இதுவல்லவோ எங்கள் கோவை!
முன்னுரை
நண்பர் பா.மீனாட்சிசுந்தரம் அவர்கள்
கோவையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் மொழிபெயர்ப்பாளராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிபவர். எனவே, ஆங்கில மொழிப்புலமை போலவே தமிழிலும் புலமை
மிகப்பெற்றவர். பல்வேறு பொருண்மை பற்றிக் கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருபவர் என்றாலும்,
கொங்கு நாடு - குறிப்பாகக் கோவை - பற்றிப் பல ஆண்டுகளாகப் பல்வேறு தளங்களில் எழுதுபவர்.
கொங்கு நாட்டைச் சார்ந்த நிலம், வரலாறு, தொன்மை, மக்கள் என பன்முனைப் பதிவுகளைத் தம்
கட்டுரைகள் வாயிலாகப் பல ஆண்டுகள் எழுதி எழுதிக் கொங்கு மக்களுக்குக் கொண்டு சேர்த்தவர்.
கோவைப்பகுதியில், ஏதேனும் ஒரு பொருண்மையில், துறையில், பணியில் சிறப்புறக் கடமையாற்றும்
மக்களில் ஒருவரைத் தம் கட்டுரைகள் வாயிலாக அறிமுகப்படுத்தி வைத்தவர். தொழில் கரணியமாகப்
பலதுறையினரோடு அவர் தொடர்பு கொண்டிருப்பினும்,
தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பரப்பில் உள்ள அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோரிடம் அவருக்குள்ள
தொடர்பு நீங்காத் தொடர்பு. இவ்விரண்டு துறைகளில் அவருக்கிருந்த பெரும் ஈடுபாடே இதற்குக்
காரணம் எனலாம்.
கோவையில் வரலாற்றுப்பேரவை என்று
தனித்த ஓர் அமைப்பு இல்லையாயினும், வாணவராயர்
அறக்கட்டளை என்னும் அமைப்பு இந்தக் குறையைத் தீர்த்து வைக்கிறது எனலாம். இந்த அமைப்பானது,
தன் பெயருக்கான முத்திரையிலேயே தன் பணி குறித்து “வாணவராயர் அறக்கட்டளை– பாரம்பரியம்-கலை-கலாச்சாரம்-கட்டிடக்கலை-வரலாறு” எனப் பொறித்துக்கொண்டுள்ளது. மாதம் தோறும் ஒரு வரலாற்றுச் சிறப்புச் சொற்பொழிவு,
மாதம் தோறும் ஒரு வரலாற்று உலா என்று கொங்குப்பகுதியின் வரலாறு மற்றும் மரபு, பழமை
ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறிக் கடமையாற்றிக்கொண்டு வருகிறது. இவ்விரண்டு நிகழ்ச்சிகளில் – சொற்பொழிவு, உலா
- தவறாமல் கலந்துகொண்டு தாம் அறிந்த வரலாற்றுச்
செய்திகளைத் தம் கட்டுரைகளில் எழுதிக் கோவை பற்றிய பதிவுகளை அச்சில் மிகுதியும் சேர்த்தவர்
என்று பாராட்டப்பெற்றவர் மீனாட்சி சுந்தரம் அவர்கள். இந்நிகழ்ச்சிகளின்போதே இவரது நட்புக்கிடைத்தது.
இக்கட்டுரை ஆசிரியரும் இவரது அறிமுகத்தால் ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளராக அச்சு ஊடகத்தில்
அறியப்படுகிறார். கட்டுரை ஆசிரியரோடு இணைந்து பல தொல்லியல் களப்பணிகளில் – தம் எழுத்துப்பணிக்கிடையே
நேரம் ஒதுக்கிக் - கலந்துகொண்டு கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பு பற்றி ஆங்கில இதழ் படிப்போர்
தெரிந்துகொள்ளும் வண்ணம் செய்தவர். இவ்வாறான தொல்லியல் செய்திகளை இவர் எழுதுவதில் தனித்த
பாங்கு இருக்கும்.
இவரது தமிழ் மொழி ஆளுகை சிறப்பானது.
இவர் ஒரு கவிஞர். இவரது கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.
அவை புதுக்கவிதைகள். ஆனால், மரபுக்கவிதையில் வெண்பாவை மட்டும் ஆழக் கற்று நூற்றுக்
கணக்கில் வெண்பாக்கள் படைத்தவர். கோவையின் இரட்டைப்புலவர்கள் என அறியப்படும் கவியன்பன்
பாபு-மீனாட்சிசுந்தரம் இணையரில் ஒருவர். பாவினங்களில் வெண்பா யாப்பது மிகக் கடினமானது
என்பதைப் புலவர் பெருமக்களே கூறக்கேட்கிறோம்.
ஆனால், இந்த இரட்டைப்புலவர்கள் வெண்பா வடிவக் கவிதைகளிலேயே கோவையின் வரலாற்று
நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறியுள்ளனர் என்பதுதான் புதுமை; யாரும் செய்யாதது எனலாம்.
முன்னுரை நீண்டுவிட்டதில் வியப்பில்லை. செய்வதைச் செவ்வனே செய்யவேண்டுமல்லவா? நண்பர் மீனாட்சிசுந்தரம், தாம் எழுதிய பல கட்டுரைச்
செய்திகளை வாணவராயர் அறக்கட்டளைச் சிறப்புச்சொற்பொழிவில் 10-01-2020 அன்று பகிர்ந்துகொண்டதைப் பதிவு செய்வதே
இக்கட்டுரையின் நோக்கம். கோவையைப் பற்றிக் கோவை மக்கள் மட்டுமன்றித் தமிழகத்தில் அனைவரும்
தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியும் காரணம். எழுத்துப்படைப்பு, ஒரு குழந்தையை
ஈன்றெடுத்தலுக்கு ஒப்பானது என்று கூறுவர். வலியைத் தாங்கியே படைப்பு. சொற்பொழிவாளர்
பல்லாண்டுகளாகப் படைப்பு வாயிலாக உணர்ந்த வலி, இழந்த இழப்பு பற்றி அவரே கூறுவதைக் காண்க.
கவிதை போன்றதொரு எழுத்து நடை.
”எழுதித் தீர்வதில்லை எனதூரின் வரலாற்று ஆச்சரியங்களும், தொல்லியல் உண்மைகளும், சுவைமிகுந்த தொன்மங்களும். கோவை மண்ணின் வரலாற்றுப் பெருமைகளைத் தேடித் தேடி நான் மேற்கொண்ட பயணங்களும், நூல் வாசிப்புகளும், அவற்றை எக்ஸ்பிரஸ் இதழில் ஆங்கிலச் சொல்லோவியங்களாக்க, ஒரு பித்தனைப்போல் நான் உறங்காது விழித்திருந்த பனிக்கால நீள் இரவுகளும் என் உழைப்பின் சாட்சியங்களாய் நினைவில் நிழலாடுகின்றன. என் மண்ணின் மாண்புகளை கண்டறியவும், அவற்றை எழுத்தாக்கவும், இன்றும் என்னிடத்தில் பத்திரமாய் இருப்பவை செல்போன் சிணுங்கல்களால் காயப்படாத இந்தக் கறுத்த இரவுகளே. வண்ண வண்ணமாய் நூற்றுக்கணக்கில் நீண்டுசெல்லும் எனது சொற்சித்திரங்களின் விரல்பிடித்து இந்த இரவிலும் நான் பயணிக்கிறேன். இன்னும் சில நொடிகளில் கிழக்கே எரியவிருக்கும் நெருப்பில், இதோ இந்த இரவையும் இடப்போகிறேன். நீண்டு கிடக்கும் எனது பால்வீதியில் இவ்விரவிலும் பயணித்து ஒருசில நட்சத்திரங்களை பறித்திருக்கிறேன். ”
இனி, அவரது உரையிலிருந்து.
கோவை விழா
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்,
நாம் பிறந்து வளர்ந்த இந்தக் கோவையைப் பற்றிய உணர்வும் பெருமையும் பெருமளவில் இல்லை.
இன்று, ஆண்டுதோறும் கோவை விழாக் கொண்டாடி ஊரைப்பெருமைப் படுத்துகிறோம். கோவைக்குச்
சுவையான புகழான வரலாறு இருப்பதை எடுத்துச் சொல்லவந்த நூல் என்று கவியன்பன் பாபு எழுதிய
“தெரிந்த கோவையும் தெரியாத கதையும்” என்னும் நூலைக் குறிப்பிடவேண்டும். வெகுமக்களுக்குக்
கோவையின் வரலாறு பற்றிச் சிறு சிறு கட்டுரைகளாகச் சுவையாக இந்நூல் சொல்லுகிறது. நூற்செய்திகளுக்கு
முன்னோடியாகத் திகழ்பவர் கோவைக் கிழார் என்று அறியப்படுகின்ற இராமச்சந்திரன் செட்டியார்
அவர்கள். அவர் எழுதிய “இதுவோ எங்கள் கோவை”, “கொங்கு நாட்டு வரலாறு”
ஆகிய நூல்களில் இக்குறிப்புகள் உள்ளன.
காளமேகப்புலவர்
சொற்பொழிவாளர் தம் உரைக்குப் பாயிரம்
போலும் காளமேகப்புலவரைச் சுட்டினார். காளமேகப்புலவரின்
வெண்பா ஒன்றைக் காட்டினார்.
”மாடு
தின்பான் பார்ப்பான் மறையோதுவான் குயவன்
கூடி மிக மண் பிசைவான் கொல்லனே
- தேடி
இரும்படிப்பான் செக்கான் எண்ணெய்
விற்பான் வண்ணான்
பரும் புடவை தப்பும் பறை”
காளமேகப்புலவர் காலத்தில் நிலவிய
“வர்ணாசிரம”ப் பாகுபாட்டை எதிர்த்துப்
பாட்டாய் எழுதிக்காட்டினார் காளமேகம். பாடலை நேரடியாய்ப் படித்தால் “வர்ணாசிரம”த்துக்கு முரணாய்த்தோன்றும். ஆனால்,
வெண்பாவின் ஈற்றடியின் இறுதிச் சொல்லைக் கொண்டு தொடங்கிப் பாட்டைப் படித்தால்,
‘பறை மாடு தின்பான் ………..
வண்ணான் பரும்புடவை தப்பும்”
என்பதாகச் சரியான பொருள் அமையுமாறு
காளமேகம் வெண்பாவில் புரட்சி செய்திருப்பார். இவ்வாறு பாடல் இயற்றுவதை இலக்கண நூலார்
“கடை மொழி மாற்று” என்பர். வெண்பா எழுதுவதே கடினம். அதில், ‘கடை மொழி மாற்று’
அமைத்து எழுதுவது எளிதா? சொற்பொழிவாளருக்கும்
இது போன்று வெண்பா எழுதும் விருப்பம் எழுந்து, ‘கொக்கொக்க கூம்பும் பருவம்’ கிடைக்கும் வரை காத்திருந்து அவருடைய
முயற்சியும் கைகூடியது.
அவருடைய வெண்பா கீழே:
“நளவெண்பா தந்தாரே நம்மாழ்வார் தந்தார்
அழகுத் திருவிருத்தம் அவ்வை – அளித்தாரே
மூதுரையை சேக்கிழாரும் முன்பொருநாள்
கோவையை
போதித்துப் பெற்றாரே புகழ்”
இப்பாடலில், சேக்கிழார் கோவை பற்றி எழுதியதாகக் குறிப்பிட்டது
சொற்பொழிவாளர் பிழையல்ல. ஒரு முன்னணித் தமிழ் நாளிதழில், கோவை வரலாறு எழுதிய கோவைக் கிழாரின் பெயர் பிழையாகச்
சேக்கிழார் என எழுதப்பட்ட செய்தியைச் சுட்டியதால் நேர்ந்த வினை.
”கடைமொழி
மாற்று” என்னும் இலக்கணக்கூற்றினைப் புகுத்தி எழுதிய
மேற்படி வெண்பாவை மேலோட்டமாகப் படிப்பவர்க்கு அதன் நுணுக்கம் புரியாது. நளவெண்பா எழுதியவரைக்
கூட அறியாமல் ஒரு கவிஞரா? என்பது போன்ற முகநூல்
கண்டனங்கள் எழுந்தன. ”புகழ்” என்னும் சொல்லை
எடுத்து வெண்பாவின் முன்சொல்லாக வைத்துப் படித்துப்பார்த்தால் பொருள் விளங்கும் வகையைச்
சொன்னபிறகு கண்டனங்கள் பாராட்டுகளாக மாறின.
கோவையின் முதல் மின்சார விளக்கும்
சாமிக்கண்ணு வின்சென்ட்டும்
கோவையில் மண்ணெண்ணெய் கொண்டு தெருவிளக்குகள்
எரிந்த காலம். கோவையைச் சேர்ந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் சினிமாவை அறிமுகப்படுத்திய முன்னோடி. ஊர் ஊராகச் சென்று சினிமாப் படங்களை மக்களுக்குக்
காட்டியவர். தென்னிந்தியாவிலேயே முதன் முதலாகத் சினிமாத் திரையரங்கை அமைத்தவர். அந்த
முதல் திரையரங்குதான் கோவை ”வெரைட்டி
ஹால்” சாலையில் இருக்கும் அரங்கு. அரங்கின் பெயர்
“வெரைட்டி ஹால்”. அதுவே திரையரங்கு
அமைந்த தெருவுக்கும் பெயராய் அமைந்தது. திரையரங்கு தொடங்கும் நாளில் பயன்படுத்திய மின்சாரம்
மக்களுக்கும் பயன்படவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், திரையரங்குக்காக ஜெர்மனியிலிருந்து
வாங்கிய இரு பெரிய ’ஜெனரேட்டர்’களைக் கொண்டு மின்சாரம் எடுத்து
அந்தத் தெரு முழுதும் இருந்த மண்ணெண்ணெய் விளக்குகளை மின்விளக்குகளாக மாற்றிக்கொடுத்தார்.
கோவைக்குப் பெருமை சேர்த்த அவரை நினவு கூர்ந்து ஒரு கட்டுரை வெளியானது. அக்கட்டுரையில், வின்சென்ட் அவர்களைக் குறித்து
நாம் கேள்விப்பட்டிராத ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளது. அவர் இறந்தபோது ஆலங்கட்டி மழை பெய்தது என்று ஒரு
கதை பேசப்படுகிறது. கிறித்தவர்களிடையே ஒரு
நம்பிக்கை உண்டு. ஒருவர் இறந்த நாளில் ஆலங்கட்டி மழை பெய்வது என்றால் அவர் உலகிலேயே
சிறந்த மனிதருள் ஒருவர் என்பதற்கு அது அடையாளம் என்பது அந்த நம்பிக்கை. கிறித்தவரான
அவருடைய இறப்பின்போது ஆலங்கட்டி மழை பெய்தது என்பது அவரின் உயர்வை இயற்கையே அவர் சார்ந்த
மத நம்பிக்கை வாயிலாக வெளிக்காட்டியதற்குச் சான்றாகும். சுவையான இந்தச் செய்திக்கும்
ஒரு வெண்பா எழுந்தது.
சாமிக்கண்ணு வின்சென்ட் |
“கந்தர்வக்கோட்டையைக் கட்டமைத்த
தேவதச்சன்
இந்த ஊர் வின்சென்ட் எனச்சொல்வேன்
- வின்சென்ட்டின்
ஆன்மா அடங்கிய நாள் ஆலங்கட்டி மழை
வான் வருந்த ஓய்ந்ததவன் வாழ்வு”
சலாமாபாத்
திப்பு சுல்தான் நாமறிந்தவர். அவரைப்பற்றிய பல்வேறு விமரிசனங்கள் இன்று வைக்கப்படுகின்றன. அவர் ஒரு இசுலாமிய வெறியர்
என்றும் இந்துக்களைக் கொடுமைப்படுத்தியவர் என்றேல்லாம் கட்டமைக்கப்படுகின்ற கதைகள்
நிலவுகின்றன. இக்கதைகளை உடைப்பதற்காகவே ஒரு கட்டுரையைச் சொற்பொழிவாளர் எழுதியுள்ளார்.
டணாயக்கன் கோட்டை என்றொரு புதினம். கோவை பாலகிருஷ்ண நாயுடு அவர்கள், கோவையிலிருந்து வெளியான ”நவ இந்தியா” நாளிதழில் வாரந்தோறும் தொடராக எழுதி
வந்த கதை. அண்மையில் நூல் வடிவம் பெற்றது. (இக்கட்டுரை ஆசிரியரின் குறிப்பு : ”டணாயக்கன் கோட்டை” கதை தொடராக வந்த அந்தக்காலத்தில் கட்டுரை ஆசிரியர்
தம் பள்ளி நாள்களில் நூலகம் சென்று அந்தக்கதையைப் படித்ததை நினைவு கூருகிறார்). அந்நூலின்
முகவுரை எழுதியவர் எழுத்தாளர் திலகவதி I.P.S.
அவர்கள். அவர் திப்புசுல்தானைப் பற்றிய வரலாற்றினை நன்கு படித்திருப்பவர். அவர்,
தம் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்: குரானின்
அடிப்படைக் கோட்பாடே மற்ற சமயங்களுடைய நம்பிக்கைகளை மதிக்கவேண்டும் என்பதுதான். மற்ற
சமயங்களின் கடவுளர்களை அவமதிப்பது என்பது அல்லாவையே அவமதிப்பதற்குச் சமமாகும் என்று
குரான் சொல்கிறது. இந்தக் கோட்பாட்டுக்கு ஏற்றவாறு
வாழந்தவர்தான் திப்பு சுல்தான்.
அவருடைய ஆட்சியில் - கோவை உட்பட
- இந்தக் கொங்கு நாடு இருந்தபோது, அவரது ஆட்சியில் உருவாக்கிய நாணயங்களில் சிவனுடைய
உருவத்தையும், பார்வதியின் உருவத்தையும் அச்சடித்து
வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல; புலவர் இராசு
அவர்கள் எழுதியுள்ள “இசுலாமியத் தமிழ்ச் சமுதாய ஆவணங்கள்” என்னும் நூலில்,
கோவைக்கருகில் அமைந்துள்ள பல்லடத்தில் இருக்கும் அங்காளபரமேசுவரி கோயிலுக்குத் திப்புசுல்தான்
கொடை கொடுத்திருக்கிறார் என்னும்செய்தி உள்ளது. கோவையிலிருக்கும் குறிச்சி செல்லாண்டியம்மன்
கோயிலுக்கும் திப்பு சுல்தான் கொடை கொடுத்திருக்கிறார் என்னும் செய்திகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு, திப்பு சுல்தான், குரான் கூறுகின்றவாறு மற்ற சமயங்களை மதித்தவர் என்று திலகவதி
அவர்கள் கூறியுள்ளதைக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார் சொற்பொழிவாளர்.
தீவட்டி சலாம்
மற்றொரு சுவையான செய்தி; யாரும்
அறியாதது. இந்து அறநிலையத் துறையின் முன்னாள் உதவி ஆணையர் முத்து பழனியப்பன் அவர்கள்
சொற்பொழிவாளரிடம் பகிர்ந்து கொண்ட செய்தி. பேரூர் கோயில் திறக்கும்போது, திப்பு சுல்தான்
கட்டளைப்படி பட்டீசுவரருக்கு முன்பாகத் தீவட்டி ஒன்றை ஒருவர் தம் கையால் தூக்கி மேலும்
கீழும் அசைத்துச் “சலாம்” செய்த பின்னரே மற்ற சடங்குகள் அனைத்தும்
நிறைவேற்றப்படவேண்டும். இந்த மரபு, இன்றுவரை நடந்தேறிவருகிறது என்பது திப்பு சுல்தான்
எந்த அளவு சமய ஒற்றுமையையின்பால் பற்றுவைத்திருந்தார் என்பதைக் காட்டவல்லது. (கட்டுரை
ஆசிரியர் குறிப்பு : சொற்பொழிவின்போது முத்து
பழனியப்பன் வந்திருந்தார். திப்பு சுல்தானின் மேற்குறித்த “சலாம்”
வழிபாடு, அவிநாசி, திருமுருகன்பூண்டி ஆகிய கோயில்களிலும் நடைமுறையில்
இருந்துவருகிறது என்பதை அவர் குறிப்பிட்டார்).
இச்செய்தியினைத் தாங்கி வெளிவந்த கட்டுரையின் தலைப்பே “சலாமாபாத்”.
இதையும் ஒரு வெண்பாவில் அடக்கிவிட்டனர் வெண்பா இரட்டையர். வெண்பாவைப் பாருங்கள்:
“தீவட்டி தூக்கிச் சிவ வணக்கம் பின்புதான்
கோவில் நடை திறப்பு காரணம் சொல் – கோவையர்
நாவினிக்கப் போற்றும் நற்பேரூர்
ஈசனுக்குத்
தீவணக்கம் செய்தவன் திப்பு”
’புலி’யும் ’கிலி’யும்
திப்பு பற்றிய இன்னொரு சுவையான செய்தி. 1799-ஆம் ஆண்டில் இறக்கும் வரை வெள்ளையரால் பிடிக்கப்படாமல்
அவர்களை அச்சத்திலேயே வைத்திருந்தவன் வீரன் திப்பு சுல்தான். இதைச் சொற்பொழிவாளர் “ அநேகமாக, வெள்ளையருக்குப்
பேதியைக் கொடுத்துக்கொண்டிருந்தவன்தான் திப்பு சுல்தான்” என்று மக்கள்
வழக்கில் குறிப்பிட்டார். ஆங்கிலேயர் கொண்ட
அச்சம் இடைவிடாதது என்பதற்கு இதைவிட வேறென்ன உவமை இருக்கக்கூடும்? பிரிட்டிஷாருக்கு முன்னரே திப்பு சுல்தான் ஏவுகணைகளைப்
(MISSILES) போரில் பயன்படுத்தியவன்.
திப்பு சுல்தானோடு இணைந்து தீரன் சின்னமலையும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியுள்ளான்
என்பது வாய்மொழிச் செய்தி. இன்னும் பலரும் திப்புவோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும். திப்புவை மட்டும் ஏன் பிடிக்கமுடியவில்லை என்ற அச்சமும்
கேள்வியும் எழும்போதெல்லாம், அவன் ஒரு புலியைப்போன்ற வீரமுடையவன், ஒரு புலிப்படையையே
வைத்திருந்தவன் என்ற சிந்தனையால் ஆங்கிலேயருக்கு அவனைப்பற்றிய ஒரு ‘கிலி’ இருந்துகொண்டே இருந்தது. நினைத்த நேரத்தில் ஒரு புலியாக மாறும் சக்தி திப்புவிடம்
இருந்தது என்று ஆங்கிலேயரிடையே ஒரு நம்பிக்கையும் நிலவியது. இந்த நம்பிக்கை நம் ஊரில்
மட்டுமன்றி இங்கிலாந்திலும் பரவியிருந்தது.
இங்கிலாந்தில் ‘புலி’ திப்பு
இங்கிலாந்தில் குழந்தைகள் அழும்போது
இங்கிலாந்துத் தாய்மார்கள் ஒரு பாடலைப் பாடிக் குழந்தைகளின் அழுகையை நிறுத்துவார்கள்.
அப்பாடல் திப்புவைப்பற்றியது. திப்பு புலியாக உருவெடுத்துக் கடித்துக் குதறுவான் என்று
அச்சுறுத்தும் பாடல் அது. எழுதியவர் இன்னார் எனத்தெரியாது. அந்த அளவில் திப்புவின் வீரம் இங்கிலாந்தில் அச்சத்தை
ஏற்படுத்தியது. அப்பாடல் வருமாறு :
Tiger Tiger burning bright
Tipu Sultan of terrible height
Will change into tiger in your sight
Mysore tiger of murderous might
He will hold you tight
Give you bite
Tear you white
The tiger of Mysore
Is your eyesore
யானைக் கொப்பம்
அடுத்து, எட்டிமடையில் உள்ள நண்பர்
அன்பரசுவுடன் மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள நடுப்பதி கிராமத்துக்குச் சென்று வந்த
நிகழ்வு. அங்கு, வடசேரி ஜமீன்தார் மன்னடியாரின் சிதிலமடைந்த மாளிகை (BUNGALOW) இருக்கிறது. நடுப்பதி கிராமத்தில்
யானையைப் பிடிக்கும் கொப்பத்தைப் பார்த்த நிகழ்வும் கட்டுரையாக எழுதப்பட்டது.
நீதிமன்றத்துக்கு வந்த யானை
முன்னாளில் கோவையிலிருந்த சிவக்கவிமணி
சி.கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களைத் தெரியாதோர் இரார். அவர் ஒரு வழக்கறிஞர். வ.உ.சி.
அவர்களுடன் நெருங்கிப்பழகியவர். பெரிய புராணத்துக்கு உரை எழுதிய புலமை சான்றவர். அவர்
படித்தது கோவை அரசுக் கலைக்கல்லூரி. அதே கல்லூரியில்
படித்த பெருமையை சொற்பொழிவாளர் குறிப்பிட்டார்.
(கட்டுரையாளருக்கும் அதே கல்லூரியில் படித்த பெருமையான நினைவு உண்டு). சி.கே.சு.
அவர்கள் சுட்டிச் செல்லும் ஒரு நிகழ்வு அற்புதமான செய்தி. எட்டிமடையில் வேலப்ப கவுண்டர்
என்பவர் பெரிய நிலக்கிழார். வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் இராத காலம்.
மேற்படி நிலக்கிழார், வனத்தை ஒட்டியுள்ள நிலத்தை வாங்கி அதில் யானை பிடிக்கும் குழியாகிய
கொப்பம் தோண்டுவார். யானையைப் பிடித்துப்பழக்கிக் கோயில்களுக்கு விற்றுக்கொள்ளலாம்.
ஒரு முறை, அவரது கொப்பம் அமைந்திருந்த தோட்டத்தில் கன்றுடன் திரிந்துகொண்டிருந்த தாய்
யானை ஒன்று இறந்துவிடவே, யானைக்கன்றினை வேலப்ப கவுண்டர் தம் வீட்டில் வைத்து வளர்த்து
வந்தார். வீட்டின் முன்பு ஒரு பெரிய சாளை அமைத்து எருது வளர்ப்பதுபோல் வளர்த்துவருகிறார்.
இவர், சுப்பராயக்கவுண்டர் என்பாரிடம் கடன் வாங்கியிருந்த நிலையில், சுப்பராயக் கவுண்டர்,
யானைக் கன்றை வளர்க்கும் வேலப்ப கவுண்டருக்குத் தம் கடனைத் திருப்பித்தர முடியாதா எனச்
சிந்தித்து நீதிமன்றத்தில் கடன் பணத்துக்கு மாற்றாக யானைக்கன்றைக் கேட்டு வழக்குத்
தொடுக்கிறார். காவல் துறையினர் யானைக்கன்றைக் கையகப்படுத்திக் (ஜப்தி செய்து) கொண்டுசெல்கின்றனர். வேலப்ப கவுண்டர் எவ்வாறோ யானைக்கன்றைக் காட்டுக்குள்
விரட்டிவிடுகிறார். சும்மா இருப்பாரா சுப்பராயக்
கவுண்டர்? கொச்சியில் யானை பிடிப்பதற்கென்றே
இருக்கும் ஆள்களை அழைத்துவந்து அந்த யானைக்கன்றைப் பிடித்து நீதிமன்றத்தில் மீண்டும்
ஒப்படைக்கிறார். வழக்கு தொடர்கிறது. சி.கே.சு.
அவர்கள் இவ்விருவருக்கும் நடுவராக இருந்து வழக்கைத் தீர்த்துவைத்து, யானைக்கன்றைப்
பேரூர் பட்டீசுவரர் கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கலாம் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை
வைக்கிறார். நீதிமன்றமும் யானையை வைத்து வளர்க்க இயலாதாகையால் கோயிலுக்குக் கொடையக
வழங்குவதை ஒப்புக்கொள்கிறது. அந்த யானைக்கன்றுதான் பேரூர்க்கோயிலின் ஜானகி (யானை).
மேற்படி நிகழ்ச்சியும் ஒரு வெண்பாவில்
சுட்டிக் காட்டப்படுகிறது. வெண்பாவைப் பார்ப்போம் :
கானகத்து எட்டிமடை கண்டெடுத்த கன்றொன்று
ஜானகியாய் ஆன கதை சொல்வாயா – யானை
யார்க்கு?
கொப்பத்தில் சிக்கியது கோர்ட்டுக்கு
வந்ததே
அப்போது ஜானகி ஆச்சு
நாமக்கல்லார்-கோவை அரசுக் கல்லூரி
மாணவர்
அடுத்த கட்டுரை நாமக்கல் இராமலிங்கம்
பிள்ளை பற்றியது. “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”
என்னும் வரிகளைப் பார்த்தவுடனே நினைவுக்கு வரும் கவிஞர் அவர்தாம். மலைக்கள்ளன்
திரைப்படத்தின் மூலக்கதையைப் புதினமாக எழுதியவர் அவரே. (கட்டுரை ஆசிரியர், அந்தப் புதினத்தைப் படித்ததை நினைவு கூருகிறார். கதையின் முதல் காட்சியை அவர் வண்ணித்து எழுதியதைப்
படிக்கையில், மலைக்கள்ளன் திரைப்படத்தின் காட்சி கண் முன்னே விரியும்). நாமக்கல்லார் ஆங்கிலத்திலும் நனிப் புலமை பெற்றவர்
என்பதைப் பலர் அறியார். அவர் கோவை அரசுக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் என்பதும்,
1953-ஆம் ஆண்டில் கல்லூரியின் நூற்றாண்டு விழா மலரில் அவர் ஆங்கிலத்தில் “MY ALMA MATER” என்னும் அழகியதொரு கட்டுரை எழுதியுள்ளார்
என்பதும் நமக்குப் புதிய செய்திகள். அதில் அவர் ஒரு சுவையான செய்தியைச் சொல்கிறார்.
1898-ஆம் ஆண்டு முதல் 1907-ஆம் ஆண்டு வரை கோவை இந்துக்கல்லூரி என்று வழங்கிய காலத்தில்
அதில் படித்தவர். நான்காம் வகுப்பிலிருந்து ’மெட்ரிகுலேஷன்’ வரை அங்கு படித்ததாக அவர்
தம் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். நாமக்கல்லார் கவிஞராய்ப் பெரிதும் அறியப்பட்டவர்
என்றாலும், அவர் ஒரு தேர்ந்த ஓவியருமாவார். கவிஞருக்குக் கணிதப்பாடம் வராது. ஓவியம்
வரும். அவருடைய கணித ஆசிரியர், இராமகிருஷ்ண அய்யர் என்பார் கணக்குப் பயிற்சி ஒன்றைக்
கொடுத்துப் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார்.
எல்லாரும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கக் கவிஞரோ கணக்காசிரியரை ஓவியத்தில்
வரைந்துகொண்டிருக்கிறார். ஓவியத்தை முடித்து அருகில் இருக்கும் மாணவனிடம் காட்டியிருக்கிறார்.
ஆசிரியரின் உருவம் அச்சு அசலாக இருந்தது. அந்த மாணவன் சிரித்துவிட, ஆசிரியர் அருகில்
வந்து பார்க்கக் கவிஞருக்குப் பரிசாகக் கிடைத்தது விரற்கணுக்களில் அடி. பின்னர், ஆசிரியர்
மாணவரை அடிக்கக் கூடாது என்று கவிஞரின் தந்தையார் கொள்கைப் போராட்டம் நடத்தும் அளவுக்கு
நிலைமை சென்றது.
கல்லூரி முதல்வர் எலியட்டும் கவிஞரும்
பள்ளிப்படிப்பு முடித்துக் கல்லூரிப்படிப்பு.
அதே கோவைக்கல்லூரி. அப்போது கல்லூரியின் முதல்வராகப் பணியில் இருந்தவர் ஆங்கிலேயர்
இ.ஹெச். எலியட் (E.H. ELLIOT) என்பார்.
அவர் ஆங்கில மொழிப்பேராசிரியரும் கூட. அவரது வகுப்பிலும் ஒரு நாள், நாமக்கல் கவிஞர்
ஓவியம் வரைவதில் ஈடுபட்டார். எலியட்டுக்கு ஒரு செவியில் குறைபாடு. எனவே, அவர் அவ்வப்போது
செவியின் பக்கம் கையைச் சாய்த்து வைத்துச் செவி மடுப்பார். ஒரு தொலைபேசியைச் செவியின் அருகில் வைத்திருப்பது
போலத் தோன்றும் இந்தக் காட்சி கவிஞருக்குப் பிடித்துப்போக, அன்று ஆங்கில வகுப்பில்
ஆசிரியரைப் பார்த்து மேற்படி செவிசாய்க்கும் நிலையில் ஓவியத்தை வரைந்து விட்டார். எலியட்டும்
அதைப்பார்த்துவிட்டார். ஆனால் நடந்தது வேறு. ”அடடா!
அச்சு அசலாய் என்னைப்போலிருக்கிறதே!”
என வியந்தார். கல்லூரியில் அப்போது ஓவிய ஆசிரியராக இருந்தவர் இராஜா ராவ் என்பவர்.
அவரை அழைத்தார். தம் சட்டைப்பையில் இருந்த பணத்தை எடுத்து அவரிடம் தந்து, இந்த மாணவனுக்கு
என்னென்ன வண்ணப்பென்சில்கள் தேவையோ அத்தனையும் வாங்கிக் கொடுங்கள் என்று பாராட்டியதோடு,
கோவையில் இருக்கும் சிறந்த ஓவியரிடம் மாணவனுக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யுங்கள்
என்றாராம். அது மட்டுமல்ல; தம்முடைய பேனாவையே கவிஞருக்குப் பரிசாக அளித்தாராம். தங்க
மூடியிட்ட பேனா அது. ஒரு பிராமணர் ஓவியம் வரைந்ததற்காக “முழியைப் பேர்த்தார்” ;
ஆனால், ஒரு வெள்ளையர் ஒவியம் வரைந்ததை ஊக்கப் படுத்திப் பனம் கொடுத்து
வளர்த்திருக்கிறார். இதை நாமக்கல் கவிஞர் தம் கட்டுரையில் குறிப்பிடுகிறார். பின்னர்,
எலியட் கூறியவாறே, கல்லூரி ஓவிய ஆசிரியர் இராஜாராவ் அவர்கள் தம் நண்பரான தஸ்தகீர் என்னும்
ஓவியரிடம் கவிஞரை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியுள்ளார். கவிஞரும் தஸ்தகீரின் ஒளிப்படக்
கூடத்துக்குச் சென்று DRAWING,
PAINTING ஆகிய இருவகைக் கலைகளிலும் உள்ள நுட்பங்களை அறிந்துகொண்டார் என்று கவிஞரே
பதிவு செய்துள்ளார்.
கவிஞரும் இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு
விழாவும்
1912-ஆம் ஆண்டு. இந்தியாவின் பேரரசராக
ஐந்தாம் ஜார்ஜ், பேரரசியாக மேரி ஆகிய இருவரும் முடிசூட்டிக்கொள்கின்ற மாபெரும் விழா
இருபதாம் நூற்றாண்டின் காட்சி விருந்தாக தில்லியில் நடந்தேறியது. விழாவை ஒட்டி ஓவியப்போட்டி,
கவின்கலைக் கண்காட்சி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நாமக்கல் கவிஞர், ஜார்ஜ்
மன்னருக்கும் அரசியார் மேரிக்கும் பாரதத் தாய் முடி சூட்டிவிடும் காட்சியாக ஓர் ஓவியத்தை
வரைந்து போட்டிக்கு அனுப்பியிருந்தார். எண்ணெய் வண்ணத்தால் தீட்டப்பட்ட ஓவியம் அது.
கண்காட்சிக்கு ஓவியம் அளித்தவகையில் அந்த மாபெரும் விழாவில் கலந்துகொள்ள கவிஞருக்கும்
சிறப்பு நுழைவுச் சீட்டு கிடைத்தது. பெரும் செல்வர்களுக்கும் ஜமீந்தார்களுக்கும் கூடக்
கிடைத்திராத வாய்ப்பு. அந்த ஓவியத்துக்குத் தங்கப்பதக்கம் பரிசாகக் கிடைத்ததையும்,
மேரி அரசியாரே பதக்கத்தை அணிவித்ததையும், பின்னர் கலைஞர்கள், புலவர்கள், பாடகர்கள்
ஆகியோரை மட்டுமே அழைத்து வைத்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டதையும் நினைவு கூரும்
கவிஞர் இந்தப் பெருமை தம் ஓவியத் திறமையால் மட்டுமே நிகழ்ந்தது என்றும், தம் ஓவியத்
திறமையை வளர்த்தெடுத்த கல்லூரிதான் இதற்கெல்லாம் காரணம் என்றும் கூறித் தம் ஆசிரியரையும்
முதல்வர் எலியட்டையும் பாராட்டிச் சுட்டுகின்றார். (அந்த ஓவியத்தின் படம் கிடைக்குமா?)
ஐந்தாம் ஜார்ஜின் முடிசூட்டு விழா |
ஐந்தாம் ஜார்ஜும் மேரியும் |
கன்னியின் காதலி
ஷேக்ஸ்பியர் எழுதிய TWELFTH NIGHT என்னும் நாடகத்தைத்
தழுவிக் கோவை ‘சென்ட்ரல் ஸ்டுடியோ’வில்
எடுக்கப்பட்ட திரைப்படம் கன்னியின் காதலி.
ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் அண்ணன், தங்கை இருவர். தங்கை ஆண் வேடம் பூண்டதாகக் கதை அமைந்திருக்கும்.
தமிழ்த் திரைப்படத்தில் சகோதரிகள் இருவரில் ஒருவர் ஆண் வேடம் பூண்டு நடித்திருப்பார். ஆண் வேடமிட்ட பெண், அந்நாளில் பெரிதும் அறியப்பட்ட
மாதுரி தேவி ஆவார். இந்தச் செய்தியை ஒரு வெண்பாவில் இரட்டையர் சொல்லியிருப்பது மிக
அழகு. வெண்பாவைப் பாருங்கள் :
பன்னிரெண்டாம் ராத்திரியில் பாவையரோ
ஆண்களாம்
கன்னியின் காதலியைக் கண்டு சொல்
– முன்னொருநாள்
சென்ட்ரல் ஸ்டுடியோவில் சேக்ஸ்பியரின்
ரெட்டையரைக்
கொண்டுவந்த மாதுரியைக் கேள்.
சிந்துவெளிப் பண்பாடும் சாகம்பரியும்
சாகம்பரி என்பது தாய்த் தெய்வ வழிபாட்டின்
அடையாளம். பார்வதிக் கடவுளின் ஒரு மாற்றுவடிவமாகக் (அவதாரம்) கருதப்படுகின்ற தாய்த்தெய்வம்.
சாகம்பரி என்பது சமற்கிருதப்பெயர். சரியான ஒலிப்பில் SHAKAMBHARI என அமையும். ஆங்கிலத்தில்
THE BEARER OF THE GREENS எனப் பொருள் தரும். தொல்லியல் நோக்கில், வேளாண்
வளமைத் தெய்வம். [கட்டுரை ஆசிரியர் குறிப்பு : ’சாகா’ (SHAKA) என்னும் சமற்கிருதச் சொல்
பச்சைக் காய்கறிகளைக் குறிப்பதும், அதன் காரணமாகவே ’சாகாஹாரி’ என்று தாவர உணவை உண்ணும் விலங்குகளைக்
குறித்தலும், ’மாம்சாஹாரி’ என்று புலவு உண்ணும் விலங்குகளைக்
குறித்தலும் நினைவுக்கு வருகின்றன) தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (DEBIPRASAD CHATTOPADHYAY) என்னும்
ஆய்வறிஞர் தாம் எழுதிய ‘லோகாயதம்’
(LOKAYATA) என்னும் நூலில் இந்த வேளாண் வளமைத் தெய்வத்தைக் குறிப்பிடுகிறார்.
பெண் என்பவள் எப்படி வேளாண்மையோடு தொடர்புபடுத்தப்படுகிறாள், வேளாண்மை என்பது பெண்களின்
கண்டுபிடிப்பு, வேளாண்மைச் சடங்குகளைப் பெண்கள்தாம்
நடத்தியிருக்கிறார்கள், பின்னர் எப்படி இச்சடங்குகள்
ஆண்களிடத்திலே சென்றன என்பனவற்றை ஆய்வு செய்திருக்கிறார் ஆசிரியர்.
சமயங்கள் தோன்றுவதற்கு முன்பாகப்
பண்டைய சமூகங்களில், பழங்குடி மரபில், பெண்ணே வளமையின் குறியீடாகக் காட்டப்பட்டிருக்கிறாள். அந்த வளமைக்கான மந்திரங்களைச் செய்தவள் பெண் என்று
நிறுவிப் பின்னால் பொருள் முதல் வாதத்தின் தொடக்கமாக ஆண்கள் அவற்றைக் கைப்பற்றுகிறார்கள்
என்று எழுதுகின்ற சட்டோபாத்யாயா அவர்கள், தம் நூலில் கீழ்க்காணும் சிந்துவெளிப் பண்பாட்டின்
முத்திரையைக் காட்டுகிறார்.
பெண் - வேளாண் தெய்வமாக
காட்டிவிட்டு, ’மார்க்கண்டேய புராணம்’ என்ற தாந்திரிக நூலில் உள்ள தேவி மகாத்மியம் என்னும் பகுதியைக் குறிப்பிடுகிறார். அப்பகுதியில், பெண்ணே ஒரு கடவுளாகத் தனக்கும் வேளாண்மைக்கும் என்ன தொடர்பு என்று சொல்வதாகச் சில வரிகள் வருகின்றன. உயிர் வளர்க்கும் காய்கறிகள் எல்லாம் என் உடலிலிருந்து முளைக்கின்றன என்று அப்பெண் கடவுள் ’சாகம்பரி’ சொல்கிறாள். சாகம்பரி என்னும் பெயர் ‘மூலிகையைச் சுமப்பவள்’ (HERB BEARING) – அதாவது கருவிலே வைத்திருப்பவள் என்று பொருள் தரும். மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்படுகின்ற இந்தச் செய்தி பழங்குடி நம்பிக்கையைச் சார்ந்தது. சமயங்களை உருவாக்கியவர்களுக்கு இந்த நம்பிக்கை தெரியாது. பழங்குடி மக்களிடம்தான் இந்த அனுபவங்களும் கற்பனையும் இருந்தன. மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்படுகின்ற இந்தச் செய்திக்குப் பொருத்தமாக ஜான் மார்ஷல் சிந்துவெளியில் கண்டுபிடித்த ஒரு முத்திரைதான் சாகம்பரி. இந்த முத்திரையில், ஒரு பெண் தலைகீழாக வரையப்பட்டிருக்கிறாள். இரு கால்களையும் விரித்து வைத்திருக்கிறாள். அவளுடைய கருப்பையிலிருந்து ஒரு செடி முளைத்து வெளிவருகிறது. தாவரங்கள் பெண்ணின் உடலிலிருந்தே முளைக்கின்றன என்னும் பழம் நம்பிக்கை இந்தப்பெயரிலே புதைந்துள்ளது.
பெண் - வேளாண் தெய்வமாக
சிந்துவெளி - முத்திரை |
காட்டிவிட்டு, ’மார்க்கண்டேய புராணம்’ என்ற தாந்திரிக நூலில் உள்ள தேவி மகாத்மியம் என்னும் பகுதியைக் குறிப்பிடுகிறார். அப்பகுதியில், பெண்ணே ஒரு கடவுளாகத் தனக்கும் வேளாண்மைக்கும் என்ன தொடர்பு என்று சொல்வதாகச் சில வரிகள் வருகின்றன. உயிர் வளர்க்கும் காய்கறிகள் எல்லாம் என் உடலிலிருந்து முளைக்கின்றன என்று அப்பெண் கடவுள் ’சாகம்பரி’ சொல்கிறாள். சாகம்பரி என்னும் பெயர் ‘மூலிகையைச் சுமப்பவள்’ (HERB BEARING) – அதாவது கருவிலே வைத்திருப்பவள் என்று பொருள் தரும். மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்படுகின்ற இந்தச் செய்தி பழங்குடி நம்பிக்கையைச் சார்ந்தது. சமயங்களை உருவாக்கியவர்களுக்கு இந்த நம்பிக்கை தெரியாது. பழங்குடி மக்களிடம்தான் இந்த அனுபவங்களும் கற்பனையும் இருந்தன. மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்படுகின்ற இந்தச் செய்திக்குப் பொருத்தமாக ஜான் மார்ஷல் சிந்துவெளியில் கண்டுபிடித்த ஒரு முத்திரைதான் சாகம்பரி. இந்த முத்திரையில், ஒரு பெண் தலைகீழாக வரையப்பட்டிருக்கிறாள். இரு கால்களையும் விரித்து வைத்திருக்கிறாள். அவளுடைய கருப்பையிலிருந்து ஒரு செடி முளைத்து வெளிவருகிறது. தாவரங்கள் பெண்ணின் உடலிலிருந்தே முளைக்கின்றன என்னும் பழம் நம்பிக்கை இந்தப்பெயரிலே புதைந்துள்ளது.
பூர்ண கடா |
’பூர்ண
கடா’ (PURNA GHATA) -
அடுத்து, ’பூர்ண கடா’ என்னும் தாந்திரிக ஓவியத்தைப் பற்றிய
செய்தி.. ’பூர்ண கடா’ என்பது நீர் நிரம்பிய ஒரு கலம்
(பானைப் பாத்திரம்); ஒரு சதுர வடிவிலான களிமண் பீடம். அதன் பரப்பில் ஐந்துவகைத் தானியங்கள்
பரப்பிவைக்கப்பட்டு, நீர் நிரம்பிய மண் பானை வைக்கப்படுகிறது. தயிரில் கலந்த அரிசி
அப்பானையில் இடப்படுகிறது. பானையின் கழுத்துப்பகுதியில் சிவப்பு வண்ணக் கயிறு சுற்றிக்கட்டப்படுகிறது.
பானையின் வாய்ப்பகுதியில் ஐந்து வகை இலைகள் வைக்கப்படுகின்றன. இலைகளின் மீது அரிசியும்
வெற்றிலையும் பரப்பிய மண் தட்டு ஒன்று வைக்கப்படுகிறது. இந்தத் தட்டில் பசுமை நிற இளநீர்க்
காய் அதன் இளங்காம்புகளுடன் வைக்கப்படுகிறது. இளநீர்க்காயின் மீது குங்குமம் பூசப்படுகிறது.
இறுதியாகப் பானையின் வயிற்றுப்பரப்பில் ஒரு
குழந்தையின் உருவம் குங்குமச் சாந்துகொண்டு வரையப்படுகிறது. இது வங்காளத்தில் இருந்த
ஒரு நடைமுறை.
‘சர்வதோபத்ரா’ (SARVATOBHADRA)
முன்னே குறிப்பிட்ட களிமண் பீடத்தின்மீது
‘சர்வதோபத்ர மண்டலம்’
(SARVATOBHADRA MANDALAM) என்னும் ஒரு யந்திரத்தின் (YANTRA) ஓவியம் வரையப்பட்டிருக்கும்.
இந்த ஓவியம், நடுவில், எட்டு இதழ்களுடைய ஒரு தாமரையைக்கொண்டிருக்கும். இத் தாமரை வடிவம்
(LOTUS), தாந்திரிகத்தில், பெண்ணின் பிறப்புறுப்பை எதிரொலிக்கும்
ஒரு குறியீட்டு வடிவமாகும் என்கிறார் சட்டோபாத்யாயா. எல்லா யந்திரங்களிலும் இந்தத்
தாமரையைக் காணலாம். யந்திரத்தின் சதுரப்பகுதியில் இருக்கும் கொடிகள் வளமையின் குறியீடு.
’பூர்ண கடா’ என்னும் பானை, ‘சர்வதோபத்ரா’ என்னும் யந்திரத்தின் மீது வைக்கப்படும்
இந்த இணைப்பு, பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்துதான் இயற்கை செழிக்கிறது என்னும் கருத்தின்
வெளிப்பாடு. பானையின் நடு வயிற்றுப்பகுதியில்
வரையப்பெற்ற குழந்தை உருவம் மனிதப் பிறப்பின் குறியீடு.
சர்வதோபத்ரா |
முக்கோணம் எதைக்குறிக்கிறது?
அடுத்து, மேற்படி நூலில் தாய்த்தெய்வச்
சிலைகளின் படங்களைக் காட்டி ஆசிரியர் சுட்டும் சில செய்திகளைச் சொற்பொழிவாளர் கூறுகிறார்.
முன்னர்க் கூறியவாறு தாமரை மலர் ஒரு குறியீடாகப் பெண்ணின் பிறப்புறுப்பைச் சுட்டி நின்றது
போலவே, முக்கோண வடிவத்தையும் ஒரு குறியீடாகக் காட்டும் மரபு உலகம் முழுதும் ஏற்பட்டது.
மெசபடோமியா (MESOPOTEMIA),
எகிப்து (EGYPT), உக்ரேன்
(UKRAINE), ஃபினீசியா (PHOENICIA) மற்றும் இந்தியா (சிந்து
சமவெளி உட்பட) ஆகிய இடங்களில் கிடைத்த பெண் சிலைகளே மேற்சொன்ன படங்களில் உள்ளவை. தாந்திரிக
மரபிலே, தாந்திரிக யந்திரங்களிலே முக்கோண வடிவம் வரைகின்ற மரபு வந்ததற்கு இதுவே காரணம்.
தொல்பழங்காலத்துப் பெண் தெய்வச்சிலைகள் |
பெண் வளமையின் குறியீடு – உலகளாவிய
கருத்து
பெண்ணுறுப்பை வளமையின் ஒரு குறியீடாகக்
கருதும் மரபு உலகளாவியது. வட அமெரிக்காவில் ஒரு பகுதியில், வறட்சி ஏற்படும்போதெல்லாம்
இரவில் பெண்கள் நிர்வாணமாகச் சென்று வயல்வெளியைச் சுற்றி வருவார்கள். அதுவும், அப்பெண்கள்
மாதச் சுழற்சிக் காலத்தவர்களாய் (MENSTRUATING
WOMEN) இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நிலத்தைச் சுற்றி நடந்தால்
நிலம் வளம் பெறும் என்பது நம்பிக்கை. கிரேக்க நாட்டில், டெமட்டர் (DEMETER) என்னும் பெயரில் வணங்கப்படும் வேளாண் பெண் தெய்வத்தோடு
தொடர்பு படுத்திக் கூறப்படும் ஒரு சடங்கும் மேற்குறித்த நம்பிக்கையின்பாற்பட்டதுதான்.
இச்சடங்கின்போது, பெண்கள் நிர்வாணமாய் அல்லது தம் படைப்புறுப்பை வெளிக்காட்டிச் செல்வதாகக்
குறிப்பிடுகிறார்கள்.
பருத்தி ஆத்தா துணி கொடு
பெண்கள்தாம் குழந்தைகளைப் பெற்றுத்
தருகிறார்கள்; பெண்கள்தாம் வளமையின் சான்றாய் நிற்பவர்கள் என்னும் இந்த உலகளாவிய கருத்து
வரலாற்றாளர்களிடையே நிலவுகிறது. கோவையிலும் இந்த மரபு இருந்திருக்கிறது என்பதுதான்
வியப்பு. சூலூர் வரலாறு எழுதிய செந்தலைக் கவுதமன் அவர்கள் தம் நூலில், உலகளாவிய வளமை
நம்பிக்கை சூலூரிலும் நடைமுறையில் இருந்துள்ளதைக் குறித்துள்ளார். சூலூரில், வறட்சிக்காலத்தில்,
பெண்கள் ஒரு குழுவாக நிர்வாணமாக வயல் நிலங்களில் நடந்து வந்திருக்கும் செய்தி பதிவாகியுள்ளது.
இந்த நம்பிக்கைச் சடங்குக்கு ஒரு பெயரும் வழங்கிவந்துள்ளது. “பொறி மாற்று”
என்பது அதன் பெயர். இதன் பொருள், பலரிடத்துக்கேட்டும் கிடைக்கவில்லை.
இச் சடங்கின்போது, அப்பெண்கள் ”பருத்தி
ஆத்தா துணி கொடு; ”பருத்தி
ஆத்தா துணி கொடு” என்று கூறிக்கொண்டே நடப்பார்களாம். சொற்பொழிவாளர்
பின்னொரு நாளில் செந்தலைக் கவுதமன் அவர்களைச் சந்தித்து இது பற்றி வினவியபோது, வாய்மொழிக் கதையாகப் பெறப்படும் இச்செய்தியை எவ்வாறு
வரலாறாக எடுத்துக் கொள்வது எனக்கேட்டுள்ளார். ‘பருத்தி ஆத்தா’
சடங்குக் கதையை முதலில் எண்பத்தேழு வயது நிரம்பிய ஒரு பெரியவர் தம் பாட்டனார்
கூறியதாகச் சொல்லக்கேட்ட கவுதமன் அவர்கள், வேறிருவரிடம் இந்நிகழ்ச்சியைச் சுட்டாமல்
வேறு வகையாகக் கேட்டு, அவர்களும் இந்நிகழ்ச்சி நடந்துள்ளதைக் கூறியபிறகே, ஒருவர் அறியாமல்
பலரும் இதுபோன்று கூறுகின்ற வாய்மொழிக்கதையை வரலாற்று நோக்கில் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு
உள்ளது என்னும் முடிவுக்கு வந்துள்ளார்.
கோவை மாநகர் நடுவில் ஒரு நடுகல்
தொல்லியலில் வீரக்கற்கள் என்னும்
நடுகல் வழிபாடு கொங்குப்பகுதியில் முதன்மையானதொன்று. நாட்டுபுறங்களிலும், ஊர்ப்புறங்களிலும்
நடுகற்களைத் தேடிப் பயணப்படுவது நடைமுறை. ஆனால், கோவை மாநகரின் மையப்பகுதியான உக்கடத்தில்
பலரும் அறியாத ஒரு நடுகல் கோயில் உள்ளது என்பதைக் கோவை வரலாற்றுப் பேராசிரியர் இளங்கோ
தம் நண்பரான துரை.பாஸ்கரிடம் பகிர்ந்து, அதைக் கேள்வியுற்ற பின்னர் சொற்பொழிவாளர்,
மேற்குறித்த இருவருடனும், கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரத்துடனும் இணைந்து
நேரில் சென்று பார்வையிட்டதை ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார். வனவிலங்குகளின் ஊடுருவல் இன்றைய நாளிலேயே ஒரு துன்பமாக
இருக்கும்போது, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் காடுகளுக்கிடையில் இருந்த கோவை நகரில்
வனவிலங்குகளின் – குறிப்பாகப் புலிகள் - நடமாட்டமும் அவை கால்நடைகளைத் தாக்கும் நிகழ்வுகளும்
இயல்பானவை. ஊரின் ஆடுமாடுகளைப் பாதுகாக்கும் பணியில் புலியுடன் சண்டையிட்டு மாண்டுபோகும்
வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடும் மரபில் அமைந்த புலிகுத்திக்கல் ஒன்று கோவையின்
மையப்பகுதியில் சின்ன ஏரிக்குத் தெற்கே இருந்தது என்று கோவைக் கிழார் தம் நூலில் ‘வீரனும்
வீரக்கல்லும்’ என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார். அதே நடுகல்தான் மேலே குறிப்பிட்ட நடுகல்.
இதில் வியப்பான செய்தி என்னவெனில்,
மதுரை வீரன் என்னும் பெயரில் வழிபாட்டில் உள்ள இப் புலிகுத்திக்கல் சிற்பம் இருக்கும்
பகுதி மஜீத் காலனி என்னும் இசுலாமியக் குடியிருப்பு என்பதும், அங்கே, நடுகல் கோயிலுக்கருகில்
இருக்கும் தௌலத் நிஷா என்னும் இசுலாமியப் பெண்மணி, அன்றாடம் கோயிலின் முன்புறத்தைப்
பெருக்கிக் கற்பூரம் ஏற்றி வைக்கிறார் என்பதும் தான்.
கோவையின் முதல் பெண் மருத்துவர்
மெர்சி பால் - MERCY PAUL |
கோவையில் அய்யங்கார் குடும்பத்தைச்
சேர்ந்தவர் சடகோபாச்சாரி என்பவர். இவர் கல்லூரிப்படிப்புக்காகத் திருச்சி செல்கிறார்.
படிப்பு முடிந்து திருநெல்வேலிக்குத் திரும்புகிறார். திரும்பும்போது இவரது பெயர் ஆர்தர்
பால் என மாறியிருக்கிறது. ஆம். கிறித்தவராக மாறியிருக்கிறார். இவர் கிறித்தவப் பெண்
ஒருவரை மணக்கிறார். இவர்களின் மகள் மெர்சி பால்.
இவர் வேலூரில் இருந்த மிஷனரிக் கல்லூரியில் LMP (LICENCIATE IN MEDICAL PRACTICE) மருத்துவப்
படிப்புப் படித்துக் கோவை திரும்புகிறார். இவர்தாம் கோவையின் முதல் பெண் மருத்துவராக
அறியப்படுகின்றவர். கோவையில் ‘பிளேக்’ (PLAGUE)
நோய் தாக்கிய நேரத்தில் இவரது மருத்துவப் பணி பெரிதும் பேசப்படுகிறது.
இந்நிலையில், அவரது தந்தையார் - ஆந்திராவில் குடி பெயர்ந்தவர் - ஆர்தர் பால் இறந்துவிடுகிறார்.
மெர்சி பால் தந்தையாரின் மறைவுக்குக் கூடச் செல்லாமல் மருத்துவப்பணியில் ஈடுபடுகிறார்.
‘பிளேக்’ நீங்கியபின், தந்தை வாழ்ந்த ஆந்திரத்துக்கே
செல்லவிரும்பியபோது, ராவ்பகதூர் இரத்தின சபாபதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மெர்சி
பாலின் பணி கோவையில் தொடர்கிறது. அவர் பணியாற்றிய அந்த மருத்துவ மனை ’சோளக்கடை முக்கு ஆசுபத்திரி’
என்னும் பெயரில் கோவை இராஜ வீதியில் இயங்கியது. அவரை நினைவு கூர்ந்து
ஒரு கட்டுரை எழுதப்பட்டது. தலைப்பு REMEMBERING
THE PLAGUE-HIT KOVAI’S ANGEL OF
MERCY. இந்நிகழ்வுக்கு ஒரு வெண்பாவும்
உண்டு:
“கருணையின்றிக் கோவையைக் கொன்றநோய்
கொல்ல
மெரிசியென்பார் தந்தார் மருந்து
– இறந்துவிட்ட
தந்தை முகம் காணும் தவிப்பைப் புதைத்துவிட்டு
இந்த நோய் கொன்றார் இவர்”
முடிவுரை
கோவையைப் பற்றிய நாம் அறியாத பல்வேறு
செய்திகளைச் சுவைபட ஆங்கிலத்தில் எழுதிவந்த
பா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் தம் பெயருக்கேற்பத் தமிழ்ப் ‘பா’ மீனாட்சிசுந்தரமாகத் திகழ்கிறார் என்பதில்
ஐயமில்லை. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : வெண்பா
எழுதுவது மிகக் கடினமாமே. இவரது சொற்பொழிவும் எழுத்தும் ஏற்படுத்துகின்ற தாக்கம் இரண்டு
வரிகள் எழுதுமளவு ஊக்கத்தை அளித்திருக்கிறது.
”வெண்பாவுக்குள்
கோவையின் வரலாற்றைப் புகுத்தி
நண்பா நீ தந்தாய்
நன்று”
இந்த இரண்டு வரிகளில் ’பா’ இருக்கிறதோ
இல்லையோ, வெண்பாவுக்கான சீர் இருக்கிறதோ இல்லையோ,
பாராட்டும் மனம் இருப்பது தெரிகிறதா?)
தற்காலத்திலிருந்து 50,000 –
10,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலத்தைச் சேர்ந்த UPPER
PALEOLITHIC காலத்தில் மனிதனுக்கிருந்த அறிவாற்றலும் சிந்தனை ஆற்றலும் மதத்தைத்
தோற்றுவிக்கவில்லை. வளத்தை நினைத்தது; வளத்தின் குறியீடாகப் பெண்ணைப் போற்றியது. வளமையின்
குறியீட்டு உருவமாகப் பெண்களை வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொண்ட சடங்குகள்
அறிவும் சிந்தனையும் மேம்பட மேம்பட (அல்லது மேம்பட்டதாக நாம் நினைக்கிறோமா?) விரிவு
பெற்று மதம் என்ற ஒன்று தோற்றம் பெற்றிருக்கும் என ‘லோகாயதம்’
நூலில் வருகின்ற தாந்திரிகப் பகுதி உணர்த்துகிறது எனலாம்.
துணை நின்ற நூல் :
LOKAYATA
– A Study of Indian Materialism – Debiprasad Chattopadhyay
படங்கள் உதவி :
பா. மீனாட்சிசுந்தரம்
தேமொழி (THF)
விக்கி பீடியா
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.
அறியாத பல புதிய செய்திகளை அறிந்தேன். 1980களில் கோவையில் பணியாற்றியதால் கோவைமீது கொஞ்சம் ஈடுபாடு அதிகமே. அவ்வகையில் மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
நீக்குஅருயை
பதிலளிநீக்குமிக்க நன்றி.
பதிலளிநீக்கு