மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஆஞ்சனேயரும் வியாசராஜரும்


         அன்னூர்-சத்தியமங்கலம் சாலையில், அன்னூரை அடுத்து ஓரிரு பேருந்து நிறுத்தங்கள் கடந்து பொங்கலூர் நிறுத்தம். சாலையின் இடப்பக்கத்திலேயே இருப்பது வரதராசப்பெருமாள் கோயில். ஒருவாரம் முன்னர் நாளித்ழ் ஒன்றில் இக்கோயிலைப் பற்றிச் செய்தி ஒன்று வந்திருந்தது. கருவறை விமானத்துத் திருப்பணி நடைபெறுவதாகவும், கோயிலில் பன்னிரண்டு கல்வெட்டுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். கல்வெட்டுகளைத் தேடிக் கண்டு, அவற்றைப்படித்துச் செய்திகளை வெளிக்கொணர்வதைப் பணியாகக் கொண்டிருப்பதால் 26.01.2016 அன்று அங்கே பயணப்பட்டேன்.

         கோயில் அழகான தோற்றத்தில் விளங்கியது. கிழக்கு நோக்கிய கோயில். உண்ணாழிகை(கருவறை), அர்த்தமண்டபம், முகமண்டபம் என மூன்றுமே கல் கட்டுமானம். அர்த்தமண்டபத்தில் உள் சுவரில் கூரையை ஒட்டிய பகுதியில் கல்வெட்டுகள் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், நன்கு ஊன்றிப்பார்த்ததில் வெறும் கீறல்கள் காணப்பட்டனவே ஒழியக் கல்வெட்டு எழுத்துகள் எவையும் இல்லை. முகமண்டபத்துத் தூண்கள் நான்கிலும் அதன் சதுரப்பகுதிகளில் பல்வேறு சிற்பங்கள். சில சிறப்பானவை. குரங்கு நாரையொன்றின் அலகைப்பிளக்கும் காட்சி, பாம்பைக்கவ்விக்கொண்டிருக்கும் மயில், கல்கி அவதாரம், ஒட்டக உருவம், கூர்மாவதாரம் என்பன.

         ஆண்டாள் சன்னதி உண்டு. ஆழ்வார்களின் அணிவகுப்புச் சிலைகள். அருமையான பச்சைப்பசேலென்ற இலைகளுடன் புன்னை மரம்.(கோயிலின் தலமரம்.) இவையெல்லாம் இருந்தும் கல்வெட்டு இல்லை என்னும் ஏமாற்றத்தைத் தீர்த்தது அங்கே தனிக்கோயில் கொண்ட ஆஞசனேயர் சிற்பம். இச்சிற்பம் தனித்துவம் பெற்றது. விசயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் அரசவைக்குருவான வியாசராயர் என்னும் பெருந்துறவி இந்தியாவின் பலவேறு பகுதிகளில் 732 ஆஞ்சனேயர் சிற்பங்களை எழுந்தருளுவித்தார் என்று கூறப்படுகிறது. அவர் எழுப்பிய சிற்பங்களில் தனித்துவமான சிறப்புக்கூறுகள் உண்டு. அவையாவன:

1         ஆஞ்சனேயரின் வலது கை தலைக்குமேல் உயர்த்தி நம்மை வாழ்த்தும் 
       நிலையில்.
2     இடது கை இடது தொடையில் ஊன்றியவாறு சௌகந்தி மலர் ஏந்திய    நிலையில்.
3 ஞ்சனேயரின் வால் தலைக்குமேல் உயரச்சென்று வட்டமடித்து நிற்கும்நிலை.
4      வாலில் கட்டப்பட்டிருக்கும் மணி.
  
இத்தகைய சிறப்புக்கூறுகளுடன் இக்கோயிலின் ஆஞ்சனேயர் சிற்பம் அமைந்துள்ளதால் இந்த ஆஞ்சனேயர் வியாசராயரால் நிறுவப்பட்டது என கோயில் பூசையாளர் திரு. இரமேஷ் ஐயர் கூறினார். ஆஞ்சனேயர் இடையில் தாசர்களின் மணிகளையும் அணிந்திருக்கிறார். இந்த அழகான அரிய சிற்பத்தை இங்கே கண்டு மகிழ்க. மகாபாரதத்தில், சௌகந்தி மலரையும் பாஞ்சாலியையும் இணைத்து ஒரு கதை இருப்பதாகக் கேள்வி. விளக்கம் என்னிடம் இல்லை.





--------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.




   

1 கருத்து:

  1. பணி அருமையானது...மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
    மேலேகூறியது போன்ற மூன்று அம்சங்கள் கொண்ட ஆஞ்சநேயர் கோவில் நம்பியூர் புளியம்பட்டி சாலையில். உள்ளது.....

    பதிலளிநீக்கு