மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 20 மார்ச், 2017


              மானாமதுரை வைகையாற்றின் கரையில் இராசராசன் கல்வெட்டு

           அண்மையில், பேராசிரியர் திரு காளைராசன் அவர்கள், மானாமதுரையில் 
வைகைஆற்றில் கிடந்த கல் தூண் ஒன்றை அவ்வூர் மக்கள் எடுத்து வைத்துள்ளதாகவும், அத்தூணில் கல்வெட்டு எழுத்துகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டு, ஒரு தூணின் படத்தைப் பகிர்ந்திருந்தார்.  அக்கல்வெட்டின் வரிகளைப் படித்தபோது அதன் சிறப்பு புலப்பட்டது.
சோழப்பேரரசன் முதலாம் இராசராசனின் கல்வெட்டு அது. முதலாம் இராசராசனின் 
கல்வெட்டு ஒன்றை இனங்கண்டு வெளிப்படுத்தியுள்ள திரு. காளைராசனுக்கு நன்றி பகர்ந்து, கல்வெட்டின் செய்தியை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
                                                     
                                                              முதல் படம்

கல்வெட்டுப் பாடம் - முதல் படம்

ஸ்வஸ்திஸ்ரீ ... ரு ... ச
2 ..த்து வேங்
3 டியுந் தடிகை..
4 செந்த ........
5 முடையார்.......
6 யம்மை
7 .. ஒன்றுக்கு
8 (வா)ழு (பா) செ
9 டு 25 இருபத்..
10 கொண்டு 
11 நெய் அட்டு..
12 (இ)ரு (காசு)


                                                          இரண்டாம் படம்

        

கல்வெட்டுப் பாடம்   இரண்டாம் படம்

1                        ஸ்வஸ்தி
2                       ஸ்ரீ (கோ)
3 ன உடையார் ஸ்ரீ
4 கு யாண்டு 5 ஆ
5 ண்டலத்து  கா
6 (பா) ..தானந்திச்ச
7 (த்த) ஸுப்ரஹ்மண்ய
8 .................................
9 புலியனைச் சாத்(தி)
10 னாராயணனான
11 (செ)ங்குடி நாட்டு
12 தி ச நுந்தாவிள(க்)


கல்வெட்டுச் செய்திகள்

        கல்வெட்டு, முதலாம் இராசராசன் காலத்தது என வரையறை செய்ய  கல்வெட்டிலேயே அகச்சான்று இருக்கிறது. இராசராசனின்  மெய்க்கீர்த்தியில், அவன் வெற்றிகொண்ட நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்பெறும். அவ்வாறு குறிப்பிடப்பெறுகின்ற நாடுகளில், வேங்கை நாடு, கங்கபாடி, தடிகைப்பாடி, நுளம்பபாடி  ஆகியவை அடங்கும். இக்கல்வெட்டில், வேங்கை நாடு, தடிகைப்பாடி  ஆகிய சொற்களின் துண்டுப்பகுதிகள் காணப்படுகின்றன. இராசராசனைக் குறிக்கும் உடையார் என்னும் சொல்லும் இகல்வெட்டில் உள்ளது. தூணின் இரு பக்கங்களில், இரண்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒன்றில் இராசராசனின் ஆட்சியாண்டு ஐந்து என்றும், அடுத்த கல்வெட்டில் ஆட்சியாண்டு இருபத்தைந்து என்றும் உள்ளது. இருபது ஆண்டுகள் இடைவெளியில், ஒரு தூணிலேயே  இருமுறை கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலுக்கு நுந்தா விளக்கு (நந்தா விளக்கு) எரிக்கக் கொடை அளிக்கப்பட்டதை இரு கல்வெட்டுகளுமே  கூறுகின்றன. முதல் கல்வெட்டில் விளக்கெரிக்கக்  கொடுக்கப்பட்ட கொடை, காசுகளாக இருக்கலாம் என்று தோன்றுகிறது . ஆனால், கொடையாளியின் பெயர் தெரியவில்லை. கொடையாகக் கொடுக்கப்பட்ட முதலைக்கொண்டு (CAPITAL), நெய் அளந்து தரவேண்டும் என்னும் குறிப்பு உள்ளது. நெய்யின் அளவு தெரியவில்லை. இரண்டாம் கல்வெட்டிலும் விளக்கெரிக்கவே கொடை அளிக்கப்படுகிறது. ஆனால், கொடை, ஆடுகளா, அல்லது காசுகளா எனத்தெரியவில்லை. கொடை அளிக்கப்பட்டுள்ளது. கொடையளித்தவன் நாராயணன் என்பவனாகலாம். புலியன் என்பானின் நலனுக்காகக் கொடையளிக்கப்பட்டுள்ளது. இது, “புலியனைச் சாத்தி” என்னும் கல்வெட்டுத் தொடரால் அறியப்படுகிறது. (பெரும்பாலும், ஒரு விளக்குக்குத் தொண்ணூறு ஆடுகள் கொடை தரப்படுவதைக் கல்வெட்டுகளில் காண்கிறோம்.)
         கல்வெட்டில், கிரந்த எழுத்துகளும் காணப்படுகின்றன. அவை சிவப்பு வண்ண எழுத்துகளால் காட்டப்பட்டுள்ளன. மற்றவை தமிழ் எழுத்துகள். கிரந்த எழுத்தில் உள்ள  “ஸுப்ரஹ்மண்யம்” என்னும் பெயர், கொடைக்கான (காசுகளை)ப் பெற்றுக்கொண்ட - கோயில்
காணியுடைய - சிவப்பிராமணன் பெயராகவும் இருக்கக் கூடும். உறுதியில்லை.  கல்வெட்டின் பெரும்பகுதி, எழுத்துகள் மறைந்து  போகுமளவு தேய்மானம் கொண்டுள்ளது.

         ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான ஒரு கல்வெட்டைக் கண்ட ஊர்மக்கள், அதில்
உள்ள எழுத்துக்ளைப் பார்த்துக் கல்வெட்டின் சிறப்பை உணர்ந்து பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார்கள் என்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. 

-----------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக