மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 15 நவம்பர், 2018


சங்கரன்கோயில் இலந்தைக்குளம் – மடைக்கல்வெட்டு









முன்னுரை
அண்மையில், இணைய அன்பர் சேஷாத்திரி அவர்கள் வட்டெழுத்தில் அமைந்த கல்வெட்டு ஒன்றின் ஒளிப்படத்தை அனுப்பிக், கல்வெட்டு என்ன கூறுகிறது எனக்கேட்டிருந்தார். அந்தப்படத்தில், பின்னணியாக ஏரி அல்லது குளம் ஒன்று காட்சியளித்தது. முன்னணியில், கல்லால் கட்டுவிக்கப்பட்ட ஒரு தூம்பு அல்லது மடையின் தோற்றம். இரு கல் தூண்களும் அவற்றின் இடையே கிடந்த நிலையில் ஒரு கல்லும் கொண்ட அமைப்பு.  மூன்று கற்களிலும் எழுத்துகள். வட்டெழுத்து வகை எழுத்து. பார்வைக்கு அழகு. கி.பி. 8-9 –ஆம் நூற்றாண்டுக் காலத்தை ஒட்டிய எழுத்து வடிவமாகத் தோன்றியது. படிக்கும் ஆர்வம் எழுந்தாலும், அக்கல்வெட்டுக் கிடைத்த பகுதியைத் தெரிந்துகொண்டால், கல்வெட்டைப் படிக்கும்போது பாடத்தின் சூழலைக்கொண்டு  (CONTEXT) கல்வெட்டுச் செய்தியை எளிதில் அறியமுடியும் என்னும் எண்ணத்தில் மேற்கொண்டு கல்வெட்டைப் பற்றிய பின்னணியை அறிந்து தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன், நண்பரும், தேடுதலில் இறங்கிக் கல்வெட்டு எங்குக் கிடைத்தது, அதில் கூறப்பட்ட செய்தி என்ன என்று சுட்டுகின்ற நாளிதழ்ச் செய்தியை அனுப்பிவைத்தார். கல்வெட்டு எழுத்துகள், மடைத்தூணின் கிடைமட்டக் கல் ஒன்று, நிலைக்கற்கள் இரண்டு என மூன்று பகுதிகளில் எழுதப்பட்டுள்ளன.  கல்வெட்டின் பாடம் – நான் படித்த அளவில் – கீழ்வருமாறு:

கல்வெட்டின் பாடம் :

கிடைமட்டக்கல்:

1 சோழன்றலைகொண்ட கோவீரபாண்டியற்கு யாண்டு பதினஞ்சு 
2 இதனெதிர் இரண்டு இவ்வாண்டு நெச்சுற நாட்டு பிரமதேயம் 
3 நீலி நல்லூர் நம்பிராட்டியார் செம்பியன் கிழாலடிகள் தி
4 (ரு)வடிக்கா(*) ( ஊர்)(**)ச்செல்கின்ற அள்ளூர்க் குளக்கீழ்க் (லா)
5 வகப்பாடி ஆலவாசீலத்துக்காய் இவ்வூர் தலைச்செல்கின்[ற]


இடப்புற நிலைக்கல்

ஸ்வஸ்திஸ்ரீ


சோலை திருப்
2 பாச்(சே)ற்றி
3 ( ன்) பொன்மறை
4 யோன் (தெ)ன் (க)
5 லவை ஆலவா
6 ய் சிலம்ப
7 ன் பியரால்
8 நீலிந[ல்]லூ
9 ர் ஏரிப்பெ
10 ருமடையைக்
11 கல்லால் நி
12 லை அமைத்தா
13 ன் சிரி றங்
14 (முவளா)ச்
15 செய்து

வலப்புற நிலைக்கல்

1 ஆண்மர் நா
2 ட்டு தேவதா
3 னப்பிர
4 மதேயம்
5 தேவியம்ம
6 ச்சருப்பே
7 தி மங்கல
8 த்து சிவ
9 ப்ராஹ்மண
10 ன் மாதேவ
11 ஞ்சோலை
12 ம்பலவ
13 னில் நிலை
14 கால் ஆல
15 வாய் சீல
16 த்தின் பேரா
17 ல் நிறுத்து
18 விச்ச நிலை

கல்வெட்டுச் செய்திகள்

மங்கலத்தொடக்கம்
கல்வெட்டின் மங்கலத் தொடக்கச் சொல்லான ஸ்வஸ்திஸ்ரீ  தனித்துப் பொறிக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு ஓலைச் சுவடிகளில் எழுதும் முறையை நினைவூட்டுகிறது. முதல் மூன்று வரிகளில், கல்வெட்டு எழுதப்பெற்ற அரசன் பெயர், அவனது ஆட்சியாண்டு, கல்வெட்டுத் தொடர்பான அமைவிடம் (நாட்டுப் பிரிவு, ஊர்ப்பெயர்) குறிக்கப்பெறுகிறது.

அரசன் பெயர்
அரசன் பெயர் “சோழன்றலைகொண்ட கோவீரபாண்டியன்  என உள்ளது.  இவன் சடையவர்மன் பராந்தக வீரநாராயணனின் பேரனும், இராசசிம்மனின் மகனுமான வீரபாண்டியன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 946-966. இவன் பாண்டி நாட்டுக்கு ஏற்றம் புரிந்தவர்களுள் ஒருவன்; பராந்தக சோழனின் ஆட்சியில் சோழப்பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த பாண்டி நாட்டுப்பகுதிகளை மீட்டுக்கொண்டவன் என்றும், இவன் கொண்டது சோழ இளவரசருள் ஒருவனது தலையே போலும் என்றும் கே.கே. பிள்ளை குறிப்பிடுகிறார். முதலாம் இராசராசனின் தமையனாகிய ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வென்று அவன் முடியைக்கொண்டிருக்கவேண்டும் என்று சோழர் கல்வெட்டுகளிலிருந்து விளங்குகிறது.  தென்னிந்தியக் கல்வெட்டுகள் ஐந்தாம் தொகுதியில், நெல்லை, நெல்லையப்பர் கோயிலில் வீரபாண்டியனின் ஐந்து கல்வெட்டுகள் (க.வெ.எண்: 451-455)  காணப்படுகின்றன. இவை அனைத்திலும் சோழன்றலை கொண்ட வீரபாண்டியன்என்னும் சிறப்புப் பெயர் உள்ளது.

அரசனின் ஆட்சியாண்டு
அரசனின் ஆட்சியாண்டு, யாண்டு பதினஞ்சு இதனெதிர் இரண்டு என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது 15+2 ;  17-ஆம் ஆண்டு. கி.பி. 963.

நாட்டுப்பிரிவு.
கல்வெட்டில் நெச்சுற நாடு, ஆண்மர் நாடு ஆகிய இரண்டு நாட்டுப்பெயர்கள் குறிக்கப்பெறுகின்றன. “இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்என்னும் தலைப்பில் தொல்லியல் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தொகுத்த நூலில் நெச்சுற நாடும், ஆண்மர் நாடும் குறிக்கப்பட்டுள்ளன. நெச்சுற நாடு தற்போதைய சங்கரன்கோயில் பகுதியாகும். ஆண்மர் நாடு, தற்போதைய இராஜபாளையம் பகுதியாகலாம். மேற்படி நூலில்,  நெச்சுற நாட்டுப்பிரிவில் நெச்சுறம், ஊற்றத்தூர், நீலிநல்லூர் ஆகிய ஊர்கள் காட்டப்பெற்றுள்ளன. நமது கல்வெட்டிலும், நீலிநல்லூர் சுட்டப்பெறுகிறது. இவ்வூர் ஒரு பிரமதேயமாக -  பிராமண ஊராக – இருந்துள்ளது. கல்வெட்டில் நீலிநல்லூர் என்னும் ஊர்ப்பெயரை அடுத்து அரசியின் பெயர் சுட்டுகின்ற “நம்பிராட்டியார் செம்பியன் கிழானடிகள் திருவடிக்கா”  என்னும் தொடர்  அமைகின்றதால் அரசியின் பெயரால் ஒரு வாய்க்கால் நீலிநல்லூர் ஊர்வழி சென்றிருக்கக் கூடும் என்று கருத வாய்ப்புண்டு. இக்கருத்துக்கேற்ப, கல்வெட்டிலும் ”செல்கின்ற” என்னும் தொடர் உள்ளது. அரசன், அரசி ஆகியோர் பெயரில் வதி, வாய்க்கால், ஆறு ஆகிய பெயர்கள் கல்வெட்டுகளில் மிகுதியாகக் காணக்கிடைக்கின்றன. ”கிழானடிகள்” என்னும் சொல் பிழையாகக் கல்வெட்டில் “கிழாலடிகள்” என உள்ளது. கல்வெட்டில் அள்ளூர்க்குளம் பற்றிய குறிப்புள்ளது. கிடைமட்டக்கல்லின் ஐந்தாம் வரியில் ”ஆலவாசீலத்துக்காய் இவ்வூர் தலைச்செல்கின்[ற”   என்றிருப்பதால், நீலிநல்லூர் வழியே ஒரு வாய்க்கால் சென்றதாகவும்,  அது ஆலவா(ய்)சீலம் என்னும் ஊரில் முடிவதாகவும் கருத இடமளிக்கிறது.

அடுத்து, ஆண்மர் நாட்டுப்பிரிவில் சேற்றூர், தேவியம்மச் சதுர்வேதி மங்கலம், கொல்லம் கொண்டான், சோழகுலாந்தகபுரம், புனல் வேலி ஆகிய ஊர்கள் இருந்தன என மேற்படி நூல் குறிக்கிறது. நமது கல்வெட்டிலும் தேவியம்மச் சதுர்வேதி மங்கலம் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டில் “சருப்பேதி மங்கலம்” என்றுள்ளது. சதுர்வேதி, சருப்பேதி ஆகிய இருவகையான வழக்கும் கல்வெட்டுகளில் பயில்கிறது. இந்தத் தேவியம்மச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த பிராமணன் மாதேவன் சோலை அம்பலவன் என்பவன் மடையின் நிலையைச் செய்தளித்தான் என்று கல்வெட்டு கூறுகிறது.  ஆலவாய்சீலத்தின் பேரால் இந்தக் கொடை அளிக்கப்பட்டது என்னும் குறிப்பு, ஆலவாய் சீலம் என்பது ஊர்ப்பெயராகவும், ஆள் பெயராகவும் வந்துள்ளதை உணர்த்துகிறது.

கல்வெட்டின் இன்னொரு பகுதி, சோலை திருப்பாச்சேறு என்னும் ஊரைச் சேர்ந்த பொன்மறையோன் என்பவன், தென்கலவையைச் சேர்ந்த ஆலவாய் சிலம்பன் பெயரால் நீலிநல்லூர் ஏரிக்குப் பெரு மடையை அமைத்தான் என்று கூறுவதாகவும்,  மாறாகத் திருப்பாச்சேற்றுப் பொன்மறையோனான ஆலவாய் சிலம்பன் பெயரால் ஸ்ரீரங்க மூவேளான் என்பவன் பெருமடையை அமைத்தான் என்று கூறுவதாகவும் இரு வகையாகப் பொருள் கொள்ளுமாறு உள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படிக்கையில் எழுத்துகள் ஏற்படுத்தும் மயக்கம் பல்வேறு பாடபேதங்களைத் தருவது வழக்கம். ஸ்ரீரங்க(ம்)என்பது “சிரி றங்க(ம்)  எனக் கல்வெட்டில் உள்ளது.

முடிவுரை
தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்ட  கல்வெட்டின் மிகச் சரியான பாடமும், துறையினர் கொண்டுள்ள சரியான கல்வெட்டுச் செய்தியும் தெரியவந்தால்தான் நமது யூகங்கள்  தெளிவாகும். நாளிதழ்ச் செய்தியில் காணப்படும் “ஆன்மா நாட்டு”,  தேவியம் சதுர்வேதி மங்கலம்” ,  அம்பலவாணால்  ஆகிய சொற்றொடர்கள் பிழையானவை.


துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.




2 கருத்துகள்: