வீரகேரளர் ஆட்சியில் கொங்குநாடு
முன்னுரை
கோவையில் இயங்கிவரும் வாணவராயர்
அறக்கட்டளையினர் மாதந்தோறும் நடத்திவருகின்ற அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வுகளில்,
2018-ஜூன் மாதச் சொற்பொழிவு மேற்கண்ட தலைப்பில் நிகழ்ந்தது. உரையாற்றியவர் முனைவர்
இரா.ஜெகதீசன் அவர்கள். அச் சொற்பொழிவில் கேட்ட வரலாற்றுச் செய்திகளின் பகிர்வு இங்கே:
கொங்கு நாட்டின் வரலாறு
தமிழக வரலாற்றில் கொங்குநாட்டு வரலாறு
மிகக் குறைவான ஒன்றாகவே உள்ளது. வரலாற்றுக்
காலம் தொட்டு, கொங்குநாடு சிறப்பான பண்பாட்டைக் கொண்டது எனினும் முற்றான வரலாறு அறியப்படாததற்கு
வரலாற்றை வெளிப்படுத்தும் முதன்மைச் சான்றுகளான
(மூலச் சான்றுகள்) பல கல்வெட்டுச் சான்றுகள் வெளிவராமையே காரணமாகும். தென்னிந்தியக்
கல்வெட்டுகளின் இருபத்தாறாம் தொகுதியில் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன.
கொங்கு நாட்டில், ஈரோட்டுக்கருகில் அமைந்துள்ள கொடுமணலில் நடந்த அகழாய்வு பற்றிய அறிக்கை
வெளிவரவில்லை; தொல்லியலாளர் கா.ராஜன் அவர்களுக்குப் பின்னரே அகழாய்வுச் செய்திகள் வெளியாயின.
கொங்கு நாட்டு வரலாற்றுக்குச் சமூகத்தில் சிறப்பிடம்
அல்லது முதன்மையிடம் ஏற்படவில்லை. கல்லூரிகளிலும் வரலாற்றுத்துறைக்கு முதன்மை அளிக்கப்படவில்லை.
கோவை கிழார் தொடங்கிப் பலர் எழுதியுள்ள நூல்களில் கொங்குநாட்டு வரலாறு முழுதாக எழுதப்படவில்லை.
கோவை கிழாரின் நூலில், கொங்கு நாட்டின் அரசியல் வரலாறு மட்டுமே காணலாம். கோவை கிழார்,
வீரகேரளரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆரோக்கியசாமி அவர்களின் நூல் ஆங்கிலத்தில் அமைந்து
விட்டதால் கொங்குநாட்டின் பொதுக்குடிகளுக்கு அது எட்டவில்லை. புதுக்கோட்டைப் பேராசிரியர்
மாணிக்கம் அவர்கள் தமிழில் எழுதியுள்ள நூல் குறிப்பிடத்தக்கது.
வீரகேரளர்
வீரகேரளர் கொங்கு நாடு முழுவதையும்
ஆட்சி செய்யவில்லை. கொங்கு நாட்டின் இரு பிரிவுகளுள் ஒன்றான தென் கொங்குப்பகுதியை ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகள்
ஆட்சி செய்துள்ள வீரகேரளரைப் பற்றி ஆய்வுகள் நடைபெறவில்லை. தென்கொங்குப்பகுதி ஒரு சிறிய
நிலப்பகுதியே. கொங்கு நாட்டின் அடிப்படை வரலாற்றை அறிய, வீரகேரளரின் கொடி வழி, ஆட்சிப்
பரப்பு ஆகிய செய்திகளும் தேவை. வீரகேரளரின் கல்வெட்டுகளில் சக ஆண்டுக் குறிப்புகள்
இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில கல்வெட்டுகளில் காணப்படுகின்ற வானிலைக் குறிப்புகளைக்
கொண்டே வீரகேரளரின் ஆட்சிக்காலம் வரையறை செய்யப்படுகின்றது. பழநிக் கல்வெட்டொன்று,
மகாமகத் திருவிழாவுக்கு வீரகேரளர் வழங்கிய கொடையைப் பற்றிக் கூறுகிறது. வீரகேரள அரசன்
இவ்விழாவினை நடத்தியுள்ளான். கோவைக் கருகில் உள்ள முட்டம் என்னும் ஊர்க் கோயில் கல்வெட்டு
ஒன்றின் துணையுடனும், பழநிக் கல்வெட்டின் துணையுடனும், மற்ற கொங்குச் சோழர் வரலாற்றையும்
இணைத்து ஒப்பாய்வு செய்தே வீரகேரளர் வரலாற்றை அறிய முடிகின்றது. சோழர்களின் கரூர்ப்
பகுதி வரை சோழர்களின் நேரடி ஆட்சி இருந்தது. நாமக்கல் பகுதி மழகொங்கு என அழைக்கப்பட்டது. இப்பகுதியும் சோழர்களின் நேரடி ஆட்சியில் இருந்தது
சோழர்களின் நேரடி ஆட்சி இருந்த பகுதியைச் சோழர்கள், வீரசோழ மண்டலம் என்னும் பெயரில்
அழைத்தனர்.
தென்கொங்கு
கோவை, பேரூர், பொள்ளாச்சி, ஆனைமலை,
கொழுமம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது தென்கொங்குப் பகுதியாகும். தென்கொங்குப்பகுதியையே
வீரகேரளர் ஆட்சி செய்தனர் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். இப்பகுதி, பெரும்பாலும்
மலைகளை ஒட்டிய பகுதியாகும். மேலும், இது வணிகப்பகுதியாகவும் இருந்துள்ளது. பாலக்காட்டுக்
கணவாயில் அமைந்திருந்த பெருவழியின் வழியாகத் தமிழகத்தின் உள் பகுதிகளில் உரோமானியர் வணிகம் செய்தமை நாம் அறிந்த ஒரு செய்தியாகும்.
உரோமானிய நாணயங்கள் மிகுதியும் கிடைத்த பகுதியும் தென்கொங்கேயாகும். நொய்யலாறும், அதன்
கிளை ஆறுகளான பெரியாறு, சின்னாறு, காஞ்சியாறு, நல்லாறு ஆகிய ஆறுகளும், அமராவதி மற்றும் அதன் துணை ஆறுகளான சண்முகா
நதி, பாம்பாறு, தேனாறு, குதிரையாறு, உப்பாறு, நற்காஞ்சியாறு ஆகிய ஆறுகளும் வளப்படுத்திய
பகுதி தென்கொங்குப் பகுதியாகும். அமராவதிக்கரைப் படுகைப் பகுதி கரைவழி நாடு என்னும்
நாட்டுப்பிரிவாக இருந்தது. இது தவிர வைகாவி நாடு, நல்லூர்க்கா நாடு, பேரூர் நாடு, வாயறைக்கா
நாடு, வீரகேரள வளநாடு ஆகிய நாட்டுப் பிரிவுகள்
பண்டு இருந்தன.
வீரகேரளர்-தோற்றம்
வீரகேரளர் எந்த மரபைச் சேர்ந்தவர்
என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. கேரள மரபினர் என்பதாகத் தொல்லியல் அறிஞர்
கே.வி. சுப்பிரமணிய ஐயர் கருதுகிறார். தமிழகத் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த நடன
காசிநாதன், வீரகேரளர் களப்பிரர் மரபினர் எனக் கருதுகிறார். வரலாற்று ஆசிரியர் வீ.மாணிக்கம்,
வீர கேரளர், கோக்கண்டன் மரபினர் என்று கருதுகிறார். கொங்கு மண்டலச் சதகம் வீரகேரளரைப்
பாண்டியர் என்று குறிப்பிடுகிறது. முற்காலப் பாண்டிய மன்னன் மானாபரணனின் மகன் வீரபாண்டியனுக்கு
வீரகேரளன் என்னும் பெயர் இருந்ததையும், இவன் (வீரகேரளன்) மதுரை அருகே இருக்கும் சோழவந்தானில் கட்டுவித்த
விண்ணகரத்துக்கு (பெருமாள் கோயிலுக்கு) வீரகேரள விண்ணகரம் என்று பெயர் சூட்டியதையும்
கொங்குமண்டலச் சதகம் கூறுகிறது. வீரகேரளரின் தலை நகராக முதலில் கடத்தூரும், பின்னர்க்
கொழுமமும் இருந்துள்ளன. வீரகேரளரின் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை இவ்வூர்களின் கோயில்களிலேயே
காணப்படுகின்றன. வீரகேரளர் கல்வெட்டுகள் வட்டெழுத்துக் கல்வெட்டுகளாக அமைந்தன. வீரகேரளர்
கல்வெட்டுகளில் இறைவனை “மகாதேவர்” எனக் குறிப்பிடும் மரபைக் காணலாம். இந்த மரபு
10-ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது.
வீரகேரள அரசர்கள்
வீரகேரளன் என்னும் ஓர் அரசன் முதல்
அரசனாக அறியப்படுபவன். அவனது இரு மகன்கள் வீரகேரளன் அமரபுயங்கனும் வீரகேரள வீரநாராயணனும்
ஆவர். அமரபுயங்கனின் ஆட்சிக்காலம் 986-1009. வீரநாராயணனின் ஆட்சிக்காலம்
1009-1015. அமரபுயங்கன், சோழப்பேரரசன் இராசராசன்
காலத்தவன். மலை நாட்டுடன் போர் செய்யமுனைந்த இராசராசன், அமரபுயங்கனை வெற்றிகொண்ட பின்னரே
மலை நாட்டின்மேல் போர் தொடுத்தான். இந்த அமரபுயங்கன் பாண்டியன் ஆவான். (கட்டுரை ஆசிரியர்
குறிப்பு: மேலே சொன்ன சொற்பொழிவாளரின் கருத்து,
தமிழகத் தொல்லியல் துறையின் “கோவை மாவட்டக் கல்வெட்டுகள்” நூலில் சுட்டபெற்ற செய்தியிலிருந்து
முற்றிலும் மாறுபடுகிறது. இந்நூலில், வீரநாராயணன் மூத்தவனாகவும், அமரபுயங்கன் இளையவனாகவும்
குறிக்கப்பெறுகிறார்கள். ஆட்சிக் காலமும் முறையே 957-968, 967-990 எனத் தரப்பட்டுள்ளது.
தந்தையின் பெயர் வீரகேரளன் என்பதில் முரண்பாடு இல்லை. சொற்பொழிவாளரும், நூலின் பதிப்பாசிரியர்களும்
தனித்தனியே சான்றாதாரங்களின் அடிப்படையிலேயே இக்கருத்துகளைச் சொல்லியிருக்கவேண்டும்.)
சொற்பொழிவாளர் கூற்றுப்படி வீரகேரள
அரசர்கள் வரிசை:
வீரகேரளன்
வீரகேரளன் அமரபுயங்கன் 986-1009
வீரகேரள வீரநாராயணன் 1009-1015
வீரநாராயணன் வீரகேரளன் 1015-1044
இவன் பெயரால் கோவை, வீரகேரள
நல்லூர்
என அழைக்கப்பெற்றது.
இவன்,
1044-இல் சோழன் முதலாம்
இராசாதித்தனால்
கொல்லப்படுகிறான்.
வீரநாராயணன் அதிசய சோழன்
1044-1076
அதிசய சோழன் வீரநாராயணன்
1076-1093
வீரகேரளன் அதிராஜராஜன் 1093-1116 மேற்படி வீரநாராயணன் வீரகேரளனின் மகன்.
அதிராஜராஜன் ஸ்ரீ ராஜராஜன் 1116-1153
ராஜராஜன் கரிகாலன் 1153-1165
வீரகேரளன் அதிராஜராஜனின் (1093-1116) கல்வெட்டு ஒன்றில் காணப்படுகின்ற வானிலைக் குறிப்பின் அடிப்படையில், இவன் ஆட்சியிலமர்ந்த
ஆண்டைக் கணித்துள்ளனர். இவனும் சோழன் முதலாம் குலோத்துங்கனும் நண்பர்கள். இவன், திருக்கண்ணபுரம்
கோயிலுக்கு 1104, 1106 ஆகிய ஆண்டுகளில் இருமுறை கொடையளித்துள்ளான். இவனுடைய மகன் அதிராஜராஜ
ஸ்ரீ ராஜராஜன் (1116-1153), இருகூர்ச் செப்பேடு வழங்கியவன். இவனுடைய இருபத்தேழாம் ஆட்சியாண்டு
வரை இவனது கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இருகூர்ச் செப்பேட்டினைப் படித்துச் செய்தியை
வெளியிட்டவர் தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் ஆவார். இந்த ஏட்டில் பள்ளிப்படை பற்றிய
குறிப்பு ஒன்று காணப்படுகிறது.
வீரகேரளர் ஆட்சியில் அரசு நிருவாகம்
வேள் எனப்பட்ட தலைவர்கள் இருந்தனர்.
வஞ்சி வேளான் என்பவனின் பெயர் கடத்தூர், கொங்கூர், ஆனைமலை ஆகிய ஊர்க் கல்வெட்டுகளில்
காணப்படுகிறது. ஊர்களின் தலைவர்கள் காமுண்டன் அல்லது காமிண்டன் என அழைக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஊருக்கும் ஊரவை ஒன்றும் இருந்தது. ஊரவையின் உறுப்பினர் ஊராளி என்றழைக்கப்பட்டார்.
மன்றாடிகள் என்போர் இருந்துள்ளனர். மன்றுக்குரியவர் மன்றாடி. (கோவை மாவட்டக் கல்வெட்டுகள்
நூலில், பதிப்பாசிரியர்கள் மன்றாடி என்பதற்குத் தரும் விளக்கம்: மன்றாட்டு, மன்றாட்டுக் காணி, மன்றாட்டுப்பேறு ஆகியன
கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து வந்த ஊர் வருவாயிலிருந்து உருவாக்கப்பட்ட பங்கு
முறையாகும். கால்நடை வளர்ப்புச் சமூகத்தோடு தொடர்புடைய மன்றம் என்ற சொல்லிலிருந்து
மன்றாட்டு வந்தது. மன்றாட்டை நிருவகிப்பவன் மன்றாடி எனப்பெற்றான்.) வீரகேரளர் ஆட்சியில்,
கடத்தூரில் நிலைப்படை ஒன்று இருந்துள்ளது. இது, நிலைநின்ற ஆயிரவர் படை என்னும் பெயர்
கொண்டிருந்தது. படைத் தலைவர்கள் “படைவளவஞ் செய்வார்” என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறுகிறார்கள்.
வீரகேரளர் காலத்திலிருந்து கடத்தூர்க் கோயிலில் தேவரடியார் இருந்துள்ளனர்.
மேற்படிச் செய்திகளைச் சுட்டும்
கல்வெட்டு வரிகள் கீழே:
1
ஸ்வஸ்திஸ்ரீ கோ அதிராஜராஜ தேவற்கு …………………வீரகேரள வலநாட்டு
நன்னனூர் ஆளுடையார் நக்காண்டாற்கு மேற்படியூரில் வெள்ளாளந் வட்டமணியனான அதிராசராச வஞ்சி வேளாந்……..
ஆனைமலைக் கல்வெட்டு (AR
214 / 1927-28)
2
ஸ்வஸ்திஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு மூந்றாவது கடற்றூ[ர்]
இருக்கும் வதிளார் சந்தந் போத்தநாந மருதக்காமிண்டந்
………
கடத்தூர்க் கல்வெட்டு
3
ஸ்வஸ்திஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு மூந்றாவது கடற்றூர்
மந்றாடிகளில் காவன் சொக்கனான…..
கடத்தூர்க் கல்வெட்டு
4
ஸ்வஸ்திஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு மூந்றாவது கடற்றூர்
நிலை
நின்ற ஆயிரவற்கு நாயகஞ் செய்வார்களில்…..
கடத்தூர்க்
கல்வெட்டு
4
ஸ்வஸ்திஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு மூந்றாவது திரு
மருதுடையார்
தேவரடியாரில் சொக்கந் வெம்பியேந் …
கடத்தூர்க் கல்வெட்டு
கொங்கு நாட்டில் வீரகேரளர்தாம் வேளாண்மைக்கு
அடித்தளம் அமைத்தவர்கள். தென்கொங்கில் இரு பூ (இரண்டு போகம்) நெல் விளைந்ததாகக் கல்வெட்டுக்குறிப்பு
உள்ளது. மன்னறை என்று கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் ஒரு குறிப்பு காணப்படுகிறது.
இது, சோழ நாட்டுக் கல்வெட்டுகளில் பயிலும் மயக்கல் அல்லது வயக்கல் என்னும் சொல்லுக்கு
நேரானது என்று கருதப்படுகிறது. வேளாண்மைக்குத் தகுதியாக்கும் வகையில் புன்செய் நிலங்களைத்
திருத்துதலும் திருத்தப்பட்ட நிலமுமே மயக்கல் எனப்பட்டது. இவ்வகை மயக்கல் நிலங்கள்
கொங்குநாட்டில் மன்னறை என வழங்கப்பட்டன. கோயம்புத்தூர், பேரூர், கொழிஞ்சிவாடி, கரைப்பாடி,
ஆனைமலை ஆகிய ஊர்களில் மன்னறைகள் இருந்துள்ளனவாகக் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.
வீரகேரளர் ஆட்சியின்போது, பாசன வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு வேளாண் தொழில் வளம் பெற்றது.
இவ்வாய்க்கால்கள் வதிகள் என அழைக்கப்பெற்றன. இவை சிறு வாய்க்கால்கள். பேரூர், கொழுமம்,
கரைப்பாடி, ஆனைமலை ஆகிய ஊர்க்கல்வெட்டுகளில் வதிகள் பல இருந்தமையை அறிகிறோம். பழநிக்கருகில்
போடுவார்பட்டியில் 10-11-ஆம் நூற்றாண்டுத் தூம்பு கண்டறியப்பட்டுள்ளது. பெருங்குள வாய்க்கால்,
பெருந்தூம்பு ஆகிய பெயருடைய இடங்கள் பழநிப் பகுதியில் இன்றும் உள்ளன.
வணிகம்
வீரகேரளர் ஆட்சியின்போது, வணிகமும்
சிறப்பான நிலையில் நிலையில் இருந்துள்ளது. பழநி, சோமவார்ப்பட்டிக் கல்வெட்டுகளில் திசை
ஆயிரத்து ஐந்நூற்றுவர், வளஞ்சியர் பற்றிய குறிப்புகளையும், ஆனைமலைக் கல்வெட்டில் மடிகை
என்னும் வணிகக் கடைத்தெருக்கள் பற்றிய குறிப்பினையும் காண்கிறோம். வியாபாரி என்னும்
சொல்லும் பல கல்வெட்டுகளில் காணக்கிடைக்கிறது.
வெள்ளலூர் பகுதியில் வெற்றிலை ஏற்றுமதி நடைபெற்றது. வெள்ளலூர் வணிகர் ஒருவர்
வெற்றிலையைச் சோழ நாட்டுக்குச் சென்று சேர்ப்பித்ததற்காக அவருக்கு வீரகேரள அரசன் காணித்
தன்மமும், வீட்டில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளில் சங்கு ஊதிக்கொள்ளவும், பச்சைப்
பிடாம் (பட்டாடை?) போர்த்துக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டாம் நிலை (மாடி) எடுத்துக்கொள்ளவும்
உரிமைகளை வழங்குகிறான். இந்த உரிமைகள் மக்களுக்கும்,
மருமக்களுக்கும் சேர்த்து அளிக்கப்படுகின்றன. இச்செய்தி இருகூர்ச் செப்பேட்டில் உள்ளது. இருகூர்ச் செப்பேட்டின் சில வரிகள் :
. . . . . அமரபயங்கரப் பெருமாள்ளுக்கும் இவர்
பாட்டந்மார் செய்த பணி
வெள்ளலூர் வெற்றிலை கொளுப்ப[சு]ங்காய் இவைய்
உள்படச்
சோழநாட்டு[க்]கு போய் குடுத்த பணிக்கு . . . . . . . . . . . . .
. . .
இவந்நுக்கு குடுத்த வரிசை ஆண் வழிக்கு ஒற்றைச்
சங்கு ஊதி வருவி
தாகவும் பெண் வழிக்கு இரட்டைச் சங்கு ஊதி வருவிதாகவும் ....../.பச்சைப் பிடாம் போற்பாநாகவும் இவந் அகம்
இரண்டாநிலை எடுத்து சாந்து இட்டுக்கொள்ளப் பெறுவாநாகவும்
. . .
நம் ஓலை குடுத்தோம்
நாணயங்களும், முகத்தல் அளவுகளும்
வீரகேரளர் அவர்களின் ஆட்சிக்க்காலத்தில்
அச்சு, பொன் என்னும் நாணய வகைகளைப் பயன்படுத்தினர். இந்த அச்சு, பின்னர்க் கொங்குச்சோழர்
காலத்தில் பழஞ்சலாகை அச்சு என்னும் பெயர் பெற்றது. நெல்லை அளக்க முகத்தல் அளவைகளான
மா, கலம், தூணி ஆகியனவும், கருவிகளாகப் பரகேசரிக்கால்,
சூலக்கால் ஆகியனவும் பயன்பாட்டிலிருந்தன.
நகரங்கள் :
வீரகேரளர் ஆட்சியின்போது, பழநி,
பேரூர் ஆகிய மாநகர்களும், முப்பது சிறு நகரங்களும் இருந்தன.
சமயம் :
சோமவார்ப்பட்டியில் இருக்கும் அமரபுயங்கீசுவரர்
கோயிலும், முட்டமான அமரபுயங்க நல்லூரில் (தற்போதைய பெயர் போளுவாம்பட்டி) இருக்கும்
நாகீசுவரர் கோயிலும், கடத்தூரில் இருக்கும் மருதீசர் கோயிலும் வீரகேரளர் கட்டுவித்ததாகக்
கருதப்படுகின்றன. கடத்தூரில் உள்ள மருதீசர் கோயில் அமராவதி ஆற்றங்கரையிலேயே கட்டப்பெற்றுள்ளது.
கருவறையிலிருக்கும் இலிங்கத்திருமேனி மரத்தாலானது. 13-ஆம் நூற்றாண்டில், கொங்குச்சோழனான
வீரராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் சமணக்கோயில்கள் பல சைவக்கோயில்களாக மாற்றப்பட்டன.
எனவே, வீரகேரளர் ஆட்சியின்போது சமணம் சேதமுறவில்லை எனலாம்.
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
கோவை.
அலைபேசி : 9444939156.
வீரகேரளர் தொடர்பாக அடிப்படைத் தகவல்களைக் கொண்ட அருமையான மற்றும் முழுமையான பதிவிற்கு நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
பதிலளிநீக்கு