மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  15

படிக்கும் பயிற்சியில் மேலும்  ஓரிரு கல்வெட்டுகள் கீழே;

[1] இராசராசன் பள்ளிப்படைக் கல்வெட்டு.



கல்வெட்டின் பாடம்:

  1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபு4வந சக்ரவத்திகள் ஸ்ரீ கு
  2. லோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்ப
  3. த்திரண்டாவது ஸ்ரீ சிவபதசேகரமங்கலத்து
  4. எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவராந ஸ்ரீ
  5. சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
  6. பெரியதிருமண்டபமுன்...டுப்பு ஜீ(ர்)
  7. நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
  8. த்தார் பிடவூர் பிடவூர் வேளான் வேளிர்
  9. அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
  10. யகம் செய்துநின்ற யசிங்ககுல கா
  11. வளநாட்டு குளமங்கல நாட்டு சா
  12. மங்கலத்து சாத்தமங்கலமுடை
  13. ன நம்பிடாரன் நாடறிபுகழுன் இ
  14. டன் விரதங்கொண்டு செய்தார் இ
  15. (ர்) பிடார்களில் ராஜேந்த்ரசோழனு
  16. (ட) நாயகநான ஈசாநசிவரும் தேவ
  17. யமந அறங்காட்டிப்பிச்சரும் ||-

குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.
        ஜீர்நித்தமையில்-அழிவு ஏற்பட்டமையால்

[2] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:


கல்வெட்டின் பாடம்:

1.       இருதூணி குறுணிக்கும் பூவில் எண்கல்லு பாட்டம் அளந்
2.       ற்கும் குறுணி இரு நாழி அரிசி அமுதுபடி சென்றுவ(ரு)
3.       . த்திரத்துக்கு ஆறுநாழி சோறும் இட்டு வருவ
4.       சோழபட்டனும் கைக்கொண்ட அச்சு இரண்(டு)

[3] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:


கல்வெட்டின் பாடம்:


  1. கும் கோவணப்பொழிக்கு தெற்கும் இந்நான்கெல்லைக்கு 20 வி. இ
  2. நாச்சியாற்கும் வினாயகப்பிள்ளையாற்கும் க்ஷேத்திரபாலப்பிள்(ளையா)ற்
  3. சனி எண்ணைக்காப்புக்கு வந்துசேவித்த ஆடுபாத்திரம் பாடு(பா)த்
  4. டைய சிவபிராமணன் சைய்வச்சக்கரவத்தியும் விக்கி
  5. ணை சாத்திவருவோம்மாகவும்
குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.


-----------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஆஞ்சனேயரும் வியாசராஜரும்


         அன்னூர்-சத்தியமங்கலம் சாலையில், அன்னூரை அடுத்து ஓரிரு பேருந்து நிறுத்தங்கள் கடந்து பொங்கலூர் நிறுத்தம். சாலையின் இடப்பக்கத்திலேயே இருப்பது வரதராசப்பெருமாள் கோயில். ஒருவாரம் முன்னர் நாளித்ழ் ஒன்றில் இக்கோயிலைப் பற்றிச் செய்தி ஒன்று வந்திருந்தது. கருவறை விமானத்துத் திருப்பணி நடைபெறுவதாகவும், கோயிலில் பன்னிரண்டு கல்வெட்டுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். கல்வெட்டுகளைத் தேடிக் கண்டு, அவற்றைப்படித்துச் செய்திகளை வெளிக்கொணர்வதைப் பணியாகக் கொண்டிருப்பதால் 26.01.2016 அன்று அங்கே பயணப்பட்டேன்.

         கோயில் அழகான தோற்றத்தில் விளங்கியது. கிழக்கு நோக்கிய கோயில். உண்ணாழிகை(கருவறை), அர்த்தமண்டபம், முகமண்டபம் என மூன்றுமே கல் கட்டுமானம். அர்த்தமண்டபத்தில் உள் சுவரில் கூரையை ஒட்டிய பகுதியில் கல்வெட்டுகள் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், நன்கு ஊன்றிப்பார்த்ததில் வெறும் கீறல்கள் காணப்பட்டனவே ஒழியக் கல்வெட்டு எழுத்துகள் எவையும் இல்லை. முகமண்டபத்துத் தூண்கள் நான்கிலும் அதன் சதுரப்பகுதிகளில் பல்வேறு சிற்பங்கள். சில சிறப்பானவை. குரங்கு நாரையொன்றின் அலகைப்பிளக்கும் காட்சி, பாம்பைக்கவ்விக்கொண்டிருக்கும் மயில், கல்கி அவதாரம், ஒட்டக உருவம், கூர்மாவதாரம் என்பன.

         ஆண்டாள் சன்னதி உண்டு. ஆழ்வார்களின் அணிவகுப்புச் சிலைகள். அருமையான பச்சைப்பசேலென்ற இலைகளுடன் புன்னை மரம்.(கோயிலின் தலமரம்.) இவையெல்லாம் இருந்தும் கல்வெட்டு இல்லை என்னும் ஏமாற்றத்தைத் தீர்த்தது அங்கே தனிக்கோயில் கொண்ட ஆஞசனேயர் சிற்பம். இச்சிற்பம் தனித்துவம் பெற்றது. விசயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் அரசவைக்குருவான வியாசராயர் என்னும் பெருந்துறவி இந்தியாவின் பலவேறு பகுதிகளில் 732 ஆஞ்சனேயர் சிற்பங்களை எழுந்தருளுவித்தார் என்று கூறப்படுகிறது. அவர் எழுப்பிய சிற்பங்களில் தனித்துவமான சிறப்புக்கூறுகள் உண்டு. அவையாவன:

1         ஆஞ்சனேயரின் வலது கை தலைக்குமேல் உயர்த்தி நம்மை வாழ்த்தும் 
       நிலையில்.
2     இடது கை இடது தொடையில் ஊன்றியவாறு சௌகந்தி மலர் ஏந்திய    நிலையில்.
3 ஞ்சனேயரின் வால் தலைக்குமேல் உயரச்சென்று வட்டமடித்து நிற்கும்நிலை.
4      வாலில் கட்டப்பட்டிருக்கும் மணி.
  
இத்தகைய சிறப்புக்கூறுகளுடன் இக்கோயிலின் ஆஞ்சனேயர் சிற்பம் அமைந்துள்ளதால் இந்த ஆஞ்சனேயர் வியாசராயரால் நிறுவப்பட்டது என கோயில் பூசையாளர் திரு. இரமேஷ் ஐயர் கூறினார். ஆஞ்சனேயர் இடையில் தாசர்களின் மணிகளையும் அணிந்திருக்கிறார். இந்த அழகான அரிய சிற்பத்தை இங்கே கண்டு மகிழ்க. மகாபாரதத்தில், சௌகந்தி மலரையும் பாஞ்சாலியையும் இணைத்து ஒரு கதை இருப்பதாகக் கேள்வி. விளக்கம் என்னிடம் இல்லை.





--------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.




   

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016


கல்வெட்டு எழுத்துகள் கற்போம் - 14

         படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

[1] கீழ்வரும் கல்வெட்டு உடுமலை அருகிலுள்ள கடத்தூர் மருதீசர் கோயிலில் உள்ள தூண் கல்வெட்டு. தூணின் மூன்று சதுரங்களில் மூன்று பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எளிமையான ஒரு கல்வெட்டு. ஒளிப்படத்தை அவரவர் தேவைக்கேற்பப் பெரிதாக்கி எழுத்துகளைப் படித்துப்பார்க்க.

தூணின் முதல் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி



தூணின் முதல் சதுரத்தின் பாடம்:

ஸ்வஸ்திஸ்ரீ
வீரசோழ தே
வற்கு யாண்
டு பத்தொன்
பதாவது

தூணின் இரண்டாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி



தூணின் இரண்டாம் சதுரத்தின் பாடம்:

வெள்ளப்ப நா
ட்டுத்தேவி
யர் சேரியில்
கோளந் இரா
மநாந அழ(கி)
ய மாணிக்கப்
பல்லவரைய

தூணின் மூன்றாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி



தூணின் மூன்றாம் சதுரத்தின் பாடம்:

நேந் இத்தூண்
செய்வித்தேந்



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.






புதன், 10 பிப்ரவரி, 2016

பெரியகுயிலி

         கோவைக்கருகிலுள்ள ஒரு சிற்றூர் பெரிய குயிலி. அவ்வூரில் இருக்கும் பூசையாளர் சுப்பிரமணியம் என்பவர்  அண்மையில் எனக்கு அறிமுகமானார். அவர், அவ்வூரில் அமைந்துள்ள குயிலியம்மன் கோவில் பூசைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதோடல்லாமல் அக்கோயிலைப் புதுப்பித்துக்கட்டும் திருப்பணியில் உழைப்பு மற்றும் பொருள் (செல்வம்) ஆகியவற்றைக் கொடையாகத் தந்தவர். கல்வெட்டுகள் கிடைக்கக் கூடிய இடங்கள் என நான் கருதித் தேர்வு செய்து தேடலை மேற்கொள்ளுகின்ற இடங்களில் ஒன்றாய்ப் பெரியகுயிலியும் அமையவே, அவரிடம் தொடர்புகொண்டு அவ்வூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் போன்ற தொன்மைத் தடயங்கள் உள்ளனவா எனக் கேட்டிருந்தேன். அத்தகு இடங்கள் ஒரு சில காணப்படுவதாக அவர் கூறியதால் 9-02-2016 அன்று வரலாற்று ஆர்வலர்களான நண்பர்கள் திரு. மீனாட்சிசுந்தரம், திரு.ஜெயசங்கர் ஆகியோருடன் அங்கு சென்றேன்.

         தொல்லியல் நோக்கில் அமைந்த ஒரு பயணம். கல்வெட்டுகளில் ஒரு தொடர் பயின்றுவருவதைப் பார்க்கலாம். அத்தொடர், “விளையினும் விளையாதொழியினும்என்று அமையும். அதாவது, ஒரு நிலத்தின்மீது காணி அல்லது உரிமை கொண்ட ஒருவர் அல்லது ஓர் அமைப்பு வரி செலுத்தும்போது, நிலத்தில் விளைந்தாலும் விளைச்சல் இல்லாது போனாலும் வரி கட்டும் கடமை யினின்றும் பிறழ மாட்டோம் என்னும் உறுதி மொழிவதை அத்தொடர் சுட்டும். அது போன்றே, தொல்லியல் தடயங்கள் கிடைக்கவும் கூடும். கிடைக்காமலும்  போகும். ஆனால், தேடல் தொடரும். அவ்வாறு மேற்கொண்ட பயணம் பெரியகுயிலி ஊரைப்பொறுத்தவரையிலும் ஏமாற்றம்  அளிக்கவில்லை.

         முதன்முதலாகப் பார்த்த இடம் குயிலியம்மன் கோயில். குயிலியம்மன் கோயில் கொண்டதால் ஊர்ப்பெயர்  குயிலி என்று வழங்கியிருக்கலாம். ஊர்ப்பெரிய்வர்களுக்கு, ஊரின் பெயர்க்காரணம் தெரியவில்லை. கோவை, நெல்லை, மயிலை என ஊர்ப்பெயர்கள் வழங்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் குயிலை”  என அழைக்கின்றனர். அருகிலேயே இன்னொரு சிறிய ஊரும் இருப்பதால் பெரியகுயிலி, சின்னக்குயிலி என இரு பெயர்கள். குயிலியம்மன் கோயிலில், தற்போது, குயிலியம்மன் முதன்மைத்தெய்வம் எனினும், கோயிலினுள்ளே ஒரு “ஆதி குயிலியம்மனும் உண்டு.

கல் ஊஞ்சல்

         பெரும்பாலும், எல்லா அம்மன் கோவில்களிலும் கல்லால் எழுப்பப்பட்ட ஓர் ஊஞ்சல் அமைந்திருக்கும். நீண்டுயர்ந்த இரு கற்றூண்கள் அருகருகே நாட்டப்பெற்றிருக்க, அவ்விரு தூண்களையும் மேலே இணைத்த நிலையில் ஒரு கிடந்த கல். அதிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் பிணைத்த ஒரு மரப்பலகை ஊஞ்சல். மக்கள் வேண்டுதல் வைத்து வணங்கி, அம்மனின் திருமேனியை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டி அம்மனை மகிழ்விப்பர். அம்மன் நள்ளிரவில் அவ்வூஞ்சலில் அமர்ந்து ஆடிக்களிப்பதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.


         ஊஞ்சலின் ஒரு தூணில், கல் ஊஞ்சலை அமைத்துக்கொடுத்தவர் யார் என்பது ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட எழுத்துகள். தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் பழமை. எனவே, எழுத்துகளை ஒரு பள்ளி மாணவன் கூட எளிதில் படிக்க இயலும். இருப்பினும், கல்லின்மீதுள்ள பொறிப்பு என்பதால் சற்றே கடினம். கல்வெட்டின் பாடம் கீழே:

  1. 1922
  2. ஆடி
  3. 28 தே
  4. குயி
  5. லாத்தா
  6. ளுக்கு
  7. கண்
  8. ணப்
  9. பாளை
  10. யம்
  11. வி.
  12. ரங்
  13. க போ
  14. யன்

கண்ணப்பாளையம் ஊரைச்சேர்ந்த ரங்கபோயன் என்பவர், 1922-ஆம் ஆண்டு, ஆடி மாதம் 28-ஆம் தேதியன்று ஊஞ்சல் அமைத்துக்கொடுத்துள்ளார்.


நினைவுக்கல் சிற்பம்

         சுற்றுச்சுவருடன் கூடிய கோயிலின் வெளிப்புறத்தில் கல் ஊஞ்சல் அமைந்துள்ளது போலவே, வெளிப்புறத்தில் கோயிலின் வலப்பக்கத்தில் ஒரு சிறு கோயில் அமைப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய ஆறடி உயரமுள்ள, பக்கத்துக்கு மூன்று என்னும் அளவில் ஆறு கற்றூண்களும், அவற்றை இணைத்து மேலே கிடத்திய இரு கற்றூண்களும், இவ்விரு கற்களுக்கிடையில் கூரையாகப் பாவப்பட்ட பலகைக்கற்களும் ஓர் அறையாகக் கோயில் தோற்றத்தைத் தருகின்றன. அறையின் உள்ளே, ஆணும் பெண்ணுமாய் ஒரு புடைப்புச்சிற்பம். இது ஒரு (Memory Stone) நினைவுக்கல்லாகும். கோவைப்பகுதியில் பல்வேறு நினைவுக்கற்கள் காணப்படுகின்றன. இவை யாவும் இறந்துபோன வீரர்கள், தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களாகும். கால்நடைச் சமுதாயம் ஓங்கியிருந்த நிலையில், கால்நடைகளைக்காக்கும் பணியில் ஈடுபட்டுப் புலியுடன் போராடி இறந்த வீரர்கள், கால்நடைகளைக்கவர்ந்து சென்ற எதிர்க்குழுவினரிடமிருந்து அவற்றை மீட்கும் முயற்சியில் (ஆநிரை மீட்டல்) எதிர்க்குழுவின் வீரர்களுடன் போரிட்டு இறந்த வீரர்கள், ஊர் அல்லது ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய பணிகளைச் செய்து இறந்த தலைவர்கள் மற்றும் இவ்வகை வீரர்/தலைவர் ஆகியோருடன் உடன்கட்டை ஏறி இறந்த அவர்தம் மனைவியர் ஆகிய பலருக்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டு அவர்களை வணங்கும் வழக்கம் உண்டு. வீரக்கல், நடுகல், புலிகுத்திக்கல், நரிகடிச்சான் கல், சாமிக்கல், மாஸ்திக்கல் (மாசதிக்கல்) எனப் பல்வேறு பெயர்களால் கிராம மக்கள் வழங்குவர். அவற்றைப்பற்றிய செவிவழிக் கதைகளும் மக்களிடையே வழங்குவதுண்டு. அது போன்ற ஒரு நினைவுக்கல்தான் மேலே குறிப்பிட்ட நினைவுக்கல் சிற்பம்.
         

சிற்பத்திலுள்ள ஆணின் தலைப்பகுதியில் முடி, கொண்டை அமைப்பாக இல்லாமல், தலைப்பாகையுடன் உள்ளது. தலைப்பாகையில் ஒரு தலையணி இருப்பதுபோல் காணப்படுகிறது. மேல்நோக்கி முறுக்கிய மீசை. செவியணியும், கைவளையும், கழுத்தில், கழுத்தை ஒட்டியணியப்பட்ட கண்டமாலையும், அதனை அடுத்துத் தொங்கலாக அணியப்பட்ட நீண்ட மாலையும் காணப்படுகின்றன. ஆடை இடையிலிருந்து தொடங்கிப் பாதம் வரை காணப்படுகிறது. இடையின் இருபக்கங்களிலும் சுங்கு எனப்படும் ஆடைத்தொங்கல்கள் உள்ளன. பெண் வலப்புறம் கொண்டை முடியுடனும், இடையிலிருந்து பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறாள். கழுத்தில் அணிகள் எவையும் காணப்படுவதில்லை; கைவளைகளும் புலப்படாத நிலையில் கணவனோடு சேர்ந்து இறந்துபோன சதிப்பெண்ணாக இச்சிற்பத்தைக் கருதலாம். இக்கருத்தை ஊர் மக்களிடையே வழங்கும் கதை இருப்பின் ஒப்புநோக்கலாம். பெண் கைகூப்பி வணங்கும் தோற்றம் ஆணின் சிற்பத்தில் இல்லை. மாறாகக் கைகளைக் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருப்பராயன் (கன்னிமார்) கல் (கல்வெட்டுப்பொறிப்புடன்)

         பூசையாளர் சுப்பிரமணியம் அடுத்து எங்களை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச்சென்றார். பெரியகுயிலி ஊர்ப்பகுதி வறட்சியான ஒரு பகுதி. இருப்பினும் ஓரிரு இடங்களில் முன்னாளில் முன்னோர் சிலர் வெட்டிவைத்த பெரிய கிணறுகள் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில், கிணற்று நீரை இறைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் செய்கின்றனர். அவ்வாறான ஒரு தோட்டப்பகுதிக்கு நாங்கள் சென்றோம். அவரைப்பயிர் பூக்களோடும், சிறு சிறு பிஞ்சுக்காய்களோடும் வளர்ந்து அந்தச் சிறிய இடத்துக்குப் பசுமையான தோற்றத்தை வழங்கியிருந்தது. கிணற்றின் அருகில், ஒரு மரத்தடியில் சில கற்கள். கருப்பராயன், கன்னிமார் கடவுளர் என மக்கள் வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலைப்பகுதி போன்ற தோற்றத்தில் அகன்ற பெரியதொரு கல். அதையடுத்து, நீள் சதுர வடிவில் ஒருகல். அதன் நடுப்பகுதி செங்குத்தாய் நீண்டு அதில் நாகம் செதுக்கப்பட்டிருந்தது. இக்கல்லின் பரப்பில், வலப்புறம் சிறிய தூண் அமைப்பில் ஒரு புடைப்புச்சிற்பம். மீதியுள்ள சமதளப்பரப்பில் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியம் கூறினார். இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தன. இக்கல்லின் முன்புறம் உருண்டை வடிவில் சிறு சிறு கற்கள். அவை ஏழு கன்னிமார் கடவுளரைக் குறிப்பன. ஐந்து கன்னிமாரே காணப்பட்டனர். இரண்டு கன்னிமார் கற்களை யாரோ சொந்த வழிபாட்டுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது புதிய செய்தியாக இருந்தது. வழிபாட்டுக்காக எண்ணெய் பூசிப்பூசிக் கல்பரப்பு முழுதும் எண்ணெய்ப்பற்று. கூர்ந்து நோக்கியபோது எழுத்துகள் இருப்பது உறுதியாயிற்று.

இரும்புத்தகடு மூலம் எண்ணெய்ப்பற்றைச் சுரண்டி எடுத்தோம். அடை அடையாக, எண்ணெய்ச்செக்கில் வெளிப்படும் பிண்ணாக்குச் செதிள்கள் போல எண்ணெய்ப்பற்று வெளியேறியது. இரும்புப் புருசு மூலம் கல்பரப்பைத் தேய்த்தபின் எழுத்துகள் ஒருவாறு புலப்பட்டன. இரண்டு வரிகள் மட்டுமே புலப்பட்டன. எழுத்தமைதியை ஆராயும்போது கல்வெட்டின் காலம் கி.பி. 13 அல்லது கி.பி 14-ஆம் நூற்றாண்டு ஆகலாம் எனக் கருதமுடிகிறது. வெள்ளைச் சுண்ணாம்பை நீரில் கலந்து கல்வெட்டின்மீது பூசிக் காயவிட்டபின் எழுத்துகளைப் படிக்க முயன்றோம். கல்வெட்டின் பாடத்தை அப்போதே சரியாகக் படிக்க இயலவில்லை. முதல் வரியில் “ ராயண வ என்னும் சொல்லும், அடுத்தவரியில் “க்கு திரா த ரா ச என்னும் சொல்லும் புலனாயின.. ஆனால் கல்வெட்டின் ஒளிப்படததைக் கணினியில் உருப்பெருக்கம் செய்து ஆய்ந்து பார்த்ததில் கல்வெட்டின் இருவரிப் பாடம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.

கல்வெட்டின் பாடம்:

  1.  (வீ ர நா) ரா ய ண வ தி
  2.  க்கு  (அ) தி ரா ச  ரா ச  (ந்)

கல்வெட்டு சொல்லும் செய்திகள்

கல்வெட்டின் இரு வரிகள் நமக்குப் பல செய்திகளைச் சொல்லுகின்றன. வதி என்னும் சொல் வாய்க்காலைக் குறிக்கும். வாய்க்கால், வதி, ஏரி, மன்னறை (காடழித்து வேளாண் நிலமாக்கிய பகுதி) ஆகிய இடங்கள் அரசர் பெயரால் வழங்கப்படுதல் மரபு. கோவை சங்கமேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண்; 90/2004) “சிவபாதசேகர மன்னறைஎன்றும், பேரூர் அழகிய சிற்றம்பலக்கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண் 118/2004) “வீரகேரள விலாடகுல மாணிக்க வதிமற்றும் “அதிராஜராஜ வாய்க்கால்என்றும் வருவதைக் காண்க. அது போல், நம் கல்வெட்டிலும் வீரநாராயணவதிக்கு என வருகிறது. மேலும், அதிராசராச என்னும் அரசர் பெயரும் காணப்படுகிறது. கோயிலுக்கு நிலம் கொடையளிக்கப்பட்ட செய்திகள் கொண்ட கல்வெட்டுகளில், நிலத்தின் எல்லை வரையறுத்துச் சொல்லப்படும்போது நிலத்தை ஒட்டிய நான்கு திசைகளில் அமைந்திருக்கும் வதி, வாய்க்கால், மன்னறை, நிலம் போன்றவற்றின் குறிப்புகள் சொல்லப்படும். அது போலவே இக்கல்வெட்டிலும் சொற்கள் வருவதால் இக்கல்வெட்டு, நிலக்கொடை மற்றும் நிலத்தின் எல்லை பற்றிய செய்திகளைக் கொண்ட கல்வெட்டு என்பது உறுதியாகின்றது.

         நிலக்கொடை கோயிலுக்கு அளிக்கப்பட்டதா அன்றி வேறு காரணம் பற்றியா என்பது தெளிவாகவில்லை. காரணம், கல்வெட்டின் தொடக்கப்பகுதி இக்கல்வெட்டில் இல்லை. “ஸ்வஸ்திஸ்ரீஎனத்தொடங்கும் முதல்வரியுடன் கூடிய கல்வெட்டுப்பகுதி பிறிதொரு கல்லில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கல் கிடைத்தால்தான் கொடை பற்றிய செய்தியும், எந்த அரசன் காலத்தது என்பதும் தெரியவரும். இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதி நிலத்தில் புதையுண்டு கிடப்பதால், நிலத்தின் கீழுள்ள பகுதியையும் தோண்டி எடுத்துப்பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பற்றி நில உடைமையாளர் மற்றும் ஊர்க்கவுண்டர்கள் ஆகியோரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. எனவே, மேற்கொண்டு கல்வெட்டுச் செய்திகள் கல்வெட்டினை மீளாய்வு செய்தபின்னரே கிடைக்கும்.
  
அய்யாசாமி கோயில்
          அடுத்து நாங்கள் சென்ற இடம் சிறு சிறு கோயில்களாகப் பல கோயில்கள் அமைந்திருந்த தோட்ட ஒரு வளாகம். முதலில் அய்யாசாமி கோயில். பல ஊர்களில் அய்யாசாமி கோயில்கள் உள்ளன. இங்கு நாம் பார்த்த கோயில் ஊர்ப்பொதுக்கோயில் எனினும்,  பகல கூட்டத்தைச்சேர்ந்தவர்களின் பூசைப்பொறுப்பில் வழிவழியாக வந்துள்ளது. இறைவனின் திருமேனி ஒரு சிறிய படிமம். வலது காலை நேராக ஊன்றியும் இடது காலை மடக்கியும் வைத்த நிலையில் இறைவன் காணப்படுகிறார். பூணூல் அணிந்துள்ளார். இவர் ஒரு குழந்தை சாமி என்னும் கருத்து நிலவினாலும் இங்குள்ள திருவுருவம் மீசையுடன் காணப்படுகிறது. கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியது போலக் காணப்படுகிறது. விஷ்ணுவுடன் தொடர்புபடுத்துகின்றனர்.


முட்டாள் ராக்கியப்பன் கோயில்

         இப்பெயரில் வணங்கப்படும் இறைவனின் சிற்பம் ஒரு நினைவுக்கல் சிற்பத்தையே காட்டுகின்றது. ஒரு வீரர் தலைவனின் உருவத்தைக்கொண்டுள்ளது. நெடியதாய் நின்ற தோற்றம்.  தலைமுடியின் நடுப்பகுதி உச்சியில் நன்கு முடியப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. கட்டப்படாத முடி சடை முடியாகப் பக்கவாட்டில் தொங்குகிறது. முகத்தில் மேல்நோக்கிய நிலையில் முறுக்கு மீசை. கழுத்தில் நிறைய அணிகலன்கள். கைகளில் வளைகளும் கால்களில் கழல்களும் உள்ளன. கால்களில் கழலோடு சேர்ந்து சிலம்பு போன்ற ஓர் அணிகலன் காணப்படுகிறது. பாதங்களில் பாதக்குறடு அணிந்துள்ளார். கைக்ள் கூப்பியிருந்தாலும் கைகளுக்கிடையில் ஒரு குறுவாள் உள்ளது. இடையிலும் ஒரு குறுவாள் உள்ளது. முழங்கால் வரையிலான ஆடை. இடையாடையிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அணிகலன் ஒன்றில் தாயத்துப்போன்ற ஒரு பொருள் காணப்ப்டுகிறது. ஆடையின் இருபுறமும் சுங்குகள். சிற்பத்தின் வலது புறம் சூலம் போன்ற ஓர் ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூல நுனியில் இரு நீட்சிகளே உள்ளன. மொத்தத்தில், பெரும்பதவியிலிருக்கும் வீரர் தலைவனின் நினைவுக்கல்லாக இதைக் கருதுமாறு தோற்றம்கொண்டுள்ளது. முட்டாள்’  என்னும் முன்னொட்டுச் சொல்லின் விளக்கம் தெரியவில்லை. சிற்பத்தின் நேர்த்தியான வடிவமைப்பு இதன் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக் கருதவைக்கிறது.


         வாயில் கதவின் இரு பக்கச் சுவர்களின் அடிப்பகுதியில் சிற்பத்தொகுதியுள்ள இரு சிறு கற்கள் உள்ளன. ஒன்றில் இரு யாளி உருவங்களும் ஒரு யானை உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொன்றில் இரு குரங்குகள் கைகளில் ஒரு பொருளை வைத்து விளையாடுவது போன்ற உருவமும் இரு வீரர்கள் போரிடுவது போன்ற உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சுவர்ப்பகுதி முடிந்து கூரைப்பகுதி தொடங்கும் இடத்தில் யாளி வரிசை, பூத்கண வரிசை காணப்படும். அத்தகைய வரிசைக் கற்களில் இரண்டினை இங்கே வைத்துப் பதித்துள்ளனர் என்று தெரிகிறது.





பேச்சியம்மன், மசிறியாத்தா கோயில்

         இக்கோயிலில், பேச்சியம்மன், மசிறியம்மன், அன்னையர் எழுவர் (கன்னிமார்)  திருவுருவங்கள் உள்ளன. சிற்பங்கள் பிற்காலத்தவை. பேச்சியம்மன் சிற்பத்தில் கைகளில் சங்கு சக்கரங்கள் வைஷ்ணவியை ஒத்துள்ளன. மசிறியாத்தா சிற்பம் கையில் குழந்தையுடன் காணப்படுகிறது. ராக்கியப்பன், பேச்சியாத்தா, மசிறியாத்தா கோயில்கள் இப்பகுதியிலிருக்கும் பூந்துறை காடை கூட்டத்தவர் வழிபாட்டுக்குரியவை.
         


ஆநிரை தொடர்பான வீரக்கல்

         இறுதியாக, ஒரு தென்னந்தோப்பில் மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு வீரக்கல்லைப் பார்த்தோம். கி.பி. 15/16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதத்தக்க ஒரு வீரக்கல் சிற்பம். அது. ஒரு வீரன் பகை வீரனுடன் போரிடும் காட்சியை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.மார்பளவு மட்டுமே உள்ள அச்சிற்பத்தில் பகை வீரனின் உருவம் புலப்படவில்லை. மண்ணுக்குள் புதையுண்ட பகுதியைத் தோண்டி எடுத்தபின்னரே அச்சிற்பம் ஆநிரை கவர்தலோடு தொடர்புள்ளதா என உறுதிபடுத்த இயலும். வேளாண் பணியின் போது இச்சிற்பம் வெளிப்பட்டதாகவும், அரசுக்குத் தகவல் தரப்பட்டு, அரசு வருவாய்ப்பிரிவின் அலுவலர்கள் இச்சிற்பத்தை வந்து பார்த்துப்போனதாகவும் சொன்னார்கள்.



முடிவுரை

         கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல, பெரியகுயிலி ஊர்ப்பகுதி தொல்லியல் சார்ந்த பகுதி என அறியப்படுகிறது. இப்பகுதியில் பழங்கோயில் ஒன்று இருந்துள்ளது என்றும் அழிந்துபோன அதன் எச்சங்களாகச் சில சிற்பங்களும் கற்றூண்களும் பல இடங்களில் சிதறுண்டு போனதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். மேலும் சில சான்றுகள் கிடைத்தால் இச்செய்தி மெய்யாகக் கூடும்.


















து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,கோவை.

அலைபேசி : 9444939156.