மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கோவைப்பகுதியில் தொல்லியல் சின்னங்கள்
நடுகற்களூம் சிற்பங்களும்


1.       கவுந்தப்பாடி சண்டிகேசுவரர்



      ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருக்கும் விசுவேசுவரசுவாமி-விசாலாட்சி சிவன்கோயில் வளாகத்தில் பழமையான சண்டிகேசுவரர் சிற்பம் காணப்படுகிறது. சிற்பம் அமர்ந்த நிலையில் உள்ளது. இடது காலைத் தரையில் கிடைமட்டமாகக் கிடத்தி, வலது காலைத் தூக்கிக் குத்திட்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். வலது கையில் மழுவை ஏந்தியிருக்கிறா. இடது கையை இடது காலில் பதித்துள்ளார். தலை, நன்கு விரிந்த சடைமண்டலத்துடன் உள்ளது. செவிகளில் குண்டலங்களும் கழுத்தில் தடித்த ஆரமும் உள்ளன. கைகளில் தோள்வளைகளும் முன்கைவளைகளும் உள்ளன. கால்களில் கழல்கள் உள்ளன. முப்புரிநூல் என்னும் உபவீதம் இடது தோளிலிருந்து புறப்பட்டு வலதுபுற வயிற்றுப்பகுதிவரை வந்து பின்புறம் செல்கிறது. சிற்பத்தின் காலம் கொங்குச்சோழர் காலமான கி.பி. 13-ஆம் நூற்றாண்டாக இருக்கக்கூடும்.

2.       கவுந்தப்பாடி  மூத்ததேவி



      மேற்சொன்ன அதே இடத்தில் காணப்படும் மூத்ததேவியின் சிற்பம் அமர்ந்த நிலையில் உள்ளது. இடது காலைக்கிடை மட்டத்தில் வைத்தும் வலது காலைத் தொங்கவிட்டவாறும் அமர்ந்திருக்கிறாள். தலையலங்காரம் சடைமுடியா அல்லது கிரீடமுடியா என்று இனம் காண இயலவில்லை. கழுத்தில் ஆரம் உள்ளது. செவிகளில் தடித்த காதணிகள். இடது முன்கையில் வளை காணப்படுகிறது. வலது கையில் உள்ள பொருள் இன்னதென்று தெளிவாகப் புலப்படவில்லை. மூத்ததேவிக்கே உரிய காக்கைக் கொடியாகவோ, துடைப்பமாகவோ இருக்கலாம். இடது கை இடது தொடையில் இருத்தப்பட்டுள்ளது. தேவியின் வலப்பக்கத்தில் காளை முகத்துடன் கூடிய மாந்தனின் உருவமும் இடப்பக்கத்தில் மாந்தியின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளன. இருவரின் அமர்ந்த கோலமும் தேவியின் கோலத்தை ஒத்துள்ளது. இருவரின் வலக்கைகளிலும் இருப்பன எவை எனத்தெரியவில்லை. மாந்தியின் மார்பில் கச்சு காணப்படுகிறது. தேவியின் உருவத்தில் கச்சு இல்லை.மூவரின் கால்களின் கீழ்ப்பகுதி மண்ணுக்குள் புதைந்த சிற்பப்பகுதியில் மறைந்துள்ளது.

3         குறிஞ்சேரி முருகன் சிற்பம்



உடுமலை வட்டம் குறிஞ்சேரி ஊரில் தற்போது விநாயகர் கோயில் என்றழைக்கப்படும் கோயில் வளாகத்தில் அழகிய தோற்றத்தில் முருகனின் சிற்பம் நின்ற கோலத்தில் உள்ளது. சிங்கமுகத்துடன் கூடிய திருவாசியுடன் காணப்படுகிறது. வழிப்பாட்டுக்குரியதாகக் கோயிலின் உள்ளே இருந்த சிற்பம் இன்று வெளியே பாதுகாப்பின்றி உள்ளது. உடன் வள்ளி, தெய்வானை தேவியர் சிற்பங்கள் உடைந்துவிட்ட நிலையில் மார்புப்பகுதிவரை காணப்படுகின்றன. மயில் சிற்பம் முழுதாக உள்ளது. முருகனின் முகத்தில் சற்றே சிதைவு உள்ளது. அழகான பீடத்தில் இவை கிடத்தப்பட்டுள்ளன. பீடத்திலிருந்து பெயர்த்துவிட்டனர் எனத்தெரிகிறது. ஊர்ப்பூசல் ஒன்றின் காரணமாக இச்சிற்பங்கள் பெயர்க்கப்பட்டன எனக்கூறப்படுகிறது. அணிகலன்கள், ஆடை அமைப்பு என அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த சிற்பங்கள். கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.
    
4         நாதம்பாளையம் நடுகல் சிற்பம்



திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகில் நாதம்பாளையம் என்னும் கிராமத்தில் காணப்படும் இந்த நடுகல் சிற்பத்தில் வீரன் தன் இடது கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு இருப்பதுதான் இப்பகுதியில் இதுவரை பார்த்த நடுகற்களினின்றும் இந்நடுகல்லை வேறுபடுத்திக்காட்டுகிறது. அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. சிதைவுகளின்றித் தெளிவாகவும் முழுமையாகவும் உள்ள சிற்பம். நாயக்கர் காலப்பாணியில் பெரிய தலைக்கொண்டை; நீண்ட செவிகளும் அவற்றில் த்டித்த காதணிகளும் உள்ளன. கழுத்தை ஒட்டிய கழுத்துச்சரமும், அதனை அடுத்துப் பதக்கத்துடன் கூடிய ஆரமும் தோள்வளையும், கைவளையும், கால் கழலும் சிற்பவடிவை அழகுசெய்கின்றன. வீரனின் வலது கையில் உள்ள ஆயுதம் ஒரு வேல்கம்பாக இருக்கக்கூடும். முழங்காலுக்குச் சற்று மேலே வரை ஆடை உடுத்தியுள்ளான். இடை ஆடையின் இருபுறமும் ஆடைத்தொங்கல்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி, புழக்கத்துக்கு வந்த காலகட்டமாக இருக்கவேண்டும்.

5         பாப்பம்பட்டி நினைவுக்கல் சிற்பம்



கோவை வட்டம் கோவில்பாளையம் அருகில் பாப்பம்பட்டியில் உள்ள கருகாளியம்மன்கோவில் வளாகத்தில் ஒரு நினைவுக்கல் சிற்பம் உள்ளது. சிற்பத்தை மேடைத் தளத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். இது மக்கள் வழிபாட்டில் உள்ளது. இச்சிற்பத்தில் ஆணும் பெண்ணும் நின்ற நிலையில் கைகளைக் கூப்பி வணங்கும் நிலையில் காணப்படுகிறார்கள். இருவரின் தலைக்குமேல் சிங்கமுக நாசி கானப்படுகிறது. ஆணின் தலைமுடி தெளிவாக இல்லை. கொண்டை அமைப்பு காணப்படவில்லை. பெண்ணின் தலைமுடியில் வலதுபுறமாகச் சரிந்த கொண்டை உண்டு. செவிகள் நீண்ட அமைப்பைக்கொண்டுள்ளன. செவிகள், கழுத்து, தோள்கள், கைகள் ஆகியவற்றில் அணிகள் மிக எளிமையான தோற்றத்தில் உள்ளன. ஆணின் வலது கையில் மட்டுமே தோள்வளை உள்ளது. இடது கையில் தோள்வளையும், முன்கையில் கைவளைகளும் இல்லாதது குறிப்பிடத்தக்கது. பெண்ணின் கைவளை பட்டையாக வேலைப்பாடுடன் உள்ளது. இருவரின் ஆடைகளும் பாதம் வரையில் உள்ளன. ஆனால்,  மடிப்புகள், கச்சைகள் ஆகியன இல்லாது மிக எளிமையாக வடிக்கப்பட்டுள்ளன. பெண்ணின் ஆடையில் மட்டும் இருபுறமும் தொங்கல்கள் காணப்படுகின்றன. ஆணின் வலது புறம் இரு முனைகளைக்கொண்ட சூலம் போன்ற ஓர் ஆயுதம் நிறுத்தப்பெற்றுள்ளது. இச்சிற்பம் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.


6         துங்காவி நினைவுக்கல்  சிற்பம்




உடுமலை அருகே துங்காவி என்னும் ஊரில் அமராவதி ஆற்றின் வாய்க்கால் உள்ளது. அதன் அருகே, ஒரு சிறிய செங்கல் கட்டுமானக்கோயில் உள்ளது. அக்கோயிலின் கருவறைக்கு அருகிலேயே, ஒரு சிறிய மாடம் மூடு அமைப்பினுள் ஆணும் பெண்ணுமாக இருக்கும் புடைப்புச் சிற்பமாக ஒரு நினைவுக்கல் உள்ளது. சிற்பம் அழகாக உள்ளது. இடுப்பளவு மட்டுமே உருவங்கள் தெரிகின்றன. மீதிப்பகுதி நிலத்துள் புதைந்து கிடக்கின்றது. உருவங்களின் தலைப்பகுதிக்கு மேலே மாலை போன்ற ஒரு தோரண அமைப்பு காணப்படுகிறது. ஆணும் பெண்ணும் இருவரும் கை கூப்பிய நிலையில் உள்ளனர். ஆண் தன் இடது பக்கமும், பெண் தன் வலது பக்கமும் கொண்டை முடியுடன் உள்ளனர். செவிகள், கழுத்து, கழுத்தை ஒட்டிய தோள்பகுதி மற்றும் கைகளில் அணிகலன்கள் அழகுறக் காணப்படுகின்றன. நிலத்தில் புதைந்த காரணத்தால் இடைப்பகுதியின் ஆடை அமைப்பை அறிய இயலவில்லை. சிற்பத்தின் காலம் தெரியவில்லை. 16-ஆம் நூற்றாண்டாக இருக்கக்கூடும்.


7         கோதவாடி தாய்த்தெய்வச் சிற்பம்



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்        கோதவாடி. தார்ச் சாலையின் ஓரத்தில் ஒரு சிறிய மரத்தடியில் அச்சிற்பம் இருந்தது. அது ஒரு பெண்ணின் சிற்பம். இரண்டடி உயரத்தில் சிறியவடிவம். பெண் தன் கையில் ஒரு குழந்தையை வைத்திருக்கிறாள். அவளது உடலை ஒட்டிய நிலையில் உடலின் இருபுறமும் பெண்ணை முட்டுகின்ற தோற்றத்தில் இரு மாடுகளின் உருவங்கள். பெண்ணின் தலை கொண்டை முடிந்த தோற்றம். காதுகளில் காதணிகள் உள்ளன. கைகளில் வளைகள் காணப்படுகின்றன. கணுக்கால் வரையிலான ஆடை. சிலையின் அருகில் மண்ணாலான ஒரு விளக்கு மாடம். சிலை முழுதும் ஆங்காங்கே திருநீற்றைப் பூசிக் குங்குமம் இட்டிருக்கிறார்கள். மக்கள் வழிபாட்டில் அச்சிலை உள்ளதுஊர் மக்கள், இச்சிலையை ஒட்டாலம்மன் என்னும் பெயரிட்டு வணங்கி வருகின்றனர். கருவுற்ற போயர்குலப்பெண் ஒருத்தி மாடுமேய்க்கும்போது மாடு பாய்ந்து இறந்து போனதாகவும் அவளே ஒட்டாலம்மன் என்னும் சிறுதெய்வமாக வழிபடப்படுகிறாள் என்பது ஒரு செவி வழிச்செய்தி. மற்றொரு செவிவழிச்செய்தியில், வேளாண்பணிக்குச் சென்ற கணவனுக்கு உணவு எடுத்துச் செல்லும் வழியில் கருவுற்ற அப்பெண் மாடு முட்டியதால் இறந்து போகிறாள். குழந்தையைக் கருவில் சுமந்த நிலையில் இறந்துபோவதால் குறியீட்டாகக் கையில் குழந்தையுடன் சிலையை வடித்துள்ளனர். சிலையை வடித்துவைத்தவர் மாகாளி ஆச்சாரி என்னும் சிற்பி என்பது ஒரு செய்தி.                                                                                                                
                                                                                                                      
8         கண்ணாடிப்புத்தூர் ஐயனார் சிற்பம்



உடுமலையை அடுத்துள்ள கண்ணாடிப்புத்தூரில் முள்மரங்களும் புதர்ச்செடிகளும் நிறைந்த ஓரிடத்தில் ஐயனார் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது. ஒரு பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட ஐயனார் சிற்பம் அமர்ந்த நிலையில் உள்ளது. வலது காலைக் கிடை நிலையில் வைத்தும், இடது காலை உயர்த்தி மடக்கியும் அமைந்துள்ளது. தலைப்பகுதி ஜடா மண்டலத்துடன் காணப்படுகிறது. காதில் பத்திர குண்டலமும் கழுத்துப்பகுதியில் கழுத்தை ஒட்டியவாறு தடித்த கழுத்தணி ஒன்றும் கழுத்தின் கீழ், தொங்கிய நிலையில் ஆரம் ஒன்றும் காணப்படுகின்றன. வலது கையில் செண்டு வைத்திருக்கிறார். இடது கையை மடக்கிய நிலையிலிருக்கும் இடது காலின்மீது பதிய வைத்திருக்கிறார். கைகளில் தோள் வளையும், முன்கை வளையும் உள்ளன. மார்பின் குறுக்காக இடது தோளிலிருந்து கீழாகச் சரிந்து இடையின் வலப்பகுதியில் வளைந்து பின்னோக்கிப்பொகும் உபவீதம் என்னும் முப்புரி நூல் தடித்துக் காணப்படுகிறது. உயர்த்தி மடக்கிய இடது காலையும் வயிற்றுப்பகுதியையும் சேர்த்துப் பிணைக்கும் நிலையில் யோகப்பட்டை உள்ளது. இடையில் இடைக்கச்சு காணப்படுகிறது. தொடை மற்றும் கால் பகுதியில் ஆடை இருப்பது தெளிவாகப் புலப்படவில்லை. வலது காலில் கணுக்கால் பகுதியில் கழல் அணிந்திருப்பது போல் தோன்றுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 94449939156

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக