மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 27 செப்டம்பர், 2019


பிராட்வே சாலையில் கிறித்தவத் தேவாலயங்கள்

முன்னுரை

அண்மையில், சென்னை சென்றிருந்தபோது ஒரு வேலை நிமித்தம் பிராட்வே சாலைக்குச் செல்லவேண்டியிருந்தது. மதராஸ் உயர்நீதி மன்றத்துக்கு எதிரே அமைந்துள்ள இச்சாலையில் பகல் ஒரு மணியளவில் ஒரு முகவரியைத் தேடி நடைப்பயணம். பெயரளவில் அகலச்சாலையாய் (BROADWAY) இருப்பினும், நடக்க நடக்க முடிவில்லாது நீண்டுகொண்டே சென்றது அந்த நீள் சாலை. நடை தந்த அயர்ச்சி, வெயில் தந்த புழுக்கம் இவற்றோடு தேடிப்போன முகவரியும் கிடைக்கவில்லை. ஆனால் வழியெங்கும் ஆங்காங்கே பழமையான கிறித்தவத் தேவாலயங்களின் கட்டடங்கள் உள்ளத்தை ஈர்த்தன. எனவே, முகவரி கிட்டாமல் திரும்பும் வழியில், அக்கட்டடங்களை ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டேன். ஊர் திரும்பியதும் அப்படங்களைப் பார்க்கும்போது அவை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம் என்னும் எண்ணம் வருத்தத்தை அளித்தது. ஆழ ஆய்வு செய்யும் சூழ்நிலை இல்லை எனினும் மேலோட்டமாக அவை பற்றிய தேடலில் கிடைத்த செய்திகளின் பகிர்வு இங்கே.

வெஸ்லியன் சாப்பல் -  WESLEYAN CHAPEL

சாப்பல் என்பது சிறியதொரு ‘சர்ச்என்னும் வழிபாட்டு மையத்தைக் குறிக்கும் எனலாம். ஒரு வீடு அல்லது ஒரு பெரிய கட்டடத்தின் அறை கூட ஒரு சாப்பலாக இயங்கமுடியும்.  கிறித்தவத்தின் பழமைச் செயல்பாட்டாளர்களிலிருந்து மாறுபட்டுப் புதுமையான ஒரு மறுமலர்ச்சிக் கோட்பாடு கொண்ட பலர் பல அமைப்புகளைத் தோற்றுவித்தனர். இவ்வமைப்புகள் ‘புரோட்டஸ்டண்ட்  (PROTESTANT) அமைப்பு என்னும் பொதுப்பெயரில் வழங்கின. இது, கத்தோலிக்க வழிபாட்டு மதத்திலிருந்து கிளைத்த புதிய அமைப்பாகும். மறு மலர்ச்சி  என்று இதைக் கருதலாம். ‘மறுமலர்ச்சி’, ’நற்செய்தி ஆகிய அடைமொழிகளோடு சுட்டப்பெறும் இவாஞ்சலிக்கல்  (EVANGELICAL) மற்றும் லூத்தரன்’ (LUTHERAN)  என்னும் பெயர் கொண்ட அமைப்புகளும் ‘புரோட்டஸ்டண்ட்  (PROTESTANT) அமைப்பைச் சார்ந்தவையே ஆகும்.  

வெஸ்லி சர்ச்  அமைப்பு, இங்கிலாந்து சர்ச்  (CHURCH OF ENGLAND)  என்னும் மரபு சார் அமைப்பிலிருந்து ஜான் வெஸ்லி என்பாரின் கொள்கையில் பிரிந்த ஒரு மறுமலர்ச்சிப் ‘புரோட்டஸ்டண்ட்  (PROTESTANT) அமைப்பாகும்.  இது மெதடிஸ்ட் இயக்கம்’ (METHODIST MOVEMENT) என்று குறிப்பிடப்படுகிறது.

பிராட்வே சாலை அமைந்திருக்கும் பகுதியில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரை கடல் நீர் தொடர்ந்து உட்புகுதலும் வெளியேறுதலும்  நிகழ்ந்தவண்ணமே இருந்தன. இதன் விளவாக ஒரு பக்கம் மண் திட்டுகளும் மற்றொரு பக்கம் நீர்ப்பள்ளங்களும் தோன்றின. திட்டுப்பகுதியில் மக்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர்.  சில பள்ளங்கள் வடிகால்களாய் (DRAINAGE) மாறின. பிராட்வே சாலை இருக்கும் இப்பகுதி அட்டப்பள்ளம் என்னும் வடிகால் பகுதியாக அறியப்பட்டது. இதன் பெரும்பகுதி, ஸ்டீஃபன் பொஃபாம் (STEPHEN POPHAM)  என்பவருக்குச் சொந்தமாயிருந்தது. இவர் இங்கிலாந்தில் ஒரு M.P. பதவியில் இருந்தவர். 1778-இல் சென்னையில் குடியேறியவர். பின்னர், கல்கத்தாவில் ADVOCATE GENERAL ஆகப் பதவியேற்றவர். இவர் பெயரால் POPHAM’S BROADWAY என்று இச்சாலை அழைக்கப்பெற்றது.

வெஸ்லி இயக்கத்தார் (WESLEYAN MISSION)  கி.பி. 1817-ஆம் ஆண்டு சென்னையில் கால் பதித்த சில நாள்களில் முதலில் சிறியதொரு சாப்பல் கட்டப்பட்டது. பின்னர், பொருள் திரட்டிச் சற்றுப் பெரிய அளவில் 1822-இல் இப்போதுள்ள வெஸ்லியன் சாப்பல் (WESLEYAN CHAPEL) கட்டப்பட்டது. தரைத்தளத்தில் அலுவலகமும், மக்கள் கூடும் கூடமும் அமைந்தன. வழிபாட்டுக் கூடம் மாடியில் அமைக்கப்பட்டது. சாரா வெஸ்லி (SARAH WESLEY) என்பவர் ஜான் வெஸ்லியின் (JOHN WESLEY) உடன்பிறந்தவர். இப்பெண்மணி, தமிழகத்தில் தங்கிப் பல ஊர்களுக்கும் பயணம் சென்றதன் நிகழ்வுகள் குறித்து இங்கிலாந்திலிருந்த தம் தோழிக்குக் கடிதங்கள் வாயிலாகப் பகிர்ந்துள்ளார். இது நூல் வடிவில் வெளியிடப்பெற்றது. இதில் அவர் சில ஓவியங்களையும் வரைந்துள்ளார். இவர் கி.பி. 1848-இல் வரைந்த வெஸ்லியன் சாப்பல் -  WESLEYAN CHAPEL   ஓவியங்களைக் கீழே காணலாம்.





வெஸ்லியன் சாப்பல்-இன்றைய தோற்றம்


சாரா வெஸ்லி வரைந்த ஓவியம்-கி.பி. 1848


ஓவியத்தின் மற்றொரு தோற்றம்



சி.எஸ்.ஐ. வெஸ்லி (C.S.I. WESLEY)  தமிழ் ஆலயம்

கி.பி. 1861-ஆம் ஆண்டு கட்டப்பெற்ற இந்த ஆலயம் செங்கற் சிவப்பு நிறம் கொண்ட ஒரு கட்டடம். இந்த ஆலயத்தில் 2013-ஆம் ஆண்டில் சென்னை ‘மெட்ரோஇரயில் நிறுவனத்தாரின் நிலத்தடி அகழ்வுப்பணியின் போது  தரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு நிலத்தடியிலிருந்து நீர் வெளிப்பட்டு நிரம்பியது.


     சி.எஸ்.ஐ. வெஸ்லி (C.S.I. WESLEY)  தமிழ் ஆலயம்



ஆர்க்காடு லூத்தரன் தேவாலயம் (ARCOT LUTHERAN CHURCH)


1863-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட டானிஷ் மிஷனரி சர்ச் (DANISH MISSIONARY CHURCH) என்னும் அமைப்பினரால் நடத்தப்பெறுகின்ற கிறித்தவச் சபை பின்னாளில் ‘லூத்தரன் சபை’  என்னும் பெயர் பெற்றது.  ஆர்க்காட்டுபகுதியின் லூத்தரன் அமைப்பில் சென்னையில் 1892-ஆம் ஆண்டு பிராட்வேயில் இந்த தேவாலயம் கட்டப்பெற்றது. இதன் கட்டட அமைப்பு “கோதிக்” (GOTHIC) கட்டடக் கலை அமைப்பைக்கொண்டது.  லார்சன் என்பவர் (L.P. LARSEN) இந்த ஆலயத்தின் முதல் சமய ஆசான் (PASTOR) ஆவார். 



ஆர்க்காடு லூத்தரன் தேவாலயம் - முன்புறத்தோற்றம்




ஆர்க்காடு லூத்தரன் தேவாலயம் - பின்புறத்தோற்றம்


சி.எஸ்.ஐ. டக்கர் தேவாலயம் (C.S.I. TUCKER CHURCH)


”சர்ச் மிஷனரி” (CHURCH MISSIONARY SOCIETY) அமைப்பினரால் 1820-ஆம் ஆண்டு நிறுவப்பெற்ற டக்கர் தேவாலயம், இதன் இரண்டாவது சமயப் பரப்பாளரான ஜான் டக்கர் (JOHN TUCKER) என்பவர் பெயரால் இயங்கியது. முசல்மான் ஒருவரிடமிருந்து வாங்கப்பெற்ற நிலத்தில் இத்தேவாலயம் கட்டப்பெற்றது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேல் பழமையுடைய இந்த தேவாலயத்தின் சன்னலின் மரக்கதவுகள், திறந்து மூடும் வகையில் மடிப்புப் பலகைகள் கொண்டவை (SHUTTER-WINDOWS).  ஆனால், இவை காலப்போக்கில் கண்ணாடிக் கதவுகளாக மாற்றப்பட்டுவிட்ட போதிலும், இந்த தேவாலயத்தில் உள்ள ஓர் இசைக்கருவி மட்டும் அதன் பழமை மாறாமல் இன்னும் புழக்கத்தில் இருந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த இசைக்கருவி குழல்களின் தொகுப்புக்கொண்டு (PIPE ORGAN) செய்யப்பெற்றவை. இலண்டன் நகரில் செய்யப்பட்ட இக்குழல் கருவி நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும், ஒவ்வொரு ஞாயிறன்றும் தமிழ் வழி நடைபெறுகின்ற இறைவழிபாட்டுச் சடங்குகளில் இக்கருவி உரக்க ஒலிப்பதைக் காணலாம். இந்தத் தேவாலயத்தையும் மேலே குறிப்பிட்ட சாரா வெஸ்லி (SARAH WESLEY)  ஓவியமாக வரைந்துள்ளார். அந்த ஓவியத்தின் வடிவம் மாறாமல் இன்றும் இந்தத் தேவாலயம் காட்சியளிக்கிறது எனக்கூறப்படுகிறது. (இந்த ஓவியத்தின் படம் கட்டுரை ஆசிரியருக்குக் கிடைக்கவில்லை.)



சி.எஸ்.ஐ. டக்கர் தேவாலயம் 

                                                        குழல் இசைக்கருவியின் எடுத்துக்காட்டு
சி.எஸ்.ஐ. டக்கர் தேவாலயத்தில் உள்ள இசைக்கருவி அல்ல


பின்னுரை


முன்னுரையில் குறிப்பிட்டவாறு பிராட்வே சாலையில் தேடிப்போன முகவரி அங்குக் கிடைக்கவில்லை; பிராட்வே சாலைக்கு இணையாக மேற்குப்புறம் அமைந்த ஒரு சிறு தெருவில் அந்த முகவரி இருப்பதாகத் தெரிந்து அங்கு சென்றேன். தெருப்பெயர் “ஸ்ட்ரிஞ்சர்”  தெரு.  இந்தத் தெருப்பக்கம் வருவது இதுவே முதல் முறை. இந்தப் பெயரையும் கேள்வியுற்றதில்லை. சென்னையில் ஏழு ஆண்டுகள் இருந்தும், வரலாற்று நோக்கில் சென்னையைச் சுற்றிப்பார்க்காத ஒரு மடமை என்னை அழுத்தியது. இப்போது சிறிது சிறிதாக வரலாற்றுக் குறிப்புகளைத் தெரிந்துகொண்டு வருவது ஆறுதல் தருகின்றது. இருப்பினும், நாம் சிறிது சிறிதாகத் தெரிந்துகொள்வதும் கற்றுக்கொள்வதும், நாம் கற்றுக்கொள்ளாதது நம்முன் பெரிதாக விரிந்து கிடக்கிறது என்பதை உணர்த்துகிறது என்பதுவே உண்மை.  பிராட்வே பயணம் ஜூலை, 1, 2019 அன்று. “ஸ்ட்ரிஞ்சர்”  தெருவும் ஒரு வரலாற்றுச் செய்தியைத் தன்னுள் வைத்திருக்கிறது என்பதை  ஜூலை, 21, 2019 அன்று, கோவைப் புத்தகத் திருவிழாவில் வாங்கிய ”காலனியத் தொடக்க காலம் – கி.பி. 1500-1800”  என்னும் தலைப்பிலான நூல் சுட்டியது. நூலாசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் (S. JEYASEELA STEPHEN).  NCBH வெளியீடு.

”புதுச்சேரியை ஆண்டுவந்த பிரெஞ்சுக்காரர்கள் 1746-இல் மதராசை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். இந்நிகழ்வு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரை முழு அளவிலான ஒரு படை அமைப்பைத் தோற்றுவிக்கத் தூண்டியது. 1748-இல் மேஜர் ஸ்ட்ரிஞ்சர் லாரன்ஸ் (MAJOR STRINGER LAWRENCE) 2000 சிப்பாய்களைக்கொண்ட மெட்ராஸ் படையைத் தோற்றுவித்தார்”  என்பது நூலில் உள்ள செய்தி.  இந்தத் தளபதியின் பெயரால் மேற்படி தெரு அழைக்கப்பட்டுள்ளது.   

பிரிட்டனின் கலைக் களஞ்சியமான ”என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா” (ENCYCLIPAEDIA BRITTANICA) கூறுகின்ற செய்தி: கி.பி. 1750-இல் பணியைத் துறந்து தாய் நாடு சென்றவரைக் கி.பி. 1761-இல் திரும்ப அழைத்துக் கிழக்கிந்தியக் கம்பெனியின் அனைத்துப் படைகளுக்கும் தலைமைத் தளபதியாக ஆக்கியது கம்பெனி. இவருக்குக்கீழ் பணியாற்றிய கிளைவ் இவருக்கு உற்ற நண்பராய் இருந்தார். கிளைவுக்கு கிழக்கிந்தியக் கம்பெனி வாள் பரிசு தந்து பெருமைப்படுத்தியபோது, தம் படைத்தலைவராயிருந்த ஸ்ட்ரிஞ்சர் லாரன்ஸ்  புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து கிளைவ் பரிசைப் பெற மறுத்திருக்கிறார். ஸ்ட்ரிஞ்சர் லாரன்ஸ் பணி நிறைவில் நாடு திரும்பியபோது, ஓய்வூதியம் உரியவாறு கிடைக்கச் செய்து அவருடைய பொருளாதாரச் சூழல் தந்த சங்கடத்தை நீக்கியுள்ளார்.  








துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.



2 கருத்துகள்: