மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியும் ஆனையூரும்


         இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டுவிழா பற்றித் தற்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அவரோடு தொடர்புடைய ஒரு செய்தியை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோவையிலிருந்து திண்டுக்கல் வழியாக உசிலம்பட்டிக்குப் பயணம்   சென்றோம். செல்லும் வழியில் ஆனையூர் என்றொரு சிற்றூரில் பழமையானதொரு கோயில் உள்ளதென்றும், கோயிலில் கல்வெட்டுகள் உள்ளனவென்றும் அறிந்து ஆனையூர் சென்றோம்.

ஆனையூர்
ஆனையூர் ஒரு சிறிய கிராமம். மதுரைப் பகுதியில் பொதுவாக ஒரு சிற்றூர் வெளிப்படுத்தும் எளிய தோற்றத்தைக் கொண்டுள்ளது. நகரத்தின் வாடை சிறிதுமில்லை. நிலமும், மண்ணும், நிலம் சார்ந்த கால்நடைகளும், எளிமையான சிறு வீடுகளுமே காட்சிப்பொருள்கள்.

ஐராவதேசுவரர் கோயில்
இததகைய கிராமச் சூழலில் இங்கே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐராவதேசுவரர் கோயில் அமைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட சுற்றுச்சுவருடன் கோயில் தோற்றமளித்தது. கோயிலின் நுழைவு வாயில் ஒரு முகப்பு மண்டபமாக அமைகிறது. இந்த மண்டபம் பிற்காலக் கட்டுமான அமைப்புடன் இருந்தாலும் அழகான தூண்களைக்கொண்டுள்ளது. அடிப்புறத்தில் சதுரம், சதுரத்தில் நாகபந்தம், உச்சியில் போதிகை, இடைப்பட்ட பகுதியில் (கால் என்று பெயர்) நாகபந்தத்தை அடுத்து வேறு சதுரங்களோ எண்பட்டை அமைப்போ இன்றி நெடியதொரு உருளையும் உருளையில் வரிவரியான வேலைப்பாடும் கொண்ட தூண்கள். உள்ளே, மகா மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என அமைந்துள்ளது. அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய இடங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மண்டபங்கள் இரண்டும் கோயிலின் பழமையை நன்கு எடுத்துக்காட்டுகின்றன.

மூத்ததேவி (ஜேஷ்டாதேவி)
கோயிலின் உட்சுற்றில் ஓரிடத்தில் ஜேஷ்டாதேவி என்னும் மூத்ததேவியின் சிற்பம் அழகுறக் காட்சி தருகின்றது. தேவி தன் இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையிலும், இருபுறமும் உள்ள காளைமுக மாந்தனும், மாந்தியும் தம் கால்களில் ஒன்றைக் குத்திட்டு மடக்கியும், மற்றதைத் தொங்கவிட்டும் அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறார்கள். மூத்ததேவியின் சிற்பத்தை அஞ்சனா தேவியாகவும், மாந்தனின் சிற்பத்தை ஆஞ்சனேயனாகவும் எண்ணி, அவ்வாறே எழுதியும் வைத்துள்ள அறியாமையை என்னென்பது? மாந்தியின் நிலை என்ன?

                        ஜேஷ்டாதேவி என்னும் மூத்ததேவி


                        கோயிலின் முகப்புத்தோற்றம்


                                                                                 முகமண்டபத்தூண்



                                                                                       மகாமண்டபம்




கோயிலுக்கு வெளியே
கோயிலுக்கு வெளிப்புறத்தில்மேடையொன்றின்மீது பிள்ளையார் சிற்பமும், அதன் அருகே பழஞ்சிற்பங்களின் தோற்றத்தில் இரண்டு நந்தி சிற்பங்களும் காணப்பட்டன. இவையெல்லாம் உடைந்துபோன சிற்பங்கள். எனவே, கோயிலின் உட்புறத்தில் வைக்காமல் வெளியில் வைத்துள்ளனர் எனலாம். மற்றொரு நந்திச் சிற்பம் மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. இதுவும் உடைந்த நிலையில் உள்ளது. நாங்கள் பார்க்கும்போது, உயிரற்ற இந்த நந்தியின் அருகில் உயிருள்ள நந்தி ஒன்று அச்சிற்பத்தைப்போன்றே காட்சிக்கோணத்தில் படுத்திருந்தது ஓர் இனிய காட்சி.



நந்தியும் நந்தியும்


கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு சிதைந்த கற்கட்டுமானம் காணப்படுகிறது. ஒரு கருவறை அல்லது அர்த்தமண்டபம் போன்ற தோற்றத்துடனும், கட்டுமானக்கூறுகளுடனும் இருப்பதை நோக்குமிடத்து, இதுவும் இடைக்காலத்தைச் (10/11 நூற்றாண்டு) சேர்ந்தது எனக்கருதலாம். கட்டுமானத்தின் அதிட்டானம் காணப்படவில்லை. நிலத்தின்கீழ் புதைந்துள்ளது. சுவர்ப்பகுதியில், தூண்கள், கோட்டம் (கோஷ்டம்), கும்ப பஞ்சரத்தின் எச்சம் ஆகிய கூறுகள் சோழர் பாணியில் அமைந்துள்ளன. கோட்டத்தில் சிற்பம் ஏதுமில்லை. தூண்கள், உச்சியிலிருந்து பார்க்கும்போது போதிகை, பலகை, தாமரை (பதுமம்), குடம், கலசம் ஆகிய கூறுகளுடன் காணப்படுகின்றன. தூண்களுக்கு மேலே, கர்ணகூடுகளோடு கூடிய உத்தரம் என்னும் பகுதியும் காணப்படுகிறது. 

சிதைந்த கட்டுமானம்


மற்றோரிடத்தில், கோயிலைப் புதுப்பிக்கும்போது களைந்தெறிந்த பழைய தூண்ககளும் இருவரிக் கல்வெட்டுடன் கூடிய ஒரு பாறைத்துண்டும் காணப்பட்டன. கோயில் இறைவற்குப் பன்னிரண்டரை பொற்காசுகள் கொடையாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு வரிகள் கூறுகின்றன.

                                  பழந்தூண்கள்


                       கல்வெட்டுடன் கூடிய பாறைத்துண்டு
                          கல்வெட்டு வரிகள்
                     ...பன்னிரண்டரையுங்கொண்ட...
                     .... இக்காசு பன்னிரண்டரை..


கல்வெட்டுகள்
தஞ்சைத் தமிழ்ப்பல்கலையைச் சேர்ந்த முனைவர். பா.ஜெயக்குமார், “பாண்டிநாட்டின் ஆனையூர் என்னும் நூலில் இக்கோயிலில் உள்ள இருபதுக்கும் மேலுள்ள கல்வெட்டுகளைக் குறிப்பிட்டு அவற்றின் பாடங்களையும் தந்துள்ளார். ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே வட்டெழுத்தில் இருப்பதாக அவர் நூலில் குறித்திருந்தாலும், நான் நேரில் பார்த்தவரையில் மொத்தம் நான்கு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. அவ்ற்றில் ஒன்று மட்டும் முதலாம் இராசராசனின் காலத்தது. மற்ற மூன்றும் சோழன் தலைகொண்ட வீரபாண்டியனுடையவை.  இந்த வீரபாண்டியனின் ஆட்சிக்காலம் கி.பி. 946-966 ஆகும். ஒரு சோழனை இவன் வெற்றிகொண்டிருக்கலாம் என்றும், தோற்கடிக்கப்பட்ட சோழ அரசன் யார் என்பது தெளிவாகவில்லை என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால், இப்பாண்டியனின் தலைகொண்ட சோழ இளவரசன் இராசராசனின் தமையனான இரண்டாம் ஆதித்தன் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். 

                                        சோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் கல்வெட்டுகள்




                      முதலாம் இராசராசனின் கல்வெட்டு - 1


               முதலாம் இராசராசனின் கல்வெட்டு - 1-இன் தொடர்ச்சி


கல்வெட்டுச் செய்திகள்
வீரபாண்டியனின் கல்வெட்டுகளில், ஆனையூர், தென்கல்லக நாட்டைச் சேர்ந்த திருக்குறுமுள்ளூர்  எனக்குறிப்பிடப்படுகிறது. இது ஒரு தேவதானம் என்னும் குறிப்பும் உள்ளது. தேவதானம் என்பது கோயிலுக்கு இறையிலியாக அரசனால் அளிக்கப்பட்ட ஊராகும். இராசராசனின் வட்டெழுத்துக்கல்வெட்டிலும் திருக்குறுமுள்ளூர் என்னும் குறிப்பே உள்ளது. இராசராசனின் கல்வெட்டில் கோயில் இறைவர்க்கு இரவும் பகலும் முட்டாமல் (தடையில்லாமல்) நந்தாவிளக்கெரிக்கக் கொடையளிக்கப்பட்ட செய்தி உள்ளது. வீரபாண்டியனின் கல்வெட்டுகளிலும் விளக்கெரிக்கக் கொடையளிக்கப்பட்ட செய்தியே காணப்படுகிறது. வீரபாண்டியனின் ஒரு தமிழ் எழுத்துக் கல்வெட்டில் நமக்கு யிராச்சியத்தை தந்தருளின நாயனாற்கு என்று வருவதைக்குறிப்பிட்டு மேற்படி நூலாசிரியர், இக்கோயில் இறைவனின் அருளால் பாண்டியர் ஆட்சியை மீண்டும் பெற்றதாகக் கூறுகிறார். ஆனையூர், இடைக்காலத்திலிருந்து விஜயநகர, நாயக்கர் காலங்கள் வரை முதன்மையான ஒரு ஊராக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இன்றோ அது மிகச் சிறிய ஓர் ஊர்.
வட்டெழுத்துக் கல்வெட்டொன்றின் ஒரு பகுதி- படமும் பாடமும்
                                    படம்

பாடம் :
                                                     வரி 1            ண்டு தென்கல்லக
                                                               2            நாட்டு தேவதானமா
                                                               3            ந திருக்குறுமு
                                                                4           ள்ளூர் தேவர்க்கு
                                                                5           அளற்று நாட்டு
                                                                6           கொளத்தூர் மூர்க
                                                                7            விச்சாதிர பல்
                                                                8            லவரையன் ஆன
                                                                9             சாத்தன்

 இசைப்பேரரசியும் ஆனையூரும்
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட செய்தி இப்போது. ஆனையூரில் சிலரிடம் பேசும்போது, அவர்கள் சொன்ன செய்தி மிகவும் வியப்பை அளித்தது. இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் இந்த ஆனையூரில் பிறந்து வளர்ந்தவர் என்றும், அவர் தம் இசை அரங்கேற்றத்தை இந்த ஊரில்தான் நிகழ்த்தினார் என்றும் கேள்விப்பட்ட செய்தி உண்மையிலேயே வியப்பளிக்கும் செய்தி என்பதில் ஐயமில்லை.




து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

1 கருத்து:

  1. தொடர்ந்து உங்கள் பதிவை படித்து வருகிறேன் .கல்வெட்டு பற்றிய செய்தியே முதன்மையாக இருக்கும் உங்கள் பதிவுகளில் இசைப்பேர்ரசி பற்றிய ஒரு புது தகவல் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு