நிலையத்தைக் கடந்து, கடைத்தெரு போல விளங்கிய சாலையில் எங்களை இறங்கச் சொல்லிய நாளிதழ் நண்பர், அருகே ஒரு நடுகல் சிற்பம் உள்ளதாகக் கூறினார்.

கடம்பூர் புலி குத்தி நடுகல்

நண்பர் காட்டிய இடத்தில் சாலையிலிருந்து மேட்டுப்பாங்காக ஒரு மண்பாதை உயர்ந்து சென்றது. அதில் சற்று ஏறிச்சென்றதும், புதரும் செடியுமாய் இருந்த ஓரிடம். தென்னை மரம் ஒன்றை ஒட்டிக் கற்களை அடுக்கிச் சிறிய மேடை போலாக்கி வைத்திருந்தனர். அந்த இடத்தில் நிறுத்தப்பட்ட ஒரு பலகைக் கல் காணப்பட்டது.  நெருங்கிச் சென்று, கல்லைச் சுற்றிலும் இருந்த சிறு செடிகளைக் களைந்தோம். அது ஒரு மூன்றடுக்கு கொண்ட நடுகல். புலிகுத்திக்கல் என்று கொங்குப்பகுதியில் அழைக்கப்படும் வீரக்கல். பெரும்பாலும், ஒற்றைக்கல் முழுதுமே புலியை வீரன் குத்துவது போன்ற சிற்பக்காட்சி இருக்கும். சிற்சில இடங்களில், பலகைக் கல்லானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு புடைப்புச் சிற்பமாக மூன்று சிற்பங்களைக் கொண்டிருக்கும். இவ்வகை நடுகற்கள், அடுக்கு நிலை நடுகல் என்றழைக்கப்படும்.  அருகில் சென்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.  


                                                  கடம்பூர் புலி குத்தி நடுகல் -  சில தோற்றங்கள்












முதல் அடுக்கில், வீரன் ஒருவன் தன் வலக்கையால் நீண்ட வாளினைப் புலியின் நெஞ்சுப்பகுதியில் பாய்ச்சியவாறு காணப்படுகிறான். அவனுடைய இடக்கை, புலியின் வாய்ப்பகுதியில் காணப்படுகிறது. பெரும்பாலான புலிகுத்திக் கற்களில் காணப்படும் அமைப்பே இது. இடக்கையில் உள்ள குறுவாளினைப் புலியின் வாய்ப்பகுதியில் செலுத்தியது போல் அமைந்திருக்கும். இச் சிற்பத்தில் கையின் வடிவம், குறுவாளின் வடிவம் ஆகியவை தெளிவாகப் புலப்படவில்லை. சிற்பம் நேர்த்தியாகவும், நுண்மையாகவும் வடிக்கப்படாததே காரணம். புலியின் வால் நிமிர்ந்த நிலையில் உள்ளது. வீரனின் அருகில் அவனது மனைவியின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அவள் தன் கையில் ஒரு மதுக்குடுவையை வைத்திருக்கிறாள். இருவருமே தலையின் வலப்புறத்தில் கொண்டை முடிந்திருக்கின்றனர். இருவர் கைகளிலும் வளைகள் காணப்படுகின்றன. கண், மூக்கு ஆகியவை தடித்துச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த முதல் அடுக்கு முழுதும் மண்ணும் சாணமும் பற்றுப்போல் படிந்துவிட்டதால் சிற்ப நுணுக்கங்களைப் பார்க்கக் கூடவில்லை. இருவரின் ஆடை அமைப்புப் புலப்படவில்லை.

அடுத்த (இரண்டாம்) அடுக்கில் மூன்று பெண்ணுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அடுக்கு நிலை நடுகல் எழுப்பும் மரபுப்படி, இப்பெண்ணுருவங்கள் தேவலோகப் பெண்டிரைக் குறிப்பன. அதாவது, இறந்து பட்ட வீரனைத் தேவ மகளிர் தேவர் உலகுகுக்கு அழைத்துச் செல்வதைக் குறிக்கும் குறியீடு. இந்த அடுக்கிலும் சற்றே மண்ணும் சாணமும் படர்ந்திருந்தாலும், சிற்ப உருவங்களில் ஆடை அமைப்பு காணப்படுகிறது. மூன்று பெண்டிரும் தம் இரு கைகளையும் உயர்த்திய நிலையில் வைத்திருக்கிறார்கள். மூவருமே, வலப்புறமாகக் கொண்டை முடிந்துள்ளனர்.

மூன்றாம் அடுக்கில், நடுவில் சிவலிங்கமும், சிவலிங்கத்தின் ஒருபுறம் நந்தி உருவமும், மறு புறம் சிவலிங்கத்தை வணங்கிய நிலையில் உள்ள நடுகல் வீரனின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சி, வீரன் சிவபதவி அடைந்ததைக் குறிக்கும் குறியீடு. பிறைநிலவின் உருவமும் கதிரவனைக் குறிக்கும் முழு வட்ட உருவமும் செதுக்கப்பட்டிருந்தன. நிலவும் கதிரும் உள்ளவரை இந்த நினைவு வீரக்கல் பாதுகாக்கப்படவேண்டும் என்னும் கருத்தைக் குறிப்பது. கல்வெட்டுகளில் “சந்திராதித்தவரை”  என்று எழுதப்படும் அதே மரபு.

கல்கடம்பூர் -  நடுகற்சிற்பம்

அடுத்து, நாளிதழ் நண்பர் எங்களை அழைத்துச் சென்றது கல்கடம்பூர் என்னும் பகுதி. கடம்பூரை ஒட்டியுள்ள புறக்குடியிருப்புப் பகுதியே கல்கடம்பூர். மிகுதியான தொலைவு இல்லை. சாலை மிகவும் சிதைந்திருந்தது. சாலையின் இருபுறமும் விளை நிலங்கள். அங்கே மருத்துவர் தோட்டம் என்று மக்கள் அழைக்கும் ஒரு புன்பயிர் நிலத்தருகே நண்பர் எங்களை நிறுத்தி, அந்தத் தோட்டத்துக்குள் இருக்கும் நடுகல்லைக் காட்டினார். பக்கத்து நிலத்திலெல்லாம் வேலி இல்லை. ஆனால் இந்தத் தோட்டத்தில் கற்றூண்களில் சுற்றிக் கட்டப்பட்ட முள் முடிச்சுகளுடன் கூடிய கம்பிகளாலான வேலி இருந்தது. நடுகல் சிற்பம் சாலையிலிருந்தே பார்வைக்குத் தெரிந்தாலும் ஒரு பலகைக் கல்லாக மட்டுமே தோற்றமளித்தது. அதில் இருக்கும் சிற்ப வடிவங்கள் புலனாகவில்லை. முள் கம்பிகளின் மீது கால் வைத்து ஏற இயலாது. ஆனால் தோட்டத்துக்குரியவர் அந்நிலத்துக்குள் சென்றுவர இரும்புக் கட்டமைப்பில் ஒரு பெரிய நுழைவு வழி (GATE) அமைத்திருந்தனர். அது பூட்டப்பட்டிருந்ததால், நண்பர் அதன் மீது ஏறி உள்ளே சென்று தாம் மட்டும் ஒளிப்படம் எடுத்துவருவதாகக் கூறினார். இன்னொரு நண்பர் உடல் நலக்குறைவின் காரணமாக வண்டியிலேயே அமர்ந்துகொண்டார். நடுகல் சிற்பத்தை அண்மையில் பார்க்கவேண்டும் என்னும் ஆவலில், அகவைக்குரிய இயலாமையைப் பொருட்படுத்தாது நான் கம்பிகளின் இடையே கால்களை நுழைத்து ஒருவாறு மேலே ஏறிக் கீழிறங்கினேன்.  செடிகளுக்கிடையில் நடந்து சென்று நடுகல்லைப் பார்வையிட்டோம். ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். நடுகல், வேலிக் காலாக இருந்த கல் தூணின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. கீழே கடம்பூரில் பார்த்த நடுகல் போலவே இதுவும் ஒரு மூன்றடுக்கு நடுகல்லாகும். அதே அமைப்பு.  அதில் உள்ள சிற்பக்காட்சிகளே இதிலும். 

                                                    கல்கடம்பூர் -  நடுகற்சிற்பம் -  சில காட்சிகள்







பாட்டப்பன் சாமி

கல்கடம்பூரிலிருந்து மீண்டும் கீழே கடம்பூருக்குத் திரும்பும் வழியில் கல்கடம்பூரின் ஊருக்குள் நுழைந்து செல்லும் மற்றொரு பாதையில் சென்றோம். ஒரு சிறிய திடல். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் அருகில் மரத்தடி மேடை ஒன்று. மேடை மேல் நிறுத்தப்பட்டிருந்த சிற்பம் கண்ணில் பட்டது. அருகில் சென்று பார்த்தால், அது ஒரு சிறிய கோயில் அமைப்பாகக் காணப்பட்டது. ஒரு மரத்தைச் சுற்றி, ஓரிரு படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்ட மேடை. மேடையின் காரைப்பூச்சு மரத்தின் அடிப்புறத்தில் இல்லை. மரத்தைச் சுற்றிலும் நிலத்தை மண்ணோடு விட்டு வைத்துள்ளனர்.  மண்ணில் சிறு சிறு கற்களை அடுக்கி வைத்துள்ளனர்.  இது போன்ற சிறு கற்களை அடுக்கி வழிபடும் இவற்றைப் பொட்டுசாமிகள் எனக்  கிராமங்களில் அழைப்பார்கள்.

சக்தி பிரகாஷ் என்பவர் தம் முக நூலில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்:

”கொங்குப் பகுதியில் பெருவாரியான ஊர்களில் இன்றளவிலும் மக்களால் வணங்கப்படும் ஒரு தெய்வம்தான் "பொட்டுசாமி". இந்த பொட்டுசாமி நமது தொன்ம வழிபாடான நடுகல் வழிபாட்டின் நீட்சியாக கருதலாம். கொங்குப்பகுதிகளில் பொட்டு சாமியை ஊர் மந்தையிலும், குலதெய்வக் கோவில்களிலும், பிள்ளையார் மாரியம்மன் கோவில்களுக்கு நடுவிலும்,  நடுகற்களின் அருகிலும் காணலாம். பொட்டுசாமியை 1,3,5,7,9 என வரிசையாக கூர்மையான கற்களை நட்டு வழிபடுவர் . சில இடங்களில் அதற்கு வெள்ளையடித்தும் ,  சிவப்பு கருப்பு இட்டும் வழிபடுகின்றனர் . பெரும்பாலும் தனிமேடை அமைத்து அதன்மீது வைக்கப்பட்டுள்ளது.”

பொட்டுசாமிக் கற்களுக்கு நடுவில், பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் ஒன்று காணப்பட்டது. ஆண் ஒருவரின் சிற்பம். மனித உருவத்தின் அளவீடுகளும், சிற்ப அழகும் இன்றி வடிக்கப்பட்ட சிற்பம். முறையாகச் சிற்ப இலக்கணங்களை அறிந்திராத, நாட்டுப்புறக் கைவினையாளர் ஒருவர் வடித்த சிற்பமாக இருத்தல்வேண்டும். முகத்தை உள்ளடக்கிய தலைப்பகுதி பெரிதாகத் தோற்றமளித்தது. தலைப்பகுதியில் முடி இல்லை. நீண்ட செவிகள். மூடிய நிலையில் கண்கள். மேற்புறமாக வளைந்த கொடுக்கு மீசை. கழுத்துக்குக் கீழே, மாட்டு வண்டியின் நுகத்தடியை ஒத்த நேர்கோட்டு வடிவத்தில் தோள்கள். தோள்களின் வடிவத்திலேயே முழங்கைகளும் சேர்ந்துள்ளன. தோள்பகுதியிலிருந்து கீழே இறங்கும் முன் கைகள்.  இடக்கை இடுப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வலக்கை உடலின் மீது படாமல் தொங்கும் நிலையில் உள்ளது. மார்புப் பகுதியிலிருந்து கால்கள் வரை சதுர வடிவம். கால்களின் இறுதியில் விரல்களோடு கூடிய பாதங்கள் காணப்படவில்லை.


பாட்டப்பன் சாமி


அருகிலிருந்த முதியவர் ஒருவரைக் கேட்டபோது, இது பாட்டப்பன் சாமி என்னும் பெயரில் ஊர் மக்களால் வழிபடப்படுகிறது என்று கூறினார். கிராமக்கோயில் வழிபாட்டு மரபில், முனியப்பன், அய்யனார், வேடியப்பன் போன்ற நாட்டார் தெய்வங்களில் பாட்டப்பன் சாமியும் ஒன்று.  ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் செம்புலிச்சாம்பாளையம், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, நாமக்கல் மவட்டம், இராசிபுரம் வட்டம், திம்மநாயக்கன் பட்டி,  ஈரோடு மாவட்டம் இலுப்பிலி ஆகிய ஊர்களில் பாட்டப்பன் சாமி கோயில்கள் உள்ளன. இவ்வழிபாடு, நாட்டார் மரபில் முன்னோர் வழிபாட்டின் இன்னொரு வடிவம் ஆகலாம்.

திடலின் ஓரத்தில் ஆங்காங்கே பெருங்கற்காலச் சின்னங்களில் காணப்படும் கற்கள் கிடந்தன. கடம்பூர்ப் பகுதி, பெருங்கற்காலத்துடன் தொடர்புடைய இடம் என்பதற்கான சான்றுத் தடயங்கள்.

குன்றி – அணில் நத்தம்

கடம்பூரிலிருந்து இருபத்து மூன்று கல் தொலைவில் உள்ள மாக்கம்பாளையத்தில் சில தொல்லியல் தடயங்களைப் பார்த்து வருவதுதான் அடுத்த திட்டமாக இருந்தது. ஆனால், அவ்வூருக்கு மகிழுந்து போன்ற வண்டிகள் செல்ல இயலா. மோசமான மலைப்பாதை. ’ஜீப்’  வகை வண்டிகள் மட்டுமே செல்ல இயலும். வாடகைப் பயணத்துக்குக் கிடைக்கும் ‘ஜீப்’  வண்டிகள் அன்று கிடைக்காததால் அருகில் உள்ள குன்றி என்னும் மலைக்கிராமம் வரை சென்று திரும்ப முடிவு செய்து எங்கள் பயணத்தை மகிழுந்திலேயே தொடர்ந்தோம். இந்த மலைப்பாதையும் சற்று மோசமான பாதையே. பாதை முழுக்க யானைகள் நடமாடும் பகுதிகள் நிறையக் குறுக்கிட்டன.  தார்ச் சாலையிலிருந்து இரு புறமும் பிரிந்து செல்லும் யானைத்தடங்கள். ஒரு சில இடங்களில் நீர் நிலைகளும் அவற்றைக் கடந்துள்ள யானைத் தடங்களும். பகல் நேரமே ஆயினும், எந்த நேரத்திலும் யானைகள் குறுக்கிடும் அச்சமான சூழ்நிலை. ஆயினும், கடம்பூரிலிருந்து குன்றி மலைக்கிராமத்துக்கு கிராம மக்கள் இரு சக்கர வண்டிகளில், பெரும்பாலும் ஆண்கள் தனித்தும்,  சில சமயங்களில் தம் துணையருடன் சேர்ந்தும் சென்ற வண்ணமாக இருந்தனர். யானைகளை எதிர்கொள்தல் பலருக்கும் நிகழ்வதுண்டு.  சற்றுத் தொலைவிலேயெ யானைகளைக் கண்டுவிட்டு அமைதியாக நின்று, யானைகள் அகன்றதும் பயணத்தைத் தொடர்வதை வழக்கமாகக் கொள்கிறார்கள். நாளிதழ் நண்பர், தாம் ஒரு முறை, பத்தடித் தொலைவில் யானையைப் பார்த்து நின்று, யானை அகன்றபின் மேலே பயணத்தைத் தொடர்ந்த ஒரு நிகழ்வைச் சொல்லும்போதே அச்சமாக இருந்தது. அந்த இடத்தையும் காட்டினார். சாலையை ஒட்டிய நீர் நிலை.

யானையின் இருப்பை நமக்கு உணர்த்தி அச்சம் சேர்க்கும் வகையில், சாலையில் ஆங்காங்கே யானைச் சாணம் காணப்பட்டது. அரவமற்ற சாலை. சாலையின் இருபுறமும் காடு. தனிமையும், அமைதியும் அச்சத்தை ஏற்படுத்தினாலும், விலங்குகள் எவற்றையும் எதிர்கொள்ளாதவரை, நம் பயணம் நம்மை இழுத்துச் சென்றது. குன்றி மலைக்கிராமத்தை அதன் எல்லையில் நெருங்கும்போதே ஓரிடத்தில் மூன்று நான்கு இளைஞர்கள் தம் வண்டியை நிறுத்திவிட்டுக் கைப்பேசியில் பேசியவண்னம் இருப்பதைக் கண்டு வியந்தோம். அந்த இடம், மலைப்பாதையில் வருகின்ற காட்சி முனை போன்று, கைப்பேசிகளின் இயக்கத்துக்கான அலை வீச்சு முனை என்றார் நண்பர். காரணம், அந்த முனைக்கப்பால் கைப்பேசிகள் இயங்கா. மொத்தத்தில் குன்றி கிராமத்துக்குள் சென்றுவிட்டால் உலகத்தொடர்பு இருக்காது. இயற்கை மட்டுமே. நகரத்தின் இயல்பு வாழ்க்கையிலிருந்து விடுபட இதை விடுத்து வேறிடம் இல்லை எனலாம்.

குன்றியில் பழங்காலக் கிணறு

குன்றியில் ஒரு பழங்காலக் கிணற்றைக் காட்டினார் நண்பர்.  ஆண்டு முழுதும் வற்றாத ஊற்று நீரைக் கொண்ட கிணறு. மிகுந்த வறட்சிக் காலத்திலும் நீர் நிறைந்திருக்கும் கிணறு.  குன்றி-அணில் நத்தம் ஆகிய இரு பெயர்களையும் சேர்த்தே இந்தப் பகுதி அறியப்படுகிறது. ஊற்றுக் கிணற்றுக்கு அருகில் வீடமைத்து வாழும் சிவபசவன் என்ற இளைஞர், ஊரை அடுத்துள்ள  காட்டுக்குள் பல தொல்லியல் தடயங்கள் இருப்பதாகக் கூறினார். பின்னொரு நாள் இங்கு வரவேண்டும். அணில் நத்தத்தில் ஓராசிரியர் பள்ளி ஒன்றுள்ளது. மலைக்கிராம மக்கள் சிறிய அளவில் வேளாண்மையில் ஈடுபட்டிருக்கிறார்கள். பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.


                      குன்றியில் பழங்காலக் கிணறு - சில தோற்றங்கள்









                                  கிணற்றருகில் வேறொரு  நீர்நிலை -  பாசித் தாவரம் படர்ந்து


ஆஞ்சநேயர் சிற்பம்


குன்றியிலிருந்து கடம்பூர் திரும்பும் வழியில், ஒரு பெரிய பாறையில் ஆஞ்சநேயர் சிற்பம் புடைப்புருவமாகச் செதுக்கப்பட்டிருந்ததைக் கண்டோம்.  அதன் முன்புறம் சில வேல்கள் நடப்பட்டிருந்தன. விளக்குக்கென ஒரு மாடமும் உள்ளது. மக்கள் வழிபாட்டில் இச்சிற்பம் உள்ளது.  ஆஞ்சநேயர் தம் இடது கையை அபய முத்திரையில் தூக்கி வைத்தவாறும், தம் இடது கையில் சௌகந்தி மலரைத் தாங்கிப்பிடித்தவாறும் காணப்படுகிறார். அவர்தம் வால், தலைக்கு மேல் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளது. வாலின் நுனியில் மணி கட்டப்பட்டுள்ளது. இவ்வகை அமைப்பு  வியாசராஜர் எழுந்தருளிவித்த ஆஞ்சநேயர் சிற்பங்களில் காணப்படுகின்ற அமைப்பாகும்.


                           ஆஞ்சநேயர் சிற்பம் - சில தோற்றங்கள்




பெரும்பள்ளம் அணை

கடம்பூரிலிருந்து திரும்பும் பயணத்தின்போது, மலைப்பாதையில் பார்வை முனை ஒன்றில் நின்று, கீழே பள்ளத்தாக்கில்  தெரிந்த பெரும்பள்ளம் அணையின் காட்சியைக் கண்டு மகிழ்ந்தோம். 


தொலைவில் -  பெரும்பள்ளம் அணை

கொடிவேரியில் ஒரு கல்வெட்டு

மலைப்பகுதியை விட்டுக் கீழே வந்தபோது மாலைப்பொழுதாகிவிட்டிருந்தது.  நண்பர் இராமசாமி அவர்கள், அருகில் கொடிவேரி பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டைக் காண்பிப்பதாகச் சொல்லி அங்கு அழைத்துச் சென்றார்.  கொடிவேரி என்னும் இவ்வூர் இங்குள்ள ஒரு தடுப்பணைக்குப் புகழ் பெற்றது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1125)  மைசூர்ப்பகுதியில் ஆட்சி செய்த ஜெயங்கொண்ட சோழ கொங்காழ்வான் என்னும் அரசனால் கட்டபெற்றது.  கல்வெட்டுகளில் இவ்வூர் ”கொடுவேலி”   என்று அழைக்கப்பெறுகிறது.  கொடுவேலி என்னும் ஒரு தாவரம் இங்கு மலிந்திருந்ததன் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாக வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில் உள்ள குறிப்பு, கொடிவேரி என்னும் பெயர் “கொடிவரி”  என்னும் பெயர் அடிப்படையில் அமைந்ததாகக் கூறுகிறது. கொடிவரி என்பது புலியைக் குறிக்கும் தமிழ்ச் சொல்; கொடிவேரியைச் சூழ்ந்த வனப்பகுதியில் புலிகள் நிறைய  இருப்பதன் காரணமாகக் கொடிவரி என்னும் பெயர் பெற்றுப் பின்னர் கொடிவேரி என மருவியது.


பத்ரகாளியம்மன் கோயில் - கொடிவேரி


பத்ரகாளியம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டு ஒரு தனிப்பலகைக் கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல், தரையிலேயே நீண்ட காலம் கிடந்ததாலும், அதன் மேற்பரப்பில் மக்கள் அமர்ந்ததாலும் மேற்பரப்பில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் தேய்ந்துபோயின. இன்னொரு பக்க எழுத்துகள் காணுமாறு உள்ளன. தற்சமயம், இக்கல்லைக் கிடப்பு நிலையிலிருந்து மேலெழுப்பி நிறுத்தியிருக்கிறார்கள்.  கல்வெட்டு எழுத்துகளின் மீது மாவு பூசிப் படித்தோம்.

கல்வெட்டுப் பாடம்

1    ஸ்வஸ்திஸ்ரீ . . . . .
2    [ஸம்வத்]ஸரத்து  ஐற்பசி (மீ) . .
3    தியதி ஒடுவங்கா நாட்
4    டுக் கொடுவேலி[யி]
5    ல் ஊரு[ம்] ஊராளிகளு
6    ம் எங்க ஊரில் தந்
7    திரத்தா(ர்) உபைய
8    ப்ரமாணம் பண்ணி
9    குடுத்த பரிசாவது
10  எங்கள் ஊரில் இரு
11  க்கு[ம்] கைக்கோள[ர்]க்கு




கல்வெட்டு - படியெடுக்கும் முன்

கல்வெட்டு - படியெடுத்த பின்


விளக்கம்

கல்வெட்டு அகராதியில் தந்திரத்தார் என்னும் சொல் இல்லை. தந்திரம் என்பதற்கு அருச்சனை அல்லது கோயில் பூசை என்பதாகத் திருவாங்கூர்ப் பகுதியில் உள்ள கல்வெட்டு வழக்கிலிருந்து அறிகிறோம்.  தந்திரி என்பதற்கு கல்வெட்டு அகராதி, சேர நாட்டுக் கோயில் பூசாரி என்று குறிப்பிடுவதும் மேற்படி தந்திரம்=அருச்சனை (பூசை) என்பதைத் தெளிவாக்குகிறது.  அகராதி, தந்திரம் என்பதற்கு ‘வீரர் தொகுதி;   படை’  என்றும், தந்திரிமார் என்பதற்கு ‘படை வீரர் கொண்ட சாதி’ என்றும் பொருள் தருவதால், கொடிவேரிக் கல்வெட்டில் வருகின்ற தந்திரத்தார் என்பது ‘படை வீரர் கொண்ட சாதி’  என்பதையே குறிக்கும் எனலாம். மேலும், கைக்கோளர் என்பவர் கைக்கோளப்படைப் பிரிவினரைச் சார்ந்தவர் ஆவர். எனவே, தந்திரத்தார் என்னும் குழுவினர், கொடுவேலி ஊரில் இருக்கும் கைக்கோளர்க்குச் சில உரிமைகள் அல்லது சலுகைகளைத் தந்துள்ளனர் எனக்கொள்வதே பொருத்தமுடையது. அவ்வாறு தந்ததைக் கல்வெட்டு “உபைய ப்ரரமாணம்” என்னும் சொல்லால் குறிக்கிறது. இந்தக் கொடையில்  (உபையத்தில்)  ஊரும் ஊராளிகளும் பங்கு பெறுகின்றனர் எனலாம்.

கொடிவேரியின் பழம்பெயர் கல்வெட்டில் கொடுவேலி எனக் கூறப்படுகிறது. பழங்கொங்கு நாட்டின் இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளுள் ஒன்றான ஒடுவங்க நாட்டில் கொடுவேலி இருந்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஒடுவங்க நாடு, தற்போதுள்ள சத்தியமங்கலம் பகுதியாகும்.


முடிவுரை

கொங்குநாட்டின் உட்பிரிவான ஒடுவங்கநாட்டின் சில பகுதிகளில் உள்ள தொல்லெச்சங்களைக் காணும்  வாய்ப்பாக இப்பயணம் முடிந்தது.

பின் குறிப்பு :

இக்கட்டுரை  பதிவிடப்பெறும் இன்று காலை, கட்டுரை ஆசிரியருக்கு வந்த ஒரு செய்தி -  சத்திய மங்கலத்துப் பகுதியின் மூத்த வரலாற்று ஆய்வாளர் நண்பர் ’உழவர் ஐயா’  தூ.நா. இராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்பது. அன்னாரது மறைவு பேரிழப்பு. அகவை எண்பத்தைந்திருக்கலாம். என்னிலும் பல ஆண்டுகள் மூத்தவர். இருப்பினும் அன்பான அணுக்க நண்பர்.  கட்டுரை ஆசிரியரின் நீண்ட நாள் கனவு, நீரில் மூழ்கிய டணாயக்கன் கோட்டைக் கோயிலைக் காணவேண்டும் என்பது.  அதை ”உழவர் ஐயா” இரு முறை நனவாக்கினார். அப்பயணங்கள் தந்த இன்பம் மறக்கவொண்ணாதது. கடம்பூர் பயணத்தின் போதே அவர் உடல் நலம் குன்றியிருந்தார். நலக்குறைவு காரணமாக அவர் மகிழுந்தை விடுத்து மிகுதியும் வெளிவரவில்லை. கடம்பூர்ப் பயனத்தின்போது  அவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்ளாதது மனதை வருத்துகிறது. டணாயக்கன் கோட்டைப் பயணத்தின்போது அவருடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் அவர் நினைவை நிலை நிறுத்திக்கொண்டே இருக்கும்.  

அவர் நினைவைப் போற்றும் முகமாக இக்கட்டுரைப் படையல்.

           உழவர் ஐயாவுடன் கட்டுரை ஆசிரியர் -  டணாயக்கன் கோட்டையில்
                               பின்னணியில் (ப)வாநி ஆறு






----------------------------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.

ஞாயிறு, 17 மார்ச், 2019

சீர்காழி - புதுத்துறை - சிவன் கோயில்

முன்னுரை
இணையத்தில்  அவ்வப்பொழுது வரலாறு, தொல்லியல், கல்வெட்டுகள் தொடர்பான செய்திகளைப் பார்க்கையில் சிலவற்றை என் கணினிப் பண்டாரத்தில் சேர்த்து வைப்பதுண்டு. அது போன்ற ஒரு பதிவை இன்று காண நேர்ந்தது.  சிதைவுகளில் சிக்குண்டு கிடக்கும் சீர்காழிக் கோயில் ஒன்றைப் பற்றிக் கடம்பூர் விஜய் என்பவர் பதிவிட்டிருந்தார்.   கோயிலின் சிதைந்த பகுதிகள்,  கருவறையில் இருக்கை (பீடம்)  ஏதுமின்றி  எழுந்தருளியிருக்கும் இலிங்கத்திருமேனி, சில கல்வெட்டுகள் என நலிந்துவிட்டிருக்கும் சிவன் கோயிலின் தோற்றங்கள்.  மனம் வருந்தியது. 


கோயிலின் அழிவு நிலைத் தோற்றங்கள்







                                        படங்கள் -   கடம்பூர் விஜய்

கோயில், நாகை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தைச் சேர்ந்த புதுத்துறை என்னும் ஊரில் அமைந்துள்ளது. கோயில் புத்துயிர் பெறவேண்டும் என்னும் வேண்டுகோளுடன்  அன்பர் எழுதியிருந்தவற்றைக் கீழே  தந்துள்ளேன். 

கல்வெட்டுகளின்  படங்கள்  ஓரளவு தெளிவாக இருந்தன;  அவற்றின்  பாடங்கள்   கீழுள்ளவாறு :

படம்-1



1    . . . . (மன்)ற பாழ்  . . .  மாவும் விக்கிரம சோழ நல்லூற் கட்டளையில் 
2    வெள்ளான்பற்று முன்பு ஒட்டுக்கொள்(ளா) . . . . ற் பாழிலுமுவற்பாழிலு      மன்ற பாழிலு[ம்]
3     வாய்க்காலுக்கு வடக்கு . . . . . .   சிவபாதசேகரநல்லூர்.... [நீ]க்கி

படம்-2  



1   . . . . .   வதிக்குக் கிழக்கு மதுராந்தக (வா)ய்க்காலுக்கு  வடக்கு 
2     . . . ழிலும் ஆறிடு படுகையிலும் பயிற்(கொ). . . வருகிற நிலத்திலே        (புன்செய்)
3    [நீ]க்கி  இதன் கிழக்கு (காட்சி)  பங்கு  இறையிலி  . . . நிலம் . .  விக்கிரம
      சோழ .

படம்-3



1    லூற் கட்டளையில்   நாங்கூர் வதிக்கு கிழக்கும் மதுராந்தக       வாய்க்காலுக்கு 
2    வெள்ளான் பற்றில் புன்செய் . . . . . க்கு       ஒட்டுப்படி காசு நா(லே)
3     லுக்குத் தெற்கு . . . . . .   சதிரத்து  தன்(மி) . . . . திப்புற இறை[யிலி]

படம்-4


1     கிழக்கு மதுராந்தக வாய்க்காலுக்கு வடக்கு (ந்)
2     க்கு ஒட்டுப்படி காசு நாலேகாலுங்  
3      . . .  திப்புற இறையிலி . . . . இதில் வடக்கடை[ய]

படம்-5


1    லூற் கட்டளையில் நாங்கூர் வதிக்(கு)  கிழக். . .. 
2    வெள்ளான் பற்றில் புன்செய் . . .  க்கு
3    லுக்குத் தெற்கு . . . . சதிரத்து . . . . .

படம்-6


1     [வ]டக்கு நாலாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து மேற்க[டை]
2   . . . . ங் கீழைப் பற்றத்திலுஞ் சாத்தன் குடி(யி) . . . .    (தி)ருக்குருகா(வூ)
3    (வ)டக்கடைய . . . .    றின கா . . .   மறு. . . . . .  குந்தவை 

கல்வெட்டுச் செய்திகள் - விளக்கம் : 
துண்டு துண்டாகக் கிடைத்த கல்வெட்டு வரிகளிலிருந்து பெறப்படும்  செய்திகளாவன:  கல்வெட்டுகள் அமைந்துள்ள புதுத்துறைச் சிவன் கோயிலுக்கு   நிலங்கள் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.   கோயிலின் பெயரோ, இறைவனின் பெயரோ இந்தத் துண்டுக்கல்வெட்டுகளில் காணப்படவில்லை.  கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் யாவும் விளைவுக்கேற்ற நல்ல நீர் நிலங்களாக இருக்கவேண்டும் என்று கருதலாம். காரணம்,  கொடை நிலங்கள் ஆற்றுப்படுகையில் அமைந்திருந்தன என்று “ஆறிடு படுகை”   என்னும் சொல் குறிக்கிறது.  புன்செய் நிலம்,  பாழ் நிலம் (தரிசு நிலம்)  ஆகியனவற்றை நீக்கியமை பற்றிய குறிப்பு கல்வெட்டில் வருகிறது.   மேலும், மதுராந்தக வாய்க்கால்,  நாங்கூர் வதி (வதி=வாய்க்கால்) ஆகிய நீர்க்கால்களை ஒட்டிய நிலங்கள் என்னும் குறிப்பும் கல்வெட்டில் உள்ளது. 
கொடை நிலம்,  விக்கிரமசோழ நல்லூர் கட்டளையில் இருந்து தெரிவு செய்யப்பட்டமை தெரிகிறது. கட்டளை என்பது, (விளைச்சல் வருவாய் அடிப்படையில்) தரம் பிரித்த நிலங்களைக் குறிக்கும்.  சிவபாத சேகர நல்லூர் பற்றிய குறிப்பும் உள்ளது. ”நல்லூர்”  என்னும் பெயருள்ள ஊர்கள் அனைத்தும், அரசன்,  தன்னுடைய சிறப்பு நிதியை ஒதுக்கி,  வேளாண்மையில் பின் தங்கிய ஊர்ப்பகுதிகளை வளப்படுத்தி, அரசனின் பெயரையோ, அரசியர் பெயரையோ இட்டு  உருவாக்கிய ஊர்களே. அவ்வகையில் இங்குள்ள கல்வெட்டில்,  விக்கிரமசோழநல்லூர், சிவபாதசேகரநல்லூர்  ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பெறுகின்றன. இவற்றில், விக்கிரம சோழ நல்லூர்,  மேற்படி புதுத்துறையின் பழம்பெயராகவே இருக்கக்கூடும். 
அடுத்து, ஊர்களில் ஓடுகின்ற  வாய்க்கால்களுக்கு அரச குடும்பத்தினர் பெயர் இடுவது வழக்கம். அவ்வகையில், மதுராந்தக வாய்க்கால் என்னும் பெயர் இங்குள்ள கல்வெட்டில் வருகின்றது.   மதுராந்தகன்,  இராசராசனுக்கு முன் ஆட்சி செய்த உத்தம சோழனைக் குறிக்கும் பெயராகலாம். கல்வெட்டில் வருகின்ற குந்தவை பெயரும்   இவ்வூர்ப் பகுதியில் இருந்த ஒரு வாய்க்காலைக் குறிப்பதாகலாம். 
கொடை நிலத்துக்கு  வரி நீக்கம் அளிக்கப்பட்டதை “இறையிலி”  என்னும் தொடர் சுட்டுகிறது.  அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒப்பந்த வரிகள் சில “ஒட்டு”   என வழங்கப்பட்டன.  அவ்வகை “ஒட்டுப்படி”  செலுத்தவேண்டிய நாலே கால் காசு வரி நீக்கப்பட்டதையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 
வேளாண் நிலம்,  நீர்ப்பாசனத்துக்கு ஏதுவாகச் சிறு சிறு சதுரப் பகுதிகளாகப்  பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றை இனம் காண எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இதனை, “நாலாஞ்சதிரம்”   என்ற தொடரால் அறியலாம்.  வதி, வாய்க்கால் என்னும் பெயரில் அமைந்த பெரு வாய்க்கால்களை அடுத்துப் பயிர் வளர்க்கும் சதிரம் என்னும் வயல் கூற்றை ஒட்டி அமைக்கப்பட்ட சிறிய கிளை நீர்க் கால்கள்  ”கண்ணாறு”  என அழைக்கப்பட்டன.  இவையும் எண்ணிக்கை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டன.  கல்வெட்டில், “நாலாங்கண்ணாறு”   என வருவதைக் காண்க. 
கல்வெட்டில்,  திருக்குருகாவூர்  குறிப்பிடப்படுகிறது.  கொடை நிலம் அமைந்த பகுதி அல்லது வாய்க்கால்கள் அமைந்த பகுதி என்னும் வகையில் இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.  திருக்குருகாவூர்,  திருவாலி நாடு என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது. விக்கிரம சோழ நல்லூரும் இதே திருவாலி நாட்டில் அமைந்திருந்தது. திருவாலி நாட்டை ஒட்டித் திருக்கழுமல  நாடு அமைந்திருந்தது. திருக்கழுமலம் என்பது சீர்காழியின் பழம்பெயர். திருக்கழுமல நாடு, திருவாலி நாடு  ஆகியன சோழர் கால நாட்டுப்பிரிவுகள் ஆகும். (பார்வை நூல் : இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்-கி.பி.800-1300  -   தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.)

கல்வெட்டின் காலம்
உத்தம சோழன் (கல்வெட்டில் மதுராந்தகன்), இராசராசசோழன் (கல்வெட்டில் சிவபாதசேகரன்),  விக்கிரம சோழன் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவர்களில் விக்கிரம்சோழனே  பின்னவன். இவன் முதலாம் குலோத்துங்க சோழனின் மகன் ஆவான். இவனது ஆட்சிக்காலம்  கி.பி. 1118-1135.  விக்கிரம்சோழனின் பெயரால் அமைந்த விக்கிரம சோழ நல்லூர் கல்வெட்டில் குறிக்கப்படுவதால்,  கல்வெட்டு அமைந்த ஊரும் கோயிலும்  அவன் காலத்திலிருந்தே இருந்துள்ளமை புலப்படும். அரசன் பெயரும் அரசனின் ஆட்சியாண்டும் குறிக்கப்பெறும் வேறு கல்வெட்டுகள் கிடைக்கும் வரை கல்வெட்டின் காலம்  விக்கிரம் சோழனின் ஆட்சிக்காலத்துக்குப்  பிந்தையதாகக் கணக்கிட இயலாது. எனவே, கல்வெட்டின் காலம் விக்கிரம சோழனின் ஆட்சிக்காலம் என்றே கொள்ளலாம். அதாவது, கல்வெட்டு, கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்னும் முடிவுக்கு வரலாம். கல்வெட்டின் எழுத்தமைதியும்,  இந்தக் காலகட்டத்தை ஒட்டியதாக அமைந்துள்ளது.  

முடிவுரை
புதுத்துறை ஊரின் நாட்டார் பெருமக்களும்,  அறநிலையத்துறையினரும், தொல்லியல் துறையினரும் இணைந்து இக்கோயில் புத்தாக்கம்  பெற்றிட வழிவகை செய்யவேண்டும் என விழைவோம்.  கடம்பூர் விஜய் குறிப்பிடுவதுபோல்,   சிவனின் இடுக்கண் களைய நிதியுடையோர் களம் இறங்குவார்களாக.

கடம்பூர் விஜய்  அவர்களின் பதிவு
சீர்காழி-சட்டநாதபுரம் ரவுண்டானாவில் கிழக்கு நோக்கி திரும்பி திருநகரி செல்லும் சாலையில் திருநகரிக்கு இரண்டு கிமி முன்னால் உள்ளது புதுத்துறை
ஊருக்குள் சென்று கோயிலை தேடி தெக்கியும் வடக்கியும் அலைஞ்சோம் ஏன்? கோயில் கோபுரம் மணிசத்தம் அய்யர் ,பூசை, தேங்காய், பழம், சூடம் எண்ணை , விளக்கு எல்லாம் இழந்து எம்பெருமான் விடாப்பிடாயாக இன்னும் வீற்றிருக்கும் இடம் தான் தான் புதுத்துறை.
பதினைந்தாம் நூற்றாண்டுகளில் கட்டபெற்ற கோயில் பராமரிப்பின்றி இடிந்து வீழ்ந்து கிடக்க, அம்மன் கோயில் செங்கல் என்பதால் வேர்கள் அனுமதியின்றி உள்ளே நுழைந்து கருவறையை துவம்சம் செய்தது காலத்தின் கொடுமை தானா? இல்லை நம் அலட்சியம் தானா?
கல்வெட்டுக்களை பாருங்கள் வருடத்தினை கண்டுபிடியுங்கள்!
கல்வெட்டின் ஆரம்பம் இருந்தால் எளிதாய் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும் என எண்ணி தேடிய இடம் மண் மூடிப்போயிருக்க, ஆனால் இங்கிருக்கும் மக்களின் இறைநம்பிக்கையும், வரலாற்று ஆர்வமும் இன்னும் மண் மூடிபோகவில்லை என சுற்றி பார்த்த போது தெரிந்தது.
27நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்களை நட்டு கூண்டு கட்டி பராமரிக்கின்றனர்.
சிதிலமடைந்த தென்மேற்கு மூலையில் விநாயகர் கோயிலை புதுப்பித்துள்ளனர். எம்பெருமானுக்கு சமீபகாலமாக தற்காலிக சிமென்ட் பலகை தடுப்பில் கருவறை அமைத்து பாதுகாத்து தமக்கு தெரிந்த அபிஷேக ஆராதனைகள் பூசைகள் செய்கின்றனர். இதனை நீங்களும் காண வேண்டும் என்பதற்காகவே கருவறை இறைவனை படமேடுப்பதில்லை என்ற எனது நிலைப்பாட்டை விட்டு படமேடுத்துள்ளேன்.
பிள்ளைக்கு கட்டிவிடலாம் அப்பனுக்கு கட்டுவது சாதாரணவிஷயமா என்ன!!
முகநூல் நண்பர்களே "உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" எனும் குறட்பா சொல்வதை போல் இம்மக்களது இடுக்கண் களையும் பெருநிதியுடையோர் களம் இறங்குவீர் , ஏனையோர் இதனை அப்படிப்பட்டோருக்கு பகிர்ந்து விடவும்.



துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,  கோவை.  
அலைபேசி :   9444939156.

சனி, 9 மார்ச், 2019


தொண்டாமுத்தூரை நோக்கி ஒரு சிறு பயணம்

முன்னுரை

கோவையைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் குமரவேல் என்னும் இளைஞர். அவருக்கு அவர் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல், கோவை-தொண்டாமுத்தூர் அருகில் தென்னமநல்லூரில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது என்பது. அக்கல்வெட்டைச் சென்று பார்த்துப் படிக்கவேண்டும் என்று குமரவேல் கேட்டிருந்தார். எனவே, ஒரு நாள் இருவரும் புறப்பட்டோம்..

தொண்டாமுத்தூர் நடுகல் சிற்பம்


தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயில்


தொண்டாமுத்தூரை அடைந்ததும், அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஒரு நடுகல் சிற்பம் இருப்பதாக நண்பர் கூறவே, மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம். நுழைவாயில தூணுக்கு அருகிலேயே நடுகல் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. சிற்பத்தில், வீரன் ஒருவனின் உருவமும், காளை ஒன்றின் உருவமும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. வீரன் நின்று கொண்டிருக்கிறான். அவனுடைய இடது கை காளையின் கொம்பைப் பிடித்தவாறுள்ளது. வழக்கமாக இதுபோன்ற நடுகற் சிற்பத்தில் வீரனின் கால்கள், நடந்துகொண்டிருக்கும் ஒரு தோற்ற நிலையில் பக்கவாட்டில் அமைக்கப்பெற்றிருக்கும். முகம் மட்டும் நேராகக் காண்பிக்கப்பட்டிருக்கும். இத்தகைய கால் அமைப்பை ”ஆலிடா”  என்னும் கலைச்சொல்லால் குறிப்பர். ஆனால், இச்சிற்பத்தில், கால்கள், முகம் இரண்டுமே நேராகக் காட்டப்பட்டுள்ளது. வீரனின் இடது கை வாள் ஒன்றினை உயர்த்திப் பிடித்துள்ளதாகத் தோன்றுகிறது. ஆனால், வாளினின்றும் சாட்டை போன்ற ஒன்று கிளைத்ததுபோல் கீறப்பட்டுள்ளது.  சிற்பம் முழுதுமே, அதன் மூலக் கற்சிற்பத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டுள்ளது. சிற்பம் செதுக்கப்பட்ட கற்பரப்பு  முற்றாகச் ‘சிமெண்டு’  கொண்டு பூச்சுப்பணி செய்யப்பட்டு வழவழப்பாக்கப்பட்டதோடு அல்லாமல் சிற்ப உருவங்கள் இரண்டிலுமே ‘சிமெண்டு’ கொண்டு ஒட்டுப் பூச்சு செய்யப்பட்டுள்ளது. எனவே, சிற்பத்தின் மெய்யான வடிவம் மாறியுள்ளது. கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துகளும் பூச்சு வேலையால் அழிந்துபோயின. இச்சிற்பமும், இதில் உள்ள கல்வெட்டும் ஆவணப்படுத்தப் பெற்றுள்ளனவா எனத் தெரியவில்லை. ‘சிமெண்டு’ப் பூச்சினை முழுவதுமாக நீக்கிய பின்னரே எழுத்துகளைப் படிக்க இயலும்.



நடுகல் சிற்பம்


இச்சிற்பம், ஏறு தழுவலுக்கு எடுத்துக்காட்டாக அமைந்த நடுகல் சிற்பம் என்று கருதத் தோன்றினாலும் நுண்மையான ஆய்வுக்குப் பின்னரே முடிவை எட்ட இயலும். ஏறு தழுவுகின்ற காட்சியில் சிற்பம் இல்லை.



தென்னமநல்லூர்க் கல்வெட்டு

தொண்டாமுத்தூர் நடுகல் சிற்பத்தைக் கண்டுவிட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் தென்னம நல்லூர். தென்னம நல்லூரில் கரிய காளியம்மன் கோயிலுக்கருகில், சாலையோரம் அமைக்கப்பெற்ற குடி நீர்க் குழாய்க்கு அடியில், மக்கள் நீர் பிடிக்கத் தோதாகக் குடங்களை வைப்பதற்கென்றே செய்யப்பட்ட கல் போல இந்தத் துண்டுக்கல் பயன்பட்டு வந்துள்ளது. குடங்கள் வைக்கப்பட்டதாலும், மக்கள் கால் பதிப்பதாலும் எழுத்துப் பொறிப்பு தேய்ந்து போனது. தொடர்ந்த நீர் ஒழுக்கினால், கல்வெட்டுப் பரப்பில் பாசி படர்ந்திருந்தது. நண்பர், கல்லின் மீது மண்ணைக்கொட்டி, அருகில் கிடைத்த தென்னை நார் கொண்டு தேய்த்துத் தேய்த்து நீரில் கழுவி ஒருவாறு தூய்மைப்படுத்திய பின்னர் அந்த இடத்திலிருந்து பெயர்த்து வெயிலில் வைத்துக் காய வைத்து மாவு பூசிய பிறகு, எழுத்துகளை அங்கேயே படித்தோம். கல்வெட்டு பிற்காலக் கல்வெட்டு.


தென்னமநல்லூர்க் கல்வெட்டு


கல்வெட்டின் பாடம் :

1     (வி)க்கிர(ம வரு.) தை மீ  உயந  (23) தேதி
2     தென்னம நல்லூரிலிருக்கு
3     ம் (சின்)னக்கவுண்டன் பெ
4     ண்சாதி (கன்னி)யம்மா(ள்)
5     . . . . . . . . . .  ன் கோ[யில்]
6     . . . . . . . . . . ர்  க்கிற......

விளக்கம் :

கல்வெட்டின் முதல் வரியில் விக்கிரம் வருடம் என்னும் குறிப்பு காணப்படுகிறது. விக்கிரம் வருடம் தமிழ் ஆண்டு வட்டத்தில் 1880-ஆம் ஆண்டு அல்லது 1940—ஆம் ஆண்டைக்குறிக்கும். இக்குறிப்பின் அடிப்படையிலும், எழுத்தமைதியின் – குறிப்பாக ஆறாம் வரியில் “க்கி”  என்னும் எழுத்துகள் ஒரே எழுத்தாகச் சுருக்கிக் கூட்டெழுத்து முறையில் எழுதியுள்ளதின் - அடிப்படையிலும் கல்வெட்டின் காலம் கி.பி. 1880 ஆகலாம் என்று கருதலாம். அங்குள்ள மக்களின் கூற்றுப்படி, அந்தத் துண்டுக்கல் அருகிலிருக்கும் சக்தி விநாயகர் கோயில் என்னும் பழங்கோயில் புதுப்பிக்கப்பட்டபோது புறக்கணித்து எறிந்த கற்களில் ஒன்றாகும்.  எனவே,  கல்வெட்டில் வருகின்ற கோ[யில்]   மேற்படி விநாயகர் கோயில் ஆகலாம். இக்கோயிலுக்கு எதோ ஒரு தன்மம் அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு கூறுகிறது எனலாம். தன்மத்தைப் பற்றிய குறிப்புள்ள இடத்தில் எழுத்துகள் மறைந்துவிட்டன. தன்மத்தை அளித்தவர், தென்னமநல்லூரிலிருக்கும் சின்னக்கவுண்டர் என்பாரின் பெண்சாதி (மனைவியார்) கன்னியம்மாள் என்பவர் ஆவார். பெண்கள் சொத்துரிமை உடையராய் விளங்கியுள்ளமையும், அவர்கள் தம் சொத்தைக் கொண்டு தன்மங்கள் செய்தமையும் கோவைப் பகுதியில் கட்டுரை ஆசிரியர் கண்டறிந்த பல பிற்காலக் கல்வெட்டுகளில் காணப்படுகின்ற செய்திகளே.

தாளியூர்

தென்னமநல்லூர்க் கல்வெட்டைப் பார்த்துப் படித்த பின்னர் மீண்டும் தொண்டமுத்தூர் வழியே சென்றோம். ஒரு பிரிவுச் சாலையைக் குறிக்கும் கைகாட்டி, தாளியூர்- 1 கி.மீ. என்று காட்டியதைப் பார்க்கையில், தொல்லியல் தேடலில் தாளியூரில் (தாழியூர் என்பதே சரியாக இருக்குமோ என்னும் ஐயம் ஏற்பட்டது) ஏதாகிலும் தடயங்கள் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் தாளியூர் சென்றோம். அங்கு பழங்கோயில்கள் எவையுமில்லை. ஓரிரு வயது மூத்தோரிடம் பேசியதில், தொண்டாமுத்தூர் வஞ்சியம்மன் கோயிலிலும், நரசிபுரம்- வெள்ளிமலைப் பட்டணத்துக் கோயிலிலும்   கல்வெட்டுகள் உள்ளன என்பதாகச் செய்தி கிடைத்தது. மீண்டும், தொண்டாமுத்தூர் திரும்பி வஞ்சியம்மன் கோயிலை அடைந்தோம்.

வஞ்சியம்மன் கோயில்

ஒற்றைக் கருவறையும் அதன்மீது எழுப்பப்பட்ட விமானமும் கொண்ட கல் கட்டுமானத்தால் அமைந்த ஒரு கோயிலே வஞ்சியம்மன் கோயில். கோயிற் சுவர்களில் சில கற்களில்  எழுத்துப் பொறிப்புகள் காணப்பட்டன. ஆனால், கற்சுவர்களின் மீது தொடர்ந்து பூசப்பட்ட சுண்ணாம்புப் பூச்சின் காரணமாக எழுத்துகளைப் படிக்க இயலவில்லை. சுண்ணாம்புப் பூச்சு முழுவதையும் அகற்றிவிட்டே கால்வெட்டுகளைப் படிக்க இயலும். பிறிதொரு முறை இங்கு வந்து அம்முயற்சியை மேற்கொள்ளலாம் என அங்கிருந்து அகன்றோம். பயணம், வெள்ளிமலைப் பட்டணத்தை நோக்கித் தொடர்ந்தது.

வஞ்சியம்மன் கோயில்


வீடு வந்து சேர்ந்து, கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலைப் பார்க்கையில், வஞ்சியம்மன் கோயில் துண்டுக் கல்வெட்டுகள் 2003-ஆம் ஆண்டில் படிக்கப்பட்டுப் பதிவாகியுள்ளது தெரிந்தது. அத் துண்டுக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்ற செய்தி கீழே:

வஞ்சியம்மன் கோயில் கல்வெட்டுச் செய்திகள்

இக்கோயிலின் துண்டுக்கல்வெட்டுகள் பலவற்றில் சித்தார்த்தி வருடம் குறிப்பிடப்படுவதால், அந்த ஆண்டில் கோயில் செங்கல் கட்டுமானத்திலிருந்து கற்றளியாக மாற்றப்பட்டமை உணரப்படுகிறது. இதற்குச் சான்றாக, கல்வெட்டுகள் யாவும், சுவர்க் கட்டுமானத்துக்காகவும், நிலைக்கால் கட்டுமானத்துக்காகவும் கற்கள் கொடுக்கப்பட்டதைக் கூறுகின்றன. கொடை கொடுத்தோர் பட்டியலில் மத்திப் பெருமாள், தாண்டவ(ன்), சுவாமி ஆகிய பெயர்கள் உள்ளன. மேலும், வேட்டுவர் ஒருவரும், மங்கலவன்  (நாவிதன்)  ஒருவரும் கொடையாளிகளாகச் சுட்டப்பெறுகின்றனர். கொடையாளிகள் யாவரும் தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. கற்கள் கொடை அளிக்கப்பட்டமையைக் குறிக்கையில், கல்வெட்டுகளில் “ஒடுக்கின கல்லு”  என்னும் தொடர் கையாளப்படுவதைக் காண்கிறோம். இதில் உள்ள “ஒடுக்கின” என்னும் சொல் பயின்று வருதல் இடைக்காலச் சோழர் கல்வெட்டுகளிலிருந்து தொடரும் மரபு.  இதையும், சித்தார்த்தி வருடக் குறிப்பையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, கல்வெட்டின் காலத்தைக் கி.பி. 1859 எனக் கணிக்கலாம். எனவே, வஞ்சியம்மன் கோயில் 1859-க்கு முன்னரே இருந்துள்ளது என்பதும், 1859-ஆண்டு கற்றளியாகக் கட்டப்பட்டது என்பதும் பெறப்படும். 


வஞ்சியம்மன் கோயில் கல்வெட்டு-எடுத்துக்காட்டுக்கு ஒன்று 


கல்வெட்டுகளின் பாடங்கள் ;

அ)

1       ஸ்வஸ்திஸ்ரீ சித்தார்த்தி வருஷம் ஆவணி மீ ய (10) தொ
2       ண்டாமுத்தூரிலிருக்கும் செல்லய்யன்
3       மகன் மத்திப்பெருமாள் உபயம்

ஆ) 

1                க்கு
2                குள்ளவின ….
3                திருநிலை க[ல்]லு
4                உபயம்

இ)

1    சித்தார்த்தி வரு. சித்திரை மீ
2    தொண்டாமுத்தூரிலிருக்கும்
3    …………… ஒடுக்கின
4    கல்லு ……….

ஈ)

1    சித்தார்த்தி வருஷம் வையாசி மீ ..
2    ….தொண்டாமுத்தூரிலிருக்கும்
3    தாண்டவ …[மசு]வியார்…ஒ
4    டுக்கின கல்லு
உ)

1     ………….வரு. ஆடி
2     ….னா .. தொண்டா
3     முத்தூரிலிரு[க்கும்] சுவாமி
4     உபயம் கெச….

ஊ)

1      சித்தார்தி வரு. ஆவனி மீ……. [வேட்டுவ] ….

எ)

1    பில[வங்க] வருஷம் …..
2    …… குடுத்து விட்டோம் …..
3    ம[ட]ம் தொண்ட ….
4    முத்தூரு நவிதன் …..



தேவராயபுரம் தொட்டிக் கல்வெட்டு


தேவராயபுரம் தொட்டிக்கல்வெட்டு


வெள்ளிமலைப்பட்டணத்தை நோக்கிய பயணவழியில், தேவராயபுரத்தில் நண்பர், கால்நடைகளுக்கான நீர்த்தொட்டியொன்றில் கல்வெட்டு இருப்பதைக் காட்டினார். ஒளிப்படம் மட்டும் எடுத்துக்கொண்டேன். நின்று, மாவு பூசிப் படிக்க நேரமின்றிப் பயணத்தைத் தொடரவேண்டியதாயிற்று. ஒளிப்படத்தைக் கணினியில் பார்க்கையில், செய வரு.,  தெவராயபுர(ம்),    கவுண்டன் மகன்,   உபையம்   ஆகிய சொற்கள் புலப்பட்டன. செய வரு. என்பது ஜெய வருடத்தைக் குறிக்கும். அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டு வட்டத்தில் ஜெய வருடம் 1894-ஆண்டில் அமைகிறது.

  
செலம்பனூர் நடுகல் கோயிலும், கல்வெட்டுகளும்.

தேவராயபுரத்தை அடுத்துச் செலம்பனூர் என்னும் ஊர் வந்தது. அங்கு வெள்ளிமலைப்பட்டணத்துக்கு வழி கேட்கையில் தொல்லியல் பற்றிய உரையாடல் ஏற்பட்டது. அங்கிருந்த ஒருவர் செலம்பாத்தா கோயிலில் உள்ள கல்வெட்டைப் பற்றிச் சொன்னதும், செலம்பனூர் செலம்பாத்தா கோயிலுக்குச் சென்றோம். அங்கு சென்று கோயில் சிற்பத்தைப் பார்த்ததும், 2013-ஆம் ஆண்டு, நான் இங்கு வந்ததும் இங்குள்ள நடுகல் சிற்பம் மற்றும் கல்வெட்டுகளைப் பார்த்ததும் நினவுக்கு வந்தன.  

செலம்பனூர் நடுகல்லும் கல்வெட்டும் - 2013-ஆண்டில் தோற்றம்


செலம்பனூர் நடுகல்-1


செலம்பனூர் நடுகல்-2


செலம்பனூர் கல்வெட்டு-1


செலம்பனூர் கல்வெட்டு-2


தேவராயபுரத்தைச் சேர்ந்த தொல்லியல் கழக நண்பர் மேகலா அவர்கள் தம் ஊருக்கருகில் இருக்கும் நடுகல் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை 2013-ஆண்டில் மே மாதத்தில் ஒரு நாள் காண்பித்தார். அப்போது கோயில் இல்லை. திறந்த வெளியில் சுற்றிலும் செடி கொடிகள் சூழ்ந்த நிலையில் அவற்றைப் பார்த்தேன். கல்வெட்டுகளின் மீது சுண்ணம் பூசிப்பார்த்தும் படிக்க இயலவில்லை. எழுத்துகள் சரியான நேர்கோட்டில் அமைந்திராமையும், பிற்கால எழுத்து வடிவம் சரியாகப் பொறிக்கப்படாமையும காரணம். பின்னர், அவர் எடுத்த முயற்சியால் ஊரார் கோயில் எழுப்பி நடுகல் சிற்பங்களையும், கல்வெட்டுக் கற்பலகைகளையும் கோயிலில் நிறுவி வழிபாட்டுக்குரியதாக மாற்றியுள்ளனர்.  தொல்லியல் எச்சங்களுக்கு வழிபாடே பாதுகாப்பான வழி என்றாகிறது.

செலம்பனூர் நடுகல்லும் கல்வெட்டும் – இன்றைய தோற்றம்

சுவர்களோடும் கூரையோடும் கூடிய நீண்டதொரு முற்றம் அமைத்துக் கட்டிடம் எழுப்பியிருக்கிறார்கள்., முற்றத்தின் இறுதியில் மேடை ஒன்றை அமைத்து மேடையில் நடுகல் சிற்பத்தை நிறுத்தியிருக்கிறார்கள். முற்றத்தின் பக்கப்பகுதியில், கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும் பலகைக் கற்களை நிலத்தில் பதித்திருக்கிறார்கள்.  கல்வெட்டுகளை ஒட்டி இன்னொரு நடுகல்லைப் பதித்திருக்கிறார்கள்.  முதன்மை நடுகல் வழிபாட்டில் உள்ளது. நடுகல்லில் காணப்படும் பெண்ணுருவம் செலம்பாத்தா என்னும் பெயரிலும், ஆண் உருவம் ஈசுவரன் என்னும் பெயரிலும் மக்களால் வணங்கப்படுகின்றன. நடுகல் சிற்பங்கள் நாயக்கர் காலப் பாணியில் அமைந்துள்ளன. ஆண், பெண் இருவருமே தம் தலை முடியைக் கொண்டையாக முடிந்துள்ளனர். ஆணின் கொண்டை இடப்புறம் சாய்ந்தும், பெண்ணின் கொண்டை வலப்புறம் சாய்ந்தும் காணப்படுகின்றன. பெண்னின் கொண்டை சற்றுத்தூக்கலாக உள்ளது. இருவருக்குமே அணிகலனோடு கூடிய நீள் செவிகள். கழுத்து, கைகலில் அணிகலன்கள் உள்ளன. பெண்னின் ஆடைக்கட்டு நன்கு  அமைந்துள்ளது. பெண்ணின் ஆடைக்கட்டு கனுக்கால் வரையிலும், ஆணின் ஆடைக்கட்டு முழங்கால வரையிலும் உள்ளன. ஆண், தன் இடது கையைத் தொடையில் ஊன்றியும், வலது கையில் கட்டாரி ஒன்றினைத் தரை நோக்கிக் கீழ்ப்புறமாக அழுத்திப் பிடித்தவாறும் தோற்றமளிக்கிறான். பெண், தன் இரு கைகளையும் கூப்பிய நிலையில் தோற்றமளிக்கிறாள்.  இருவரது உருவங்களுக்கு இடையில் தலைப்பகுதிக்கருகில் பூ வேலைப்பாடு செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளோடு இணைத்து நிறுத்தப்பட்டிருக்கும் இன்னொரு நடுகல் சிற்பம், இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அடுக்கிலும் இரண்டு உருவங்கள்.


செலம்பனூர் நடுகல்-கோயிலில் வழிபாடு

செலம்பனூர் நடுகல்-2


கல்வெட்டுகளின் ஒளிப்படங்களைத் தற்போது ஊன்றிப்படிக்கையில் ஒரு கல்வெட்டுப் படத்தின் சில வரிகளை இனம் காண இயன்றது.  அவ்வரிகளின் பாடம் கீழ் வருமாறு :


செலம்பனூர் கல்வெட்டுகள்


1    துன்துமி வரு. வய்யாசி
2    மீ 3 தேதியில் . . . . .
3    . . . . . யன் யூருலே யிருக்கும்
4    செலம்பன கவுண்டன்
5    கோயல்  மேல்படி புதூருலே
6    யிருக்கும் (வாலி) செட்டி
7    மகன் குப்பி செட்டி


விளக்கம் : கல்வெட்டுப்படி, செலம்பன கவுண்டன் கோயில் என்ர பெயரில் முன்னரே கோயில் இருந்துள்ளமை தெரியவருகிறது. அதாவது, முன்னரே நடுகல் கோயில் வழிபாடு இருந்துள்ளது என்பதாக அறிகிறோம்.


முடிவுரை

பயணத்தின் இறுதியில், நாங்கள் வெள்ளிமலைப்பட்டணம் சென்றபோது, அங்கு எங்களுக்கு  எந்தத் தொல்லியல் தடயமும் கிட்டவில்லை.  தொண்டாமுத்தூரைச் சுற்றியுள்ள பகுதியின் தொல்லியல் தடயங்களைக் காணும் வாய்ப்பும் அவற்றை இங்கு பதிவு செய்யும் நிகழ்வும் மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றன.   






துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.