மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 14 மே, 2015

மதுரை அரண்மனை


         இந்தியத் தொல்லியல் துறையினர் வெளியிட்டுள்ள தென்னிந்தியக் கல்வெட்டுகள் நூல்களில் தொகுதி பதினான்கு பாண்டியர் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. இந்நூலைப் படித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக மதுரை அரண்மனையைப்பற்றிய குறிப்பு ஒன்றைக் காணநேர்ந்தது. மதுரைநகர், மதுரைக்கோயில், மதுரையரண்மனை ஆகியனபற்றி ஆய்வு செய்து வருகின்ற ஆய்வாளர்க்கு இக்குறிப்பு பயன்படும் என எண்ணி அச்செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
         பிற்காலப்பாண்டியஅரசன் சடையவர்மன் ஸ்ரீவல்லபன், தன் பத்தொன்பதாம் ஆட்சியாண்டு மற்றும் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டு ஆகியவற்றின் இடைப்பட்ட காலகட்டத்தில் மதுரை அரண்மனையில் சிஙகாதனத்தில் எழுந்தருளியிருந்து ஆணைகள் பிறப்பித்ததை அக்கல்வெட்டுகள் கூறுகின்றன. அச்செய்திகளில், மதுரை அரண்மனை எங்கு அமைந்திருந்தது எனபதற்கான குறிப்பு உள்ளது. மேற்படி காலகட்டம் கி.பி. 12-ஆம் நூற்றண்டில் கி.பி. 1177-1180 ஆகும். மதுரையின் உட்பிரிவான மாடக்குளக்கீழ் என்னும் பகுதியில் அமைந்துள்ள மதுரையரண்மனையின் உட்பக்கத்தில் இருவேறு இடங்களில் இருந்த இரண்டு சிங்காதனங்களில் எழுந்தருளியிருந்து (அமர்ந்து) ஆணைகள் பிறப்பித்தான். கல்வெட்டுகளின் விவரம் வருமாறு :

கல்வெட்டு 1 :  க.வெ.எண். 250. ஆண்டறிக்கை எண். 371/1929-30.

கல்வெட்டின் இருப்பிடம் : திருச்செந்தூர் வட்டம்-கட்டாரிமங்கலம் வீரபாண்டீசுவரர் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :
வரி 2 : “.................கோச்சடையபன்மரான திரிபுவனச்சக்கரவற்த்திகள் ஸ்ரீவல்லப தேவற்க்கு யாண்டு 19 (தமிழ் எண்களில்) தாவது நாள் அஞ்ஞூற்றினால்  மாடக்குளக்கீழ் மதுரைக்கோயி லுள்ளாலைப் பள்ளியறைக்கூடத்துப் பீடங் கலிங்கத்தரையனி லெழுந்தருளி இருந்து .............................

விளக்கம் : அரசன் ஆணை பிறப்பித்த நாள் 19-ஆம் ஆட்சியாண்டின் 500-ஆவது நாள். சடையவர்மன் ஸ்ரீவல்லபனின் ஆட்சிக்காலம் கி.பி. 1158-1185. (மூலம்: பாண்டியநாட்டு வரலாற்றாய்வு மையம், மதுரை) எனவே, 19-ஆம் ஆட்சியாண்டு கி.பி.1177 ஆகும். மாடக்குளம், மதுரையின் உட்பிரிவு. மதுரைக்கோயில் என்பது மதுரையின் இறைவர் கோயிலைக்குறிக்காது. அரசனின் அரண்மனையைக்குறிக்கும். இறைவனின் கோயிலைக் குறிக்க “ஸ்ரீகோயில்என்னும் சொல் கல்வெட்டில் பயில்கிறது. உள்ளாலை என்பது உட்பகுதியைக்குறிக்கும். பள்ளியறைக்கூடம் என்பது அரசிருக்கைக்கூடம். பீடம்-சிங்காதனம். கலிங்கத்தரையன் என்பது சிங்காதனத்தின் பெயர். (ஒவ்வொரு சிங்காதனத்துக்கும் தனித்தனியே பெயர் உண்டு.)
மதுரையின் உட்பகுதியான மாடக்குளக்கீழ் என்னும் இடத்தில் அமைந்துள்ள அரண்மனையில் அரசிருக்கைக்கூடத்தில் கலிங்கத்தரையன் என்னும் சிங்காதனத்தில் அமர்ந்து அரசன் ஆணையிடுதலைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு 2 : க.வெ. எண் : 254. ஆண்டறிக்கை எண் : 322/1908.

கல்வெட்டின் இருப்பிடம் : மதுரை நிலக்கோட்டை வட்டம்-குருவித்துறை வல்லபப்பெருமாள் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :

வரி 2: “..........................................................................கோச்சடையபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவல்லபதேவர் மாடக்குளக்கீழ் மதுரைக்கோயிலில் உள்ளாலை நாடகசாலையில் பள்ளிக்கட்டில் பாண்டியராயனில் எழுந்தருளி இருந்து இருபத்திரண்டாவது நாள் இருநூற்றினால் .........................................


விளக்கம் : அரசனின் 22-ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1180-ஆம் ஆண்டில், மதுரை அரண்மனையில் உள்ள நாடகசாலையில் அமைந்திருந்த பாண்டியராயன் என்னும் சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசன் ஆணை பிறப்பித்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. பள்ளிக்கட்டில்-சிங்காதனம். நாடகங்கள் நடத்தப்பெற்றன என்பதும், அதற்குத் தனியே நாடகசாலை இருந்ததும் கூடுதல் செய்திகள்.

கல்வெட்டு 3 : க.வெ. எண் : 257. ஆண்டறிக்கை எண் : 555/1922.

கல்வெட்டின் இருப்பிடம் : சாத்தூர் வட்டம், திருத்தங்கல்-நின்றநாராயணப்பெருமாள் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :
வரி 7 : “..........கோச்சடையவன்மரான    புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவல்லபதேவற்கு யாண்டு 22 (தமிழ் எண்களில்) வதி னெதிராமாண்டு மது
வரி 8 : யோதைய வளநாட்டு மாடக்குளக்கீழ் மதுரைக்கோயிற் கட்டணத்துப் பள்ளியறையிற் கலிங்கத்தரயன் பள்ளிப்பீடத்
வரி 9 : திலெழுந்தருளியிருந்து திருவாய்மொழிந்தருளினபடி................

விளக்கம் : அரசனின் 22-ஆம் ஆண்டான கி.பி. 1180-ஆம் ஆண்டில், மதுரை அரண்மனையில் அரசு கட்டில் (அரியணை) உள்ள அறையில் கலிங்கத்தரயன் என்னும் பெயர்கொண்ட சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசன் ஆணை பிறப்பித்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. முதல் கல்வெட்டில் சுட்டப்பெறும் அதே அரியணையில் வீற்றிருந்தே அரசன் ஆணையிடுகிறான். ஆனால், மாடக்குளக்கீழ் என்னும் பகுதி ஒரு அடைமொழி (மதுரோதைய வளநாடு) சேர்ந்து குறிப்பிடப்படுகிறது. கட்டணம் என்னும் சொல் கட்டடம் என்பதைக்குறிக்கும்.

கல்வெட்டு 4 : க.வெ. ஏண் : 264. ஆண்டறிக்கை எண் : 7/1929.

கல்வெட்டு இருப்பிடம் : நாங்குனேரி வட்டம், தளபதிசமுத்திரம் திருநாகேசுவரர் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :

வரி 1: “ ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீவல்லதேவர் மாளிகை முதல்படி மாடக்குளக்கீழ் மதுரையுதையவளநாட்டு இராசசிங்கன்குளக்கீள் இராசேந்திரசோழபுரத்து உள்ளாலை பெரியமாளிகையில் முன் .... நிலையில் தெற்க்கில்ப் பள்ளியறைக்கூடத்துப் பள்ளிக்கட்டில் கலிங்கத்தரையன்னில் லெழுந்தருளி இருந்து ......................

விளக்கம் : இக்கல்வெட்டில் அரசனது ஆட்சியாண்டு குறிக்கப்படவில்லை. அரியணை முன்பு சுட்டிய அதே “கலிங்கத்தரையன்பெயர்கொண்ட அரியணை என்றபோதிலும், மாடக்குளக்கீழ் என்னும் இடப்பகுதி மேலும் விளக்கம் பெறுகிறது. இராசசிங்கன்குளக்கீள் என்னும் புதிய தொடரும், இராசேந்திரசோழபுரம் என்னும் புதிய தொடரும் காணப்படுகின்றன. இராசசிங்கன்குளக்கீ(ழ்)ள் என்பது மதுரை சிம்மக்கல்லோடு தொடர்புடையதாக இருக்குமோ? ஆய்வாளர்கள் ஆய்க.

கல்வெட்டுகளின் ஒளிப்படங்களை இணைத்துள்ளேன்.


சுந்தரம். 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக