மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 28 ஜூன், 2017

                                 மேல்பாடி பள்ளிப்படைக் கோயில் கல்வெட்டு

            அண்மையில் ”மின்தமிழ்” இணையக்குழு அன்பர் ஒருவர், கல்வெட்டுப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். கல்வெட்டுப் படம் மிக அழகானதொன்று. ஆற்றூர்த்துஞ்சிய தேவரான 
அரிஞ்சய சோழருக்கு முதலாம் இராசராசன் எடுப்பித்த பள்ளிப்படைக் கோயில் கல்வெட்டு. 

                                                    கல்வெட்டின் ஒளிப்படம்

கல்வெட்டின் பாடம்:

ஸ்வஸ்திஸ்ரீ திருமக்ள்போலப் பெருநிலச்செல்வியுந்த
2 னக்கே யுரிமை பூண்டமை மனக்கொக் காந்தளூர்ச்சா
3 லை கல்மறுத்தருளி வேங்கைநாடுங் கங்கபாடியும் னு ளம்ப
4 பாடியுந்தடிகைபாடியுங் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்
5 எண்டிசை புகழ்தர வீழ மண்டலமுமிரட்ட பாடியேழரையிலக்கமுந்திண்டி
6 றல் வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளர் வுழியெல்லா
7 யாண்டுந்தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொ
8 ள் ஸ்ரீ  கோராஜராஜ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு
9 ...ஆவது யங்கொண்ட சோழமண்டலத்துப் பெரும்பாணப்பாடித் தூஞாட்டு
10 மேற்பாடியான ராஜாச்ரயபுரத்து ஆற்றூர்த்துஞ்சின தேவற்குப் பள்ளிபடை
11 யாக உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுப்பித்தருளின திருவறிஞ்சீச்வரத்து
12 மஹாதேவற்கு வெண்குன்றக்கோட்டத்து மருதாட்டு வெள்ளாளன் அ...வாக்
13 கி (மு)த்தி கண்டனேன் வைத்த திரு நந்தா விளக்கு ஒன்றினுக்கு
14 (வைத்த) சாவா மூவாப்பேராடு தொண்ணூற்றாறுங் கைக்கொண்டு
15 நி(சதம்) உழக்கு நெய் ராஜ கேசரியால் சந்திராதித்தவற் அட்டு....நேன் 
                                                               இராசாச்ரயபுரத்து 
16 இடையன் ஏணி கெங்காதிரநேன்

கல்வெட்டு பற்றிய செய்திகள்:

1  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.. 
2. முதல் ஏழு வரிகள் முதலாம் இராசராசனின் மெய்க்கீர்த்தி வரிகள்.
முதலாம் இராசராசனின் கல்வெட்டு என்பதனால், தஞ்சைப்பெருவுடையார்
கோயிலில் உள்ளது போலவே மிக அழகாக வெட்டப்ப்ட்ட எழுத்துகளைக் 
காண்கிறோம். தஞ்சையைக் காட்டிலும் சற்று மிகையான் வளைவுகளை
எழுத்துகள் கொண்டுள்ளன. வடசொற்கள் வரும் இடங்கள் மட்டுமே எ்ன்றில்லாமல்
”ந்த”, ”ந்தா”, ”ந்தொ”, “க்க”, “க்கே”, “க்கு” , “க்கோ”  என ஒற்றெழுத்துச் சந்திகள்
வருமிடங்களிலும் கிரந்தக் கூட்டெழுத்துகளை நிறையப் பயன்படுத்தியுள்ளனர். 
தமிழ் எழுத்துகளைத் தவிர்த்துள்ளனர். இது அரிதாகக் காணப்படுவது.
“வூழி” (ஊழி)  என்பது பிழையாக ”வுழி” என எழுதப்பட்டுள்ளது. 
3. இராசராசனின் ஆட்சியாண்டு கல்வெட்டில் தெளிவாகக் காணப்படவில்லை.
4. தொண்டை மண்டலம் முழுதும் ஜயங்கொண்ட சோழ மண்டலம் எனக்
கருதுகிறேன். தூஞாட்டு என்பது தூ(ய்)நாட்டைக் குறிக்கும். மேற்பாடி, இந்தத் 
தூய் நாட்டில் இருந்தது. மேற்பாடிக்கு “ராஜாச்ரயபுரம்”  என்னும் சிறப்புப் பெயர் 
இருந்தது. சாளுக்கியரை வென்றதால் இராசராசன் பெற்ற சிறப்புப் பெயர்
“ராஜாச்ரயன்”  என்பதாகலாம். 
5 கொடை, நந்தாவிளக்கு. கொடைக்கு வேண்டும் முதலாகத் தொண்ணூற்றாறு
ஆடுகள் வைக்கப்படுகின்றன. கொடையாளி வெண்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த 
மருதாடு நாட்டைச் சேர்ந்த முத்திகண்டன் என்ற வெள்ளாளன். ஆடுகள், 
கெங்காதிரன் என்னும் இடையன் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அவன்,
நாள்தோறும் (நிசதம்) ஓர் உழக்கு நெய் கோயிலுக்கு அளிக்க(அட்டுதல்)வேண்டும்.
இவ்விடையன் மேல்பாடி ஊரினன். 
6 ”ராஜகேசரி”  என்னும் பெயரால் அமைந்த முகத்தல் அளவுக் கருவி இருந்தது. 


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக