காட்டூர் புதூரில் 188 ஆண்டுகள்
பழமையான தூரிக்கல்வெட்டு கண்டுபிடிப்பு
முன்னுரை
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில்
உள்ளது காட்டூர் புதூர் என்னும் சிற்றூர். இங்கு, கருப்பராயன் கன்னிமார் கோயில்
ஒன்று உள்ளது. இக்கோயிலின் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் அவர்களைத் தொலைபேசியில் அழைத்துத் தம்முடைய
குலதெய்வக்கோயிலில் கல்லால் அமைக்கப்பட்ட தூரியில் (ஊஞ்சலில்) கல்வெட்டு
காணப்படுகிறது என்றும் அதைப் படித்துச் செய்தியைச் சொல்லவேண்டும் என்றும்
கேட்டிருந்தார். அவ்வாறே ஒரு நாள் அவருடன் காட்டூர் புதூர் சென்று கல்வெட்டு
ஆராய்ச்சியாளர் கல்வெட்டைப் படித்ததில் தெரியவரும் செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன:
நாட்டார் வழிபாடும் கருப்பராயன்
கோயிலும்
காட்டூர்
புதூர் கிராமத்தில் அமைந்துள்ள கருப்பராயன் கன்னிமார் கோயில் கொங்கு குறவர்களில்
ஒரு குலத்தவரான சீரங்குளி குலத்தவர்க்குரிய குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது.
தமிழகத்தில், நெடுங்காலமாகக் கருப்பராயன் கோயில்கள் வழிபாட்டில் உள்ளன.
இக்கோயில்கள் பழங்குடிகளின் வழிபாட்டு எச்சமாக நாட்டார் வழக்காறுகளில் அமைந்தவை.
பெருங்கோயில்கள் அரசர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் அரசர்களால் கட்டப்பெற்றவை.
ஆனால், சிறு தெய்வ வழிபாடு அரசு ஆக்கம் உருவாவதற்கு முன்னரே நாட்டார் வழிபாட்டு
மரபில் இருந்துள்ளது. எனவே, நாட்டார் கோயில்கள் மிகப் பழமையானவை என்றே
கூறவேண்டும். அவ்வகையில், பல்வேறு குடியினர் தம் குலங்களுக்குரிய கோயில்களைத்
தனியே அமைத்துக்கொண்டனர். கொங்குப்பகுதியில் பலவேறு அம்மன் கோயில்கள், கருப்பராயன்
கோயில்கள், அண்ணமார் கோயில்கள், அப்பச்சிமார் கோயில்கள் எனப் பலப்பல கோயில்கள்
எழுந்துள்ளன.
காட்டூர் புதூர் கருப்பராயன் கோயில்
காட்டூர்
புதூர், திருப்பூர் மாவட்டம் பொங்கலூர், கொடுவாய் ஆகிய இரண்டு ஊர்களுக்கும்
அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள கருப்பராயன் கன்னிமார் கோயில் எளிய அமைப்புடன்
விளங்குகிறது. சுற்றுச் சுவருடன் கூடிய
ஒரு சிறிய வளாகத்தின் மையப்பகுதியில் இரண்டு கருவறைகளும் அவற்றுக்கு முன்புறம் ஒரு
மண்டபமும் உள்ளன. இவற்றைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் (பிராகாரத்தில்) வலப்புறம் மரத்தடி
மேடையும் மேடைமேல் சிறு சிறு பழிபாட்டுக் கற்களும் அதன் முன்பாக நட்டு வைத்த
வேல்களும், சுற்றுச் சுவரை ஒட்டி ”ஆஸ்பெஸ்டாஸ்” கூரையிட்ட திண்ணை அமைப்பில் ஒரு தங்குமிடமும் உள்ளன. ஒரு கருவறை
கருப்பராயனுக்கும் மற்றது கன்னிமார்களுக்கும் அமைந்தவை. கருப்பராயன் கருவறைக்கு
முன்புறம் கல்லாலான தூரி (ஊஞ்சல்) உள்ளது. ஐந்து அடி உயரத்துக்கு இரண்டு கல்
தூண்கள்; அவற்றை மேற்பகுதியில் இணைக்கும் ஒரு கிடைமட்டக் கல். இரும்புச்
சங்கிலிகள் இரண்டில் பிணைக்கப்பட்ட ஊஞ்சல் மரப்பலகை. இந்த அமைப்பின் இரு
தூண்களிலும் கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. தூண்களின் மீது தொடர்ந்து பூசப்பட்ட
எண்ணெய்ப்பூச்சின் காரணமாக எழுத்துகள் மறைந்திருந்தன. சௌந்தரராஜனும் அவரது தம்பி
பொன்னுசாமி இருவரும் கூடிக் கம்பிப் புருசு கொண்டு தேய்த்துத் தேய்த்து எண்ணெய்ப்
பிசுக்கை நீக்கிய பின்னர், எழுத்துகளின் மீது கடலை மாவைப் பூசித் துடைத்துப்
பார்க்கையில் எழுத்துகள் புலப்பட்டன.
கோயிலின் முகப்புத்தோற்றமும், உட்புறத்தோற்றமும்
கல்வெட்டின் பாடமும் செய்திகளும்
கல்வெட்டு, தூணின் அரை அடி அகலப்பரப்பில் எழுதப்பட்டிருந்தன. எனவே,
இந்தப்பரப்பில் மூன்று அல்லது நான்கு எழுத்துகளே பெரும்பாலும் எழுதப்பட்டிருந்தன.
முதல் தூணில் இருபத்தெட்டு வரிகளும் இரண்டாவது தூணில் இருபத்தெட்டு வரிகளும்
எழுதப்பட்டிருந்தன. பிள்ளையார் சுழியுடன் தொடங்கப்பட்டிருக்கும் கல்வெட்டின் பாடம்
(வாசகம்) கீழ்க்கண்டவாறு:
தூரிக் கல்வெட்டின் தோற்றம்
முதல் தூண்
கலி
யுக சகா
ற்த்த
ம் 4
930
நலன
ந்தன
வருஷ
ம் பங்கி
நி மா
சம் 7
ந் தேதி
சோம
வாரம்
திரியே
தெசி
யும் அ
விட்டமு
ம் கூடி
ய சுப
தினத்
தில் கா
ட்டூர்
கிரா
மம் புரி
லேயி
ருக்கும்
கொர
இரண்டாம் தூண்
ப்பள
னி மக
ன் வை
ய்யான்
கருப்ப
ன் மக
ன் பள
னி செ
ய்த த
ர்மம் கரு
ப்பராய
ன் கன்
னி மா
ற் கல்
த்தூரி
யிது மு
தலா
ன மூ
ன்றும்
செய்து
பிறதி
ட்டையு
ம் செய்
(ய) தூன்
வெற்
றினது
லட்ஷ
க் கவு
கல்வெட்டில் கலியுக ஆண்டு 4930 எனக் குறிக்கப்படுகிறது. இதற்கு
ஈடான ஆங்கில ஆண்டு 1829. எனவே கல்வெட்டின் காலம் கி.பி. 1829. இன்றைக்கு 188
ஆண்டுகள் பழமையானது. கல்வெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ் ஆண்டான நந்தன ஆண்டு
ஆங்கில ஆண்டுடன் பொருந்தவில்லை. பிழையாக உள்ளது. கோயிலில் உள்ள கருப்பராயன்,
கன்னிமார் தெய்வங்களின் சிற்பத் திருமேனிகளையும், கல் தூரியினையும் செய்து
இம்மூன்றையும் நிறுவி (பிரதிஷ்டை செய்து) வைத்தவர் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த குறவர்
பழனி என்பாரின் பேரனாகிய பழனி என்பவர் ஆவார். இடையில் தந்தையின் பெயர் வைய்யான்
கருப்பன் எனக் குறிப்பிடப்படுகிறது.
கொங்கு குறவர்,
பழங்குடியினரான வேடர்/வேட்டுவர் மரபில் வந்தவராவர். இவர்களது குலக்கோயிலாக இந்தக்
கருப்பராயர் கன்னிமார் கோயில் அமைந்துள்ளது. கல்வெட்டின் காலம் கி.பி. 1829-இல்
கடவுளர் சிற்பங்கள் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளதால், அதற்கு முன்னரே எளிமையான
அமைப்பில் பழங்குடியினர் வழிபாட்டு மரபில் கோயில் இருந்துள்ளதை அறியலாம்.
கோயில் நிர்வாகிகளுடன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
குறவர் பழங்குடியினரின் கல்வெட்டுகள் அரிதாகவே உள்ளது
பதிலளிநீக்குதாங்கள் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ஈரோடு பக்கத்தில் கருப்பராயனை குலதெய்வமாக வணங்கும் குறவர் குடும்பங்கள் இன்றும் உள்ளது