மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 15 டிசம்பர், 2019                                                                 சிவன்படவன்

முன்னுரை

இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் (ARCHAELOGICAL SURVEY OF INDIA) கல்வெட்டியல் ஆண்டறிக்கைகளைப் (ANNUAL REPORTS ON INDIAN EPIGRAPHY) படித்துக்கொண்டிருக்கையில், 1945-ஆம் ஆண்டிலிருந்து 1952 –ஆம் ஆண்டுவரை துறையின் செயல்பாடுகளை விளக்கும் ஆண்டறிக்கைத் தொகுதியில் ஒரு கல்வெட்டுச் செய்தி என்னைக் கவர்ந்தது. அது பற்றிய பதிவை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

திருக்குவளை -  திருக்கோளிலி

தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்த இவ்வூர், மேற்குறித்த ஆண்டறிக்கை வெளியான ஆண்டுகளின்போது, தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்திருந்தது. தற்போது திருக்குவளை என்னும் பெயர் வழங்கினாலும் இவ்வூரின் பழம்பெயர் திருக்கோளிலி என்பதாகும்.  ஆண்டறிக்கையில் இவ்வூரில் இருக்கும் தியாகராசர் கோயில் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. மொத்தம் இருபத்து நான்கு கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன.  கல்வெட்டுகளில் கோயிலின் இறைவன் பெயர் ஊர்ப்பெயரோடு சேர்த்துத் திருக்கோளிலி உடையார் என வழங்குகிறது. மனித வாழ்க்கையில் நேரும் உயர்வு தாழ்வுகளும், இன்பமும் இடர்ப்பாடும்  ஒன்பது கோள்களின் தாக்கத்தால் நிகழ்வன என்னும் கருதுகோள் மக்களிடையே நம்பிக்கை மரபாக இருந்து வந்துள்ளது.  அத்தகு வலிமை பெற்ற கோள்களே இவ்வூர்க்கோயிலின் இறைவனை வணங்கியதாலும், கோள்களால் ஏற்படும் குற்றங்கள் இவ்வூர் இறைவனால் நீங்குவதாலும் இவ்வூர் “கோளிலி”  என்னும் பெயர் பெற்றது எனத் தொன்மைப் புனைவுகள் கூறுகின்றன.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் பதிவாகியுள்ள இருபத்து நான்கு கல்வெட்டுகளில் பெரும்பாலானவை சோழர் காலத்தவை. மூன்றாம் இராசராசன், இராசாதிராசன், இராசேந்திர சோழதேவன், குலோத்துங்க சோழன், வீரராசேந்திரன் ஆகியோர் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் சோழ அரசர்கள் ஆவர். பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மூன்றில், இரண்டு கல்வெட்டுகள் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவை. ஒன்று மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தது.  கொடைகளில் பெரும்பாலானவை விளக்கெரிக்க அளிக்கப்பட்டன. சில, விழாக்காலச் சிறப்பு வழிபாடு, பஞ்சதிரவியம் கொண்டு திருமஞ்சனம், செப்புத்திருமேனிகளின் ஊர்வலம், தேவாரப் பண்ணிசைத்தல் ஆகிய நிகழ்வுகளுக்காகக் கொடுக்கப்பட்டன.  ஒரு கல்வெட்டு, புதியதொரு நிகழ்வைச் சுட்டுகின்றது. ஊர்ப்பகுதியில் பாய்ந்து செல்கின்ற பெருவாய்க்கால் ஒன்று,  மழை வெள்ளம் காரணமாக நீர்ப்பெருக்கெடுத்துக் கோயிலுக்கருகில் உள்ள தெருவில் புகுந்து சேதம் விளவித்ததால்  திருமறைக்காடுடையான் என்பவன் வாய்க்காலின் மேட்டுப்பகுதியில் இருந்த கோயில் நிலங்கள் சிலவற்றின் ஊடே புதிதாக வெட்டிய பாதை வழியாக வாய்க்காலைத் திசை திருப்பும் பணியைச் செய்தான் என்று கல்வெட்டு குறிப்பதோடு, கோயில் நிலங்களின் இழப்பை ஈடு செய்ய இரண்டு வேலி நிலம் கோயிலுக்கு உரிமையாகும் செயலையும் செய்தான் என்கிறது.   சிறப்பான செய்தியைக் கூறும் இக்கல்வெட்டின் படம் நூலில் தரப்படாமையால், கல்வெட்டின் பாடத்தை இங்கு குறிப்பிட இயலவில்லை. இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்ளவிருக்கும்  கல்வெட்டின் படம் அதன் சிறப்புச் செய்தி காரணமாக நூலில் தரப்பட்டுள்ளதால் அதன் பாடத்தைக்கொண்டு செய்தி விளக்கப்படுகிறது.

அதிபத்த நாயனார்

சைவ சமய அடியார் அறுபத்துமூவருள்  ஒருவர் அதிபத்த நாயனார்.  அவர் மீனவர் குலத்தவர். அவர் எவ்வாறு இறையன்பு செலுத்தினார் என்பதையும் எவ்வாறு அவரை இறைவன் ஆட்கொண்டான் என்பதையும் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் எழுதிய கதைக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.


சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார். சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார். இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார். மீன்விலையினாலே மிகுஞ்செல்வம் மறுத்தமையால், தம்முடைய சுற்றத்தார்கள் உணவின்றி வருந்தவும்; தாம் வருந்தாது பட்டமீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு மகிழ்ந்தார். இப்படி நெடுநாள் வர, உணவின்மையால் திருமேனி தளரவும் தம்முடைய தொழிலிலே நிலை நின்றமையைப் பரமசிவன் அறிந்து, அவரது அன்பென்னும் அமுதை உண்பாராயினார். இப்படி நிகழுநாளிலே, வேறு ஒருநாள் பரதவர்கள் அவ்வொரு மீனையும் அவ்வாறே விட்டு, விலைமதிப்பில்லாத மகாதிவ்யப்பிரகாசங்கொண்ட நவரத்தினங்களால் உறுப்பமைந்த அற்புதமயமாகிய ஒரு பொன்மீனை வலைப்படுத்து, கரையில் ஏறியபோது, அம்மீன் சூரியன் உதித்தாற்போல உலகமெல்லாம் வியக்கும்படி மிகப் பிரகாசிக்கக் கண்டு, அதனை எடுத்து, "ஒருமீன் படுத்தோம்" என்றார்கள். அதிபத்த நாயனார் அம்மீனைக்கண்டு, "இது இரத்தினங்களால் உறுப்பமைந்த பொன்மீனாதலால், என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கு ஆகும்" என்று கடலிலே விட்டார். அப்பொழுது பரமசிவன் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருள; அதிபத்தநாயனார் ஆனந்தவருவி சொரிய மனங்கசிந்துருகி நமஸ்கரித்து, சிரசின்மேலே அஞ்சலி செய்தார். சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி அவருக்கு அருள்செய்தார்.

திருக்குவளைக் கல்வெட்டில் அதிபத்த நாயனார்

தொல்லியல் ஆண்டறிக்கை நூலில் உள்ள திருக்குவளைக் கல்வெட்டின் படம் கீழே தரப்பட்டுள்ளது.  
கல்வெட்டின் பாடம்

1    ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள்
2    ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு 4
3    வது மார்கழி மாதத்தொருநாள் உ
4    டையார் திருக்கோளிலி உடை
5    யார் கோயிலில் முன்னாளில் சிவன்
6    படவரில் ஆலன் எழுந்தருளிவித்த
7    அதிபத்த நாயனார்க்கு திருப்படிமா
8    ற்றுக்கு இவன் தன் சாதியார் பக்க
9    ல்  இரந்து பெற்ற காசா(ய்)…..
10  ..காவசேரி ஐ.யன்னைய பட்டன்
11  மகன் தாமோதரபட்டன் பக்கல்
12  நெல் பொலிசைக்கு குடுத்த காசாய்
13  இவன் ஒடுக்கின காசு (2100) இக்கா
14  சு இரண்டாயிரத்தொருநூறும்
15  கைக்கொண்டு திருப்படிமாற்றுக்
16  கு நாள் ஒன்றுக்கு இரு நாழி அரிசி
17  அமுதுபடிக்கு அளப்போமாகவு
18  ம் நாங்கள் இப்படி செய்வோ
19  மாக ம்மதித்தோம்


குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.சிவன்படவர் - கல்வெட்டு - திருக்குவளை
கல்வெட்டுச் செய்திகள்

கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் ஸ்ரீராஜராஜதேவர் மூன்றாம் இராசராசன் என்பதாக நூலின் பதிப்பாசிரியர் குறித்துள்ளார். இவ்வரசனின் ஆட்சிக்காலம் கி.பி. 1216-1246. கல்வெட்டில், இவனுடைய ஆட்சியாண்டு நான்கு என இருப்பதால் கல்வெட்டு எழுதபட்ட காலம் கி.பி. 1220 என அமைகிறது. கோயிலின் பெயர் இறைவனின் பெயரைக்கொண்டு திருகோளிலி என அறிகிறோம். இக்கோயிலில்,  சிவன் படவரில் ஆலன் என்பவன் முன்னரே அதிபத்த நாயனார் திருமேனியை எழுந்தருளச் செய்திருக்கிறான். இப்போது, அந்தத் திருமேனிக்கு அமுது படைத்து வழிபாடு செய்ய 2100 காசு முதலாக வைக்கிறான். இக்காசை அவன் தன் குலத்தவரிடம் இரந்து பெற்றுக் கோயிலுக்குக் கொடையாக அளித்திருக்கிறான். தெய்வத்திருமேனியாக அவன் தான் எழுந்தருளுவித்த அதிபத்தனாருக்கு நாள்தோறும் அமுது படைத்து வழிபாடு செய்தல் தடையின்றி நடைபெறவேண்டும் என்பதற்காகத் தன் குலத்தாரிடம் இரந்து காசு சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கோயில் சிவப்பிராமணனாகிய தாமோதர பட்டன் என்பவன் மேற்படி 2100 காசுகளைப்பெற்றுக்கொண்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் பொலிசை (வட்டி) வருவாயைக்கொண்டு நாள் ஒன்றுக்கு இரண்டு நாழி அரிசியால் அமுது படைப்போம் என்று பொறுப்பேற்றுக்கொள்கிறான்.

சிவன்படவர்

அதிபத்த நாயனார் ஒரு மீனவர்.  அவருக்கு ஒரு மீனவனான ஆலன் என்பவன் வழிபாட்டுத் திருமேனியைக் கோயிலில் நிறுவி வழிபாட்டுச்செலவுக்கு வகை செய்கிறான் என்பது பெருமைக்குரியது.  கல்வெட்டில் உள்ள சிறப்புச் செய்தி என்னவெனில் மீனவர்,  சிவன்படவர் என அழைக்கப்பெற்றார்கள் என்பதுதான். நாம் இன்றைய நாளில் மீனவர் என்று அழைத்தாலும் சங்ககாலத்தில் மீனவர் என்னும் சொல்லாட்சி இல்லை என்பதாகத் தெரிகிறது. அகநானூற்றுப் பாடல் ஒன்று (அகம்-320) திமிலோன் என்றும், புறப்பாடல் ஒன்று (புறம்-24) பரதவர் என்றும் சுட்டுகிறது. மற்றொரு புறப்பாடல் (புறம்-249) வலைஞர் என்று குறிப்பிடுகிறது. மேலும், பரவர், முக்குவர், பட்டினவர், வலையர், கரையார், மரக்காயர் எனப் பல்வேறு பெயர்களில் மீனவர் தாம் சார்ந்த தொழிலின் அடிப்படையில் அறியப்படுகிறார்கள்.

கல்வெட்டில் மீனவர்களைச் சுட்டும் “சிவன்படவர் என்னும் பெயர் 13-ஆம் நூற்றாண்டில் வழங்கியது என்பது புதிய செய்தி. சிவன்படவர் என்னும் இப்பெயர் காலப்போக்கில் “செம்படவர்  எனத் திரிந்திருக்கலாம் எனக் கருதத்தோன்றுகிறது. கல்வெட்டின் காலம் இடைக்காலம். இடைக்காலச் சோழர் ஆட்சியின்போதே வலங்கை,இடங்கைப் பிரிவுகள் ஏற்பட்டு வெவ்வேறு தொழில் சார்ந்தோரிடையே பகைமையும் பிளவுகளும் ஏற்பட்டன. சாதியப் பாகுபாடுகள் அப்போதிருந்தே கிளைக்கத் தொடங்கின எனலாம். திருக்குவளைக் கல்வெட்டில், சாதி என்னும் சொல் (வரி-8) ஆளப்பட்டுள்ளதை நோக்கும்போது 12-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சாதிபிறந்துவிட்டதை அறிகிறோம்.

மீனவரில் பல்வேறு பிரிவினர்

முக்குவர் என்னும் பெயர் முத்துக்குளிக்கும் தொழிலோடு தொடர்புடைய சொல்லாகலாம். கரையார் என்பவர் படைவீரராகவும், கப்பல் கட்டும் தொழில் அறிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கடல் வணிகத்தோடு தொடர்புடைய கடலோடிகளாக மீனவர் அறியப்படுகிறார்கள். தமிழகக் கடற்கரையோர மக்கள் கரையாளர்கள், பரவர்கள், செம்படவர்கள், வலையர்கள், முக்குவர்கள், பட்டனவர்கள் என்னும் ஆறுவகைப் பிரிவினராக இருந்தனர் என்று எஸ். ஜெயசீல ஸ்டீபன் என்பவர் தாம் எழுதிய ‘காலனியத் தொடக்கக் காலம்  என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அவர்களது கடல்சார் அறிவுத்திறனும் தொழில் நுட்பமும் தொன்று தொட்டு மரபு வழி வந்தவை. தோணி, வள்ளம், சலங்கு என்னும் பல்வகைப் படகுகள் இருந்துள்ளன. பாய்மரம் உள்ள படகு தோணியாகும். சாம்பன் என்னும் ஒருவகைப் படகு கடல் வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டது. கரையார் என்னும் மீனவ இனத்தவர் கரையோரப் பகுதியில் வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றனர். 1530களில் ஃபிரான்சிஸ்கன் சபை பரப்பாளர்களால் முதன்முதலில் கிறித்தவத்தைத் தழுவியோர் கரையாளர்களே ஆவர். பரவர்கள் (பறவர்கள்)  பெரும்பாலோர் முத்துக்குளிப்பவர் ஆவர். வலையர் (வலைஞர்),  செம்படவர் ஆகியோர் ஆறு, குளங்களில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர் ஆவர். கடலில் மீன் பிடிக்கும் பட்டனவர் வலங்கைப் பிரிவினராகக் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களது இருப்பிடம் பட்டினச்சேரி என்னும் பெயருடையது.  பட்டினவர் இனத்தாரிடை மட்டிலுமே தூக்க ஊஞ்சல் திருவிழாவைக் கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. உயரே தொங்கும் மரச்சட்டத்தில் கயிற்றிணைப்பின் மூலம், முதுகில் கொக்கியை  மாட்டித் தொங்கிய வண்ணம்  உடல் சுழலப்பெறும் இந்தச் சடங்கு வேட்டைத் தொல்குடிகளின் சடங்கை நினைவூட்டுவதாக உள்ளது. மீன் பிடித்தலில் அவர்களது பெண் தெய்வமான எல்லம்மாளின் ஆசியைப் பெறும் நேர்ச்சி நோன்பாகக் இத்திருவிழா கொண்டாடப்பட்டாலும், இச்சடங்கு, “போலச் செய்தல்  என்னும் தொல்மாந்தர் மரபின் நீட்சி எனக் கருதுகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில், சென்னைக் கருப்பர் நகரத்தில் (BLACK TOWN) இருபத்தொன்பது சாதியினர் குடியேறியிருந்தனர். அவர்களில் மூன்று மீனவ இனங்களான செம்படவர், கரையாளர், முக்குவர் ஆகியோரும் அடக்கம். முக்குவர் வலங்கைப் பிரிவினராய் இருந்தனர். முக்குவர்கள் கடலின் நடுவில் நிற்கும் கப்பலுக்கும் கடற்கரைக்குமாகப் படகைச் செலுத்தி கப்பல் சரக்குகளை இரு இடங்களிலும் ஏற்றி இறக்கும் பணியைச் செய்தனர்.

முடிவுரை

சிவன்படவர் என்னும் சொல் திருக்குவளைக் கல்வெட்டில்  பயின்று வருதல் புதுமையாய் இருப்பதை வியந்து தொடங்கிய இந்தப் பதிவு, மாந்த வாழ்வின் முதல் தொழில்களில் ஒன்றான மீன் பிடித்தல் தொழிலை நேற்கொண்ட மீனவர் பற்றிய ஓர் அறிமுகப் புரிதலை நமக்கு உணர்த்தியது எனில் மிகையல்ல.

துணை நின்ற நூல்களும் பார்வைக் குறிப்புகளும்:

1       இந்தியக் கல்வெட்டியல் ஆண்டறிக்கை – தொகுதி 1945-1952)
[ANNUAL REPORTS ON INDIAN EPIGRAPHY  (1945-1952) ]

2       காலனியத் தொடக்கக் காலம் 9கி.பி. 1500-1800) –
எஸ். ஜெயசீல ஸ்டீபன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

3       SHAIVAM.ORG


4       இணையம் – Wikipediya

  
   

துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.

5 கருத்துகள்: