மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மருத்துவம் சொல்லும் கல்வெட்டு
                                                      

         நேற்று (19.09.2014) தொல்லியல் ஆர்வலரும் பள்ளி ஆசிரியருமான கிருஷ்ணகுமார், கோவை-சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள சரவணம்பட்டியில் ஒரு சிறிய கல்வெட்டு இருப்பதாகவும், எழுத்துகள் அண்மைக்காலத்தனவாக இருப்பதாகவும் அங்கு சென்று அதைப்படித்துத் தருமாறும் கேட்டிருந்தார். எனவே, இன்று காலை (20.09.2014) அங்கு சென்றிருந்தேன். ஊருக்குள் செல்லும் ஒரு சிறிய சாலையில்  மளிகைக்கடை ஒன்றின் முன்புறம் அக்கல் நிறுத்தப்பட்டிருந்தது. சாலையை விட்டுத்தள்ளியிருந்த மண் பகுதியில் பதிக்கப்பட்டிருந்தாலும் கல்லைச் சுற்றி சிமெண்ட்கொண்டு பூசப்பட்டிருந்தது. கல்லின் மேற்புறம் பூமாலை சாத்தப்பட்டிருந்தது. கல்லின் அடியில் ஓரிரு அகல் விளக்குகள் காணப்பட்டன. மேற்புறம் அகன்றும் கீழ்ப்புறம் குறுகியும் காணப்பட்ட அக்கல்லில் எழுத்துகள் எழுதப்பட்ட பரப்பு நன்கு மட்டப்படுத்தப்படாமல் சற்றே குழியும் மேடுமாக இருந்ததாலும், எழுத்துகள் தெளிவான வடிவத்தில் வெட்டப்படாததாலும் முதல் பார்வையில் படிக்க இயலவில்லை. எனவே, கல்லைத் தண்ணீர் விட்டு  நன்கு கழுவித் தூய்மையாக்கி சுண்ணப்பொடி பூசிக் காயவைத்தபின் பார்க்கையில் எழுத்துகள் ஓரளவு புலப்பட்டன.

         கல்லில் ஐந்து வரிகளில் எழுத்துகள் இருந்தன. உச்சியில் இரு எழுத்துகளின் வடிவம் இருப்பினும் இனம் காண இயலவில்லை. ஐந்து வரிகள் முடிந்த நிலையில் ஆறாவது வரியில் ‘ம்  என்னும் ஒற்றை எழுத்து இருந்தது. முதல் இரு வரிகள் படிக்க இயன்றது. அடுத்த இருவரிகள் படிக்க இயலவில்லை. ஐந்தாவது வரி மற்றும் இறுதியில் உள்ள ஒற்றை எழுத்தும் சேர்ந்து படிக்கமுடிந்தது. கல்வெட்டுப்பாடம் வருமாறு:


                    ............................................
   1 கால்லு
               2 தைத்து  ( தைத்தா)
                    3 ..........................................
                    4 ...........................................
5 நீங்கு
ம்

         அப்பகுதியில் சந்தித்த, அகவையில் மூத்த ஒரு சிலரிடம் இக்கல் பற்றிக்கேட்கையில் சுவையான ஒரு செய்தியைச் சொன்னார்கள். முன்பு இங்கு
வாழ்ந்திருந்த வேளாளர் வகுப்பைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் இப்பகுதி மக்களின் சிறு சிறு உடல் நலக்குறைகள் நீங்க மருந்து கொடுத்தும், உடல் நலத்தில் சுணக்கம் அடைந்த  குழந்தைகளுக்கு ஓதியும் ( கொங்குப்பகுதியின் நாட்டார் வழக்கில் இதை மந்திரித்தல் என்பார்கள்) மருத்துவப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என அறிகிறோம். அவர், இந்தக் கல்லை நட்டுவைத்தார் என்று கூறுகிறார்கள். கால்வலி போன்ற கால் தொடர்பான துன்பங்கள் நீங்க கல்லில் ஏதோ ஒரு ஆற்றலை ஏற்றி நட்டுவைத்தார் என்றும் அவ்வாறே  இந்தக்கல்லின் மீது காலை வைத்துச் சிறிது நேரம் மனத்தில் அமைதி காத்தால் துன்பம் நீங்கும் என்னும் நம்பிக்கையில் இப்பகுதி மக்கள் செய்து வந்துள்ளனர் என்றும் சொன்னார்கள். பலரும் இச்செவிவழிச் செய்தியைச் சொன்னமை கல்வெட்டில் காணப்படும் சொற்றொடரோடு பொருந்திவருவதைக் காண்கிறோம். கால் கொண்டு கல்லை மிதித்தலைக் கல்வெட்டு “கால்லுதைத்து  என்றும், நோய்த்துன்பம் அகலும் என்பதைக் கல்வெட்டு  நீங்கும் என்றும் குறிப்பிடுகிறது.

         இவ்விடத்தில், விவேக சிந்தாமணிஎன்னும் தமிழ் நூலில் காணப்படும் செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. புலவர் ஒருவருக்குக் காலில் நெருஞ்சி முள் தைத்துவிட்டது. ஆனால், அதை மிகைப்படுத்தி ஊர் மருத்துவரிடம் சென்று பாம்புக்கடிக்கு மருத்துவம் நாடி வந்ததைப்போலத் தன் புலமையை நுழைத்து, முள் தைத்ததைப் பாடல்வழியே அவர் புலப்படுத்தினார்.
அப்பாடல் வருமாறு
                                               முக்காலைக் கையில் எடுத்து
                       மூவிரண்டுக்கு ஏகையிலே
                       அக்காலை ஐந்துதலை நாகம்
                       ஆழ்ந்து கடித்தது காண்.

மருத்துவரும் மதிநுட்பம் நிறைந்தவர். புலவரின் பாணியிலேயே அவரும் ஒரு
புதிர்ப்பாடல் வழியே முள் தைத்தமைக்கு மருத்துவம் சொன்னார். மருத்துவரின் மருந்து பின் வரும் பாடலில் காண்க.
                                                               

                     


                     பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
                     சத்துருவின் பத்தினியின்
                     கால் வாங்கித் தேய்.

முள் தைத்ததைப் புலவர் சொன்ன பாங்கை நோக்குக. முக்கால் என்பது மூன்றாவது காலான தடி அல்லது கோல். மூவிரண்டு என்பது ஆறு. ஐந்துதலை நாகம் என்பது ஐந்து பிரிவாகப் பிரிந்த தோற்றத்தில் அமைந்துள்ள நெருஞ்சி முள். கோலை ஊன்றியவாறு ஆற்றுக்குப் போகும் வழியில் நெருஞ்சி முள் தைத்துவிட்டது என்பது செய்தி.
இப்போது மருத்துவரின் மருத்துவம் என்ன என்று பாருங்கள். பத்துரதன் என்பவன் பத்து ரதங்களையுடைய தசரதன். அவனுடைய புத்திரன்(மகன்) இராமன். இராமனின் மித்திரன்(நண்பன்) சுக்கிரீவன். சுக்கிரீவனின் சத்துரு(பகைவன்) வாலி. வாலியின் பத்தினி(மனைவி) தாரை என்பாள். தாரை என்பதில் காலை எடுத்துவிட்டால் தரை என்றாகிறது. எனவே, முள் தைத்த காலைத் தரையில் தேய்க்க முள் அகன்றுவிடும் என்பது இதன் பொருள். என்னே புலமை தரும் இன்பம்!




குறிப்பு : விவேக சிந்தாமணி”  நூலில் வரும் பாடல் குறிப்பைத் தந்து
         உதவியவர் திரு. வெ.சின்னராசு, கருவம்பாளையம், திருப்பூர்.





து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி: 9444939156.



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக