பெள்ளாதி – சில தொல்லியல் தடயங்கள்
முன்னுரை
1-11-2017
தேதியிட்ட “தி
இந்து”
தமிழ் நாளிதழில்
“வைணவ ஜீவ சமாதி கண்டுபிடிப்பு” என்னும் தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்தது.
முழுதும் கல்லாலான, துளசி மாடம் போன்ற வடிவில் காணப்பட்ட ஒரு கட்டுமானத்தைப் பற்றி
அதில் எழுதியிருந்தார்கள். ”அது வைணவ சமயத்தாரின் ஜீவ சமாதியாக இருக்கும் எனத்
தெரிகிறது” எனக்
குறிப்பிட்டிருந்தார்கள். பெள்ளாதிக்கு ஒருமுறை நான் சென்றபோது அதை ஏற்கெனவே
பார்த்ததும் ஒளிப்படங்கள் எடுத்துவந்ததும் நினைவுக்கு வந்தது.
கடந்த ஆண்டுகளில் பெள்ளாதிக்கு இருமுறை
சென்றிருக்கிறேன். முதல் முறையாக 2014-ஆம் ஆண்டில் பெள்ளாதிக்குச் சென்று பீரங்கிமேட்டைப்
பற்றியும், பெள்ளாதியில் மண் கோட்டை இருந்துள்ளது என்பதற்குச் சான்றாகக்
கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆங்கிலேய அதிகாரி “பிரான்சிஸ் புக்கானன்” (FRANCIS
BUCHANAN) தம் பயணக்குறிப்பில் பெள்ளாதியில் மண் கோட்டையைக் கண்டது
பற்றியும் எழுதி நாளிதழில் செய்தி வெளியிட்டேன். அச்செய்தி 9-11-2014 தேதியிட்ட
“தினகரன்” நாளிதழில் வெளியானது. 2017 ஜூன் மாதத்தில் வலைப்பூவிலும்
பதிவிட்டேன். இரண்டாம் முறையாகச் சென்றது இந்தத் துளசிமாடத்தைப்பார்க்க. ஜனவரி
மாதத்தில் ஒரு நாள், கோவை “லோட்டஸ் டி.வி.எஸ்” (LOTUS TVS ) நிறுவனத்தில் பணிபுரியும் சுந்தர் என்னும் ஆர்வலர் தாம் பெள்ளாதியில்
பார்த்த துளசி மாடத்தைபற்றிச் சொல்லி அதைச்சென்று பார்க்கும்படி என்னைக்
கேட்டுக்கொண்டார். 03-02-2017 அன்று, பெள்ளாதியை நோக்கிப்பயணப்பட்டேன். அங்கு,
முகேஷ் என்னும் ஓர் இளைஞர் துளசி மாடம் இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றார்.
இவர் B.E. பட்டம் பெற்றவர். வணிகக் கப்பலில்
பணியாற்றுபவர். இதே ஊரினர், சிறுவயது முதல் துளசி மாடத்தைச் சுற்றிவந்தவர். துளசி
மாடத்தையும், அருகே ஒரு பெரிய பாறையில் புடைப்புச் சிற்பமாக இருந்த ஐந்து தலை
நாகத்தின் உருவத்தையும் காண்பித்தார். ஊரில் சிலர் ஐந்து தலையுடன் கூடிய நாகத்தைப்
பார்த்ததாகச் சொன்னார்.
துளசி மாடம் கல்லால் செய்யப்பட்ட பெரியதொரு சதுர வடிவம்.
கோயில் தூண்களைக் காட்டிலும் பருத்த, ஆனால் கோயில் தூண் அளவுக்கு உயரமில்லாத ஒரு
தூண் என்றே அதைக் குறிப்பிடவேண்டும். இது மூன்று பகுதிகளைக் கொண்டதாகக் கூறலாம்.
முதல் பகுதி, தூணின் அடித்தளக்கல். எவ்வித வேலைப்பாடும் இன்றி ஒரு பீடத்தின் பணியை
மட்டுமே செய்யும் வகையில் கரடு முரடாகக் காணப்பட்டது. இரண்டாவது பகுதி, இந்தப் பீடத்தின்
மேல் நிறுத்தியது போன்ற அமைப்பில் வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான நடுப்பகுதி. இதில்,
கீழே சிறிதளவு, கோயிலின் அதிட்டானத்தைப் போன்றதோர் வேலைப்பாடு காணப்படுகிறது.
அடுத்துள்ள பெரிய பரப்பில் கோயிலின் தேவகோட்டத்தைப் போன்ற ஒரு கோட்டத்தில், கையில்
வெண்ணை உருண்டையை வைத்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கண்ணன், குழலூதும் கண்ணன்,
காளிங்கப் பாம்பின் தலையில் தன் வலக்காலை வைத்து ஆடுகின்ற கண்ணன், இரு பக்கங்களிலும் இரு யானைகள் சூழ்ந்தவாறுள்ள
திருமகள் என
முழுச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மூன்றாவது பகுதியாக, கோயிலின் கூரைப்பகுதியில்
காணப்படும் கர்ண கூடுகள் உள்ளன. அதன்மேற்பகுதியில், கோயில் விமானத்தின்
கிரீவப்பகுதியில் காணப்படும் சிற்பங்களைப் போன்று சிற்பங்கள். ஒரு பக்கம், வராகம், கூர்மம், மீனம் ஆகிய
தசாவதாரச் சிற்பங்கள். மற்றொரு பக்கத்தில், சங்கு-சக்கரம். இன்னொரு புறம் இராம,
நரசிம்ம, வாமன அவதாரச் சிற்பங்கள். மற்றொரு புறம் உள்ள சிற்பங்களைச் சரியாக
இனங்காண இயலவில்லை. துளசி மாடம், பாம்புச் சிற்பம் ஆகியவற்றை ஒளிப்படம் எடுத்துத்
திரும்பினேன்.
துளசி மாடம் - பல தோற்றங்கள்
மீண்டும் பெள்ளாதி நோக்கி
துளசி மாடம் பற்றிய “தி இந்து” நாளிதழ் செய்தியைப் பார்த்த
நண்பர் ”தமிழ் மறவான்” இரமேஷ் தொடர்புகொண்டு, பெள்ளாதி சென்றுவரலாம் என அழைத்தார். துளசி
மாடத்தைபார்த்துவிட்டு அங்குள்ள அவரது குலதெய்வக் கோயிலைப் பார்க்கலாம் என்றார்.
அக்கோயிலில், நடுகல் சிற்பம் ஒன்று இருப்பதாகவும் மேலும் சில தொல்லியல் எச்சங்கள்
கிடைக்கக் கூடும் என்றார். 03-11-2017 அன்று பயணம் தொடங்கியது. அவரது
மகிழுந்தில் புறப்பட்டோம். எங்களுடன் ஒரு நாளிதழ் நண்பரையும் இணைத்துக்கொண்டோம்.
தர்மராஜா-திரௌபதி கோயில்
பெள்ளாதியில் முதலில் நாங்கள் சென்ற இடம்
தர்மராஜா-திரௌபதி கோயில். கோயில் பல ஆண்டுகளாக மண்ணும் செடியுமாகச் சேதமுற்ற ஒரு
பழங்கோயிலாக இருந்துள்ளது என்கின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்னர்,
புதுப்பித்துக் கட்டியுள்ளனர். கோயிலின் வளாகத்தில் ஆஞ்சநேயரின் சிற்பம்
காணப்பட்டது. அழகான சிற்பம். கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரின் அரச
குருவாக விளங்கிய வியாசராஜர் என்பவர் தென்னிந்தியாவில் 732 அனுமன் சிற்பங்களை
நிறுவினார் என்று கூறப்படுகிறது. அவர் நிறுவிய அனுமன் சிற்பங்களில், ஒரு கை உயர்த்திய
நிலையிலும், இன்னொரு கை சௌகந்திகா என்னும் மலரை ஏந்திய நிலையிலும், வால் தலைக்கு
மேல் வட்டமாகவும் காணப்படும். வாலில் மணியொன்றும்
காணப்படும். இந்த அமைப்பு இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரின் சிற்பத்திலும்
காணப்படுகிறது. சிலையின் பழமையை நோக்குமிடத்து இச்சிலை 17-ஆம் நூற்றாண்டினதாக
இருக்கலாம். ஆஞ்சநேயரின் தோற்றத்தில் புடைத்த கண்களும் வாயும்; வாயில் கோரைப்
பற்கள். நெற்றியில் நாமம். நெற்றிக்கு மேலே தலையில் மணிகளாலான மாலை
சுற்றப்பட்டுள்ளது. நீண்ட செவிகள். செவியில் அணிகள். கழுத்தில் பதக்கத்துடன் கூடிய
கண்டமாலை. அதற்கும் கீழே தொங்கும் இரண்டு மாலைகள். இடமிருந்து வலமாகச் செல்லும்
முப்புரி நூல். இடைப்பகுதியில் சலங்கை மணிகள் கோத்த மாலை. இடையாடையின் தொங்கல்கள்.
தோளைச் சுற்றிச் செல்லும் சௌகந்திகா மலர். தோள்களில்
கேயூரம்; அதன் கீழே தோள் வளை; முன்கையில் மணிக்கட்டுக்கருகில் கைவளை; கால்களில்
கழல். கழலுக்குக் கீழே உள்ள பாதங்கள் இந்தச் சிற்பத்தில் இல்லை. உடைந்துவிட்ட
பாதப் பகுதி மட்டும் துண்டுச் சிற்பமாக அருகில் தனியே கிடத்தப்பட்டுள்ளது. அந்தத்
தனிச் சிற்பம் அனுமன் சிலையின் பீடமாகும். பீடத்தைத் தாங்கிப் பிடித்த நிலையில்
ஒரு பூத கணச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயர் சிற்பம்
ஆஞ்சநேயரின் பாதம் - பீடத்தில் பூத கணம்
பன்றி குத்திப் பட்டான் கல்
கோயில் வளாகத்தில் ஒரு வேப்பமரத்தின் அடியில்
பன்றிகுத்திக்கல் சிற்பம் ஒன்று தரையில் பதிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் மீது
எண்ணெய் பூசி வழிபடப்பட்டு வந்தாலும் சிற்பத்தின் உருவம் ஓரளவு தெளிவாகவே உள்ளது. வீரனின்
முகத்தின் கண்கள், முகம், வாய், கை வளை, இடை ஆடை ஆகியன நுண்மையாகக் காணுவதில்லை.
மேலும் வடிவத்தில் சிற்பக்கலையின் நேர்த்தி இல்லை. இடப்புறமாகக் கொண்டை உள்ளது.
நீண்ட செவிகள் உள்ளன. தோள் வளையும், முன்கை வளையும் புலப்படுகின்றன. கழுத்தில்
மாலைகள் உள்ளன. இடையாடைக்கச்சில் குறுவாள் காணப்படுகிறது. பன்றி உருவத்தின் மீது
படிந்திருந்த பூச்சைச் சிறிது அகற்றியதன் காரணமாகப் பன்றியின் உருவம் தெளிவாகத்
தெரிந்தது. அதன் வாய்ப்பகுதியும், கால்களும் நன்கு புலப்படுகின்றன. வீரன் கையில்
ஒரு பெரிய வாளைக் கொண்டு பன்றியைக் குத்துகிறான். குத்திய வாளின் முனை பன்றியின்
தலைப்பகுதியில் சற்றே நுழைந்துவிட்டது எனலாம். நுழையாதது போலவும் ஒரு தோற்றம். கால்நடைகளைப்
பட்டி அமைத்துக் காவல் காக்கும் வீரர்கள், அக்கால்நடைகளைத் தாக்கவரும் புலிகளோடு
சண்டையிட்டு இறந்துபடுவதுண்டு. அவ்வாறு இறந்துபடும் வீரர்களூக்கு நடுகல்
(நினைவுக்கல்) எடுப்பது மரபு. இவற்றைக் கொங்குப்பகுதியில் புலிகுத்திக்கல் என
அழைப்பர். அவ்வகை நடுகற்கள் கொங்குப்பகுதியில் நிறையக் காணப்படுகின்றன. ஆனால், பன்றியை வீரன்
கொல்லும் நடுகற்கள் மிகக் குறைவு. எனவே, இந்த பன்றிகுத்திக் கல் சிறப்புப்
பெறுகிறது. பன்றிகள் விளைநிலங்களைச் சேதப்படுத்துபவை. மிக வலிமை வாய்ந்தவை.
பன்றி குத்திப் பட்டான் கல்
துளசி மாடம்
அடுத்து நாங்கள் காணச் சென்றது துளசி மாடம். தர்மராஜா
கோயிலுக்கருகிலிருந்த ஒரு கிளைப்பாதை (இட்டேரிப் பாதை போன்றது) வழியே நடந்து
சென்று துளசி மாடம் இருந்த இடத்தை அடைந்தோம். வழியில், கரிவேப்பிலைச் செடி
ஒருபுறமும், நிலக்கடலைச் செடி ஒரு புறமும் பயிரிட்டிருந்தார்கள். பசுமையான காட்சி.
அவற்றினூடே நடந்து சென்று ஒரு பள்ளத்துக்கருகில் சென்றடைந்தோம். அங்கே, துளசிமாடக்
கட்டுமானம். முன்னரே விளக்கியவாறு சிற்ப வேலைப்பாடுகளோடு தனித்து அழகாகக்
காட்சியளித்தது. அருகிலேயே பள்ளத்தில் பாறைச் சிற்பமான ஐந்து தலை நாகத்தையும்
பார்த்தோம். பண்டைய நாள்களில் இந்தப் பள்ளத்தில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. ஒருமுறை
வெள்ளம் காரணமாக, எங்கோ வெள்ளம் அடித்துக்கொண்டுவந்த எருமைகள் ஏழு இங்கே இறந்த
நிலையில் ஒதுங்கியதனால் “ஏழெருமைப் பள்ளம்” என்ற பெயர் இப் பள்ளத்துக்கு நிலைத்துவிட்டது. துளசிமாடத்துக்கு
அருகில் இருக்கும் நிலத்தில் பெருங்கற்கால எச்சங்களான பானையோட்டுச் சில்லுகள்
(சிறு துண்டுகள்) ஆங்காங்கே சிறிதளவு பரவிக்கிடப்பதைப் பார்த்தோம். பெரிய பானை
ஓடுகள் காணப்படவில்லை. வரலாற்றுக்காலப் புதைவிடமாக இருந்திருக்கலாம்.
கரிவேப்பிலைத் தோட்டம்
துளசி மாடம் - தற்போதைய நிலை- மாலையுடன் வழிபாடு?
ஐந்து தலை நாகம் - பாறைச் சிற்பம்
துளசி மாடம் - கல்லறை மரபு
நாளிதழ்ச் செய்தியில் குறிப்பிட்டது போல, துளசிமாட
வடிவில் உள்ள இந்த அமைப்பு ஒரு வைணவக் கல்லறை (சமாதி) அல்லது நினைவிடம் ஆக
இருத்தல் வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில், திருக்கோயிலூருக்கருகில் உள்ள
வீரசோழபுரம் என்னும் ஊரில் உள்ள ஒரு வைணவச் சமாதியின் அமைப்பு துளசி மாடத்தை
ஒத்திருப்பதைக் காணலாம். இது சத்தியநாத தீர்த்தர் என்பாரின் சமாதி அல்லது கல்லறை.
அவர், மத்வாச்சாரியாரின் வைணவ மரபைப் பரப்பியவர் ஆவார்.
சத்தியநாத தீர்த்தரின் சமாதி-துளசிமாட வடிவில்-வீரசோழபுரம்
தர்கா-இசுலாமியத் துறவியின் கல்லறை
பெள்ளாதியில், தர்மராஜா கோவிலுக்கருகிலேயே ஒரு பள்ளிவாசல்
உள்ளது. இசுலாமியர்களின் தொழுகைக்கான இடமே பள்ளிவாசல் (MOSQUE) என்பது. பள்ளிவாசல் இருக்கும் வளாகத்தில் ஒரு “தர்கா”வும் உள்ளது. “தர்கா” என்னும் கல்லறை பழமையான ஒன்று. இசுலாமியத் துறவிகளின் கல்லறையே
“தர்கா”
என்பது. இந்தக்
கல்லறை ஷாபிஷா காதிரி அவுலியா என்னும் இசுலாமியத் துறவிக்கு எழுப்பப்பட்டது. கல்லறையின்
முகப்பிலேயே ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அந்தக் கல்வெட்டின் பாடம் (வாசகம்) கீழ்
வருமாறு:
தர்காக் கல்வெட்டு
கல்வெட்டுப் பாடம்
786
1 சா வி
2 சா கா
3 தி றி அ
4 வு லி யா
5 பெ ள்
6 ளா தி
7 ஹி ஜி ரி
8
1190
9 எழுதியது
10 10 10 40
ஷாபிஷா காதிரி அவுலியா - தர்கா
”ஷாபிஷா” என்னும் பெயர் வடமொழி எழுத்துகளை நீக்கி “சாவிசா” என எழுதப்பட்டுள்ளது. “ப3” எழுத்து, தமிழில் “வ” என மாறும். கல்வெட்டு 1940-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. ஷாபிஷா
காதிரி அவுலியா என்பவர் மறைந்த ஆண்டு ஹிஜிரி 1190 எனக் கல்வெட்டில்
பொறிக்கப்பட்டுள்ளது. ஹிஜிரி 1190-ஆம் ஆண்டுக்கிணையான கிறித்துவ ஆண்டு 1770 ஆகும்.
எனவே இந்தத் தர்கா ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகள் பழமையானது.
பெள்ளாதியும் திப்புவும்
தர்காவின் அருகிலேயே வீடமைத்து வாழ்ந்துவருகிறார் அமீர்
பாய் என்பவர். அஞ்சலக அலுவலராய்ப் பணி நிறைவு செய்தவர். எண்பதுக்கு மேல்
அகவையுள்ளவர். அவரைச் சந்தித்துச் சில செய்திகளைப் பெற்றோம். திப்பு சுல்தான் தன்
ஆட்சிக்காலத்தில் பெள்ளாதி வழியாகப் பயணம் செய்துள்ளான். இதுதான் கோவைக்குச்
செல்லும் பெரிய சாலை. தற்போதுள்ள சிறுமுகை ஊரின் வழியே திப்பு வரும்போது அங்கு
முகாமிட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவ்வூருக்கு ”சிறு முகாம்” என்னும் பெயர் அமைந்து நாளடைவில் சிறுமுகை
எனத்திரிந்தது எனவும் கருதப்படுகிறது. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: புக்கானன் தம் பயணக்குறிப்பில் டணாயக்கன்
கோட்டையிலிருந்து [தற்போதுள்ள பவானிசாகர்] சிறுமுகை வழியாகக் கோவை நோக்கிச்
செல்கையில், பெள்ளாதியைக் கடக்கும்போது சாலையிலிருந்து ஊரில் தெரிந்த மண்கோட்டையைக்
கண்டதாகக் குறிப்பிடுகிறார். எனில், புக்கானன் திப்புவின் காலத்திலிருந்த அந்தச்
சாலையிலேயே பயணம் செய்திருக்கவேண்டும் என்பது உறுதியாகின்றது) திப்பு, பெள்ளாதிக்
கோட்டையில் படையோடு தங்கியிருந்துள்ளான். பீரங்கிகளைப் பயன்படுத்த பீரங்கி மேட்டை
அமைத்துள்ளான். அந்தப் பீரங்கிமேடு இன்றும் உள்ளது. காலப்போக்கில் கட்டுமானச்
சிதைவுகள் நிகழ்ந்திருக்ககூடும். தன் படை வீரர்களின் இறைவழிபாட்டு மரபுக்காக,
இந்துக்களுக்கென்று கோட்டை மாரியம்மன் கோயிலையும், இசுலாம் வீரர்களுக்கென்று
தொழுகை வாசலையும் கட்டுவித்துள்ளான். கோட்டை மாரியம்மன் கோயிலைச் சுற்றி அகழி
இருந்துள்ளது.
அமீர் பாய் தம் பள்ளிப்பருவத்தில், தம் ஆசிரியர்கள் மாணவர்களைக்
கோட்டை மேட்டுக்கு அழைத்துப்போவதுண்டு என்றும், அவ்வாறு போன நேரங்களில் அங்கு
பீரங்கிக் குண்டுகளைக் கண்டெடுத்திருப்பதாகவும், அக்குண்டுகள் மிக வழவழப்பாக வெண்ணிறத்துடன்
இருந்தன என்றும் நினைவு கூர்ந்தார். பெள்ளாதியில் இருக்கும் குளத்தைக்
கட்டுவித்தது திப்புதான் என்றும் குளத்துக்குக் கரை எழுப்பும் பணியின்போது, மண்ணை
மிதித்துக் கெட்டிப்படுத்த யானைகள் பயன்பட்டன என்றும் கூறினார்.
துளசி மாடத்தின் பின்னணி
துளசி மாடம் இருக்கும் நிலப்பகுதி பெரிய ஐயர்
என்பாருக்குச் சொந்தமானது. அமீர் பாயின் பாட்டனார் சம்சுதீன் சாஹிப் என்பவர் பெரிய
ஐயரிடம் 120 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். அந்நிலத்துக்குப் பெரிய ஐயர்
தோட்டம் என்னும் பெயரே வழக்கில் இருந்தது. துளசி மாடத்தின் வடிவில் அமைந்த அந்தக்
கட்டுமானம் பெரிய ஐயரின் சமாதி என்று அமீர் பாய் குறிப்பிடுகிறார். பெரிய ஐயர் ஒரு
மத்வாச்சாரியார் வழி நின்ற வைணவப் பெரியாராக இருந்திருக்கலாம். எனவே, மத்வாச்சாரியார்
வழி மரபை ஒட்டித் துளசி மாட வடிவில் கல்லறை கட்டப்பட்டிருக்கக்கூடும். இது ஜீவ சமாதி
என்பதற்கு சான்றில்லை.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
மின்னஞ்சல் : doraisundaram18@gmail.com
மிகவிரைவில் இந்த இடத்திற்கு சென்றுவருவேன். தொடர்ந்து வழிகாட்டுங்கள் ஐயா
பதிலளிநீக்கு