ஓலைச்சுவடிகள் – பேரா.கி.நாச்சிமுத்து அவர்களின் உரை
முன்னுரை
ஆண்டு 2013. பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகள் பயிற்சியில் கலந்து கொண்ட வேளை. தில்லிப் பல்கலையிலிருந்து வந்த பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்கள் ஓலைச்சுவடிகள் பற்றி ஓர் அறிமுக உரை நிகழ்த்தினார். உரைகளைச் செவியால் கேட்டு மகிழும்போதே இயன்ற அளவில் சிறு சிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளும் இயல்பு இருந்த காரணத்தால் பல செய்திகளை ஆவணங்கள் போல் சேர்த்து வைக்க முடிந்திருக்கிறது. அவ்வகைக் குறிப்புகள் எக்காலத்தும் பார்வைக் குறிப்புகளாகப் (REFERENCE) பயன்படுபவை. பேராசிரியரின் உரை வழி அறிந்துகொண்ட செய்திகள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள், தமிழ் அறிஞரும், தஞ்சைப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்து அதன் துணைவேந்தராயிருந்தவருமான திரு. வ. அய். சுப்பிரமணியம் அவர்களின் மாணாக்கர். கிரந்த எழுத்துகளைக் கற்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டபோது, திருவனந்தபுரத்தில் இயங்கிவருகின்ற திராவிட மொழியியல் கழகத்தின் (DRAVIDIAN LINGUISTICS ASSOCIATION) பதிப்பாக வெளிவந்த, முனைவர் பி.விசாலாட்சி அவர்கள் எழுதிய THE GRANTHA SCRIPT நூலினைச் சுட்டிக் கட்டுரை ஆசிரியருக்கு வழிகாட்டியவர்.
திரு. வ.அய். சுப்பிரமணியம் அவர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகளாவிய திராவிட மொழியியல் ஆய்வுப்பள்ளி-திருவனந்தபுரம், திராவிடப் பலகலை-குப்பம்-ஆந்திரம் ஆகிய உயர்ந்த நிறுவனங்களை நிறுவிய பேராளர்.
திரு. வ.அய். சுப்பிரமணியம் அவர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகளாவிய திராவிட மொழியியல் ஆய்வுப்பள்ளி-திருவனந்தபுரம், திராவிடப் பலகலை-குப்பம்-ஆந்திரம் ஆகிய உயர்ந்த நிறுவனங்களை நிறுவிய பேராளர்.
வரலாறு- அதன் அடிப்படை
பல்வேறு நாடுகள் பல்வேறு துறைகளில் ஏற்றம் கொண்டிருக்கின்றன. அமெரிக்க நாடு மொழியியல், மொழி நாகரிகம், மானுடவியல் ஆகிய துறைகளிலும், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் தொழில் நுட்பம், அறிவுத்துறை ஆகியவற்றிலும் வளம் பெற்றவை. பௌத்தம், தென் கிழக்கு நாடுகளுக்கு அறிவு சார்ந்த கலைகளைக் கொண்டு சேர்த்தது. நிலவியல் (GEOGRAPHY), வரலாறு (HISTORY) ஆகியவை பற்றிய அறிவு நமக்கு மிக முதன்மையானது. தமிழரின் கடல் வழிப்பயண அறிவைச் சங்க இலக்கிய வரி ஒன்று, “வளிதொழில் ஆண்ட உரவோன்” என்று குறிப்பிடுகிறது. வட இந்திய அறிஞர்களுக்குத் தென்னிந்திய மொழிகள் பற்றிப் போதுமான அறிவு இல்லை. வரலாற்றுக்கு அடிப்படையாய்த் திகழ்பவை தொல்பொருள்களே. பல கூறுகளாகப் பார்க்கப்படும் தொல்பொருள்களில் ஒரு கூறு சுவடிகள் எனலாம்.
ஆராய்ச்சி முறைகள்
ஆராய்ச்சி முறைகள் பல்வகைப்பட்டவை. வரலாற்று முறை, விளக்கவியல் (DESCRIPTIVE or DOCUMENTARY), அறிவியல் சார்ந்த ஆய்வு (EXPERIMENTAL or SCINTIFIC), சமூக அறிவியல் சார்ந்த ஆய்வு (SOCIAL SCIENCE) எனப்பல உண்டு. இவற்றில், வரலாற்று முறை ஆய்வு, கால நிரல்படி அமையும் ஆய்வாகும். இது, சவப்பரிசோதனையையும், காவல் துறைப் புலனாய்வையும் ஒத்தது. பழமையை ஆய்வு செய்தல் ”ஆர்க்கியாலஜி” (ARCHAEOLOGY) என்னும் தொல்லியல் ஆய்வு ஆகும். அடுத்து, எழுத்துச் சான்றுகள் பற்றிய ஆய்வு. இது, கல்வெட்டியல், சாசனவியல் (EPIGRAPHY) எனப்படும். அடுத்து, MANUSCRIPTOLOGY என்னும் சுவடியியல். இது ஆவணங்கள் பற்றி ஆய்வது (MANUSCRIPT STUDY) .
சுவடியியல்
கல்வெட்டுகள் என்பவை நிலையானவை. மாறாதவை. ஆயின், சுவடிகள் மாறும் தன்மை வாய்ந்தன. காரணம், குறிப்பிட்ட கால இடைவெளிதோறும் ஒரு சுவடியிலிருந்து வேறொரு சுவடிக்குப் பெயர்த்து எழுதுவதே. சுவடிகளில் எழுதப்படுபவை ஒரு வகையில் ”ஃபொனிமிக்” எழுத்துகள் (PHONEMIC SCRIPT) கொண்டவை எனலாம். அதாவது, ஒலியின் அடிப்படையில் எழுதப்படுபவை. ”ஃபொனீம் (PHONEME) என்று சொல்லப்பெறும் ஒலி அலகுகள் சேர்ந்தவை. ஒலி அலகுகளுக்குத் தனியே பொருள் இல்லை. இவை ஒன்றாய்ச் சேரும்போது பொருள் கொண்ட சொல்லாக மாறுகிறது. எடுத்துக்காட்டாக, அ, ம் ஆகிய இரண்டும் இரு ஒலி அலகுகள். இவை தம்முள் இணைந்து ”அம்மா” என்னும் பொருளுடைய சொல்லாக மாறுகிறது. பெரும்பாலும், சுவடிகள் எழுதப்பெறுப்போது, ஒருவர் எழுதப்படவேண்டியவற்றைப் படித்து ஒலிக்க, அவ்வொலிகளுக்கேற்ற எழுத்துகளைச் சுவடிகளில் பலர் எழுத நேரிடும். அப்போது, செவியுறும் ஒலி அலகுகளுக்கேற்ப சிலர் பிழையாக எழுதும் வாய்ப்புகள் மிகுதி.
தமிழ் எழுத்து சிக்கனமானது. சிந்து வெளிக் குறியீடுகளைச் சொல் அசைகளால் (LOGOGRAPH) ஆன எழுத்து எனலாம். கருத்தெழுத்து (IDEOGRAPH) என்று ஒரு வகை எழுத்தைக் குறிப்பிடுவார்கள். எடுத்துக் காட்டாக, கதிரவனைக் குறிக்கும் படம் ஒன்றை இரண்டு முறை அருகருகே வரைந்து ( ஒரு வட்டம்-சுற்றியும் கோடுகள் ) எழுதினால் இரண்டு பகல் பொழுதுகள் எனப் பொருள்கொண்டால் அது கருத்தெழுத்து. ஆங்கிலச் சொல்லான CANDIDATE என்பதைத் தனித்தனியே CAN என்றெழுதி ஒரு கலத்தின் (பாத்திரம்) படமும், DIE என்றெழுதி ஒரு மனிதனின் உருவத்தில் குறுக்காக அறுப்பதுபோல் கோடிட்ட படமும், DATE என எழுதி ஒரு படமும் வரைந்து ஒன்றிணைக்கும்போது CANDIDATE என்று பொருள் கொள்ள முடிந்தால் அது, “லோகோ சில்லபிக்” (LOGO SYLLABIC) எனப்படும். இவ்வகை எழுத்துகள் “ஃபொனீசியர்”களிடமிருந்து (PHOENICIANS) உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சுவடிகள்
சுவடிகளில் மூலச்சுவடி (AUTOGRAPH) என்பது ஆசிரியர் தம் கைப்பட எழுதியதைக் குறிக்கும். சுவடி எழுத்துகள் என்பன பனை ஓலையில் எழுதப்பட்டவை. பருத்தி ஆடைகள் (துணிகள்), தோல், மரப்பட்டை, செம்பு , சங்கு. விலங்குகளின் கொம்பு, பாபிரஸ், காகிதம் ஆகிய பலவேறு பொருள்களிலும் எழுத்துகள் எழுதப்பட்டன. வட நாட்டில் ”பூ3ர்ஜ பத்ரம்” என்று குறிப்பிடுவர். எழுத்தாணிகொண்டோ கத்திகொண்டோ சுவடிகளில் எழுதினார்கள். பனை ஓலைச் சுவடிகள் ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் பாதுகாக்கப்படலாம். கோயில்களில், நிலவறைகளில் சுவடிகள் பாதுகாக்கப்பட்டன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தச் சுவடிகள் மத்திய ஆசியாவில் கிடைத்துள்ளன. கல்வெட்டுகளைக் காகிதத்தில் படியெடுத்துப் பாதுகாப்பாக வைப்பார்கள். இதை ”எஸ்டம்ப்ளேஜ்” (ESTAMBLAGE) என்பர். இவ்வகையாக எடுக்கப்பட்ட கல்வெட்டுப்படிகள் தொல்லியல் மைய அலுவலகத்தில், மைசூரில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சுவடிகளில் பாட வேறுபாடு
முன்னரே குறிப்பிட்டது போல், ஒருவர் சொல்ல அல்லது பாடக்கேட்டு மற்றவர் எழுதுவதாலும், ஒருவர் ஒரு சுவடியிலிருந்து இன்னொரு சுவடியில் பெயர்த்து எழுதுவதாலும் பாடங்களில் வேறுபாடு ஏற்படுவதுண்டு. இதைப் பாடபேதம் (TEXTUAL VARIATION) என்று சொல்வர். தென் மாவட்டங்களில் வில்லுப்பாட்டுச் சுவடிகளில் “தமிள்” என எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். “கைகாள் கூப்பித் தொழீர்” என அப்பர் “விளி”ப்பொருளில் எழுதிய பாடலைச் சுவடியில் எழுதுகையில், “கைகால்” எனப் பிழையாக எழுதியதுண்டு. ழ, ள எழுத்துகள் தம்முள் மயங்கி வரும்வகையில் எழுதுவது தென்பாண்டிநாட்டு மரபு. சுவடி எழுத்துகளில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிட்டு எழுதமாட்டார். இந்நிலையில், சரியாகப் புரிந்து கொள்தல் கடினம்.
சேரல் மட வன்னம் என்பது சொல மட வனனம என்று எழுதப்படும்.
கேரளம் என்பது கொளம என்று எழுதப்படும்.
எழுதும் முறை, எழுதுபொருள், எழுத்தாணி ஆகியவற்றைப் பொறுத்து எழுத்துகள் மாறும். எழுத்து, ஒரு காலத்தின் அடையாளமாக இருக்கக் கூடும். பல்லவரின் கிரந்த உருவாக்கம் தமிழுக்கும் வடமொழிக்கும் ஒரே எழுத்து.
இடைச் செருகல் – (INTERPOLATION)
சுவடிகளில் ஒரு நூல் பெயர்த்தெழுதப்படுகையில் இடைச் செருகல் நேர்வதுண்டு. கம்பராமாயணம், சீவக சிந்தாமணி ஆகிய நூல்களில் இடைச் செருகல் உண்டு. கம்பராமாயனத்தில் வெள்ளிப்பாடல் இடைச்செருகலாகும். சீவக சிந்தாமணியில் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோள் காட்டும் கந்தியார் பாட்டு இடைச் செருகலே.
இலக்கியத் திருட்டும் (GHOST WRITING), இலக்கியப் புரட்டும் (PLAGIARISM)
குசேலோபாக்கியானம் நூலை மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதினார். ஆனால், வேறொருவரின் பெயரில் வெளிவந்தது.
சொற்களின் வழக்கும் பொருளும்
மொழியில் சொற்களின் பொருள் மாறுபடும். இருபத்தைந்து ஆண்டுகளின் கால இடைவெளியில் இம்மாறுதல் நிகழலாம். புதுச் சொற்களின் வழக்கும் இவ்வாறே. கைமாற்று என்னும் சொல், ஒரு பொருளைத் தற்காலிகமாய்ப் பெற்றுப் பின்னர்த் திருப்பித்தருதலைக் குறிக்கும். இது மாற்றம் பெற்றுக் “குறியாப்பு” என்னும் சொல்லாக வழங்கியது. ஆங்கிலத்தில் “பிசி” (BUSY) என்பதற்கு “முசுவு” என்னும் சொல் வழக்கு ஏற்பட்டது.
பனை ஓலைப் பயன்பாடு எதுவரை?
பனை ஓலை அரசின் எழுதுபொருளாகப் பயன்பட்டது. எனவே, 19-ஆம் நூற்றாண்டு வரை பனை ஓலை பயன்பாட்டில் இருந்துள்ளது. காகிதத் தாள் (PAPER) கி.பி. 1850-ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் பயன்பாட்டுக்கு வந்தது. காகிதத்தைப் பயன்படுத்திய சுதேச அச்சுக்கூடங்கள் தோன்றின. செங்கல்பட்டு, திருச்சி போன்ற பகுதிகளில் ஏட்டுச் சுவடிகள் அரசு ஆவணங்களாக 1750-இன் பதின்ம ஆண்டுகள் வரை இருந்துள்ளன. கேரளத்தில், 1925-ஆம் ஆண்டு வரையிலும் அரசு எழுதுபொருள் ஓலைச் சுவடிகள்தாம். எடுத்துக்காட்டாகப் பத்திரப் பதிவு ஆவணங்கள் ஓலைச் சுவடிகளாகவே இருந்துள்ளன. இவற்றைத் “தீட்டு” என வழங்கினர். (சோழர் காலத்திலும் தீட்டு என்னும் வழக்கு இருந்தது என்பது கருதத் தக்கது). ஓலைச் சுவடிகளைத் தொகுத்து வைத்த தொகுப்பு “சுருணை” என்றழைக்கப்பட்டது. கேரளத்தில் ஓலைச் சுவடிகளில் எழுதப்பெற்ற எழுத்துகள் கோலெழுத்து, கண்ணெழுத்து எனப்பட்டன. (இவை வட்டெழுத்தின் ஒரு வகையே.) பனை ஓலையின் ஆயுள் முந்நூறு ஆண்டுகள். ஆனால், காகிதத்தாளின் ஆயுள் நூறு ஆண்டுகளே.
சதுரகராதி போன்ற நூல்களைத் தென்பாண்டி நாட்டில் அச்சு நூல்களைப் பார்த்து ஓலைகளில் பெயர்த்து எழுதிவந்தனர். செட்டி நாட்டு வணிகர் தம் கணக்கு ஏடுகளை ஓலையிலேயே எழுதினர். சிங்களச் செட்டிகளும் (தமிழ்ச் செட்டிகள்) ஓலைச் சுவடிகளையே பயன்படுத்தினர். மத்திய ஆசியாவில் தஸ்கிஸ்தான் போன்ற இடங்களில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஓலைச் சுவடிகள் கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. ஜப்பான் நாட்டில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் புத்தமத நூல் ஒன்று ஓலைச் சுவடியில் எழுதப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் சுவடி நூலகம் ஒன்று உள்ளது. நம் நாட்டில் ”தம்மபதம்” என்னும் பௌத்த நூல் கி.பி. இரண்டாம் நூஊற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது. திபெத்து நாட்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓலைச் சுவடிகள் உள்ளன.
காலக்கணிதம்
பிரபவ முதல் அக்ஷய வரையிலான அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி வட்டம், வியாழ வட்டம் எனப்பெயர் பெறும். இது தமிழ் நாட்டில் உருவான ஆண்டுக்கணக்குதான். கேரளத்திலோ, கருநாடகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ இந்த வியாழ வட்டக் கணக்கு இல்லை. ஆனால், பாண்டி நாட்டுக் கல்வெட்டுகளில் கொல்லமாண்டு பயன்பாட்டில் காணப்படுகின்றது
பழமையான ஓலைச் சுவடிகள்
தமிழகத்தில் கிடைதுள்ள பனை ஓலைச் சுவடிகளில் பழமையானது கி.பி. 1428-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. வேணாட்டுப்பகுதியான திருவாங்கூர்ப் பகுதியில் நாஞ்சில் நாட்டில் ”அழகியபாண்டியபுரம் பெரியவீட்டுச் செட்டியார் ஓலைகள்” என்னும் பெயரால் வழங்கும் ஓலைச் சுவடிகளில் மிகப் பழமையானது கி.பி. 1273-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இது ஒற்றி ஓலைப்பத்திரம் என்னும் வகையைச் சேர்ந்தது. சோழபுரத்துக் கல்வெட்டில் காணப்பெறும் ஒரு வணிகனின் பெயர் ஓலை ஆவணம் ஒன்றிலும் உள்ளது. குணவன் வடுகனான இராஜேந்திர சோழ வைச்சிரவணன் என்பது அவ்வணிகனின் பெயராகும். பத்மநாபபுரம் மதிலகத்து ஓலை ஆவணங்கள் வேணாட்டரசன் இராம மார்த்தாண்ட வர்மனின் காலத்தவை. இவற்றின் காலம் கி.பி. 1136 ஆகும். கி.பி. 1611-ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற கம்பராமாயணச் சுவடி ஒன்றும் கிடைத்துள்ளது. ஏ.சி. பர்னல் (A.C. BURNELL) என்னும் அறிஞர் 1877-ஆம் ஆண்டு தொகுத்த வீரசோழியம் நூல் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சுவடிகளைப் பாதுகாத்தல்
சுவடிகள் அவ்வப்போது பிரதி எடுத்தல் முறையில், அழிந்துபோகாமல் காக்கப்பட்டன. சுவடிகளைப் பட்டியல் இடுவது, தொகுப்பது, பிரதி எடுப்பது, பாதுகாப்பது ஆகிய செயல்பாடுகளுக்குத் தனித் துறையே உள்ளது. ”லேக நிரூபண”, “லேக பரீக்ஷ” என்று சமற்கிருதத்தில் குறிப்பிடுவார்கள். சோழர் காலத்தில், சரசுவதி பண்டாரம் என்னும் பெயரில் சுவடி நூலகங்கள் இருந்துள்ளன. தற்காலம் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வரும் இடங்களாகக் கீழ்வருனவற்றைக் குறிப்பிடலாம்:
கீழ்த்திசைச் சுவடி நூலகம்
கேரளப் பல்கலைக் கழகம்
உ.வே.சா. நூல் நிலையம்
திருப்பதி கீழ்த்திசைச் சுவடி நூலகம்
மைசூர் கீழ்த்திசைச் சுவடி நூலகம்
அடையாறு நூலகம்
வெளிநாடுகளில் சுவடி நூலகங்கள்
வெளிநாடுகளிலும் நம் நாட்டு ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில இடங்கள்: லண்டன், பாரிஸ், பெர்லின், யேல் பல்கலை(அமெரிக்கா).
சுவடிகள் எவற்றைப் பற்றியவை?
தமிழகத்தில் கிடைத்துள்ள சுவடிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ இருபத்தையாயிரம் (25000). அவற்றில்,
மருத்துவம் பற்றியவை 60 விழுக்காடு.
சோதிடம் பற்றியவை 10 விழுக்காடு.
சமயம் பற்றியவை 10 விழுக்காடு.
கலை, இலக்கியம் பற்றியவை 10 விழுக்காடு.
வரலாறு பற்றியவை 5 விழுக்காடு.
இலக்கணம் பற்றியவை 5 விழுக்காடு.
சுவடிப் பதிப்பாளர்கள்
சி.வை. தாமோதரம் பிள்ளை
உ.வே. சாமிநாதய்யர்
வையாபுரிப் பிள்ளை
சுவடிகள் - மூலபாடத்தை ஆய்தல்
சுவடிகளின் மூல பாடத்தை ஆய்வு செய்யும் துறையை TEXTUAL CRITICISM என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இவ்வாறு ஆய்வு செய்து பல நூல்கள் செம்பதிப்பாக வெளிவந்துள்ளன. மகாபாரதம் நூலை சுக்தாங்கர் (SUKTANKAR) என்பவரும் இராமாயணம் நூலை பண்டார்க்கர் (BHANDARKAR) என்பவரும் மேற்சொன்ன முறையில் ஆய்வு செய்துள்ளனர். மகாபாரத நூலில் 25000 சுலோகங்கள் சேர்க்கப்பட்ட நிகழ்வும் உண்டு. வட இந்தியச் சுவடிகளில், மகாபாரதத்தில் கண்ணன் பாஞ்சாலிக்குத் துகில் தந்த நிகழ்ச்சி இல்லை. துகில் உரிதல் மட்டுமே உண்டு. கம்பராமாயணச் சுவடியின் மூலபாடத்தைத் திறனாய்வு செய்து அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அனைத்துப் பாட வேறுபாடுகளையும் சேர்த்து ஒரு பதிப்பை வெளியிட்டுள்ளது.
சுவடி-ஆய்வு முறைகள் சில
அ. அறிவியல் முறை – HEURISTICS & HIGHER CRITICISM
சுவடிகளின் மூலபாடத்தை அடிப்படையாகக் கொண்டு, நூலில் உள்ள குற்றங்குறைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்வது. சுவடிகளைத் திரட்டுதல், பெயர்த்தெழுதுதல் ஆகியவை இதில் அடங்கும்.
ஆ. குடிவழிப் படுத்துதல் – RECENSION
இது சுவடிகளின் மூலபாடத்தைக் கால வரிசைப்படி திருத்தியமைத்தல் ஆகும்.
இ) பாட நிச்சயம் - EMENDATION
சுவடிகளின் பாடங்களை அவற்றின் பாடவேறுபடுகளுடன் ஆய்ந்து சரியான பாடத்தை உறுதி செய்தல்.
பாடவேறுபாடு- பாடபேதம்
சுவடிகள் எழுதப்படும்போது அவற்றின் பாடங்களில் வேறுபாடுகள் தோன்றுவது இயல்பானது. ஒரு சுவடியைப் பார்த்து இன்னொரு சுவடியில் பெயர்த்தெழுதுகையிலும், ஒருவர் சொல்லக் கேட்டு இன்னொருவர் எழுதுகையிலும் பாடங்கள் (TEXTS) வேறுபடும் என முன்னரே பார்த்தோம். திருக்குறளில் இடைச் செருகல் இல்லை. ஆனால் பாட வேறுபாடு (பாட பேதம்) உண்டு. திருக்குறளில் இப்போதிருக்கும் வரிசை முறை பரிமேலழகர் அமைத்ததாகும். நாற்பெத்தெட்டு இடங்களில் பாட வேறுபாட்டைச் சுட்டும் பரிமேலழகர் அவற்றில் எட்டு இடங்களில் பாடநிச்சயம் (EMENDATION) செய்துள்ளார்.
எடுத்துக்காட்டு-1
குறள் 500
காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
இக்குறளில், ”வேலாள்” என்பதை “வேலாழ்” என பாடவேறுபாடு கொண்டு எழுதுவாருண்டு.
குறள் 636
மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை
இக்குறளில், “அதிநுட்பம்” என்பதை பாட வேறுபாடாக ”அதினுட்பம்” என
எழுதுவதுண்டு.
குறள் 979
பெருமை பெருமித மின்மை சிறுமை
பெருமித மூர்ந்து விடல்
இக்குறளில், “விடல்” என்பதன் பாடபேதம் “விடும்’ என்பதாகும்.
குறல் 1058
இரப்பாரை யில்லாயி நீர்ங்கண்மா ஞால
மரப்பாவை சென்றுவந் தற்று
இக்குறளில், “இரப்பாரை” என்பதன் பாடபேதம் ”இரப்பவரை” என்பதாகும்.
குறள் 334
நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்
இக்குறளில், “உயிரீரும்” என்பதன் பாடபேதம் “உயிரீறும்” என்பதாகும்.
மருத்துவச் சுவடிகள்
மருத்துவச் சுவடிகளில் மனிதர்க்குண்டான வர்ம சிகிச்சை பற்றிய சுவடிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன. அதுபோலவே, மாடுகளுக்கான மருத்துவச் சுவடிகள் “மாட்டுவாகனம்” என்னும் பெயரில் எழுதப்பட்டன.
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.
சுவடிகள் பற்றிய ஒரு பறவைப்பார்வை. அருமை.
பதிலளிநீக்கு