மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 3 ஆகஸ்ட், 2015



கொங்கில் குரக்குத்தளி – சுக்ரீசுவரர் கோவில்

(வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக வணிகர் பற்றிய கல்வெட்டு உள்ள கோவில்)

         திருப்பூருக்கும் ஊத்துக்குளிக்கும் இடையே அமைந்துள்ள சர்க்கார் பெரியபாளையம் என்னும் ஊர் பலபேருக்குத் தெரியாத ஓர் ஊராக இருக்கக்கூடும். அதுபோலவே, அவ்வூரில் அமைந்திருக்கும் சுக்ரீசுவரர் கோவிலும் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இக்கோவில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினரின் கண்காணிப்புக்குக் கீழ் அமைந்துள்ளது என்பதிலிருந்தே கோவிலின் முதன்மையையும் (முக்கியத்துவத்தை) வரலாற்றுச் சிறப்பையும் எளிதில் உணரலாம். இச்சிவன் கோவிலை வைப்புத்தலமாகத் தம் தேவாரத்தில் சுந்தரர் பாடியுள்ளார். ”கொங்கில் குறுப்பில் குரக்குத்தளியாய்” என்பது சுந்தரரின் தேவாரப்பாடல் வரிகள். இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும். இது, மிக அழகான, தெளிவான கட்டடக்கலைக்குப் பெயர்பெற்ற  ஒரு கோவிலாகும். ஆரவாரமற்ற அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள இக்கோவில் கொங்குப்பகுதியில் உள்ளோர் தவறாது பார்க்கவேண்டிய இடமாகும்.

கல்வெட்டுச் சிறப்புகள்

         கல்வெட்டுச் சிறப்புகளைக்கொண்டுள்ள இக்கோவிலில் மொத்தம் பத்து கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் ஒரேயொரு கல்வெட்டு, கொங்குச்சோழனான வீரராசேந்திரன் காலத்தது. மற்ற ஒன்பது கல்வெட்டுகளும் கொங்குப்பாண்டியர்களின் கல்வெட்டுகளாகும். கொங்குச்சோழர் ஆட்சி முடியும் தறுவாயில் கோவில் கட்டப்பட்டுக்  கொங்குப்பாண்டியர் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலமாதலால், கொங்குப்பாண்டியரின் கல்வெட்டுகள் மிகுதியாக இருப்பதில் வியப்பேதுமில்லை. கி.பி. 1267 முதல் கி.பி. 1309 வரையிலான காலத்தில் கொங்குப்பாண்டியர் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. அதன்பின்னர், ஒரேயொரு கல்வெட்டு மைசூர் உம்மத்தூர் அரசரான வீரநஞ்சராயர் காலத்தில் தனிக்கல்லொன்றில் பொறிக்கப்பட்டதாகும். இதன் காலம் கி.பி. 1499.

கல்வெட்டுகளில் இவ்வூர், முகுந்தனூர் என்று குறிக்கப்பெறுகிறது. வீரசோழவளநாடு என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது. இறைவன் குரக்குத்தளி ஆளுடைய நாயனார் என அழைக்கப்படுகிறார். குரங்கு வழிபட்ட இடமாதலால் குரக்குத்தளி எனப்பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. சுக்ரீவன் வழிபட்டதால் சுக்ரீசுவரர் கோவில் எனப்பெயர் அமைந்ததாயும் ஒரு வழக்கு உள்ளது.

வணிகக்கல்வெட்டின் சிறப்புகள்   

(அ) பல்வேறு வணிகக் குழுக்கள்

         கோவிலின் அர்த்தமண்டப வடக்குச் சுவரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வணிகக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கொங்குச்சோழனான சுந்தரபாண்டியனின் நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 1289) பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு ஏறக்குறைய சுவர் முழுதும் பரவியுள்ளது. மொத்தம் 24 மிக நீண்ட வரிகளைக்கொண்ட – ஒவ்வொரு வரியும் 130 அல்லது 140 எழுத்துகளையுடையதாய் –   பெரியதொரு கல்வெட்டு. தென்னிந்தியா முழுதும் இயங்கிவந்த வணிகர்கள் ஒரு பெரிய வணிக அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதை இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். இவ்வணிகக் குழுக்களைச் சேர்ந்த அறுபத்துநான்கு பேர் இவ்வூரில் கூடி குரக்குத்தளி நாயனாருக்கு வைகாசித்திருவிழா எடுத்துக்கொண்டாட முடிவு செய்து அதற்கான செலவுகளுக்காக ஏற்றுமதி, இறக்குமதி, தலைச்சுமை போன்ற பண்டங்களுக்கு சுங்கம் விதித்து அப்பணத்தைக்கொண்டு இத்திருநாள் நடத்த முடிவு செய்தனர். தம் இசைவைத் தெரிவித்து 64 வணிகர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். இவர்களில்  நால்வர் வட்டெழுத்தில் கையொப்பமிட்டுள்ளனர் என்பது கல்வெட்டில் இருக்கும் செய்திகளில் குறிப்பிடத்தக்கதாகக்  கருதப்படுகிறது. மற்றவர்கள் தமிழ் எழுத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

         கல்வெட்டின் தொடக்கத்தில் இவ்வணிகர்களின் மெய்க்கீர்த்தி சொல்லப்படுகிறது. அரசர்க்கு இருப்பதைப்போல இவ்வணிக அமைப்புக்கும் சொந்தமாக ஒரு மெய்க்கீர்த்தி உண்டு. மெய்க்கீர்த்தி என்பது அரசர்களின் மெய்ப்புகழையும் வரலாற்றையும்  அவரது வீரச்செயல்களையும் புலப்படுத்தும். அரசரின் மெய்க்கீர்த்திபோலவே, வணிகரும் தமக்கென மெய்க்கீர்த்தியை வைத்திருந்தனர் என்பது சிறப்பானது. இம்மெய்க்கீர்த்தியில் இவர்களது தெய்வமாக ஐயபொழில்புரத்து பரமேச்வரி பட்டாரகி குறிப்பிடப்பெறுகிறது. ஐயபொழில் என்பது கருநாடகத்தில் இருக்கும் அய்ஹொளெ   நகரத்தைக்குறிக்கும். இங்குதான் வணிகர்களின் தலைமையகம் செயல்பட்டது. வணிக அமைப்பு “சமையம்”  என்று தமிழ்க்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறுகிறது. இச்சமையத்தில் எல்லா வணிகக்குழுக்களும் அடக்கம். பல்வேறு வகையான வணிகக்குழுக்கள் பற்றிய பெயர்கள் மேற்படி வணிகக்கல்வெட்டில் சுட்டப்பெறுகின்றன. அவை பதினெண்விஷயத்தார், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், பெருநிரவியார், ஐந்நூற்றுவர், நானாதேசிகள், சித்திரமேழிகள், செட்டிகள், நாட்டுச்செட்டிகள், நகரத்தார், மணிக்கிராமத்தார் முனைவீரக்கொடியார் ஆகியனவாகும். கல்வெட்டில், பதினெட்டு (18) வணிகர் பட்டணம், முப்பத்திரண்டு (32) வேளாபுரம், அறுபத்துநாலு (64) கடிகைத்தாவளம் ஆகியன பற்றிய குறிப்பும், பூம்புகார், திருவாரூர், கொடுங்கொளூர், எழில்பாச்சில் முதலான பன்னிரண்டு நகரங்கள் மற்றும் கொங்கில் ஒன்பது மாநகரங்கள் ஆகியன பற்றிய குறிப்பும் வருகின்றன. கொங்குப்பகுதியில் இருந்த அவ்வொன்பது மாநகரங்களில் குடிகொண்டு இனிது
உறைந்தனர் எனக்கல்வெட்டு வரி சொல்கிறது. வணிகர் தங்கியிருந்து வணிகம் செய்த பட்டணங்கள் மாடவீதிகளைக்கொண்டிருந்தன என்றும் கல்வெட்டு வரி தெரிவிக்கிறது. கடிகைத்தாவளம் என்பது காவலோடு கூடிய நிலையான சந்தையையுடைய வணிகநகராகும். அது போன்ற வணிகத்தாவளங்கள் அறுபத்துநான்கு இருந்துள்ளன. இத்தாவளங்களில் காவல் பணியில் ஈடுபட்ட வீரர்கள் “முனை” என்னும் பெயராலும் “முனைவீரக்கொடியார்” என்னும் பெயராலும் அழைக்கப்பட்டனர்.

         ஒருபக்கம் நிலையான இடத்திலிருந்து வணிகம் நடைபெற்றுள்ளதுபோல் வணிகப்பொருள்களை ஊர் ஊராக எடுத்துச்சென்று வணிகம் செய்துள்ளதையும் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். அவ்வகையான வணிகப்பொருள்கள் ஊருக்குள் வரும்போதும் ஊரைவிட்டு வெளியே போகும்போதும் வரிகள் வசூலிக்கப்பட்டுள்ளன. வணிகப்பண்டங்களை கழுதைகள் சுமந்தன. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: வணிகப்பண்டங்களைக் கழுதைமேல் ஏற்றிச் செல்லும் வணிகர் கூட்டம் “சாத்து” என அழைக்கப்பட்டது. அவ்வகை வணிகர் “சாத்து வணிகர்” என அழைக்கப்பட்டனர். ”அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு” என்பது பெரும்பாணாற்றுப்படை நூலின் வரியாகும். வணிகப்பண்டங்கள் மாட்டு வண்டிகளில் எடுத்துச்செல்லப்பட்டுப் பல்வேறு ஊர்களில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன. வண்டிகள் வரிசையாகச் சென்ற காட்சியைச் சிறுபாணாற்றுப்படை நூல் காட்டுகிறது. “நோன் பகட்டு உமணர் ஒழுகை”  என்பது சிறுபாணாற்றுப்படை வரியாகும். உமணர் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட உப்பு வணிகர் மாடு (பகடு) பூட்டிய வண்டிகளில் ஒழுகையாகச் செல்வதை (ஒழுகை=சகட ஒழுங்கு) இவ்வரி குறிக்கிறது.) 
             
   வேளாபுரம் முப்பத்திரண்டு இருந்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுவதைப்பார்த்தோம். ஐந்நூற்றுவர் என்னும் வணிகக்குழுவினர் இருந்து வியாபாரம் செய்யும் துறைமுக ஊரே வேளாபுரமாகும். செட்டிகளும் செட்டிவீரபுத்திரர்களும் ஐந்நூற்றுவர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்த ஒரு குழுவினர் என அறிகிறோம். இவர்களில் செட்டிவீரபுத்திரர்கள் என்பார் வீரர் குழுவினர் ஆவர். கல்வெட்டில் ”மலைமண்டலத்துப் பல நகரங்கள்”  என்னும் தொடர் காணப்படுகிறது. மலைமண்டலம் என்பது கேரளப்பகுதியைக் குறிக்கும். இக்கல்வெட்டின் இறுதியில் சபை எடுத்த முடிவுக்கு இசைவு தெரிவித்துக் கையொப்பமிட்டவர்களில் நான்கு பேர் இம்மலைமண்டலத்தைச் சேர்ந்தவர் என்றும் இந்நாலவர் மட்டும் அவர்களது வழக்கப்படி வட்டெழுத்தில் கையொப்பம் இட்டுள்ளனர் என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.
நானாதேசிகள் என்போர் வெளி நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்தவர்கள் எனக்கருதலாம். இவர்கள் திசைஆயிரத்து ஐந்நூற்றுவர் எனவும் வழங்கப்படுவர்.

(ஆ) வணிகப்பண்டங்களும் அவற்றுக்கு விதிக்கப்பட்ட சுங்கவரிகளும்

·         ஏறுசாத்து, இறங்குசாத்து :  ஊரிலிருந்து வெளியூருக்குக் கொண்டு செல்லும் வணிகச் சரக்குகள் ஏறுசாத்து எனவும், வெளியூரிலிருந்து ஊருக்குள் கொண்டுவரப்படும் வணிகச்சரக்குகள் இறங்குசாத்து எனவும் வழங்கப்பட்டன. இவ்வகைச்சரக்குகளுக்குப் பொதி ஒன்றுக்குப் பணம் ஒரு மா, சுங்கவரியாக விதிக்கப்பட்டது. (மா என்பது ஒரு தங்க எடை)
·         புடவைக்கட்டு ஒன்றுக்கு – பணம் இரண்டு மா.  (புடவை என்பது ஆடையைக்குறிக்கும்)
·         நூல் பொதி ஒன்றுக்கு – பணம் இரண்டு மா.
·         பாக்கு பொதி ஒன்றுக்கு – பணம் அரை மா.
·         பசும்பை ஒன்றுக்கு – பணம் அரை மா. (பசும்பை-தோளில் எடுத்துச்செல்லும் மூட்டை அல்லது பை)
·         கருஞ்சரக்குகளுக்கு – பணம் அரை மா. (கருஞ்சரக்கு-மிளகு போன்ற உலர்ந்த பொருள்)
·         யானைக்கு – பணம் ஒன்று.
·         குதிரைக்கு – பணம் அரை.
·         சந்தனக்கட்டுக்கு – பணம் கால்.
·         விடு புடவை சமக்கட்டுகளுக்கு – பணம் கால்.
·         சேக்களுக்கு – பணம் ஒரு மா. (சேக்கள்-காளைகள்)
·         கிடாக்களுக்கு – பணம் ஒரு மா. (கிடா-ஆண் ஆடு)

      

கையெழுத்திட்ட வணிகர்கள் :

         அறுபத்து நான்கு வணிகர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என முன்னரே பார்த்தோம். அவர்கள் யார் யார் எனக்கல்வெட்டு குறிப்பிடுவதைப்பார்ப்போம்.

  • சுந்தரப்பெருமாள் – இவர் பதினெண்விஷயப் பெருநிரவியார் குழுவைச்சேர்ந்தவர்.
  • ஆட்கொண்ட நாயகர்
  • பிள்ளை நாட்டு செட்டி
  • ஏராளபுரத்து வியாபாரி கூத்தன் கண்ணன் (ஏராளபுரம் என்பது தற்போதுள்ள எர்ணாகுளமாகும்.)
  • உறையூருடையான் பெரியய்யதேவன்
  • ஏராளபுரத்து அல்லூருடையான் கயிலாயனான வணிகை மாதா
  • அருவியூரான் கலசைப்பாடி உடையான் காளை பெருமாள்
  • நாவலூர் உடையான் திருநிலை அழகியான் அதிரைவீசாடுவான்
  • திருமலை நாட்டு பெருமங்கலமுடையான் உலகன் உய்யவந்தான் சேரமான் தோழன்
  • திருவாலூர் இவணங்குடையான் தொண்டகநாயன் பெரிய்யநாயன்
  • வணிகையராதித்தன்
  • திருவாலூர் வியாபாரி கடுவங்குடையான் திருஅண்ணாமலைப்பெருமான்
  • பாண்டிமண்டலத்து சுந்தரபாண்டியபுரத்து சிரியப்பிள்ளை
  • வெள்ளூரான கோதண்டராமபுரத்து பால்வாய் உடையான் சொக்கனார்
 ( பால்வாய் உடையான் என்பது ஞானசம்பந்தரைக் குறிக்கும்   பெயராகலாம்) 
  • மீமலை அவையா உடையான் மாதுயரந்தீர்த்தான் சுந்தையன்
  • ஜயங்கொண்டசோழபுர முதலிகைப்பள்ளியுடையான் நீராலமுடையான் பொசிவாசிகொண்டான்
  • விக்கிரமசோழபுரத்து மாத்தூர் உடையான் பஞ்சநெதிவாணன்
  • பாண்டி நாட்டு சுந்தரபாண்டிபுரத்து திருஞானசம்பந்தன்
  • பாண்டிமண்டலத்து சீகல்லபுர நாட்டு குலசேகரபுரத்து பேர் இலத்துடையான் சீகயிலாயமுடையான் அந்தியும் பகலும் ஆடுவான்
  • ஏராளபுரத்து வியாபாரி மாணிக்கன் புந்தியில் உறைவான்
  • குலவாய் நாட்டு சுந்தரபாண்டியபுரத்து மங்கலமுடையான் ஓதாதுணர்ந்தான்
  • பாண்டிமண்டலத்து நகரம் தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்கசோழ பட்டணத்து வெளியாற்றூர் உடையான் உத்தமாண்டன் சொக்கனார்
  • பாண்டிமண்டலத்து நகரம் தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்கசோழ புரத்து பாம்பையன் உடையான் அருள்பெற்ற நம்பியான ஆடும் பெருமாள்
  • கொடும்பாளூர் மணிக்கிராமத்து வெண்ணை சொக்கனான அழகிய்ய உடையான் பொன்னப்பிள்ளை
  • கொடும்பாளூர் மணிக்கிராமத்து தனபாலன்
  • பாண்டிமண்டலத்து நெடுபரமுடையான் சொக்கனார்
  • பாண்டிமண்டலத்து சுந்தரபாண்டியபுரத்து உய்யக்கொண்டான் பெரிய்ய நாயன்
  • தொண்டைமானார் இராகொபுரத்து வல்லியூர் உடையான் கூத்தன் உலகுதொழ நின்றான்
  • கூத்தன் உடையான்பிள்ளை திருவானன் ஆன திருஞானசம்பந்தன்
  • தாமரைப்பூண்டி உடையாந் சூரியனாந சம்பந்தப்பெருமாள்
  • கங்கைகொண்டசோழபுரத்து கொளம்பாக்கமுடையான் செநசுயன்
  • கருவூருடையான்
  • பதினெண்விஷயத்தாரில் உடையாந் திருவானைக்காவுடையாந்
  • கட்டியகையந்
  • அம்பலத்தாடுவார்
  • கருப்பூர் உடையாந் இளையாந் அம்பலத்தாடுவான்
  • இராசராச வளநாட்டுஅரசூருடையான் அடிகள் சமையச்சக்கரவத்தி நீலகண்டன்
  • பாண்டிமண்டலத்து ஐபொழில் விக்கிரமசோழபுரத்து வெண்டவளந்தான்
  • நீற்பழநியுடையான் அடிகள் ஆழ்வாந் பெருங்கருணைப்பெருமாள்
  • திரிபுவனமாதேவியுடையான் பெரியான்
  • பாண்டிமண்டலத்து கொடும்பாளூர் தம்பிராந் தோழன்
  • எறிபடநல்லூர் வடபாடியில் சேந்தமங்கலமுடையான் சிய்யன் சுந்தரப்பெருமாள்
  • சுந்தரசேகரபுரமான தேசிஉகந்த பட்டணத்து மருதநாதபுரமுடையான் சுந்திதேவப்பெருமாள் ஆன திருவிடையான்
  • வெள்ளூர் உடையான் பெரிய்யான் சொக்கனார்
  • அய்ந்நூற்றுவன் பெருநிரவியார் மணிய்ய சக்கரவத்தி
  • வடக்கிலூரான வீரபாண்டியபுரத்து வியாபாரி சேந்தன் சேந்தநாந அமரகோன்
  • உடைய நாயகர்
  • கதாபுரத்து கோட்டைக்கரைஉடையான் வண்ணக சூரியன் சக்கரவத்தி அழகியான்
  • பாண்டிமண்டலத்து தேசி ஏவணமுடையான்
  • தனசந்
  • கொடும்பாளூர் சேரமான் தோழன்
  • கொடும்பாளூர் மணிக்கிராமத்து வியாபாரி ஆண்டக்கன் சொக்கனார்
  • பாண்டிமண்டலத்து கீழ்க்குண்டாற்று வீரநாராயணபுரத்து திரு.. உடையான் அரங்குள .. பெருமாள்
  • ...ழாப்பள்ளியுடையான் கயிலைப்பெருமாள் மலைப்பெருமாள்
  • நீர்ப்பழனி உடையான் அரசன் மணியனான மாறி ஆடுவான் (மாறி ஆடுவான் என்பது கால் மாற்றி ஆடும் நடராசப்பெருமானைக் குறிப்பதாகலாம்)
  • பாண்டிமண்டலத்து இராசநாராயணபுரத்து  திருவெண்பூர் உடையான் தேவன் திருவானமாமலை உடையான்
  • கண்ணனூருடையான் பெரியான் அமரகோன்
  • சமைய மந்திரி அமர்கோன் (சமைய மந்திரி=கூட்டம் கூடுவோர்)
  • சாங்கியன் கீழையான் அறப்பித்தந் திருஅண்ணாமலை உடையானான சூரியன்
  • களத்தூர் கிழவன் இம்மைய் திருவான்கள....ப்பிள்ளை
  • கண்ணார் அமுதன் கூத்தன் தேவன் 
  • புழங்குடையான் சந்திரன் அழகியபாதன்

  



















 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியளர், கோவை.
அலைபேசி : 9444939156.

  

சனி, 1 ஆகஸ்ட், 2015


கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 9


                  பல்லவர்காலத் தமிழ் எழுத்துகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டைச் சென்ற பாடத்தில் பார்த்தோம். இங்கு, மாமல்லன் நரசிம்மவர்மனின் ஒரேயொரு தமிழ்க்கல்வெட்டெனக் கருதப்படும் திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டைக் காண்போம். கல்வெட்டு திருக்கழுக்குன்ற மலைமேல் உள்ள குகைக்கோயிலில் உள்ளது. இதன் காலம் கி.பி. 630 – 668. கல்வெட்டின் பாடம் கீழே கொடுக்கபட்டிருப்பினும் கல்வெட்டை நேரடியாகப் படித்துப் பயிற்சி செய்க. 

கல்வெட்டின் பார்வைப்படி (Eye copy) :



கல்வெட்டின் பாடம் :


ஸ்ரீ திருக்கழுக்குன்றத்து பெருமான்
னடிகளுக்கு களத்தூர் கோட்டத்
து ........................ திருக்கழுக்குன்ற
த்து ஸ்ரீமலை மேல்
(மூ)லட்டானத்து பெருமான்
னடிகளுக்கு வழிபாட்டுப்புறமா
க வாதாபி கொண்ட நரசிங்கப்
போத்த(ர)சர் வைத்தது.

குறிப்பு :
  • இறைவன் பெயர் திருக்கழுக்குன்றத்துப் பெருமானடிகள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
  • மூலட்டானம் என்பது கருவறை ஸ்ரீகோயிலைக்குறிக்கும்.
  • புறம் என்பது கோயில் பணிகளுக்காக விடப்பட்ட நிவந்தம் அல்லது கொடையைக் குறிக்கும். பணிகளுக்கேற்பப் பெயரமையும். இங்கே கோயிலின் வழிபாட்டுக்காக (பூசை)க் கொடை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வழிபாட்டுப்புறம். அமுதுபடிக்காக (நைவேத்தியம்) எனில் அமுதுபடிப்புறம் என்றும், விளக்குக்காக எனில் விளக்குப்புறம் என்றும், மடைப்பள்ளிக்காக எனில் மடைப்புறம் என்றும் பலவாறு வழங்கப்படும்.
  • மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டில் கண்டவாறே இங்கும் ”போத்தரசர்” என்னும் பெயர் வந்துள்ளதை நோக்குக.
  • கோட்டம் என்னும் ஆட்சிப்பிரிவு பல்லவர் காலத்திலேயே இருந்துள்ளது கருதத்தக்கது.
  • நரசிம்ம வர்மனின் பெயர் இக்கல்வெட்டில் ”நரசிங்க” என வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பல்லவர் கல்வெட்டுகளில் “சிம்ம” என்னும் சொல்லுக்குப் பதில்  “சிங்க” என்னும் சொல்லே பயின்றுவருகிறது எனலாம்.
  • ஸ்ரீ என்பது கிரந்த எழுத்து.






து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

  

வெள்ளி, 24 ஜூலை, 2015

            தமிழ் பிராமி எழுத்துகள் - அகழாய்வில் கிடைத்த மண்பாண்ட ஓடுகளில்

”தி இந்து”  தமிழ் நாளிதழில், சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் நடந்துகொண்டிருக்கிற அகழாய்வில் கிடைத்த ஒரு பானை ஓட்டில் தமிழ் பிராமி எழுத்தில் “டிசன்” என்று எழுதியுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. சங்ககாலப்பானையில் “டி” என்னும் எழுத்தில் ஒரு சொல் தொடங்க வாய்ப்பில்லை என்னும் நோக்கில் பானை ஓட்டில் இருக்கும் எழுத்தினைப் படித்தேன். நான் நினைத்தது சரியாக அமைந்தது. பிராமி எழுத்தின் மெய்யான வடிவம் “திஸன்” என்பதேயாகும். நாளிதழில் பிழையாக “டிசன்” எனக்குறிப்பிட்டுவிட்டார்கள். 





விளக்கத்துக்கு இத்துடன் இணைத்திருக்கும் (“Paint picture “ ) படத்தைப் பார்க்க.



----------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



வேதாரணியம் – யாழ்ப்பாணம் பண்பாட்டு உறவுகள்
இலங்கைப்பேராசிரியர் முனைவர் மகேசுவரன் அவர்களின் பொழிவு.


         தஞ்சையை மையமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழகத் தொல்லியல் கழகத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா  அண்மையில் ஜூலை மாதம் 18,19 தேதிகளில் விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தில் நடைபெற்றது. அதுபோழ்து, இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரான முனைவர் மகேசுவரன் வேதாரணியம்-யாழ்ப்பாணம் பண்பாட்டு உறவுகள் என்னும் தலைப்பில் அருமையானதொரு உரை நிகழ்த்தினார். அவ்வுரையைச் செவிமடுத்து மகிழ்ந்தவாறே சில குறிப்புகளை எழுதிவைத்துக்கொண்டேன். தெளிவான பேச்சு. ஓட்டமும் இல்லை; தொய்வும் இல்லை. சொல்லவந்த கருத்தின் பாதையினின்றும் அகலாமல் சீராக அமைந்த தமிழ் நடை.  என் குறிப்புகளின் அடிப்படையில் அவரது உரைக் கருத்துகளை இங்கு ஒரு சிறு தொகுப்பாகத் தந்திருக்கிறேன்.

         மகேசுவரன் அவர்கள் தம் சிறுவயது நினைவுகள் பற்றிக் குறிப்பிடும்போது, தாம் பள்ளியில் பயின்றபோது, சமயப்பாடங்கள் இருந்தன என்றும் தேவாரப்பாடல்கள் மனனமாகத் தெரிந்திருந்தன என்றும் கூறினார். பாடங்கள் வாயிலாக வேதாரணியம் கோவில் கதவு அடைக்கப்பட்டிருந்த நிலை, தேவாரப்பாடலால் கதவுத் திறப்பு நிகழ்ந்தமை ஆகியனபற்றி அறிந்துகொண்டதாகவும் சொன்னார். அவர் 1996-ஆம் ஆண்டு, பேராசிரியர் சுப்பராயலு அவர்களின் வழிகாட்டுதலில் ஆய்வுப்பணி செய்யத் தமிழகம் வந்திருந்தபோது வேதாரணியம் செல்லவேண்டியிருந்தது. அந்தக் காலகட்டம் அரசியல் காரணமாக மிகுந்த இடர் நிறைந்த சூழலைக்கொண்டிருந்த கட்டம். வேதாரணியம் மறைக்காடர் கோவிலின் யாழ்ப்பாணத்தார்க் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வு.

         முன்னர், வேதாரணியம் பற்றி ஓர் அறிமுகம். இத்தலம் மூர்த்தி, தீர்த்தம் ஆகியவற்றால் புகழ் பெற்றதொன்று. விடங்கர் தலங்கள் ஏழுள் ஒன்று.  இறைவன் சுயம்பு. பெண்தெய்வ வழிபாட்டுக்குச் சான்றாக இறைவி. வேதங்கள் வழிபட்ட தலம், இராமர் வழிபட்ட தலம் என்பதாகப் பலப்பல தொன்மங்கள் சார்ந்த ஆலயம். தேவார காலத்தில், அப்பர்,சம்பந்தர் ஆகியோர் பாடிய தலம். வேதங்கள் வழிபட்டுத் திரும்பிச் சென்றபோது கோவிலின் முதன்மை வாயில் அடைக்கப்பட்டுவிட்டதாக ஒரு தொன்மக்கதை. மக்கள் பக்கத்திலுள்ள வாயிலின்வழி கோவிலுக்குள் சென்று வழிபட்டுக்கொண்டிருந்த நிலையில் அப்பரும்,சம்பந்தரும் இக்கோவிலுக்கு வந்திருந்தனர்; வேதங்கள் வழிபட்ட கோவில் வாயிலுக்கு இந்நிலையா என ஆற்றாது சம்பந்தர், அப்பரைப் பதிகம் பாடிக் கதவைத் திறக்கும்படி வேண்ட, அப்பர் தேவாரப்பதிகம் பாடிக் கதவம் திறந்தது. மீண்டும் மூடவும் திறக்கவும் வேண்டி சம்பந்தர் பாடவேண்டும் என அப்பர் கேட்கச் சம்பந்தர் ஒரு பாடல் பாடியதும் கதவம் மூடிக்கொண்டது என்பது தலத்தின் பெருமை. (கட்டுரை ஆசிரியரின் குறிப்பு : அப்பர் பத்துப் பாடல்கள் பாடியபின்னரே திறந்த கதவம், சம்பந்தர் ஒரேயொரு பாடல் பாடியதும் மூடிக்கொண்டது ஏன்? இக்கேள்விக்குச் சுவையானதொரு விளக்கம் என்னவெனில் இறைவன் அப்பர் பாடல்களைப் பெருவிருப்புடன் கேட்டதுதான். இது நான் எங்கோ கேள்வியுற்ற செய்தி. தமிழ்ப் பேராசிரியர்கள் உறுதிப்படுதலாம். தவறு எனில் சுட்டலாம்.) இத்தலத்துக்குப் பல தலபுராணங்கள் (தலவரலாறு) இருக்கக் காண்கிறோம். வேதாரணிய புராணம், திருமறைக்காடு புராணம் மறைசை அந்தாதி ஆகியன ஒரு சில. மறைசை அந்தாதி என்னும் நூல் இலங்கையைச்சேர்ந்த சின்னத்தம்பி நாவலன் என்னும் புலவரால் பாடப்பெற்றது. இக்கோவிலின் கல்வெட்டுகள் முதலாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன், இராசேந்திரசோழ தேவன் ஆகிய சோழ அரசர்கள் காலத்தைச் சேர்ந்தவை. இவை தவிர, விசயநகர அரசர்கள், மராத்திய மன்னர்கள் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகளும் இக்கோவிலில் காணப்படுகின்றன.

         கல்வெட்டுகளில், இறைவனின் பெயர் திருமறைக்காட்டுடையார் எனக் குறிக்கப்பெறுகிறது. இவ்வூர் அமைந்த நாட்டுப்பகுதி கல்வெட்டுகளில் உம்பளநாடு என வழங்கப்படுகிறது. இதற்கு இசைவாக இப்பகுதியில் கோடியக்காட்டில் உப்பு விளைவித்தலே வேளாண்தொழிலாக இருந்துவந்துள்ளது.

         அடுத்து, யாழ்ப்பாணம் பற்றி. யாழ்ப்பாணம் நிலவியல் வடிவில் ஒரு குடாப்பகுதி. யாழ்ப்பாணக்குடா நாட்டுக்குத் தொன்மையான வரலாறு உள்ளது. ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சியில் தொடங்கிப் பின்னர் போர்த்துகேயர் (போர்த்துகீசியர்கள்), ஒல்லாந்தர் (ஹாலந்து நாட்டினர்), .ஆங்கிலேயர் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்த இப்பகுதி புவியியல் அண்மை (Geographical proximity) என்னும் கருத்தளவில் தமிழகத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் நெருங்கியுள்ளது. தமிழகத்தின் கோடியக்காட்டிலிருந்து இலங்கையின் மாநகல்துறை, வல்வெட்டித்துறை, பரிசில்துறை ஆகிய இடங்களுக்கு உள்ள தொலைவு மிகக்குறைவு. இவ்விடங்களுக்கிடையே மரக்கல ஊடாட்டம் இருந்துள்ளது. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : “மரக்கல ஊடாட்டம்” என்னும் தொடர் என்ன அழகான தொடர்! போக்குவரத்துக்கான தொடர்பை “ஊடாட்டம்”  என்னும் சொல் மிக அழகாகச் சொல்கிறது. இலங்கைத் தமிழர்கள் தமிழின்மேல் கொண்டுள்ள பற்றும், தமிழைக் கையாளுதலில் கொண்டுள்ள நேர்த்தியும் நம்மைவிடச் சற்று மிகுதி எனத் தோன்றுகிறது.)


         இலங்கை-இந்தியா மற்றும் தமிழகம்-இலங்கை இவற்றுக்கிடையிலான கடல்வழிப்பயணங்கள் பண்டுதொட்டு இருப்பவை. அசோகமன்னனின் மகள் சங்கமித்திரையில் தொடங்கி 1949 வரை கடல்வழிப்பயணங்கள் பயண இடையூறின்றி நடந்தேறியுள்ளன. தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையே பயணவண்டிகள் இயங்கிவந்துள்ளன.

         இலங்கை, ஏழு தீவுகளை உள்ளடக்கியது. அவற்றுள் ஒன்று நெடுந்தீவு. இத்தீவில் பால்பண்ணைகள் மிகுதியும் இருந்தன. வேதாரணியம் கோவிலுக்கு திருமுழுக்குக்கு (அபிஷேகம்) வேண்டிய பால் நெடுந்தீவிலிருந்தே வந்தது. வேதாரணியம் கோவிலின் கோபுரவிளக்கு வெளிச்சம் நெடுந்தீவில் தெரிந்தது என்று கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் போக்குவரத்துக்கு மாட்டுவண்டிகள் நிறையப்பயன்பாட்டில் இருந்தன. இவ்வகை வண்டிகளுக்கு வேதாரணியத்திலிருந்தே மாடுகள் வரவழைக்கப்பட்டன. இவை முதலில் மாநகல்துறைக்குக் கொண்டுவரப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு  அனுப்பப்பட்டு வண்டிகளில் பூட்டப்பட்டன. . இவ்வகை மாடுகள் “வடக்கன் மாடுகள்”  என யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்டன. இவ்வகை மாடுகள் வெள்ளை நிறங்கொண்டும் நீண்ட கொம்புகளைக்கொண்டும் இருந்தனவென்று தெரிகிறது.

         வேதாரணியத்துடனான யாழ்ப்பாணத்தொடர்புக்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்ப்பெயர்களும் மக்கள் பெயர்களும் சான்றுகளாய் நிற்கின்றன. வேதவன், மறைக்காடன் ஆகிய பெயர்கள் பரவலாக உள்ளதைக்காணலாம். யாழ்ப்பாணத்தில் இருந்த புகையிலை வளர்ப்பு வேதாரணியத்திலிருந்து வந்ததாகும். 

         யாழ்ப்பாணம்-வேதாரணியம் ஊர்களுக்கிடையே மண உறவுகள் மிகுதியும் இருந்துள்ளன என் அறிகிறோம். வேதாரணியத்தில் “யாழ்ப்பாணத்தார் தெரு” என்னும் பெயரில் ஒரு தெரு இருந்துள்ளது. வேதாரணியத்தில் “வீரகத்திச்சேதகன் விநாயகர் கோவில்”  என்னும் பெயரில் கோவில் இருந்துள்ளது. இக்கோவிலைப்பற்றிய குறிப்பு மறைசை அந்தாதி நூலில் காணப்படுகிறது.

         வேதாரணியம் பகுதியில் சிவன் கோவில்களில் இருந்த சைவப்பிராமணர்கள் யாழ்ப்பாணத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். இவர்கள் சைவக்குருக்கள்மார் என அழைக்கப்பட்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் இறப்புச் சடங்குகளை நிறைவேற்றித்தருவதற்காக வரவழைக்கப்பட்டனர். இதை “அபரக்கிரியை” என வழங்குவர். இவர்களின் வந்துபோதல் நிகழ்வு நாளடைவில் யாழ்ப்பாணத்திலேயே குடியமர்தலில் முடிந்து இரண்டுமே தொடர்ந்தன.  குருக்கள்மார் தவிரப் பிறரும் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளனர். இவ்வகையினர் பின்னர் வேதாரணியத்துக்குப் பெயர்ந்து வாழ்ந்ததால் இவர்கள் யாழ்ப்பாணத்தார் என வேதாரணியத்தில் அழைக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தார் தெருவும் அமைந்தது. வேதாரணியத்தில் யாழ்ப்பாணத்தார்க் கல்வெட்டு என்னும் பெயரில் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. கல்வெட்டின் பனுவல் (Text) கீழ்வருமாறு :
(கட்டுரை ஆசிரியர் குறிப்பு : Text  என்பதற்குப் “பனுவல்”  என்று சொற்பொழிவாளர் குறிப்பிடுவது இலங்கை வழக்காகலாம். ஆனால், தமிழகத்தில் “பாடம்” என்னும் வழக்கே உள்ளது. சுவடிகளின் மூலத்திலிருந்து இலக்கியங்களைப் பதிப்பித்த உ.வே.சா. அவர்களும் சுவடிகளின் மூலவரிகளைக் (Text) குறிப்பிடுகையில் “பாடம்”, “பாடபேதம்”  ஆகிய சொற்களையே கையாளுவார். “பனுவல்” என்பது தமிழகத்தில் உள்ள நடைமுறையில் ஒரு நூலையே குறிக்கும்.)

யாழ்ப்பாணத்தெருவாசிகள் கல்வெட்டு :

வரணி மாணி
க்கவாசகப் பண்
டார   பிள்
ளை சிவப்பிரகாச
பண்டாரம்

மேற்குறித்த கல்வெட்டுப்போலவே, யாழ்ப்பாணத்திலும் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் வேதாரணியத்திலிருந்த யாழ்ப்பாணத்தெரு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. யாழ்ப்பாணக்கல்வெட்டுப்பாடம் கீழ் வருமாறு :

யாழ்ப்பாணக்கல்வெட்டு :

வரணிசோ
ளங்கச் செ
....    ராயமு
தலியார் மகன்
வீரகத்திச் சேதக









வரணி ஆதீனமும் வேதாரணியமும்

மேற்படி கல்வெட்டுகளில் வருகின்ற “வரணி”  என்பது யாழ்ப்பாணத்தருகே இருக்கும் ஒரு ஆதீனத்தைக்குறிக்கும். வரணி, யாழ்ப்பாணத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்த ஓர் ஊர். வரணி கிராமம் குருக்களின் குடியிருப்பாக இருந்துள்ளது. வரணி ஆதீனத்தைச் சேர்ந்த தில்லைநாயகத் தம்பிரான் என்பவர் வரணியிலிருந்து வேதாரணியத்துக்கு வந்து தொண்டாற்றியிருக்கிறார். இவர் கட்டுமரத்தில் பயணம் செய்து வேதாரணியம் வந்து சேர்ந்ததாகக் குறிப்புகள் உள. இவருக்கு, முதலாம் சரபோசி மன்னர் காலத்தில் மராத்திய அரசு உதவி கிடைத்தது. காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு. இந்த  வரணி மடத்துக்குச் சொந்தமாக ஒரு மடம் தில்லையிலும் இருந்துள்ளது. மாணிக்கசுவாமிகள் மடம் என்னும் பெயரில்  வரணி ஆதீனத்துக்குச் சொந்தமான ஒரு மடம் வேதாரணியத்தில் இருந்தது. அதே போல, வேதாரணியத்தில் தற்போதும் யாழ்ப்பாணத்தார் தெரு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





கட்டுரை ஆக்கம் : து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி ; 9444939156.







புதன், 15 ஜூலை, 2015


கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 8


பல்லவர் காலக் கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சென்ற வகுப்பில் பல்லவ அரசன் சிம்மவர்மனின் பள்ளன்கோயில் செப்பேட்டின் எழுத்துகளைப்படித்தோம். அச்செப்பேடு தமிழ் வரிவடிவத்தைக் கொண்ட முதல் செப்பேடு என்று கருதப்பட்டது. ஆனால் அதில் காணப்படும் வரிவடிவத்தின் அடிப்படையில் அச்செப்பேடு கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அந்த வகையில், முதலாம் மகேந்திரனின் வல்லம் கல்வெட்டே தமிழ் வரிவடிவம் தாங்கி நிற்கும் முதல் கல்வெட்டு எனலாம். அந்த வல்லம் கல்வெட்டைத் தற்போது பார்க்கலாம். கல்வெட்டின் மூலப்படியின் படத்தையும், (கையால் எழுதிய) பார்வைப்படியின் படத்தையும் கீழே தந்துள்ளேன்.
மூலப்படி :

பார்வைப்படி :


         கல்வெட்டின் மூலப்பாடம் கிழே தரப்பட்டுள்ளது:
கல்வெட்டின் பாடம்:

              சத்துரும் மல்லன் குணபரன்
              மயேந்திரப்போத்தரெசரு அடியான்
              வயந்தப்பிரிஅரெசரு மகன் கந்தசேன
              ன் செயிவித்த தேவகுலம்

குறிப்பு : சத்துரு(ம்)மல்லன், குணபரன் - மகேந்திரவர்மனின் விருதுப்பெயர்கள்.
        போத்தரசர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடர் பல்லவ அரசர்களை                    மட்டுமே குறிக்கும் எனக்கருதலாம். தேவகுலம் என்னும் சொல் 
         கோயிலைக்குறிக்கும்.


         வல்லம் கல்வெட்டின் எழுத்துகளை ஊன்றிப்பார்க்கும்போது, சிம்மவர்மனின் செப்பேட்டில் உள்ள எழுத்துகள் சற்றுப் பிற்காலத்தவை என்பது புலப்படும். ஏனெனில், நாம் அடிப்படை எழுத்தாகப் பயின்ற தஞ்சைப்பெரிய கோயில் எழுத்துகளை செப்பேட்டெழுத்துகள் பெரிதும் ஒத்திருப்பதைக் காணலாம். வல்லம் கல்வெட்டு எழுத்துகள் தமிழ் வரிவடிவத்தின் பழைய வடிவம் என்பது அவை தமிழ் பிராமி எழுத்தின் வடிவமைப்பை உள்ளடக்கி இருப்பதால் அறியலாம். எப்படி என்பதைக்கீழே காட்டியுள்ளேன்.  


         அடுத்து, நாம் பயின்றுவரும் அடிப்படை எழுத்துகளுக்கும் வல்லம் எழுத்துகளுக்கும் இடையே உள்ள மாற்றத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.




து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.


புதன், 1 ஜூலை, 2015


கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 7


         தஞ்சைப்பெரியகோயிலின் அதிட்டானப்பகுதியில் அமைந்துள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் எழுத்துகளை நாம் கற்றுவருகிறோம். அவ்வெழுத்துகளுக்கு முந்தைய காலக் கல்வெட்டு எழுத்துகளும் பிந்தைய காலக் கல்வெட்டு எழுத்துகளும் பலவாறு மாற்றம் கொண்டவை. அம்மாற்றங்களோடு அவ்வெழுத்துகளையும் இனம் கண்டு படிக்க இங்கே பயிற்சி தொடங்குகிறது.

         சோழர்களுக்கு முன் தமிழகதிலிருந்த பல்லவர் காலத்திலேயே தமிழ் எழுத்துகள் கல்வெட்டுகளில் வழக்கத்துக்கு வந்தன என்றாலும் குறைவான எண்னிக்கையிலேயே அவை கிடைத்துள்ளன. பல்லவர்கள் வடநாட்டுப் பின்புலத்திலிருந்து வந்தவராதலால் பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளையே பயன்பாட்டுக்குட்படுத்தினர். பிறகு தமிழும் தமிழ் எழுத்தும் பயன்பாட்டுக்கு வந்தன. தமிழகத்தில் கிடைத்த காலத்தால் முந்திய தமிழ் எழுத்து பல்லவ அரசன் சிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்த பள்ளன்கோயில் செப்பேட்டில் உள்ளது. காலம் கி.பி. 575-600. அச்செப்பேட்டிலிருந்து சில வரிகள் இங்கு தரப்பட்டுள்ளன. (இரண்டு ஒளிப்படங்கள்).

முதல் ஒளிப்படம்:



இப்படத்தின் பாடம் கீழ்வருமாறு:


1 ..... விடுதகவென்று   நாட்டார்க்குத்திருமுக...........
2 ... ந் திருமுகங்கண்டு தொழுது தலைக்கு வைத்து படா
3 கை நட(ந்)து கல்லுங்கள்ளியுநாட்டி நாட்டார் விடுத்த
4 அறையோலைப்படிக்கெல்லை கீழ்ப்(பா)
5 லெல்லை ஏந்தலேரியின் கீழைக்கடற்றி

இரண்டாம் ஒளிப்படம்:



இப்படத்தின் பாடம் கீழ்வருமாறு:
 
1 ந் மேற்கு மோமைக்கொல்லை எல்லை இன்னு
2 ம் தென்பாலெல்லை வேள்வடுகன் கேணியி
3 ன் வடக்கும் கடற்றினெல்லை இன்னுந் நீலபா



நாம் கற்ற எழுத்துவடிவங்களிலிருந்து சற்று மாற்றம் பெற்ற எழுத்துகளைப்பற்றிய
குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் கவனம் தேவை.





பின்னிணைப்பு : (3-7-2015 அன்று இணைத்தது.)
ஒரு ஒளிப்படமும் சில குறிப்புகளும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன.




 பள்ளன்கோயில் செப்பேடு,  பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும் சிற்றூரைத் தந்த செய்தியைக் கூறுகிறது. 
மேலே நாம் பார்க்கும் செப்பேட்டுப் பாடத்தில் வரும் சில தொடர்களுக்கு விளக்கம் வருமாறு :
பள்ளிச்சந்தம் - ஜைன, பௌத்த மதத்தவர்க்கு அளிக்கப்பெற்ற இறையிலி (வரி நீக்கம் பெற்ற) நிலம்.
குரவர் - சமண ஆச்சாரியர்.
நாட்டார் - நாட்டுச்சபையார்
திருமுகம் - அரசனின் ஆணை எழுதப்பெற்ற ஓலை.
தொழுது தலைக்கு வைத்து - நாட்டார் அரசனின் திருமுகம் வரக்கண்டு தொழுது தலைமேல் வைத்துக்கொண்டனர்.
படாகை - பிடாகை=உட்கிடை ஊர்.
படாகை நடந்து  கல்லுங்கள்ளியு(ம்) நாட்டி -  பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து  எல்லையைக் குறித்து, எல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நட்டனர். சிவன்கோயிலாக இருப்பின் சூலம் பொறித்த கற்களும், திருமால்கோயிலாக இருப்பின் சக்கரம் (ஆழி) பொறித்த கற்களும் நடுவது மரபு.
விடுத்த அறையோலை - கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவித்தனர்.
கிழக்கு எல்லை - ஏந்தலேரி என்னும் ஏரியின் கீழைக்கடறு; ஒமைக்கொல்லை. (கடறு=காடு)
தெற்கு எல்லை - வேள்வடுகன் கேணி.
துணை நின்ற நூல் : புலவர் வே.மகாதேவன் எழுதிய “கல்வெட்டுக்கள் வினா-விடை விளக்கம்”.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  
நிலக்கொடை அளித்தலில் அரசன் ஆணையிடுவது தொடங்கி, பின்பற்றப்பட்ட நடைமுறைகள் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியன பற்றி அறிகிறோம்.
தமிழகத்தில் இன்றும் ஆங்காங்கே சூலக்கற்களும், ஆழிக்கற்களும் தொல்லியல் சிதறல்களாகக் காணக்கிடைகின்றன.  
சமணப்பெரியாரைக் குரவர் என  அக்காலத்தே அழைதுள்ளனர் என்பதை அறிகிறோம். இவ்வழக்கத்தைப் பின்பற்றியே, பின்னாளில் சைவப்பெரியாரையும் குரவர் என அழைக்கும் வழக்கு வந்திருக்கக்கூடும். திரு.வி.க. பற்றிய செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. சிலப்பதிகாரத்தில் சமணப்பெரியோராக வரும் கௌந்தி அடிகள் பெயரை அடியொற்றித் திரு.வி.க. அவர்கள், காந்திப்பெரியவரைக் “காந்தியடிகள்” என அழைத்து ”அடிகள்” என்னும் சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார் எனக்கேள்வி.

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.