மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 9 ஜூலை, 2016

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  18


கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

கல்வெட்டு  1             கல்லின் முன்புறம்


கல்வெட்டின் பாடம் :

1 யுவ வரு சித்
2 திரை மீ
3 ஸ்ரீ ராமப்ப
4 அய்யனவ
5 ர்கள் காரிய
6 த்துக்குக்கற்த
7 ரான சிதம்
8 பரநாத பிள்ளை
9 பாரபத்தியத்தில்
10 வடபரிசாரநா
11 ட்டு ஒத்தனூரா
12 ன பெரும்பழ
13 னத்துக் காணி
14 யுடைய வெள்
15 ளாழர் மூலர்க
16 ளில் வேலப்ப
17 னும் பாளந்தை
18 களில் உத்தமனு
19 (ம் மேற்படியூர்ச்)
20 ..................................


                                                                 கல்லின் பின்புறம்


கல்வெட்டின் பாடம் :

1 இ நித்த தன்ம
2 ம் பரிபாலன
3 மாக நடத்தின
4 பேரெல்லா
5 ங் காசிராமே
6 சுரம் சேவித்தா
7 பலன் பெறுவ
8 ராகவும் இந்த
9 த்தன்மம் வில
10 கினவர்கள் கெ
11 ங்கைக் கரையி
12 ல்க்காராம்பசு
13 ப்பிராமணன் 
14 மாதாபிதாகுரு
15 இவர்கள் அஞ்
16 சுபேரையுங்
17 கொன்ற தோ
18 ஷத்திலே
19 போகக்கடவ
20 தாகவும் 

குறிப்பு : 

கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலின் குறிப்புகளில், ராமப்பய்யன் அலுவலராகிய சிதம்பரநாதபிள்ளை காலத்தில் வெளியிடப்பெற்ற அரசு ஆணை
என்று கூறப்பட்டுள்ளது. காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு என்று தரப்பட்டுள்ளது.
ராமப்பய்யன் என்பவர் திருமலை நாயக்கரின் படைத்தளபதி ஆவார். எனவே இக்கல்வெட்டு, திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலம் கி.பி. 1623-1659. கல்வெட்டில் வரும் யுவ வருடம்  (அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டு வட்டத்தில் ஒரு ஆண்டின் பெயர்)  என்னும் குறிப்பு 
கி.பி. 1635-ஆம் ஆண்டுடன் பொருந்துகிறது. எனவே, கல்வெட்டின் காலம் சரியாகக்
கி.பி. 1635 எனலாம். இங்கே தரப்பட்டுள்ள கல்வெட்டின் படத்தில் 20-ஆம் வரியிலிருந்து மேலும் ஒன்பது வரிகள் நிலத்தில் புதைந்து போயுள்ளன.
மேற்படி நூலின் குறிப்புப்படி, கொங்கு நாட்டின் வடபர்ரசார நாட்டுப்பிரிவைச்
சேர்ந்த ஒத்தனூரான பெரும்பழனத்து உத்தமசோழீசுவரர் கோயிலுக்கு அபிஷேகம், 
நைவேத்தியம், நந்தாதீபம், சந்தியா தீபம் ஆகியவற்றுக்காக ஊர்ச்சந்தையின் மகமை
வருமானத்தைக் கொடையாக அளித்துள்ள செய்தி தெரியவருகிறது. 
காரியத்துக்குக் கர்த்தரான என்னும் தொடர் நாயக்கர் காலக் கல்வெட்டுகளில்
பெரும்பாலும் காணப்படுகின்ற ஒன்று. வெள்ளாளர்களில், மூலர்கள், பாளந்தைகள்
ஆகிய கூட்டப்பிரிவினர் இருந்துள்ளனர் என்பது அறியப்படுகிறது. 
தன்மத்தைக் காப்பவர், காசி-இராமேசுவரம்  சென்றுவழிபட்ட நன்மையையும், 
தன்மத்தை விலக்கினவர் கங்கைக் கரையில், பசு, பிராமணன், தாய்,தந்தை, குரு
ஆகிய ஐவரைக்கொன்ற தோஷத்தை அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது 
குறிப்பிடத்தக்கது.
பழங்கல்வெட்டுகளில் நல்ல தமிழ்ச்சொற்கள் பயின்றதைப் போலன்றி, 
நாயக்கர் காலக் கல்வெட்டுகளில், காரியகர்த்தர், பாரபத்தியம், அபிஷேகம்,
நைவேத்தியம், பரிபாலனம், சேவித்தல், தோஷம்  ஆகிய வடமொழிச் சொற்கள்
மிகுதியும் காணப்படுவது சிந்தனைக்குரியது. ஆட்சியாளர்களைச் சார்ந்தே மொழி 
வளர்வதும் தேய்வதும் நடைபெற்றுவந்துள்ளது என்பது வரலாற்றுச் சான்றாகும்.
கல்வெட்டில் வரும் பெரும்பழனம் (பெரும்பழன நல்லூர்) தற்போது
பெருமாநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.


------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக