முதலாம் இராசராசனின் (இராஜராஜனின்) புகழ் பெற்ற கல்வெட்டு
முன்னுரை
தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையப் பக்கத்தில் இடம்பெற்ற, தஞ்சைப்பெரியகோயிலின் அழகான கல்வெட்டுப்படங்கள் சிலவற்றின் பாடங்களைத் தந்து அக்கல்வெட்டுகளின் செய்தியை இந்த வலைப்பூவில் பகிர்ந்து வருகிறேன். இடையில், முதலாம் இராசராசன், தான் எடுப்பித்த கோயிலுக்குத் தான் கொடுத்த கொடைகளையும், தன் அக்கன், தன் அரசியர் ஆகியோர் கொடுத்த கொடைகளையும், அவற்றோடு யாரெல்லாம் கொடை கொடுத்தனரோ அவர்களின் கொடைகளையும் பதிவு செய்த ஒரு புகழ் பெற்ற கல்வெட்டின் ஒளிப்படத்தைக் காண நேர்ந்தது. அக்கல்வெட்டை இங்கே பகிர்ந்த பின்னர், மற்ற படங்களைப் பற்றிய கட்டுரை தொடரும்.
முதலாம் இராசராசன் தஞ்சைக் கோயில் எடுப்பித்தமைக்குச் சான்று |
கல்வெட்டின் பாடம்:
1 ஏதத் விச்0வ நிருப ச்0ரேணி மௌலி மாலோபலாளிதம் சா0ஸநம்
ராஜராஜஸ்ய ராஜகேஸரி வர்மண: திருமகள் போலப் பெருநிலச்செல்வியுந் தனக்கேயுரிமைபூ
2 ண்டமை மநக்கொளக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கைநாடுங் கங்க
பாடியுந்
தடிகைபாடியும் நுளம்பபாடியுங் குடமலை நாடுங் கொல்ல
3 முங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்
கமுந் திண்டிறல்
வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளரூ
4 ழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டேய் செழியரைத்தேசுகொள்
கோராஜகேஸரி
வர்ம்மரான ஸ்ரீ ராஜராஜ தே3வர்க்கு யாண்டு இ
5 ருபத்தாறாவது நாள் இருபதினால் உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர்க்
கோயிலிநுள்ளால்
இருமடிசோழநின் கீழைத்திரும
6 ஞ்சநசாலை தா3நஞ்செய்தருளாவிருந்து பாண்ட்யகுலாச0நி
வளநாட்டுத் தஞ்சா
வூர்க்கூற்றத்துத்
தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி
7 ஸ்ரீ ராஜராஜீச்0வரமுடையார்க்கு நாங்குடுத்தநவும் அக்கன்
குடுத்தநவும் நம்
பெண்டுகள்
குடுத்தநவும் மற்றும் குடுத்தார் குடுத்தநவும்
8 ஸ்ரீவிமாநத்தில்க் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருள
...............
விளக்கம்:
வடமொழிச்
சுலோகம்
தொடக்கத்தில்
வரும் ”ஏதத் விச்0வ நிருபச்0ரேணி மௌலி மாலோபலாளிதம் சா0ஸநம்
ராஜராஜஸ்ய ராஜகேஸரி வர்மண:” என்பது வடமொழிச்
சுலோகம் ஆகும். இச் சுலோகம் இராசராசனுடைய தஞ்சைக் கல்வெட்டுகளில் நான்கில் மட்டுமே
காணப்படும் அரியதொரு சுலோகமாகும். இதன் பொருள்,
“(தன்னை வணங்கும்) முடிமன்னர் கூட்டத்தினரின் கிரீடங்களில் உள்ள
வைரங்களினால் ஒளிவிளக்கம் பெற்ற (பாதங்களுடைய) ஸ்ரீ ராஜராஜன் எனப்படும்
ராஜகேஸரிவர்மனுடைய சாசனம் இது” என்பதாகும். தொடர்ந்து
வருகின்ற தமிழ்ப்பகுதி – நான்கு வரிகள் - இராசராசனின் மெய்க்கீர்த்திப்
பகுதியாகும். மெய்க்கீர்த்தி எழுதும் முறையை இராசராசனே முதலில் உருவாக்கினான்
எனலாம். இம்மெய்க்கீர்த்தி முறையைப் பின் வந்த சோழரும், பாண்டியரும் பின்பற்றினர்.
இராசராசனின் ஆட்சிக் காலம் கி.பி. 985-1014. மெய்க்கீர்த்தி எழுதும் முறை அவனது
எட்டாம் ஆட்சியாண்டு முதல் சாசனங்களில் இடம் பெறுகிறது.
காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி
மெய்க்கீர்த்தியில்,
அவனது முதல் வெற்றியாகிய காந்தளூர்ச்சாலை கலமறுத்தமை சுட்டப்பெறுகிறது. சேரவரசனாகிய
பாஸ்கரரவி வர்மனின் மரக்கலங்களைக் (கப்பற்படையை) காந்தளூர்ச்சாலையில் போர்
நிகழ்த்தி அழித்தான் என்பது ஒரு கருத்து. சாலை என்பது உணவுச்சாலையைக் குறிக்கும்
என்பதாகவும், கலமறுத்தல் என்பது இத்தனை மாணவர்க்கு உணவு அளிக்கலாம் என்று வரையறை
செய்தல் என்பதாகவும் இன்னொரு கருத்து. சாலை என்பது உணவு அளிக்கும் அறச் சாலை
எனவும், காந்தளூர் அறச்சாலையில் சோறு அட்டுவதை அரசன் நிறுத்திய செய்தியைக்
குறிப்பதாகவே தொல்லியல் அறிஞர் து.அ. கோபிநாதராவ் கொண்டார். கவிமணி தேசிகவிநாயகம்
பிள்ளை அவர்களும் இதனை ஆய்ந்து, “அரசன் காந்தளூர் சோற்றுச்சாலையில் உணவு
அளிக்கவேண்டிய முறையை நிர்ணயித்துத் திட்டம் செய்தான்”
என்று கூறியுள்ளார். உணவுச் சாலை என்னும்
கருதுகோளைப் பெரும்பாலான ஆய்வறிஞர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. ஆனால், தொல்லியல்
ஆய்வறிஞர் தி.நா. சுப்பிரமணியன் இதை வேறொரு கோணத்தில் அணுகுகிறார். ”கி.பி.
868-ஆம் ஆண்டில் வேணாட்டு ஆய்குல வேந்தனான கருநந்தடக்கன் என்பான் காந்தளூரில் உள்ள
சாலையை மாதிரியாகக் கொண்டு அதைப் பின்பற்றிப் பார்த்திவசேகரபுரம் என்னுமிடத்தில்
ஒரு சாலை நிறுவியதைத் தெரிவிக்கும் செப்பேட்டுச் சாசனத்தில்”
விளக்கமாக உள்ள செய்திகளின் அடிப்படையில், ”காந்தளூர்ச்சாலையும்,
அதைப்பின்பற்றி நிறுவப்பட்ட பார்திவசேகரபுரத்துச் சாலையும் ஒருவகைப் பாடசாலைதான்;
மாணவர்கள் அவ்விடத்திலேயே தங்கி உணவு கொண்டு படித்துவந்திருக்கிறார்கள்; அந்தச்
சாலைக்கெனத் தனியாக வேண்டிய சொத்து இருந்துள்ளது; அதன் தலையீடற்ற நிர்வாகம் ஆசிரியர்களுக்கு
நிகரான சட்டர்கள் என்பாரிடம் இருந்தது. தன்னாட்சி பெற்ற தற்காலத்துப் பல்கலைக்
கழகங்களுக்கு ஒப்பாக அச்சாலை விளங்கியது.” (கட்டுரை
ஆசிரியர் குறிப்பு: தற்காலம் இயங்கிவரும் IAS/ARMY
ACADEMY என்னும் அமைப்புகளோடு ஒப்பிடலாம்?). அங்கு பயின்ற
மாணவர்கள், வேதப்புரோகிதக் கல்வியுடன், நாட்டு நிர்வாகம், போர்முறை ஆகியனவற்றையும்
– அதாவது CIVIL, MILITARY ஆகிய இருதிறத்த நிர்வாக
அறிவினைக் – கற்றுத்தேர்ந்து, தமிழகத்தின் மூவேந்தரிடத்தும் பிரமமாராயர் போன்ற
பெரும் பதவியில் பணியாற்றும் தகுதியினைப் பெற்றார்கள்.
இவர்கள்
பிராமணராய் இருந்தனர். எந்த ஓர் அரசுக்கும் கட்டுப்படாத ஒரு நிறுவனமாக இயங்கிவந்த
அச்சாலையில் ஏற்பட்ட சிக்கலை (அல்லது முறைகேடு?) நெறிப்படுத்தவேண்டிவந்தபோது படைவலி கொண்டே அதைச் செய்து முடிக்க
வேண்டியிருந்தது. முதலாம் இராசராசன் மட்டுமல்ல, அவனை அடுத்து ஆட்சி செய்த முதலாம்
இராசேந்திரன், பெயரன் முதலாம் இராசாதிராசன், முதலாம் குலோத்துங்கன் ஆகியவர்களும்
காந்தளூர்ச் சாலை மேல் படை நடத்திக் கலமறுத்தார்கள் என்பதை இவ்வரசர்களின்
மெய்க்கீர்த்திகளிலும் காணலாம். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: காந்தளூர்ச் சாலையில்
நிகழ்ந்த நிர்வாகச் சிக்கல்கள் அல்லது நிர்வாக இடர்ப்பாடுகள் அல்லது நிர்வாக
முறைகேடுகள் ”கலம்” என்னும் தொடராலோ
அல்லது ”கலன்” என்னும் தொடராலோ
குறிப்பிடப்பட்டன என்றும், இவ்வகைக் கேடுகளைக் களைதல் “கலமறுத்தல்” அல்லது
“கலனறுத்தல்” என்று கூறப்பட்டது
எனவும் கொள்ளலாம். ஏனெனில், “கலன்” என்று ஒரு சொல்லைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். கல்வெட்டுச் சொல்லகராதியில் அதற்கு ”வில்லங்கம்” எனப் பொருள்
தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாகச் சுட்டப்பட்ட கல்வெட்டு,
தென்னிந்தியக்கல்வெட்டுகள் தொகுதி-7 – க.வெ.எண்: 430 – ஆண்டறிக்கை எண்: 217/1901.
அக்கல்வெட்டு, மாகறல் திருமலீசுவரர்
கோயிலில் உள்ள கல்வெட்டு. ஜயங்கொண்டசோழ மண்டலத்து, காலியூர்க் கோட்டத்து பாகூர்
நாட்டு உக்கலான விக்கிரமாபரணச் சதுர்வேதிமங்கலத்து மகாசபையினர், இதே மண்டலத்தைச்
சேர்ந்த ஈக்காட்டுக் கோட்டத்துக் காக்கலூர் நாட்டுச் சேலையில் என்னும் ஊரைச்
சேர்ந்த வாணிகன் படம்பக்க நாயகன் அழகிய பெருமாளுக்குப் பிடாகையூர் ஒன்றை
விற்றுக்கொடுக்கின்றனர். இவ்வூர்க்கு வில்லங்கம் ஏதுமில்லை என்றும், அவ்வாறு
வில்லங்கம் காணவரின், மேற்படி மகாசபையாரே அவ்வில்லங்கத்தைத் தீர்த்துவைக்கக் கடமைப்பட்டவர் எனக் கல்வெட்டுச் செய்தி
கூறுகிறது.
கல்வெட்டின்
வரிகள்:
”சேலையில் வாணிகன் படம்பக்க நாயகன் அழகியபெருமாளுக்கு உக்கலான
விக்கிரமாபரணச் சதுர்வேதிமங்கலத்து மகாசபையோம் இப்படியிவனுக்கு விற்றுக்குடுத்த
இவ்வூர்க்கு எப்பேர்ப்பட்ட கலனுமில்லை கலனுலவாய்த் தோற்றில்
நாங்களே தீர்த்துக்குடுக்கக்
கடவோமாகவும்..............”
கலமறுத்தல்
என்னும் தொடருக்குக் கல்வெட்டு அகராதி, “போட்டியில் வென்று” என்றும் “தடை
நீக்கி(?)” என்றும் பொருள்
தந்துள்ளது. இத்தரவுகள், தி.நா. சுப்பிரமணியன் அவர்களின் கருதுகோளுக்கு வலு
சேர்ப்பதாகவே அமைந்துள்ளன எனலாம்.
இராசராசன் வென்ற நாடுகள்
கல்வெட்டின்
மெய்க்கீர்த்தியில் இராசராசன் வென்ற நாட்டுப்பகுதிகள் கூறப்படுகின்றன. வேங்கை
நாடு, கீழைச் சாளுக்கியர் ஆண்ட நாடு. வேங்கி நாடு எனவும் பெயர் உண்டு. கிருஷ்ணை,
கோதாவரி ஆகிய ஆறுகளுக்கு இடையில், கீழைக்கடலைச் சார்ந்து அமைந்த நாடு. கங்கபாடி,
மைசூர்ப்பகுதிக்குத் தெற்கு, சேலம் மாவட்டத்தின் வடக்கு ஆகிய நிலப்பகுதி கொண்டது.
இதன் தலைநகர் தழைக்காடு. கல்வெட்டுகளில், தழைக்காடான இராசராசபுரம் என்று
இராசராசனின் பெயரால் வழங்கப்பட்டது. நுளம்பபாடி, மைசூர்ப்பகுதியின் கிழக்கும்,
பெல்லாரி மாவட்டமும் கொண்டது. தடிகைபாடி, மைசூர்ப்பகுதி. குடமலை நாடு,
கருநாடகத்தின் குடகு. கொல்லம், சேர நாட்டுப்பகுதி. கலிங்கம், கோதாவரிக்கும்
மகாநதிக்கும் இடையில் வங்கக் கடலைச் சார்ந்துள்ள பகுதி. கலிங்கத்தை,
இராசராசனுக்காக இராசேந்திரன் வென்றான். ஈழம், கி.பி. 991-ஆம் ஆண்டுப்போரில்
வெல்லப்பட்டது. அப்போதைய ஈழ அரசன் ஐந்தாம் மகிந்தன். இரட்டபாடி என்பது
துங்கபத்திரை ஆற்றுக்கு வடகரையில் இருந்த பகுதி. மேலைச் சாளுக்கியரோடு
இராசேந்திரன் போர் நடத்தி வென்ற பகுதி. இறுதியாக, ”செழியரைத்
தேசுகொள்” என்னும் தொடர், ஒருவர்க்கு மேற்பட்ட பாண்டியரை வென்றமையைக் குறிக்கும்.
தஞ்சைப்பெருங்கோயிலைக் கட்டுவித்தவர் யார்?
தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டுவித்தவர் யார் என்பதை இராசராசனின் கூற்றாகவே
காணும் வண்ணம் அமைந்த அவனுடைய கல்வெட்டு இது. “தஞ்சாவூர்
நாம் எடுப்பிச்ச கற்றளி”
என்னும் இக்கல்வெட்டுத்தொடர் இதைத்தெரிவிக்கிறது..
இக்கல்வெட்டு, இக்கோயிலுக்கு இராசராசனும், அவனது தமக்கையாரான குந்தவைப்
பிராட்டியும், அவனது அரசியரும் கொடுத்த கொடைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.
“தஞ்சாவூர்க் கோயிலிநுள்ளால்” என்னும் தொடர் தஞ்சை
அரண்மனையைக் குறிக்கும். கோயில் என்பது அரசன் அரண்மனையையும், தளி என்பது கோயிலையும்
குறித்தன என்பது நோக்கத்தக்கது. திருமஞ்சநசாலை என்பது அரண்மனை நீராடு மண்டபம்
எனலாம். அந்த மண்டபத்திலிருந்து இராசராசன் தானம் பற்றிய செய்திகளைக் கோயிலின்
கருவறை விமானத்துக் கல்லிலே வெட்டுக என்று ஆணையிடுகின்றான். கோயிலுக்கு இராசராசன் தான்
கொடுத்த கொடைகளையும், தன் அக்கன் (தமக்கை குந்தவை) கொடுத்த கொடைகளையும், தன்
பெண்டுகள் (அரசியர்) கொடுத்த கொடைகளையும் மற்றும் யாரெல்லாம் கொடுத்தனரோ அவர்களது
கொடைகளையும் எழுதுக என்று ஆணையிடுதல் குறிப்பிடத்தக்கது. தமக்கையின்பால்
அவனுக்கிருந்த பற்றுதலை முதலில் அக்கன், பின்னர் அரசியர் என்னும் வரிசை
குறிக்கிறது எனலாம்.
துணை நின்ற நூல்கள் :
1 சிவபாதசேகரனின் தஞ்சைக் கல்வெட்டுகள்-வித்துவான் வே.மகாதேவன். சேகர் பதிப்பகம், சென்னை.
2 தென்னிந்தியக் கோயிற்சாசனங்கள்-தி.நா.சுப்பிரமணியன்.
3 தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி-சாந்தி சாதனா, சென்னை.
குறிப்பு: முதலிரண்டு நூல்களில் உள்ள சில வரிகள் அவற்றில் உள்ளவாறே கையாளப்பட்டுள்ளன.
துரை.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :
9444939156.
வரலாற்றினை மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் நுட்பமாக எழுதும் உங்களின் உத்தி பாராட்டத்தக்கது. செய்திகள் அறிந்தனவாக இருந்தாலும் இவ்வகையான உத்தியில் படிக்கும்போது மனம் நிறைவடைகிறது. நன்றி.
பதிலளிநீக்கு