மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 1 ஏப்ரல், 2015

உடுமலை-கல்லாபுரம் தூண் கல்வெட்டு
                                                       து.சுந்தரம், கோவை.



         உடுமலை அமராவதி அணைக்கு வெகு அண்மையில் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கல்லாபுரம். சூழலில் பசுமை எழில்.  கல்லாபுரம், தென் கொங்குப்பகுதியான  உடுமலை வட்டாரத்தில் அமைந்துள்ள ஊர். பண்டை நாளில் கொங்கு நாடு என்னும் பெரு நிலம் இருபத்து நான்கு சிறு நாட்டுபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நாட்டுச் சபையினரால் நிருவாகம் செய்யப்பட்டு வந்தது. அவற்றில் ஒன்றான கரைவழி நாட்டில் உடுமலை வட்டாரம் அமைந்திருந்தது. (உடுமலையை அடுத்துள்ள பழனி வைகாவி நாட்டைச் சார்ந்தது) . அக் கரைவழி நாட்டைச் சேர்ந்ததாகக் கல்லாபுரம் விளங்கியது. ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு, கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் ஆட்சிக்காலத்திலேயே (கி.பி. 1224) கல்லாபுரம், அதன் இயற்பெயரான கல்லாபுரம் என்ற பெயரோடு விளங்கியது மட்டுமல்லாமல், கொழுமத்தில் அமைந்துள்ள வீரசோழீச்சுரம் என்னும் சிவன் கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட தேவதான ஊராகவும் விளங்கியது. தேவதான ஊர் என்னும் தகுதி ஏற்பட்டதும் அதற்கு “வீரசோழ நல்லூர்என்ற சிறப்புப் பெயர் அமைந்தது. சான்று: கல்வெட்டு எண்-157, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-26. கல்வெட்டு வரிகள் வருமாறு:

              ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்தி கோனேரின்
       மை கொண்டான் கண்டன் அதியனான வளவினா
       ன் உடையாநுக்கு நம் ஓலை குடுத்தபடியாவது ஆ
       ளுடையார் வீரசோழீஸ்வரமுடையார் தேவதா
       நம் கல்லாபுரமான வீரசோழநல்லூரில் ........
  
     
மற்றொரு கொங்குச்சோழனான விக்கிரமச்சோழனின் ஆட்சியில் (கி.பி.1256) அவனது பெயரிலேயே விக்கிரமசோழநல்லூர்என வழங்கியது. சான்று: கல்வெட்டு எண்-153, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-26. கல்வெட்டு வரிகள் வருமாறு:

            ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்தி கோனேரின்
            மை கொண்டாந் கண்டன் காவநாந சிவபத்த
            னுக்கு நம் ஓலை குடுத்தபடியாவது கரைவழி
            நாட்டுக் கல்லாபுரமான விக்கிரமசோழநல்லூ
            ரில் நாம் இவனுக்கு இட்ட ....


இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடைய கல்லாபுரத்துக்கு 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  கல்லாபுரத்தைச் சேர்ந்த நண்பரும் வரலாற்று ஆர்வலருமான ஜான்சன் தம் ஊரில் ஒரு தூணில் கல்வெட்டு எழுத்துகள் காணப்படுவதாகவும், அதை நேரில் கண்டு ஆய்வு செய்யுங்கள் எனவும் அழைத்தார். கல்லாபுரம் சென்றதும், அவர் ஊருக்குள் உள்ள ஒரு தெருவில், நிறுத்தப்பட்ட நிலையில் இருந்த ஒரு தூணைக் காட்டினார். கான்கிரீட்”  போடப்பட்ட அந்தச் சிறிய தெருவில், மிகப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட தூண். ஏறத்தாழ, நாலரை அடி உயரத்தில் இருந்த அத்தூணின் அடிப்பகுதி நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்தது. மேலே, அதன் கால்என்னும் பகுதி, எண் பட்டை மற்றும் பதினாறு பட்டை அமைப்போடும் அதன் உச்சிப்பகுதி சதுர அமைப்போடும் காணப்பட்டன. நான்கு சதுரப்பரப்புகள். இரண்டு சதுரப்பரப்புகளில் கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. முன்புறச் சதுரப்பரப்பில் ஐந்து வரிகளும், அதைத் தொடர்ந்த பக்கச் சதுரத்தில் நான்கு வரிகளும் இருந்தன. வழக்கம்போல, வெள்ளைச் சுண்ணப்பொடியை ஈரமாகப் பூசிக் காயவைத்தபின் எழுத்துகளைப் படிக்க முடிந்தது. கல்வெட்டு வரிகள் வருமாறு:


முன் பக்கச் சதுரம்           அடுத்துள்ள பக்கச் சதுரம்

ஸ்வஸ்திஸ்ரீ வீரரா      சேந்திரதேவ

ற்கு யாண்டு           யக வது கடற்       (யக=11 தமிழ் எண்கள்)

றூர் இருக்குந்          தேவரடியா

ரில் சொக்கந்          வெம்பி இட் 

ட தூண் 











நாலைந்து வரிகளே அமைந்த கல்வெட்டாயினும், முழுமையான ஒன்றாகவும் காலத்தைக் கணிக்க உதவும் வகையிலும் கல்வெட்டு அமைந்தது சிறப்பானது. ஒரு ஆய்வாளருக்கு இதைவிட மகிழ்ச்சி வேறில்லை. கொங்குச்சோழன் வீரராசேந்திரனின் பதினோராம் ஆட்சியாண்டில் கடற்றூரில் இருக்கும் தேவரடியாரான சொக்கன் வெம்பி என்பவள் இத்தூண் கொடை அளித்திருக்கிறாள் என்பது செய்தி. கடற்றூர் என்பது உடுமலை அருகே தற்போதுள்ள கடத்தூர் ஆகும். கோயிற்பணிக்குத் தம்மை ஒப்புக்கொண்ட ஆடல் மகளிரில் ஒருத்தி தூண் கொடை அளித்துள்ளாள். அவள் பெயரில் உள்ள வெம்பி என்பதை “வேம்பிஎனவும் படிக்கலாம். கல்வெட்டுப் பொறித்த காலத்தில், எகரம், ஏகாரம் ஆகிய இரண்டையும் குறிக்க ஒரே எழுத்துக்குறியீடுதான் வழக்கில் இருந்தது. வீரராசேந்திரனின் ஆட்சிக்காலம் கி.பி. 1207 கி.பி. 1256 எனத் தொல்லியல் அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். அதன் அடிப்படையில், கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலம் கி.பி. 1218 ஆகும்.  கல்லாபுரத்தில் பழங்கோயில் எதுவும் காணப்படாத நிலையில், கல்வெட்டுள்ள இத்தூண் எக்கோயிலைச் சேர்ந்ததாக இருக்கும் என்பது புலப்படவில்லை. கல்வெட்டுகள் உள்ள வேறு தூண்களோ தனிக்கற்களோ கல்லாபுரத்தில் காணப்படாமையால் மேற்படி தூண் கல்வெட்டின் மூலம் பற்றி அறியக்கூடவில்லை. மேற்படி கல்வெட்டில் கடத்தூர் குறிக்கப்பெறுவதால், கடத்தூர் கோயிற்கல்வெட்டுகளில் ஏதேனும் குறிப்புகள் கிடைக்குமா என ஆராய்ந்ததில் கல்லாபுரம் கல்வெட்டோடு தொடர்புடைய செய்தி ஒன்று தெரியவந்தது. கடத்தூரில் மருதீசர் கோயிலும், கொங்கவிடங்கீசுவரர் கோயிலும் உள்ளன. கொங்கவிடங்கீசுவரர் கோயில் சிதைந்த நிலையில் உள்ளது. அதைப்பற்றிய தனிக்கட்டுரையை இதே வலையகத்தில் காணலாம். மருதீசர் கோயிலில் உள்ள எழுபது கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் “கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அக்கல்வெட்டுகளைப் பார்வையிட்டதில், கல்வெட்டு எண் 59ஆ/2004 குறிக்கும் கல்வெட்டில், கல்லாபுரக் கல்வெட்டில் சுட்டப்பெறும் தேவரடியார் சொக்கன் வெம்பியின் பெயர் காணப்பட்டது. அக்கல்வெட்டின் பாடம் வருமாறு:


              ஸ்வஸ்திஸ்ரீ வீ
       ர நாராயண தே
       வற்கு யாண்
       டு மூந்றாவது திரு
       மருதுடையார்
       தேவரடியா
       ரில் சொக்கந்
       வெம்பியேந்
       இத்தூணும் போ
       திகையும்

இக்கல்வெட்டு, கடத்தூர் மருதீசர் கோயில் கோபுரத்தின் உள்மண்டபத்தின் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கல்வெட்டுகளையும் ஒப்பிடும்போது, இரண்டிலும் மருதீசர் கோயிற்பணியில் இருந்த தேவரடியாரான சொக்கன் வெம்பி பெயர் காணப்படுவதினின்றும், கல்லாபுரம் தூண் கல்வெட்டு, கடத்தூர் கோயில் கோபுர உள்மண்டபத்தைச் சார்ந்ததாக இருப்பது பெறப்படுகிறது. ஆனால், தூண் இடம்பெயர்ந்து கல்லாபுரம் வந்தது எவ்வாறு என்பது புலப்படவில்லை.  மேற்படி கல்லாபுரம் தூண் கல்வெட்டிலும், கடத்தூர் தூண் கல்வெட்டிலும் குறிப்பிடப்பெறும் அரசர்கள் ஒருவரே அல்லர் என்பதை இங்கே நோக்கவேண்டும். கல்வெட்டின் தொடக்கத்தில், அக்கல்வெட்டைப் பொறிக்கும்போது ஆட்சியில் இருக்கும் அரசன் பெயரையும் ஆட்சியாண்டையும் குறிப்பது கல்வெட்டு மரபு. அந்த மரபின்வழி, சொக்கன் வெம்பி என்னும் தேவரடியார் தான் அளித்த கொடையைப்பற்றிய கல்வெட்டை வெட்டுவித்தபோது, ஒன்றில் வீரராசேந்திரனையும், மற்றொன்றில் வீரநாராயணனையும் சுட்டியிருப்பதினின்றும் இவ்விரு அரசர்களும் ஒரே காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தனர் என்பது பெறப்படுகிறது. இது எவ்வாறு நிகழக்கூடும் என ஆய்வோம்.

         மேற்குறித்த இரு கல்வெட்டுகளும்  கரைவழிநாடு என்ற தென்கொங்கைச் சார்ந்தவை. கோவை மாவட்டக்கல்வெட்டுகள்நூல், தென்கொங்கு வீரகேரளர்கள் ஆட்சியிலும் வடகொங்கு கொங்குச்சோழர்(கோநாட்டார்) ஆட்சியிலும்  இருந்தன; வீரகேரளர் சுயாட்சி பெற்றுச் சோழர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக ஆண்டனர் எனக் குறிப்பிடுகிறது. இக்குறிப்பின் அடிப்படையில் கொங்குச்சோழன் வீரராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் மேற்குறித்த (வீரகேரள அரசன்) வீர நாராயணனும் ஆட்சியில் இருந்துள்ளான் எனலாம். ஆனால், இந்த வீரகேரளரின் அரச வரிசையில் இறுதி அரசன் ராஜராஜன் கரிகாலன் என்றும் இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1129 - 1149 என்றும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி வீரராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1207-1256) வீரகேரளன் யாரும் ஆட்சியில் இல்லை என்றாகிறது. நமது கல்லாபுரம் தூண் கல்வெட்டு இக்கருத்தை மாற்றி, வீரராசேந்திரன் காலத்தில் வீரகேரளன் வீர நாராயணன் ஆட்சியில் இருந்துள்ளான் என உறுதிப்படுத்துகிறது. கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டுகள் பன்னிரண்டில் (அனைத்தும் மண்டபத்தூண்கள்) வீரநாராயணன் என்னும் வீரகேரள அரசனினின் மூன்றாவது ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறுகிறது. இக்கல்வெட்டுகள் அனைத்தும் மண்டபத்திருப்பணி தொடர்பான கல்வெட்டுகள். வேறு ஆட்சியாண்டுகள் குறிப்பிடும் கல்வெட்டுகள் இல்லையாதலால், வீர நாராயணன் குறுகிய காலமே ஆட்சிசெய்தான் எனகருதவேண்டியுள்ளது.

         பின்னாளில், கொங்குச்சோழன் வீரராசேந்திரன், தென்கொங்கில் வீரகேரளர் ஆட்சியை முற்றிலும் ஒழித்து, தென்கொங்கு வடகொங்கு ஆகிய இரு கொங்கையும் ஆண்டான் எனத்தெரிகிறது. இதை, குமரலிங்கம் காசி-விசுவநாதர் கோயிலில் காணப்படும் கல்வெட்டு (தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் க.வெ. எண் 109 மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் 1909-ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை) சுட்டுகிறது. வீரராசேந்திரன் தன் இருபதாவது ஆட்சியாண்டில் இருகொங்கையும் இணைத்து ஆண்டிருக்கலாம் என இக்கல்வெட்டின் வாயிலாகக் கருத இயலுகிறது. ஆட்சியாண்டு இருபது கி.பி. 1227 என அமைகிறது. இக்குறிப்பு வீரகேரள அரசன் வீர நாராயணனின் ஆட்சிக்காலம் கி.பி. 1215 கி.பி. 1226 என வரையறை செய்ய இடமளிக்கிறது.

குமரலிங்கம் கல்வெட்டுப்பாடம்:


1.            திரிபுவனச்சக்கரவத்திகள் இரண்டு கொங்குமொன்றாக ஆண்டருளின   ஸ்ரீவீரராசேந்திரதேவற்கு யாண்டு 20
2.            கில் சோழன் இலன்கேச்வரதேவனேன் கரைவழிநாட்டு திருவாலந்துறை உடையார் திருவாலந்துறையுடை
3.            இக்கோயிலில் பூசிக்கும் நம்பியார் தலையாக கழுநீர் போகட்டுவான் கடையாக தேவரடியார் உள்பட ஆணைமாறுமா
4.            றும் பூசிக்கும் நம்பியார் தலையாக (கழுநீர்)போகட்டுவாந் கடையாக இவர் ........ யிலே ஓரைச்சு ஒடுக்குவாராகவும்
5.            .......  குவாராகவும் இம்முதல்கொண்டு உடையார்க்கு திருமேல்பூச்சு செல்வதாக நாயநார் திருமேனியும்
6.            ............  ல்லியாண திருமேநியாக கல்வெட்டிக் குடுத்தேந் இலங்கேச்வரதேவநேந் இத்தந்மம் நிலைநிறுத்துவாந் காலிரண்டு



























து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி: 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக