மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 3 ஜூன், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்


         சென்ற பாடத்தில் நான்கு கல்வெட்டுகளின் ஒளிப்படங்களைத் தந்து அவற்றைப்படிக்கும் முறையையும் சொல்லியிருந்தேன். நீங்கள் அவ்வாறு படித்திருந்தால் உங்கள் பாடத்தைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். சரியான பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

வரி 1 உடையார் ஸ்ரீராஜராஜதேவர் சேரமானையும் பாண்டியர்களையும் மலைநாட்டு எறிந்துகொண்ட பண்டாரங்களில் யாண்டு இருபத்தாறாவது நாள் முன்

வரி 2 னூற்று ஒருபத்தொன்பதினால் ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய பரமஸ்வாமிக்குக் குடுத்த பொன்னின் சின்னங்கள் ஆடவல்லான் என்னும் கல்லா

வரி 3 ல் நிறையெடுத்து கல்லில் வெட்டினபடி காளாஞ்சி ஒன்று பொன் ஐஞ்ஞூற்று எண்பத்து அறுகழஞ்சு – காளாஞ்சி ஒன்று பொன் அறுநூ

வரி 4 ற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று எண்பத்து இரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று அறுபத்து எழு

வரி 5 கழஞ்சு குட ஒன்று பொன் முன்னூற்று ஐம்பத்து ஒரு கழஞ்சு – குடம் ஒன்று பொன் இருநூற்றுத் தொண்ணூற்று நாற்கழஞ்சு – கரண்டிகைச்

வரி 6 செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட பொன் நூற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் மூழலும் உட்பட பொ

வரி 7 ன் நூற்று எண்பத்து ஐங்கழஞ்சே முக்கால் இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் .... லும் உட்பட பொன் நூற்று நாற்பத்து எழு கழஞ்சு –

வரி 8 தளிகை ஒன்று அடியுட்பட (பொன்) ஆயிரத்து ஒருநூற்று முப்பத்து ஐங்கழஞ்சரை  கல ...... நை ஒன்று மூக்கும் அடியும் உட்பட பொன் நானூற்று எ



சில விளக்கக் குறிப்புகள் :

  • நீலவண்ணத்தில் காட்டப்பட்டுள்ள எழுத்துகள் கிரந்த எழுத்துகள். அவற்றின் வடிவத்தை இக்கட்டுரையின் இறுதியில் காண்பித்திருக்கிறேன்.
  • அருஞ்சொற்பொருள் :

உடையார் = அரசர்
எறிந்து = வென்று
பண்டாரங்கள் = கருவூலங்கள்
ஈஸ்வரம் = சிவன்கோயில்
பரமஸ்வாமி = இறைவன்
சின்னங்கள் = பொருள்கள்
ஆடவல்லான் என்னும் கல் = எடைக்கல்
காளாஞ்சி = தாம்பூலக்கலம்
கழஞ்சு = நகை எடைகளில் ஒன்று
கரண்டிகை = பானை போன்ற கலம்
இலைச்செப்பு = வெற்றிலைச்சிமிழ்
மூழல் = மூடி
தளிகை = தட்டு அல்லது உண்கலம்

  • கல்வெட்டின் செய்தி :

முதலாம் இராசராசன் சேர பாண்டியரை வென்று அவர்களின் கருவூலங்களிலிருந்து  கொணர்ந்த செல்வங்களைக்கொண்டு தஞ்சைப்பெரியகோயிலுக்குப் பொன்னால் செய்யப்பட்ட பல பொருள்களைக் கொடையாக அளித்தான். கொடை அளிக்கப்பட்ட ஆண்டு இராசராசனின் இருபத்தாறாவது ஆட்சியாண்டு; (கி.பி. 1011) அவ்வாண்டில் முன்னூற்றுப் பத்தொன்பதாவது நாளும் கூட.

  • சில நுட்பங்கள் :

நாம் முன்னூற்றுப் பத்தொன்பது என்று தற்போது குறிப்பதைக் கல்வெட்டு முன்னூற்று ஒருபத்தொன்பது என்றும், நாம் நூற்றுப்பத்து என்று கூறுவதைக் கல்வெட்டு நூற்று ஒருபத்து என்றும் குறிப்பதை நோக்குக.

வெற்றிலைச்சிமிழுக்கு நான்கு கால்களை யாளியின் உருவத்தில் அமைத்த கலை வடிவத்தின் அழகை நோக்குக.

அரசன் ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து ஆட்சிக்காலம் ஆண்டு மற்றும் நாள் கணக்கீடு பெறுவதைக் காண்க.

  • கிரந்தம் பற்றிய குறிப்புகள் :

கல்வெட்டில் வரும் கிரந்த எழுத்துகளைக் கீழே இணைத்துள்ளேன். இவ்வாறு, அவ்வப்போது காணுகின்ற கிரந்த எழுத்துகளைத் தனியே தொகுத்து வைத்துக்கொள்வது நலம். பின்னால் கல்வெட்டுகளைப் படிக்கும் நேரத்தில் அடையாளம் கண்டு படிக்கத் துணை செய்யும்.
 
------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

வியாழன், 14 மே, 2015

மதுரை அரண்மனை


         இந்தியத் தொல்லியல் துறையினர் வெளியிட்டுள்ள தென்னிந்தியக் கல்வெட்டுகள் நூல்களில் தொகுதி பதினான்கு பாண்டியர் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. இந்நூலைப் படித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக மதுரை அரண்மனையைப்பற்றிய குறிப்பு ஒன்றைக் காணநேர்ந்தது. மதுரைநகர், மதுரைக்கோயில், மதுரையரண்மனை ஆகியனபற்றி ஆய்வு செய்து வருகின்ற ஆய்வாளர்க்கு இக்குறிப்பு பயன்படும் என எண்ணி அச்செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
         பிற்காலப்பாண்டியஅரசன் சடையவர்மன் ஸ்ரீவல்லபன், தன் பத்தொன்பதாம் ஆட்சியாண்டு மற்றும் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டு ஆகியவற்றின் இடைப்பட்ட காலகட்டத்தில் மதுரை அரண்மனையில் சிஙகாதனத்தில் எழுந்தருளியிருந்து ஆணைகள் பிறப்பித்ததை அக்கல்வெட்டுகள் கூறுகின்றன. அச்செய்திகளில், மதுரை அரண்மனை எங்கு அமைந்திருந்தது எனபதற்கான குறிப்பு உள்ளது. மேற்படி காலகட்டம் கி.பி. 12-ஆம் நூற்றண்டில் கி.பி. 1177-1180 ஆகும். மதுரையின் உட்பிரிவான மாடக்குளக்கீழ் என்னும் பகுதியில் அமைந்துள்ள மதுரையரண்மனையின் உட்பக்கத்தில் இருவேறு இடங்களில் இருந்த இரண்டு சிங்காதனங்களில் எழுந்தருளியிருந்து (அமர்ந்து) ஆணைகள் பிறப்பித்தான். கல்வெட்டுகளின் விவரம் வருமாறு :

கல்வெட்டு 1 :  க.வெ.எண். 250. ஆண்டறிக்கை எண். 371/1929-30.

கல்வெட்டின் இருப்பிடம் : திருச்செந்தூர் வட்டம்-கட்டாரிமங்கலம் வீரபாண்டீசுவரர் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :
வரி 2 : “.................கோச்சடையபன்மரான திரிபுவனச்சக்கரவற்த்திகள் ஸ்ரீவல்லப தேவற்க்கு யாண்டு 19 (தமிழ் எண்களில்) தாவது நாள் அஞ்ஞூற்றினால்  மாடக்குளக்கீழ் மதுரைக்கோயி லுள்ளாலைப் பள்ளியறைக்கூடத்துப் பீடங் கலிங்கத்தரையனி லெழுந்தருளி இருந்து .............................”

விளக்கம் : அரசன் ஆணை பிறப்பித்த நாள் – 19-ஆம் ஆட்சியாண்டின் 500-ஆவது நாள். சடையவர்மன் ஸ்ரீவல்லபனின் ஆட்சிக்காலம் கி.பி. 1158-1185. (மூலம்: பாண்டியநாட்டு வரலாற்றாய்வு மையம், மதுரை) எனவே, 19-ஆம் ஆட்சியாண்டு கி.பி.1177 ஆகும். மாடக்குளம், மதுரையின் உட்பிரிவு. மதுரைக்கோயில் என்பது மதுரையின் இறைவர் கோயிலைக்குறிக்காது. அரசனின் அரண்மனையைக்குறிக்கும். இறைவனின் கோயிலைக் குறிக்க “ஸ்ரீகோயில்” என்னும் சொல் கல்வெட்டில் பயில்கிறது. உள்ளாலை என்பது உட்பகுதியைக்குறிக்கும். பள்ளியறைக்கூடம் என்பது அரசிருக்கைக்கூடம். பீடம்-சிங்காதனம். கலிங்கத்தரையன் என்பது சிங்காதனத்தின் பெயர். (ஒவ்வொரு சிங்காதனத்துக்கும் தனித்தனியே பெயர் உண்டு.)
மதுரையின் உட்பகுதியான மாடக்குளக்கீழ் என்னும் இடத்தில் அமைந்துள்ள அரண்மனையில் அரசிருக்கைக்கூடத்தில் கலிங்கத்தரையன் என்னும் சிங்காதனத்தில் அமர்ந்து அரசன் ஆணையிடுதலைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு 2 : க.வெ. எண் : 254. ஆண்டறிக்கை எண் : 322/1908.

கல்வெட்டின் இருப்பிடம் : மதுரை நிலக்கோட்டை வட்டம்-குருவித்துறை வல்லபப்பெருமாள் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :

வரி 2: “..........................................................................கோச்சடையபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவல்லபதேவர் மாடக்குளக்கீழ் மதுரைக்கோயிலில் உள்ளாலை நாடகசாலையில் பள்ளிக்கட்டில் பாண்டியராயனில் எழுந்தருளி இருந்து இருபத்திரண்டாவது நாள் இருநூற்றினால் .........................................”


விளக்கம் : அரசனின் 22-ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1180-ஆம் ஆண்டில், மதுரை அரண்மனையில் உள்ள நாடகசாலையில் அமைந்திருந்த பாண்டியராயன் என்னும் சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசன் ஆணை பிறப்பித்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. பள்ளிக்கட்டில்-சிங்காதனம். நாடகங்கள் நடத்தப்பெற்றன என்பதும், அதற்குத் தனியே நாடகசாலை இருந்ததும் கூடுதல் செய்திகள்.

கல்வெட்டு 3 : க.வெ. எண் : 257. ஆண்டறிக்கை எண் : 555/1922.

கல்வெட்டின் இருப்பிடம் : சாத்தூர் வட்டம், திருத்தங்கல்-நின்றநாராயணப்பெருமாள் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :
வரி 7 : “..........கோச்சடையவன்மரான    புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவல்லபதேவற்கு யாண்டு 22 (தமிழ் எண்களில்) வதி னெதிராமாண்டு மது
வரி 8 : யோதைய வளநாட்டு மாடக்குளக்கீழ் மதுரைக்கோயிற் கட்டணத்துப் பள்ளியறையிற் கலிங்கத்தரயன் பள்ளிப்பீடத்
வரி 9 : திலெழுந்தருளியிருந்து திருவாய்மொழிந்தருளினபடி................”

விளக்கம் : அரசனின் 22-ஆம் ஆண்டான கி.பி. 1180-ஆம் ஆண்டில், மதுரை அரண்மனையில் அரசு கட்டில் (அரியணை) உள்ள அறையில் கலிங்கத்தரயன் என்னும் பெயர்கொண்ட சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசன் ஆணை பிறப்பித்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. முதல் கல்வெட்டில் சுட்டப்பெறும் அதே அரியணையில் வீற்றிருந்தே அரசன் ஆணையிடுகிறான். ஆனால், மாடக்குளக்கீழ் என்னும் பகுதி ஒரு அடைமொழி (மதுரோதைய வளநாடு) சேர்ந்து குறிப்பிடப்படுகிறது. கட்டணம் என்னும் சொல் கட்டடம் என்பதைக்குறிக்கும்.

கல்வெட்டு 4 : க.வெ. ஏண் : 264. ஆண்டறிக்கை எண் : 7/1929.

கல்வெட்டு இருப்பிடம் : நாங்குனேரி வட்டம், தளபதிசமுத்திரம் திருநாகேசுவரர் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :

வரி 1: “ ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீவல்லதேவர் மாளிகை முதல்படி மாடக்குளக்கீழ் மதுரையுதையவளநாட்டு இராசசிங்கன்குளக்கீள் இராசேந்திரசோழபுரத்து உள்ளாலை பெரியமாளிகையில் முன் .... நிலையில் தெற்க்கில்ப் பள்ளியறைக்கூடத்துப் பள்ளிக்கட்டில் கலிங்கத்தரையன்னில் லெழுந்தருளி இருந்து ......................”

விளக்கம் : இக்கல்வெட்டில் அரசனது ஆட்சியாண்டு குறிக்கப்படவில்லை. அரியணை முன்பு சுட்டிய அதே “கலிங்கத்தரையன்” பெயர்கொண்ட அரியணை என்றபோதிலும், மாடக்குளக்கீழ் என்னும் இடப்பகுதி மேலும் விளக்கம் பெறுகிறது. இராசசிங்கன்குளக்கீள் என்னும் புதிய தொடரும், இராசேந்திரசோழபுரம் என்னும் புதிய தொடரும் காணப்படுகின்றன. இராசசிங்கன்குளக்கீ(ழ்)ள் என்பது மதுரை சிம்மக்கல்லோடு தொடர்புடையதாக இருக்குமோ? ஆய்வாளர்கள் ஆய்க.

கல்வெட்டுகளின் ஒளிப்படங்களை இணைத்துள்ளேன்.


சுந்தரம். 







செவ்வாய், 5 மே, 2015



பூராண்டம்பாளையம் பரமசிவன் கோயில் கல்வெட்டு
                                                     து.சுந்தரம், கோவை

         கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் பூராண்டம்பாளையம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரில் ஒரு பழமையான சிவன் கோயில் உள்ளது எனக் கேள்விப்பட்ட கட்டுரை ஆசிரியர், அச்சிவன் கோயிலில் கல்வெட்டு ஏதேனும் கிடைக்கக்கூடும் என்று அங்கே சென்றார். கோயிலின் தோற்றத்தில் பழமை புலப்படவில்லை. 1999-ஆம் ஆண்டு புது வண்ணம் பூசப்பட்டுக் குடமுழுக்கு நடைபெற்றதால் தற்போது பழமையின் சுவடு ஏதுமின்றிப் புதுமையான தோற்றம் பெற்று விளங்குகிறது. உள்ளே நுழைந்ததும் இடப்புறம் ஒரு பசுமாட்டின் உருவச் சிலையும், வலப்புறம் ஒரு குதிரைச் சிலையும் காணப்படுகின்றன. பசுவின் உருவம் சிலை என்னும் எண்ணம் தோன்றாதவாறு உயிர்ப்புடன் தோற்றமளிக்கிறது. குதிரையின் தோற்றமும் அழகானது. விளக்குக் கம்பத்தைத் தாண்டி கோயிலின் முக மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியன உள்ளன. பூசையாளர் சதாசிவத்துடன் பேசும்போது அவர், கருவறையில் நாம் வழக்கமாகக் காணும் சிவலிங்க வடிவில் இறைவன் இல்லை என்றும் ஐந்து வேல்களே மூலவராகக் காட்சியளிப்பதாகவும் கூறினார்.

         கல்வெட்டுகள் எவையேனும் உள்ளனவா எனக் கேட்டபோது, பழமையான கல்வெட்டுகள் இக்கோயிலில் இல்லை என்றும் பிற்காலத்துக் கல்வெட்டு ஒன்று தூணில் இருப்பதாகவும் கூறி அவர் அந்தத் தூண் கல்வெட்டைக் காட்டினார். அக்கல்வெட்டு முகமண்டபத்தில் இருந்த ஒரு தூணில் இருந்தது. முகமண்டபம் சற்றே பழமையான தோற்றத்தில் கல் தூண்களோடு காணப்பட்டது. எல்லாத்தூண்களும் கருமை நிறத்தில் எண்ணை வண்ணம் (Oil Paint) பூசப்பட்டுக் கரிய நிறத்தில் தோற்றமளித்ததால். கல்வெட்டு எழுத்துகள் இருப்பது பார்வைக்குப் புலப்படவேயில்லை. தூணை மிக நெருங்கிப் பார்த்தபின்னர்தான் எழுத்துகள் புலப்பட்டன. ஆயினும், பார்க்கும் அந்த நிலையிலேயே எழுத்துகளைப் படிக்க இயலவில்லை. வெள்ளைச் சுண்ணம் பூசியபின்னரே படிக்கமுடிந்தது. கல்வெட்டு  நூற்றுப்பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 1897-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் சாலியவாகன சகாப்தம் 1819-ஆம் ஆண்டு, கலியுக சகாப்தம் 4998-ஆம் ஆண்டு, ஆங்கில ஆண்டு 1897 ஆகிய மூன்று ஆண்டுகளும் குறிக்கப்பட்டுள்ளன. இவை தவிர அறுபது ஆண்டுகள் நிறைந்த தமிழ் வட்ட ஆண்டான ஏவிளம்பியும் குறிப்பிடப்பெறுகிறது. ஆங்கிலத் தேதி மே மாதம் 30 எனவும், தமிழ்த்தேதி சித்திரை 19 எனவும் விளக்கமாகக் காலக்குறிப்பு உள்ளது.



             கல்வெட்டின் பாடம்       

               சாலியவாகன 
       சகாத்த வரு 1819
       கலியுக சகாத்த
       வரு 4998 இத
       ன் மேல்ச் செ
       ல்யாகி(வ)ருகு
       ர 1897 வரு மே
       மசம் 30
       தேதிக்கிச்ச
       ரியான தமி
       ள் ஏவி
       ளம்பி வரு
       சித்திரை
       19 தேதி பூரா
       ண்டம் பா
       ளையம் ப
       ரம சிவனு
       க்குக் கம்
       பம் உபயம
       க இலட்சுமி
       நாயக்கன்பா
       ளையம் குருவ
       ப்ப நாயக்கன்
       மகன் வெங்
       கிடசாமி (நாய)
       க்கனால் வெ
       ச்சது
       சிவமயம்

தூண் கொடையாக அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. அருகில் உள்ள இலட்சுமி நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த குருவப்ப நாயக்கன் மகன் வெங்கிடசாமி நாயக்கன் என்பவர் இத்தூணை (கம்பம்) அளித்துள்ளார்.
  
         கருவறையில் இறைவனாக ஐந்து வேல்களே வழிபடப்பெறுகின்ற தனிச்சிறப்பை இக்க்கோயில் பெற்றுள்ளது என முன்னரே பார்த்தோம். இது பற்றிப் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளாரும், பேரூர்த்தமிழறிஞர் முனைவர் ந.இரா. சென்னியப்பன் அவர்களும் கூறுகின்ற கருத்துகள் வரலாறு, சமயம், இலக்கியம், மக்கள் மரபு ஆகியனவற்றை இணைக்கும் பாங்குள்ளவை.
அவற்றில் சில :
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் கற்கருவிகளையும் உலோகக்கருவிகளையும் பயன்படுத்தி வந்துள்ளான். உலோகக் கருவிகளுள் இரும்பாலான வேல் அகழாய்வுகளில் பல இடங்களில் கிடைத்துள்ளது. அக்காலத்தில் வேல் சிறந்த கருவுயாகப் பயன்பட்டு இருக்கவேண்டும். பழங்கால ஓவியங்களில் கையில் வேல் வைத்துக்கொண்டிருப்பது போன்ற ஓவியங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் வெள்ளருகம்பாளையத்திற்கு அண்மையில் உள்ள வால்கறடு என்ற பகுதியில் கற்கால மனிதர்கள் வரைந்த  ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கையில் வேல் கொண்டு விலங்கின் மேல் எறிகின்ற நிலையில் ஓர் ஓவியம் உள்ளது. எனவே மிகப்பழங்காலந்தொட்டு வேல் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வருகிறது.

வேல் என்னும் சொல்லுக்கு ஏமம் (அதாவது பாதுகாப்பு) என்பது பொருள். விலங்குகளாலும் பகைவர்களாலும் வந்த தாக்குதலை, துன்பத்தை எதிர்கொண்ட இயல்பான ஆயுதமாக “வேல்” விளங்கியது என எண்ணலாம். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்கு “வேலன்” என்ற ஓர் பெயரும் உண்டு. வேலை வழிபடுவது வேலனை வழிபடுவதாகவும், முழு முதலான சிவப்பெரும் பொருளை வழிபடுவதாகவுமிருந்து வந்துள்ளது. உருவம், அருவம், அருவுருவம் என வழிபாடுகள் மூவகையின. இலிங்கத்திருமேனிகள் அருவுருவ வழிபாட்டில் அமைவன. ஐந்து வேல்களை நட்டுவைத்து வழிபாடாற்றும் அருவுருவ வழிபாட்டுப் பழமையான மரபு கொங்கு நாட்டில் பின்பற்றப்படுகிறது. இவ்வழிபாட்டினை “பரமசிவன் வழிபாடு” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஐந்து வேல் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களைக் குறிக்கும். ஐந்து முகங்களாவன : ஈசானம், தற்புருடம்(தத்புருஷம்), அகோரம், வாமம், சத்யோசாதம்(சத்யோஜாதம்). சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதையில் புகாரிலிருந்த பல கோயில்களைப்பற்றி அறிய முடிகிறது. அவற்றுள் ஒன்று வேற்கோட்டமாகும். அக்காலத்தில் வேல் தனியாக வைத்து வழிபடப்பட்டது என்பதற்கு இது சிறந்த சான்றாகும். வேல் வைத்து வழிபடும் பரமசிவன் வழிபாடு கொங்குநாட்டின் இருபத்தொரு இடங்களில் நடைபெறுகின்றன. அவற்றுள் பூராண்டம்பாளையம் பரமசிவன் கோயிலும் ஒன்று. 


இக்கோயிலின் இன்னொரு சிறப்பு இங்குள்ள சுடுமண் சிற்பங்களாகும். மண் சார்ந்த தொழில்கள் தமிழகத்தில் பண்டு தொட்டு இருந்துள்ளன. மட்பாண்டக்  கலையும், சுடுமண் சிற்பக்கலையும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சிறப்பான நிலையில் இருந்துள்ளன என்பதற்குப் பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கல் பதுக்கைகள், கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள் ஆகியனவற்றின் அமைவிடங்களில் நடத்தப்பெற்ற அகழாய்வுகளின் போது கிடைத்த கருப்பு சிவப்பு ஓடுகள், மட்கலங்கள், மற்றும் சுடுமண் சிற்பங்கள் ஆகியன சான்றுகளாய் நிற்கின்றன. கோவை போளுவாம்பட்டியில் அகழாய்வில் கிடைத்த சுடுமண் சிற்பம் குறிப்பிடத்தக்கது. முதுமக்கள் தாழிகள் மண்ணால் செய்யப்பட்டவையே. தமிழ் எழுத்துகளின் மிகப்பழமையான வரி வடிவமான “தமிழி” எனப்படும் “தமிழ் பிராமி” எழுத்துகள் மட்கலங்களில் கிடைத்துள்ளன. இக்கலையில் தேர்ந்தவர்கள் பழங்காலத்தில் “மண்ணீட்டாளர்”, ”கலம்செய் கோ” என்றும்,  பின்னாளில் குலாலர், குயவர் என்றும் அழைக்கப்படுகின்றனர். சிற்பக்கலைக்குரிய செய்பொருள்கள் பத்தில் மண்ணும் ஒன்று என்பதைத் திவாகர நிகண்டு,
 
        ”கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
     மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
     கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
     பத்தே சிற்பத்தொழிலுக்குறுப்பாவன”

என்று குறிப்பிடுகிறது.
”தெய்வங்களுக்கு மண்சிலை வைத்து வழிபடுவது தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். சிறுதெய்வக்கோயில்களில் ஐயனார், முனியப்பன், மதுரைவீரன், மாரியம்மன், காளியம்மன், பேய்ச்சியம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வ உருவங்களும், குதிரை,யானை,காளை ஆகிய தெய்வ வாகனங்களும் பெரிய வடிவத்துடன் கலை நேர்த்தியுடன் செய்யப்படுகின்றன. இச் சுடுமண் கலை வடிங்களைத் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடனாக வாங்கிவைத்து வழிபடும் வழக்கம்  நாட்டுப்புற மக்களிடம் உள்ளது.” – குலாலர் தளம்  (இணையம்).
“கிராமத் திருவிழாக்களில் இடம்பெறும் புரவியெடுப்பு, அம்மன் திருவிழா போன்றவற்றுக்குத் தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட பிரதிமைகள் தயாரிக்கப்பட்டு நெருப்பிலிட்டுச் சூடு செய்யப்பெறும். இவை தொன்மையான தமிழ்க்கிராமங்களில் நிகழ்பவை.” – தமிழாசான் (இணையம்).

”சுடுமண் சிற்பக்கலைகள் தமிழரின் கிராமியத் தெய்வங்களுக்குரியவையே தவிர ஆரியக்கடவுளருடையவை அல்ல.”  - சுகுணன் (வவுனியா).

          பூராண்டம்பாளையம் சிவன் கோயிலில் இத்தகு சுடுமண் சிற்பங்கள் இருப்பது சற்றே வியப்பை அளிக்கிறது. காரணம் குதிரை, யானை ஆகிய சிற்பங்கள் காவல் தெய்வங்களுக்கான கோயில்களிலும் அம்மன் கோயில்களிலும் பெரும்பாலும் காணப்படும். இச்சுடுமண் சிற்பங்கள் மிகப் பழமையானவை என்பதும் இவை கலை நுட்பத்துடன் அழகுறச் செய்யப்பட்டிருக்கின்றன என்பதும் எண்ணத்தக்கது. பெரிய வடிவத்தில் ஒரு யானையும் இரு குதிரைகளும்; சிறிய வடிவிலான இரு குதிரைகள். யானையின் குமிழ் போன்ற தலை முகடுகள், சிறிய கண்கள், சிறிய தந்தங்கள், பருத்த உடல், முதுகின்மேல் அம்பாரி எனப் பார்ப்பதற்கு அழகான காட்சி. துதிக்கை உடைந்த நிலையில் பிற்காலத்தவர் உடைந்த குறைப்பகுதியை நிறைவு  செய்ய முயன்றுள்ளனர். ஆனால் வடிவம் பொருந்தவில்லை. குதிரைகளின் தூக்கிய செவிகள், புடைத்த கண்கள், மூக்குத் துளைகள் என அழகான வடிவங்கள். சிற்பங்கள் அனைத்திலும் வேலைப்பாடுகளுடன் கூடிய நிறைய  அணிகலன்கள். பூசையாளர்,  இச்சிற்பங்கள் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறினார். காலம் கணிக்க இயலவில்லை. எனினும், இவை போன்ற பழமையான அரிதான சிற்பங்கள் கோவைப்பகுதியில் காண இயலா. இச்சிற்பங்களுக்கு அருகிலேயே பிற்காலச் சிற்பங்களின் தொகுப்பும் உள்ளது.

         அடுத்து, இக்கோயிலில் “ஐயன் கோயில்” என்னும் பெயரில் ஒரு சமாதி வழிபடப்படுகிறது. அரசூரிலிருந்து இவ்வூருக்குச் சிறுவனாக வந்து சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர் இறையருள் பெற்று ஊர்மக்களின் நோயைத் தீர்த்துள்ளார். அவரே இங்கு வேல்களை நட்டுப் பூசை செய்யத்தொடங்கினார். இவ்வூரைச் சேர்ந்த எலமார் நாயக்கர் வழிவந்தோர் கோயில் அமைத்தனர். 
        















து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.








செவ்வாய், 28 ஏப்ரல், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  

படிக்கும் பயிற்சி தொடர்கிறது.
இப்பகுதியில் நான்கு ஒளிப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நான்கு படங்களையும் ஒருசேரப்படிக்கவேண்டும். அதாவது முதல் படத்தின் 
முதல் வரி, அடுத்து இரண்டாவது படத்தின் முதல் வரி என வரிசைப்
படுத்திப்படித்தால் நீண்ட சொற்றொடர்  கிடைக்கும். பின்பு முதல் படத்தின் 
இரண்டாவது வரி, இரண்டாவது படத்தின் இரண்டாவது வரி எனப் படிக்க
வேண்டும். 
தமிழ் எழுத்தல்லாது கிரந்த எழுத்துகள் வரும் பகுதி அடுத்த பாடத்தில் 
விளக்கப்படும். 

படம் - 1



படம் - 2


படம் - 3



படம் - 4



சுந்தரம்.

திங்கள், 27 ஏப்ரல், 2015

தொல்லியல்துறை அறிஞர் க.குழந்தைவேலன் அவர்களின் சொற்பொழிவிலிருந்து.


         அண்மையில் கோவை வாணவராயர் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் தொல்லியல் துறையில் பணியாற்றிய கல்வெட்டு ஆய்வறிஞர் திரு.க.குழந்தைவேலன் அவர்கள் கல்வெட்டுகள் பற்றி உரையாற்றினார். பயனுள்ள பல செய்திகளை நாம் அறிய முடிந்தது. சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டே எடுத்த சிறு சிறு குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இக்கட்டுரையைப் பகிர்ந்துகொள்கிறேன்.

         சொற்பொழிவாளர், மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் “கொங்கு நாட்டுப் பெருவழிகள்” என்னும் தலைப்பில் கட்டுரை படித்தவர். “கல்லும் சொல்லும்”, “பாளையப்பட்டு வம்சாவளிகள்” ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

         இனி, அவருடைய சொற்பொழிவிலிருந்து:

வரலாற்றுக்கு அடிப்படையாய் கல்வெட்டுகள் அமைகின்றன. இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் தமிழகத்தில் கிடைத்தவையே எண்ணிக்கையில் மிகுதி. தமிழ் நாட்டு வரலாறு, மொழி மற்றும் பண்பாட்டை அறிய அவை பெரிதும் துணை செய்கின்றன. பழந்தமிழர், பல்வேறு தாக்கங்களுக்கிடையில் மொழியைக் காப்பாற்றியுள்ளனர். மொழியில் பெயர்ச்சொற்கள் முதன்மையானவை. தமிழர், ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் வைக்கும்போது அப்பொருளின் வண்ணம், உருவம், பயன்பாடு ஆகியனவற்றின் அடிப்படையில் பெயர் அமைத்தனர். சங்க காலத்திற்குப் பின்னர் வந்த அரசர்கள் வடமொழிக்குத் துணை நின்றதாகத் தெரிகிறது. அரசர்களின் பெயரில் தமிழ் இல்லை என்பதைப் பாருங்கள். தமிழ் மொழியின் அடையாளம் இல்லை. கோயில்களே முதன்மையாய் இருந்த அக்கால கட்டத்தில், வடமொழிப்பூசையாளர் தம்மை நிலை நிறுத்திக்கொள்ளப் பல செயல்பாடுகளில் ஈடுபட்டனர். ஊர்ப்பெயர்களையும், கோயில்களின் இறைவர் பெயர்களையும் தமிழ் மொழியிலிருந்து  வடமொழியாக்கம் செய்தனர். ஆனால் மக்கள் வழக்கில் தமிழ் இருந்ததால் கல்வெட்டுகளில் மக்களின் வழக்காற்றுக்கேற்ப நல்ல தமிழ்ப்பெயர்கள் நிலை நின்றன. எடுத்துக்காட்டாக நடராசர் என்னும் வடமொழிச்சொல் தேவாரத்திலோ, கல்வெட்டுகளிலோ இல்லை. ஆடவல்லான், கூத்தன், கூத்தபிரான், நக்கன் ஆகிய பெயர்களே கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ஆடவல்லான் வடமொழியாக்கம் பெற்று நடராசர் ஆயிற்று. இதே போல், சிற்றம்பலம் சிதம்பரம் ஆயிற்று. தஞ்சைக்கருகில் உள்ள ஊர் திருநெல்லிக்கா. நெல்லிக்கு வடமொழியில் அமலா என்று பெயர். திருநெல்லிக்கா அமலேசுவரம் ஆயிற்று.

         முன்னரே குறிப்பிட்டவாறு, தமிழர் வண்ணம், உருவம், பயன்பாடு ஆகிய உள்ளடக்கங்களின் அடிப்படையில் பெயர் வைத்தனர். வள்ளி என்று ஒரு கிழங்கு பண்டு தொட்டு உள்ளது. தற்காலத்து வரவாகிய மரவள்ளிக்கிழங்குக்கு அதன் தோற்றம் கருதி இப்பெயர் அமைந்தது. சில இடப்பகுதிகளில் (குறிப்பாகக் கொங்குப்பகுதியில்) இக்கிழங்கு குச்சிக்கிழங்கு என அழைக்கப்படுகிறது. இதுவும் உருவம் கருதித்தான். குழந்தைக்கண்ணன் வெண்ணெய்ப்பிரியன். வெண்ணெய் கிடைத்ததும் கூத்தாடுவான். எனவே, அவன் தமிழில் வெண்ணெய்க்கூத்தன் ஆகிறான். வடமொழியிலும் அதே வெண்ணெயை அடிப்படையாக வைத்து நவனீதகிருஷ்ணன் என்கின்றனர். நவனீதம் என்பது வெண்ணெயின் வடசொல். மக்களுக்கு எது எட்டும்? எது புரியும்? வாமன அவதாரம் நமக்குத்தெரியும். குறுகிய வடிவம் உடையவன். எனவே தமிழர் குறளப்பன் என்றனர். வேணுகோபாலன், தமிழர்க்குக் குழலூதும் பிள்ளை. கல்வெட்டுகளில் இறைவர் பெயர்களெல்லாம் தமிழில். வடவர் மொழிமாற்றம் செய்தாலும் தமிழர் இடங்கொடுத்ததால்தான் இம்மாற்றம் நிகழ்ந்தது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாதல்லவா?

         கி.பி. முதல் நூற்றாண்டில்தான் சமற்கிருதம் வந்தது. அதற்கு முன்னர் பிராகிருதம் இருந்தது. பல்லவர் ஆட்சித் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் வட்டெழுத்துகளே இருந்தன. எழுத்துகளில் மாற்றம் ஏற்படப் பல்லவர்களே காரணம். அவர்கள் வடபுலத்தவர். அங்கிருந்த எழுத்து வரிவடிவத்தின் தோற்றத்தைத் தமிழில் புகுத்தினார்கள். பல்லவக் கல்வெட்டு எழுத்துகள் மேலும் கீழுமாக நீண்டிருக்கும். வடவரின் வல்லாண்மை. நாட்டியக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் பிறப்பிடம் தமிழகம். ஆனால் இக்கலைகள் பற்றிய தமிழ் நூல்கள் மறைந்து வடமொழி நூல்கள் தோன்றினாலும் அவை தமிழகத்தில்தான் கிடைத்தன.

         வடமொழியில் இறைவன் இருப்பிடத்தைக் கர்ப்பக்கிருகம் என்றனர். நாமும் தற்போது அதனைத் தமிழ்ப்படுத்தி கர்ப்பம்=கரு கிருகம்=அறை -> கருவறை என மாற்றிகொண்டிருக்கிறோம். ஆங்கிலச் சொல்லான “வாட்டர் பால்ஸ்”  என்பதை நீர் வீழ்ச்சி என்பது போல. அருவி என்னும் தமிழ்ச் சொல் நமக்குள்ளதை மறந்தோம். கல்வெட்டுகளில், கருவறைக்கு அழகான இயல்பான தமிழ்ப்பெயர் உண்ணாழிகை என்பது காணப்படுகிறது.  உள்+ நாழிகை - > உண்ணாழிகை. அகநாழிகை எனவும் மற்றொரு சொல் உண்டு.  நிலவின் வளர்பிறையும் தேய்பிறையும் பதினான்கு நாள்கள். கல்வெட்டுகளில் இவற்றை “பக்கம்” என்னும் சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அஷ்டமி, நவமி என்பனவற்றை எட்டாம் பக்கம், ஒன்பதாம் பக்கம் என்று எழுதியிருக்கிறார்கள். அமாவாசை “காருவா” (கார்+உவா) என்றாகிறது. தற்போது ஆங்கிலத்தில் Personal  Assistant  என நாம் சொல்லுவதைக் கல்வெட்டில் அணுக்கன் என்று குறித்திருக்கிறார்கள். அணுக்கி என்பது பெண்பாற்சொல். நெருங்கி இருத்தலால் இப்பெயர் வந்தது. இவ்வாறு நல்ல தமிழ்ச்சொற்கள் கல்வெட்டுகளில் உள்ளன. நாம் பயின்று வழக்கத்தில் கொண்டுவரவேண்டும். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: அள் என்பது வேர்ச்சொல்லாக இருக்கலாம். அள் -> அண் எனத்திரிகிறது. அண்மை, அணி, அணு, அணுகு ஆகிய சொற்களை நோக்குக. இப்போது பரவலாகக் கையாளும் “அள்ளக்கை” என்னும் சொல்லும் “அள்”  வேரிலிருந்து பிறந்ததாய் இருக்கவேண்டும். “அள்” , பக்கத்தைக் குறிக்கும். கொங்குத் தமிழில் மக்கள் வழக்கில் “இந்தப்பக்கம்”, “அந்தப்பக்கம்” என்பன “இந்தள்ளை” , “அந்தள்ளை” என வழங்குவதையும் நோக்குக. (திரு. கணேசன் அவர்களைப்போல்  சொல்லாய்வு செய்யும் முயற்சி.)

         சாதிப்பெயர்கள் பழங்கல்வெட்டுகளில் இல்லை. தொழிலின் அடிப்படையில் பெயர்கள் வழங்கின. முதலி, பிள்ளை என்பன அரசு நிர்வாகத்தில் உயர்மட்டத்தில் இருந்த முதன்மையைச் சார்ந்து அமைந்த பெயர்கள். பதவிப்பெயர் என்றும் சொல்லலாம்.

         கல்வெட்டுகளில் பல்வேறு பெருவழிகளைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதியமான் பெருவழி, இராசகேசரிப்பெருவழி ஆகியன குறிப்பிடத்தக்கவை. சேலம் ஆத்தூர் அருகேயுள்ள ஆறகழூரிலிருந்து காஞ்சி வரை சென்ற பெருவழி மகதேசன் பெருவழி என்னும் பெயர் பெற்றிருந்தது. அக்கல்வெட்டில் இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள தொலைவு 27 காதம் என்பதைக் குறிக்க காதம் என்றெழுதி அதன் பக்கத்தில் இரண்டு பெரிய புள்ளிகளையும், அவற்றைத்தொடர்ந்து ஏழு சிறு புள்ளிகளையும் செதுக்கியிருக்கிறார்கள். இரண்டு பெரிய புள்ளிகள் இருபது என்னும் எண்ணிக்கையையும், சிறு புள்ளிகள் ஏழு என்னும் எண்ணிக்கையையும் குறிப்பன. ஒரு காதம், 11 கி.மீ. தொலைவு எனக் கருதப்படுகிறது.

-------------  உரை முடிவு  --------------------

         உரை முடிவில் பலரும் பல ஐய வினாக்களை எழுப்பினர். சில விளக்கங்கள் பறிமாறப்பட்டன. அவற்றிலிருந்து சில செய்திகள்:

  • தகடூர் (தர்மபுரிப்பகுதி) கொங்கு நாட்டைச் சேர்ந்ததல்ல. தகடூர் நாடு என்னும் பெயரமைந்த தனி நாடு.
  • கொங்கு நாடு ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒரு பகுதி வரை அமைந்திருந்தது.
  • கிரந்த எழுத்து - பல்லவர்கள் கி.பி. 6 – ஆம் நூற்றாண்டு அளவில் வடமொழிச்சொற்களைப் பயன்படுத்த உருவாக்கினார்கள். ஆனாலும், கல்வெட்டுகளில் வடமொழிச்சொற்களைத் தமிழ்ப்படுத்தியே எழுதியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக செங்கம் நடுகற்களில் “ஸிம்ஹ விஷ்ணு”  என்பதைச் “சிங்கவிண்ண”  என்று எழுதியிருக்கிறார்கள். (இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பு: விஷ்ணு, விண்ண என மாற்றம் பெற்றதுபோல் விஷ்ணு கோவிலும் (பெருமாள் கோவில்) “விண்ணகரம்”  எனக் கல்வெட்டில் பயில்கிறது.)
  • அசோகர் காலத்தில் பிராமியைப் பொதுமக்கள் பயன்படுத்தவில்லை எனத்தெரிகிறது. ஆனால், தமிழகத்தில் பொதுமக்களும் பயன்படுத்தினர். சான்று: சமணக் குகைத்தளங்களில் உள்ள பிராமிக்கல்வெட்டுகளைப் பொதுமக்களில் பலர் வெட்டுவித்திருக்கிறார்கள். பெருங்கற்கால வாழ்விடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • கொங்கு நாட்டுக்கல்வெட்டுகள் இருபதில் பெருவழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • கோயில் திருப்பணி, குறிப்பாகக் “கும்பாபிஷேகம்”  தமிழில் நடைபெற்றதா எனபதற்கான குறிப்புகள் இல்லை. ஆனால், கும்பாபிஷேகம் தமிழ்ச் சொல்லால் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆனைமலைக் குடைவரைக் கோயிலான நரசிங்கப்பெருமாள் கோயில் கல்வெட்டில் (வட்டெழுத்தில் அமைந்த கல்வெட்டு) பராந்தக பாண்டியனின் உத்தரமந்திரியான மாறங்காரி என்பவன் இக்கோயிலைக் கட்டுவித்தபோது, பணிகள் முடியுமுன்னே இறந்து போகிறான். அவனுடைய தம்பி, மாறன் எயினன் என்பவன் உத்தரமந்திரி பொறுப்பேற்றதும் பணிகளை முடித்துக் கும்பாபிஷேகம் செய்கிறான். கும்பாபிஷேகம் செய்தான் என்பது கல்வெட்டில் ”நீர்த்தெளித்தான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இராசகேசரிப் பெருவழி (கோவைக்கருகே உள்ளது), இந்தியாவிலேயே உள்ள பழைய பெருவழியாகும். இன்றும், அப்பெருவழியின் மூலவழி மூன்று கி.மீ. தொலைவு உள்ளது.
  • கல்வெட்டுகளில் பறையன் என்னும் சொல் வேளாளர் பெயரோடு சேர்ந்து காணப்படுகிறதே? திரு. பூங்குன்றன் அவர்களின் விளக்கம்: பறையன், பாணன், கடம்பன், துடியன் என்பன முல்லைத்திணைக்குரிய பெயர்கள். முல்லைநிலப் பறையர் குடிகள் வேளாளர்களாக மாறியபின் பறையன் என்னும் பெயரை அடைமொழியாகக் கொண்டனர்.
  • சமணக் குகைத்தளங்கள் பள்ளி, பாழி என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. பள்ளி என்னும் இந்தச்சொல் கல்விகற்கும் இடம் என்பதைக்குறிக்கிறதா ?  - இல்லை. பள்ளி என்பது படுக்குமிடத்தை அல்லது தங்குமிடத்தை மட்டுமே குறிக்கும். அங்கே கல்வி கற்க மக்கள் வந்தார்கள். அவர்கள் “மாணாக்கன்” , “மாணாக்கி” எனக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்கள்.
  • கல்வெட்டு எப்படி எழுதியிருப்பார்கள் ? – முதலில் கல்லில் செம்மண் குழம்பு கொண்டு எழுதிப் பின்னர், கல்தச்சர் என்னும் சிற்பாச்சாரிகள் உளி கொண்டு வெட்டினர்.


கட்டுரை ஆசிரியர் குறிப்பு : பல்லவர்களின் கிரந்தக் கல்வெட்டு, பல்லவர்களின் தமிழ்க்கல்வெட்டு, “மாணாக்கி” என்னும் சொல் வந்துள்ள வட்டெழுத்துக்கல்வெட்டு, கும்பாபிஷேகம் பற்றிய ஆனைமலைக் கல்வெட்டு ஆகியவற்றின் ஒளிப்படங்களை இங்கே பார்வைக்குத் தந்துள்ளேன்.

 பல்லவர் கிரந்தக்கல்வெட்டு :


கல்வெட்டுப்பாடம் :

                                                                       அமேயமாய :
                                                                       அப்ரதிஹதசாஸந
                                                                       அத்யந்தகாம
                                                                      அவநபாஜந :
பல்லவர் தமிழ்க்கல்வெட்டு : 


 கல்வெட்டுப்பாடம் :

                                                 ஸ்ரீதிருக்கழுக்குன்றத்து பெருமான்
                                                னடிகளுக்கு களத்தூர் கோட்டத்
                                                து ....................   திருக்கழுக்குன்ற
                                                த்து ஸ்ரீமலை மேல்
                                                (மூ)லட்டானத்து பெருமான்
                                                னடிகளுக்கு வழிபாட்டுப்புறமா
                                                க வாதாபிகொண்ட நரசிங்கப்
                                                போத்த(ர)சர் (வை)த்தது


ஆனைமலைக் கல்வெட்டு :



 கல்வெட்டுப்பாடம் :

                                                                கோமாறஞ்சடையற்கு உ
                                                                த்தரமந்த்ரி களக்குடி வை
                                                                த்யந் மூவேந்தமங்கலப்
                                                                பேரரையன் ஆகிய மாறங்
                                                                காரி இக்கற்றளிசெய்து
                                                                நீர்த்தெளியாதேய் ஸ்வர்க்காரோ
                                                                ஹணஞ்செய்தபின்னை அவ
                                                                னுக்கு அநுஜந் உத்தர
                                                                மந்த்ரி பதமெய்தின பாண்டி
                                                                மங்கலவிசைஅரையன்
                                                               ஆகிய மாறன்னெஇ
                                                               னன்முகமண்டமஞ்செ
                                                               ய்து நீர்த்தெளித்தான்


 ஐவர்மலை வட்டெழுத்துக்கல்வெட்டு - மாணாக்கி குறித்தது :



கல்வெட்டுப்பாடம் :

                                                           ஸ்ரீபெரும்பத்தி
                                                           ஊர் பட்டிநிக்குர
                                                           த்தியர் மாணாக்கிய
                                                           ர் அவ்வணந்திக்
                                                           குரத்தியர் செய்
                                                           வித்த தேவர்



கட்டுரையாக்கம் : து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி: 9444939156.