விஜயநகர-நாயக்கர் காலச் சுவரோவியங்கள்
முன்னுரை
அண்மையில், கோவை வாணவராயர் அறக்கட்டளை
சார்பாக நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் சென்னை-கிறித்தவக் கல்லூரியில் பேராசிரியாகப்
பணி நிறைவு செய்துள்ள முனைவர். சா.பாலுசாமி அவர்களின் சிறப்புரை மேற்கண்ட தலைப்பில்
மிகச்சிறப்பாக அமைந்தது. வரலாறு, தொல்லியல்
தொடர்பான பல துறைகளுள் மிகுதியும் கருதப்படாத, தெரிந்துகொள்ளப்படாத ஒரு புலமாகவே சுவரோவியங்கள் பற்றிய செய்திகளும் தரவுகளும்
அடங்கிய துறை அமைந்துவிட்டது. அவ்வகையில்,
இந்தத் துறையைத் தம் ஆய்வுக்களமாக எடுத்துப் பல அரிய தரவுகளையும் புரிதலையும் ஏற்படுத்தியுள்ள
பேராசிரியரின் உரை, வரலாறு-தொல்லியல் ஆர்வலர்களுக்கும்,
இவற்றில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களுக்கும் மிகுந்த பயன் அளிக்கும் எனில் மிகையல்ல. அச்
சொற்பொழிவின் வழி சுவரோவியங்கள் பற்றிக் கிடைத்துள்ள ஒரு பார்வையே இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
ஓவியம்-ஒரு செவ்வியல் கலை
ஓவியங்கள் பற்றி நம்மிடையே ஒரு தெளிவான
புரிதல் இருக்கவில்லையென்றே சொல்லலாம். ஓவியம் எவ்வாறு வளர்க்கப்பட்டது? ஓவியம் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை யாவை? தமிழகத்தில், பாறை ஓவியங்களைக் கடந்து சங்ககாலத்துக்கு
வந்தால், அக்காலத்தே ஓவியங்கள் எவ்வாறிருந்தன? அறிந்துகொள்ள சங்ககால ஓவியங்கள் இல்லை.
இருந்த தடயம் கூடக் கிடைக்கப்பெறவில்லை. கட்டிடங்களின் எச்சங்களை நாம் காண்கிறோம்.
ஆனால், ஓவியங்கள் காலத்தால் அழிந்துபோயின.
சங்ககால மக்களின் உள்ளத்தில்தாம்
எத்துணை நுண்மையான கலையுணர்வு இருந்துள்ளது! இசை, நாட்டியம் (நடனம்), ஓவியம் என எத்துணை
நுட்பங்கள்! கலைகள்! இவையெல்லாம் முருகியல் (அழகியல்) சார்ந்தவை. ஓவியத்தோடு தொடர்புடைய
சித்திரமாடம், சித்திரக்கூடம் ஆகியவை இருந்துள்ளன. ஓவியத்தில் புனைந்த ஓவியம், புனையா
ஓவியம், கோட்டோவியம் எனப்பல. தமிழரின் புழங்கு பொருளாய் ஓவியம் இருந்துள்ளது. ஓவியச்
சாலைகள் இருந்துள்ளன; ஓவியச் செந்நூல் இருந்துள்ளது. கி.பி. 5-9 நூற்றாண்டுகளின் காலகட்டத்தில்
தமிழகத்தை ஆண்ட பல்லவர் மகத்தான கலைகளை வளர்த்தார்கள். அவற்றில் ஓவியம் உண்டு. பல்லவ
அரசன் மகேந்திர வர்மன், சித்திரகாரப்புலி என்ற சிறப்புப் பெயரைக்கொண்டிருந்தான். ”தக்ஷிண
சித்திர” என்னும் ஓவிய நூலுக்கு அவன் உரை எழுதியதாகக்
கூறுவர். பல்லவர் கால ஓவியங்கள் மிகுதியும் கிடைக்கவில்லை. பல்லவர் படைப்புகளின் எச்சங்களாக
ஒரு சில ஓவியத்துணுக்குகளே கிடைத்துள்ளன. காஞ்சி
கைலாசநாதர் கோயில், பனைமலைக் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள இந்த ஓவியத்துணுக்குகள்,
பல்லவ அரசன் இராஜசிம்மனின் காலத்தவை. சித்தன்ன வாசல் குடைவரைக் கோயிலில் உள்ள தாமரைத்தடாகம்
ஓவியம் மிகுந்த சிறப்புடையது. இதை அஜந்தா ஓவியங்களுக்கு இணையாகக் குறிப்பிடுவர். பல்லவரை
அடுத்துச் சோழர் காலத்தில் தஞ்சை, தாராசுரம், புள்ளமங்கை ஆகிய கோயில்களில் சில ஓவியங்கள்.
தஞ்சையில் இருப்பது ஓர் ஓவியம் மட்டுமே. இந்த ஓவியங்களெல்லாம் செவ்வியல் மரபு சார்ந்தவை. ஓவியம், சிற்பம் ஆகியனவற்றை வறிதே உயிர்த்தோற்றத்தின்
மெய்நிகர்ப் படிவமாக அமைக்காது, முருகியலும் கற்பனை வளனும் சேர்ந்த ஒன்றாகச் சில வரையறைகளும்,
நுட்பக்கூறுகளும் இருக்கும் வண்ணம் உருவாக்கி வளர்த்ததே செவ்வியல் மரபு. அவற்றின் அடிப்படையில்,
ஓவியம், சிற்பம் ஆகியவற்றுக்குச் செந்நூல்கள் எழுந்தன. சோழர் காலத்தை அடுத்துத் தமிழகத்தில்
மையப்பேரரசு இல்லாமையால் செவ்வியல் மரபு வளரவில்லை. சிற்றரசுகள் நிலவிய பகுதிகளில்
ஓவியமும் பொதுத்தன்மையின்றிப் பகுதி பகுதியாக வளர்ந்தது.
செவ்வியல் மரபில் ஓவியங்கள் எவ்வாறிருந்தன?
செவ்வியல் மரபில் ஓவியங்களில் கீழ்க்கண்ட
கூறுகள் முதன்மையானவை.
1
சரியான உடல்
2
பா3வனை - கோலம்
3
தகவுப் பொருத்தம்
4
ஒயில் (அழகு) (GRACE)
5
உறுப்புகளின் இணைப்பு
6
ஒப்புமை
7
ஏற்றம் இறக்கம்
8
தாராளமாய் இடம் விடல்
போன்றவை. ”விஷ்ணுதர்மோத்திரம்”
என்னும் நூலில் ”மகாபுருஷ
லட்சணம்” என்ற தலைப்பில் குறிப்புகள் உள்ளன.
ஓவியங்களுக்கான கருப்பொருளாக ஓவியர்கள் எடுத்துக்கொண்டவை :
1
புராணங்களும், தலபுராணங்களும்
2
திருவிழாக்கள்
3
மன்னர்கள்
4
வாழ்வியல் நிகழ்வுகள்
5
திருத்தலங்கள்
6
தெய்வ உருவங்கள்
7
வரலாற்று நிகழ்ச்சிகள்
சிறப்புப் பெற்ற சில ஓவியங்கள்
பல்லவ அரசன் இராஜசிம்மன் காலக் காஞ்சி
ஓவியங்கள் மிகச் சிறப்பானவை. உலகவெளியில் எந்தவிடத்திலும் இல்லாத படைப்பு என்று அவற்றைக்
குறிப்பிடலாம். இராஜசிம்மன் பல்கலைகளை அறிந்தவன் என்பதை அவனுடைய சிறப்புப் பெயரான
“அத்யந்த காமன்” என்பதே சுட்டும். ”எல்லையில்லாத
விருப்புடையவன்” என்பது அச்சொல்லின் பொருள். காஞ்சி ஓவியமான
“சோமாஸ்கந்தர்” ஓவியம் மிக அருமையானது. அடுத்து, சித்தன்னவாசலின்
‘மலர்க்குளம்” ஓவியம். இவற்றில், சிவப்பு, பச்சை, மஞ்சள்
ஆகிய வெளிர்வண்ணங்கள் பயன்படுத்தப்பெற்றுள்ளன. சோழர் கால ஓவியங்களில், தஞ்சைக் கோயிலின்
சாந்தாரப்பகுதியில் இடம்பெற்ற ஓவியம்; சுந்தரர் வாழ்வின் நிகழ்வு பற்றியது. இறைவன்,
முதியவர் கோலத்தில் சுந்தரரை ஆட்கொள்ள வந்து மூல ஓலை ஆவணத்தைக்காட்டிச் சுந்தரர் தனக்கடிமை
என நிறுவும் காட்சி. இவ்வோவியத்தில், முதியவர் கோலம் அத்துணை அழகோடு காட்டப்பெற்றுள்ளது.
காஞ்சி கைலாசநாதர் கோயில் ஓவியம் |
சிவன் சுந்தரரை அடிமைகொள்ளல்-தஞ்சைக்கோயில் ஓவியம் |
ஓவியக்கலை- விஜயநகரர் கலை – தோற்றம்
விஜயநகரர் ஆட்சி கு3ல்ப3ர்கா3விலிருந்து
குமரி வரை பரவியிருந்த ஆட்சி. தமிழகத்தில், நேரடியாக 200 ஆண்டுகளும் அதன் பின்னர் நாயக்கர்
காலத்தில் விஜயநகரர் சார்பாக மகாமண்டலேசுவரர் ஆட்சி. இக்காலகட்டத்தில், பண்டைய கோயில்களின்
புதுக்குதல் மற்றும் விரிவாக்கப் பணிகள் நடந்தன. புதிய கோயில்களின் கட்டுமானப் பணியும்
நடைபெற்றது. சிறப்பாகக் கோபுரங்கள், மண்டபங்கள், சுற்றாலைகள், அரண்மனை ஆகிய கட்டுமானங்கள்
ஏற்பட்டன. இவற்றில், ஓவியங்கள், செவ்வியல்
மரபும் நாட்டார் மரபும் இணைந்து தீட்டப்பட்டன.
14-16-ஆம் நூற்றாண்டுகளில், விஜயநகரர் ஓவியங்களில் வடமேற்கு இந்தியச் சமண மரபும்
இராட்டிரகூடர் மரபும் பின்பற்றப்பட்டுள்ளன.
சில ஓவியங்கள்
திரிபுராந்தகர்
சோழர் காலத் திரிபுராந்தகர் - திரிபுரம்
எரித்த விரிசடைக் கடவுள் செவ்வியல் மரபு எனில், விஜயநகரர் காலத் திரிபுராந்தகர் நாட்டுப்புற மரபு; கதை சொல்லும் மரபு.
திரிபுராந்தகர்-தஞ்சைக் கோயில் ஓவியம் |
காஞ்சி திருப்பருத்திக்குன்றம்
காஞ்சி திருப்பருத்திக்குன்றத்தில்,
இரண்டாம் பு3க்கராயர் இருசப்பர் கட்டுவித்த ”சங்கீதமண்டப”த்தில்
ஓர் ஓவியம். சமணத் தீர்த்தங்கரர் வர்த்தமானருக்கு இந்திரன் நீராட்டும் காட்சியும்,
பிரியகாமி கருவுற்றிருக்கும் காட்சியும் சிறப்பானவை.
திருப்பருத்திக்குன்றம்-ஓர் ஓவியம் |
ஹம்பி – விரூபாட்சர் கோயில்
வித்யாரண்யர் ஓவியம்,
அர்ச்சுனன் வில் வளைக்கும் காட்சி, இராமன் – சீதை திருமணக்காட்சி ஆகியன குறிப்பிடத்தக்கவை.
ஹம்பி-விருபாட்சர் கோயில் - ஓர் ஓவியம் |
லேபாக்ஷி கோயில்
வீரண்ணன் - விருப்பண்ணன், வீரபத்திரரை வணங்கும் காட்சி, பார்வதி
திருமணக்காட்சி, பன்றி உருவம், அர்ச்சுனன்
– சிவன் சண்டைக் காட்சி ஆகியன குறிப்பிடத்தக்கவை.
லேபாக்ஷி கோயில் - ஓர் ஓவியம் |
நாயக்கர் காலம் - 16-18 நூற்றாண்டு
நாயக்கர் கால ஓவியங்கள் ஏறத்தாழ
முப்பது இடங்களில் இன்றும் காணும் வகையில் உள்ளன; பெரும்பாலானவை அழிந்துவரும் நிலை.
மதுரை நாயக்கர்கள் நாகம நாயக்கர், விசுவநாத நாயக்கர், தஞ்சை இரகுநாத நாயக்கர், செஞ்சி துபாக்கி கிருஷ்ணப்ப
நாயக்கர் ஆகியோர் கால ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. வேலூர் நாயக்கர் கால மார்க்கசகாயர் கோயில் கல்யாணமண்டபம்
குறிப்பிடத்தக்கது.
ஆந்திர ஓவியத்தொடர்பு
சில ஓவியங்கள் ஆந்திர ஓவியத் தொடர்புகொண்டவை.
ஆந்திராவின் கலம்காரி, சிரியால் ஆகிய ஓவிய மரபுகள் தமிழக ஓவியங்களில் காணப்படுகின்றன.
திருப்புடை மருதூர்
திருப்புடை மருதூரில் ஒரு முழுச்சுவரையே
திரைச்சீலை வடிவத்தில் காட்டி ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மிகச் சிறப்பாக வரையப்பட்ட
இந்த ஓவியத்தைப்பற்றிய விரிவான குறிப்புகளைக் கொண்ட நூல் - இப்பேராசிரியர் சா.பாலுசாமி எழுதியது - விரைவில் வெளியாகவுள்ளது.
ஓவியம் வரைதலில் தொழில் நுட்பம்
ஓவியம் வரைதலில் STUCCO என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பெற்றுள்ளது.
இம்முறையில், ஓவியம் வரையும் பரப்பின்மீது சுதைச்சாந்து பூசப்பட்டு இப்பரப்பு ஈரமயிருக்கும்போதே
வரைதலைக் குறிக்கும். முதலில், கோடுகளால் உருவம்
வரையப்பெறும். பின்னர், வண்ணம் தீட்டப்பெறும். அழகர் கோயில் வசந்த மண்டபத்தில் இவ்வகை
ஓவியங்களைக் காணலாம். இங்குள்ள ஓவியங்கள் இராமாயணக்கதையைச்
சொல்லும் ஓவியங்களாகும்.
ஓவியம் வரையும் முறை
விரிவாகக் கதைகளைக் கூறும் நோக்கம்
கொண்ட ஓவியங்கள், மேற்கூறியவாறு, சுதைப்பரப்பு
ஈரமாய் இருக்கும்போது கோட்டோவியம் வரையப்பெற்று. ஒன்றின்மீது ஒன்றை அடுக்கியதுபோன்ற
திரளாக அமைப்பார்கள். எல்லைக் கோடுகளால் வேறு வேறு காட்சிகள் காட்டப்பெறும். காட்சிகளின்
விளக்கங்களைத் தமிழ், தெலுங்கு மொழியில் எழுதுவதுண்டு. அழகர் கோயில் ஓவியங்களில் காட்சி
விளக்க எழுத்துகளைக் காணலாம்.
மேலும் சில ஓவியங்கள்
திருவரங்கம்
திருவரங்கம் கோயிலில் திருமால் எடுத்த
பன்றி உருவத்தோற்றம் (வராக அவதாரம்) ஓவியமாகத்
தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில், அடிப்படை வண்ணங்களான நீலம், பச்சை, மஞ்சள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
திருப்புடை மருதூர் - நாறும்பூ நாதர்
கோயில்
திருப்புடை மருதூர் கோயில் கோபுரத்து
மாடங்களில் உள்புறம் ஓவியங்களை வரைந்துள்ளனர். இங்கு, மகாபாரதக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
திருவிளையாடற்புராணத்தில் வருகின்ற சம்பந்தர் கதை, மாணிக்கவாசகர் கதை ஓவியங்கள் சிறப்பானவை.
சம்பந்தர், சமணரோடு வாதிடும் கதைக்காட்சியில், அவரது ஏடு (ஓலை), ஆற்றை எதிர்த்துச்
செல்லும் கருத்து முதன்மையானது. ஆற்றை எதிர்த்துச் செல்லும் கருத்தை ஓவியர் இந்த ஓவியத்தில்
நுட்பமாகக் காட்டியிருப்பார். மீன்கள் எப்போதும்
ஆற்றை எதிர்த்தே நீந்தும் இயல்புடையன. இந்த நுட்பத்தை ஓவியர் ஓவியத்தில் கொணர்ந்துள்ளார்.
ஆற்று நீரோட்டத்துக்கு எதிர்த் திசையில் மீன்கள் நீந்துவதுபோல வரைந்த ஓவியரின் அறிவுத்திறன்
பாராட்டுக்குரியதல்லவா? மற்றொரு ஓவியத்தில், கந்தபுராணம் சொல்லும் வள்ளி கதை மையம்.
அவ்வோவியத்தில் ஒரு காட்சி. தினைப்புனக் காவல் பற்றியது. தினை, பனிக்காலத்தில் விளையும்
பயிர். நெருப்பில் குளிர் காயும் காட்சியின்
மூலம் ஓவியர் பனிக்காலத்தைக் குறிப்பால் சுட்டியிருப்பார்.
திருப்புடை மருதூர்-போர்க்காட்சி
ஓவியம்
திருப்புடை மருதூர் கோயிலின் இரண்டாம்
தளத்தில் வரலாற்று நிகழ்ச்சி – போர்க்காட்சி - ஒன்று அருமையாக வரையப்பட்டிருக்கும்.
(திருப்புடை மருதூர் கோயில் ஓவியங்களின் சிறப்பைப்பற்றித் தனியொரு நூல் சொற்பொழிவாளரால்
எழுதப்பட்டுள்ளது.) கோயிலின் ஐந்து தளங்களிலும்
உள்ள ஓவியங்கள் அனைவர்க்கும் தெரிந்த கதைக் காட்சிகளான இராமாயணக்காட்சிகள், தசாவதாரக்
காட்சிகள், சைவக்குரவர் ஞானசம்பந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள், சிவனின் ஆடல்வல்லான்
உருவங்கள், சிவனின் உமையொரு பாகன் உருவங்கள் போன்ற பலவேறு காட்சிகளைக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இரண்டாம் தளத்தில் வரையப்பெற்றுள்ள போர்க்காட்சி ஓவியம், திருமணக்காட்சி ஓவியம்,
குதிரைகள் ஏற்றப்பட்ட நிலையில் பெரிய கப்பல்
ஆகிய ஓவியங்கள் எவற்றைக் குறிக்கின்றன என்பது விளக்கமாகத் தெரியாமலே இருந்துவந்தன.
பேராசிரியர் பாலுசாமி அவர்கள் தம் ஆறு ஆண்டுகளின் ஆய்வுழைப்பின் மூலம் இந்தப் புதிரை
அவிழ்த்துள்ளார் என்பது சிறப்புக்குரியது.
தாமிரபரணிப்போர்
மேற்குறித்த போர்க்காட்சி ஓவியம்,
தாமிரபரணிப் போரைக் குறிக்கும். திருவாங்கூர் வேணாட்டரசர் பூதலவீர உதயமார்த்தண்டனுக்கும்,
விஜய நகரப்பேரரசர் அச்சுதரயருக்கும் இடையில் ஏற்பட்ட போரே தாமிரபரணிப்போர். இப்போர்,
குமரி மாவட்டம் தோவாளைக்கருகில் உள்ள ஆரல்வாய்மொழிக் கணவாய்ப்பகுதியில் நிகழ்ந்தது.
இப்போரைப் பற்றி விஜயநகர அரசின் அவைப்புலவரான இராஜநாத திந்திமக் கவி என்பவர் தம் “அச்சுதராயப்யுதயம்”
என்னும் சமற்கிருத நூலில் விளக்கமாக எழுதியுள்ளார். விஜயநகரப்பேரரசின்
மேலாண்மையை ஏற்காத ஒரு சில அரசருள் வேணாட்டரசனும் ஒருவன். விஜயநகரப்பேரரசின் மேலாண்மையை
ஏற்காததோடு, தென்காசிப்பாண்டியன் சடையவர்மன் ஸ்ரீவல்லபனின் ஆட்சிப்பரப்பில் பல பகுதிகளை
இணைத்துக்கொண்டான். ஸ்ரீவல்லபன், விஜயநகரப் பேரரசின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டிருப்பவன்;
தன் ஆட்சிப்பரப்பை இழந்தது பற்றி விஜயநகர அரசரிடம் கூறி உதவி கோரினான். பரமக்குடி பாளையாக்கரர்
தும்பிச்சி நாயக்கரும் விஜய நகர அரசை எதிர்த்தவர். அச்சுதராயரின் மைத்துனர்களாகிய சலக்க
ராஜு பெரிய திருமலை, சலக்க ராஜு சின்ன திருமலை ஆகிய இருவரும் அச்சுதராயருக்கும், சாளுவ
நரசிங்க நாயக்கனுக்கும் இடையில் பகைமை உண்டாக்கினர். சாளுவ நரசிங்க நாயக்கன், கிருஷ்ணதேவராயரின் தஞ்சைப்பகுதி மகாமண்டலேசுவரன்
ஆவான். அச்சுத தேவராயர் தம் தூதரை வேணாட்டரசனிடம் அனுப்பித் திறை செலுத்தச் சொல்லியும்,
பாண்டியனின் ஆட்சிப்பகுதியைத் திரும்பப் பாண்டியனிடம் ஒப்படைக்கவும் ஆணை இட்டான். வேணாட்டரசன்
மறுத்துவிடுகிறான். ஆக, மூன்று பகைவரையும் ஒருசேர அடக்க எண்ணி, அச்சுததேவராயர் தம்
மைத்துனர்கள் இருவரோடும் பெரும்படையுடன் சென்று திருவரங்கம் சேர்கிறார். சின்ன திருமலை,
தான் ஒருவனே எதிரிகளைப் பணியவைக்கிறேன் எனக்கூறிப் படையுடன் சென்று மூவரையும் ஆரல்வாய்மொழிக்
கணவாயில் போர் தொடுக்கிறான். மூவரும் தோல்வி காணுகின்றனர். அச்சுததேவராயர் எதிரிகளை
மன்னித்துவிடுகிறார். வேணாட்டரசன், பாண்டியனுக்கு அவனுடைய நாட்டுப்பகுதியைத் திரும்ப
அளிக்கிறான். அச்சுதராயருக்குக் குதிரைகள், யானைகள் ஆகியவற்றை அளித்து நல்லுறவு பேணுகிறான்.
பாண்டியன் நன்றி மேலீட்டால் தன் மகளை அச்சுதராயருக்கு மணம் செய்விக்கிறான். சின்ன திருமலையின்
படை “திக்கு விஜயம்” மேற்கொள்கிறது. படைத்தளபதிகள், திருவிடைமருதூர் நாறும்ப்பூ நாதர்
கோயிலுக்கும், திருவனந்தபுரம் கோயிலுக்கும்
சென்று வழிபடுகின்றனர். இந்த நிகழ்ச்சிகளே போர் ஓவியத்தில் இடம் பெறுகின்றன.
போர்க்காட்சி |
திருவாங்கூர்ப் படை பின்வாங்கும் காட்சி |
கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் குதிரைகளின் தேவை மிகுகின்றது. குதிரை வணிகமும் பெருகுகிறது. போர்த்துகீசியர் குதிரைகளை அரபுநாட்டிலிருந்து வரவழைத்து விஜயநகரர், பாமினி சுல்தான்கள், பாளையக்காரர் ஆகியோருக்கு விற்றுச் செழிப்புறுகின்றனர். தும்பிச்சி நாயக்கரிடம் போர்த்துகீசியர் குதிரைகள் விற்கும் காட்சி ஓவியமாகியுள்ளது. அடுத்து இன்னொரு ஓவியம் – ஆறு அடி உயரமும், பத்தரை அடி அகலமும் கொண்ட பெரியதொரு ஓவியம்–போர்த்துகீசியர், குதிரைகளைக் கப்பலில் கொண்டுவரும் காட்சியைக் கொண்டுள்ளது. இந்த ஓவியம் புன்னைக்காயலைப் பின்னணியாகக் கொண்டது. கடலும், கடலலைகளும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிதம்பரம்
இராமநாதபுரம் – இராமலிங்க விலாசம்
அரண்மனை
நாயக்கர் கால ஓவியங்களில் மிகுந்த
அலங்காரப் பண்பு காணப்படும். ஆனால், மெய்ப்பாடுகள் குறைந்திருக்கும். ஒயில் (GRACE) குறைவு. இராமநாதபுரம் அரண்மனையில்
உள்ள ஓர் ஓவியத்தில் இப்பண்புகளைக் காணலாம். அது ஒரு பெண்ணின் ஓவியம். பெண்ணின் உடல்
முழுதும் பலவகை அணிகலன்கள் நுட்பமாக வரையப்பெற்றிருக்கும். ஓவியத்தின்
பின்புலம் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் அமைந்திருக்கும். இது, OCHRE எனப்படும் காவிக்கல் வண்ணமாகும்.
இராமநாதபுரம் ஓவியங்கள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இராமநாதபுரம்-இராமலிக்கவிலாசம்-சில ஓவியங்கள்
இராமநாதபுரம்-இராமலிக்கவிலாசம்-சில ஓவியங்கள்
மலையடிப்பட்டி
மலையடிப்பட்டி ஓவியம் ”லேபாக்ஷி”
பாணியில் அமைந்தது.
கோனேரிராஜபுரம் கோயில்
கோனேரிராஜபுரம் கோயிலில் ஒரு திருவிழாக்
காட்சி ஓவியமாக வரையப்பட்டுள்ளது. 1924-ஆம் ஆண்டு வரையப்பெற்றது. அரசர், கடவுள் கொடுத்த
செங்கோலை வாங்குவது போன்ற காட்சி அழகாக வரையப்பட்டிருக்கும்.
கோனேரிராஜபுரம் கோயில் - சில ஓவியங்கள்
கோனேரிராஜபுரம் கோயில் - சில ஓவியங்கள்
பொதுச்செய்திகள்
மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில்
தமிழ் இலக்கியம் இல்லை. அரசவையில் தமிழ் இல்லை. நாயக்கர் அரசு மொழி தெலுங்கு. திருமலை
நாயக்கருக்கு அவருடைய 74 வயதிலும் தமிழ் தெரியாது. நாயக்கர் சமய ஒருமைப்பாட்டை வளர்த்தார்கள்.
ஓவியப்படங்கள் - உதவி : இணையதளம்
ஓவியப்படங்கள் - உதவி : இணையதளம்
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
கோவை.
அலைபேசி : 9444939156.
ஓவியங்களைப் பற்றிய அரிய செய்திகளைக் கண்டோம். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
பதிலளிநீக்கு