மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 19 ஜனவரி, 2016

                                   கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-13

          மீண்டும் தஞ்சைக்கோயிலின் ஓரிரு கல்வெட்டுகளைக் காண்போம்.
இவை, கோயிலின் சுற்று மாளிகையின் தூண்களில் இருப்பன. விமானத்தின்
அதிட்டானப்பகுதியில் உள்ள கல்வெட்டுகளைக்காட்டிலும் இவற்றில் அழகும் திருத்தமும்  குறைவு.

கல்வெட்டு-1
                                 பதினாறு வரிகள் கொண்ட இக்கல்வெட்டு, தூணின் ஒரு முகத்தில்  உள்ளது. கொடையாளி, இறைவரின் செப்புத்திருமேனி ஒன்றையும் அதன் பீடத்தையும் அளித்து,  உருத்திராக்கம் (ருத்ராக்‌ஷம்) ஒன்றைப் பொன்கொண்டு பொதித்தளித்திருக்கிறார்.
             கல்வெட்டின் படத்தை உருப்பெருக்கம் செய்து எழுத்துகளைச் சற்றே
ஊன்றிப்பார்த்துப் படிக்க. கல்வெட்டின் பாடம் கீழே தரப்பட்டுள்ளது.




கல்வெட்டின் பாடம்;

1           விரல் நீளத்து எ
2           ண் விரல் அகலத்
3           து எண் விரலுசர
4           த்து பத்மத்தோடு
5           ங்கூடச்செய்த பீ
6           டம் ஒன்று இவ
7           னே இவர்க்குக்
8           குடுத்தன ருத்ரா
9           க்‌ஷம் ஒன்றிற் கட்
10         டின பொன் ஏழு ம
11         ஞ்சாடி உட்பட ருத்ரா
12         க்‌ஷம்  ஒன்று நிறை அ
13         ரைக் கழஞ்சே நா
14         லு மஞ்சாடியுங் கு
15         ன்றிக்கு விலை காசு
16         ஒன்று


குறிப்பு:
1  செப்புத்திருமேனியின் நீள,அகல, உயரங்கள் தரப்பட்டுள்ளன. உசரம்=உயரம்
(யகர, சகர மயக்கம்.)
விரல்-பெருவிரல் அளவு.
12 விரல்=ஒரு சாண்.

2   பொன்னின் நிறை கழஞ்சு, மஞ்சாடி ஆகிய அளவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
மஞ்சாடி= இரண்டு குன்றிமணி எடை
20 மஞ்சாடி= ஒரு கழஞ்சு

3   நீல வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகளைக்குறிப்பன.
    ( பத்ம பீடம், ருத்ராக்‌ஷம்)

கல்வெட்டு-2
                          இதுவும் ஒரு தூண் கல்வெட்டு.  இருபத்து நான்கு வரிகளை
உடையதாய் முழுச்செய்தியைச் சொல்லும் கல்வெட்டு. ஆறு படங்களாகக்
காட்டப்பட்டுள்ளது. எழுத்துகளைப்படிக்கும் பயிற்சிக்கு உகந்தது எனக்கருதுகிறேன்.  முதலாம் இராசராசனின் அதிகாரிகளுள் புரவுவரித் திணைக்களம் என்னும் துறையில் வரிப்பொத்தக நாயகன் என்னும் பதவியிலிருக்கும் காஞ்சன கொண்டையன் என்பவன் தஞ்சைக்கோயிலின்
சிறு தேவதைகளுக்கான பரிவாரக்கோயிலில் கணபதிப்பிள்ளையார்க்கு
இருபத்தொன்பது பலம் நிறையுள்ள வெண்கலத் தளிகையைக் கொடையாக
அளித்த செய்தியைக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

முதல் படம்:

பாடம்:
ஸ்வஸ்திஸ்ரீ உடை
யார் ஸ்ரீ ராஜராஜீ
ச்0வரம் உடையா

இரண்டாம் படம்:

பாடம்:
ர் கோயிலில் பரி
வாராலயத்துப்
பிள்ளையார் க3ண
பதியார்க்கு உடை

மூன்றாம் படம்:

பாடம்:
யார் ஸ்ரீ ராஜராஜ
தே3வர் பணிமக
ன் புரவுவரி திணை

நான்காம் படம்:

பாடம்:
க்களத்து வரிப்பொ
த்தக நாயகன் பா
ண்ட்3ய குலாச0நி
ள நாட்டுப் புறக்கிளி
யூர் நாட்டுக் காமத

ஐந்தாம் படம்:

பாடம்:
மங்கலமுடையா
ன் காஞ்சன கொண்
டையன் உடையார் ஸ்ரீ
ராஜராஜதே3வர்க்கு யா

ஆறாம் படம்:

பாடம்:
ண்டு இருபத்தொன்ப
தாவது வரை குடுத்த
வெண்கலத்தளிகை
ஒன்று நிறை இருப
த்தொன்பதின் பலம்

குறிப்பு:
                  1      நீல வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகளைக்குறிப்பன.
                  2      புரவுவரித் திணைக்களம் - அரசு வருவாய்(வரி)த்துறை.
                  3      வரிப்பொத்தக நாயகன் - அரசு வரிக்கணக்குப்
                          பதிவேட்டுத்துறை மேலலுவலர்.
                  4      தளிகை - உண்கலம் (தட்டு).
                  5     பலம் - ஓர் எடை.


து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக