மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கொங்கு நாட்டுப்புறக்கலைகள்
(முனைவர் சி.மா. இரவிச்சந்திரன் அவர்களின் சொற்பொழிவு)


         அண்மையில் கோவை வாணவராயர் அறக்கட்டளை சார்பில் முனைவர் சி.மா.இரவிச்சந்திரன் அவர்கள் “கொங்கு நாட்டுப்புறக்கலைகள்என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிலிருந்து சில கருத்துகள்.

         நாட்டுப்புறக்கலை என்றவுடனே முதலில் நமக்குத் தோன்றும் எண்ணம், அது கிராம மக்களின் கலை; பாமர/படிப்பறிவிலாத மக்களின் கலை என்பதாகவே இருக்கும். உண்மையில் நாட்டுப்புறக்கலை என்பது கிராமம் சார்ந்த கலை அல்ல. அது மக்கள் சார்ந்த கலை; மக்கள் குழு சார்ந்த கலை. சற்றே விரித்தால், அது மக்கள் குழு சார்ந்த அழகியல் கலை வடிவமாகும். நாட்டுப்புறம் என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது கூட மக்களோடு தொடர்பு படுத்தி “FOLKLORE என்றே அழைக்கிறார்கள். (FOLK=மக்கள்/மனிதர்). நாட்டுப்புறக்கலைகளை இருவகையகப்பிரிக்கலாம்.
  1. வாய்மொழி சார்ந்த கலைகள். (VERBAL)
  2. வாய்மொழி சாராத கலைகள். (NON-VERBAL)
தாலாட்டு போன்றவை வாய்மொழி சார்ந்தகலைகளில் அடங்கும்.
சடங்குகள் போன்றவை வாய்மொழி சாராத கலைகளில் அடங்கும்.

         வாய்மொழி சாராத கலைகள் பற்றி இங்கு பார்ப்போம். இவ்வகைக் கலைகளில் சில பொருள் சார்ந்தவை. எடுத்துக்காட்டாக, கோலமிடுதல், பொம்மைகள் செய்தல் போன்றவை. சில கலைகள் நிகழ்கலைகள் என்னும் வகையில் சேரும். நிகழ்கலைகள் ஆங்கிலத்தில் PERFORMING ARTS  எனச் சுட்டப்பெறும். நிகழ்கலைகளில், நிகழ்த்துகின்ற கலைஞர்களும் உண்டு; பார்வையாளர்களும் உண்டு. சில கூறுகளை அடிப்படையாக வைத்து நிகழ்கலைகளுக்குப் பெயரிடுதல் அமையும். காட்டாக, கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் ஆகியன பொருள் மற்றும் கருவி சார்ந்த பெயர்கள் ஆகும். நிகழிடம் ஒரு கூறாகக் கொண்டது தெருக்கூத்து ஆகும். சில கலைகளின் பெயர் சாதியை அடிபடையாகக் கொண்டமையும். கொங்கில் நிகழ்த்தப்பெறும் அண்ணமார் கதை அவ்வகையானது. பறை போன்றவை இசைக்கருவியின் பெயர் கொண்டன. பாட்டுக்காகவும், அரங்கத்துக்காகவும் சில பெயர்கள் அமையும். சிலம்பாட்டம் (இது சலங்கையாட்டம் எனவும் வழங்கும்) என்பது பாட்டுக்கேற்ப ஆடும் கலை. கொங்கு நாட்டில் மட்டுமே சலங்கையாட்டம் காணப்படுகிறது. பத்து அல்லது பதினைந்து கிலோ எடையளவு நிறையச் சலங்கைகளைக் காலில் கட்டிக்கொண்டு பத்து அல்லது இருபது பேர் ஆடுவது சலங்கையாட்டம்.
கும்மி: சங்க இலக்கியத்தில் கும்மி பற்றிய குறிப்புள்ளது. கொம்மைகொட்டுதல் என இலக்கியம் கூறுகிறது. கொம்மை, கும்மியாகத் திரிந்திருக்கலாம். சங்க இலக்கியத்தில் பேசப்பெறும் குரவை, கும்மியை ஒத்தது. கும்முதல், கும்மாளம் என்னும் சொற்களை நோக்குக. கும்மி, சில இடங்களில் கொண்டாங்கொட்டுதல், நன்னணா கொட்டுதல் என அழைக்கப்படுகிறது. தமிழகம் முழுமையும் கும்மி என்னும் ஆட்டக்கலை காணப்பட்டாலும், கொங்கு நாட்டில் அது தனித்தன்மையோடு விளங்குகிறது. கும்மிக்கான எழுத்திலக்கியத்துக்கு வரையறைகள் உள. சீர்கள் ஏழு அல்லது எட்டு எனவும், இறுதிச்சீர் “விளங்காய் எனவும் இருக்கவேண்டும். ஆனால், நாட்டுப்புறக்கும்மியில் வரையறை ஏதுமில்லை. கை கொட்டுதல், நகர்தல் ஆகியன கும்மியின் கூறுகள்.

         நிலாச்சோறு படைத்துப் பகிர்ந்து உண்ணும் ஒரு நிகழ்வில் கும்மிக்குப் பங்குண்டு. பழநி தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக் காலங்களில் கும்மி தவறாது இடம்பெறும். கொங்குப்பகுதியில் விழாக்களை நோம்பி”  (நோன்பு) என அழைப்பது மரபு. அது போன்ற ஒரு நோன்புதான் பட்டி நோம்பி”  என்பது. அதிலும் கும்மி இடம்பெறுதலைக் காண்கிறோம். கொங்கில் “நோம்பி என்பதை நெல்லையில் கொடை எனக்குறிப்பிடுகிறார்கள். கொங்கில் மார்கழித் திங்களில் வீட்டு வாசல்களில் சாணிப்பிள்ளையார் வைத்துக் கும்மியாடல் நிகழ்த்துவர். இதற்கெனத் தனியே பாட்டு உண்டு. ஒரு பாட்டு “வட்ட வட்டபிள்ளையாரேஎனத்தொடங்கும். அதுபோலவே, தைத் திங்களில் பூப்பொங்கல் என்றொரு நிகழ்வு; ஆற்றங்கரையில் கும்மி அடிப்பர். பாட்டு,  ஓலையக்கா கொண்டையிலேஎனத்தொடங்கும். ஓலையக்காபாட்டு கொங்கு நாட்டின் தனிச்சிறப்பு.

         மாரியம்மன் திருவிழாவின்போது தீமிதித் திருவிழாவும் நடைபெறும். இந் நிகழ்விலும் கும்மி அடிப்பர். மற்றுமொரு கும்மி சற்றே மாறுபட்ட ஒன்று. “இழவுக்கும்மிஎன்னும் இது சாவுடன் தொடர்புள்ளது. (தமிழகத்தில் வேறு பகுதிகளில் காணப்படும் “மாரடிப்பாட்டுஎன்பது வேறு.) கொங்கு நாட்டு அந்தியூரில் வாழைமரம் கொண்டு செய்த தேரினை நடுவில் வைத்துக் கும்மி அடிப்பர்.

         ஒற்றைக்கும்மி, இரட்டைக்கும்மி என கும்மியாட்டத்தில் இருவகையுண்டு. கை கொட்டுதலில் மூன்று அடி ஒலித்தால் ஒற்றைக்கும்மி; இரண்டு அடி ஒலித்தால் இரட்டைக்கும்மி. இவ்விருவகைக் கும்மியாட்டங்களும் பெண்கள் ஆடுவன. ஆண்கள் ஆடுவன ஒயில்கும்மியும், வள்ளி கும்மியும் ஆம்.  பெண்கள் ஆடும் ஆட்டத்தில் ஆண்கள் இணைந்துகொள்வதுண்டு. ஆனால், ஆண்கள் ஆடும் ஆட்டத்தில் பெண்கள் இடம் பெறுவதில்லை. பெண்கள் கும்மியில் சலங்கை மற்றும் இசைக்கருவி இல்லை. கும்மியில், வட்டமாக நகர்தல் மற்றும் வலப்புறமாக நகர்தல் ஆகியன குறிப்பிடத்தக்க கூறுகள். கொங்கு நாட்டில் தனித்துவமான கும்மிப்பாட்டு வள்ளிகும்மி ஆகும். கும்மிப்பாடல்களை ஒருவரே பலமணி நேரம் பாடுகிறார். பலமணி நேர அளவைக் கையாள அவர்கள் பின்பற்றுவது பாடல்களில் ஒரே பொருண்மையைத் திரும்பத்திரும்பச் சொல்லும் பாணி. திசைப்பெயர்களோ ஊர்ப்பெயர்களோ எண்ணுப்பெயர்களோ அடுத்தடுத்து வருமாறும் செய்தி ஒன்றாயிருக்குமாறும் பாடல்கள் அமையும். ஒரு கோழிக்குஞ்சைப் பிடித்தலையும் பிடித்த கோழியை அறுத்துக் குழம்பு வைப்பதையும் ஒரு கும்மிப்பாடல் வடிவில் நிகழ்த்திக்காட்டுவது மக்கள், கற்பனையைக் கலையாக மாற்றும் திறனன்றி வேறென்ன?

         அந்தாதி முறையில் பாடல்கள் அமைவதும் உண்டு. ஒப்பாரிப்பாடல்கள் அழகானவை.

பொம்மலாட்டம் : அரங்கம் சார்ந்த கலைகளில் பொம்மலாட்டமும் ஒன்று. பொம்மலாட்டம் உலகம் தழுவிய ஒரு கலை. ஆனால், வரலாறு தமிழில் மட்டுமே உண்டு. சங்க இலக்கியங்களில் பொம்மலாட்டம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வெறிபாடிய காமக்கண்ணியார் என்ற பெண்பாற்புலவர் தம் பாட்டில்,
           “கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை
எனக் கூறுவது பொம்மலாட்டத்தைக் குறிக்கும். தோல்பாவை பற்றி மணிவாசகர் தம் பாட்டில் குறிப்பிடுகிறார். மரப்பாவை பற்றியும் சங்கப்பாடல் குறிப்பு உள்ளது. பொம்மலாட்டம் மூன்று வகையாக நிகழ்த்தப்பெறுகிறது. முதலாவது கையுறை பொம்மலாட்டம். கைவிரல் பகுதி மறைந்திருக்கும்படி பொம்மையைக் கையில் பிடித்து, கையை அசைப்பதன் மூலமாகவே நிகழ்த்தப்படுவது. (இவ்வகை ஆட்டம் கேரளாவில் பாவைக்கைஎன அழைக்கப்படுகிறது. ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் ஆகிய இடங்களிலும் இந்த ஆட்டம் உண்டு.) இரண்டாவது, குச்சியின் மேல்புறம் பொம்மை அமைத்து நிகழ்த்துவது (ROD PUPPET). இதனுடைய ஒரு தோற்றத்தைச் சென்ற நூற்றாண்டில், ஊருக்குள் வரும் மிட்டாய்க்காரர் கையில் பார்க்கலாம். நீண்ட ஒரு குச்சியின் உச்சிப்பகுதியில் வண்ண ஆடையுடன் கூடிய ஒரு பொம்மை. அதன்கீழ், குச்சியை வட்டமாகச் சூழ்ந்து இணைத்த நெகிழ்வான வண்ண மிட்டாய்ப்பகுதி. குழந்தைகள் விரும்புகிறவாறு கடிகாரம் போன்ற வடிவில் மிட்டாயை இழுத்து வளைத்து மிட்டாய்க்காரர் தருவதைப் பார்த்திருக்கலாம். மூன்றாவதாக, தோல் பொம்மலாட்டம். ஆந்திராவில் ஆண்கள், ஆளுயரத்தோல்பாவையை வைத்து நின்றுகொண்டு நிகழ்த்துவர். தோல்பாவை நல்ல நிறங்களில், வெளிச்சத்தில் பளிச்சிடும். கரு நாடகத்தில் யக்‌ஷகானத்தைத் தோல் பொம்மலாட்டமாக நிகழ்த்துவர். தமிழ் நாட்டில் கலைஞர்கள் காலில் கட்டை, கையில் சலங்கை கட்டிக்கொண்டு தோல்பாவை பொம்மலாட்டத்தை நிகழ்த்துவர். கட்டையும் சலங்கையும் ஒலிக்காகவே. ஒரே ஆள் பல உருவங்களுக்குக் குரலை மாற்றிப் பல்வேறு கதைப்பாத்திரங்களைச் செய்துகாட்டுவர். தமிழகத்தில் இக்கலையை நிகழ்த்துபவர்கள் பெரும்பாலும் “ராவ்”  இன மக்களாவர். இவர்கள் மராட்டியத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர். கேரளாவிலும் இவர்களே இக்கலையை நிகழ்த்துகின்றனர். கேரளக் கோயில்களில் இக்கலை, சடங்காகவே நடைபெறுகிறது.

         கும்பகோணத்தில் சங்கீத பொம்மலாட்டம் என்றொரு ஆட்டம். இதில், தலையில் பொம்மையைக் கட்டித்தொங்கவிட்டுக் கைகளால் இயக்குவர். இந் நிகழ்ச்சியில் பாடுபவர்களும் தனியே இருப்பர். சேலம் பகுதியில், தெருக்கூத்தையே பொம்மலாட்டமாக நிகழ்த்துகிறார்கள். ஆர்மோனியம், முகவீணை போன்ற இசைக்கருவிகளையும் பயன்படுத்துவர். நகைச்சுவைக்காகக் கோமாளிப்பொம்மை ஒன்று இதில் இடம்பெறுவதுண்டு. இது குட்டையான ஒரு பொம்மை.

அண்ணன்மார் கதை : கொங்குப்பகுதியில் சிறப்பாக நிகழ்த்தப்பெறும் கூத்து. வேளாளருக்கும் வேட்டுவருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு போராட்டமாக இக்கதை கருதப்படுகிறது. வலங்கை-இடங்கைப் போராகவும் இது நோக்கப்படுகிறது. நில உடைமையாளர்கள் வலங்கைப்பிரிவினராகவும் கைவினைக் கலைஞர்கள் இடங்கைப்பிரிவினராகவும் எண்ணப்படுகின்றனர். பெண்களின், குறிப்பாகத் தங்கையரின் துன்பியல் கதையாக இதைக்கொள்ளலாம். அண்ணன்மார் குலதெய்வமாகவும் காவல்தெய்வமாகவும் வணங்கப்பெறுகின்றனர். தெருக்கூத்துப்போலவே உடுக்கை அடித்தவாறும் கைதட்டியவாறும் நிகழ்த்தப்படுகிறது. அண்ணன்மார் கதையில் “படுகளம் என்பது முதன்மையானது. தீயசக்திகள் அழிக்கப்படுவது படுகளம் ஆகும். காட்டாக, சூரன் வதைபடுவது சூரன் படுகளம் என்றும், துரியோதனன் அழிக்கப்படுவது துரியோதனன் படுகளம் என்றும் வழங்கப்படுகின்றன. ஆனால், இதற்கு மாறாக அண்ணன்மார்கதையில் கதைத் தலைவர்களான பொன்னர் சங்கர் தற்கொலை செய்துகொள்ளும் இடமாகப் படுகளம் அமைகிறது. படுகளத்தைக் காட்டும் வகையில், அண்ணன்மார்கதைக்கூத்தில் நூறு, நூற்றைம்பது பேர் படுத்துக்கிடப்பதுபோல் அமைத்து அவர்கள்மேல் வெள்ளைத்துணி போர்த்தப்பெறும். மேற்கில் தலையும், கிழக்கில் காலும் இருப்பதுபோல் படுகளம் அமைப்பது மரபு.

         இறுதியாக, நாட்டுப்புறக்கலை பற்றி முதன்முதலாக ஆய்வு செய்து செய்திகளைக் கொங்குப்பகுதியில் வெளிக்கொணர்ந்தவர் கோவைக்கிழார் அவர்களே.



கட்டுரையாக்கம்:
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை. அலைபேசி: 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக