சங்ககாலக் கலைகள்
கோவை வாணவராயர் அறக்கட்டளைச் சொற்பொழிவு
கோவையில் மாதந்தோறும் நடைபெறும் மேற்படிச் சொற்பொழிவுத் தொடரில் 2019, மே மாதச் சொற்பொழிவை ஆற்றியவர் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் பெ. மாதையன் அவர்கள். இவரது “சங்ககால இனக்குழுச் சமூகமும் அரசு உருவாக்கமும்”, ”சங்க இலக்கியத்தில் குடும்பம்” ஆகிய ஆய்வு நூல்கள் குறிப்பிடத்தக்கன. சங்ககாலக் கலைகள் என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் ஒரு சுருக்கப் பதிவு இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
சங்க இலக்கியங்களும் தமிழின் பழமையும்
சங்க இலக்கியங்கள் பல்வேறு பார்வைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மொழியியல், வாழ்வியல், மானுடவியல் எனப்பல. தொல்காப்பியம் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வாழ்வியல், மானுடவியல் நோக்கில் தொல்காப்பியம் பல செய்திகளைச் சொல்கிறது. சங்ககாலத்தைக் கி.மு. 200 – கி.பி. 250 காலக்கட்டத்தில் ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் சேர்ப்பார். தொல்லியல் அகழாய்வுகள் இம்முடிவினை மாற்றியுள்ளன. கொடுமணல் அகழாய்வு, பொருந்தல் அகழாய்வு , மயிலாடும்பாறை (தர்மபுரி) ஆய்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கொடுமணல் ஆய்வில் சங்ககாலக் குடியிருப்புகள் இருந்தமை தெரியவந்துள்ளது. பொருந்தல் ஆய்வின்போது கிடைத்த நெல், காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டபோது சங்ககாலம் கி.மு. 490 எனப் பதிவாகியுள்ளது. புலிமான் கோம்பை நடுகல்-தமிழிக் கல்வெட்டும் சங்ககாலப் பழமைக்குச் சான்றாய்த் திகழ்கிறது. ஏறத்தாழ அறுநூறு ஆண்டுகள் எனச் சங்ககாலத்தை வரையறுக்கலாம்.
தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்பு, கலைகள். இசைக்கருவிகள், இசைத்த பாணர்கள் எனத் தமிழரின் இனக்குழுச் சமூகத்தில் தொடங்கி, இறைவழிபாட்டுச் சமூகம் வரை சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. இடையில் சீறூர்ச் சமூகம் என மூவகைச் சமூகங்களாகத் தமிழ்ச்சமூகத்தைப் பார்க்கலாம்.
கலை எவ்வாறு தோன்றியது?
மனத்துள் தோன்றும் கற்பனைகள் ஒரு கட்டமைப்பை உருவாக்குகின்றன. இக்கட்டமைப்பு பின்னர் கலையாக உருவெடுக்கிறது. கற்பனைக் கட்டமைப்பை எளிதாக இப்படிச் சொல்லலாம். நாற்காலி ஒன்றைக் கற்பனை செய்தால், அது வெறும் நாற்காலியில் அமரும் நிலையை மட்டுமே குறிப்பதாகாது. தற்காலச் சூழலில் நாற்காலி என்றதும் ‘பதவி’ என்னும் ஒரு கற்பனை விளைகிறது. எனவேதான், கலைஞர்களின் படைப்பில் உட்பொருள் உண்டு என்பதை உணரவேண்டும். ”போலச் செய்தல்” என்னும் ஒரு பண்புதான் எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை. எடுத்துக் காட்டாக, இனக்குழுச் சமூகத்தில் - வேட்டைச் சமூகத்தில் – வேட்டைத் தொழிலுக்குச் செல்லுமுன்னர் வேட்டை பற்றிய கற்பனைக் காட்சியைப் ‘போலச் செய்தல்” முறையில் நிகழ்த்திப் பார்க்கிறார்கள். வேட்டைப் பலனை மனத்துள் கற்பனை மூலம் மந்திர ஒலிப்பாக ஒலிக்கிறார்கள். உடல் அசைவுகளால் நடனம் ஆக்கிச் செயல்படுத்தும்போது அது சடங்காகிறது. இவ்வாறு நிகழும் – நிகழ்த்தும் – மந்திரங்களும் சடங்குகளுமே பின்னாளில் கலையாக உருப்பெறுகின்றன. இந்தக் கொள்கையைப் பாறை ஓவியங்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன. பாறை ஓவியங்களில் காணப்பெறும் ”கைகள்” ஓவியங்கள், சடங்கு-மந்திரம் ஆகியவற்றின் வெளிப்பாடே. பாறை ஓவியங்களில் ‘கைகள்’ வரையப்பெற்றமை உலகம் முழுக்கக் காணலாம். தொன்மங்கள் என்னும் கற்பனைகளிலிருந்து கலைகள் தோன்றியிருக்கின்றன.
சீறூர்ச் சமூகம்-கலைஞர்களும், இசைக்கருவிகளும்
சீறூர்ச் சமூகம் நில உடைமைச் சமூகம். சீறூர்ச் சமூகத்தில் கலைஞர்கள் போற்றப்பட்டனர். இது குறுநில மன்னர்கள் கலைஞர்களைப் போற்றிய காலம். குறிப்பாகக் கடையெழு வள்ளல்களைச் சொல்லலாம். ஔவை, அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபின் அவனைக் குறித்துப் பாடுகையில்,
“ சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான் மகிழ்ந் துண்ணு மன்னே
இனிப் பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு மில்லை
……………………………………………………………………………… பிறர்க்கொன்
றீயாது வீயு முயிர்தவப் பலவே”
எனக்கூறுவதைக் காண்க.
அடுத்து, குமணனை வாழ்த்திப்பாடும் பெருஞ்சித்திரனார்,
” பறம்பிற் கோமான் பாரியும்,,,,
கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங்
கெழுவர் மாய்ந்த பின்றை …”
இரவலரின் இன்மையைத் தீர்க்கவந்தவன் குமணன் எனக் கூறுவதையும் காண்க.
குன்றக்குறவன் பற்றி ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது. பாணர், பாடுநர், பரிசிலர் ஆகியோர் பற்றிச் செய்திகள் உள்ளன.
ஓர் இலக்கியத்தில், குருவிக் கூடுகளில் யாழ் நரம்பு காணப்பட்டது என்னும் குறிப்பு வருகின்றது. யாழ் போன்ற இசைக்கருவிகள் அளவில் மலிந்திருந்தன என்பதையும் இசைக்கலைஞர்களும் நிறைய இருந்தனர் என்பதையும் இந்தச் செய்யுள் வரிகள் உணர்த்துகின்றன. சமூகம், இசைக்குழுச் சமூகமாக இருந்தது எனலாம்.
சங்கச் சமுதாயத்தில் பெண்ணுக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று,
”குன்றக்குறவன் கடவுட் பேணி
யிரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்”
என்று கூறுவதினின்று சங்க காலம் பெண்ணைப் போற்றியதுணரலாம்.
சங்ககாலத்தில் பறையன், துடியன், பாணன், கடம்பன் என நான்கு குடிகள் மட்டுமே இருந்ததாக ஒரு பாடல் கூறுகிறது.
வேந்தர் சமூகம்
வேந்தர் சமூகத்தில் பெண்களுக்கு இடமில்லை. செல்வத்துப் பயனே ஈதல் என்னும் கருத்து நிலவியது. பாணர்கள் போன்றோர் பேணப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் குடியிருப்புகள் அமைக்கப்பெற்றன. வேந்தர் சமுதாயத்தில், பாணர், கலைஞர்களாக மாறுகிறார்கள்; அதற்கு முன்னர் அவர்கள் அலை குடிகளாக உணவு தேடும் நிலையில் இருந்துள்ளனர். உணவும் பரிசிலும் பெற்ற பாணன் பிற பாணரை ஆற்றுப்படுத்துகிறான். வேந்தர் சமூகத்தில் பாணர், அரசனின் ஏவலாளராகவும், கூற்றர் என்னும் தூதுவராகவும் மாறியுள்ளமையையும் காண்கிறோம்.
இசை-இசைக்கலைஞர்-இசைக் கருவிகள்
திணைச்சமூகம் பற்றிக் கூறும் தொல்காப்பியத்தில் இசை நூல்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அச்சமூகத்தில் கல்வி முறை இருந்தது. (”கீழ்ப்பால் ஒருவன் கற்பின்”-ஒரு பாடல் வரி) பறை, பாண், யாழ், துடி, தண்ணுமை, குழல், முழவு ஆகிய பல்வேறு இசைக்கருவிகள் பற்றிச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. யாழ் மிக முதன்மையான ஓர் இசைக்கருவியாக இருந்தது. சங்கப்பாடல்களில் அறுபத்தொன்பது இடங்களில் குறிக்கப்பெறும் ஓர் இசைக்கருவி யாழ். யாழை இசைத்தவன் பாணன். பாணன், பாண்மகன், யாழ் மகன், பாடினி ஆகிய பெயர்கள் பாணரைக் குறிக்கும் ஒருபொருட் பன்மொழி. பறையை இசைத்தவன் பறையன். துடி இசைத்தவன் துடையன். தண்ணுமைக் கருவி, உழவுச் சூழல், போர்ச்சூழல் ஆகிய சூழல்களில் இசைக்கப்பட்டது. பூக்கோள் நிலை என்பது போர்ச்சூழலில் அமையும் ஒரு நிலை. போரை மேற்கொள்ளும்போது வெட்சி முதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக்கொள்ளுதலைக் குறிக்கும் புறத்துறை. பாசறையில், அரசனிடமிருந்து போர்க்குரிய பூவைப் பெறுகையில் புலையன் தண்ணுமை இசைக்கிறான் (புறம்-289).
பாணனின் மனைவியாக விறலி பேசப்படுகிறாள். விறலி மற்றும் பாடினி இருவரும் ஆடல், பாடல், கருவி இசைத்தல் ஆகிய மூன்றிலும் வல்லவராக இருந்தனர். இருவரும் அரசரைப் பாடுதல் மரபாக இருந்தது. பாணர் சமூகத்தின் தலைவியாக விறலி கருதப்பட்டாள். தொல்காப்பியம், விறலியாற்றுப்படையைக் குறிப்பிடுகிறது. விறலியின் பெருமைக்குரிய நிலை இனக்குழுச் சமூகமான சீறூர்ச் சமூகத்தில்தான். பின்னர், விறலியர் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். மலைபடுகடாம், கலைஞர்கள் ஒரு குழுவாக வாழ்ந்ததைச் சொல்கிறது. பொருநராற்றுப்படை, யாழ் பற்றிய நீண்ட வண்ணனையைக் கூறும். குறிப்பிட்ட இசைக்கருவிகளை இசைத்தவர் இழிவாக மதிக்கப்பட்டனர்.
ஆடல் கலை-கலைஞர்
ஆடல்(ஆட்டம்) என்றும் கூத்து என்றும் நடனக்கலை குறிக்கப்பட்டது. பயிர் விளைவது போலவும், வேட்டை ஆடுவது போலவும் நடனம் ஆடினர். ஆடலுக்குத் தனியே அவையும், ஆடுகளமும் இருந்தன. அரசர்களும் ஆடியிருக்கின்றனர் என்னும் குறிப்பு உண்டு. பதிற்றுப்பத்து நூலின் ஆறாம் பத்து, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியதாகும். அதிலுள்ள 56-ஆம் பாடல், அரசன் சேரலாதன், போர்க்களத்தில் முரசு ஒலிக்கப் பொன்னாற்செய்த உழிஞைப் பூவைச் சூடி ஆடுகின்றவன் எனக்கூறுகிறது.
”வலம்படு முரசந்துவைப்ப ………
…………………………………………. பொலங்கொடி யுழிஞையன்
………………………………..
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே”
- பதிற்றுப்பத்து-56
ஆதி மந்தி-ஆட்டனத்தி ஆகியோரின் ஆட்டமும் நாம் அறிந்ததே. குரவை, துணங்கை ஆகிய ஆட்ட வகைகள் இருந்தன.
குரவையாட்டம்
குரவையாட்டம் என்றும் குரவைக்கூத்து என்றும் கூறப்படுகின்ற இந்த ஆட்டம் குழுவாக ஆடும் ஆட்டவகையைச் சேர்ந்தது. குரவைக் கூத்தில் முதலில் பெண்களே ஆடுவர்; பின்னர் ஆண்களும் இணைந்துகொள்வர். குரவையாட்டத்தில் கள்ளுக்கு முதன்மை இடம் உண்டு. கள்ளை உணவாக உண்ணும் சமூகமாதலால், பெண்களும் கள்ளுண்டனர். பெண்கள் கள்ளுண்டு குரவையாட்டம் ஆடினர். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : சங்ககால மரபை இன்றும் பேணுதலைக் காணுமாறு இன்றைய சமூகமும் கள்ளுண்ணும் சமூகமாக மாறிவிட்டதோ என்னும் ஐயம் எழுகிறது!)
போர்ப்பாசறையில், சினத்தை உடைய வீரர் வெறியாடும் குரவைக்கூத்தின் ஒலி கடலொலி போலக் கிளர்ந்தொலித்தது என்பதைப் புறநானூற்றுப் பாடல் (புறம்-22) கூறுகிறது. மலை மக்களாகிய குறவர் கள்ளுண்டு, தம் பெண்டிரொடு சிறுபறை ஒலிக்கக் குரவையாடினர் என்று மலைபடுகடாம் கூறுகிறது.
“ நறவு நாள் செய்த குறவர்தம் பெண்டிரொடு
மான்தோல் சிறுபறை கறங்கக் கல்லென
வான்தோய் மீமிசை அயரும் குரவை”
- மலைபடுகடாம் 320-322
பொழுதுபோக்காகக் குரவையாட்டம் ஆடப்பெற்றது எனவும் அறிகிறோம். அரசன் பிறந்த நாளில் குரவையாட்டம் ஆடும் வழக்கம் இருந்தது. மதுரைக்காஞ்சியில் குரவை ஆட்டம் பற்றியும் அரசன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டமை பற்றியும் குறிப்பு உள்ளது (மதுரைக் காஞ்சி-614-619). மதுரை நகரில் விழாக்காலத்தே, திங்கள் தோன்றி இரவு வந்த பின்னர் எழுந்த பல்வேறு ஓசைகள் பற்றிக் குறிப்பிடும் மதுரைக்காஞ்சி, வெறியாடும் வேலன் முருகக் கடவுளை வழிபட்டு நிற்கும்போது மன்றம் தோறும் குரவைக் கூத்து நிகழும் என்று கூறுகிறது. சேரிகள் தோறும் புனைந்துரைகள், பாட்டுகள், கூத்துகள் ஆகிய மகிழ்ச்சி ஆரவாரங்கள், புகழ்படைத்த நன்னனுடைய பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தில் எழுந்த ஆரவாரம் போன்று முழங்குமாம். ”மன்றுதொறும் நின்ற குரவை”, “பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாள் சேரி விழவின் ஆர்ப்பு” என்பவை பாடல் வரிகள்.
துணங்கை
துணங்கையாட்டம் மகளிர் குழுவாக ஆடும் கூத்து. (தொல்காப்பியத்தில் துணங்கை பற்றிய குறிப்பில்லை என்பார் கலைக்கோவன்.) போர்க்களத்தின்கண் வீரர்களும் ஆடினர். போர்க்களத்தில் ஆடும் இவ்வாட்டத்தைப் பேய்த்துணங்கை என்பர். அரசனும் வீரர்களோடு சேர்ந்து துணங்கை ஆடியதாகக் குறிப்புள்ளது.
இறைவழிபாட்டுச் சமூகத்தில் கலையும், கலைஞரும்
இறைவழிபாட்டுச் சமூகத்தில் வேலன் வெறியாடுதல் என்னும் வெறியாட்டம் இருந்தது. தொடக்கத்தில் சடங்காக இருந்த இது பின்னர் ஆட்டமாக மாறியது. வெறியாட்டத்தில், ஆண் தலைமையும் இருந்தது; பெண் தலைமையும் இருந்தது. ”வெறியாடு மகளிர்”, “முதுவாய்ப் பெண்டிர்” ஆகியன இலக்கியங்களில் காணப்பெறும் பெயர்கள். முதுபெண்டிர், இளம்பெண்கள் ஆகிய இரு நிலையும் வெறியாடலில் இருந்தன. இச்சமூகத்தில், குறிகேட்டலும், குறிசொல்லலும் இருந்தன. குறி சொல்லும் மகளிர் “அகவன் மகள்” எனப்பட்டனர். சங்ககாலத்தில், ஒரு தார மணமுடித்தல் என்பது பண்பாட்டுக் களமாக ஆக்கப்பட்டபோதுதான் காதல் என்பது உருவானது. காதல் காரணமாகப் பெண்டிர் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்படுதலும், அதன் விளைவாக உடன்போக்கும் நிகழ்ந்தன. காதல் வயப்பட்ட பெண்களை ”அணங்கு” என்னும் பேய் பிடித்த பெண்களாகக் கருதினார்கள். வெறியாடும் வேலனிடமும், அகவன் மகளிடமும் குறி கேட்டல் நிகழ்ந்தது. வெறியாடும் வேலன் ஒரு தலைவிக்கு அணங்கினால் நோய் வந்ததாகச் சொல்லியபோது, தலைவி, தனக்கு நோய் வந்தது அணங்கினால் அல்ல; தலைவனால் வந்தது என்று கூறுவதாக ஒரு சங்கப்பாடல் கூறுகிறது. வெறியாடல் வாயிலாகப் பெண்களோடு தெய்வம் இணைக்கப்பட்டது பெண்வழிச் சமூகத்துக்குச் சான்றாக வெறியாடலைக் கருதலாம். பெண் வெறியாடலைப் புறநானூறு, “முருகு மெய்ப்பட்ட புலைத்தி” எனக் குறிப்பிடுகிறது(புறம்-259).
சங்ககாலத்தில் சிற்பக்கலை
சிற்பக்கலையின் தொடக்கம் தச்சுக்கலை ஆகும். வண்டிச் சக்கரம் செய்யத்தான் முதலில் தச்சுக்கலை ஏற்பட்டது. வணிகர்களின் வண்டிகள் (எடுத்துக்காட்டாக வணிகர்களின் உப்பு வண்டி), தேர்ப்படை ஆகியவற்றுக்காகத் தச்சர் வண்டி செய்தனர். வணிகர்களின் வாகனமாகவும் தேர் இருந்தது. சங்ககாலத்தில் கட்டில் முதன்மையாகக் கருதப்பட்டது. நெடுநல்வாடையில், கட்டில் பற்றிய வண்ணனை உண்டு. தச்சர் செய்த கதவு “வளிமறை” எனப்பட்டது. வளி=காற்று; காற்றை மறைத்து நிற்கும் கதவு “வளிமறை” என்றாயிற்று. பின்னர், கதவு அமைந்த வீட்டுக்கும் அதுவே பெயராயிற்று. செல்வர்க்கே மரக்கதவுகள் இருந்தன. எளிய மக்களுக்குப் படல் கதவுகள் இருந்தன.
பொதுச் செய்திகள்
தொல்பழங்காலத்தில் பெண்வழிச் சமூகம் இருந்தது. பொருளாதாரத்தை வளர்ப்பதில் பெரும்பங்கு பெண்களுக்கு இருந்தது. மீன் பிடி தொழிலை விறலியர் மேற்கொண்டதைக் காண்கிறோம். சங்ககாலத்தின் தொடக்க காலத்தில் பெண்கள் தலைமைதான் இருந்தது. இனக்குழு வாழ்வு உடைமையைப் பொதுவில் வைத்தது. திணை வாழ்வு தனியுடைமை பற்றியது. உலகம் முழுதும் வேளாண்மைக் காலத்தில் மந்திரங்களின் நம்பிக்கை இருந்துள்ளது. வேளாண்மையைக் கண்டறிந்தவர் பெண்களே. எனவே, மந்திரச் சடங்குகள் நடத்தும் உரிமையும் பெண்களுக்கே இருந்துள்ளது. உலகம் முழுக்கப் பெண்ணுடை அணிந்தே ஆண்கள் பூசாரிகளாக இயங்கினர். தினைப்புனத்திலும் பெண்களே தலைமை ஏற்றனர்.
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.
கருத்தரங்கிற்கு வராத குறையை நீக்கியது இப்பதிவு. சங்க காலக் கலைகளைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையை அறிய முடிந்தது.
பதிலளிநீக்கு