வெள்ளலூரில் ஒரு புதிய கல்வெட்டு
முன்னுரை
கல்வெட்டுகளைத் தேடிச் செய்திகளை வெளியிடும் பணி
பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அண்மையில் அறிமுகமான கோவை நண்பர் திரு.
தமிழ்மாணிக்கம் அவர்கள் ஒரு செய்தியைச் சொன்னார். வெள்ளலூரில் காசி அப்பச்சி
கோயில் என அழைக்கப்படும் ஒரு கோயிலில் நடுகல் சிற்பம் ஒன்றினை மூலவராக
வணங்கிவருகிறார்கள்; அதே கோயிலில் ஒரு தனிக்கல்லில் கல்வெட்டு ஒன்று உள்ளது.
அச்செய்தியின் அடிப்படையில் கட்டுரை ஆசிரியர் சென்ற 26-08-2017 அன்று, வரலாற்று
ஆர்வலர்களான நண்பர்கள் பாஸ்கரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோருடன் காசி அப்பச்சி
கோயிலுக்குச் சென்று கல்வெட்டை ஆய்வு செய்தார்.
காசி அப்பச்சி கோயில்
வெள்ளலூர் ஊரின் எல்லையில், இடையர்பாளையம் சாலையில்,
சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ள ஒரு சிறு கோயில்தான் காசி அப்பச்சி கோயில். வேப்ப
மரங்களுக்கிடையில், எளிமையான சிமெண்ட் தரையுடன் கூடிய சிறு வளாகம். ஒரு புறம் மேடைமேல்
வீற்றிருக்கும் பிள்ளையார். இன்னொரு புறம் ஒரு சிறிய அறையைக் கருவறையாகக்
கொண்டுள்ள காசி அப்பச்சி கோயில். மூன்றாவதாக நாம் கண்டறிந்த கல்வெட்டுக் கல். காசி
அப்பச்சி கோயில் கருவறையில் மூலவராக இருப்பது ஒரு நடுகல் சிற்பம்.
காசி அப்பச்சி கோயில்
புலிகுத்திக்கல்லே வழிபடு தெய்வம்
கோவைப்பகுதியில் கால்நடைகளின் பட்டியில் காவல் பணியில்
ஈடுபட்ட வீரர்களில், கால்நடைகளைத் தாக்கவருகின்ற புலிகளுடன் சண்டையிட்டுக் கொன்று
தானும் இறந்துபடுகின்ற வீரனுக்கு எடுக்கப்பட்ட நினைவுக்கற்கள் நிறைய உள்ளன. அவ்வகை
நடுகல் ஒன்றை இப்பகுதியில் கோயிலாக்கியுள்ளனர். நடுகல் வீரன், காசி அப்பச்சி
என்னும் பெயரில் வழிபடப்படுகிறான். வழக்கமாகக் காணும் புலிகுத்திக்கல் சிற்பத்தின்
கூறுகளே இங்கும் காணப்படுகின்றன. வீரன் தன் வாளைப் புலியின் வாய்ப்பகுதியில்
பாய்ச்சுகிறான். புலி தன் பின்னங்கால்களில் நின்றுகொண்டு, முன்னங்கால்களால்
வீரனைத் தாக்கும் நிலையில் உள்ளது. அதன் வால் உயர்ந்து நிற்கிறது. வீரன் அணி
செய்யப்பட்ட தலைப்பாகை அணிந்திருக்கிறான். தலைப்பாகையில் குஞ்சலம் காணப்படுகிறது. பெரிய
செவிகளும் காதணிகளும் நன்கு புலப்படுகின்றன. இடைக் கச்சையுடன் ஆடை அமைந்துள்ளது.
படையலோடு வழிபாடு நடக்கிறது.
புலிகுத்திக்கல் சிற்பம் - வழிபடு தெய்வமாக
வாதப்பிள்ளையார் கோயில்
மேடையையே கோயிலாகப் பெற்ற பிள்ளையார், வாதப்பிள்ளையார்
என இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறார். மக்கள் தம்முடைய வாத நோய் நீங்கவேண்டி
இப்பிள்ளையாரையும் அருகில் அமைந்துள்ள கல்வெட்டு எழுத்துகள் உள்ள தனிக் கல்லையும்
சேர்த்து வணங்குகிறார்கள்.
கல்வெட்டு
மூன்றடிக்குள் உயரம் கொண்ட ஒரு தனிக்கல். நீள் சதுர
வடிவம் கொண்டது. உச்சிப் பகுதியில் மட்டும் வளைவாக வடிக்கப்பட்டுள்ளது. எழுத்துகளின்
பதினோரு வரிகள் காணப்படுகின்றன. கோடுகள் செதுக்கப்பட்டுக் கோடுகளுக்கிடையில்
எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. கல்லின் தரைப்பகுதியில் தரைக்குக் கீழே மேலும் சில
வரிகள் இருக்கவேண்டும். அந்தப் பகுதியில்தான் கல்வெட்டுச் செய்தி முடிவடைகிறது
எனக் கருதலாம். ஏனெனில், வழக்கமாகக் கல்வெட்டுகளின் முடிவில் காணப்படும் “இது
பந்மாகேச்வர ரக்ஷை” என்னும் இறுதித் தொடர், இக்கல்வெட்டில், கல்லின் பக்கவாட்டுப் பகுதியில்
பொறிக்கப்பட்டுள்ளன. கல்லின் பருமன் சிறியது. எனவே, மூன்று சிறு வரிகளில்
“பந்மாகே(ச்வ)ர இரக்க்ஷை” என்னும் தொடர் எழுதப்பட்டுள்ளது.
கல்வெட்டு
கல்வெட்டின் பாடமும் காலமும்
கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு. கி.பி. 12-14-ஆம்
நூற்றாண்டுக் காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.
கல்வெட்டின் முகப்புப் பகுதி
கல்வெட்டின் முகப்புப் பகுதி
1
(ஸ்வஸ்தி)ஸ்ரீ
2
வெள்ளலூர் ஆளு
3
டையார் தென்
4
னூராண்டார் தி
5
ருக்குளம் பெ
6
ரிய நாச்சியா(ர்)
7
வாரம்ம் இ
8
(து) அன்னதா
9
(ந) சிவபுரியி(ல்)
10
பொற்கோயிற்
11
கைக்கோளர்
கல்வெட்டின் பக்கவாட்டுப் பகுதி
கல்வெட்டின் பக்கவாட்டுப் பகுதி
1
பந்மாகே
2
ர இரக்
3
க்ஷை
கல்வெட்டுச் செய்திகள்-ஓர் ஆய்வு
கல்வெட்டுகள் “ஸ்வஸ்திஸ்ரீ’ என்னும் மங்கலத் தொடருடன் தொடங்குவது வழக்கம்.
அவ்வாறே இக்கல்வெட்டும் தொடங்குகிறது. ஆனால், கல்வெட்டின் காலத்தைக் கணிக்க உதவும்
வகையில், அரசனின் பெயரோ, ஆண்டுக்குறிப்போ காணப்படவில்லை. ”வெள்ளலூர் ஆளுடையார்” என்பது வெள்ளலூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனைக் குறிக்கும்
பொதுத்தொடர். ”ஆளுடையார் தென்னூராண்டார்” என்னும் தொடர், ஊருடன் இணைத்து வழங்கும் இறைவனின் சிறப்புப்
பெயரைக் குறிக்கும். அந்த வகையில்,
தென்னூரின் இறைவன் என்பது உணரப்படும். எனில், வெள்ளலூருக்குத் தென்னூர் என்று
மற்றொரு பெயரும் உண்டு என்பது புலனாகிறது. இதற்குச் சான்றாகப் பின்வரும்
கல்வெட்டுகளைக் குறிப்பிடலாம்.
1
கல்வெட்டு எண். 213 (கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர்
மாவட்டம்-நூல்.)
வரி 14 ஆளுடையா
15
ர் தென்னூர்ப்
16
பதியுளாற்கு ஒரு
2
கல்வெட்டு எண். 214 (கொங்குநாட்டுக்
கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்-நூல்.)
வரி 10 ண்டு வேளிலூர்
11
த் தென்னூர் நக்
12
கனார்.....
3
கல்வெட்டு எண். 216 (கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர்
மாவட்டம்-நூல்.)
வரி 3
.......பேரூர்நாட்டு
4
வெள்ளலூர் ஆளுடையார்
5
தென்னூராண்டார் கோயிற்
கல்வெட்டில், “அன்னதான சிவபுரியில்” என்னும் தொடர் காணப்படுகிறது. அன்னதான சிவபுரி என்பது
வெள்ளலூருக்கு வழங்கிய மற்றொரு பெயராகும். இதற்குச் சாண்றாகப் பின்வரும்
கல்வெட்டைக் குறிப்பிடலாம்.
கல்வெட்டு எண். 212 (கொங்குநாட்டுக்
கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்-நூல்.)
வரி
6 பேரூர் நாட்டு அன்
7
னதான சிவபுரியான
8
வெள்ளலூர்...
காசி அப்பச்சி கோயில் கல்வெட்டில், ”பொற்கோயிற் கைக்கோளர்” என்னும் தொடர் உள்ளது. இத்தொடர், கைக்கோள வீரர்களைக் கொண்ட
படையினரைக் குறிக்கும். கி.பி. 10-ஆம் நூற்றாண்டுச் சோழர் காலக்
கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பல்வகைப் படையினரில் கைக்கோளர் படையினரும்
ஒருவர். “பொற்கோயில்” என்னும் ஒருவகைச் சிறப்பு அடையாளத்தை அல்லது பட்டத்தைச்
சிலருக்கு அரசர் வழங்கியிருத்தல் வேண்டும். ஏனெனில், மேற்சொன்ன படையினர் அல்லாது
மக்கட்குடிகள் சிலருக்கும் இந்தப் பட்டம் இணைந்து வருவதைக் கீழ்க்காணும் கல்வெட்டு
வரிகள் தெளிவாக்குகின்றன.
1) செய்யாறு வட்டம்-திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் கல்வெட்டு.
(க.வெ. எண். 112/ தொல்லியல் துறை ஆண்டறிக்கை 102/1900.)
“பொற்கோயில் கைக்கோளப் பெரும்படையர்க்
குடி”
2) திருவண்ணாமலை வட்டம்-செங்கம் ரிஷபேசுவரர் கோயில்
கல்வெட்டு. (க.வெ. எண். 118/ தொல்லியல் துறை ஆண்டறிக்கை 106/1900.)
”பொற்கொற்ற கைக்கோளரும்”
3) காஞ்சிபுரம் வட்டம்-செவ்வல்லிமேடு கயிலாசநாதர்
கோயில் கல்வெட்டு. (க.வெ. எண். 45/ தொல்லியல் துறை ஆண்டறிக்கை 42/1900.)
”இக்கோயிலில் பொற்கோயில் ஆசாரி
எழுத்து”
கோயில், கொற்றம் ஆகிய சொற்கள் அரசு, அரசர், அரண்மனை
ஆகியவற்றோடு தொடர்புடையன என்பது கருதத்தக்கது.
நமது வெள்ளலூர்க் கல்வெட்டிலும் இந்தப் ”பொற்கோயில்” அடைமொழி பெற்ற கைக்கோளர் குறிப்பிடப்படுகின்றனர். முதன்மைச்
சோழர் ஆட்சியில் வழங்கிய இச்சிறப்புப் பெயருடைய கைக்கோளர், கொங்குச் சோழர்
ஆட்சியில், கொங்குப்பகுதியிலும் கி.பி. 12-14-ஆம் நூற்றாண்டுகளில் இருந்துள்ளனர் என்பது
புலனாகிறது. சிறப்புப் படைப்பிரிவினரான கைக்கோளர் வெள்ளலூரில் இருந்துள்ளனர்
என்பது, வெள்ளலூர் ஊரின் முதன்மையை, சிறப்பைக் காட்டுகிறது எனலாம். ஏனெனில்,
வெள்ளலூர், பேரூர் நாட்டுபகுதியில் சிறப்புப் பெற்ற ஒரு வணிக நகரமாக இருந்துள்ளது;
வணிகப் பெருவழியில் அமைந்திருந்தது; உரோமானிய வணிகர்கள் வெள்ளலூர் வழியாக வணிகம்
செய்துள்ளனர்; உரோமானிய நாணயங்கள் இங்கு ஏராளமாகக் கிடைத்துள்ளன. குறு
நிலத்தலைவனான ஒரு வேளிரின் தலை நகராக இருந்துள்ளது. அதன் காரணமாகவே “வேளிலூர்” எனப் பெயர் பெற்ற இந்நகரம் “வெள்ளலூர்” எனத் திரிந்திருக்கவேண்டும் எனத் தொல்லியல் அறிஞர்கள்
கருதுகின்றனர்.
கல்வெட்டில் ”தென்னுராண்டார் திருக்குளம்
பெரியநாச்சியார் வாரம்” என வரும் தொடர், கோயிலைச்
சேர்ந்த திருக்குளத்தால் பெறப்படும் வருவாய், நாச்சியார் என்னும் அம்மனுக்கு
வேண்டிய வழிபாட்டுச் செலவினங்களுக்குப் பயன்பட்டிருக்கக் கூடும் என்பதைத் தெரிவிப்பதாகத் தொல்லியல்
அறிஞர் திரு. பூங்குன்றன் கருதுகிறார்.
தென்னூர் ஆண்டார் - தேனீசுவரர் – மாற்றம்
தென்னூர் என்னும் பழம்பெயர் கொண்ட ஊரில் கோயில்கொண்ட இறைவர் தென்னூர் ஆண்டார் என வழங்கபெற்றார்.
காலப்போக்கில், பழம்பெயர்கள் பெருஞ்சமயத்துத் தாக்கத்தினால் வடமொழிப் புனைவு
பெற்றுத் தம் பழமையை இழந்தன. எடுத்துக் காட்டாக, தென்கொங்கில் கடத்தூரில்
மருதமரத்துடனான தொடர்பால் “மருதுடையார்” என்று பெயரமைந்த இறைவன் “மருதீசர்” என்றும், பின்னர்
“அர்ஜுனேசுவரர்” என்றும் மாற்றுப்பெயரால்
அழைக்கப்பெற்றது வடமொழித் தாக்கத்தால்தான். ”அர்ஜுனம்” என்பது மருத மரத்தைக்குறிக்கும்
வடமொழிச் சொல்லாகும். இவ்வாறே, தென்னூராண்டார்,
தேனீசுவரர் ஆனார். அதற்கேற்பப் புனைவுகள் ஏற்பட்டிருக்கவேண்டும். ”தினமலர்” நாளிதழின் இணையதளமான “கோயில்கள்” என்னும் தளத்தில், ”தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால்
மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது” என்னும் செய்தி காணப்படுகிறது. இது புனைவே அன்றி வேறென்ன?
அன்னதான சிவபுரி-பெயர்க்காரணம்
நமது வெள்ளலூர்க் கல்வெட்டில் அன்னதான சிவபுரி என்னும்
பெயர் உள்ளது. இப்பெயர் வெள்ளலூருக்கு எவ்வாறமைந்தது என்பது ஆய்வுக்குரியது.
ஆனால், ”வெள்ளலூர் ஆளுடையார்” எனக் குறிப்பிடும்
கல்வெட்டு, ”அன்னதான சிவபுரியில் பொற்கோயில் கைக்கோளர்” என்றும் குறிப்பிடுவதால்,
கோயில் அமைந்திருந்த பகுதி வெள்ளலூர் என்றும், கைக்கோளர் இருந்த பகுதி (வெள்ளலூர்
நகரத்தின் வேறொரு பகுதி) அன்னதான சிவபுரி என்றும் வழங்கியிருக்கவேண்டும் எனக்
கருதலாம். தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளையவர்கள் தம்முடைய “ஊரும் பேரும்” நூலில்,
”அன்னதானத்தால் அழியாப் புகழ்
பெற்ற
வள்ளல் ஒருவரது ஞாபகச் சின்னமாக இவ்வூர் விளங்குகின்றது என்று
கூறலாகும். ”
வள்ளல் ஒருவரது ஞாபகச் சின்னமாக இவ்வூர் விளங்குகின்றது என்று
கூறலாகும். ”
என்று குறிப்பிடுகிறார். எனவே, வள்ளலூர்
என்பது வெள்ளலூர் என மருவியது என்பர்.
வெள்ளலூருக்கு இன்னொரு பெயரும் உண்டு
வெள்ளலூருக்கு இன்னொரு பெயரும் உண்டு என்பது
தெரியவந்துள்ளது. அண்மையில், இங்குள்ள கரிவரதராசப்பெருமாள் கோயிலில் திருப்பணிகள்
செய்யப்பெற்றுக் குடமுழுக்கு நடந்தேறியது. அப்போது கருவறை விமானத்தின்
ஜகதிப்படையில் கல்வெட்டுகள் புலப்பட்டன. அதில் ஒரு பகுதியில், வெள்ளலூருக்கு ”அதிராசராசச் சருப்பேதிமங்கலம்” என்று பெயர் வைத்த செய்தி காணப்படுகிறது. அதிராசராசன்
(அதிராஜராஜன்) என்பவன் வீரகேரள அரசன். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1069-1092. அவனை அடுத்து வந்த அரசர்களின்
ஆட்சிக்காலத்தில், வெள்ளலூரைப் பிராமணர் குடியிருப்பாக ஆக்கியிருக்கலாம். பிராமணர்
குடியிருப்பு “சதுர்வேதி மங்கலம்” என்று அழைக்கப்பட்டது. சில கல்வெட்டுகளில், “சருப்பேதிமங்கலம்” எனவும் பயின்றுவரும். மேற்படி கல்வெட்டின் பகுதியின் பாடம்:
1
ட்டு .......(ஸ்ரீ க்ருஷ்ண) பட்ட ஸோமையாஜியார்..............
2
க்களுக்கு .......பேரூர் நாட்டு வெள்ளலூரான அதிராசராசச்
3
சருப்பேதிமங்கலம் என்று தங்களுக்கு (வேண்டு) பிராமண(ர்)
4
.....குளத்துக்கு நான்கெல்லை ஆவது கீழ்பாற்கெல்லை
5
............................................................................................................
அதிராசராசச் சருப்பேதிமங்கலம் - குறிப்புள்ள கல்வெட்டு
காசி அப்பச்சி கோயில் கல்வெட்டின்
முழுச்செய்தி
வெள்ளலூரில் அன்னதான சிவபுரியில் இருக்கும் பொற்கோயில்
கைக்கோளர் படையினர், வெள்ளலூர் சிவன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன்
தென்னூர் ஆண்டாருக்குத் திருக்குளம் அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதாகவும்,
குளத்தின் வருவாய் அம்மன் வழிபாட்டுச் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படவேண்டும்
எனக் கல்வெட்டு எழுதிவைத்துள்ளனர் என்பதாகவும் கொள்ளலாம். இந்தத் தன்மத்தைக்
கோயிலின் நிருவாகத்தில் இருக்கும் பந்மாகேசுவரர் கண்காணித்துப் பாதுகாக்கக்
கடமைப்பட்டவர் ஆவார் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.
முடிவுரை
வெள்ளலூர், பழங்காலத்தில் பன்முகச் சிறப்புகளைப் பெற்ற
ஒரு நகரமாக இருந்துள்ளமை புலப்படுகிறது. கோவை என்னும் கோவன்புத்தூர் உருவாவதற்கு
முன்னரே கிரேக்க வணிகர்கள் வந்து போன நகரமாக இருந்துள்ளது. கி.பி. முதல்
நூற்றாண்டளவிலேயே வெளிநாட்டு வணிகத்தொடர்புடையதாய் விளங்கிற்று என அறிகிறோம்.
இங்கு, பிராமணச் சதுர்வேதி மங்கலம் ஒன்று இருந்துள்ளது என்பதையும் அறிகிறோம்.
----------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :
9444939156.
மிக அருமையான பதிவு
பதிலளிநீக்குமிக்க நன்றி
பதிலளிநீக்குசேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் இடங்கணசாலை பேரூராட்சி புகழ்பெற்ற கஞ்சமலை சித்தர் கோவில் சித்தேசுவரர் சுவாமி கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலை கட்டியவர் கெட்டி முதலியாரால் கட்டப்பட்டது.எனினும் இக்கோவில் கல்வெட்டு ஆராய்ந்தால் தகவல் கிடைக்கும். மேலும் காடையாம்பட்டி அழகராய பெருமாள் கோவில்,மேலும் காடையாம்பட்டி சந்தைபேட்டை பகுதியில் வணிக வளாகம் பின்புறம் ஒரு நடுகல் உள்ளது இதில் இரு பெண்களின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நன்றி
பதிலளிநீக்குஇதில் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எனக்கு கிடைத்த தகவல் கூறினேன். நேரடியாக உதவ இயலாது. நன்றி.
பதிலளிநீக்கு