அந்தியூர்ப் பகுதியில் தொல்லியல்
தடயங்கள்
முன்னுரை
அண்மையில் ஜூன் 18-ஆம் நாள், திருப்பூர் மாவட்டம்
அந்தியூர்ப் பகுதியில் தொல்லியல் தடயங்கள் சிலவற்றைக் காண ஒரு பயணம் மேற்கொண்டோம்.
நண்பர் தென்கொங்கு சதாசிவம் தாம் பார்த்திருந்த ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டைப் படிக்கும்
முயற்சியாக என்னை அழைத்திருந்தார். கோவையிலிருந்து அவரும் நானும் புறப்பட்டு
சத்தியமங்கலத்தில் வரலாற்று ஆய்வாளரான திரு. இராமசாமி அவர்களையும், வரலாற்று
ஆர்வலர் ஃபவுசியா அவர்களையும் இணைத்துக்கொண்டு அந்தியூர் சென்றோம். அந்தியூரை
அடுத்துள்ள தாமரைக்கரை என்னும் ஊரில் மேலும் ஒரு வரலாற்று ஆர்வலரான நந்தீசுவரனும்
அவரது நண்பர் மாதேசுவரனும் எங்களுடன் இணைந்துகொண்டனர். அப்பயணத்தின் பகிர்வு
இங்கே.
மலைப்பாதையில் பயணம்
அந்தியூர்-பர்கூர் சாலையில் தொடங்கிய பயணம் சிறிது
நேரம் வரை மலைப்பாதையில் நீடித்தது. மலைப்பாதைக்கே உரிய வளைவுச் சாலையும்,
இருபுறமும் பசுமைக் காடும், சத்தியமங்கலம் பகுதியின் பச்சை மடிப்புகளுடன் தெரிந்த மலை
அடுக்குகளும் கண்ணுக்கும் உள்ளத்துக்கும் அழகு சேர்த்தன. எந்நேரமும் எதிர்கொள்ள
வேண்டிவரும் யானைகளின் உலா ஒரு புறம் அச்சம் சேர்த்தது. இருப்பினும் அப்பகுதி
மக்கள், இந்த நாள்களில் பகலில் இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லை என
உறுதியாகக் கூறவே அச்சம் ஒதுக்கிப் பயணம் தொடர்ந்தோம். அக்கூற்று மெய்யாயிற்று. போகும்
வழியிலும் திரும்பும் வழியிலும் யானைகளை நாங்கள் சந்திக்கவேயில்லை.
வழியில் பசுமை
வறட்டுப்பளையம் அணை
போகும் வழியில், வறட்டுப்பாளையம் என்னும் பகுதியில் ஒரு
சிறிய அழகான அணையினைக் காண நேர்ந்தது. இது போன்ற பயணங்களின்போதுதான் சிறு சிறு
அணைகளின் இருப்பை அறியும் நிலை ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள்,
நீர்ப்பிடிப்புப் பகுதிகள், நீர்க்கால்கள் போன்றவற்றைப் பேணும்-மேம்படுத்தும் வழிவகைகளை
நீர்மேலாண்மையில் வல்ல அறிஞர்கள், பொறியாளர்கள் ஆகியோரின் துணைகொண்டு அரசு
என்னவெல்லாம் செய்ய இயலும் எனவொரு சிந்தனையும் எழுந்தது.
வறட்டுப்பாளையம் அணை சில காட்சிகள்
தாமரைக்கரை
வழியில் தாமரைக்கரை என்றொரு ஊர். பெயருக்கேற்றவாறு ஒரு
தாமரைக் குளம் இருந்தது. இலைகளும் பூக்களும் நீர்ப்பரப்பில் படர்ந்து அழகாகக்
காட்சியளித்தது.
தாமரைக்குளம்
மூங்கில் மரங்கள்
தாமரைக்கரைக்கு அப்பால், பாதை முழுதும் இரு
புறங்களிலும் ஓங்கி உயர்ந்த மூங்கில் மரங்கள் கண்கொள்ளாக் காட்சி.
மூங்கில் மரங்கள்
தேவர்மலை பந்தீசுவரர் கோயில்
தேவர் மலை என்னும் ஊரில் உள்ள பந்தீசுவரர் கோயிலில்
இருக்கும் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டைக் காணும் இலக்கில், தேவர் மலையை அடைந்து
கோயிலுக்குச் சென்றோம். ஊர், மலையின் மேல் அமைந்திருக்கவில்லை. சமவெளிப்பகுதிதான்.
கோயில், பெரியதொரு பரப்புடன் சுற்றுச் சுவருடன் பழமையானதொரு தோற்றத்துடன் கூடிய
கற்றளியாகக் காட்சியளித்தது. திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. கருவறையும்
அதனையடுத்து அர்த்தமண்டபமும் இருந்தன. அர்த்தமண்டபத்திலும் ஒரு வாயில்
காணப்பட்டது. ஜகதி, முப்பட்டைக்குமுதம் ஆகிய உறுப்புகளுடன் எளிய அதிட்டானத்தைக்
கொண்டிருந்தது. ”கருடகம்பம்” என அழைக்கப்படும் ஒரு விளக்குக்
கம்பமும், சிறியதொரு நந்தி மண்டபமும் உள்ளன. நந்தி மண்டபத்தில் இரு நந்திச்
சிற்பங்கள் உள்ளன. அவ்ற்றில் ஒன்று பழமைத் தோற்றத்தில் இருந்தது. அர்த்தமண்டபச்
சுவரில் தேவ கோட்டம் ஒன்றும் காணப்பட்டது. தேவகோட்டத்தின் இரு புறங்களிலும்
பாம்புப் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மற்றொரு சுவரில் ஆமைச் சிற்பம் உள்ளது.
மதிற்சுவரின் ஒரு பகுதியில் உச்சியில் பழமையான திருவாசி போன்ற அமைப்பில்
காணப்படும் வட்டக் கட்டுமானம் புலப்பட்டது.
நந்திமண்டபத்தில் இரு நந்திகள்
சுவரில் பாம்புப் புடைப்புச் சிற்பம்
சுவரில் ஆமைச் சிற்பம்
கருவறைத் தோற்றம்
இறைவன்- பந்தீசுவரர்
கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் பந்தீசுவரர். இலிங்கத்திருமேனி.
இப்பெயர் சற்றுப் புதுமையாக இருந்தது. இப்பகுதி தமிழகத்தின் பகுதியாக இருப்பினும்
கருநாடகத்துடன் மிகுந்த தொடர்புடைய ஒரு பகுதி. கன்னட மொழி பேசும் மக்கள் போசளர்
(ஹொய்சளர்), மைசூர் உடையார் ஆகிய
அரசர்களின் காலத்தில் புலம் பெயர்ந்தவர்களின் வழியினர் இருக்கும் பகுதியாகத்
தெரிகிறது. கோயிலில் நாம் சந்தித்தவர்கள் தமிழ் கலந்த கன்னடம் பேசினர். கோயில்,
மேற்சொன்ன அரசர்கள் காலத்தில் கட்டப்பெற்றிருக்கக் கூடும். கல்வெட்டுச்
சான்றுகளைத் தேடவேண்டும்.
வீரபத்திரர் வழிபாடு
இலிங்கத்திருமேனி இருக்கும் கருவறைக்கு வெளியே,
அர்த்தமண்டபத்தில் வீரபத்திரரின் சிற்பம் வழிபாட்டில் உள்ளது. வீரபத்திரர்
வழிபாடு, கருநாடகத்தில் விசயநகரப் பேரரசின் காலத்திலிருந்து சிறப்பானதொரு இடத்தைப்
பெற்றிருந்தது. வீரபத்திரருக்குத் தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டிருப்பதைக்
காண்கிறோம். அவ்வகையில் இக்கோயிலிலும் வீரபத்திரர் வழிபாடு இருப்பதால் கன்னட
அரசர்கள் காலத்தில் இக்கோயில் கட்டப்பெற்றிருக்கலாம் என்னும் கருத்து
வலுப்பெறுகிறது. சத்தியமங்கலம் பகுதி கருநாடகத் தாக்கம் உள்ள பகுதி என்பதில்
ஐயமில்லை. இரு கைகளுடன் காணப்படும் வீரபத்திரரின் வலக்கையில் தடித்த பெரிய வாளும்,
இடக்கையில் பெரிய வில்லும் உள்ளன. தலையில் இருப்பது கரண்ட மகுடம் எனத்
தோன்றுகிறது. மார்புப் பகுதி, கை,கால்கள் ஆகிய பகுதிகளில் நிறைய அணிகலன்கள் உள்ளன.
சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ள அணிகளுக்குமேலே, மார்பில் ஆரங்களும், கால்களில்
தண்டைகளும் அணிவித்திருக்கிறார்கள். கீழே பீடம், மேலே திருவாசி என முழு அளவில்
வேலைப்பாட்டுடன் கற்சிற்பம் அழகாக அமைந்துள்ளது. அருகிலேயே, செப்புத்த்கட்டினால் புடைப்புருவமாகச் செய்ய்ப்பட்ட
வீரபத்திரர் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வீரபத்திரருக்கு இரு
கைகளுக்குமேல் காட்டப்பெற்றுள்ளன. இந்தச் செப்புருவங்களுக்கு அருகில் ஓர் ஆயுதத்தை
வைத்திருக்கிறார்கள். ஒரு நீண்ட கோலுடன் ஒரு வளைதடியை (Boomerang) இணைத்ததுபோன்ற தோற்றத்தில் இந்த
ஆயுதம் அமைந்துள்ளது.
வீரபத்திரர்
வீரபத்திரர்-செப்புருவம்- வளைதடி ஆயுதத்துடன்
வீரபத்திரரும் “சதி”யும்
தட்சன் தான் நடத்திய அசுவமேத வேள்விக்குச் சிவனை
அழையாதிருந்தும் சக்தி, வேள்விக்குச் சென்றதும், தட்சன் சக்தியை
இழிவுபடுத்தியதும், அதன் விளைவாகச் சக்தி தன்னுள்ளிருக்கும் ”யோகாக்னி” என்னும் நெருப்பில் தன்னை
மாய்த்துக் கொண்டதும், சிவன் சீற்றமுற்று தட்சயாகத்தை அழிப்பதற்காக வீரபத்திரரை உருவாக்கியதும்
பெரும்பாலும் அனைவரும் அறிந்த தொன்மக்கதை. இக்கதையில் தட்சனின் மகளான சக்தியைச்
சதி என்னும் பெயரால் குறிப்பது கருதத்தக்கது. சதி தன்னைத் தீயில் மாய்த்துக்கொள்வதாலேயே
உடன் கட்டையேறும் (தீப்பாய்ந்து மாயும்) சமுதாய வழக்கத்துக்குச் “சதி” என்னும் பெயர் அமைந்தது போலும். வீரபத்திரர் முக்கண்ணுடைய
சீற்றக்கடவுள். மீசையுடன் நிறைய அணிகலன்களுடன் காணப்படும் தோற்றமுள்ள்வர்.
ஹம்பியில் அகழ்வைப்பகத்தில் - வீரபத்திரர் சிலை
கல்வெட்டும் செய்தியும்
கோயிலின் ஒரு பக்கச் சுவரின் தேவகோட்டத்துக்குக் கீழே
தரையில் ஒரு பலகைக் கல்லில் கல்வெட்டு காணப்படுகிறது. தரைக்குமேல் ஆறு வரிகள்
தெரியும்படியுள்ள ஒரு கல்வெட்டு. ஆறு வரிகளும் ஐந்து நேர்கோடுகளுக்கிடையில்
எழுதப்பட்டுள்ளன. கோவையில் உள்ள இராசகேசரிக் கல்வெட்டிலும், ஆலத்தூர்
சமணக்கோயிலில் இருக்கும் திருக்களிற்றுப்படிக் கல்வெட்டிலும் இது போலவே
கோடுகளுக்கிடையில் எழுத்து வரிகள் பொறிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். தரைக்குக்
கீழுள்ள கல்லின் பகுதியிலும் எழுத்துகள் இருக்கக் கூடும். கோயில் திருப்பணி
நிறைவுற்றதும் முழுக்கல்லையே வெளியே எடுத்து வைப்பதாகக் கோயிலார் கூறினர். தரைக்கு
மேலே இருக்கும் எழுத்துகளை முழுமையாகப் படிக்க இயலவில்லை. ”ஸ்ரீ” என்னும் எழுத்தோடு
தொடங்கும் கல்வெட்டில் ”அருளவிட்டார்”, “பட்டாரகனுக்கு” என ஓரிரு தொடர்கள் மட்டுமே படிக்க இயன்றது. கல்வெட்டின்
செய்தியும், கல்வெட்டின் காலமும் இன்னதெனத் தெரியவில்லை. முழுக் கல்லையும்
தோண்டியெடுத்த பின்னர் கல்வெட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
வட்டெழுத்துக் கல்வெட்டு
தாமரைக்கரையில் நடுகற்சிற்பங்கள்
தாமரைக் கரை. வனச்சரக அலுவலகம் உள்ள ஊர். ஊருக்கு
வெளியே, ஒரு காலத்தில் பசுமையான விளை நிலங்களாயிருந்த ஒரு பகுதி. தற்போது
“பார்த்தீனியம்” செடிகள் கண்ணுக்கெட்டிய தொலைவு
புதர்க்காடாய் மண்டிக்கிடந்தன. அவற்றுக்கிடையில் ஒரு நடைப்பயணம். மூன்று
நடுகற்சிற்பங்கள் ஒரே இடத்தில் காணப்பட்டன. மூன்றுமே அடுக்கு நிலை நடுகற்கள். இப்பகுதி
கன்னட நாட்டின் சாயலைக்கொண்டுள்ளது என்பதற்கு இந்த நடுகற்களே சான்று. மூன்று
அடுக்குகளில் புடைப்புச் சிற்பங்களைக்கொண்டுள்ள நடுகற்கள் கருநாடகப் பாணியைச்
சேர்ந்தவை. தமிழகப்பாணியில் இவ்வாறு இல்லை. முதல் (கீழ்) அடுக்கில் நடுகல்
யாருக்காக எடுக்கப்பட்டுள்ளதோ அந்த வீரனின் சிற்பமும், இரண்டாம் அடுக்கில் வீரன் மேலுலகம் செல்கின்ற
காட்சியும், மூன்றாவது அடுக்கில் வீரன் மேலுலகம் சென்றுவிட்டதைக்குறிக்கும்
வகையில் சிவலிங்கமும் நந்தியும் வடிக்கப்பட்டிருக்கும்.
முதல் நடுகல்
இங்கே, முதல் நடுகல் ஒரு புலிகுத்திக்கல். முதல்
அடுக்கில் கால்நடைகளைக் காக்கும் பணியில் புலியுடன் போராடும் வீரனின் சிற்பம்.
இரண்டாம் அடுக்கில், தேவமகளிரின் உருவங்கள். வீரனை அவர்கள் மேலுலகத்துக்கு
அழைத்துச் செல்வதன் குறியீடு. மூன்றாவது அடுக்கில் சிவலிங்கமும் நந்தியும்.
இரண்டாம் நடுகல்
இரண்டாம் நடுகல்லில் முதல் அடுக்கில் வீரன் ஒருவன்
காளையின் கொம்பைப் பிடித்துள்ளதுபோல் சிற்பம். இது காளையுடன் போரிடுவதைக் குறிக்க
வாய்ப்பில்லை. மாடுபிடிச் சண்டை என்னும் தொறுப்பூசலில் வீரன் ஈடுபட்டதைக்
குறிக்கலாம். இரண்டாம் அடுக்கில் தேவமகளிர். மூன்றாம் அடுக்கில் மேலுலகம்
சென்றுவிட்ட வீரனே சிவலிங்கத்தை வழிபடும் காட்சி. வீரனின் வலமும் இடமும், நிலவும்
கதிரும் பொறிக்கப்பட்டுள்ளன. வழக்கமாகக் கல்வெட்டுகளில் காணப்பெறும்
“சந்திராதித்தவரை” என்னும் தொடரின் குறியீடு.
மூன்றாம் நடுகல்
மூன்றாம் நடுகல்லில் முதல் அடுக்கில் பெண் ஒருத்தி,
புலியுடன் சண்டையிடும் காட்சி. பெண்ணுக்கு எடுத்த அரிதான புலிகுத்திக் கல்.
இரண்டாம் அடுக்கில் தேவ மகளிர். மூன்றாம் அடுக்கில் சிவலிங்கமும் நந்தியும்.
அந்தியூர்-சிவன் கோயில்
அந்தியூரில் உள்ள சிவன் கோயிலில் இறைவன் செல்லீசுவரர்,
இறைவி செல்லீசுவரி. கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் உள்ள
கோயில். வேசர விமானம் (வட்ட வடிவில் உள்ளது). அதிட்டானப்பகுதியில் ஜகதி என்னும்
உறுப்பு தரைக்குக் கீழ் மறைந்துள்ளது. அதனையடுத்து முப்பட்டைக் குமுதம் உள்ளது.
குமுதத்தையடுத்து ஒரு கண்டம், ஒரு பட்டிகை, மீண்டும் ஒரு கண்டம், இறுதியில் தாமரை
இதழ்முனை கொண்ட வேதி என்னும் உறுப்புகளோடு பாதபந்த அதிட்டானம் என்னும் வகையில்
அதிட்டானம் அமைந்துள்ளது. சுவர்களில் அழகான தேவகோட்டமும், தேவகோட்டத்துக்கு
இருபுறங்களிலும் அழகான தூண்களும் அமைந்துள்ளன. சுவர்ப்பகுதியின் இறுதியில் கர்ணகூடுகளும்,
அவற்றுக்கு மேலே யாளி வரிசையுடன் கற்றளியின் ”பிரஸ்தரம்” என்னும் உறுப்பு முடிவுறுகிறது. அதற்குமேல் செங்கல், சுதை
ஆகியவற்றாலான கிரீவம், சிகரம், கலசம் ஆகிய விமான உறுப்புகள் உள்ளன.
தேவகோட்டமும் சுவர்த்தூண்களும்
கர்ணகூடுகளும்-யாளிவரிசையும்
கல்வெட்டுகள்
இக்கோயிலில் மூன்று கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. இரு
கல்வெட்டுகள், கொங்குப்பாண்டியன் வீரபாண்டியனுடைய காலத்தைச் சேர்ந்தவை. மூன்றாவது
உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராயர் காலத்தது.
முதல் கல்வெட்டு-கண்மாளர்க்கு
உரிமைகள்
இக்கல்வெட்டு கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின்
பதினைந்தாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. காலம் கி.பி. 1280. வழக்கமாகக்
கொடைகளைப் பற்றிப் பேசும் கல்வெட்டாக அமையாமல், 13-ஆம் நூற்றாண்டில் கொங்கு
நாட்டில், வட கொங்கில் நிலவிய சமுதாயச் சூழலை எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்திருப்பது
இக்கல்வெட்டின் சிறப்பாகும். சில சமுதாயத்தினருக்குச் சில உரிமைகள்
மறுக்கப்பட்டிருந்தன. அவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தினர்தாம்
கண்மாளர்கள். கம்மாளர், பஞ்சகம்மாளர் என்று தற்போது அழைக்கப்படும்
இச்சமுதாயத்தினர்க்குக் காலுக்குச் செருப்பு அணிந்துகொள்ளும் உரிமையில்லை.
தம்முடைய வீடுகளுக்குக் காரை (சாந்து) பூசிக்கொள்ள உரிமையில்லை. தம் வீடுகளில்
நடைபெறும் நன்மை தீமை நிகழ்வுகளின்போது சங்கு ஊதவும், பேரிகை கொட்டுவித்துக்
கொள்ளவும் உரிமையில்லை. இந்த உரிமைகளை வழங்கி அரசன் நேரடியாக வாய்மொழி ஆணை
பிறப்பிக்கிறான். உடன், ஆணை ஓலையில் எழுதப்படுகிறது. அரசன் நேரடியாக ஆணை
பிறப்பித்தல் கல்வெட்டுகளில் காணப்பெறும் சில சொற்றொடர்கள் வாயிலாக
உணர்த்தப்பெறும். “நாம்”, “நம்மோலை”, “சொன்னோம்”
போன்றவை அவை.
இக்கல்வெட்டின் படிகள் ஒரே நேரத்தில் பேரூர், குடிமங்கலம், கரூர், கடத்தூர்,
மொடக்கூர், பாரியூர், அவிநாசி ஆகிய ஊர்களிலும் உள்ளன என்பது மேலும் ஒரு சிறப்பு.
இவ்வாறு பல ஊர்களின் கோயில்களிலும் கல்வெட்டுகளில் இந்த ஆணை
பொறிக்கப்பட்ட.தனின்றும், வடகொங்கைச் சேர்ந்த வடகரை நாட்டில் இருந்த கண்மாளர்கள்,
தங்கள் உரிமைக்காக அரசனிடம் போராடி முறையிட்டு உரிமையைப் பெற்றார்கள் எனக் கருதவேண்டியுள்ளது.
கண்மாளர் உரிமை - “பேரிகையுள்ளிட்ட” சொற்றொடர்
கல்வெட்டின் பாடம்
1
ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்தி கோனேரின்மை கொண்டான்
வடகொங்கில் வடகரைனாட்டில் கண்மாளற்கு
பதினஞ்சாவது
தங்களுக்கு நன்மை தின்மைக்கு இரட்டைச்
சங்கும் ஊதி
பேரிகையுள்ளிட்டனவுங் கொட்டுவித்துக் கொ
2
ள்ளவும் தாங்க(ள்)
புறப்பட வேண்டுமிடங்களுக்கு (பா)தரக்ஷை
கோத்துக்கொள்ளவும் தங்கள் வீடுகள் சாந்திட்டுக்கொள்ளவும்
சொன்னோம் இப்படிக்கு நம்மோலை பிடிபாடாகக்கொண்டு
சந்த்ராதித்யவரை செல்வதாக தங்களுக்கு
வேண்டும்மிடங்க
3
ளிலே கல்லிலும்
செம்பிலும் பொறித்துக் கொள்ளுவாராகவும்
இரண்டாம் கல்வெட்டு-சந்தியா தீபம்
கொடை
இக்கல்வெட்டு கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின்
பதினொன்றாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. காலம் கி.பி. 1276. சந்தியா தீபம் எரிப்பதற்காகப் பத்துப் பணம்
கொடையாக அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டில் அந்தியூர் வடகரை
நாட்டுப்பிரிவில் இருந்தது என்னும் குறிப்புள்ளது. மேலும், நரம்பர் என்னும்
சமூகத்தினர் இருந்த செய்தியும் உள்ளது. இந்த நரம்பர்களில் நாட்டுக் காமிண்டன்
மற்றும் காமிண்டன் பதவியிலிருந்த இருவர்
கொடையளித்துள்ளனர்.
மூன்றாம் கல்வெட்டு-சமாதிக்கு நிலம்
கொடை
இக்கல்வெட்டு உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராயர் காலத்தது.
காலம் கி.பி. 1500 ரௌத்திரி வருடம். பொன்னாங்கட்டியார் வேங்கடநாதர் என்பவருக்குச்
சமாதியிட நிலம் வாங்கிச் சமாதி எழுப்பி, அந்நிலத்தைச் செல்லீசுவரர் கோயிலுக்குக்
கொடையாக அளித்த செய்தியைக் கல்வெட்டு சொல்கிறது. சமாதியானதைக் கல்வெட்டு “யோகம் ஆகையில்” எனக்குறிப்பிடுகிறது.
“யோகம் ஆகையில்” என்னும் தொடர்
கல்வெட்டுகளின் நிலை
கல்வெட்டுகளின் இன்றைய நிலை நமக்கு அளிப்பது வருத்தமே.
ஒரு கல்வெட்டுகூட முழுதும் படிக்கும் வகையில் இல்லை. எழுத்துகளின் மீது பல
ஆண்டுகளாகக் காவி வண்ணம் பூசப்பட்டதால் எழுத்துகள் மறைந்துவிட்டன. சுதையும் செங்கல்லும்
கொண்டுள்ள கட்டுமானத்தில் வெள்ளைச் சுண்ணமோ காவிச் சுண்ணமோ பூசுதல் வழக்கம். கல்
கட்டுமானத்தின்மீது எவ்விதப்பூச்சும் பூசாமல் விட்டுவைத்தலே அதன் மெய்யான
அழகையும், சிற்பச் சிறப்புகளையும், கல்வெட்டுகளின் முழுமையையும்
எடுத்துக்காட்டவல்லது.. ஆனால், பல கோயில்களில் இந்த வழிமுறை பின்பற்றப்படுவதில்லை.
கண்மாளர் கல்வெட்டினை நூலில் கண்டதோடு சரி. நேரில் படித்து மகிழ இயலவில்லை. ஓரிரு
சொற்கள் பார்வையில் பட்டன. மகாபாரதக் கதையில், வனவாசத்தின்போது கண்ணனுக்குச் சோறு
கிடைக்கவில்லை; சோற்றுப்பருக்கை மட்டுமே கிடைத்தது என்பதுபோல.
அந்தியூரில் ஒரு வீரபத்திரர் கோயில்
சிவன் கோயிலுக்கருகிலேயே ஒரு வீரபத்திரர் கோயில்
காணப்பட்டது. வீரபத்திரர் வழிபாடு இப்பகுதியில் இருந்துள்ளமை பற்றிய சான்றினை முன்னரே தேவர்மலைக் கோயிலில் கண்டிருக்கிறோம்.
அந்தியூரில் ஒரு தனிக்கோயிலே காணப்பட்டது. எளிமையான கற்றளி. கருவறை, அர்த்தமண்டபம்
ஆகியவற்றில் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் உள்ளன. கருவறை விமானம் சற்றே
மாறுபட்டிருந்தது. வட்ட வடிவிலான வேசர விமானத்துடன் சாலை அமைப்பும் கலந்த ஒரு
கலவையான தோற்றம். அறநிலையத்துறையில் பணியாற்றும் திரு. தணிகாசலம் என்பவர்-கோயில்களின்
பழமை, வரலாறு பற்றிய ஆர்வமுள்ளவர்- புறக்கணிக்கப்பட்ட இக்கோயிலை முயற்சியெடுத்துப்
பேணிவருகிறார்.
வீரபத்திரர் கோயில் - அந்தியூர்
வீரபத்திரர் கோயில் - மற்றொரு தோற்றம்
வீரபத்திரர் - மூலவர்
நடுகல் சிற்பம்
மாரியம்மன் கோயில் மண்டபம் ஒன்றை இடித்ததனால் கிடைத்த
கற்றூண்களைச் சிவன் கோயிலின் முன்புறத்துள்ள திறந்த வெளியில் குவித்து
வைத்திருக்கிறார்கள். இந்தக் குவியலுக்கிடையில் ஒரு வீரனின் நடுகல் சிற்பமும்
காணப்பட்டது.
நடுகல் சிற்பம் - கேட்பாரற்ற நிலையில்
தொல்பழங்காலக் கல்திட்டையும்
இராஜகம்பளத்தாரின் மாலக்கோயிலும்
அந்தியூர்-சத்தி சாலையில், அந்தியூரை அடுத்துள்ள
தோப்பூரில் சாலைக்கருகிலேயே ஒரு மாலக்கோயில் காணப்பட்டது. மாலக்கோயிலின் இந்தப்பதிவு
நிகழாமலே போயிருக்கும். ஏனெனில், நாங்கள் பயணம் சென்ற “கார்” இதைக்கடந்து சென்றுவிட்ட
நிலையில், குவியலாக நின்ற கல் தூண்கள் நொடிப்பொழுதில் வரலாற்று ஆர்வலர் ஃபவுசியா
அவர்களின் கண்களில் பட்டுவிடவே நாங்கள்
வண்டியைப் பின்னுக்குக் கொண்டுவந்து பார்க்க நேரிட்டது. ஈரோடு மாவட்டப்பகுதியில் நாயக்கர்
இனத்தார், இறந்துபோன தம் உறவினர் நினைவைப் போற்றும் வகையில் ஒரு குறிப்பிட்ட
இடத்தில் நினைவுக்கல எழுப்பி வழிபடுகிறார்கள். (இறந்தவர்களைப் புதைத்த அல்லது
எரியூட்டிய இடம் வேறு; நினைவுக்கல் எழுப்புகின்ற இடம் வேறு). இந்த இடம் மாலக்கோயில்
என்று அழைக்கப்படுகிறது. முன்னர் ஒருமுறை, பவானி வட்டத்தில் கள ஆய்வுக்குச்
சென்றபோது, சின்னப்புலியூர் என்னும் சிற்றூரில் இத்தகைய மாலக்கோயிலைப் பார்த்த
நினைவு வந்தது. (அதன் ஒளிப்படம் கீழே காண்க). தோப்பூரில், நாம் பார்த்த
மாலக்கோயில் இராஜகம்பளத்தார் குலத்தவர்க்குரியது. மிகப்பெரியதொரு பரப்பில்
நூற்றுக்கணக்கான நினைவுக்கற்கள். இதில் உள்ள சிறப்பு என்னவெனில், இந்த
மாலக்கோயிலை, இங்கே முன்னரே இருந்த தொல்பழங்காலக் கல்திட்டையொன்றைச்(DOLMEN)சுற்றி அமைத்திருக்கிறார்கள். பெருங்கற்கால நினைவுச் சின்னம்
இருப்பது தெரியாமலேயே, அந்த மரபைப் பேணும் வகையில் மாலக்கோயிலை அமைத்திருப்பது
தற்செயல் என்றாலும் பொருத்தமான ஒன்றே. பழங்காலத்து எளிய கருங்கற்களும், புதிய
பளபளப்பூட்டிய தற்காலத்துக் கருங்கற்களும் கலந்து காணப்பட்ட நினைவுக்கற்களின்
இடையில் எழுத்துப் பொறிக்கப்பட்ட ஒரு கல் பார்வையைக் கவர்ந்தது. உடன் கொண்டுசென்ற
மைதா மாவினை அக்கல்மீது பூசியபின்னர் எழுத்துகள் தெளிவாகத் தெரிந்தன.
மாலக்கோயில் - பின்புலத்தில் பெருங்கற்காலக் கல்திட்டை
மாலக்கோயில்
பவானி வட்டம் - சின்னப்புலியூரில் ஒரு மாலக்கோயில்
மாலக்கோயிலில் ஒரு கல்வெட்டு
எழுத்துகள் புலப்படா நிலையில்
கல்வெட்டு எழுத்துகள் காணும் நிலையில்
கல்வெட்டின் பாடம்
1
சாஷனம் க
2
ல் போட்டது
3
மல்லக்காள்
4
1904 வ
5
ருஷம் மா
6
ர்கழி மீ
7
27 உ மஞ்
8
ஞ்சள் நாயக்
9
கனூர் சூர
10 நாயக்கன்
11 மகன் பட்
12 டகார் கஞ்
13 ச நாயக்க
14 ன் கல்
முடிவுரை
அந்தியூரை மையப்புள்ளியாகக் கொண்டு சுற்றியுள்ள
பகுதிகளில், நாங்கள் கேஏள்விப்பட்ட சில செய்திகளின் அடிப்படையில், நாங்கள்
மேற்கொண்ட தொல்லியல் தடயங்களின் தேடல் பயணம் எக்களுக்கு மிகுந்த நிறைவைத் தந்தது
என்பதில் சிறிதும் ஐயமில்லை. கொங்குப்பகுதியின் தொன்மைத் தடயங்களை இயன்றவரை
வெளிக்கொணரும் எங்கள் விருப்பமும் முயற்சியும் தொடர்கின்றன.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.
அருமையான பதிவு
பதிலளிநீக்கு