மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 1 டிசம்பர், 2017


தாராபுரம்-கோட்டையும் கோட்டைக் கோயிலும்
ஒரு தொல்லியல் பார்வை

முன்னுரை
      கோவை வாணவராயர் அறக்கட்டளையினர் நடத்திவரும் வரலாற்றுச் சுற்றுலா நிகழ்ச்சியாகக் கடந்த 28-05-2017 அன்று தாராபுரம் பகுதியில் உள்ள தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புள்ள இடங்களைக் காணச் சென்றிருந்தோம். அதுபற்றிய ஒரு பகிர்வு இங்கே.

தாராபுரம்
தாராபுரம். கொங்குநாட்டின் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஒரு பழமையான ஊர். கோயமுத்தூர் உருவாவதற்கு முன்புவரை தாராபுரம்தான் தலைநகராயிருந்தது. தாராபுரத்தின் பழமையைச் சோழ அரசன் முதலாம் பராந்தகனோடு தொடர்பு படுத்தலாம். ஏனெனில், முதலாம் பராந்தகன் பெயரால் தாராபுரத்துக்குப் பராந்தகபுரம் என்றொரு பெயர் இருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளதாகத் தொல்லியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர், இவ்வூருக்கு இராஜராஜபுரம் என்ற பெயர் வழங்கியது. இடையில், இவ்வூருக்கு இராஜமகேந்திரபுரம் என்ற பெயர் இருந்துள்ளது என அறிஞர் வைத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார். அதற்கான கல்வெட்டுச் சான்றும் உள்ளதென அவர் கூறியுள்ளார். இப்போது கல்வெட்டு இல்லை. இவற்றுக்கிடையில், தாராபுரத்துக்கு விலாடபுரம், விலாடபுரி ஆகிய பெயர்களும் இருந்ததாகத் தொன்மப்புனைவுகள் (Myth) கூறுகின்றன.

கங்கர்கள் காலத்தில் தாராபுரம்
கி.பி. ஆறாம் நூற்றாண்டு காலகட்டத்தில், கங்கர்கள் கொங்குநாட்டை ஆட்சி செய்தபோது, கங்கரின் தலைநகராக ஸ்கந்தபுரம் என்ற ஊர் இருந்தது. இது பற்றிக் கொங்குமண்டல சதகத்தில் குறிப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த ஸ்கந்தபுரம் எந்த ஊர் என்று தெரியாத நிலையில் பல ஊகங்கள் உலவின. தாராபுரமும் ஸ்கந்தபுரமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. டணாயக்கன் கோட்டை, திருமுருகன் பூண்டி ஆகிய ஊர்களும் இவ்வாறே கருதப்பட்டன.

தாராபுரம்-ஓர் அடிக்கீழ்தளம்
தாராபுரத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. இடைக்காலத்தில், இவ்வூர் ஓர் அடிக்கீழ்தளமாக இருந்துள்ளது. வணிகர்கள் பெருவழியில் பயணம் சென்றபோது அவர்களின் பாதுகாப்புக்காகப் படைகள் தங்கியிருந்த இடமே அடிக்கீழ்தளம் என்றழைக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வெட்டுச் சான்று இருந்தபோதிலும், இவ்வூர்க் கல்வெட்டுகளில் குறிப்பு இல்லை. திருமுருகன்பூண்டிக் கோயில் கல்வெட்டிலும், பொன்னிவாடிக் கோயில் கல்வெட்டிலும் சான்றுகள் உள்ளன. பொன்னிவாடிக் கல்வெட்டு கீழ்வருமாறு:

1 ......ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ரா
2  சேன்திரதேவன் யாண்டு பதின
3  ஞ்சாவது இராசராசபுரத்து அடிக்கீழ்த்தள
4  த்து விலைய ..........

-          க.வெ. எண்; 146-இந்தியக் கல்வெட்டு                
ஆண்டறிக்கை 1967-68.

இவ்வூர் வணிகர்கள் பொன்னிவாடி, கொழிஞ்சிவாடி ஆகிய ஊர்க் கோவில்களுக்குக் கொடையளித்த செய்திகள் உள்ளன. இச்செய்திகளின் அடிப்படையில், தாராபுரம், வணிகப் பெருவழியொன்றில் அமைந்திருந்தமையும், வணிகச் சிறப்பு பெற்ற நகரமாய் இருந்தமையும் பெறப்படுகின்றன. இடைக்காலத்தில், கொங்குநாட்டில் இருந்த ஒன்பது மாநகர்களில் தாராபுரமும் ஒன்று என்பது இவ்வூரின் மற்றொரு சிறப்பு.

கோட்டைமேடும் உத்தரவீரராகவப் பெருமாள் கோயிலும்
தாராபுரத்தில் கோட்டைமேடு என்னும் இடத்தில் அமைந்திருந்த உத்தர வீரராகவப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். கோயிலுக்குள்ளேயே ஒரு பழமையான கருவறையோடு கூடிய கோயில் அமைப்பு உள்ளது. அதில் ஆதி கேசவப்பெருமாள் என்னும் இறைவர் இருக்கிறார். உத்தர வீரராகவப் பெருமாள் கோயிலைப் பொறுத்தவரை இந்த ஆதிகேசவப் பெருமாள்தான் மூலவர். இக்கோயில் கட்டிட அமைப்பு பழமையானது. கோட்டை பற்றிய செய்திகள் இடைக்காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. கல்வெட்டுகளில் இக்கோயிலின் பெயர் உத்தமராகவப் பெருமாள் என்னும் இறைவன் பெயரால் சுட்டப்பெறுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் இரண்டு மட்டுமே இக்கோயிலைச் சார்ந்தவை. மற்றவை, வேறு எங்கோ இருந்தவை; இங்கு கொணர்ந்து பதிக்கப்பட்டவை. கல்வெட்டுத் துறை இவற்றைப் பதிவு செய்திருந்தபோதிலும், இவை முன்பு எங்கிருந்தன என்ற குறிப்பைப் பதிக்கவில்லை.

           உத்தர வீரராகவபெருமாள் கோயில்-முகப்பு

                   ஆதிகேசவப்பெருமாள்-பழங்கோயிலின் உட்புறம்


                   ஆதிகேசவப்பெருமாள்-பழங்கோயிலின் சுவர்ப்பகுதி

                   ஆதிகேசவப்பெருமாள்-பழங்கோயிலின் சுவர்க்கோட்டம்


கல்வெட்டுகள்
கோயில் திருப்பணிகளின்போது சுவர்களில் பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. ஆங்காங்கே இடைச் செருகல்களாகச் சில துண்டுக்கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை, இக்கோயிலுக்குரியன அல்ல என்பது இக்கல்வெட்டுகளின் பாடங்களிலிருந்து (வாசகம்) தெரியவருகிறது. ஒரு கல்வெட்டில், தாராபுரத்துக்குப் பெருந்தொலைவில் உள்ள உடுமலைப் பகுதியில் அமைந்திருக்கும் தளிஞ்சியைச் சேர்ந்த வணிகர்கள் கொடை கொடுத்த செய்தி காணப்படுகிறது. இதே போன்ற பாடங்கள் கொண்ட கல்வெட்டு குண்டடம் கோயிலிலும் இருந்துள்ளது. ஆனால், தற்போது அக்கோயிலில் கல்வெட்டுகள் எவையுமில்லை. எனவே, குண்டடம் கோயில் கல்வெட்டு இக்கோயிலில் வைக்கப்பட்டிருக்கலாம். கரைவழி நாட்டு (தற்போதைய உடுமலைப்பகுதி) ஏழூர் என்னும் ஓர் ஊர் அழிந்துபோனதாகக் குறிப்புகள் உள்ளன. அவ்வூரைபற்றிய குறிப்பு இக்கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. இக்கோயிலுக்குரியவையாக இரண்டு கல்வெட்டுகளே உள்ளன என்று முன்னரே குறிப்பிட்டோம். அவற்றில் ஒன்று, விஜயநகர அரசர் காலத்தைச் சேர்ந்தது. அதில், இக்கோயிலுக்குக் கொடையாகக் கொழுமம்-சங்கிராம நல்லூரில் நிலம் அளிக்கப்பட்டுள்ள செய்தி உள்ளது. மற்றொரு கல்வெட்டு, வீர நஞ்சராய உடையார் காலத்தது. அதில், இங்கு ஒரு தெப்பக்குளம் தானமாகக் கொடுத்த செய்தி உள்ளது. இவ்விரு கல்வெட்டுகளின் அடிப்படையில், இக்கோயிலும், கோட்டையும் விஜயநகரர்/நாயக்கர் காலத்தில் உருவானவை எனக்கருதலாம். வேற்றிடங்களுக்குரிய கல்வெட்டுகள் இங்கு காணப்படுவதால், அவ்வாறான வேற்றிடங்களிலிருந்து கொணர்ந்த கற்களைக் கொண்டு கோயிலும் கோட்டையும் கட்டப்பட்டன என்று கருத இடம் உண்டு.

மெக்கன்சி, புக்கானன் ஆங்கிலேயர்காலத்துக் குறிப்புகள்
இக்கோயிலைப் பற்றி மெக்கன்சி குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1800-இல் புக்கானன் இங்கு வந்துள்ளார். அவர் தம் பயணக்குறிப்பில் தாராபுரம் கோட்டையைப் பற்றி எழுதியுள்ளார். கெஜட்டியர் குறிப்பில், ஐதர் அலி இக்கோட்டையை அழித்ததாகக் குறிப்புள்ளது. கி.பி. 1804-இல் மீண்டும் இங்கு கோட்டை ஹுக்ளி என்னும் ஆங்கிலேய ஆட்சியாளரால் கட்டப்பட்டது. அதன்பிறகே, தாராபுரம் கோவை மாவட்டத்தின் தலைநகரானது. 1828-ஆம் ஆண்டு வரை கோவையில் நீதிமன்றம் இருக்கவில்லை. கோவைக்கான நீதிமன்றம் தாராபுரத்தில்தான் இயங்கியது. கொங்குநாட்டிலேயே முதன்முதலில் கத்தோலிக்கர் கோயில் கி.பி. 1609-இல் இவ்வூரில்தான் கட்டப்பெற்றது. மதுரையை மையமாகக் கொண்டுதான் கிறித்தவம் கொங்கு நாட்டில் பரவியது என்று ஆய்வாளர்கள்  கருதுகின்றனர். இங்கு முதன்முதலில் கத்தோலிக்கக் கோயில் கட்டப்பட்ட் செய்தி மேற்படி கருத்துக்கு மாற்றாக விளங்குவது ஆய்வுக்குரியது. கைபீது என்னும் ஆவணங்களில் தாராபுரம், துக்கடி தாராபுரம் என்று குறிக்கப்பெற்றுள்ளது  துக்கடி என்பது கோட்டையுள்ள இடத்தைக் குறிக்கும்.

சமணத் தடயங்கள்-ஆஞ்சநேயர் வழிபாடு
இங்குள்ள கருப்பராயன் கோயிலுக்கருகில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் இருந்துள்ளனவாகக் கூறப்படுகிறது. தாராபுரத்தில், நவ ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன. விஜய நகரர் காலத்தில்தான் தமிழகத்தில் ஆஞ்சநேயர் வழிபாடு வந்துள்ளது.

தாராபுரம்-பெயர்க்காரணம்
தாராபுரத்தின் மிகப் பழமையான பெயர் பராந்தகபுரம் என்பது. இராஜராஜபுரம் என்பது இடைக்காலக் கல்வெட்டுகளில் காணப்படும் சோழர்காலப்பெயர். இப்பெயர் நாளடைவில் தாராபுரம் என்று மருவியது. இதே இராஜராஜபுரம் என்னும் பெயர் தஞ்சை மாவட்டத்தில் தாராசுரம் என மருவியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மற்றொரு இராஜராஜபுரம், ராதாபுரம் என்று மருவியுள்ளது. வேறு வேறு பகுதிகளில் சிறு மாற்றங்களுடன் பெயர் மருவியதற்கு அவ்வப்பகுதிகளின் மக்களின் பேச்சு மொழியில் நிகழும் வேறுபாடே காரணம். தாராபுரத்துக்கருகில் உள்ள தில்லாபுரி என்னும் ஒரு சிற்றூரில் தில்லாபுரியம்மன் கோயில் வளாகத்தில் இருந்த ஒரு பிற்காலக் கல்வெட்டில் (கி.பி. 16-ஆம் நூற்றாண்டு),
         
         ...................... கொங்கு வஞ்சி விலாட புர
             ம் ராசராசபுரம்  விலாதபுரம் நரையனூர் னா
             டு ..............

என்று குறிக்கப்படுகிறது. தாராபுரத்துக்கு வஞ்சி என்னும் பெயரும் இருந்துள்ளது என்பதை அறிகிறோம். கரூருக்கும் வஞ்சி என்னும் பெயர் வழங்கியுள்ளது. கொங்கு நாட்டைச் சேரர் கைப்பற்றியபோது சேரநாட்டு வஞ்சியின் பெயரை அடியொற்றிக் கரூருக்கும் வஞ்சி என்னும் அடைமொழியைத் தந்துள்ளனர். கருவூரான வஞ்சி”  என்பது வழக்கு.

கோயிலில் உள்ள தகவல் பலகைச் செய்தி (தலபுராணம்)
கொங்கு நாட்டின் 24 நாடுகளில் ஒன்றான நரையனூர் நாடு கொங்குநாட்டுக்கே தலைநகர். புராண காலத்தில் பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது விராடபுரம் என்னும் தாராபுரம். சோழர், பண்டியர், போசளர் (ஹொய்சளர்), விஜய நகர அரசர், மதுரை நாயக்கர் ஆகியோர் தாராபுரத்தை ஆட்சி செய்துள்ளனர். கொங்கு நாட்டு அரசராக ஆட்சி ஏற்பவர்கள் இக்கோவிலில் முழுக்கிட்ட (அபிஷேகம்) பிறகே ஆட்சியைத் தொடங்குவார்கள். கடத்தூர், கொங்கூர், கொழுமம் ஆகிய ஊர்களில் இகோயிலுக்குக் கொடை நிலங்கள் இருந்துள்ளன. அந்நியர் படையெடுப்பால் கோயில் முழுதும் சிதைந்தபோது, கி.பி. 1387-இல் விசய நகர இரண்டாம் அரசர் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றைக் கட்டியுள்ளார். கி.பி. 1321-இல் இக்கோயில் சமணப்பள்ளியாக இருந்ததற்குச் சான்று உள்ளதென வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கி.பி. 2-ஆம் ஆண்டில் (கி.பி. 2-ஆம் நூற்றாண்டில்?)  கங்கர் என்ற இரட்டையர் கொங்கு வஞ்சி விராடபுரத்தை ஆட்சி செய்துள்ளனர். கங்கர் ஆட்சி செய்ததால் கந்தபுரம் என்று பெயர்பெற்றது. (ஆசிரியர் குறிப்பு:  தலபுராணம் என்பது, செவிவழித் தொன்மப் புனைவுகளை உள்ளடக்கியது. சில புராணங்களில் வரலாற்றுண்மைகள் இப்புனைவுக் கதைகளுள் மறைந்து கிடக்கவும் வாய்ப்புள்ளது. தக்க சான்றுகளாலும்,  ஏரணமுறைகளாலும் (Logical) மெய்யான வரலாற்றுச் செய்திகள் வெளிப்படக்கூடும்.)

துண்டுக் கல்வெட்டுகள்
கல்வெட்டு-1
பாடம் :
1 (ம)ங்கலத்து ஸபையோம் பெரி
2 ..ஸ உள்ளிட்டாற்கு இத்திரு ந

                            கல்வெட்டு-1

குறிப்பு: ஒரு சதுர்வேதிமங்கலத்தின் சபையாரைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

கல்வெட்டு-2
பாடம் :
1 (நா)ட்டு ப்ரஹ்மதேசம் ஸ்ரீ ..ஜா.....
2 (கோ)யில் சிவப்ராஹ்மணர்களில் திரு(க்கு)..

                            கல்வெட்டு-2

குறிப்பு: ஒரு பிரமதேயம் (பிராமணர்க்குக் கொடையாகத் தந்த ஊர்) குறிப்பிடப்படுகிறது.

கல்வெட்டு-3
பாடம் :
1 (நி)லத்துக்கு கிழக்
2 இ னான்கு எல்லை
3 (கு)ம் இவர்கள் புகா

                             கல்வெட்டு-3

குறிப்பு: நிலத்தின் நான்கு எல்லை பற்றிய குறிப்பு, ஒரு நிலக்கொடையைக் குறிக்கும்.

கல்வெட்டு-4
பாடம் :
1 ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்கரவத்தி
2 னார்க்கு பொக்கலூர்க்கால் (நா)
3 நாள்படிக்கும் திருபணிக்கும்
4 .(படம்) நத்தவரி மண்டலமுத...

                            கல்வெட்டு-4

குறிப்பு: திரிபுவனச்சக்கரவத்தி என்னும் பெயரில் தாராபுரம் பகுதியில் உள்ள கல்வெட்டுகள் கொங்குச் சோழர்கள் வீரராசேந்திரனையும், குலோத்துங்கனையும் குறிக்கும். பொங்கலூர்க்கால் நாடு குறிக்கப்பெறுகிறது. கோயிலின் நாள் (அமுது) படிக்கும் திருப்பணிகளுக்கும் கொடையாகச் சில வரிகளினின்றும் கிடைக்கப்பெறும் வருமானம் அளிக்கப்படுகிறது. நத்தவரி, மண்டலமுதல்மைப்பேறு என்பவை அந்த வரிகளாகும்.

கல்வெட்டு-5
பாடம் :
1 ...யாழ்வியான பிள்ளை
2 (ய)க்கி மூன்று சலாகை அச்சு
3 ..கம் செல்வதாகவு இ த

                            கல்வெட்டு-5

குறிப்பு : கொடை ஒன்று மூன்று காசு வடிவில் கொடுக்கப்படுகிறது. அக்காசினின்றும் பெறப்படும் பொலிசை (வட்டி) கொடையை நிறைவேற்றப் பயன்படுகிறது. 11-13 நூற்றாண்டுகளில் புழக்கத்திலிருந்த ஸ்ரீயக்கி சலாகை அச்சு என்னும் நாணயம் இங்கே குறிப்பிடப்பெறுகிறது.

கல்வெட்டு-6
பாடம் :
1 ..ன நரையனூர் நாட்டுப்பிராந்த(க)
2 .ப்புக்கும் திருமடை விளாகத்துக்கும்
3 .தென்பாற்கெல்லை கீழை வாசல் (போ)
4 (அ)முதுபடி சாத்துப்படி பலபடி நிமந்த..

                            கல்வெட்டு-6

குறிப்பு : நரையனூர் நாட்டுப் பிராந்தக(புரம்) குறிக்கப்படுகிறது. இப்பெயர் இராசராசபுரத்தைக் (தாராபுரம்) குறிப்பதாகும். கோயிலுக்கு அமுதுபடி, சாத்துப்படி ஆகியவற்றுக்காக நிலக்கொடை அளிக்கப்படுகிறது.

      மேற்படி துண்டுக்கலவெட்டுகளின் வாயிலாகத் தாராபுரத்துக் கோட்டைக்கோயிலைப் பற்றிய செய்திகள் தெளிவாகவில்லை. கொங்குச் சோழன் வீரராசேந்திரன் கல்வெட்டுகள் இரண்டு, கொங்குப்பாண்டியன் வீரபாண்டியன் கல்வெட்டு ஒன்று, விசயநகர அரசர் கல்வெட்டு ஒன்று, நாயக்கர் காலக் கல்வெட்டு ஒன்று, மைசூர் உடையார் காலக் கல்வெட்டு ஒன்று எனத் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட ஆறு கல்வெட்டுகளும் தற்போது கோயிலில் காணப்படவில்லை. ஒற்றைத் துண்டுக்கற்களில் காணப்படும் கல்வெட்டெழுத்துகள் மட்டுமே உள்ளன. பெரும்பாலான கோயில்களில், ஆங்கிலேயர் காலத்திலும், பின்னர் 20-ஆம் நூற்றாண்டின் முதற்பாதிவரையிலும் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகளெல்லாம் காலப்போக்கில் கோயில்கள் புதுப்பிக்கப் படும்போது முறையாகக் காக்கப்படாமல் அழிந்து போயின என்பது அவலம்.

பதினாறு கால் மண்டபம்
      கோட்டைக் கோயிலான உத்தர வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு மிக அருகிலேயே ஒரு பழங்கால மண்டபம் காணப்படுகிறது. சுற்றிலும் வேறு கட்டுமானங்கள் எவையுமின்றித் தனித்து நிற்கும் இம்மண்டபம் நாயக்கர் காலப் பாணியில் பதினாறு கால்கள் கொண்டு அமைந்துள்ளது. தூண்கள் சற்றே சாயத்தொடங்கியுள்ளன. மேற்கூரையின் கற்கள் சற்றுக் கலைந்துபோயுள்ளன. மேற்கூரையில் செடிகளும் கற்றாழையும் முளைத்து, இன்னும் சற்றுக்காலத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்படும் இந்த மண்டபத்தைப் பற்றிச் சரியான செய்திகள் இல்லை. மண்டபத்தின் அதிட்டானப்பகுதியின் கட்டுமானக் கற்கள் கட்டிலிருந்து விலகி, ஜகதி, உருள் குமுதம் ஆகிய பகுதிகளின் துண்டுக் கற்கள் சிதறுண்டு கிடந்தன. அவ்வாறான  துண்டுக் கற்களில் எழுத்துகள் காணப்படவே, கல்வெட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சியோடு சுற்றிச் சுற்றி வந்து ஆய்ந்து பார்த்தனர். மண்ணோடு கிடந்தமையால் எழுத்துகள் முதல் பார்வையில் படிக்க இயலவில்லை. ஆர்வலர் ஒருவர் அருகிலுள்ள வீட்டிலிருந்து கடலை மாவு வாங்கிவந்து கற்களின் மீது தேய்த்துப் பார்க்கையில் எழுத்துகள் படிக்கும் வகையில் தெரிந்தன.

             பதினாறுகால் மண்டபம் சில தோற்றங்கள்




மண்டபக் கல்வெட்டுகள்
கல்வெட்டு-1
பாடம் :
ன் ணாயக்கர் நரைனூர் நாட்டு ப்ரஹ்மதேசம் ஸ்ரீ
மறு நிலத்திலே பஹுதான்ய வருஷத்து முதல்

                                                             கல்வெட்டு-1

கல்வெட்டு-2
பாடம் :
காரியம் நரையனூர் நாட்டு ப்ரஹ்மதேசம் ஸ்ரீ உடை
ம் நெல்லும் போன வழியும் பல உபாதியும் ஊ
தோம் இ னிலம் இரண்டு மாவுக்கும் வரும் மே
யே பிடிபாடாகக் கொண்டு செம்பிலும் சிலை

                                                             கல்வெட்டு-2

கல்வெட்டு-3
பாடம் :
ஆதிகேசவப் பெருமாளுக்கு தான.. அடிமையு(ஞ்)
ம் சுவடியிலும் கழித்துத் தந்தோம் இதற்க்கு சந்த்ரா

                                                      கல்வெட்டு-3

கல்வெட்டு-4
பாடம் :
புறத்து அனந்த ........(பட்டருக்கு)
நாள் முதலாக இ நிலத்துக்கு வரும் நி செயிப்பான் (இம்)
தாம் இம்மரியாதிக்கு நம் சுவடியிலும் கழித்து
றயிலியாக தன்தோம் யி மரியாதி நான் யிவ(ரு)

                           கல்வெட்டு-4 

குறிப்பு: மேலேயுள்ள நான்கு கல்வெட்டுகளின் பாடங்களை ஆய்ந்து பார்க்கையில், இக்கல்வெட்டுகள் இம்மண்டபத்துக்கு உரியனவல்ல என்பது புலனாகிறது. நரையனூர் நாட்டு ப்ரஹ்மதேசம் ஸ்ரீ உடை... என்னும் தொடர், நரையனூ நாட்டு பிரமதேசம் ஸ்ரீ உடையபிராட்டிச் சதுர்வேதி மங்கலம் என்னும் கொழிஞ்சிவாடியைக் குறிக்கும். இது கொழிஞ்சிவாடி சொக்கநாதர் கோயில் கல்வெட்டுகளின் வாயிலாக அறியப்படுகிறது. எனவே, இக்கல்வெட்டுகள் கொழிஞ்சிவாடிக் கோயிலுக்குரியன எனக் கருதலாம். மூன்றாம் கல்வெட்டில், கோட்டைக் கோயிலின் மூலவரான ஆதிகேசவப்பெருமாள் பெயர் வருவதால் இக்கல்வெட்டு ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடை பற்றியது எனலாம். இக்கல்வெட்டுகளின் எழுத்தமைதி கொண்டு இவை கி.பி. 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தன எனக் கருதலாம். இக்கல்வெட்டுகளில் நிலக்கொடை பற்றிய செய்தி வருகிறது. இறையிலியாக (வரி நீக்கம்) நிலம் அளிக்கப்படுகிறது.



நன்றி : செய்திகள் உதவி: முனைவர் இரா.ஜெகதீசன் அவர்கள்,
        வாணவராயர் அறக்கட்டளை, கோவை.

------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக