மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 17 ஜூன், 2015



இராசகேசரிப்பெருவழி
( The Rajakesari Highway)


முன்னுரை

இன்றைய நாளில் தமிழகத்தில் போக்குவரத்துக்குப் பயன்படுகின்ற சாலைகள் பல நெடுஞ்சாலைகள் என்னும் பேராலமைந்துள்ளன.  இவ்வகையான சாலைகள் சங்ககாலம் தொட்டுத் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன. கொங்கு நாட்டிலும் அவ்வாறான பெருஞ்சாலைகள் பல இருந்துள்ளன. இந்த நெடுஞ்சாலைகளைப் பண்டைய நாளில் பெருவழி என்னும் பெயரால் வழங்கிவந்தனர். தமிழகத்தின் மிகப்பழமையான பெருவழி என்று அறியப்படும் “இராசகேசரிப்பெருவழி” கொங்கு நாட்டில் அமைந்திருந்தது கொங்கு நாட்டின் பழமைக்கும் பெருமைக்கும் சான்றாகும். இராசகேசரிப்பெருவழி இந்திய நாட்டிலேயே மிகப்பழமையான சாலை என்று தொல்லியலார் கருதுகின்றனர்.

தொல்லியல் பற்றியும், கல்வெட்டுகளைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர்களும், தொல்லியல் ஆர்வலர்களும், தொல்லியல் வகுப்பில் படிப்போரும் இராசகேசரிப்பெருவழியைப் பற்றி அறியாமல் இருக்கமாட்டார். அந்தப்பெருவழியையும் அங்குள்ள கல்வெட்டையும் ஒருமுறையேனும் காணும் வாய்ப்பு கிட்டாதா என எண்ணாமலும் இரார். ஆனால் வரலாற்றுச்சிறப்புப்பெற்ற அப்பெருவழியையும் கல்வெட்டையும் கண்டவர் எண்ணிக்கையில் குறைவாகவே இருப்பர். காரணம் அது கொங்கு நாட்டில் கோவைக்கருகே பாலக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளதுதான். எளிதில் போய்வர இயலாது. Reserve Forest என்னும் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் அது அமைந்துள்ளது. வனத்துறையின் ஒப்புகையின்றிச் சென்றுவருதல் இயலாது. எனவே, தகுந்த முன்னேற்பாடும், பாதுகாப்பான வழித்துணையும் இன்றியமையாதவை. வனவிலங்குகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையும் நேரிடலாம். துணிவும் அச்சமும் இணைந்தே நம்மை அழைத்துச்செல்லும் பயணம் அது.

இராசகேசரிப்பெருவழி நோக்கி ஒரு பயணம்

நடுவணரசுப் பணிநிறைவுக்குப் பின்னர் தொல்லியல் ஆர்வமும் கல்வெட்டறிவும் அமையப்பெற்றதால் இராசகேசரிப்பெருவழியைப் பார்க்கும் ஆவலும் விருப்பமும் கூடிக்கொண்டே சென்றதில் வியப்பேதுமில்லை. அத்தகைய பெருவழியைக் காண்பதற்கான ஒரு வாய்ப்பு அமைந்தது. கோவையில் இயங்கும் வாணவராயர் அறக்கட்டளை இராசகேசரிப்பெருவழியைக் காணச்செல்லும் ஒரு பயணத்தைச் சென்றமாதம் திட்டமிட்டது.  இப்பயணத்திட்டத்தை அறிவித்து, 14-06-2015 அன்று பயணம் மேற்கொள்வதென முடிவு செய்து  நடைமுறைப்படுத்தியது.

இவ்வரிய பயண அனுபவத்தை (அனுபவம் என்னும் வடசொல்லை நீக்கி அழகியதொரு தமிழ்ச்சொல்லைப் பயிலவேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா.  நுகர்வு என்னும் சொல் நினைவுக்கு வந்தாலும் அது ஏற்றதுதானா என ஓர் ஐயம்.  ஏற்றதொரு சொல்லை இங்கு யாரேனும் சுட்டினால் நன்றி சொல்வேன்.)

இராசகேசரிப்பெருவழித் தொல்லியல் பயணத்தில் கலந்துகொள்ள  நாற்பதுக்கும் மேற்பட்ட பேர் விருப்பம் தெரிவித்ததோடு பயண நாளன்று வாணவராயர் அறக்கட்டளையின் புரந்தரதாசர் கலையரங்கத்தில் கூடவும் செய்தனர். காலை பத்து மணியளவில் பயணம் தொடங்கியது. பயணத்திற்காக ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பயணத்தின் சிறப்பு என்னவெனில் இராசகேசரிப்பெருவழியைக் கண்டுபிடித்த தொல்லியல் அறிஞர் திரு பூங்குன்றன் அவர்களே இப்பயணத்தின் தலைமை ஏற்று, தொல்லியல் செய்திகளை வழங்கியமைதான்.  பயணவழியில் பேரூர் அமைந்துள்ளதால், பேரூர் பட்டீசுவரர் கோயிலுக்குள் நுழைந்து கல்வெட்டுகளை ஒரு முன்னோட்டப்பார்வையாகக் கண்டு செல்லலாம் என விழைந்தோம். அவ்வாறே, கோயிலுக்குள் சென்று நடராசர் பொன்னவையின் சுற்றாலையில் குழுமினோம். பூங்குன்றன் அவர்கள் பேரூர்க் கோயிலைப்பற்றிய சிறு முன்னுரை நல்கினார்.

பேரூர்க்கோயில்

பேரூர் தொன்மையான ஓர் ஊராகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் பேரூரைப்பற்றிய குறிப்பு உண்டு. இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலச் சின்னமான முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மற்ற இடங்களில் கிடைத்த தாழிகளினின்றும் இவை மாறுபட்டவை. அரிதானவை. இத்தாழிகள் உட்புறத்தில் கருமை வண்ணமும் வெளிப்புறத்தில் சிவப்பு வண்ணமும் கொண்டவை. இங்கே தாழி என்பது ஓர் உள்ளுறைப்பொருளின் உருவகமாக விளங்குகிறது. மனிதனின் தோற்றம் பெண்ணின் கருவறையில் அமைவது போன்று அவனது இறப்பும் ஓர் அறைக்குள் காணப்படவேண்டும் என்னும் குறிப்புத்தோன்ற இறந்த உடல் தாழிக்குள் இடப்பட்டுப் புதைக்கப்பட்டது.

பாசுபதம்

பேரூர்ப்பகுதியில் சைவ சமயத்தின் தீவிரவாதப்பிரிவுகளில் ஒன்றான பாசுபதம் பரவியிருந்துள்ளது. இதற்குச் சான்றாக, பேரூர் அகழாய்வில் இலகுலீசர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. தற்போது அச்சிற்பம் கோவை அகழ்வைப்பகத்தில் காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.  கோயிலுக்குச் சற்றுத்தொலைவில் இருக்கும் அன்னையர் எழுவர் (சப்தமாதர்) சிற்பத்தொகுதி பாசுபதச் சைவத்தோடு தொடர்புடையது. கோயில் கி.பி. 11-ஆம் நூற்றண்டில் கட்டப்பட்டதாகும். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் மற்றும் சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்தாலும், சங்க காலத்திலிருந்தே கொங்குப்பகுதி நேரடி மன்னராட்சியில் இல்லாது, வேளிர் தலைவர்களாலும் ஊர்ச்சபைகளாலும் ஆளப்பட்டுவந்துள்ளது.

கோயிலின் நடராசர் பொன்னவை கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் மதுரை அழகாத்திரி நாயக்கரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிற்பங்கள் உலக அளவில் புகழ் பெற்றவை.

காஞ்சி ஆறும் தேவி சிறை அணையும்

பேரூர்க் கோயில் நொய்யலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நொய்யலாறு சங்ககால நூலான பதிற்றுப்பத்தில் காஞ்சி ஆறு எனக்குறிப்பிடப்படுகிறது. காஞ்சிவாய்ப்பேரூரில் குன்றம் அனையதோர் விண்ணகரம் (வைணவக்கோயில்) எழுப்பப்பட்டதை பாண்டியர் செப்பேடு ஒன்று குறிப்பிடுகிறது. கோயிலின் வடபுறச்சுவர்ப்பகுதியில் இருக்கும் ஒரு கல்வெட்டினைக் காட்டிய முனைவர் பூங்குன்றன் அவர்கள் அதன் சிறப்புக் கூற்றினை விளக்கினார். கி.பி. 1224-ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு கொங்குச்சோழன் வீரராசேந்திரனின் பதினேழாம் ஆட்சியாண்டுக்காலத்தது. பண்டைய நாளில் நீர் மேலாண்மை எத்துணைச் சிறப்பாக நடைபெற்றது என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு திகழ்கிறது. நொய்யலாற்றின் குறுக்கே தேவிசிறை என்ற அணை கட்டப்பெற்றதைக் குறிப்பிடும் கல்வெட்டு, தேவிசிறையில் நீரைத் தேக்கும்போது ஏற்கெனவே இவ்வணைக்குக் கீழே அமைந்துள்ள கோளூர் அணை நிரம்பிய பின்னரே தேக்கவேண்டும் என்று அரசன் ஆணையிட்டதைச் சொல்லுகிறது. இதுபோன்ற நீர் மேலாண்மையை இன்றைய அரசுகள் கடைப்பிடித்தால் வேளாண்மை மேம்படுவதோடு நீரால் நிகழும் பூசல்கள் ஒடுங்கும். 

காட்டுக்குள் பயணம்

பேரூர்க்கோயிலிலிருந்து பயணம் தொடர்ந்தது. கோவைப்புதூரைக் கடந்து அறிவொளி நகர் என்னும் பகுதிவரை சென்று பேருந்தை நிறுத்திவிட்டு மேலே வனப்பகுதியை நோக்கி நடைப்பயணத்தை மேற்கொண்டோம். அறிவொளி நகரிலிருந்தே மலைப்பாங்கான மேட்டு நிலம் காணப்பட்டது.  வனத்துறை அலுவலர் ஒருவர் உடன் வந்திருந்தார். வனம் பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். வனப்பகுதியில் என்னென்ன பொருள்களை எடுத்துப்போகக்கூடாது என்னும் குறிப்பைத் தந்ததோடு காட்டுப்பாதையில் ஓசை எழுப்பாமல் அமைதி காத்துச் செல்லவேண்டும் என அறிவுறுத்தினார். வனத்துள் யானையை எதிர்கொள்ளும் சூழல் எக்கணமும் நிகழக்கூடும் என்னும் இடர்ப்பாடு பற்றிய விழிப்புணர்வோடு முன்னே நடக்கலாம்; அச்சம் கொண்டவர் மேலே பயணத்தைத் தொடரவேண்டுவதில்லை என்று அவர் அறிவுறுத்தியும் அனைவரும் ஒருமித்துச் செல்ல முடிவெடுத்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் யானையால் இடர்ப்பாடு நேர்ந்துவிடுமோ என்னும் அச்சம் மேலோங்கி நின்றாலும்  வரலாற்றுக்காலப் பெருவழியையும் அரியதொரு கல்வெட்டையும் காணப்போகும் ஆவல் தந்த துணிவு எங்களை முன்னே நடத்திச்சென்றது.  அதனாலேயே கட்டுரையின் தொடக்கத்தில் “துணிவும் அச்சமும் இணைந்தே நம்மை அழைத்துச்செல்லும் பயணம் அது.”  எனக் குறிப்பிட்டேன்.

பயணத்தின் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இல்லை. சிறிது தொலைவு பாதை புதர்களும் காட்டுச்செடிகொடிகளும் அடர்ந்திராமல் சற்றே வெளி நிலத்தோடு சென்றது. போகப்போக, பாதை ஒற்றையடிப்பாதையாகக் குறுக்கம் பெற்றுச் செடிகொடிகளும் புதர்களும் இனம்தெரியாச் சிறுமரங்களும் கள்ளிச்செடிகளும் முள்செடிகளும் நெருங்கி, வனம் என்றால் எப்படியிருக்கும் என்பதை நமக்குணர்த்தியது. நமக்கு முன்னேயும், பக்கவாட்டிலும் ஆளுயரத்துக்கு நெருங்கி நிற்கும் மரப்புதர்களுக்கிடையில் விலங்குகள் எவையேனும் இருந்தால்கூடப் பார்வைக்குப்புலப்படா. இடையிடையே முள்செடிகளையும் முள் மரங்களின் கிளைகளையும் ஒதுக்கி ஒதுக்கிச் செல்லவேண்டிய சூழ்நிலை. அப்படியும் முள் நிறைந்த சிறு கிளைகள் நம்மைத் தீண்டிக் கீறல்களை விளைத்தன. பெண்டிர் சிலருக்குத் தம் சீலைகளை முள்ளிலிருந்து  கிழியாவண்ணம் விலக்கி எடுத்துக்கொண்டே பயணப்படவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. வெயிலும் சிறிது சிறிதாக எரிக்கத்தொடங்கியது.  

பயணத்தின் தொடக்கத்தில் சிறிது தொலைவு சென்றதும் அகன்ற பாறைப்பகுதி தென்பட்டது. அதில் சிறிய குளம் போன்ற சுனை நீர்த் தேக்கம் இருந்தது. அல்லியை ஒத்த இலைகள் படர்ந்திருந்தன. பாறைப்பரப்பில் ஓரிடத்தில் ஆட்டுரல்போலக் கற்குழி   வெட்டப்பட்டிருந்தது. பண்டைய நாளில் பெருவழி பயன்பாட்டில் இருந்தபோது அரசகுலப்பயணிகளும் வணிக குலப்பயணிகளும் நீர்த்தேவைக்காக இங்கே ஓய்வெடுத்திருக்கலாம் என்றும் நெல் குத்தவோ மாவிடிக்கவோ கற்குழி பயன்பட்டிருக்கவேண்டும் என்றும் கருத்துகள் பரிமாறிக்கொண்டோம். அருகிலேயே சுமைதாங்கிக் கற்கள் சிதறிக்கிடந்தன. சில ஆண்டுகள் முன்புவரை இச்சுமைதாங்கிகற்கள் அவற்றின் முழுத்தோற்றத்துடன் அமைந்திருந்தன எனக்கூறினர். அடுத்து நாங்கள் எதிர்கொண்டது ஒரு சிறிய தடுப்பணை போன்ற தோற்றத்தில் ஒரு நீர் நிலை. செம்மண் கலந்து குழம்பிய நிலையில் காணப்பட்டது. விலங்குகள் நீர் பருக வரும் இடம் என்று சொன்னார்கள். யானையின் கால் தடங்களும் காணப்பட்டன. (ஒளிப்படத்தைப்பார்க்க) ஒரு வரலாற்று ஆய்வாளர் சிறுத்தையின் கால் தடத்தை ஒளிப்படம் எடுத்திருந்தார். சிறுத்தையின் கால் நகப்பகுதி கூர்மையாக மண்ணில் பதிந்திருந்தது நன்கு புலப்பட்டது. எங்கள் அச்சம் இதனால் கூடியது. மேலே தொடர்ந்த பயணத்தின்போது வெயிலும் கூடியது.

அண்மையில், கோடைக்காலமாயினும் கோவைப்பகுதியில் நல்ல மழைப்பொழிவு இருந்த காரணத்தால் மலைச்சரிவுகள் பசுமையான தோற்றம் பெற்றிருந்தன. நாங்கள் நடந்து சென்ற பாதை முழுதும் பசுமையான செடிகளும் புதர்களும் அடர்ந்து பாதையை மறைத்தன. பல இடங்களில் செடிகளுக்கிடையில் குனிந்து நடக்கவேண்டியிருந்தது. முன்பே கூறியவாறு முட்களால் இன்னல். ஒருவாறு ஓரிரு மணி நேரம் நடந்து பெருவழி அமைந்திருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

பெருவழிக்கருகில்

இருபுறமும் மலைகள். சற்றே கரிய மேகங்கள் படர்ந்த வானம். அழகும் அமைதியும் ஒருசேர ஏற்படுத்திய தாக்கம். நேரில் மட்டுமே உணரலாம். எதிரே பெரும் பசுமைப்பரப்புக் கொண்ட பள்ளத்தாக்கு. அப்பள்ளத்தாக்கில் எட்டிமடை என்னும் ஊர்ப்பகுதி புலப்பட்டது.

நாங்கள் நின்றிருந்த இடம் பள்ளமாக ஓடிக்கொண்டிருந்த ஓடைப்பகுதியை ஒட்டிய ஒரு பரப்பு. சில இடங்களில் பாறைப்பரப்புடன் கூடிய நிலம். கடந்த காலங்களில் பெருவழிப்பாதை ஏறத்தாழ முப்பது அடி அகலத்தில் நன்கு புலப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பாதையின் இருபுறமும் கரை போல் பெருங்கற்கள் அடுக்கப்பெற்றிருந்ததாகவும் கூறினர். இப்பொழுதும் ஓரிரு இடங்களில் கற்கள் அடுக்கப்பட்ட தோற்றம் தெரிந்தது.  
     
அடுத்து, பெரிய பாறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டைத் தேடும் படலம் தொடங்கியது. நாங்கள் நின்றிருந்த பகுதிக்கு எதிரே ஓடைப்பள்ளத்தின் மறுபுற மலைச்சரிவின் ஏற்றப்பகுதியில் கல்வெட்டுப்பாறை புலப்பட்டிருக்கவேண்டும். ஆனால், எவ்வளவு தேடியும் பாறை புலப்படவில்லை. மழையால் முளைத்த பசுமை பாறையின் தோற்றத்தை மூடிவிட்டதுதான் காரணம். வெயிலும், நடைச்சோர்வும், பசியும் அனைவரையும் தளரவைத்த நிலையில் பகல் பொழுதும் கடந்துகொண்டே போனதால் திரும்பிப்போகும் முடிவெடுக்கப்பட்டது. பூங்குன்றன் அவர்கள் பெருவழியைப்பற்றியும், பெருவழிக்கல்வெட்டைப்பற்றியும் பல செய்திகளை எடுத்துக்கூறினார்.

பெருவழிச் செய்திகள்

கொங்குப்பகுதியில் பல பெருவழிகள் இருந்துள்ளன எனப்பார்த்தோம். அசுரர் மலைப்பெருவழி, சோழமாதேவிப்பெருவழி, பிடாரிகோயில் பெருவழி, வீர நாராயணப்பெருவழி முதலிய பெருவழிகள் அவற்றில் சில. கொழுமத்திலிருந்து பழநி வரை சென்றது அசுரர் மலைப்பெருவழி. சோழமாதேவிப்பெருவழி கொழுமத்திலிருந்து சோழமாதேவி வரை சென்றது.  வீரநாராயணப்பெருவழி ஆனைமலையிலிருந்து கொழுமம் வரை சென்றது. கருவூரிலிருந்து புகார் வரை சென்ற பெருவழி கொங்கப்பெருவழியாகும். இப்பெருவழியின் தொடர்ச்சியாக இராசகேசரிப்பெருவழி அமைந்திருக்கக்கூடும். பேரூரிலிருந்து பாலக்காட்டுக்கணவாய் வழியே மேற்குக்கடற்கரை வரை இப்பெருவழி சென்றதாகக் கொள்ளலாம். கருநாடகப்பகுதியில் கஜ்ஜல் ஹட்டிக் கணவாய் வழியே தாளவாடி என்னும் ஊரிலிருந்து தணாயக்கன் கோட்டை (தற்போதைய பவானிசாகர்) வரை ஒரு பெருவழி இருந்துள்ளது. பெருவழிகளில் எறிவீரர் என்னும் படைப்பிரிவினர் இருந்துள்ளனர். அவர்களுடைய பாதுகாப்பில் வணிகர்களும் மக்களும் சென்றுவந்தனர்.

இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு எதிர்பாராது நிகழ்ந்த ஒன்று. 1976 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்துக் கல்வெட்டினைப் படித்து வெளிக்கொணர்ந்தவர் முனைவர் பூங்குன்றன் ஆவார். இவரோடு பயணம் சென்றவர் கல்வெட்டு அறிஞர் புலவர் இராசு ஆவார். புலவர் அவர்கள் அந்நாளில் தமிழாசிரியர். கோவை, சுண்டக்காமுத்தூரில் பட்டிமன்றம் ஒன்றில் கல்ந்துகொள்ள வந்த அவரிடம் அவ்வூரைச்சேர்ந்த இராமசாமி என்பவரும் அவரது உறவினர் கலைச்செல்வன் என்பவரும் புலவரைச்சந்தித்து கல்வெட்டு பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். புலவர் தொல்லியல் துறையில் இருந்த பூங்குன்றன் அவர்களை அழைத்துச் சென்று காட்டியுள்ளார். நாட்டிலேயே பழமை வாய்ந்த ஒரு பெருவழி பற்றிய கல்வெட்டினை அடையாளம் காட்டிய பெருமை இவர்களைச்சாரும்.  பெருவழியும் கல்வெட்டும் அமைந்த பகுதி சொரிமலை, அட்டமலை, திமில்மலை ஆகிய மூன்று மலைகளுக்கிடையே உள்ளது. கல்வெட்டு இருக்கும் இடம் தெக்கன் திட்டு எனவும் காற்றாடும் பாறை எனவும் வழங்கப்படுகிறது. இனி கல்வெட்டின் பாடத்தையும் அது வெளிப்படுத்தும் வரலாற்றுச் செய்திகளையும் காண்போம். கல்வெட்டின் ஒளிப்படத்தையும் பார்க்க.


கல்வெட்டுப்பாடம்:

திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப
ஒரு நிழல் வெண்டிங்கள் போலோங்கி – ஒரு நிழல்போல்
வாழியர் கோச்சோழன் வளங்காவிரி நாடன்
கோழியர் கோக்கண்டன் குலவு.

கல்வெட்டு இயற்கையாக அமைந்த ஒரு பெரிய பாறையின் மேற்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் எழுத்துகள் நன்கு புலப்பட்டதாகவும் காலப்போக்கில் எழுத்துகள் தேய்வுற்றதாகவும் காண்கிறோம். கல்வெட்டு இரண்டு பிரிவாகப்பிரிக்கப்பட்டு முதல் பிரிவில் பாடல் வடிவில் நான்கு வரிகளும் அடுத்த பிரிவில் ”இராசகேசரிப்பெருவழி” என்னும் ஒற்றைச் சொல்லும் பொறிக்கப்பெற்றுள்ளன. வரிகள் யாவும் கோடுகளுக்கிடையில் அமைந்துள்ளன. பாடல் வரிகள் வட்டெழுத்திலும் “இராசகேசரிப்பெருவழி”  என்னும் ஒற்றைச்சொல் தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. கொங்கு நாட்டில், பாண்டிய நாட்டைப்போன்றே பொதுப்பயன்பாட்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்துள்ளது. சோழ அரசின் ஆட்சியெழுத்தாகத் தமிழ் எழுத்து வழக்கில் இருந்தது. எனவே இரு எழுத்துகளும் ஒரு கல்வெட்டில் இடம்பெற்றன. ஒரு இராசகேசரி அரசன் ஏற்கெனவே இருந்த பெருவழியைப்புதுப்பித்துத் தன்புகழ் நிலைக்கவேண்டி “இராசகேசரிப்பெருவழி” என்று தன் பெயரை இட்டுத் தன்னைப்பற்றிய பாடலையும் பொறித்து வைத்துள்ளான். இந்த இராசகேசரிச் சோழன் யார் என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது கண்டராதித்தன், முதலாம் இராசராசன் என இரு பெயர்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆனால், கோக்கண்டன் என்னும் அடைமொழிச் சொல்லைக்கொண்டு சோழ அரசன் முதலாம் ஆதித்தன் என நிறுவப்பட்டுள்ளது. முதலாம் ஆதித்தனின் ஆட்சிக்காலம் கி.பி. 871-907 ஆகும். எனவே, கல்வெட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியலாம்.  1976-ஆம் ஆண்டில் இக்கல்வெட்டைப்படித்த பூங்குன்றன் அவர்கள் இறுதி வரியில் இறுதிச்சொல்லை “கோ” எனப்படித்தார். பின்னர் 1998-ஆம் ஆண்டில் மீளாய்வு செய்து “குலவு”  எனப்படித்தார். “குலவு” என்பது “புகழ்” என்று பொருள்தரும் சொல்லாகும். “இக்கல்வெட்டில் மூன்று முறை நிழல் என்ற சொல் பயின்றுவருகிறது. இங்கு பயன்படுத்தப்பெறும் நிழல் என்ற சொல்லின் பொருளை விளங்கிக்கொள்ள கேரள மாநிலச் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றில் கிடைக்கும் சான்றுகளை அணுகவேண்டும். அந்த ஆவணங்களில் நிழல் என்ற சொல் நிழற்படை (Shadow Army) என்ற பொருளில் கூறப்பெறுகின்றது. அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழிக் கல்வெட்டிலும் “நிழல்”  என்ற சொல் (Shadow Army) என்ற பொருளில் வழங்கப்பெற்றிருக்கவேண்டும்.  நிழற்படை அரசனைமட்டும் பாதுகாக்கவில்லை. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர் என்பதாகப் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

2002-ஆம் ஆண்டில் முனைவர் கருணானந்தம் (கோவைத் தொல்லியல் துறை அலுவலர்) கோவையிலிருந்து வெளிவந்த “கலைக்கதிர்” இதழில் இராசகேசரிப் பெருவழியைப்பற்றிய எழிலார்ந்த கட்டுரை ஒன்றை வழங்கியுள்ளார். வாய்ப்புக் கிடைத்தால் அக்கட்டுரையைப் படித்து மகிழலாம்.

இராசகேசரிப்பயணத்தின் இறுதிக்கட்டதில் உள்ளோம். பிற்பகல் மூன்று மணிக்கு மீண்டும் வனப்பாதையில் பயணம், ஊரை நோக்கி. இத்தொல்லியல் பயணத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறாவிடினும், பெருவழிக்கருகுவரை சென்றதும், வனச்சூழலினூடே பயணம் செய்ததும் மறக்கவொண்ணா நிகழ்வு. நிறைவும் கூட. இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டுப் பயணம் தொடரும், கல்வெட்டைக்காணும் வரை.

பின்குறிப்பு:   பயணத்தின்போது, கருப்பும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் ஒரு காட்டுப்பூச்சியும், குன்றிமணிச்செடியும், சிவப்பு வண்ணத்தில் ஒரு காட்டுப்பழமும், பச்சை நிறத்தில் கடுக்காய்கள், மஞ்சள் நிறத்தில் ஒரு காட்டுப்பூங்கொத்து, முள்ளம்பன்றியின் உடலிலிருந்து விழுந்த ஒரு முள்ளும் காணக்கிடைத்தன. அவற்றின் ஒளிப்படங்களையும் இணைத்துள்ளேன்.

நன்றி : முனைவர் பூங்குன்றன்
       வாணவராயர் அறக்கட்டளையினர்
       துணை வந்த வனத்துறை அலுவலர் ஆகியோருக்கு.
துணை நின்ற நூல் மற்றும் கட்டுரை :
       கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் (தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை)
           Meenakshisundaramwriter.blogspot.in

ஒளிப்படங்கள்:
























































து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,கோவை.
அலைபேசி : 9444939156.


புதன், 3 ஜூன், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்


         சென்ற பாடத்தில் நான்கு கல்வெட்டுகளின் ஒளிப்படங்களைத் தந்து அவற்றைப்படிக்கும் முறையையும் சொல்லியிருந்தேன். நீங்கள் அவ்வாறு படித்திருந்தால் உங்கள் பாடத்தைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். சரியான பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

வரி 1 உடையார் ஸ்ரீராஜராஜதேவர் சேரமானையும் பாண்டியர்களையும் மலைநாட்டு எறிந்துகொண்ட பண்டாரங்களில் யாண்டு இருபத்தாறாவது நாள் முன்

வரி 2 னூற்று ஒருபத்தொன்பதினால் ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய பரமஸ்வாமிக்குக் குடுத்த பொன்னின் சின்னங்கள் ஆடவல்லான் என்னும் கல்லா

வரி 3 ல் நிறையெடுத்து கல்லில் வெட்டினபடி காளாஞ்சி ஒன்று பொன் ஐஞ்ஞூற்று எண்பத்து அறுகழஞ்சு – காளாஞ்சி ஒன்று பொன் அறுநூ

வரி 4 ற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று எண்பத்து இரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று அறுபத்து எழு

வரி 5 கழஞ்சு குட ஒன்று பொன் முன்னூற்று ஐம்பத்து ஒரு கழஞ்சு – குடம் ஒன்று பொன் இருநூற்றுத் தொண்ணூற்று நாற்கழஞ்சு – கரண்டிகைச்

வரி 6 செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட பொன் நூற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் மூழலும் உட்பட பொ

வரி 7 ன் நூற்று எண்பத்து ஐங்கழஞ்சே முக்கால் இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் .... லும் உட்பட பொன் நூற்று நாற்பத்து எழு கழஞ்சு –

வரி 8 தளிகை ஒன்று அடியுட்பட (பொன்) ஆயிரத்து ஒருநூற்று முப்பத்து ஐங்கழஞ்சரை  கல ...... நை ஒன்று மூக்கும் அடியும் உட்பட பொன் நானூற்று எ



சில விளக்கக் குறிப்புகள் :

  • நீலவண்ணத்தில் காட்டப்பட்டுள்ள எழுத்துகள் கிரந்த எழுத்துகள். அவற்றின் வடிவத்தை இக்கட்டுரையின் இறுதியில் காண்பித்திருக்கிறேன்.
  • அருஞ்சொற்பொருள் :

உடையார் = அரசர்
எறிந்து = வென்று
பண்டாரங்கள் = கருவூலங்கள்
ஈஸ்வரம் = சிவன்கோயில்
பரமஸ்வாமி = இறைவன்
சின்னங்கள் = பொருள்கள்
ஆடவல்லான் என்னும் கல் = எடைக்கல்
காளாஞ்சி = தாம்பூலக்கலம்
கழஞ்சு = நகை எடைகளில் ஒன்று
கரண்டிகை = பானை போன்ற கலம்
இலைச்செப்பு = வெற்றிலைச்சிமிழ்
மூழல் = மூடி
தளிகை = தட்டு அல்லது உண்கலம்

  • கல்வெட்டின் செய்தி :

முதலாம் இராசராசன் சேர பாண்டியரை வென்று அவர்களின் கருவூலங்களிலிருந்து  கொணர்ந்த செல்வங்களைக்கொண்டு தஞ்சைப்பெரியகோயிலுக்குப் பொன்னால் செய்யப்பட்ட பல பொருள்களைக் கொடையாக அளித்தான். கொடை அளிக்கப்பட்ட ஆண்டு இராசராசனின் இருபத்தாறாவது ஆட்சியாண்டு; (கி.பி. 1011) அவ்வாண்டில் முன்னூற்றுப் பத்தொன்பதாவது நாளும் கூட.

  • சில நுட்பங்கள் :

நாம் முன்னூற்றுப் பத்தொன்பது என்று தற்போது குறிப்பதைக் கல்வெட்டு முன்னூற்று ஒருபத்தொன்பது என்றும், நாம் நூற்றுப்பத்து என்று கூறுவதைக் கல்வெட்டு நூற்று ஒருபத்து என்றும் குறிப்பதை நோக்குக.

வெற்றிலைச்சிமிழுக்கு நான்கு கால்களை யாளியின் உருவத்தில் அமைத்த கலை வடிவத்தின் அழகை நோக்குக.

அரசன் ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து ஆட்சிக்காலம் ஆண்டு மற்றும் நாள் கணக்கீடு பெறுவதைக் காண்க.

  • கிரந்தம் பற்றிய குறிப்புகள் :

கல்வெட்டில் வரும் கிரந்த எழுத்துகளைக் கீழே இணைத்துள்ளேன். இவ்வாறு, அவ்வப்போது காணுகின்ற கிரந்த எழுத்துகளைத் தனியே தொகுத்து வைத்துக்கொள்வது நலம். பின்னால் கல்வெட்டுகளைப் படிக்கும் நேரத்தில் அடையாளம் கண்டு படிக்கத் துணை செய்யும்.
 
------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

வியாழன், 14 மே, 2015

மதுரை அரண்மனை


         இந்தியத் தொல்லியல் துறையினர் வெளியிட்டுள்ள தென்னிந்தியக் கல்வெட்டுகள் நூல்களில் தொகுதி பதினான்கு பாண்டியர் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. இந்நூலைப் படித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக மதுரை அரண்மனையைப்பற்றிய குறிப்பு ஒன்றைக் காணநேர்ந்தது. மதுரைநகர், மதுரைக்கோயில், மதுரையரண்மனை ஆகியனபற்றி ஆய்வு செய்து வருகின்ற ஆய்வாளர்க்கு இக்குறிப்பு பயன்படும் என எண்ணி அச்செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
         பிற்காலப்பாண்டியஅரசன் சடையவர்மன் ஸ்ரீவல்லபன், தன் பத்தொன்பதாம் ஆட்சியாண்டு மற்றும் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டு ஆகியவற்றின் இடைப்பட்ட காலகட்டத்தில் மதுரை அரண்மனையில் சிஙகாதனத்தில் எழுந்தருளியிருந்து ஆணைகள் பிறப்பித்ததை அக்கல்வெட்டுகள் கூறுகின்றன. அச்செய்திகளில், மதுரை அரண்மனை எங்கு அமைந்திருந்தது எனபதற்கான குறிப்பு உள்ளது. மேற்படி காலகட்டம் கி.பி. 12-ஆம் நூற்றண்டில் கி.பி. 1177-1180 ஆகும். மதுரையின் உட்பிரிவான மாடக்குளக்கீழ் என்னும் பகுதியில் அமைந்துள்ள மதுரையரண்மனையின் உட்பக்கத்தில் இருவேறு இடங்களில் இருந்த இரண்டு சிங்காதனங்களில் எழுந்தருளியிருந்து (அமர்ந்து) ஆணைகள் பிறப்பித்தான். கல்வெட்டுகளின் விவரம் வருமாறு :

கல்வெட்டு 1 :  க.வெ.எண். 250. ஆண்டறிக்கை எண். 371/1929-30.

கல்வெட்டின் இருப்பிடம் : திருச்செந்தூர் வட்டம்-கட்டாரிமங்கலம் வீரபாண்டீசுவரர் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :
வரி 2 : “.................கோச்சடையபன்மரான திரிபுவனச்சக்கரவற்த்திகள் ஸ்ரீவல்லப தேவற்க்கு யாண்டு 19 (தமிழ் எண்களில்) தாவது நாள் அஞ்ஞூற்றினால்  மாடக்குளக்கீழ் மதுரைக்கோயி லுள்ளாலைப் பள்ளியறைக்கூடத்துப் பீடங் கலிங்கத்தரையனி லெழுந்தருளி இருந்து .............................”

விளக்கம் : அரசன் ஆணை பிறப்பித்த நாள் – 19-ஆம் ஆட்சியாண்டின் 500-ஆவது நாள். சடையவர்மன் ஸ்ரீவல்லபனின் ஆட்சிக்காலம் கி.பி. 1158-1185. (மூலம்: பாண்டியநாட்டு வரலாற்றாய்வு மையம், மதுரை) எனவே, 19-ஆம் ஆட்சியாண்டு கி.பி.1177 ஆகும். மாடக்குளம், மதுரையின் உட்பிரிவு. மதுரைக்கோயில் என்பது மதுரையின் இறைவர் கோயிலைக்குறிக்காது. அரசனின் அரண்மனையைக்குறிக்கும். இறைவனின் கோயிலைக் குறிக்க “ஸ்ரீகோயில்” என்னும் சொல் கல்வெட்டில் பயில்கிறது. உள்ளாலை என்பது உட்பகுதியைக்குறிக்கும். பள்ளியறைக்கூடம் என்பது அரசிருக்கைக்கூடம். பீடம்-சிங்காதனம். கலிங்கத்தரையன் என்பது சிங்காதனத்தின் பெயர். (ஒவ்வொரு சிங்காதனத்துக்கும் தனித்தனியே பெயர் உண்டு.)
மதுரையின் உட்பகுதியான மாடக்குளக்கீழ் என்னும் இடத்தில் அமைந்துள்ள அரண்மனையில் அரசிருக்கைக்கூடத்தில் கலிங்கத்தரையன் என்னும் சிங்காதனத்தில் அமர்ந்து அரசன் ஆணையிடுதலைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு 2 : க.வெ. எண் : 254. ஆண்டறிக்கை எண் : 322/1908.

கல்வெட்டின் இருப்பிடம் : மதுரை நிலக்கோட்டை வட்டம்-குருவித்துறை வல்லபப்பெருமாள் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :

வரி 2: “..........................................................................கோச்சடையபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவல்லபதேவர் மாடக்குளக்கீழ் மதுரைக்கோயிலில் உள்ளாலை நாடகசாலையில் பள்ளிக்கட்டில் பாண்டியராயனில் எழுந்தருளி இருந்து இருபத்திரண்டாவது நாள் இருநூற்றினால் .........................................”


விளக்கம் : அரசனின் 22-ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1180-ஆம் ஆண்டில், மதுரை அரண்மனையில் உள்ள நாடகசாலையில் அமைந்திருந்த பாண்டியராயன் என்னும் சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசன் ஆணை பிறப்பித்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. பள்ளிக்கட்டில்-சிங்காதனம். நாடகங்கள் நடத்தப்பெற்றன என்பதும், அதற்குத் தனியே நாடகசாலை இருந்ததும் கூடுதல் செய்திகள்.

கல்வெட்டு 3 : க.வெ. எண் : 257. ஆண்டறிக்கை எண் : 555/1922.

கல்வெட்டின் இருப்பிடம் : சாத்தூர் வட்டம், திருத்தங்கல்-நின்றநாராயணப்பெருமாள் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :
வரி 7 : “..........கோச்சடையவன்மரான    புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவல்லபதேவற்கு யாண்டு 22 (தமிழ் எண்களில்) வதி னெதிராமாண்டு மது
வரி 8 : யோதைய வளநாட்டு மாடக்குளக்கீழ் மதுரைக்கோயிற் கட்டணத்துப் பள்ளியறையிற் கலிங்கத்தரயன் பள்ளிப்பீடத்
வரி 9 : திலெழுந்தருளியிருந்து திருவாய்மொழிந்தருளினபடி................”

விளக்கம் : அரசனின் 22-ஆம் ஆண்டான கி.பி. 1180-ஆம் ஆண்டில், மதுரை அரண்மனையில் அரசு கட்டில் (அரியணை) உள்ள அறையில் கலிங்கத்தரயன் என்னும் பெயர்கொண்ட சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசன் ஆணை பிறப்பித்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. முதல் கல்வெட்டில் சுட்டப்பெறும் அதே அரியணையில் வீற்றிருந்தே அரசன் ஆணையிடுகிறான். ஆனால், மாடக்குளக்கீழ் என்னும் பகுதி ஒரு அடைமொழி (மதுரோதைய வளநாடு) சேர்ந்து குறிப்பிடப்படுகிறது. கட்டணம் என்னும் சொல் கட்டடம் என்பதைக்குறிக்கும்.

கல்வெட்டு 4 : க.வெ. ஏண் : 264. ஆண்டறிக்கை எண் : 7/1929.

கல்வெட்டு இருப்பிடம் : நாங்குனேரி வட்டம், தளபதிசமுத்திரம் திருநாகேசுவரர் கோயில்.

கல்வெட்டுப்பாடம் :

வரி 1: “ ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீவல்லதேவர் மாளிகை முதல்படி மாடக்குளக்கீழ் மதுரையுதையவளநாட்டு இராசசிங்கன்குளக்கீள் இராசேந்திரசோழபுரத்து உள்ளாலை பெரியமாளிகையில் முன் .... நிலையில் தெற்க்கில்ப் பள்ளியறைக்கூடத்துப் பள்ளிக்கட்டில் கலிங்கத்தரையன்னில் லெழுந்தருளி இருந்து ......................”

விளக்கம் : இக்கல்வெட்டில் அரசனது ஆட்சியாண்டு குறிக்கப்படவில்லை. அரியணை முன்பு சுட்டிய அதே “கலிங்கத்தரையன்” பெயர்கொண்ட அரியணை என்றபோதிலும், மாடக்குளக்கீழ் என்னும் இடப்பகுதி மேலும் விளக்கம் பெறுகிறது. இராசசிங்கன்குளக்கீள் என்னும் புதிய தொடரும், இராசேந்திரசோழபுரம் என்னும் புதிய தொடரும் காணப்படுகின்றன. இராசசிங்கன்குளக்கீ(ழ்)ள் என்பது மதுரை சிம்மக்கல்லோடு தொடர்புடையதாக இருக்குமோ? ஆய்வாளர்கள் ஆய்க.

கல்வெட்டுகளின் ஒளிப்படங்களை இணைத்துள்ளேன்.


சுந்தரம். 







செவ்வாய், 5 மே, 2015



பூராண்டம்பாளையம் பரமசிவன் கோயில் கல்வெட்டு
                                                     து.சுந்தரம், கோவை

         கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் பூராண்டம்பாளையம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரில் ஒரு பழமையான சிவன் கோயில் உள்ளது எனக் கேள்விப்பட்ட கட்டுரை ஆசிரியர், அச்சிவன் கோயிலில் கல்வெட்டு ஏதேனும் கிடைக்கக்கூடும் என்று அங்கே சென்றார். கோயிலின் தோற்றத்தில் பழமை புலப்படவில்லை. 1999-ஆம் ஆண்டு புது வண்ணம் பூசப்பட்டுக் குடமுழுக்கு நடைபெற்றதால் தற்போது பழமையின் சுவடு ஏதுமின்றிப் புதுமையான தோற்றம் பெற்று விளங்குகிறது. உள்ளே நுழைந்ததும் இடப்புறம் ஒரு பசுமாட்டின் உருவச் சிலையும், வலப்புறம் ஒரு குதிரைச் சிலையும் காணப்படுகின்றன. பசுவின் உருவம் சிலை என்னும் எண்ணம் தோன்றாதவாறு உயிர்ப்புடன் தோற்றமளிக்கிறது. குதிரையின் தோற்றமும் அழகானது. விளக்குக் கம்பத்தைத் தாண்டி கோயிலின் முக மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியன உள்ளன. பூசையாளர் சதாசிவத்துடன் பேசும்போது அவர், கருவறையில் நாம் வழக்கமாகக் காணும் சிவலிங்க வடிவில் இறைவன் இல்லை என்றும் ஐந்து வேல்களே மூலவராகக் காட்சியளிப்பதாகவும் கூறினார்.

         கல்வெட்டுகள் எவையேனும் உள்ளனவா எனக் கேட்டபோது, பழமையான கல்வெட்டுகள் இக்கோயிலில் இல்லை என்றும் பிற்காலத்துக் கல்வெட்டு ஒன்று தூணில் இருப்பதாகவும் கூறி அவர் அந்தத் தூண் கல்வெட்டைக் காட்டினார். அக்கல்வெட்டு முகமண்டபத்தில் இருந்த ஒரு தூணில் இருந்தது. முகமண்டபம் சற்றே பழமையான தோற்றத்தில் கல் தூண்களோடு காணப்பட்டது. எல்லாத்தூண்களும் கருமை நிறத்தில் எண்ணை வண்ணம் (Oil Paint) பூசப்பட்டுக் கரிய நிறத்தில் தோற்றமளித்ததால். கல்வெட்டு எழுத்துகள் இருப்பது பார்வைக்குப் புலப்படவேயில்லை. தூணை மிக நெருங்கிப் பார்த்தபின்னர்தான் எழுத்துகள் புலப்பட்டன. ஆயினும், பார்க்கும் அந்த நிலையிலேயே எழுத்துகளைப் படிக்க இயலவில்லை. வெள்ளைச் சுண்ணம் பூசியபின்னரே படிக்கமுடிந்தது. கல்வெட்டு  நூற்றுப்பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 1897-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் சாலியவாகன சகாப்தம் 1819-ஆம் ஆண்டு, கலியுக சகாப்தம் 4998-ஆம் ஆண்டு, ஆங்கில ஆண்டு 1897 ஆகிய மூன்று ஆண்டுகளும் குறிக்கப்பட்டுள்ளன. இவை தவிர அறுபது ஆண்டுகள் நிறைந்த தமிழ் வட்ட ஆண்டான ஏவிளம்பியும் குறிப்பிடப்பெறுகிறது. ஆங்கிலத் தேதி மே மாதம் 30 எனவும், தமிழ்த்தேதி சித்திரை 19 எனவும் விளக்கமாகக் காலக்குறிப்பு உள்ளது.



             கல்வெட்டின் பாடம்       

               சாலியவாகன 
       சகாத்த வரு 1819
       கலியுக சகாத்த
       வரு 4998 இத
       ன் மேல்ச் செ
       ல்யாகி(வ)ருகு
       ர 1897 வரு மே
       மசம் 30
       தேதிக்கிச்ச
       ரியான தமி
       ள் ஏவி
       ளம்பி வரு
       சித்திரை
       19 தேதி பூரா
       ண்டம் பா
       ளையம் ப
       ரம சிவனு
       க்குக் கம்
       பம் உபயம
       க இலட்சுமி
       நாயக்கன்பா
       ளையம் குருவ
       ப்ப நாயக்கன்
       மகன் வெங்
       கிடசாமி (நாய)
       க்கனால் வெ
       ச்சது
       சிவமயம்

தூண் கொடையாக அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. அருகில் உள்ள இலட்சுமி நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த குருவப்ப நாயக்கன் மகன் வெங்கிடசாமி நாயக்கன் என்பவர் இத்தூணை (கம்பம்) அளித்துள்ளார்.
  
         கருவறையில் இறைவனாக ஐந்து வேல்களே வழிபடப்பெறுகின்ற தனிச்சிறப்பை இக்க்கோயில் பெற்றுள்ளது என முன்னரே பார்த்தோம். இது பற்றிப் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளாரும், பேரூர்த்தமிழறிஞர் முனைவர் ந.இரா. சென்னியப்பன் அவர்களும் கூறுகின்ற கருத்துகள் வரலாறு, சமயம், இலக்கியம், மக்கள் மரபு ஆகியனவற்றை இணைக்கும் பாங்குள்ளவை.
அவற்றில் சில :
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் கற்கருவிகளையும் உலோகக்கருவிகளையும் பயன்படுத்தி வந்துள்ளான். உலோகக் கருவிகளுள் இரும்பாலான வேல் அகழாய்வுகளில் பல இடங்களில் கிடைத்துள்ளது. அக்காலத்தில் வேல் சிறந்த கருவுயாகப் பயன்பட்டு இருக்கவேண்டும். பழங்கால ஓவியங்களில் கையில் வேல் வைத்துக்கொண்டிருப்பது போன்ற ஓவியங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் வெள்ளருகம்பாளையத்திற்கு அண்மையில் உள்ள வால்கறடு என்ற பகுதியில் கற்கால மனிதர்கள் வரைந்த  ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கையில் வேல் கொண்டு விலங்கின் மேல் எறிகின்ற நிலையில் ஓர் ஓவியம் உள்ளது. எனவே மிகப்பழங்காலந்தொட்டு வேல் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வருகிறது.

வேல் என்னும் சொல்லுக்கு ஏமம் (அதாவது பாதுகாப்பு) என்பது பொருள். விலங்குகளாலும் பகைவர்களாலும் வந்த தாக்குதலை, துன்பத்தை எதிர்கொண்ட இயல்பான ஆயுதமாக “வேல்” விளங்கியது என எண்ணலாம். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்கு “வேலன்” என்ற ஓர் பெயரும் உண்டு. வேலை வழிபடுவது வேலனை வழிபடுவதாகவும், முழு முதலான சிவப்பெரும் பொருளை வழிபடுவதாகவுமிருந்து வந்துள்ளது. உருவம், அருவம், அருவுருவம் என வழிபாடுகள் மூவகையின. இலிங்கத்திருமேனிகள் அருவுருவ வழிபாட்டில் அமைவன. ஐந்து வேல்களை நட்டுவைத்து வழிபாடாற்றும் அருவுருவ வழிபாட்டுப் பழமையான மரபு கொங்கு நாட்டில் பின்பற்றப்படுகிறது. இவ்வழிபாட்டினை “பரமசிவன் வழிபாடு” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஐந்து வேல் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களைக் குறிக்கும். ஐந்து முகங்களாவன : ஈசானம், தற்புருடம்(தத்புருஷம்), அகோரம், வாமம், சத்யோசாதம்(சத்யோஜாதம்). சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதையில் புகாரிலிருந்த பல கோயில்களைப்பற்றி அறிய முடிகிறது. அவற்றுள் ஒன்று வேற்கோட்டமாகும். அக்காலத்தில் வேல் தனியாக வைத்து வழிபடப்பட்டது என்பதற்கு இது சிறந்த சான்றாகும். வேல் வைத்து வழிபடும் பரமசிவன் வழிபாடு கொங்குநாட்டின் இருபத்தொரு இடங்களில் நடைபெறுகின்றன. அவற்றுள் பூராண்டம்பாளையம் பரமசிவன் கோயிலும் ஒன்று. 


இக்கோயிலின் இன்னொரு சிறப்பு இங்குள்ள சுடுமண் சிற்பங்களாகும். மண் சார்ந்த தொழில்கள் தமிழகத்தில் பண்டு தொட்டு இருந்துள்ளன. மட்பாண்டக்  கலையும், சுடுமண் சிற்பக்கலையும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சிறப்பான நிலையில் இருந்துள்ளன என்பதற்குப் பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கல் பதுக்கைகள், கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள் ஆகியனவற்றின் அமைவிடங்களில் நடத்தப்பெற்ற அகழாய்வுகளின் போது கிடைத்த கருப்பு சிவப்பு ஓடுகள், மட்கலங்கள், மற்றும் சுடுமண் சிற்பங்கள் ஆகியன சான்றுகளாய் நிற்கின்றன. கோவை போளுவாம்பட்டியில் அகழாய்வில் கிடைத்த சுடுமண் சிற்பம் குறிப்பிடத்தக்கது. முதுமக்கள் தாழிகள் மண்ணால் செய்யப்பட்டவையே. தமிழ் எழுத்துகளின் மிகப்பழமையான வரி வடிவமான “தமிழி” எனப்படும் “தமிழ் பிராமி” எழுத்துகள் மட்கலங்களில் கிடைத்துள்ளன. இக்கலையில் தேர்ந்தவர்கள் பழங்காலத்தில் “மண்ணீட்டாளர்”, ”கலம்செய் கோ” என்றும்,  பின்னாளில் குலாலர், குயவர் என்றும் அழைக்கப்படுகின்றனர். சிற்பக்கலைக்குரிய செய்பொருள்கள் பத்தில் மண்ணும் ஒன்று என்பதைத் திவாகர நிகண்டு,
 
        ”கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
     மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
     கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
     பத்தே சிற்பத்தொழிலுக்குறுப்பாவன”

என்று குறிப்பிடுகிறது.
”தெய்வங்களுக்கு மண்சிலை வைத்து வழிபடுவது தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். சிறுதெய்வக்கோயில்களில் ஐயனார், முனியப்பன், மதுரைவீரன், மாரியம்மன், காளியம்மன், பேய்ச்சியம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வ உருவங்களும், குதிரை,யானை,காளை ஆகிய தெய்வ வாகனங்களும் பெரிய வடிவத்துடன் கலை நேர்த்தியுடன் செய்யப்படுகின்றன. இச் சுடுமண் கலை வடிங்களைத் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடனாக வாங்கிவைத்து வழிபடும் வழக்கம்  நாட்டுப்புற மக்களிடம் உள்ளது.” – குலாலர் தளம்  (இணையம்).
“கிராமத் திருவிழாக்களில் இடம்பெறும் புரவியெடுப்பு, அம்மன் திருவிழா போன்றவற்றுக்குத் தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட பிரதிமைகள் தயாரிக்கப்பட்டு நெருப்பிலிட்டுச் சூடு செய்யப்பெறும். இவை தொன்மையான தமிழ்க்கிராமங்களில் நிகழ்பவை.” – தமிழாசான் (இணையம்).

”சுடுமண் சிற்பக்கலைகள் தமிழரின் கிராமியத் தெய்வங்களுக்குரியவையே தவிர ஆரியக்கடவுளருடையவை அல்ல.”  - சுகுணன் (வவுனியா).

          பூராண்டம்பாளையம் சிவன் கோயிலில் இத்தகு சுடுமண் சிற்பங்கள் இருப்பது சற்றே வியப்பை அளிக்கிறது. காரணம் குதிரை, யானை ஆகிய சிற்பங்கள் காவல் தெய்வங்களுக்கான கோயில்களிலும் அம்மன் கோயில்களிலும் பெரும்பாலும் காணப்படும். இச்சுடுமண் சிற்பங்கள் மிகப் பழமையானவை என்பதும் இவை கலை நுட்பத்துடன் அழகுறச் செய்யப்பட்டிருக்கின்றன என்பதும் எண்ணத்தக்கது. பெரிய வடிவத்தில் ஒரு யானையும் இரு குதிரைகளும்; சிறிய வடிவிலான இரு குதிரைகள். யானையின் குமிழ் போன்ற தலை முகடுகள், சிறிய கண்கள், சிறிய தந்தங்கள், பருத்த உடல், முதுகின்மேல் அம்பாரி எனப் பார்ப்பதற்கு அழகான காட்சி. துதிக்கை உடைந்த நிலையில் பிற்காலத்தவர் உடைந்த குறைப்பகுதியை நிறைவு  செய்ய முயன்றுள்ளனர். ஆனால் வடிவம் பொருந்தவில்லை. குதிரைகளின் தூக்கிய செவிகள், புடைத்த கண்கள், மூக்குத் துளைகள் என அழகான வடிவங்கள். சிற்பங்கள் அனைத்திலும் வேலைப்பாடுகளுடன் கூடிய நிறைய  அணிகலன்கள். பூசையாளர்,  இச்சிற்பங்கள் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறினார். காலம் கணிக்க இயலவில்லை. எனினும், இவை போன்ற பழமையான அரிதான சிற்பங்கள் கோவைப்பகுதியில் காண இயலா. இச்சிற்பங்களுக்கு அருகிலேயே பிற்காலச் சிற்பங்களின் தொகுப்பும் உள்ளது.

         அடுத்து, இக்கோயிலில் “ஐயன் கோயில்” என்னும் பெயரில் ஒரு சமாதி வழிபடப்படுகிறது. அரசூரிலிருந்து இவ்வூருக்குச் சிறுவனாக வந்து சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர் இறையருள் பெற்று ஊர்மக்களின் நோயைத் தீர்த்துள்ளார். அவரே இங்கு வேல்களை நட்டுப் பூசை செய்யத்தொடங்கினார். இவ்வூரைச் சேர்ந்த எலமார் நாயக்கர் வழிவந்தோர் கோயில் அமைத்தனர். 
        















து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.








செவ்வாய், 28 ஏப்ரல், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  

படிக்கும் பயிற்சி தொடர்கிறது.
இப்பகுதியில் நான்கு ஒளிப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நான்கு படங்களையும் ஒருசேரப்படிக்கவேண்டும். அதாவது முதல் படத்தின் 
முதல் வரி, அடுத்து இரண்டாவது படத்தின் முதல் வரி என வரிசைப்
படுத்திப்படித்தால் நீண்ட சொற்றொடர்  கிடைக்கும். பின்பு முதல் படத்தின் 
இரண்டாவது வரி, இரண்டாவது படத்தின் இரண்டாவது வரி எனப் படிக்க
வேண்டும். 
தமிழ் எழுத்தல்லாது கிரந்த எழுத்துகள் வரும் பகுதி அடுத்த பாடத்தில் 
விளக்கப்படும். 

படம் - 1



படம் - 2


படம் - 3



படம் - 4



சுந்தரம்.