கோவை - தமிழ் சுவிசேஷ லுத்தரன் கிறித்து ஆலயம்
(THE TAMIL EVANGELICAL LUTHERAN CHURCH - COIMBATORE)
(THE TAMIL EVANGELICAL LUTHERAN CHURCH - COIMBATORE)
முன்னுரை
நண்பர் துரை.பாஸ்கரன், என்னைப்போல் நடுவண் அரசுப் பணிநிறைவு செய்தவர். வரலாறு, தொல்லியல்
மற்றும் சூழலியல் ஆர்வலர். இன்றும் கிராமப்பகுதிகளில் மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்க்க
மக்களை ஊக்கப்படுத்தி வருபவர். தாவரங்கள் பற்றிய செய்திகளை அறிந்துவைத்திருப்பவர்.
இளமையில், மலையேற்றப் பயிற்சிக்குழுவில் இணைந்து மலையேற்றத்தில் (TREKKING) ஈடுபட்டவர்.
என்னோடு தொல்லியல் களப்பணிகளில் இணைந்து பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்த நிகழ்வுகளில்
பங்கு கொண்டவர். அவர் அவ்வப்போது மேற்கொள்ளும் பயணங்களின்போதும், முன்பு மேற்கொண்ட
பயணங்களின்போதும் தாம் பார்த்த, பெருங்கற்காலச் சின்னங்களான கல்திட்டைகள், நெடுங்கற்கள்,
நடுகற்கள் ஆகிய தொல்லியல் தடயங்கள் பற்றித் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வழக்கமுடையவர். அவர் ஒரு முறை, கோவையில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன்
திருச் சபையைச் (THE TAMIL EVAGELICAL LUTHERAN CHURCH) சேர்ந்த கிறித்து நாதர் தேவாலயத்தைக்
குறிப்பிட்டு, அத்தேவாலயம் தன் நூற்றிருபதைந்தாவது ஆண்டு நிறைவை முடித்துள்ளது என்றும்,
1992-ஆம் ஆண்டு நூற்றாண்டு நிறைவுக்கு விழா எடுத்து விழா மலரையும் வெளியிட்டுள்ளது
என்றும் அது தொடர்பாக ஒரு பதிவினை எழுதலாம் என்னும் கருத்தைப் பகிர்ந்துகொண்டார். அவரோடு
அந்தத் தேவாலயத்துக்கு நேரில் சென்று அறிந்த செய்திகள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
லுத்தரன் திருச்சபை (LUTHERAN CHURCH)
16-ஆம்
நூற்றாண்டில் கிறித்தவச் சமயத்தில் நிகழ்ந்த புரோடஸ்டண்ட் (PROTESTANT) மறுமலர்ச்சியின் போது,
ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் லூத்தர் (MARTIN
LUTHER) என்பவரின் சீர்திருத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய புதிய
வடிவம் லுத்தரன் திருச்சபையாகும். இறையியல் மற்றும் திருச்சபை செயல்பாடுகளில் லூத்தர்
சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
ஸ்வீடன் (SWEDEN) நாட்டில் லுத்தரன் திருச்சபை
16-ஆம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவியன் (SCANDINAVIAN)
என்னும் பெயரில் ஸ்வீடன், நார்வே,
டென்மார்க் ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு
நிலவியது. ஸ்வீடன் நாட்டு அரசர் முதலாம் கஸ்டவ் (GUSTAV I) என்பார்,
கூட்டமைப்பிலிருந்து விலகி (விடுதலை பெற்று) லுத்தரன் கொள்கை அடிப்படையில் லுத்தரன்
திருச்சபையை நிறுவினார். 1887-ஆம் ஆண்டில் ஸ்வீடன் லுத்தரன் அமைப்பில் இருந்த டேவிட்
பெக்செல் (DAVID
BEXELL) என்பவர் தமிழகத்துத் தரங்கம்பாடிக்கு வந்தார். 1893-ஆம் ஆண்டு கோவைக்கு வந்து ஆறு ஆண்டுகள் கோவையிலேயே இருந்து இறைப்பணியை ஆற்றினார். 1928-ஆம் ஆண்டு தரங்கம்பாடியின்
இரண்டாவது பிஷப்பாகப் பொறுப்பேற்றார். 1934-ஆம் ஆண்டு கோவைக்குத் திரும்பி வந்து மறைவு (05.07.1938) வரை இறைத்தொண்டாற்றினார்.
கோவை - தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை
மற்றும் தேவாலயத்தின் தோற்றம்
சுவார்ச் ஐயர் (C.F. SCHWARTZ)
கி.பி. 1784. சுவார்ச்
ஐயர் (C.F. SCHWARTZ) கோவைக்கு
வருகை தருகிறார். இவர் ஒரு ஜெர்மன் நாட்டு லுத்தரன் சமயப் பரப்பாளர் (GERMAN LUTHERAN MISSIONARY). புரோடெஸ்டண்ட்
சமயப்பரப்பு வரலாற்றில் பெரிதும் அறியப்படுகின்ற சீகன்பால்கு (ZIEGENBALG) என்னும் ஜெர்மன் சமயப்
பரப்பாளரை முன்னோடியாகக் கொண்டு, கி.பி. 1750-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தவர். தரங்கம்பாடியில்
தம் பணியைத் தொடங்கியவர். தஞ்சை சரபோஜி மன்னரான துளஜியிடம் அமைச்சருக்குரியதொரு மதிப்புறு நிலையில் நெறியாளராக இருந்தவர். துளஜிக்குப் பின்னர் இளம்வயதில் அரசுப்பட்டத்துக்கு
வந்த சரபோஜி மன்னருக்கு ஆசானாகவும் தந்தை போன்றும் துணையாக இருந்தவர். இவர் 1798-ஆம்
ஆண்டு இறந்தபோது, தஞ்சைத் தேவாலயத்தில் துளஜி மன்னர் தாமே ஆக்கிலத்தில் இயற்றிய ”போற்றிப் பாட்டைப்” (EULOGY) பாடித் தம் அன்பைக் காட்டினார். ஐயர், இலத்தீன்,
கிரேக்கம், ஹீப்ரு, போர்த்துகீசியம், சமற்கிருதம், தமிழ், உருது, பாரசீகம், மராத்தி,
தெலுங்கு ஆகிய பன்மொழி வல்லுநராக
அறியப்படுவதோடு பிரிட்டிஷாரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். பிரிட்டிஷார் இவரை அமைதித்
தூதுவராக ஐதர் அலியின் அரசவைக்கு அனுப்பியதுண்டு.
கிழக்கிந்தியக் கம்பெனியார் அவரைத் தம் பணியில் அமர்த்தினர். இவரது நினைவுச்
சின்னம் சென்னைக் கோட்டையில் உள்ள செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தில் (St.MARY’s CHURCH) உள்ளது.
கோவையில் சுவார்ச் ஐயர் (C.F. SCHWARTZ)
கி.பி. 1784-ஆம் ஆண்டு கோவைக்கு
அவர் வந்தது திப்பு சுல்தானைப் பார்க்க. நோக்கம் இன்னதெனத் தெரியவில்லை. நோக்கம் கைகூடாமலே
தஞ்சை திரும்பினார். திரும்பும் முன்னர் சில நாள்கள் அவர் கோவையில் தங்கினார். இந்தக்
காலகட்டத்தில், கோவை மிகவும் எளிமையான ஒரு சிற்றூர். அதன் அண்மையில் உள்ள பேரூர்தான்
புகழ் பெற்ற ஊர். கோவையில் சுவார்ச் ஐயர் தங்கியிருந்த
சில நாள்களில், அவரைக் கண்டு உரையாடிய – ஏழு பேரைக்கொண்ட – ஒரு சிறிய கத்தோலிக்கக்
குடும்பத்தினர், சுவார்ச் ஐயரின் இனிமையான தமிழ்ப் பேச்சால் ஈர்க்கப்பட்டு ஐயரின் லுத்தரன்
சமய நெறியைப் பின்பற்ற முடிவு செய்தனர்.
கோவை - தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையின்
தொடக்கப்புள்ளி
1799-ஆம் ஆண்டு திப்பு சுல்தான்
இறந்தவுடன், கோவை முற்றிலுமாக ஆங்கிலேயரின் கைக்குள் வந்தது. அப்போது, தரங்கம்பாடியில்
‘துபாஷி’ யாகப் பணியில் இருந்த
தானியேல் பிள்ளையின் (DANIEL
PILLAI) உடன்பிறந்தாரான யாக்கோபுப் பிள்ளை (JACOB PILLAI) என்பவர் கோவையில் குடியேறினார். இவரது வீட்டில் நற்செய்திச் சபை (சுவிசேஷச்
சபை) கூடி ஆராதனை நடத்தத்தொடங்கினர். 1853-ஆம் ஆண்டு. கோவைப்பகுதியில் இரயில் பாதைப்
பணி தொடங்கிய காலம். தரங்கம்பாடியிலிருந்து அனுப்பப்பட்ட ஷான்ஸ் (SCHANZ) என்பவரும் நல்லதம்பி என்பவரும் மேற்கொண்ட
முயற்சியால் 1867-ஆம் ஆண்டு பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. ஆராதனை இப்பள்ளியில் தொடர்ந்தது.
தேவாலயம் எழுந்தது
கத்தோலிக்கத் திருச்சபையை விட்டு
விலகி லுத்தரன் சபைக்கு வந்த ஆரோக்கியசாமிப்பிள்ளை, ஜேக்கப் பிள்ளையார் ஆகியோரின் முயற்சியால்
தேவாலயம் கட்டுவதற்கான பொருள் சேர்க்கப்பட்டு ஸ்டேன்ஸ் ஆலை நிறுவனத்தில் முதலீடாக வைக்கப்பட்டது.
1884-ஆம் ஆண்டில் தொடங்கிய முயற்சி பல தடைகளைத்தாண்டி 1890-இல் முழுமை பெற்று ஆலயம்
கட்டும் பணி நடந்தது. 1892-ஆம் ஆண்டு, நவம்பர்
10-ஆம் நாள் ஆலயம் விழாக்கோலத்துடன் எழுந்தது. இந்த நாள், மார்ட்டின் லூத்தரின் (MARTIN LUTHER) பிறந்த நாள் என்பது சிறப்பு. இதன் தனிச் சிறப்பு, கோபுரத்தின் உச்சியிலுள்ள சேவல் சின்னமும் ஆலய மணியும்.
கோவை லுத்தரன் தேவாலயம் |
நூற்றாண்டு விழா
1892-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் நாள்
தேவாலயத்தின் நூற்றாண்டு விழா தொடங்கி ஐந்து நாள்கள் நடந்தது.
கிறித்து நாதர் ஆலயம் - பார்வையிடல்
தற்போது, நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் பழமையான இத்தேவாலயத்துக்கு
நண்பர் துரை. பாஸ்கரன் மற்றும் நண்பர் இதழியலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் 2017, நவம்பர் 20 அன்று நேரில் சென்று பார்வையிட்டேன்.
ஆலயத்தின் நுழைவு வாயிலிலேயே 1892-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட “கிறிஸ்து ஆலயம்” என்னும் பலகைக் கல் பொறிப்புக் காணப்பட்டது.
ஆலயத்தின் நுழைவு வாயிலிலேயே 1892-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட “கிறிஸ்து ஆலயம்” என்னும் பலகைக் கல் பொறிப்புக் காணப்பட்டது.
ஆலய நுழைவாயில் |
பழமை கூறும் பலகை |
ஆலயத்தின் உள்பகுதி |
தொடர்ந்து ஆலயத்தின் உள்பகுதிக்குள் சென்று அதன் நடுமேடையை நோக்கிச் செல்லும்போதே தரையில் டேவிட் பெக்செல் ஐயரின் கல்லறைக் கல்வெட்டும் நினைவுக் கல்வெட்டும் இருந்தன.
டேவிட் பெக்செல் - கல்லறைக் கல்வெட்டு |
டேவிட் பெக்செல் - நினைவுக்கல் |
தனியறை ஒன்றில் டேவிட் பெக்செல் ஐயரின் முழு உருவப்படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
டேவிட் பெக்செல் ஐயர் |
ஆலயத்தின் நடுக்கூடத்தில் நின்றுகொண்டு கூடத்தின் இருபுறமும் மேலே
சுவர்ப்பகுதியைப் பார்வையிட்டபோது உச்சியில் வட்டவடிவத்தில், வண்ணக் கண்ணாடிகொண்டு அழகூட்டப்பட்ட குழிவுச் சன்னல்கள் காணப்பட்டன. சன்னல்கள் என்று இவற்றைக் குறிப்பிட இயலாது. ஏனெனில், காற்று வரும் திறப்பு இவற்றில் இல்லை. இவை அழகுக்காக அமைக்கப்ப்ட்ட கட்டுமானக் கலை வடிவங்கள். இவற்றின் சிறப்பு என்னவெனில், வட்ட வடிவத்தின் மையத்தில் மிக அழகாக வரையப்பெற்ற ஹீப்ரு மொழியின் எழுத்துகளே.
ஹீப்ரு எழுத்து - DALET |
ஹீப்ரு எழுத்து - CHET |
ஹீப்ரு எழுத்து - LAMED |
ஞானஸ்நானத்தொட்டி |
அடுத்து அங்கே நாம் பார்வையிட்டது ஞானஸ்நானத் தொட்டி. அழகான மர வேலைப்பாடுடன் கூடியது. பழமையானதொன்று எனப் புலப்பட்டது.
பழமைத் தோற்றம் மாறாத பள்ளி வகுப்பறை ஒன்றையும் பார்வையிட்டோம்.
பழமைத் தோற்றம் மாறாத பள்ளி வகுப்பறை ஒன்றையும் பார்வையிட்டோம்.
பள்ளி வகுப்பறை - பழமை மாறாத்தோற்றம் |
பள்ளி வகுப்பறை - பழமை மாறாத்தோற்றம் |
இறுதியாக நாங்கள் பார்த்தது பிஷப்பின் பழமையான குடியிருப்பு வீடு.
முடிவுரை
சேவல் கோழி தேவாலயம் என்று முன்னாளில் மக்கள் வழங்கிய இத்தேவாலயத்தில் இன்று அதன் உச்சியில் சேவல் சின்னம் காணப்படவில்லை. தற்போது சிலுவைச் சின்னத்தை அமைத்திருக்கிறார்கள். நூற்றிருபத்தைந்து ஆண்டுகளாக நிற்கும் இத்தேவாலயத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளும் நம் முயற்சியில், 18-ஆம் நூற்றாண்டின் சூழலில் (1784) கோவையில் திப்பு சுல்தான் தங்கியிருந்தமையும் கிழக்கிந்தியக் கம்பனியாரின் தூதுவராக சுவார்ச் ஐயர் அவரைச் சந்தித்த நிகழ்வும், சுவார்ச் ஐயர் தஞ்சை அரசரிடம் பெற்றிருந்த பெருமதிப்பும், கோவையில் லுத்தரன் திருச்சபையின் தோற்றத்துக்கு சுவார்ச் ஐயர் அடித்தளமாக அமைந்தார் எனபதுவும் புதிய செய்திகள். கோவை வரலாற்றின் ஒரு உறுப்பாகத் திகழும் இத்தேவாலயம் தொல்லியல் நோக்கில் ஒரு தொன்மைச் சின்னம். வரலாறு மற்றும் தொன்மைச் செய்திகளை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள இந்தப் பகிர்வு சற்றேனும் பயன்படும் என்பது நம் நம்பிக்கை.
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
சேவல் கோழி தேவாலயம் என்று முன்னாளில் மக்கள் வழங்கிய இத்தேவாலயத்தில் இன்று அதன் உச்சியில் சேவல் சின்னம் காணப்படவில்லை. தற்போது சிலுவைச் சின்னத்தை அமைத்திருக்கிறார்கள். நூற்றிருபத்தைந்து ஆண்டுகளாக நிற்கும் இத்தேவாலயத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளும் நம் முயற்சியில், 18-ஆம் நூற்றாண்டின் சூழலில் (1784) கோவையில் திப்பு சுல்தான் தங்கியிருந்தமையும் கிழக்கிந்தியக் கம்பனியாரின் தூதுவராக சுவார்ச் ஐயர் அவரைச் சந்தித்த நிகழ்வும், சுவார்ச் ஐயர் தஞ்சை அரசரிடம் பெற்றிருந்த பெருமதிப்பும், கோவையில் லுத்தரன் திருச்சபையின் தோற்றத்துக்கு சுவார்ச் ஐயர் அடித்தளமாக அமைந்தார் எனபதுவும் புதிய செய்திகள். கோவை வரலாற்றின் ஒரு உறுப்பாகத் திகழும் இத்தேவாலயம் தொல்லியல் நோக்கில் ஒரு தொன்மைச் சின்னம். வரலாறு மற்றும் தொன்மைச் செய்திகளை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள இந்தப் பகிர்வு சற்றேனும் பயன்படும் என்பது நம் நம்பிக்கை.
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
வழக்கம்போல சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளீர்கள். கோவையில் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால் இவ்விடத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. உங்களால் புதிய செய்தியை அறிந்தேன். நன்றி.
பதிலளிநீக்குஇனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்ரி ஐயா.
நீக்குஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
அருமை
பதிலளிநீக்கு