மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஐவர் மலை -  ஒரு கள ஆய்வு


முன்னுரை

ஐவர் மலை, திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் பழனியிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலை. இருப்பினும், கோவைப்பகுதியிலிருந்து செல்கின்றவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை -கொழுமம் வழியாகவே செல்லவேண்டும்.  பழங்காலத்தில் இது ஒரு ஜைனக் குடியிருப்பாக இருந்துள்ளது எனத் தொல்லியல் துறையினரின் தென்னிந்தியக் கல்வெட்டுகள் நூலின் பதிநான்காம் தொகுதி குறிப்பிடுகிறது. கி.பி. 8-10 நூற்றாண்டுகளில் அயிரை மலை சமண முனிவர்களும் அவர்களது மாணவர்களும் நிறைந்த சமணப்பள்ளியாக இருந்துள்ளது என்றும், இச்சமணப்பள்ளியோடு பாண்டிய நாட்டின் பிற சமணப்பள்ளிகளுக்கும் தொடர்பு இருந்துள்ளது என்றும் இங்கு வைக்கப்பட்ட தொல்லியல் துறையினரின் அறிவிப்புப் பலகை கூறுகிறது. இங்கு, திரௌபதியம்மன் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில், முருகன் கோயில் ஆகிய கோயில்களும் இருக்கின்றன. இணையத்தில் இம்மலையைப் பற்றி நிறையச் செய்திகள் காணப்படுகின்றன. நமது கட்டுரை, கல்வெட்டுகளைக் கண்டு அவை கூறும் செய்திகளை அறிய உதவும் களப்பணி பற்றியது.


2009-ஆம் ஆண்டு- களப்பணி

தொல்லியல் சார்ந்த நூல்கள் வாயிலாகக் கல்வெட்டுகளை அவை இருக்கும் இடங்களுக்குச் சென்று பார்த்துப் படிக்கும் ஆர்வலராக 2009-ஆம் ஆண்டு ஐவர் மலைக்குச் சென்று ஜைனத் தடயங்களைக் கண்டு மகிழ்ந்தது ஐவர் மலை தொடர்பான தொடக்கம். அப்போது கையில் ஒளிப்படக்கருவி இல்லை. இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில், ஒரு பகுதியில் படுக்கைகள் இருந்த இடமும், இன்னொரு பகுதியில் பதினாறு ஜைனத் தீர்த்தங்கரர்களின் புடைப்புருவச் சிற்பங்களும் இருந்தன. சிற்பங்களின் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருந்தன. கல்வெட்டுகள் தெளிவாகத் தெரியாவண்ணம் சுவர் எழுப்பப்பட்டுச் சுண்ணம் பூசப்பட்டிருந்தது. இந்தத் தடைகளைத் தாண்டிச் சில எழுத்துகள் படிக்கும் தோற்றம் பெற்றிருந்தன.  அரைகுறையாகப் புலப்பட்ட எழுத்துகளைக் கையோடு எடுத்துச் சென்ற நோட்டுப் புத்தகத்தில் எழுதிப்பார்த்துப் பிழையான பாடத்தோடு படித்தது இங்கே நினைவுகூரப்படுகிறது. தீர்த்தங்கரர் ஒருவருடைய சிற்பத்தின் கீழ் சரியான பாடமாகக் கீழுள்ளவாறு வட்டெழுத்து அமைந்துள்ளது:



சரியான பாடம்

1  ஸ்ரீ வடபள்ளி ஆ
2  ரம் விச்சி வர
3  தபாணி செயல்    

ஆனால், பிழையாகப் படித்த முயற்சியைக் கீழுள்ள ஒளிப்படத்தில் (1) என்று அடையாளமிட்ட  கல்வெட்டு வரியில் காணலாம். 





பிழையாகப் படித்த பாடம்:

1  ஸ்ரீ வ(ப)ய பள்ளி ப
2  ரம வி(பி)ச்சி பர
3  தமாதி செயல்

மற்றொரு கல்வெட்டு சரியாகப் பிழையின்றி படிக்கப்பட்டது. மேலே, ஒளிப்படத்தில் (2) என்று அடையாளமிட்ட  கல்வெட்டு வரியில் காணலாம்.  


                                                           
வரி  1  - ஸ்ரீ அச்சணந்  வரி  2  - திசெயல்
(ஸ்ரீ அச்சணந்தி செயல்)

                                           

2013-ஆம் ஆண்டு- களப்பணி

தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழகத் தொல்லியல் கழகம் வழி நண்பரானவர் திரு. வீரராகவன். விழுப்புரத்தில் பள்ளியாசிரியராய்ப் பணி நிறைவு செய்தவர். மேற்படிக் கழகத்தின் தோற்றக்காலத்திலிருந்து அக்கழகத்தோடு இணைந்துள்ளவர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொல்லியல் தடயங்களை வெளிப்படுத்தித் தொல்பொருள்களைப் பல்லாண்டு சேர்த்துச் சொந்தமாக ஒரு அருங்காட்சியகத்தையே வைத்திருப்பவர். 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் கோவை வந்திருந்தபோது, கோவைப்பகுதியில் தொல்லியல் சார்ந்த இடங்கள் ஒன்றிரண்டைப் பார்வையிட விருப்பம் தெரிவித்தபோது உடுமலை ஐவர் மலைக்கு அழைத்துச் சென்றேன். வழியிலேயே பல்லடம்-உடுமலைப் பாதையில் கோட்டமங்கலம் என்னும் ஊரில் கி.பி. 1693-ஆம் ஆண்டைச் சேர்ந்த வீரக்கம்பம் என்னும் தூண் நடுகல்லைக் கண்டறிந்தோம். அது பற்றிய பதிவு வலைப்பூ தளத்தில் 2014, ஜனவரியில் வெளியாயிற்று. தினமணி நாளிதழிலும் வெளியாயிற்று. (மின் தமிழில் இன்னும் வெளியாகவில்லை)

ஐவர் மலைச் சமணத்தீர்த்தங்கரர் சிற்பங்களைப் பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் நண்பர்  தாம் கொண்டுவந்திருந்த கரிய நிற மை தடவிச் சிற்பங்களின் கீழே உள்ள பல வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும், ஓரிரண்டு தமிழ் எழுத்துக் கல்வெட்டுகளையும் தெளிவாகப் புலப்படும் வண்ணம் ஆக்கினார். கல்வெட்டுகளைப் படித்தோம். கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் பெயர் சேக்கிழார் என்பது. அரிதாகக் கேள்வியுறும் பெயராக இருக்கவே, பெயர்க்காரணம் கேட்டதற்கு அவ்விளைஞர், தாம் சேக்கிழார் மரபினர் என்றும், பற்றின் காரணமாகத் தம் இயற்பெயரை விடுத்துச் சேக்கிழார் என்னும் பெயரையே வைத்துக்கொண்டதாகச் சொன்னார். அவர், தீர்த்தங்கரர் சிற்பங்கள் இருக்கும் இடத்தைத் தவிர இங்குள்ள சுனைக்குளத்தின் அருகில் பாறைப்பரப்பில் கல்வெட்டு ஒன்றைக் கண்டதாகக் கூறி அங்கு அழைத்துச் சென்றார். பாறைத்தரையில் ஒரு சிறிய, ஐந்து வரிகளைக்கொண்ட கல்வெட்டு. வட்டெழுத்தினால் பொறிக்கப்பட்டிருந்தது. தொல்லியல் சார்ந்த இடங்களைக் கண்டு மகிழ வந்த நண்பருக்கும் எனக்கும் புதிய கண்டுபிடிப்புகளாக இரண்டு கல்வெட்டுகள் கிடைத்தமை பெரு மகிழ்ச்சியை அளித்தது.  எதிர்பாரா நிகழ்ச்சி. இந்தக் கல்வெட்டின் மீதும் கரிய மை பூசிப் படிக்க முயன்றோம். திறந்த வெளியில் தரையில், வெயிலும், மழையும், காற்றும் பட்டுப்பட்டுக் கால மாற்றத்தால் எழுத்துகளின் தெளிவின்மை காரணமாகச் சரியான பாடத்தைப் படிக்கக் கூடவில்லை. கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு கிடைத்த மகிழ்ச்சியில் திரும்பினோம்.


                           
கண்டறிந்த புதிய வட்டெழுத்துக் கல்வெட்டு                

                                               
 சேக்கிழாருடன் ஆய்வாளர்கள்



2014-ஆம் ஆண்டு- களப்பணி

2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் ஐவர் மலை செல்லும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. நாளிதழ் நண்பர் மீனாட்சிசுந்தரம், நண்பர் பாஸ்கரன் ஆகிய இருவருடன் ஐவர் மலை சென்றேன். கோவை-பல்லடம்-குடிமங்கலம்-கோட்டமங்கலம்-துங்காவி-வயலூர் வழியாக ஐவர் மலைக்குப் பயணம். துங்காவியில் அமராவதி ஆற்றின் வாய்க்காலின் அருகிலேயே ஒரு சிறிய செங்கல் கட்டுமானக் கோயில் (கருவறை மட்டுமே) இருந்தது. அதன் வளாகத்தைச் சுற்றிலும் பெரிய கற்களைக் கொண்டு சுற்றுச் சுவர் வேலி அமைத்திருந்தனர். வளாகத்தில் ஒரு சிறிய மாடம் போன்ற அமைப்பு இருந்தது. அதில் புடைப்புச் சிற்பமாக அழகானதொரு நடுகல் சிற்பம் காணப்பட்டது. 




துங்காவி-வாய்க்கால் அருகில் கோயில் 




நடுகல் சிற்பம்

ஐவர் மலையில் சமணச் சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் கண்டு களித்தோம். முன்னர் 2013-இல் கண்டறிந்த வட்டெழுத்துக் கல்வெட்டைக் கண்டுபிடித்து மீண்டும் படித்தறியும் முயற்சியில் கல்வெட்டைப் பாறைப்பரப்பில் தேடினோம். சுனைக்குளத்தின் அருகில் இருந்ததான நினைவில் அதன் அருகில் தேடிப்பார்த்துப் பயனில்லாமல் போயிற்று.

2018-ஆம் ஆண்டு- களப்பணி

11-11-2018 அன்று கோவை வருவதாகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் நண்பர் வீரராகவன் அவர்கள் கூறவே, 2013-ஆம் ஆண்டு- களப்பணியின்போது கண்டறிந்த  வட்டெழுத்துக் கல்வெட்டினை முதன்முதலாகப் படிக்கும் முயற்சியைத் தொடங்கிய நாங்களிருவருமே மீண்டும் படித்து முடிக்கவேண்டும் எனத் திட்டமிட்டு, 12-11-2018 அன்று ஐவர் மலை நோக்கிப் பயணப்பட்டோம். உடுமலையில் நண்பர் தென்கொங்கு சதாசிவம் எங்களுடன் இணைந்துகொண்டார். அவரும் ஐவர் மலைப்பகுதியில் ஒரு பாறைக்கல்வெட்டைப் பார்த்துவைத்திருப்பதாகக் கூறவே அக்கல்வெட்டையும் நேரில் சென்று பார்த்துப் படிக்கவேண்டும் என்னும் திட்டத்தையும் சேர்த்துக்கொண்டோம். உடுமலையிலிருந்து கொழுமம் வழியாக ஐவர் மலை சென்றடைந்தோம். வெயில் மிகுதியாக ஏறும் முன்னரே காலை பதினொரு மணியளவில் மலை ஏறிவிட்டோம். முதற்பணியாக வட்டெழுத்துக் கல்வெட்டைத் தேடும் முயற்சி தொடங்கியது. சுனைக்குளத்தின் முன்புறம்  பாறைப்பகுதியில் தேடியதில் கல்வெட்டு புலப்படவில்லை. கல்வெட்டு அமைந்திருந்த இடம் மிகச் சரியாக நினைவில் இல்லை. சுனைக்குளத்தைச் சுற்றிலும் பாறைத்தரை சமப்பரப்பாக ஓரிடத்திலும் இல்லை. ஆனால் சுனைக்குளம் அமைந்திருந்த பகுதியின் மட்டத்திலிருந்து கீழே இருந்த இன்னொரு பள்ளமான பகுதியில் சமதளப்பரப்பு காணப்பட்டது. அங்கு சென்று தேடியதில் சிறிது நேரத்தில் கண்டுபிடித்துவிட்டோம். அளவற்ற மகிழ்ச்சி. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கிட்டிய கல்வெட்டாயிற்றே.

கண்டுபிடிக்கப்பட்ட புதிய வட்டெழுத்துக் கல்வெட்டு

சமப்பரப்பாயிருந்த ஓரிடத்தில், ஒன்றரை அடி நீளம், முக்காலடி அகலம் கொண்ட சிறிய பரப்பில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. எழுத்து, வட்டெழுத்து வகையினது. பாண்டியர்களின் கல்வெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள  தென்னிந்தியக் கல்வெட்டுகளின் பதிநான்காம் தொகுதி நூலில் ஐவர் மலைக் கல்வெட்டுகள் பதிவாயுள்ளன. அந்நூலின் குறிப்புப்படி, இங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தன.  அவ்வகையில், இக்கல்வெட்டும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருக்கவேண்டும். கல்வெட்டின் எழுத்தமைதியும் அவ்வாறே உள்ளது. முன்னரே குறிப்பிட்டவாறு ஐந்து வரிளைக்கொண்ட கல்வெட்டு. இறுதி வரியில் இரண்டு எழுத்துகளே புலப்படுகின்றன. கல்வெட்டின்மீது மாவு பூசியதில் எழுத்துகள் ஓரளவு புலப்பட்டன. இருப்பினும் கல்வெட்டினை முழுதாகப் படித்து முழுச்செய்தியையும் அறியமுடியவில்லை.  கல்வெட்டில், வடபள்ளி என்னும் ஊரின் பெயர் காணப்படுகிறது. ”மாணாக்கர்” என்று படிக்கும்படியாக ஒரு சொல் காணப்படுகிறது. சமணப் பெண் துறவியார் ஒருவர் செய்த பணியைக் கல்வெட்டு குறிப்பதாகக் கருதுகிறோம். அந்தத் துறவியின் பெயர் “ஆவேரி அடிகள்  என்பதாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறோம். கல்வெட்டில் “வடபள்ளி”,  அடிகள்  ஆகிய சொற்கள் மிகத் தெளிவாக உள்ளன.  பெண் துறவியார் செய்த செயல் என்ன என்பதை அறிய இயலவில்லை. கல்வெட்டு ஒரு தரைப்பரப்பில் உள்ளதால், சற்றுத் தொலைவில் அமைந்திருக்கும் சிறு சிறு குகைத் தளங்களுடன் இக்கல்வெட்டைத் தொடர்பு படுத்தவும் இயலவில்லை.  கல்வெட்டு அறிஞர்களின் துணையோடு இக்கல்வெட்டு மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் கல்வெட்டுச் செய்தி என்ன என்பது அறியவரலாம்.

ஐவர் மலையின் பிற கல்வெட்டுகள்

ஐவர் மலைக் குகைப் பாறையில் மொத்தம் பதிநான்கு கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்பது கல்வெட்டுகள் தீர்த்தங்கரர்களின் சிற்பத்திருமேனிகளின் அடிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.  திருமேனிகளைச் செய்வித்தவர் யார் என்பதை இக்கல்வெட்டுகள்  கூறுகின்றன.  செய்வித்தவர் என்பதைக்குறிக்க அவர் பெயருடன், “செயல்” என்னும் சொல் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 

“ஆரம் விச்சி வரதபாணி செயல்”
”ஸ்ரீ அச்சணந்தி செயல்”
“ஸ்ரீ இந்திர சேனன் செயல்”
“குடியன் மூவேந்தன் செயல்”
“(பாத)மூலத்தான் ஆரி செய்த செயல்”
“மல்லிசேனப் பெரியான் செயல்”
“விரிச்சி நாகன் செயல்”

என்பனவற்றைக் குறிப்பிடலாம். 

எடுத்துக்காட்டுக்கு இரு படங்கள். 
ஸ்ரீ இந்திர சேனன் செயல்

மூவேந்தன் செயல்


மீதி ஐந்து கல்வெட்டுகள் வேறு சில செய்திகளைக் கூறுவனவாய் அமைந்துள்ளன.  அவற்றின் கல்வெட்டுப் பாடங்களும் விளக்கங்களும் கீழ்வருமாறு:

க.வெ. எண்-700  தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .
பாடம்:

1  . . . . .  எழுநூற்றுத் . . . .
2  . . . . .  ற்கு யாண்டெ . . . 
3  . . . . .  கொழுமத்து சா . .
4  . . . . .  ர்ச்0வ படாரற் . . . 
5  . . . . .  த்திரண்டா . . . 
6  . . . . .  வைத்த பொ . . . 


குறிப்பு :  சிவப்பு எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.


வட்டெழுத்துக் கல்வெட்டு


விளக்கம்:  கல்வெட்டு முழுமையாக இல்லை. ஐவர் மலையில் முதல் சிற்பம் பார்சுவ நாதருடையது. பார்சுவ நாதரின் வழிபாட்டுக்காகச் சிலர் கொடைப்பொருளாகப் பொன்  அளித்துள்ளனர். இக்கல்வெட்டு, கொழுமததைச் சேர்ந்த ஒருவர் பொன் கொடையளித்துள்ளதைக் குறிப்பிடுகிறது. படாரர் என்னும் சொல் பட்டாரக(ர்)  என்னும் சொல்லின் திரிபு எனலாம். பட்டாரகர் என்பது சமண மதத்தில் தலைவரைக் குறிப்பதாகும். ஐவர் மலைச் சமணச் சிற்பங்களில் முதற்சிற்பமாகக் காணப்படுவது (பா)ர்ச்0வ படாரர்  சிற்பமே. சமணத்துறவிகளைக் குறிக்கவும், இறைவனைக்குறிக்கவும் ”படாரர்” என்னும் சொல்லே வழக்கில் இருந்தது. 


க.வெ. எண்-701  தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .
பாடம்:

ஸ்ரீ பெரும்பத்தி 
2  ஊர் பட்டிநிக்குர
3  த்தியார் மாணாக்கியா
4  ர் அவ்வணந்திக்
5  குரத்தியார் செய்
6  வித்த தேவர்


குறிப்பு :  சிவப்பு எழுத்து கிரந்த எழுத்து.


வட்டெழுத்துக் கல்வெட்டு


விளக்கம்:  தீர்த்தங்கரர் ஒருவரின் சிற்பத்திருமேனியைச் செய்வித்தவர் பற்றிய - மேலே குறிப்பிட்ட ஒன்பது கல்வெட்டோடு பத்தாவது -  கல்வெட்டாக இது இருப்பினும் கூடுதல் செய்திகளை அறியச்செய்யும் கல்வெட்டாகத் திகழ்கிறது. சமணத்தில் பெண் துறவியர் இருந்தமை அறியப்படுகிறது. அவர்கள் குரத்தியர்  என்று அழைக்கப்பெற்றனர்.  ஆண் துறவியர் குரவர் என்னும் சொல்லால் அழைக்கப்பட்டனர்.  சைவ சமயப் பெரியோரையும் குரவர் என அழைக்கும் மரபு  சமணத்திலிருந்து ஏற்பட்டிருக்கக் கூடும். சமணச் சமயத்தின் தானக்கொள்கைகளில் ஒன்றான கல்வியுடன் இணைந்த ஒரு சொல் மாணாக்கர்/மாணாக்கியர் என்னும் சொல். பெரும்பத்தியூரைச் சேர்ந்த பட்டிநிக்குரத்தியாரின் மாணாக்கியரான அவ்வணந்திக் குரத்தியார் செய்வித்த சிற்பத்திருமேனியை இக்கல்வெட்டு குறிக்கிறது. வழிபடும் கடவுளுக்கு நிகரான ஒரு சொல்லாகத் “தேவர்”  என்னும் சொல் ஆளப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகவே  கோயிலைக் குறிக்கையில் சில கல்வெட்டுகளில் “தேவ குலம்”  என்னும் சொல்லும்,  கடவுளுக்கு ஒப்பாகக் கருதும் நிலையில் அரசனைக் குறிக்கத் “தேவர்” என்னும் சொல்லும் பயின்று வருவதைக் காண்கிறோம்.  சோழர் கல்வெட்டுகள் அனைத்திலும், அரசனைக் குறிக்கும்போது பெயரோடு சேர்த்து “தேவர்”  என்னும் பின்னொட்டுச் சொல் காணப்படுகிறது. சமணத்தில்  பெண்களை உயர்வாகக் கருதி அழைக்கையில் அவ்வை என்று குறிப்பிடுவதை இக்கல்வெட்டு மூலம் அறிகிறோம். சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் பல “அவ்வை”கள் இருப்பது இக்காரணத்தால்தான் எனலாம். 

க.வெ. எண்-702  தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .

பாடம்:

1  குவணச்சேரித் தட்டார்ச் சா
2  விகித்தி வட்டம் வடு
3  கி ஸ்ரீ அயிரை மலை தேவர்
4  க்கவிப்புறமட்டி
5  ன பொன்னிரு கழஞ்சு ||-


குறிப்பு :  சிவப்பு எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.





வட்டெழுத்துக் கல்வெட்டு


விளக்கம்:  குவணச்சேரி என்னும் ஊரினைச் சேர்ந்த வட்டம் வடுகி என்பவர் அயிரை மலைக் கடவுளுக்குத் திருவமுது படைப்பதற்காக இரண்டு கழஞ்சு பொன் கொடையளித்தது பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.  இன்று இம்மலை ஐவர் மலை என்று மருவி அழைக்கப்பட்டாலும், 8-9-ஆம் நூற்றாண்டில் இந்த மலை “அயிரை மலை”  என அழைக்கப்பெற்றதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது. பதிற்றுப்பத்து இலக்கியத்தில் சுட்டப்பெறும் அயிரை மலை இந்த மலையாகலாம்  என்னும் கருத்தும் உண்டு.  கல்வெட்டுகளில், ”புறம்”  என்னும் சொல்லாட்சி உண்டு.  இது, கோயில் வழிபாடு மற்றும் பிற அறங்களுக்காகக் கொடையாக அளிக்கப்படும் இறையிலி நிலத்தைக் குறிக்கும். (இறையிலி  என்பது அரசுக்குச் செலுத்தும் வரியிலிருந்து நீக்கம் பெறுதலைக் குறிக்கும்)  விளக்குப் புறம், மடப்புறம் போன்ற பல்வகை இனங்களுக்கு நிலம் அளிக்கப்படுவதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கல்வெட்டில் உள்ள “தேவர்க்கவிப்புறமட்டின பொன்” என்பதை, ”தேவர்க்கு-அவிப்புறம்-அட்டின-பொன்”  எனப்பிரித்துப் பொருள் கொள்ளல் தெளிவுண்டாக்கும்.  அவி என்பது  கடவுளுக்குப் படைக்கும் உணவு (அமுது). அட்டுதல் என்பது கொடுத்தல், தானம் செய்தல். எனவே, அயிரை மலைத் தேவர்க்கு அமுது படைக்க ஏற்படும் செலவினத்துக்காக நிலம் தானம் செய்யப்படுதலையும் அதற்கு முதலாக இரண்டு கழஞ்சுப்பொன் அளிக்கப்பட்டதையும் கல்வெட்டு தெரிவிக்கிறது. குவணச்சேரி என்னும் ஊர் தற்போது உள்ளதா எனத்தெரியவில்லை. 

க.வெ. எண்-703  தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .

பாடம்:

1  . . . .  னுக்குச் செல்லாநி . . .  .  ருந்
2  . . . .  றலூர் வாழுந்திணை . . . .  சந்திரு . . . 
3  . . . .  ருவயிரைக்கு  இரண்டு கலம் பெய்தா(ன்)
4  . . . .  விக்கும் ஓரடிகளுக்கும் ||-




தமிழ் எழுத்துக் கல்வெட்டு




விளக்கம்:  கல்வெட்டு முழுமையாக இல்லை.  தென்னிந்தியக் கல்வெட்டுகள் நூலின் பதிநான்காம் தொகுதி குறிப்பிடுவதுபோல் அயிரை மலை, பண்டு பெயர் பெற்ற சமணக்குடியிருப்பாக இருந்ததோடு, பார்சுவ நாதரை முதன்மை இறைவராகக் கொண்ட வழிபாட்டிடமாகவும் இருந்துள்ளது; வழிபாட்டுக்காகப் பலர் கொடையளித்துள்ளனர். அது போன்ற ஒரு கொடையை இக்கல்வெட்டு குறிக்கிறது. கலம் என்னும் சொல்லைக்கொண்டு கொடைப்பொருள் நெல் எனக் கருதலாம். நெல் கொடை, இறைவற்குப் படைக்கும் அவிக்காகவும் (அமுது), சமணத் துறவியார் ஒருவருக்குச் சோறு படைக்கவும் அளிக்கப்பட்டது. 4  . . . .  விக்கும் ஓரடிகளுக்கும் ||-   என்னும் தொடர் இக்கருத்தை உறுதியாக்குகிறது. .  விக்கும்   என்பது  “அவிக்கும்”  என்னும் சொல்லின் குறை வடிவமே. அடிகள் என்னும் சொல் சமணத் துறவியரைக் குறிக்கும் இன்னொரு சொல்.  

தமிழ் எழுத்துக் கல்வெட்டுகளில் “ணை”  எழுத்து, தனிவடிவம் பெற்று - அதாவது, மற்ற எழுத்துகளின் ஐகார வடிவத்தில் எழுத்துக்கு முன்புற ஒட்டாக எழுதப்படும் இரட்டைக்கொம்பு  போல் எழுதப்படாமல் -  எழுதப்படும். ஆனால், மேற்கண்ட கல்வெட்டில் இரண்டு ஒற்றைக்கொம்பு சேர்த்து எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (வரி 2)

”ணை”   எழுத்தின் தனி வடிவம்
 
”ணை” எழுத்து ஐவர் மலைக் கல்வெட்டில் வேறு வடிவம்
அதேபோல,   இக்கல்வெட்டின் மூன்றாம் வரியில் உள்ள “யி”  எழுத்து வழக்கமாக எழுதப்படும் முறைக்கு  மாறுபட்டுள்ளதைக் காணலாம்.


”யி”  வழக்கமான முறையில்


”யி” எழுத்து ஐவர் மலைக் கல்வெட்டில் வேறு வடிவம்

      

க.வெ. எண்-703  தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .

பாடம்:

1  சகரயாண்டு எழுநூற்றுத் தொண்ணூற்றிரண்டு 
2  போந்தன வரகுணற்கு யாண்டு எட்டு குணவீரக்கு
3  ரவடிகள் மாணாக்க(ர்) காழத்து சாந்திவீரக்
4  குரவர் திருவயிரை பார்ச்0வ படாரரையு மியக்
5  கி அவ்வைகளையும் புதுக்கி இரண்டுக்கு முட்
6  டாவவியு மோரடிகளுக்கு சோறாக அமைந்தன
7  பொன் ஐந்நூற்றைந்து காணம்


வட்டெழுத்துக் கல்வெட்டு


விளக்கம்:  பார்சுவ படாரரை முதன்மை  தேவராகக் கொண்டு வழிபாடுகள் அயிரை மலையில் நிகழ்ந்துள்ளதை மேலே சுட்டியுள்ளோம். பார்சுவநாதரின் சிற்பத்திருமேனியைச் செய்வித்தவர் பற்றிய குறிப்பு அடங்கிய கல்வெட்டு சிற்பத்தின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்வெட்டு மிகவும் சிதைந்து போனமையால் கல்வெட்டின் பாடத்தைப் படித்துச் செய்தியை அறிய இயலவில்லை.  ஆனால், இக்கல்வெட்டு, பார்சுவ நாதரின் சிற்பத்திருமேனியையும் அவருடன் காணப்பெறும் இயக்கியரின் சிற்பங்களையும் சாந்திவீரக் குரவர்  என்பவர் சீர் செய்துள்ளார் என்றும், பார்சுவ நாதருக்கும் இயக்கியருக்கும் ஆன அமுது படிக்கும், ஒரு துறவியாருக்குச் சோறு படைக்கவும் வேண்டிய செலவினங்களுக்காக ஐந்நூற்றைந்து காணம் பொன் வைத்தார் என்றும் கூறுகிறது. இக்கல்வெட்டு, வரலாற்றுச் சிறப்புப்  பெற்ற  கல்வெட்டாக வரலாற்று ஆசிரியர்களால் பாராட்டப்பெறுகிறது. பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணபாண்டியன் ஆட்சி ஏற்ற ஆண்டினைக் கணக்கிட இக்கல்வெட்டு சான்றாய் அமைகிறது.  

கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் சக(ர) ஆண்டு  792 என்பதற்கு ஈடான பொது ஆண்டு கி.பி. 870 ஆகும். கலவெட்டின்  காலமான கி.பி. 870-ஆம் ஆண்டை வரகுணபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டு எனக் கல்வெட்டு குறிப்பதால், வரகுண பாண்டியன் ஆட்சியில் அமர்ந்த ஆண்டு கி.பி. 862 என உறுதி செய்யப்படுகிறது.  சக ஆண்டு 792 கழிந்தது என்னும் நிலையைக் கல்வெட்டில்  வரும் “போந்தன”  என்னும் சொல் குறிப்பிடுவது கருதத்தக்கது. இரண்டுக்கு முட்டாவவியு மோரடிகளுக்கு என்பதை  “இரண்டுக்கும்-முட்டா-அவியும்-ஓர்-அடிகளுக்கு”  எனப் பதம் பிரித்தல் எளிதில் பொருள் உணர்த்தும்.  முட்டா என்பது தடையின்றித் தொடர்தல் என்பதைக்குறிக்கும்.  அடிகள் என்னும் சொல் சமணத்துறவியைக் குறிக்கும்.  கொடை நல்கிய சாந்திவீரக் குரவர், குணவீரக் குரவடிகள் என்னும் ஆசிரியரின் மாணாக்கர் ஆவார். தீர்த்தங்கரர்களோடு இணைத்துக் கூறப்படும் இயக்கியரை (யக்ஷி)  இயக்கி அவ்வைகள் என்று கல்வெட்டு குறிப்பதைக் காண்க. சமணத்தில் ,  உயர்ந்த பெண்களை அவ்வை எனக் குறிப்பிடும் வழக்கு இருப்பதை அறிகிறோம்.  சைவ வைணவப் பெருஞ்சமயங்களில்  இவ்வழக்கு சற்றே மாறுபட்டு  “அம்மையார்” என்றும், “நாச்சியார்”   என்றும் உள்ளதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, காரைக்கால் அம்மையார், பரவை நாச்சியார் என்பதைக் குறிப்பிடலாம்.  சங்கப் பெண்பாற் புலவர் அவ்வையார் சமணராய் இருக்கக் கூடும் எனலாம். புதுக்கி என்னும் சொல் சீர் செய்து எனப் பொருள் தரும்.  புதுப்பித்தல் எனவும் பொருள் தரும். காணம் என்பது நடப்பில் புழங்கிய நாணயத்தைக் குறிக்கும். மக்கள் வழக்காற்றில் உள்ள சோறு என்னும் தூய தமிழ்ச் சொல் கல்வெட்டில் பயின்று வந்துள்ளமை எண்ணி மகிழத்தக்கது. 

தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-14 - இல் காணப்படாத ஒரு கல்வெட்டு நேரில் படிக்கப்பட்டது.  அதன் பாடம்:


ஸ்வஸ்திஸ்ரீ  அண்ட நாட்டுக் கூ
2  டலூர் சிலைய மாணிக்கன் 
3  செய்வித்த தேவர்

குறிப்பு :  சிவப்பு எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.



தமிழ் எழுத்துக் கல்வெட்டு



விளக்கம் :    இக்கல்வெட்டும் ஒரு சிற்பத்தின் கீழ் பொறிக்கப்பட்ட  ஒன்றே. சிற்பத்தை அண்ட நாட்டுக் கூடலூரைச் செர்ர்ந்த சிலைய மாணிக்கன் என்பவர் செய்வித்ததாகக் கூறுகிறது. அண்ட நாடு என்பது தற்போதுள்ள ஒட்டன்சத்திரம் வட்டம் ஆகலாம். அண்டநாடு, வைகாவி நாட்டை அடுத்துள்ள பகுதி. வைகாவி நாடு, பழநிப்பகுதி. ஐவர் மலை பழனிப்பகுதியில் உள்ளது. சிற்பத்திருமேனியை அண்ட நாட்டுக் கூடலூரைச் சேர்ந்தவர் செய்வித்துள்ளார்.  கூடலூர் தற்போது எந்த ஊர் எனத் தெரியவில்லை. 


ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு மீள் படிப்பு

க.வெ. எண்-691 தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .
தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-14  - க.வெ. எண் :  107


பாடம்:


1  ஸ்ரீ வடபள்ளி ஆ
2  ரம் விச்சி வர


3  தபாணி செயல்    

மேற்படிக் கல்வெட்டை மீள் படிப்புக்குள்ளாக்கியதில்,  ஒரு பாட பேதம் காண முடிந்தது.  “பாணி”   என்னும் சொல்லில் “பா”  எழுத்து “மா”  என்னும் எழுத்தாகப் படிக்கப்பட்டது.  ”மா”  என்னும் எழுத்து தெளிவாக உள்ளது. ”பாணி”  என்பதைவிட  ”மாணி”  என்பது கூடுதல் பொருத்தம் உடையது. மாணி  என்னும் சொல் கல்வெட்டுகளில் மிகுதியும் பயிலும் சொல்லே. ஒரு மாணாக்கரின் நிலையில் ஆசிரியரிடம் பயிற்சி பெறுகின்ற ஒருவரைக் குறிக்கும் சொல்லாகக் கருதலாம். சிவன் கோயில் கல்வெட்டுகளில் மாணி என்னும் சொல் கோயில் பணிகளில் ஈடுபடும் ஒரு பிராமணப் பிரமச்சாரியைக் குறிக்கும். எனவே, திருத்தப்பட்ட பாடம் கீழுள்ளவாறு:

1  ஸ்ரீ வடபள்ளி ஆ
2  ரம் விச்சி வர

3  தமாணி செயல் 


ஆரம் விச்சி வரத மாணி செயல்



ஆரம் விச்சி வரத மாணி செயல்

பார்சுவ நாதர் சிற்பத்தின் கீழுள்ள கல்வெட்டு

பார்சுவ நாதர் சிற்பத்தின் கீழுள்ள கல்வெட்டு மிகவும் தேய்மானம் கொண்டுள்ளதாலும் சுண்ணாம்புப் பற்று மிகுந்துள்ளதாலும் படிக்க இயலவில்லை. கல்வெட்டுத் தொகுதி நூலிலும் கல்வெட்டின் பாடம் இல்லை. ஆனால், சிற்பத்திருமேனியைச் செய்வித்தவர் ஓர் ”அடிகள்”  என்பது புலப்படுகிறது.  “அடிகள்”  என்னும் சொல் சற்றுத் தெளிவாகக் காணப்படுகிறது. 



பார்சுவ நாதர் சிற்பமும் கல்வெட்டும்

முடிவுரை


ஐவர் மலை பற்றிய நாளிதழ்ச் செய்தி

ஐவர் மலையில் பிராமிக்கல்வெட்டுகள் - செய்திப்பிழை


நாளிதழ்களில் வரலாற்றுச் செய்திகளை வெளியிடுகையில்  இயன்றவரையிலும் பிழைகள் தவிர்த்தல் நலம் என்பது தற்போது பல செய்திகளைப் பர்ர்க்கையில்  தோன்றும் கருத்து. ஐவர் மலைக் கல்வெட்டுகள் அனைத்துமே - ஓரிரு தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள் தவிர -  பாண்டியர் கால வட்டெழுத்துக் கல்வெட்டுகள்.  ஆனால் இங்கு   பதின்மூன்று பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன என்பதாக வரலாற்று ஆய்வாளர் கே.ராஜா என்பவர் ”தினமலர்”  நாளிதழில்  (08-08-2010)  எழுதியிருந்தது  எனக்கு வியப்பை மட்டுமே அளித்தது.  வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் பிராமிக் கல்வெட்டுகள் என்று பிழையாகப் புரிந்துகொள்வதே இதற்குக் காரணம். 




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.

3 கருத்துகள்: