மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 5 மே, 2020


ஒரு சேதுபதி மன்னரின் செப்பேடு

முன்னுரை

திருவாங்கூர் தொல்லியல் வரிசைத் தொகுதி நூல்களில் ஒன்றான தொகுதி ஐந்தில் (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES, Vol-V) , இராமநாதபுரம் சேதுபதி அரசர்களில் ஒருவரான முத்து ராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் செப்பேட்டை விரிவாக ஆய்ந்து எழுதியிருக்கிறார் நூலின் பதிப்பாசிரியர் A.S. இராமநாத அய்யர் அவர்கள். அவருடைய ஆய்வுக்கட்டுரை (ஆங்கிலத்தில் அமைந்தது)  வாயிலாக 18-ஆம் நூற்றாண்டின் பின் பாதியின் வரலாற்றுச் செய்திகளையும், செப்பேட்டு ஆவணங்களின் அமைப்பு, மொழி போன்ற பல்வேறு செய்திகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.  அது பற்றிய ஒரு பகிர்வே இப்பதிவு.

சேதுபதிகள்

’சேதுபதி செப்பேடுகள்’ என்னும் தம் நூலில் புலவர் செ. இராசு (முன்னாள் தலைவர், கல்வெட்டியல் துறை, தஞ்சைப்பல்கலை) அவர்கள் சேதுபதிகள் யார் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். சேதுபதிகள் மறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். மறவர்கள் தமிழ்நாட்டின் தொன்மைச் சிறப்பு வாய்ந்த குடிகள். மறவர் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் உள்ளன. படைத்தலைவராக, பாலை நிலம் வாழ்பவராக, மறக்குடியைச் சேர்ந்தவராக அவர்கள் வருணிக்கப்படுகிறார்கள்.  இன்றைய மறவர் குலத்தின் முன்னோர்களா என்பது ஆய்வுக்குரியது. இரு சாரார்க்கும் தொடர்பு இருக்கக் கூடும்.

மறவர்களில் செம்பிநாட்டு மறவர் ஒரு வகையினர். இராமநாத சேதுபதிகளும், சிவகங்கைச் சீமையை ஆட்சிபுரிந்த மறவர்களும் செம்பிநாட்டு மறவர் குலத்தவரே. செம்பிநாடு கல்வெட்டுகளில், ‘செம்பி நாடு’, ‘கீட்செம்பிநாடு’, ‘வடதலைச் செம்பிநாடு’  எனப்பலவாறு குறிக்கப்பட்டது. சோழரோடு தொடர்புடையவர். சோழரின் இலங்கைப்படையெடுப்பின்போது காவலாய் நின்ற படைத்தலைவர் வழி வந்தவர்கள்.  தொன்மைப் புனைவுகளின்படி, இராமன் கடலில் கட்டுவித்த ‘சேது’ என்னும் அணையையும், பின்னர், இராமன் எழுந்தருளுவித்த ‘இராமலிங்க’த்தையும் காத்த மறவர் தலைவன் வழி வந்தோர் ஆவர். இராமநாதபுரம் வரும்முன் சேதுபதிகளின் முன்னோர் துகவூர்க் கூற்றத்துக் காத்தூரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்ப்பால் விரையாத கண்டனில் இருந்தனர் என்று எல்லாச் செப்பேடுகளும் கூறுகின்றன.

சேதுபதி அரச மரபு கி.பி. 1604-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் குறிக்கின்றனர்.  சேதுபதி பரம்பரை 11-12-ஆம் நூற்றாண்டிலேயெ தோற்றம் பெற்றது என்று இராமநாதபுரம் அரசு இதழான  ‘கெசட்டியர்’ (GAZETTEER) குறிப்பிடுகிறது. 

முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி

இக்கட்டுரையில் இடம்பெறும் செப்பேட்டு அரசரான முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, கி.பி. 1604-05 –ஆம் ஆண்டு ஆட்சி தொடங்கும் முதலாவது சடைக்கத்தேவர் என்ற உடையான் சேதுபதி முதல் குறிக்கப்பெறும் பதினைந்து அரசர்களில் இறுதி அரசராவார்.  இவரது ஆட்சிக்காலம் 1763-1772, 1782-1795  எனக் குறிக்கப்பட்டுள்ளது. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : ஆட்சிக்காலத்தை இரு கட்டங்களாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இடைப்பட்ட பத்து ஆண்டுக்காலம் என்னவாயிற்று?) இவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர் செல்லத்தேவர் விஜயரகுநாத சேதுபதி. கி.பி. 1860- இல் இறந்தபோது, அவருடைய சகோதரியான முத்து திருவாய் நாச்சியாரின் மகனான முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி (சிறார்ப் பருவத்தினர்)  ஆட்சியில் அமர்த்தப்பட்டார். (செப்பேடு வழங்கப்பட்ட 1769-ஆம் ஆண்டு இவர் பத்து வயதினராகலாம்).  ஆட்சி நிருவாகத்தை இவருடைய தாய் பார்த்துக்கொண்டார். நிருவாக உதவியில் இருந்தவர் தளவாய் தாமோதரன் பிள்ளை.  இவரின் வீரம் குறித்துப் பாட்டு வடிவிலான ”வேள்விக்கோவை" என்னும் நூல் இயற்றப்பட்டுள்ளது.

1910-11 ஆண்டுகளில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிவுக்குறிப்புகள் அடங்கிய ‘மெட்ராஸ் கல்வெட்டியல் ஆண்டறிக்கை’யில், முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் கல்வெட்டு ஒன்றில் (ஆண்டு 1771)  இவரது சிறப்புப் பட்டங்களான ‘ தேவை நகராதிபன், இரவிகுல சேகரன், அனும கேதனன், கருட கேதனன் ஆகிய அடைப்பெயர்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இவரது முன்னோர்கள் வைத்துக்கொண்ட பெயர்கள். தொடர்ந்து அழைக்கப்பட்ட பெயர்கள். இவை போன்ற பெருமையும் பீடும் சாற்றுகின்ற அடைமொழிகள் விஜயநகர ஆட்சியாளர்களின் கொடைச் செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்படுபவையே. பிற்கால மெய்க்கீர்த்திகளில் எழுதப்பெறும் புகழ் அடைகள். மேற்படி 1771-ஆம் ஆண்டுக் கல்வெட்டில், அரசரின் பெயர், ”முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி காத்த தேவர்” என்று வருகிறது. இதில் உள்ள ‘காத்த தேவர்’ என்னும் சிறப்பு ஒட்டுக்குச் சரியான சொல்  “கர்த்த தேவர்”  என்பதாக இருக்கக் கூடும். காரணம் வருமாறு:

விஜயநகரப் பேரரசர்க்குக் கீழ், அவர்கள் சார்பாக, அவர்களது ஆளுநர்களாய் (GOVERNORS) தமிழகப்பகுதிகளின் ஆட்சிப்பொறுப்பு வகித்தவர்கள் மதுரை நாயக்கர்கள். எனவே, மதுரை நாயக்கர்கள் தம்மை விஜயநகரப்பேரரசர்களின் “கர்த்தாக்கள்”  என அழைத்துக்கொண்டனர். தமக்கெனச் சிறப்புப் பட்டப்பெயர்களைச் சூடிக்கொள்ளவில்லை. (Sanskrit. Karta=agent; representative).  அவர்கள் விஜயநகரப் பேரரசர்களால் நியமிக்கப்பட்ட தலைவர்கள். போரின்போது படை உதவி, தாம் பொறுப்பேற்ற ஆட்சிப்பகுதியின் வரி வருவாய் ஆகிய பொறுப்புகளில் விஜய நகர அரசர்க்குக் கட்டுப்பட்டவர்கள். அதுபோலவே, சேதுபதி அரசர்களும். மதுரை நாயக்கர்களால் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்களே. எனவே, இவர்களும் “கர்த்தா’க்களே. இக்காரணத்தால், சேதுபதி அரசர்கள் தம் இயற்பெயரை அடுத்து ”கர்த்த” எனச் சேர்த்துக்கொண்டனர் எனலாம். ‘தேவர்’  என்னும் பெயர் அவர்களது குடிப்பெயரான மறவர் பெயர். எனவே, “கர்த்த தேவர்”. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  நாயக்கர் காலக் கல்வெட்டுகளில், உள்ளூர்த் தலைவர்கள் கொடை அளிக்கும்போது தம் தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டுத் தம்மை அவர்களின் “காரியத்துக்குக் கர்த்தாவான”   என்று அழைத்துக்கொள்கிறார்கள் என்பதை இங்கு ஒப்பிடலாம்.) டாக்டர் கால்டுவெல் அவர்கள் ‘கர்த்தாக்கள்’ என்பதை ஆங்கிலத்தில் ‘HIGH COMMISSIONER’ என்னும் பதவிப்பெயருக்கு நிகராகக் குறிப்பிடுகிறார்.

வேறு இரகுநாத சேதுபதிகள்

திருமலை இரகுநாத சேதுபதி என்னும் அரசர். இவரது ஆட்சிக்காலம் 1647-72 .  இவர் மதுரை திருமலை நாயக்கரால் பெருமைப்படுத்தப்பட்டவர்.  மைசூர் அரசர்களின் படையெடுப்பு, அதனுடன் தொடர்புள்ள ‘மூக்கறுப்புப் போர்’  ஆகிய போர் நிகழ்வுகளில் திருமலை நாயக்கருக்குப் பெருந்துணையாய் நின்று மதுரையைக் காத்தவர் என்னும் நிலையில், திருமலை நாயக்கர் இந்தச் சேதுபதிக்குத் “தாலிக்கு வேலி”, “பாண்டிமண்டல ஸ்தாபனாச்சார்யா”  ஆகிய பட்டங்களை வழங்கினார். திருப்பூவணம், திருச்சுழி, பள்ளிமடம் ஆகிய ஊர்களைக் கொடையாகவும் அளித்தார். ‘தாலிக்கு வேலி’  என்பது திருமலை நாயக்கரின் அரசியின் தாலிக்கு வேலியாய் நின்றவர் என்னும் பொருளில் அமைந்த பட்டப்பெயர். மதுரையைக் காத்ததற்காகப் ‘பாண்டிமண்டல ஸ்தாபனாச்சார்யா’  என்னும் பட்டப்பெயர். இந்தச் சேதுபதிக்குத் “தளசிங்கம்” என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இவரைப் பற்றி மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பார் “தளசிங்க மாலை” என்னும் நூலை இயற்றியுள்ளார்.

மற்றொரு இரகுநாத சேதுபதி, ”கிழவன் சேதுபதி”  என்னும் பெயரால் அறியப்படுபவர். இவர்,  ருஸ்தம் கான் என்னும் முகம்மதியப் படைத் தலைவரை ஒழிப்பதற்குக் காரணமானவர். முகம்மதியத் தாக்குதல்களிலிருந்து மதுரை ஆட்சியாளர்களைக் காப்பதின்மூலம் “பகைமன்னர் சிங்கம்”, ”பரராஜ கேசரி”, “துலுக்கர் தள விபாடன்”, “துலுக்கர் மோகம் தவிர்த்தான்” என்னும் பட்டபெயர்களைப் பெற்றவர். இப்பட்டப்பெயர்களை வழங்கியவர் மதுரை சொக்கநாத நாயக்கர் ஆவார்.  இப்பட்டப்பெயர்கள் எல்லாம் இவைபோன்ற காரணச் சூழல்களில் வழங்கப்பட்டவை. இவை தவிர, மிகுந்த கற்பனை அழகுக்காகச் சேர்க்கப்பட்ட பட்டப்பெயர்கள் பல உள்ளன.  இவை அரசவைப் புலவர்கள் புனைந்தேற்றியவையாகவே இருக்கவேண்டும். இவற்றில் பின்னணிக் காரணங்கள் இருக்கா.  ”கொடைக்குக் கர்ணன்”, ”பொறுமைக்கு தர்மன்”, ”மல்லுக்கு பீமன்”, ”வில்லுக்கு விஜயன்”, ’இராஜாதிராஜன்’, ’இராஜபரமேஸ்வரன்’ , ‘இராஜமார்த்தாண்டன்’, ’இராஜ கம்பீரன்’, ’இராஜகுல திலகன்’, ‘துஷ்டரில் துஷ்டன்’, ’துஷ்ட நிக்ரஹன்’ ’சிஷ்ட பரிபாலன்’, ‘பூலோக தேவேந்திரன்’ போன்ற பட்டப்பெயர்கள் இவ்வாறானவை.

முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி – தொடர்ச்சி

கி.பி. 1773-ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பனியார், கருநாடக நவாபுடன் இணைந்து நடத்திய படைத் தாக்குதலில் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி தோல்வியுற்று ஏழு ஆண்டுகள் திருச்சிச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.  கி.பி. 1769-ஆம் ஆண்டில், இவர் இராமேசுவரம் கோயிலின் மூன்றாம் சுற்றாலைக் கட்டுமானத்தை முடித்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுற்றாலைக்கான கட்டுமானப்பணி கி.பி. 1740-ஆம் ஆண்டு முத்து இரகுநாத சேதுபதி அவர்களால் தொடங்கப்பட்டது. 

சில விருதுப்பெயர்கள்

தொண்டியந்துறைக் காவலன்   -   பாண்டிய நாட்டின் மீதான சோழர்களின் படையெடுப்பின் போது அதிவீர ரகுநாத சேதுபதி என்னும் சேதுபதி செய்த உதவியின் பொருட்டுக் கிடைத்த விருதுப்பெயர்.

அனும கேதனன், கருட கேதனன்  -  விஜயநகர அரசர்கள் பக்கம் நின்று முகம்மதியப் பகைவருக்கெதிராகச் செய்த செயல்களுக்காகச் சேதுபதி அரசர்கள் பெற்ற சிறப்புச் சலுகைகள்.  அதாவது அனும, கருடக் கொடிகளைத் தாங்கிச் செல்லும் உரிமை.

சோழமண்டலப் பிரதிஷ்டாபனாச்சார்ய  -  பாண்டியர்களின் மேலாண்மையை ஏற்றுப் பாண்டியருக்குத் துணையாய்ச் சோழரை அவர்களுடைய எல்லை வரை – பட்டுக்கோட்டை, அறந்தாங்கி -  விரட்டிய காரணத்துக்காகக் கிடைத்த விருது.

கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்  -   வெற்றிகொண்ட பகுதியை மீண்டும் விட்டுக்கொடுக்காத தன்மைக்கான விருதுப்பெயர். இந்த விருதுப்பெயரை விஜயநகர அரசர்களும் சூட்டிக்கொண்டனர்.

கஜவேட்டை கண்டருளிய  -   யானை வேட்டையைப் பார்த்த நிகழ்ச்சியோடு தொடர்புடைய ஒரு விருதுப்பெயர். இந்த விருதுப்பெயரையும் விஜயநகர அரசர்கள் சூட்டிக்கொண்டனர். கல்வெட்டுகளில் இந்த விருதுப்பெயர்களைப் பார்த்த உடனே, விஜய நகரர்/நாயக்கர் காலக் கல்வெட்டுகளை இனம் கண்டுகொள்வதோடு, எழுத்துகள் சிதைந்துள்ள இடங்களில் சொற்களை இட்டு நிரப்புதலும் எளிது.

செப்பேட்டின் அடிப்படைச் செய்தி

சேதுபதி அரசர், திருவாங்கூர் அரசர் ஸ்ரீபத்மநாபதாச வஞ்சிபால ராமவர்ம குலசேகரப் பெருமாளுக்குக்  காக்கூர் என்னும் ஊரை நான்காயிரம் வராகனுக்கு விற்றுக்கொடுத்த விலையாவணமே இச்செப்பேடு.  பின்னர், இவ்வூர்,  திருவாங்கூர் அரசரால் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயிலுக்கு வழிபாட்டுச் சேவைக்காக, ‘ஸ்ரீ இராமநாதசுவாமி கட்டளை’ என்று இறைவனின் பெயராலேயே கட்டளையாகக் கொடுக்கப்பட்டது.

மேற்படி ஆவணம் எழுதப்பட்டபோது, சேதுபதி அரசர், விரையாத கண்டன் என்னும் தலை நகரில் வீற்றிருந்து நிறைவேற்றினார் என்று கூறப்படுகிறது. இந்நகரம், காத்தூர் என்னும் குலோத்துங்க சோழ நல்லூருக்குக் கிழக்கே அமைந்திருந்தது. காத்தூர், தொகவூர்க் கூற்றத்தில் இருந்ததாகச் செப்பேடு குறிக்கிறது. விரையாத கண்டன், சேது நாட்டில் இராஜசிங்கமங்கலசேகரத்தில் அமைந்திருந்தது என்று அறிகிறோம். விரையாத கண்டன், குலோத்துங்க சோழ நல்லூர் இரண்டுமே சேதுபதி அரசர்களின் தலைமையிடங்களாகச் செயல்பட்டன.

செப்பேட்டின் பாடம்

















திருவாங்கூர் அரசர் பற்றி

திருவாங்கூர் அரசரின் பெயர் செப்பேட்டில், ’ஸ்ரீபத்மநாபதாச வஞ்சிபால ராமவர்ம குலசேகரப்பெருமாள் மஹாராஜா’  என்றுள்ளது. இப்பெயர் செப்பேட்டில், ஒரே ஒரு எழுத்தைத் தவிர முற்றும் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. அந்த ஒரு எழுத்து “ள்”.  முற்றிலும் வடசொற்களின் ஒலிப்புள்ள எழுத்துகள். ஆங்கிலத்தில் ‘SRI PADMANABHADASA VANCHIBALA RAMAVARMA KULASHEKARAP PERUMA(ள்)’  என அமையும். பதிப்பாசிரியர் இராமநாத அய்யர் அவர்கள் இப்பெயரில் உள்ள “பால” (BALA)  என்னும் சொல், சமற்கிருத ஒலிப்பிலேயே சற்றுப்பிழையாக எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று கூறுகிறார். ‘BALA’ என்பது பிழையான வடிவம்; ‘PALA’ என்பது சரியான வடிவம் என்று கூறும் அவர் முன்வைக்கும் காரணம் முற்றிலும் ஏற்புடையது. ’BALA’  என்பது ‘இளம்’  என்னும் பொருளைத்தரும். இதை ‘ராம வர்மா’  என்னும் சொல்லுடன் இணைக்கும்போது ‘இளம்’ பொருள் அமைகிறது. ஆனால், அரசரின் முழுநீளப்பெயரில், ‘வஞ்சி’  என்னும் சொல் தனித்து நின்று பொருள் தராமல் போகும் வாய்ப்பே மிகுதி. மாறாக, ‘PALA’ என்பதை ‘வஞ்சி’யோடு சேர்த்து ‘வஞ்சிபால’  என்று குறிப்பிடும்போது ‘வஞ்சிக்காவலன்’ (‘வஞ்சியின் தலைவன்’) என்றமையும். இதுவே சரியான பொருளைத்தரும். ‘PALA’ என்னும் சமற்கிருதச் சொல், காவலன் (PROTECTOR) என்னும் பொருளுடையது. திருவாங்கூர்ப் பகுதியான சேர நாட்டுப்பகுதியின் அரசர் ‘வஞ்சிக் காவலன்’ என அழைக்கப்படுதல் சேர அரசர் மரபின் தொடர்ச்சி எனலாம்.

மேற்படி அரசர், திருவாங்கூர் அரச வரலாற்றில் ’தர்மராஜா’ என்னும் பெயரில் நன்கு அறியப்படுபவர்.  இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1758-1798. இவரின் நீண்ட ஆட்சிக்காலத்தில், ஐதர் அலி, திப்பு சுல்தான்  ஆகிய இருவரின் தொடர்ந்த தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வந்தன. இவர் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியின் அடியவர் என்பது இவர் இயற்றிய நாட்டிய நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாங்கூர் வட்டார ஆவணங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஓலை ஆவணம் ஒன்றில், திருவாங்கூர் ஆட்சி அரசு முழுமையும் பத்மநாபக் கடவுளர்க்குக் காணிக்கை என்னும் குறிப்பு உள்ளது. இவ்வோலை ஆவணத்தின் காலம் கொல்லம் 925 (கி.பி. 1750).

மேற்படி அரசர், கி.பி. 1784-ஆம் ஆண்டு தம் அறுபதாவது வயதில் இராமேசுவரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார். இவ்வரசர், குடிமக்கள் நலனை நன்கு பேணியவர் என்று அறியப்படுகிறார். ஆரியங்காவு சாத்தன் கோயிலுக்கு வழிபடச் செல்லும் மக்கள், திருவாங்கூர்ப்பகுதியையும் திருநெல்வேலியையும் இணைக்கும் மேற்கு மலைத்தொடரின் காட்டுக் கணவாய்ச் சாலையில் கொள்ளை, விலங்குகளின் தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  நல்ல சாலைகள், கொள்ளைத்தடுப்புப் பணிகள் வாயிலாக இத்தகைய இன்னல்களிலிருந்து மக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்தார் என்று ஆரியங்காவு பற்றிய ‘ஆரியவன மகாத்மியம்’ நூலில் குறிப்புகள் உள்ளன.

செப்பேட்டின் மொழியும் எழுத்தும்

செப்பேடு தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் கிரந்த எழுத்துகளின் பயன்பாடு மிகையாக உள்ளது. நல்ல தூய தமிழ்ச் சொற்களைக்கூடக் கிரந்தத்தில் எழுதியிருக்கிறார்கள் என்பது பெருங்குறை என்று பதிப்பாசிரியர் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது. இடைக்காலச் சோழர், பாண்டியர் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் நல்ல தமிழ்ச் சொற்களால் எழுதப்பட்டுள்ள நிலையில், காலப்போக்கில் விஜயநகரர்/நாயக்கர் ஆட்சிகளின்போது, ஆவணங்களில் சமற்கிருதச் சொற்கள் மிகுதியும் நுழைந்து நல்ல தமிழ் வழக்கு ஒழிந்து, தமிழ் மொழி அழகிழந்ததைக் காண்கிறோம். ஆட்சியாளர்கள் தமிழ் மொழியினர் அல்லர் என்பதே காரணம்.  இந்தச் செப்பேட்டில், தமிழ்ச் சொற்களையே தமிழ் எழுத்துகளில் எழுதாமல் கிரந்தத்தில் எழுதியுள்ளமை வருத்தம் தருகிறது. சமற்கிருதச் சொற்களையும் இந்தச் செப்பேட்டில் பிழைபட எழுதியிருக்கிறார்கள் எனப் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். பிழை, செப்பேட்டின் பாடத்தை வடிவமைத்துத் தந்தவர் மேலா அல்லது செப்பேட்டை எழுதியவர் மேலா என்பது தெரியவில்லை.  எழுதியவர் பெயர் ‘மதுரை சட்டையப்ப நாலங்கராயன் குமாரன் சட்டையப்பன்’  எனக் காண்கிறோம்.

செப்பேட்டின்  அமைப்பு

செப்பேடு, திருவனந்தபுரத்தில் உள்ள ’செல்லம்வாகை’  மாளிகையில் (PALACE)  வைக்கப்பட்டுள்ளது. பத்து அங்குல நீளம், ஐந்து அங்குல அகலம் என்ற அளவில் உள்ளது.  ஏட்டின் முதல் பக்கத்தின் மையத்தில் தெலுங்கு எழுத்தில் “ஸ்ரீ ராமநாதஸ்வாமி ஸஹாயம்”  என்னும் பொறிப்பு பெரிய அளவிலான எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.  இத்தொடர், சேதுபதி ஆவணங்களில் காணப்படும் அரச முத்திரை எனக் கொள்ளலாம்.  அரசு ஆவண மொழியாகத் தொடக்கத்தில் தெலுங்கு இருந்துள்ளது என அறிகிறோம்.


செப்பேட்டின் முதல்  பக்கம்

செப்பேட்டின் இரண்டாம் பக்கம்

செப்பேட்டில் பிழைகள்

தமிழ் எழுத்துகளின் இடங்களில் கிரந்த எழுத்துகள் பயன்பாடு

1  இதன்மேற்  -    இச்சொல்லில் ‘இ’  எழுத்து கிரந்தம்.

2  அற்பசி   -       இச்சொல்லில் ‘அ’  எழுத்து கிரந்தம்.

3  உத்திராட   -    இச்சொல்லில் ‘ரா’  எழுத்து கிரந்தம்.

4  கண்டநாடும்   -   இச்சொல்லில் ‘ண்ட’  எழுத்துகள்  கிரந்தம்.

5  கொடாதான்  -    இச்சொல்லில் ‘டா’  எழுத்து கிரந்தம்.

6  காவலன்   -      இச்சொல்லில் ‘ன்’  எழுத்து கிரந்தம்.

7  கற்ணன்    -      இச்சொல்லில் ‘ன்’  எழுத்து கிரந்தம்.

8  துலுக்கர்   -      இச்சொல்லில் ‘ர்’  எழுத்து கிரந்தம்.

9  அன்னசத்திர(ம்)   -    இச்சொல்லில் ‘அ’  எழுத்து கிரந்தம்.

10  கிறையம்    -         இச்சொல்லில் ‘ம்’  எழுத்து கிரந்தம்.

11  அவர்கள்   -          இச்சொல்லில் ‘அ’, ‘ர்’  எழுத்துகள் கிரந்தம்.

12  கட்டளை    -         இச்சொல்லில் ‘ட்டளை’  எழுத்துகள் கிரந்தம்.

13  பண்ணின    -        இச்சொல்லில் ‘ன’  எழுத்து கிரந்தம்.

14  தொண்டமண்டல  -   இச்சொல்லில் ‘ண்டமண்ட’  எழுத்துகள் கிரந்தம்.



செப்பேட்டில் காலக்கணக்கு

செப்பேட்டில் சாலிவாகன ஆண்டும் (சகம்), கொல்லம் ஆண்டும் குறிக்கப்பட்டுள்ளன.  சகம் 1691. கொல்லம் 945.  தமிழ் வியாழ வட்ட ஆண்டான விரோதி ஆண்டும் தரப்பட்டுள்ளது. இம்மூன்று ஆண்டுக்குறிப்புகளும் கி.பி. 1769-ஆண்டுடன் பொருந்துகின்றன. ஐப்பசி மாதம் ‘அற்பசி’  மாதம் என எழுதப்பட்டுள்ளது. எண்கள், தமிழ்க் குறியீட்டெண்களால்  எழுதப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமை, ‘பானு வாரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வானியல் (பஞ்சாங்கக்) குறிப்புகள்

செப்பேட்டில், தேய்பிறைக் காலத்தைக் குறிக்கும் பூர்வ பட்சம்,  சப்தமி திதி, இருபத்தேழு யோகங்களில் ஒன்றான சூலம், பதினொரு கரணங்களில் ஒன்றான கரஜ (கரசை) ஆகிய குறிப்புகள் உள்ளன.

சில நாட்டுப்பிரிவுகளும் நிலவியல் ஊர்களும்

செப்பேட்டின்படி காக்கூர் என்னும் ஓர் ஊரே கொடையாக அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வூர் தடாதகை நாட்டில் இருக்கும் கிராமம் என்பதாகச் செப்பேடு கூறுகிறது. இவ்வூரின் பரப்பை அடையாளப்படுத்துகையில் ஊர்ப்பரப்புக்கு நான்கு திசைகளிலும் உள்ள எல்லைகள் விரித்துச் சொல்லப்படுகின்றன.  எல்லைப் பெயர்களில் கதையன் கண்மாய், கருமளக்கண்மாய், குமாரக்குறிச்சிக்கண்மாய், கருசல்க்குளத்துக் கண்மாய், பத்தலைக் கண்மாய், பகையன் கண்மாய், காத்தான் ஏந்தல், பனையடி ஏந்தல், பாடுவான் ஏந்தல், பூந்தகுளம் ஆகிய நீர் நிலைகளின் பெயர்கள் சுட்டப்படுகின்றன. முதுகுளத்தூர், குமாரக்குறிச்சி என்னும் ஊர்ப்பெயர்களும் காணப்படுகின்றன.  இவ்விடப்பெயர்கள் இராமநாதபுரம் மாவட்டப்பகுதிகளில் இருக்கின்றனவா எனப்பார்க்கவேண்டும்.

சில வடமொழிச் சொற்கள் – கிரந்த எழுத்துகளில்

மேலே சுட்டியவாறு வடசொற்கள் மிகுதியும் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. சில சொற்கள் வருமாறு:

ஹநுமகேதனன்
கருடகேதனன்
சிம்ஹகேதனன்
சத்யஹரிச்சந்த்ரன்
சங்கீத ஸாஹித்ய வித்யா விநோதன்
விஜயலக்ஷ்மிகாந்தன்
அரசராவணராமன்
துஷ்டநிக்ரஹன்
சிஷ்டபரிபாலன்
பூலோக தேவேந்த்ரன்
சிவபூஜா துரந்தரன்
அநேகப்ரஹ்மப்ரதிஷ்டாபகாரன்
ஸகலஸாம்ராஜ்ய லக்ஷ்மிநிவாசன்
ராமநாதஸ்வாமி கார்யதுரந்தரன்
துலாபுருஷதானாதிஷோடஸமஹாதாநதுரந்தரர்
ஹிரண்யகர்பயாஜி


முடிவுரை

விஜயநகரரின் நேரடி ஆட்சி, அதைத்தொடர்ந்த நாயக்கர் ஆட்சி ஆகியவற்றின் தாக்கம் தமிழ் நிலத்துச் சேதுபதி அரசர்களையும் பற்றிக்கொண்ட காரணத்தால் தமிழ் மொழியின் பயிற்சியிலும் சிறப்பிலும் குறை மிகுந்தும் நிறை தாழ்ந்தும் போயின என்று நாம் கருவதற்கு இடமளிக்கும் வகையில் இச்சேப்பேடு அமைந்துள்ளது என்பது இந்த ஆய்வுப்பார்வையில் புலப்பட்டுள்ளதை  மறுக்க இயலாது.  ஆனால், தமிழ் மொழி தன்னுடைய வேரில் வளமான தொன்மையைக் கொண்டுள்ளதால் தன்னைத்தானே காத்துக்கொண்ட ஒரு விதை நெல் போல இன்றளவில் புதுப்பித்துப் புதுப்பித்து வளர்த்துக்கொண்டது எனலாம்.




பார்வை நூல்கள்:

1    திருவாங்கூர் தொல்லியல் வரிசை – தொகுதி-5
(TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES Vol-V)

2  ’சேதுபதி செப்பேடுகள்’ - புலவர் செ. இராசு (முன்னாள் தலைவர், கல்வெட்டியல் துறை, தஞ்சைப்பல்கலை)




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.





ஞாயிறு, 26 ஏப்ரல், 2020


நீரும் நெருப்பும்

முன்னுரை


தொல்லியல் அறிஞர் ஹுல்ட்ஸ்  (E. HULTZSCH) அவர்கள் மதராஸ் கல்வெட்டாய்வாளராகப் பணி புரிந்தபோது, கி.பி. 1893-ஆம் ஆண்டு தம் களப்பணியைப் பற்றி எழுதியது தென்னிந்தியக் கல்வெட்டுகள் - மூன்றாம் தொகுதியில் வெளிவந்துள்ளது. காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் அமைந்திருக்கும் கூழம்பந்தலுக்குக் களப்பணியாகச் சென்றவர், அருகில் உள்ள உக்கல் என்னும் சிற்றூருக்கும் சென்றிருக்கிறார்.  மேற்படி தொகுதி நூலில் உக்கல் கல்வெட்டுகளைப் பதிப்பித்துள்ள ஹுல்ட்ஸ் அவர்களின் குறிப்பிலிருந்து, தலைப்பை ஒட்டிய (நீரும் நெருப்பும்) சில கல்வெட்டுகளைப் பற்றிய பதிவு இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது. 

உக்கல் -  விண்ணகரக் கோயில்

முன்னர்க் குறிப்பிட்டவாறு, உக்கல் என்னும் சிற்றூர், காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில்  கூழம்பந்தலுக்கு ஒரு கல் (மைல்) தொலைவில் அமைந்துள்ளது. ஹுல்ட்ஸ் அவர்கள் இவ்வூருக்குச் சென்றபோதே இங்கிருந்த விண்ணகரக்கோயில்  பழமையானதாகவும்,  சிதைந்த நிலையிலும் இருந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். கோயிலின் கருவறைப்பகுதியின் அதிட்டானப்பகுதி மட்டுமே உள்ளது. விமானத்தின் மேல்பகுதி  யாவும் சிதைந்து போனது. கருவறைக்கு எதிரேயுள்ள மண்டபம் எக்கணத்திலும் இடிந்து விழக்கூடும் என்னும் நிலையில் காணப்பட்டது என்பது அவர் குறிப்பு.

கோயில் கல்வெட்டுகள்

கருவறை அதிட்டானத்திலும், மண்டபத்திலும் மொத்தம் பதினேழு கல்வெட்டுகள் காணப்பட்டன.  (தற்போது,  இக்கல்வெட்டுகள் யாவும் பாதுகாப்பாக உள்ளனவா என்பது தெரியவில்லை.). ஹுல்ட்ஸ் அவர்கள் பதிநான்கு கல்வெட்டுகளைப் பதிவு செய்துள்ளார். மற்ற மூன்று கல்வெட்டுகளும் படிக்கும் நிலையில் இல்லை. கல்வெட்டுகளில் இக்கோயில், “புவனமாணிக்க விஷ்ணுகிருஹம்”   என்று குறிக்கப்பட்டுள்ளது. ’புவன மாணிக்கம்’   என்பது இக்கோயிலைக் கட்டுவித்த, பெயர் அறியா அரசனின் விருதுப்பெயராக இருக்கக்கூடும். (விஷ்ணுகிருஹம் என்னும் சொல்லே ’விண்ணகரம்’ என்னும் தமிழ் வடிவம் பெற்றது எனலாம்). இக்கோயிலில் உள்ள ,  முதலாம் இராசராசன் காலத்துக் கல்வெட்டு ஒன்று,  கோயிலில் உறையும் இறைவர் பெயர் “திருவாய்மொழி தேவர்” என்று குறிப்பிடுகிறது. வைணவ நூலான ‘நாலாயிரப் பிரபந்தம்’  என்னும் நூலின் ஒரு பகுதி ‘திருவாய்மொழி’ என்று வழங்கும். இந்நூலை இயற்றியவர் சடகோபர் என்கிற நம்மாழ்வார் ஆவார்.  இராசராசன் காலத்தில் இறைவர் திருமேனிக்கு இந்த வைணவப் பெயர் சூட்டப்பட்டதை நோக்குகின்றபோது, மேற்படி நூல் மேன்மையாகக் கருதப்பட்டு வந்துள்ளது என அறிகிறோம். அதோடு, இராசராசனின் ஆட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்தவர் நம்மாழ்வார் என்னும் கருத்து முடிபை எட்ட  இந்தப் பெயர்சூட்டல் வழி வகுக்கின்றது எனலாம் . 

இக்கோயிலில், கம்பவர்மன் காலத்தவை என இரு கல்வெட்டுகளும், சோழர் காலத்தவை எனப் பதினொரு கல்வெட்டுகளும், இராட்டிரகூட அரசன் மூன்றாம் கிருட்டிணன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் ஆகப் பதிநான்கு கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. இவற்றில், கம்பவர்மன் கல்வெட்டுகளே காலத்தால் பழமையானவை. இவற்றில், ஊர்ப்பெயர் உட்கல், உட்கர் என இருவகையில் அமைகின்றன. சோழர் கல்வெட்டுகளில் உக்கல் என்னும் பெயரே உள்ளது.  சிறப்புப் பெயர்களாக,  சிவசூளாமணி மங்கலம், விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலம், அபராஜிதச் சதுர்வேதிமங்கலம்  ஆகிய பெயர்களும் கல்வெட்டில் பயில்வதினின்றும், இவ்வூர் பல அரசர்களின் விருதுப்பெயரைத்தாங்கிய பிரமதேயமாக (பிராமணர்க்குக் கொடையாக அளிக்கப்பட்ட ஊர்)  இருந்துள்ளது என அறியலாம். இவ்வூர், தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த காலியூர்க்கோட்டத்தில் பாகூர் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது என்று கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.

ஊரின் நிருவாக அமைப்புகள்

சதுர்வேதிமங்கலங்களின் ஊர்ச்சபை , சபை அல்லது மகாசபை என வழங்கும்.  ஊர் நிருவாகம் இச்சபையின் பொறுப்பு.  ‘சம்வத்சர வாரியம்’,  ‘ஏரி வாரியம்’ , ‘தோட்ட வாரியம்’ ஆகிய உட்குழுக்கள் சபையின் கீழ் இயங்கின.  சம்வத்சர வாரியம் என்பது,  அதன் பெயருக்கேற்ப அந்தந்த ஆண்டுக்கான ஒரு நிருவாகக் குழுவாகலாம். ஏரி வாரியம் என்பது, ஏரி தொடர்பான செயல்களை மேற்பார்வை செய்யும் குழு. தோட்டம் என்பது கிணற்று நீர்ப்பாசனம் பெறும் நிலங்களை மேற்பார்க்கும் குழுவாகும். சபையின் நிருவாகச் செயல்பாடுகள் மற்றும் செயல் முடிவுகள் தொடர்பான ஆவணங்கள் யாவும் ஊரின் ‘மத்தியஸ்தர்’  எனும் பதவியில் இருந்தவரால் எழுதப்பெற்றன.  சில போது இவர், ‘ஊர்க் கரணத்தான்’  என்றும் அறியப்படுகிறார்.

கல்வெட்டுகள் காட்டும் கொடைகள்

கல்வெட்டுகள் பல்வேறு வகையான கொடைகள் பற்றிப் பேசுகின்றன. இறைவனுக்குப் படைக்கப்படும் அமுதுபடிக்காகவும், அன்றாட வழிபாட்டின்போது பயன்படும் எண்ணெய்க்காகவும், நந்தவனம் அமைத்து அதைப் பேணுவதற்காகவும்,  வேதம் வல்ல பிராமணர் உண்பதற்காகவும் கொடைகள் அளிக்கப்பட்டன.  கொடைப்பொருள்களாக நிலம், பொன்,  நெல்  ஆகியவை அளிக்கப்பட்டன.  ஒரு  கல்வெட்டில், வேதம் வல்ல பன்னிரண்டு பிராமணர்க்கு உணவளிக்க இருநூறு கழஞ்சுப் பொன்னும், இன்னொரு கல்வெட்டில் இரண்டு பிராமணர் உண்பதற்காக நானூறு காடி நெல்லும் அளிக்கப்பட்டன என்னும் செய்தி உள்ளது. (400 காடி நெல் என்பது ஏறக்குறைய 133 மரக்கால்) அமுதுபடிக்காக ஐந்நூற்றைம்பது குழி நிலம் கொடை அளிக்கப்பட்டது.

நீர்

கட்டுரைத் தலைப்புப்படி, நீரும் நெருப்பும் கொடைக்கான பின்னணியாக எவ்வாறு அமைகின்றன எனப்பார்ப்போம்.  உக்கல் விண்ணகரத்தின் கருவறை மேலைச் சுவரில் உள்ள  ஒரு கல்வெட்டு முதலாம் இராசராசன் காலத்தது. கி.பி. 1014-ஆம் ஆண்டில் அவனது இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டது.  இக்கல்வெட்டு,  இராசராசனின் பணிமகனான கண்ணன் ஆரூரன் என்பவன், “ஸ்ரீராஜராஜக் கிணறு” என்று  இராசராசனின் பெயராலாயே ஒரு கிணற்றை வெட்டுவித்தான் என்று கூறுகிறது. இவன் ஆவூர் என்னும் ஊரைச் சேர்ந்தவன். கிணறு யாருக்குப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  உக்கல் ஊரினின்றும் செல்லுகின்ற மேலைப்பெருவழி என்னும் ஒரு பெருவழிச் சாலையில் பயணம் செய்வோருக்குப் பயன்படும் வகையில் கிணறு வெட்டப்பட்டு அதன் அருகிலேயே தண்ணீர்ப்பந்தல் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கிணற்றிலிருந்து   நீர் இறைக்கப்பட்டு  ஒரு தொட்டியில் நிரப்பப்படுகிறது. தொட்டித்தண்ணீரைத் தண்ணீர்ப்பந்தலில் மட்கலங்களில் (மண் பானைகளில்)  ஊற்றிவைத்துப் பயணிகளுக்கு வழங்குவதற்காக ஓர் ஆளும், கிணற்றிலிருந்து நீர் இறைத்துத்தருவதற்காக ஓர் ஆளும் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

நீர் இறைக்கும் ஆளுக்கு நாள்தோறும் இரண்டு குறுணி (பதினாறு நாழி/படி) நெல் ஊதியமாக அளிக்கப்படுகிறது. இதே போலத் தண்ணீர்ப்பந்தலில் இருந்துகொண்டு பயணிகளுக்கு  நீர் தருகின்ற பணியைச் செய்பவனுக்கும் நாள்தோறும் இரண்டு குறுணி நெல் ஊதியமாக வழங்கப்பட்டது. கல்வெட்டு இவர்களை  நீர் இறைப்பார் என்றும், தண்ணீர் அட்டுவார் என்றும் குறிப்பிடுகிறது. தண்ணீர்ப்பந்தலில் பயன்பாட்டுக்குத் தேவையான மண் பானைகளை வனைந்து தருகின்ற மண்ணாளர்க்குத் (குயவர்) திங்கள்தோறும் இரண்டு தூணி ( எட்டுக் குறுணி)  நெல் ஊதியமாக வழங்கப்பட்டது.  இந்த ஊதியங்களெல்லாம் ஆறு மாதங்களுக்கு எனக் கல்வெட்டு கூறுகின்றதன் மூலம், வழிப்பயணிகளுக்குத்  தண்ணீர் தருகின்ற தண்ணீர்ப்பந்தல் ஏற்பாடு, இக்காலம் போல் அல்லாமல் ஆண்டில் ஆறு மாதங்களுக்கு  இயங்கியது என அறிகிறோம். மட்கலங்களைக் கல்வெட்டு குசக்கலம் என்று குறிக்கின்றது. நீர் இறைப்பானைப்பற்றி இக்கல்வெட்டில் கூறியிருந்தாலும், நீர் கிணற்றிலிருந்து எவ்வாறு இறைக்கப்பட்டது என்னும் குறிப்பு காணப்படவில்லை.  ஆனால், அடுத்து வருகின்ற கல்வெட்டில், ஏற்றம் பற்றிய குறிப்பு வருவதினின்றும், ஏற்றம் அமைத்து நீர் இறைத்தார்கள் என்பது பெறப்படுகிறது. கிணறு வெட்டுவித்துத் தண்ணீர்ப்பந்தல் அமைப்பது முப்பத்திரண்டு அறங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


கல்வெட்டின் பாடம் :




நெல்லின் அளவீடுகள்

நீர் இறைப்பவனுக்கும், நீர் அட்டுவானுக்கும் நாள்தோறும்  இரண்டு குறுணி நெல் ஊதியம். தற்காலத்து ஒரு லிட்டர் முகத்தல் அளவினைச் (ஐம்பது-அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் படி என்று வழங்கிய அளவுடன் ஒப்பிடலாம்) சோழர் காலத்தில் நாழி என்று குறிப்பிட்டனர்.  எட்டு நாழி கொண்டது ஒரு குறுணி.

8  நாழி  =   1  குறுணி
12 குறுணி =  1 கலம்

நீர் இறைப்பானுக்கும், நீர் அட்டுவானுக்கும் நாள் ஒன்றுக்கு இரண்டு குறுணியாக, ஆறு மாதத்துக்கு -  நூற்றெண்பது நாள் (சோழர் காலக் கணக்கீட்டில் ஒரு மாதம் முப்பது நாள்களைக் கொண்டது)  -  நெல் எழுநூற்று இருபது குறுணி. அதாவது அறுபது கலம். குசக்கலம் இடுவார்க்கு ஆறு மாதத்துக்கு நாற்பத்தெட்டு குறுணி . அதாவது நான்கு கலம்.  ஆக இவ் ஆள்களுக்கு அறுபத்து நான்கு கலம் நெல்.  இவை தவிர, ஆண்டு தோறும் கிணறு, தொட்டி  ஆகிய இரண்டையும் புதுப்பித்துச் செம்மையான நிலையில் வைத்துக்கொள்ள இரண்டு கலம் நெல் கொடையாளியால்  ஒதுக்கப்பட்டது.  இந்த ஏற்பாட்டினைக் கல்வெட்டு, புதுக்குப்புறம் எனக்குறிக்கிறது. ஆக மொத்தம் ஆண்டுக்கு அறுபத்தாறு கலம் நெல் பயன்பட்டது. இந்த நெல்லுக்காகத் தேவைப்படும்  பொருள்,  அதாவது வரி வருவாயும், விலைப்பணமும்  கொடையாளி கண்ணன் ஆரூரனிடமிருந்து சதுர்வேதிமங்கலத்துச் சபையார் பெற்றுக்கொள்கின்றனர்.  நெல் அளப்பதற்கு ”அருமொழி தேவன்”  மரக்கால் பயன்பட்டது. ”அருமொழி தேவன்”  என்பது இராசராசனின் இயற்பெயர்.  இப்பெயரே, நெல் அளக்கும் கருவிக்குப் பெயராக இடப்பட்டது. இவ்வழக்கம் சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்தது. இறைவனின் பெயரால் “ஆடவல்லான்”   என்று ஒரு அளவைக்கருவி இருந்தமையும் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.  மரத்தால் செய்யப்பட்ட கால் (அளவுக்கருவி) மரக்கால் என்று வழங்கப்பட்டிருக்கவேண்டும். குறுணி அளவு கொண்ட மரக்கால் பிற்காலத்தில்,  அந்த ‘குறுணி’யின் அளவையே  குறித்தது போலும். முன்னர்க் குறித்தவாறு, பழங்காலத்து ‘நாழி’ ,  ‘படி’  என்று பின்னாளில் வழங்கியது.  ’படி’ வழங்கிய காலத்தில்  (ஐம்பது-அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்)  ’மரக்கால்’  அளவும் வழங்கியது. (எட்டுப் படி = ஒரு மரக்கால். இது பழங்காலக் கணக்கு முறையை ஒட்டி உள்ளது எனபதைக் காண்க).

குறியீடுகள்

நெல்,  குறுணி,  2 தூணி,  கலம்  ஆகிய  சொற்களைச் சுருக்கெழுத்து வடிவில் குறியீடுகள் மூலம்  இக்கல்வெட்டில் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்குறியீடுகள் வருமாறு :

நெல் =   ஜ
குறுணி = ங
2 தூணி = வத
கலம் =  கள

நீர் ( தொடர்ச்சி ) -   ஏரியும் ஓடமும்

நீரோடு தொடர்புள்ள மற்றொரு கல்வெட்டு,  முதலாம் இராசேந்திர சோழன் காலத்தது. அவனது நாலாம் ஆட்சியாண்டான கி.பி. 1016-இல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.  இராசேந்திரனின் பணிமகனான அரையன் பலதேவன் என்பான் செய்த கொடையைக் கூறுகிறது. இவன், வெண்குற்றக் கோட்டத்துக் குவளை கோடு நாட்டுக் குவளைகோடு என்னும் ஊரினன். இவன், இந்த ஊரில் இருக்கும் ஏரிக்கு இரண்டு ஓடங்களைக் கொடையாக வைக்கிறான். ஏரியில் கரைகளுக்கிடையிலான நீரை  மக்கள் பணச்செலவின்றிக் கடக்கும் வகையில் இவ்வோடங்களின் பயன்பாடு ஒரு தன்மமாகச் செயல்பட்டது. இதன் செலவினங்களுக்காக மேற்படி பலதேவன் ஊர்ச் சபையாரிடமிருந்து மூவாயிரம் குழி நிலத்தை விலைக்கு வாங்கி முதலீடாக வைக்கிறான். இந்நிலத்துக்கு அருகில் இருக்கும் ஐந்து ஏற்றங்களையும் விலைக்கு வாங்கிக் கொடையளிக்கிறான். ஓடங்கள் கொடைப்பொருளாக அமையும் கல்வெட்டுகள் எண்ணிக்கையில் மிக அரிது.  அவ்வகையில் இக்கல்வெட்டு சிறப்புப் பெறுகிறது.  நிலத்தின் எல்லைகள் குறிக்கப்பெறுகின்றன. நிலத்தின் பரப்பு  மூவாயிரம் குழி.

2000 குழி = ஒரு வேலி நிலம்

எனவே, கொடை நிலம் (3000 குழி)  ஒன்றரை வேலி அளவுள்ளது. நிலத்தை அளக்கப் பதினாறு அடிக் கோல் பயன்பட்டது. கல்வெட்டில், எல்லைகளைக் குறிக்கும்போது மணலீடு என்னும் ஒரு சொல் வருகின்றது. இச்சொல், மணல் மேட்டினைக் குறிப்பதாகும்.

கொடை நிலத்தின் விலை ஆவணத்தை எழுதிப்பதிவு செய்தவன் இவ்வூரின் மத்தியஸ்தனான இரண்டாயிரத்து நானூற்றுவன் ஆவான். இவன் இவ்வூர்க் காளிதேவிக்கடியான்  என்பதாக ஒரு குறிப்புள்ளது. பொற்றிக்குறி காளி என்னும் பெயரில்  ஒரு கொற்றவைக் கோயில் இவ்வூரில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

கல்வெட்டின் பாடம் :







நெருப்பு

’நீரும் நெருப்பும்’  என்னும் தலைப்பில் மேலே இரு கல்வெட்டுகளில் நீரைப்பற்றிய செய்தியைப் பார்த்தோம். உக்கல் விண்ணகரக் கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டில் நெருப்பு பற்றிய செய்தி  காணப்படுகிறது. இக்கல்வெட்டு, இரண்டாம் ஆதித்தனின்  காலத்தைச் சேர்ந்தது. இவன், முதலாம் இராசராசனின் தமையன் ஆவான்.  கரிகாலன் என்னும் சிறப்புப் பெயராலும் அறியப்படுகிறான். ’வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி’ என்னும் புகழ்ப்பெயரைத் தாங்கியே இவனது கல்வெட்டுகள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற பெரிய லெய்டன் செப்பேட்டில் இவன் வீரபாண்டியனோடு புரிந்த போரில் காட்டிய வீரம் குறிக்கப்பட்டுள்ளது. இவன் உத்தம சோழனுக்கு முன்னரே இளவரசுப் பட்டம் பெற்றவன்.  உத்தம சோழ்ன் கி.பி. 970-அம் ஆண்டு அரியணை ஏறியவன். எனவே,  மேற்படிக் கல்வெட்டு கி.பி. 970-ஆம் ஆண்டுக்குச் சற்று முந்தியதாகிறது.

கல்வெட்டின் பாடம் :





இக்கல்வெட்டு, புலியன் மகன் சேனை என்பான்  உக்கல் கிராமத்தில் இருக்கும் மண்டபத்துக்கு ஆறு மாதம் தண்ணீரும்  தீயும்  கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்கிறான். அதற்கான செலவினங்களுக்காக நிலம் கொடையளிக்கிறான். இவன் உக்கலில் இருந்து வாழ்கின்றவன்; ஆனால் சிக்கார் என்னும் ஊரைச் சேர்ந்த வெள்ளாளன். மண்டபம் என்பது ’பிரஹ்மஸ்தானம்’ என்னும் ஊர்ப்பொது மண்டபம் என்று கல்வெட்டு குறிக்கிறது. உக்கல் கிராமத்தில் மேலைப் பெருவழி ஒன்று இருந்ததாக முன்னரே குறிப்பிட்டோம். பெருவழியில் அமைந்த இம்மண்டபத்தில் பிராமணர் போக்குவரத்து இருந்தது. அவ்வாறு தங்குபவர்க்கு  நீரும் நெருப்பும்  கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நீர் வழங்கியதைக் கல்வெட்டு,  “தண்ணீர் அட்டுவது”  எனக்குறிக்கிறது. நெருப்பு வழங்குவதை “அக்னிஷ்டை” இடுவது எனக்குறிக்கிறது.  நீரின் பயன்பாடு அறிந்த ஒன்று.  நெருப்பின் பயன்பாடு பற்றிய வெளிப்படையான குறிப்பு கல்வெட்டில் இல்லை எனினும்,  மண்டபத்தில் தங்கிச் செல்கின்றவர்க்கு  நீரைக் காய்ச்சிக்கொள்ளவோ, உணவு சமைத்துக்கொள்ளவோ நெருப்பு பயன்பட்டிருக்கவேண்டும்.  அதற்கான விறகுகள்,   விறகடுப்புகள்  ஆகியன அமைத்துத் தந்தனர் எனலாம்.

கொடையாளி, மண்டபத்துத் தொட்டியின் முன்புறத்தில்  ஏத்தம் எடுத்துத் தருவதாகவும் கல்வெட்டு குறிக்கிறது.   இக்குறிப்பின் மூலம், இந்தத் தங்கும் மண்டபத்து வளாகத்தில் கிணறு,   நீரிறைக்க  ஏற்றம், நீரைத் தேக்கும் தொட்டி ஆகியவை பயன்பாட்டில் இருந்தன என அறிகிறோம்.   கல்வெட்டில், ஏற்றம் என்னும் சொல் ஏத்தம் என்றே  பயிலுகிறது.  ஏற்றம்->ஏத்தம்.  ‘ற’கரம்  ‘த’கர  மாற்றம் பெறுதல் இயல்பு. கிராமத்தில்,  சம்வத்சர வாரியப்பெருமக்கள் என்பவர்கள் ,   ஓராண்டுப் பதவியில் இருப்பவர்கள்,  அந்தந்த ஆண்டுக்க்குரிய கிராமச் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பில் இருப்பவர்கள் ஆவர்.  இவர்களே  மேற்படி தன்மத்தை  மேற்பார்க்க வேண்டும் என்று கல்வெட்டு குறிக்கிறது. கல்வெட்டின் இறுதியில்,  இத்தன்மத்துக்கு ‘விரோத’மாய் நின்றார்  கங்கை-குமரியிடைச் செய்த பாவத்தைப் பெறுவார்கள் என்னும்  குறிப்பு உள்ளது.    தவிர, இருபத்தைந்து பொன் தண்டம் கட்டவேண்டும்.

நீரும் நெருப்பும் -  கூரம் செப்பேட்டில்


புகழ்பெற்ற, பல்லவரின் கூரம் செப்பேட்டில் கூரம் ஊரில் ஊர்ப்பொது மண்டபம் எடுத்த செய்தியும்,  கூரத்து மண்டபத்துக்குத் தண்ணீருக்கும் தீக்கும் கொடைப்பொருளில் ஒரு பங்கினை ஒதுக்கிக் கொடுத்த செய்தியும் காணப்படுகின்றன. செப்பேட்டின் வரிகள் பின்வருமாறு :

வரி – 61   ஊருள் மண்டகம் எடுத்த
வரி – 74   கூரத்து மண்டகத்துக்கு தண்ணீர்க்குந் தீக்கும் ஒரு பங்காக

மற்றொரு கல்வெட்டிலும், 

“அம்பலந் தண்ணீரட்டுவார்க்கும் தீயெரிப்பானுக்குமாகப் பங்கொன்றும்

என்று கூறப்பட்டுள்ளது. (SII Vol- II  99)

திருக்கழுக்குன்றத்துக் கோயிலில் உள்ள கன்னரதேவன் என்றழைக்கப்படும் இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டில்,

“ ....................நக்கடி பட்டன் பக்கல் விலை கொண்ட
பூமி களரிச்செறுவும் கிணறும் தண்ணீர் அட்டுவ
தற்கும் அக்னிய் இடுவதற்குமாக .............”

என்று குறிக்கப்பட்டுள்ளது.


 மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து,  நீர், தீ  ஆகிய இரண்டின் பயன்பாடு தேவைப்படும் இடங்களில் – அவை மக்கள் கூடும் மண்டபங்கள்,  கூடங்கள் -  இவ்விரண்டுக்குமான ஏற்பாடுகளைச் செய்து தருகின்ற செயல் ஒரு அறச்செயலாகவே நடந்தேறியுள்ளது என்று அறிகிறோம். 

உக்கல் கோயிலின் தற்கால நிலை


கோயிலின் தற்கால நிலை, கல்வெட்டுகளின் பாதுகாப்பு பற்றித் தெரியவில்லை என மேலே குறிப்பிட்டோம்.  TAMIL-ONE INDIA  என்னும் இணைய தளத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள்  எழுதிய கட்டுரையில்,  ’இவ்வூர்க்கோயிலும் கல்வெட்டுகளும் பாதுகாக்கப்படாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன’  என்று குறிப்பிட்டு இராசராசன் கல்வெட்டு ஒன்றினை விளக்கி எழுதியுள்ளமை, இன்னும் இக்கோயில் கல்வெட்டுகள் சில எஞ்சியுள்ளன என்று அறியத்தருகின்றது.  




பார்வை நூல்கள் :

1      தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-3 
      (SOUTH INDIAN INSCRIPTIONS  Vol-III)

  2   எபிகிராஃபியா இண்டிகா தொகுதி-3 
      (EPIGRAPHIA INDICA Vol-III)

  3   தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-1 
      (SOUTH INDIAN INSCRIPTIONS  Vol-I) 

  4   தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-2 
      (SOUTH INDIAN INSCRIPTIONS  Vol-II)

    5      https://tamil.oneindia.com
     உக்கல் கோயிலின் ராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு
           - முனைவர் மு. இளங்கோவன்





துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156




வியாழன், 2 ஏப்ரல், 2020



சென்னையில் ஒரு நாள் – திருவொற்றியூர்

அண்மையில், மார்ச்சு, 2020 இரண்டாவது வாரத்தில் சென்னையில் இருக்கும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அதுபோழ்து, மார்ச்சு பதினான்காம் நாள் திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலுக்குச் செல்லும் ஒரு நிகழ்வை வலிய உண்டாக்கிக் கொண்டேன். காரணம்,  திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலில் பதிவான சில கல்வெட்டுகளைப் பற்றி ஒரு சில நாள்கள் முன்பு, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதிகள் மூன்று, ஐந்து, பன்னிரண்டு ஆகியவற்றில் பார்த்திருந்தேன். நேரில் காண மேற்படி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். திருவொற்றியூர் ஆதிபுரிசுவரர் கோயில் கல்வெட்டுகளைக் கண்டும், சிலவற்றைப் படித்தும் பெற்ற உவப்பைப் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.




திருவொற்றியூர்

வடசென்னைப் பகுதியில், கடலை ஒட்டி அமைந்த ஊர் திருவொற்றியூர்.  இங்குள்ளது சிவன் கோயில் எனினும், கோயிலில் எழுந்தருளியிருக்கும் வடிவுடை அம்மன் பேராலேயே இவ்வூர் அடையாளப்படுத்தப்படுகிறது. நான் திருவொற்றியூரைப் பேருந்து மூலம் சென்றடையும்போது, கோயிலைக் கடந்து ஒரு நிறுத்தத்தில் இறங்கி விட நேர்ந்தது. எனவே, ஒரு ‘ஆட்டோ’வில் அமர்ந்து சிவன் கோயிலுக்கருகில் என்னைக்கொண்டுவிடச் சொன்னபோது ஓட்டுநருக்குச் சிவன் கோயில் தெரியவில்லை. ’வடிவுடை அம்மனின் கோயிலுக்கருகில் கொண்டு சேர்க்கிறேன்; அங்கு கேட்டறிந்து கொள்ளுங்கள்’ என அவர் கூறியதிலிருந்து, சிவன் கோயில் என்னும் அடையாளம் வடிவுடை அம்மனின் ஆற்றலில் கரைந்து போனது புலப்பட்டது.

தியாகேசர் கோயில்

கோயில் கோபுரத்தின் நுழைவு வாயிலில் “அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில்” என்னும் பெயரே காணப்பட்டது. இணையப்பக்கம் ஒன்றில், இறைவன் பல பெயர்களில் குறிக்கப்படுவதைக் கண்ணுற்றேன். படம்பக்க நாதர், ஒற்றீசுவரர், ஆதிபுரீசுவரர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர் எனப் பல்வேறு பெயர்கள். இவற்றில், தியாகேசர் திருமுன் (சன்னதி), ஆதிபுரீசுவரர் திருமுன், ஒற்றீசுவரர் திருமுன் ஆகிய மூன்று திருமுன்கள் கோயில் வளாகத்தில் இருந்தமை உள்ளே சென்றபின்னர் தெரியவந்தது. கூடுதலாக, மீனாட்சி சுந்தரேசுவரர் திருமுன்னும் இருந்தது. ஒரே கோயில் வளாகத்தில் பல திருமுன்கள். வளாகமும் பெரிதாகவே இருந்தது. இக்கோயில், சைவக் குரவர் மூவர் பாடிய பெருமை பெற்றது குறிப்பிடத்தக்கது. வள்ளல் பெருமானும், தமிழறிஞர் மறைமலை அடிகளும் இங்குள்ள இறைவன் மேல் பாடல் இயற்றியுள்ளனர் என்பது கூடுதல் செய்தி. சென்னையில் வள்ளல் பெருமானார் வாழ்ந்த சில ஆண்டுகளில் அவர் இக்கோயிலின் தாய்த்தெய்வமான வடிவுடையம்மனை ஏறத்தாழ நாளும் கண்டு வழிபட்டுள்ளார் எனக் கூறலாம்.

நுழைவாயில் கோபுரம்

இக்கோயிலுக்கு வரும் எண்ணம் நன்கு திட்டமிடப்படாமல் தோன்றி, நிகழ்வாக மாற்றமுற்றது என்னும் காரணத்தால் தகுந்த போர்க்கருவிகளின்றிக் களத்தில் நிற்கும் கையறு நிலையில் இருந்தேன். நுண்ணறிவு ஆற்றலைப்பெற்ற ஒரு கைப்பேசி கையில் இருந்தும் பயனற்ற சூழ்நிலை. பழுது காரணமாகக் கைப்பேசியின் நினைவுப்பண்டாரத்தில் இடமில்லை. தொலைவிலிருந்து கோயிலின் கோபுரத்தையும், கோபுர நுழைவுப்பகுதியில் அதிட்டானத்து ’உபபீடத்தில்’  (கோயிலின் அடித்தளம், கோயில் கட்டிடக்கலையில் ’அதிட்டானம்’ என்றும், கோபுரத்தின் உயரத்தைக் கூட்டவேண்டிக் கூடுதலாகக் கட்டப்பெறும் பகுதி ‘உபபீடம்’ என்றும் அழைக்கப்பெறும்) ஓர் அடிக்குள் அமையுமாறு  வடிக்கப்பட்ட குறுஞ்சிற்பம் ஒன்றையும் ஒளிப்படம் எடுத்தவுடன்,  கைப்பேசியின் ஆற்றல் மறைந்து ஒளிப்படம் எடுக்க இயலாது போயிற்று. 

ஆதிபுரீசுவரர் கருவறை விமானம்

மேற்கொண்டு கோயிலுக்குள் சென்று ஆதிபுரீசுவரர் கருவறை விமானத்தைச் சுற்றிலும் கொட்டிக்கிடந்த கல்வெட்டுப் புதையலைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவ்வளவு கல்வெட்டுகள்.  சிலரின் கையெழுத்து பொடி எழுத்துகளாக இருக்கும்.  நுணுக்கி நுணுக்கி எழுதுவது என்று இதைக் குறிப்பிடுவார்கள். அதுபோன்றே இங்கிருக்கும் கல்வெட்டு எழுத்துகளும் நுணுக்கி எழுதப்பட்டிருந்தன; ஆனால் அழகுற எழுதப்பட்டிருந்தமைதான் சிறப்பு. சோழர் காலத் தமிழ் எழுத்து. கருவறை ‘கஜ பிருஷ்டம்’ என்னும் வகையைச் சேர்ந்தது. ‘கஜ பிருஷ்டம்’ என்பது எளிதில் பொருள் விளங்கா வட சொல். ‘தூங்கானை மாடம்’ என்று தமிழ்ச் சொல்லால் குறிப்பிட்டால் சற்றுப் புரிந்துகொள்ளலாம். ஆனாலும், இச்சொல்லும் கோயிற்கட்டிடக்கலை அருஞ்சொற்களுள் ஒன்று என்னும் காரணத்தால் எல்லாருக்கும் பொருள் விளங்கும் எனக் கூறவியலாது. ஆனையின் (யானையின்) பின்புறத்தைப் போன்று அரைவட்ட வடிவில் கருவறையும் அதைத் தொடர்ந்து ஒரு நீள் சதுர வடிவில் அர்த்த மண்டபமும் அமைந்த அமைப்பு ‘தூங்கானை மாடம்’ எனப்படும். (நினைவில் வந்தது: கருவறையின் வட்டப்பகுதி, கேரளக் கோயில்களில் முக்கால் வட்டமாக இருப்பதால் கேரளக்கோயிலை ‘முக்கால் வட்டம்’ என்றே கேரளக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.)  இந்தத் தூங்கானை மாடம் முழுதும் கல்வெட்டுகள். தூங்கானை மாடமும், அதைச் சுற்றிலும் உள்ள சிறிய சுற்றுப்பாதையும் நாம் வெளியில் சுற்றிவருகின்ற சுற்றாலைப் பகுதியிலிருந்து (பிராகாரம்) சற்றே கீழிறங்கிய பள்ளத்தில் அமைந்துள்ளன. சுற்றாலை முழுதும் உருண்டை வடிவிலான தூண்கள்.  ஏறத்தாழ ஐம்பது அறுபது தூண்கள் இருக்கலாம். அவற்றுள், சுற்றாலையின் தென்சிறகில் இருக்கும் தூண்களில், உருண்டைப்பகுதியில் உருளும் வட்டப்பரப்பு முழுதும் எழுத்துப் பொறிப்புகள் உருள்வது அழகோ அழகு. எழுத்துகளைப் படிக்க நாமும் தூணைச் சுற்றி வட்டமிடவேண்டும்.

மீண்டும் கோபுர நுழைவாயில்

கல்வெட்டுகளின் அழகை எடுத்துச் சொல்லும் ஆர்வத்தால் கோபுர வாயிலில் இருந்து நேரே ஆதிபுரீசுவரர் கருவறைக்குச் சென்றுவிட்டதில் கோயிலின் தொடக்கப் பகுதி விளக்கப்படாமல் நின்று போனது. எனவே, மீண்டும் கோபுர நுழைவாயில். கோபுரத்தின் வலப்பக்க உபபீடத்தில் (நம் பார்வையில் நம் இடப்பக்கம்) இருக்கும் குறுஞ்சிற்பம் கொற்றவையின் சிற்பம். எட்டுக்கைகளுடன், அசுரன் ஒருவனைக் கொன்றழிக்கும் கொற்றவை. வாள் கொண்டு அசுரனை முன்புற வலது கையால் குத்திய நிலை. கொற்றவையின் வலது கால் மடித்தும், இடதுகால் தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில், அன்னை தன் அனைத்துக் கைகளிலும் ஆயுதங்களை ஏந்தியவாறு வடிக்கப்பெற்றிருக்கிறாள் எனலாம். நாள் பட்ட தூசும், எண்ணெய்ப்பற்றும் சிற்பத்தின் நுண்ணிய வடிவக்கூறுகளை மழுங்கச் செய்துவிட்டன. நின்ற நிலையில் இச்சிற்பத்தைக் காண இயலாது. கீழே குனிந்து பார்க்கவேண்டும்.


கொற்றவை-குறுஞ்சிற்பம்


கோபுரத்தின் அதிட்டானம் – அமைப்பு

கோபுரத்தின் அதிட்டானம் முன்னர்க் குறித்தவாறு, உயரம் கூட்டிய நிலையில் உபபீடத்தில் தொடங்குகிறது. அதன் அடுத்த நிலையில் கர்ணகூடுகள் என்னும் அமைப்பு. கூடுகளின் நடுவில் மனித முகங்கள், அநுமன், மகிஷாசுர மர்த்தனி ஆகிய சிற்றுருவங்களைச் செதுக்கியிருகிறார்கள் சிற்பிகள். அதற்கு அடுத்த நிலையில் தாமரை இதழ்கள் மடிந்திருப்பது போல் சிற்பச் செதுக்கல்கள். இவற்றைக் கோயில் கட்டிடக்கலை பத்மம் எனக் குறிப்பிடும். அதனை அடுத்து நீள் சதுரத்தில் ஒரு சம தளப்பரப்பு -  கல்வெட்டுகளைப் பொறிப்பதற்கென்றே அமைந்தவாறு, பள்ளிச் சிறுவனின் ‘சிலேட்டுப் பலகை’  நீண்டு கொண்டு போவதைப்போல -  நீள்கின்றது. இது ‘ஜகதி’  என்று குறிப்பிடப்பெறும். ஓரிடத்தில், பலகை வடிவில் அல்லாது பெரிய தாமரை இதழாக விரிந்திருந்தது. இந்த வடிவம் ‘பத்ம ஜகதி’ எனப்படும். ஒரு கலவையான ஜகதி அமைப்பு. ஜகதிக்கு மேல்,  ‘குமுதம்’ என்னும் அமைப்பு உள்ளது. இந்தப் பகுதியையும் பலவாறு அமைப்பார்கள். முப்பட்டை வடிவம், எண்பட்டை வடிவம், உருண்டு திரண்ட உருள் குமுதம், சிலம்பு உருவமுடைய குமுதம் ஆகிய பல்வேறு வடிவங்கள். இங்கு, சிலம்பு, எண்பட்டை, உருள் குமுதம் ஆகிய மூன்று வடிவங்கள் கலந்த கலவை காணப்படுகிறது. குமுதத்துக்கு மேலே அகன்ற சுவர்ப் பரப்பு. அதில், ’கும்ப பஞ்சரம்’  என்னும் அமைப்பு. இரண்டு கும்ப பஞ்சரங்கள் இருந்தன. கும்ப பஞ்சரம் ஒரு பூச்சாடியை நினைவு படுத்தும். பூச்சாடியில் பூக்களை அடுக்கி வைத்தது போல, கும்ப பஞ்சரத்தின் மேல் பகுதியில் கொடி கொடியாய்த் தோரண வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

நுழை வாயில்

கோபுர நுழைவாயில், எல்லாக் கோயில்களிலும் உள்ளவாறு, உயர்ந்த வாயிலையும், நிலைக்கால்களில் கொடிகள் சுற்றிய இரு பெண்களின் சிற்பங்களையும் கொண்டுள்ளது. நுழைவாயிலைக் கடந்து கோயிலின் பெரிய வளாகத்தின் தொடக்கத்தில் நிற்கின்றோம். வழக்கமாக இந்த இடத்தில் நின்று பார்க்கையில் நம் பார்வைக்கு நேரே புலப்படுவன கோயிலின் கொடிக்கம்பமும், அடுத்துள்ள  பலிபீடமும், நந்தியுமாகவே அமையும். ஆனால், இங்கு ஒரு மாற்றம். நாம் நிற்குமிடத்துக்கு இடப்புறம் சற்றுத் தள்ளியே கொடிக் கம்பமும், பலி பீடமும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளன. கொடிக்கம்பம் பித்தளையால் வேயப்பட்டிருந்தது. நந்தி மண்டபத்தில் இருக்கும் நந்திச் சிற்பம், மற்ற கோயில்களிலிருந்து மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டிருந்தது. தரையில் அமர்ந்த தோற்றம் அல்ல. ஒரு தூணின் மீது அமர்ந்த தோற்றம். தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. சரியாகப் படிக்க இயலவில்லை. (இங்கு தொடங்கிக் கோயிலை விட்டு வெளிவரும் வரை, பார்க்கின்ற கல்வெட்டுகள் அனைத்தையும் படிக்கமுடியவில்லையே என்ற ஏக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கோயில் நிருவாகத்தாரிடம் முறையாக ஒப்புதல் பெற்றுக் கல்வெட்டுகளின் மீது வெண்ணீற்றையோ, வெள்ளை மாவையோ பூசியும், ஒளிப்படம் எடுத்தும் படிக்கவேண்டும் என்னும் அவா எழுந்தது. நிறைவேறுமா என்று தெரியாது. கல்வெட்டுகளைப் படிக்க ஒரு நாள் போதாது. ஆனால், வாய்ப்புக் கிடைக்கும்போது வந்து படிக்கவேண்டும்.)  

கோயில் – உள் வளாகம்

நாம் நிற்குமிடத்தின் வலப்பக்கம் தெற்கு நோக்கி வடிவுடை அம்மன் திருமுன். நமக்கு எதிரே சிறியதொரு மண்டபத்தில் அம்மனை நோக்கிய நிலையில் சிம்மச் சிற்பம். அம்மனுக்குரியது. அம்மன் திருமுன்னிலிருந்து தொலைவில் சிம்ம ஊர்தியை அமைத்திருப்பது ஒரு மாறுதலாக உள்ளது. நம் இடப்பக்கம் கொடிக்கம்பத்தை அடுத்து, ஜெகதாம்பிகை உடனமர் ஜெகந்நாதர் திருமுன். கிழக்குப் பார்த்து. அதை அடுத்து இடப்பக்கம், அமிர்த கடேசுவரர் திருமுன். இதுவும் கிழக்குப் பார்த்து. அமிர்த கடேசுவரர் திருமுன்னுக்கு எதிர்ப்புறம் மேற்கு நோக்கிய நிலையில் சூரியன், தேவார முதலிகள் நால்வர், சகஸ்ரலிங்கம், இராமநாதர் ஆகியோரின் சிறு திருமுன்கள். இவற்றைக் கடந்து மேற்கு நோக்கிச் சென்றால், ஒரு நீண்ட கோயில் முகப்பு. தென்கோடியில் தியாகேசர் திருமுன். அடுத்து முருகன் திருமுன். அதை ஒட்டிக் குழந்தை ஈசுவரர் திருமுன். சூரியன் திருமுன்னைக் கடந்து தெற்கே, கோயிலின் திருச்சுற்று மதிலை ஒட்டியவாறு வடக்கு நோக்கி வரிசையாக எழுந்தருளப்பெற்ற இருபத்தேழு (இ)லிங்கத்திருமேனிகள். இவை, பண்டு வெட்ட வெளியில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். தற்போது இவை அனைத்தையும் உள்ளடக்கியவாறு கூரையோடு கூடிய நீண்ட அறையாகக் கட்டியிருக்கிறார்கள். இருபத்தேழு (இ)லிங்கத்திருமேனிகளுக்கு மேல், கூரையில் விமானக்கூடு அமைத்திருக்கிறார்கள். இவ்விருபத்தேழு (இ)லிங்கத்திருமேனிகளும் இருபத்தேழு நாள்மீன்களுக்குரியவை. அதாவது இருபத்தேழு நட்சத்திரங்கள்.  அவரவர் அவரவர்க்குரிய (இ)லிங்கத்திருமேனியை வணங்கலாம்.

தியாகேசர் திருமுன்

தியாகேசர் திருமுன்னின் முக மண்டபத்திலேயே வடக்கே ஒரு நுழைவாயில். அதற்குள் சென்றதும் நேர் எதிரே ஆடவல்லான் (நடராசர்) மண்டபம். நாம் வாயிலின் இடப்பக்கம் நடந்து வடப்பக்கமாகத் திரும்பியவுடன் கிழக்கு நோக்கி ஒரு வாயிலும், வாயிலின் இருபுறமும் இரு வாயிற்காவலர் (துவார பாலகர்) சிற்பங்களும் காணப்படுகின்றன.  துவாரம் என்பது வாயிலைக் குறிக்கும் வட சொல். பாலக  என்பது, பாலகர் எனத் தமிழில் நாம் கருதும் இளம் பருவத்தினர் பொருளைத் தராது. ‘PALAKA’  என்னும் ஆங்கில ஒலிப்புடைய சொல். ‘பால்என்பது காத்தல் என்னும் பொருளமைந்த வடசொல். இந்தி மொழி அறிந்தோர் பால் போஷக்  என்னும் தொடரைத் தெரிந்திருப்பர். ‘பால்’ -  காத்தல்; ‘போஷ்’ -  வளர்த்தல். போஷ்->போஷாக்கு. மேற்படி வாயிலும், வாயிற்காவலர் சிற்பங்களும்  ஆதிபுரீசுவரர் திருமுன்னுக்குரியவை.

ஆதிபுரீசுவரர் திருமுன்

ஆதிபுரீசுவரரின் வாயிற்காவலர் சிற்பங்கள் காண மிகவும் அழகானவை. நல்ல உயரமும் பருத்த வடிவமும் கொண்ட இச்சிற்பங்கள் சோழர் காலக் கலைப்பாணிக்கு எடுத்துக்காட்டாய் நிற்பவை. இச்சிற்பங்களின் இருபுறமும்  சுவர்களில் கல்வெட்டுகள். படிக்க இயலாதவாறு நிழலும் இருளும் உள்ள சூழல். நம் வலப்பக்கக் காவலர் சிற்பத்தை அடுத்து, வெளியேறும் வாயில் ஒன்று. வாயிலுக்கு அருகில் வலக்கையில் மழு ஏந்திய சிவனின் சிற்பத் திருமேனி. மழுவாள் நெடியோன் என்னும் பெயர் நினைவுக்கு வந்தது. சிவனின் செவிகள் இரண்டிலும் ஒன்று போல் அணிகலன் இல்லை. வலது செவியில், மகர குண்டலமும், இடது செவியில் ஓலை அணியும் காணப்படுகின்றன. உடலில் வெள்ளை ஆடை அணிவிக்கப்பட்டிருந்ததால் இச்சிற்பம் சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் எது என்பதை அறியவில்லை. அறுபத்து நான்கு திருவடிவங்களையும் இனம் காணும் சிற்ப அறிவும் நமக்கில்லை. இந்த வாயிலைக் கடந்ததும் உள்ள சுவரின் மேல், வெயில் பட்ட பரப்பில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருந்தன. பல முறை முயன்று ஒரு முயற்சியில் ஒளிப்படம் எடுக்க இயன்றது.

தூங்கானை மாடம்

ஆதிபுரீசுவரர் கருவறையும், விமானமும்  தூங்கானை மாட வடிவிலானவை. அதிட்டானம், கோட்டச் சிற்பங்கள் அனைத்தும் அழகானவை. கோட்டச் சுவர்களில் கல்வெட்டுகள். சுற்றுப்பாதையில் உள்ள தூண்களிலும் கல்வெட்டுகள். இவை முன்னரே மேலே வண்ணிக்கப்பட்டுள்ளன. சுற்றுப்பாதையில், கற்கூரையில் சிறு சிறு திறப்புகளை அமைத்திருக்கிறார்கள். வெயிலின் ஒளி உள்ளே பாய்வதற்கான அமைப்பு. வெயிலின் ஒளி, மெல்லிய வெண்திரைச் சீலையை விரித்துத் தொங்கவிட்டதைப் போலச் சிறு திறப்புகளின் அருகில் குறுகிச் சிறுத்தும், தரையைத் தொடுகின்ற நிலையில் அகன்று விரிந்தும் பாய்ந்து இழிந்து பரவியது ஓர் அழகான காட்சி.  மேற்குச் சுவரில் மாலவனின் சிற்பம் அழகு. அடுத்துக், கருவறையின் வடக்குப் பகுதியில் நிலவறை போன்ற பகுதியில் கருவறை அமைப்போடு கொற்றவை எழுந்தருளியிருத்தல் இக்கோயிலின் ஒரு சிறப்புக்கூறு...


கோட்டச் சிற்பம் -  பிள்ளையார்


கோட்டச் சிற்பம் -  மாலவன்



வட்டப்பாறை அம்மன்

மேற்படி அம்மன் (கொற்றவை), வட்டப்பாறை அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். கருவறைக்கு முன்புறம் பாறைத்தரையில் வட்டவடிவச் சக்கரம் வடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தாந்திரிக வழிபாட்டு மரபு போலத் தெரிகின்றது. அசுரனைக் கொன்ற துர்க்கையின் சினம் குறையா உள்ளத்தைக் குளிர்வித்துத் தணிக்கும் வழியாய் தாந்திரிக எந்திரத்தை நிலை நிறுத்தம் (தாபனம்) செய்திருப்பதாகப் பூசையாளர் கூறினார். வட்டக்கல் இருக்கும் இடத்தில் கிணறு இருந்ததாகவும் எந்திரத் தாபனம் செய்த பின்னர் கிணற்றை மூடி வட்டக்கல்லை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். இக் கொற்றவைத் தாயைக் குலதெய்வமாக விசுவகர்ம மக்கள் வழிபடுகிறார்கள் என்பதும், ஒவ்வொரு மாதமும் முழுநிலாக் காலத்தே இம்மக்கள் இந்த வட்டப்பாறை அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்துகிறார்கள் என்பதும் கூடுதல் செய்தி.

வட்டப்பாறை அம்மன் அல்ல – இவள் வட்டப்பிறைப் பிடாரி

வட்டப்பாறை அம்மன் என்று இன்று மக்கள் வழிபடும் சக்தி அன்னை, கல்வெட்டில் வட்டப்பிறைப் பிடாரியார் என்று குறிக்கப்பெறுகிறாள். இடைக்காலத்திலும் அதற்குச் சற்று முன்னரும் காளிக் கடவுளைப் ’பிடாரியார்’   என்று பெயரிட்டு அழைக்கும் வழக்கு இருந்தது. சோழர் காலக் கல்வெட்டுகளில் ‘பிடாரியார் கோயில்’ என்று பல இடங்களில் வருவதைக் காணலாம். பிடாரி என்னும் இச்சொல், சமணம் வழங்கியது எனக் கருதலாம். ‘படாரர்’  (ஒலிப்பு : BHATARAR)  என்னும் சொல் சமணத்தில், துறவிகள், கல்வி கற்பிக்கும் ஆசான்கள், கடவுளர்  ஆகியோரைக் குறிக்கும். அதன் பெண்பாற்பெயர் ‘படாரி’  என்பதாம். இப்பெயர், காளிக் கடவுளுக்கு வழங்கியது. இப்பெயரே, ‘பிடாரி’  என மருவியது கண்கூடு. கொடியோரைக் கொல்லச் சினம் கொண்ட உருவுடன் திகழும் காளியை ஒத்த, சினம் காட்டும் பெண்களைப் ’அடங்காப் பிடாரி’  என்று மக்கள் வழங்கியது இக்காரணம் கொண்டே எனலாம். தமிழகத்தின் தென்கோடி மற்றும் கேரளக் கல்வெட்டுகள், அரசனையும், கடவுளையும் ‘படாரர்’ என்று குறிப்பதைக் காணலாம். (‘பழாரர்’ என்று திரிந்து வழங்குவதும் உண்டு).  “கானகம் உகந்த காளி”  எனச் சிலப்பதிகாரம் கூறும். 

சைவ சமயப் பெரியார் சங்கரர் இக்கோயிலுக்கு நேரில் வருகை தந்ததாகவும் காளிக் கடவுளின் சினத்த ஆற்றலை எந்திரத் தாபனம் செய்து கட்டுப்படுத்திக் கிணற்றுள் ஒடுக்கியபின்னர் கிணற்றின் வாய்ப்புறத்தைக் கல் கொண்டு மூடியதாகவும், கடுஞ்சினம் மறைந்து அன்னை அமைதியான முகம் காட்டினாள் என்றும் ஒரு செய்தி கூறுகிறது. (SOUTH INDIAN SHRINES – by P.V. JAGADISA AYYAR)

கௌளீசுவரர் கோயில்

தியாகேசர் திருமுன்னுக்குப் பின்புறம் ஒரு சிறிய திருமுன். கௌளீசுவரர் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. முதலில், கௌளீசுவரர் என்பதன் பொருள் புலப்படவில்லை. பின்னர், தொல்லியல் நண்பர் கூறியபிறகே பொருள் விளங்கியது. கௌளீசுவரர் என்பது லகுளீசர் என்பதன் மருவிய வடிவம். கருவறைக்குள் இருப்பது சிவ உருவம் அன்று. லகுளீசர் சிற்பம் என்கிறார்கள். இருளில் இறையுருவத்தைப் பார்க்கவில்லை. இந்தத் திருமுன்னின் அதிட்டானப் பகுதியில் ஒரே ஒரு கல்வெட்டு காணப்பட்டது.  வெயிலின் காரணமாக நின்று நேரமெடுத்துச் செய்யவேண்டிய பணி.  முன்னர்க் குறிப்பிட்டவாறு, கல்வெட்டுகளைப் படித்துச் செய்திகள் அறிந்துகொள்ள ஒரு நாள் போதாது. இந்த லகுளீசர் சைவ சமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகிய பாசுபத சமயத்தைத் தோற்றுவித்தவர்.

கௌளீசுவரர் கோயிலை அடுத்து வளாகத்தில் சிறிது தொலைவு நடந்தால் மீனாட்சி சுந்தரர் திருமுன் உள்ளது. இடப்பக்கத்தில், கோசாலை. கோசாலையை ஒட்டிச் சற்றுக்கிழக்கே முன்னர்க் குறிப்பிட்ட இருபத்தேழு (இ)லிங்கத்திருமேனிகள் எழுந்தருளுவிக்கப்பட்ட பகுதி. இதன் அருகில் கம்பிகளால் அடைக்கப்பட்ட நீள் சதுர வளாகம். அதனுள், ஆங்காங்கே மரங்களுக்கிடையில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட பலகைக் கற்களை மேடையிட்டுப் பதித்து வைத்துள்ளனர். இந்தத் தனிக்கல்வெட்டுகள் பல்லவர் காலக் கல்வெட்டுகள் என்று அறிகிறோம். (கீழே, ‘கல்வெட்டுகள்’ என்னும் தலைப்பைக் காண்க).

ஒற்றி ஈசுவரர் கோயில்

கோயிலின் பெரிய வளாகத்தில் தியாகேசர் – ஆதிபுரீசுவரர் கோயில்களுக்குப் பின்புறம், வடமேற்குப்பகுதியில் ஒற்றி ஈசுவரர் கோயில் அமைந்துள்ளது.  இக்கோயிலின் காலம் சோழர் காலம் அன்று எனக் கேள்விப்படுகிறோம். இங்கு கல்வெட்டுகளும் இல்லை. பிற்காலக் கட்டுமானம். நகரத்தார் கட்டுவித்த கோயிலாக இருக்கக் கூடும்?  பட்டினத்தாரின் உருவச் சிலை, வள்ளலாரின் உருவச் சிலை ஆகியன தூண்களில் காணப்படுகின்றன.


கல்வெட்டுகள்

முருகன் திருமுன்னில் கருவறையின் தெற்கு அதிட்டானக் குமுதத்தில் (முப்பட்டைக் குமுதம்) நான்கு வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டும், நந்திச் சிற்பத்தூணில் ஒரு கல்வெட்டுப் பொறிப்பும் நீக்கி,  இக்கோயில் வளாகத்தில் ஆதிபுரீசுவரர் கோயிலில் மட்டுமே கட்டுமானப் பகுதியில் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. இவை தவிர, இருபத்தேழு (இ)லிங்கத்திருமேனிகள் அமைந்துள்ள பகுதியில்,  கம்பி வேலியிட்ட இடத்தில், மேடையிட்டுச் சிமெண்ட்டுப் பூச்சுகளில் பதித்த பத்துப்பன்னிரண்டு பலகைக் கற்களில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.  இவை, வானிலைச் சூழல் கேடு காரணமாகவோ, அன்றித் திருப்பணியின் பெயரால் நிகழும் கேடு காரணமாகவோ தேய்ந்தழிந்த நிலையில் உள்ளன. இவற்றின் பாடங்களை ஆங்கிலேயர் காலத்துப் பதிவு நூல்களில் மட்டுமே காண இயலும். நேரடியாகக் கல்வெட்டுகளைப் படித்து மகிழும் சூழல் இல்லை.   வருங்காலத்தில், கல்வெட்டு எழுத்துகளைப் படிக்கக் கற்றுக்கொண்ட  ஆர்வலர்களும் பயிற்சிக்குக் கூடக் கல்வெட்டுகளைக் காண இயலாது போகுமோ என்னும் அச்சம் எழுகிறது. கோயில்களைப் புதுப்பிக்கிறோம் என்று திருப்பணி செய்யும் சேவையாளர்கள் கல்வெட்டுகளைத் தொடர்ந்து அழித்து வருதல் கண்கூடாக நிகழ்கிறதே.

நேரில் படித்த கல்வெட்டுகள்

(அ)
ஆதிபுரீசுவரர் கோயிலில், தென் சுற்றில், தென்முகக் கடவுள் சிற்பத்துக்கருகில் ஆர்வலர் ஒருவர் வெண்ணீற்றால் பூசியிருந்த ஒரு துண்டுப்பகுதியைப் படித்தேன். அதன் பாடம் வருமாறு :

தென்சுவரில் கல்வெட்டு – பட்டிகைப்பகுதி – பாடம்

1     ழ இளங்கோ வேளார் இத்தேவர் பண்டாரத்து ஒடுக்கின அன்றாடு நற்காசு இருநூற்று நாற்பது இக்காசு இருநூற்று நாற்

2     னையூர் ஊரோங் காசு அறுபது கொண்டு விற்றுக்குடுத்த நீர் நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை பனிச்சை புலத்துக்கு (இ) சிறு கண்

3     யாலுங் குளங்களாலும் மடுக்களாலும் வாய்க்கால்களாலும் கிணற்றுகளாலும் (நீரழியாத) வண்ணம் பாச்சியும் எறிச்சுங்

4     சு நூற்று நாற்பத்து நாலு இக்காசு நூற்று நாற்பத்து நாலும் ஆட்டாண்டு தோறும் (நின்றிறை)யாக இறுப்பதாக இக்காசுக்கு நிவந்தஞ்செய்




கல்வெட்டுச் செய்தி

முழுமையாகப் படிக்காத இக்கல்வெட்டின் துண்டுப்பகுதிலிருந்து மிகுதியான செய்திகள்  கிடைக்காதெனினும், கல்வெட்டின் இந்த வரிகள் தெரிவிக்கும் செய்திகளைப் பார்ப்போம். கோயிலுக்கு நிலம் கொடையளித்த செய்தி பெறப்படுகிறது. வீரசோழ இளங்கோ வேளார் என்பவர் கோயில் பண்டாரத்தில் (கருவூலத்தில்)  இருநூற்று நாற்பது காசுகள் ஒடுக்கியது (செலுத்தியது)  அறிகிறோம். இவர், சோழ நாட்டு உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரமூர் நாட்டு நடார் கிழார் ராஜராஜன் பரநிருபராக்ஷஸநாரான வீரசோழ இளங்கோ வேளார் என்பதாகத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-3, க.வெ. எண் : 64 வாயிலாக அறிகிறோம். ’அன்றாடு’ என்னும் சொல் குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுகளில் காணப்படும் இச்சொல், “கல்வெட்டு குறிக்கின்ற காலத்தில் வழக்கில் உள்ள” என்னும் பொருளைத்தரும்.  இவரிடம் பெற்ற காசின் ஒரு பகுதி (அறுபது காசு)  காசினைக் கொண்டு ஊர்ச்சபையினர் ஊர் நிலம் ஒன்றை விற்றுக் கொடுத்துள்ளனர் எனக்கருதலாம். இந்த நிலத்தை இளங்கோ வேளார் கோயிலுக்குக் கொடையாக அளித்தார் எனக்கொள்ளலாம். கொடை நிலம், நன்செய்ப் பயிர் விளையும் நல்ல நீர் நிலம் என்பது அறியப்படுகிறது. நிலத்தின் எல்லையும் கல்வெட்டில் விளக்கப்படுகிறது. ஊரார், நூற்று நாற்பத்து நாலு காசினை அரசுக்கு இறையாகச் (வரியாக)  செலுத்துகிறார்கள்.  இந்த வரி, நின்றிறை (மாறாத வரி – fixed tax) எனத் தீர்மானம் ஆகிறது. 

(ஆ)
முருகன் கருவறை – தெற்கு அதிட்டானக் குமுதத்தில் உள்ள கல்வெட்டு

கல்வெட்டுப்பாடம்

1        ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு ஆறு வீரநரஸிம்ஹ தேவனான யாதவராயன் ஓலை ஜெயங்கொண்டசோழ மண்டலத்து புழற்கோட்டமான விக்கிரம சோழ வளநாட்டு உடையார்

2        திருவொற்றியூருடைய நாயனார் கோயிற்தானத்தார் கண்டு திருவொற்றியூருடைய நாயனார் கோயிற் திருச்சுற்றாலையில் நாம் எழுந்தருளுவித்த நாயனார் வீரநரஸிம்ஹ ஈச்வரமுடைய நாயனாற்கு தேவதான இறையிலியாக விட்டுக் கொடுத்தது

3        நாயறு நாட்டுப் பெரியமுல்லைவாயில் நாற்பால் எல்லையும் உள்பட்ட  வேலி நிலம் …… நிலம் முப்பதிற்று வேலியும் நன்செ(ய்) புஞ்செ(ய்) (உட்பட) எப்பேற்பட்டமையும் வெட்டியுஞ் சிறுபாடிகாவல் அரிமுக்கையுங் கண்காணி எடுத்துக்கொ. . . . . .


4        யுட்பட்ட நெல்லாயமும் (காசாயமும்) உட்பட்ட . . . . . .  சந்திராதித்தவரை செல்வதாக . . . . .  இப்படிக்குக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள் . . . . . . .       


கல்வெட்டுச் செய்தி

இக்கல்வெட்டு, சோழ அரசன் மூன்றாம் இராசராசன் காலத்தது. அவனுடைய ஆறாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. அவனது ஆட்சிக் காலம் கி.பி. 1216-1246. எனவே கல்வெட்டின் காலம் கி.பி. 1222 ஆகும். கல்வெட்டைப் பொறித்தவன் வீரநரஸிம்ஹ தேவனான யாதவராயன் என்பவன். இவன் மூன்றாம் இராசராசன் காலத்தில் சோழரின் மேலாண்மையின் கீழ் இப்பகுதியில் ஆட்சி செய்த குறு நில அரசன் அல்லது தலைவன் ஆகலாம். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : தென்னிந்தியாவுக்கான தொல்லியல் அளவீட்டுத்துறையின் 1888-89-ஆம் ஆண்டுக்குரிய ஆண்டறிக்கையில் ஹுல்ட்ஸ் அவர்கள், திருமலைக் (திருப்பதி) கல்வெட்டு ஒன்றில், திருமலைக் கோயில் வீர நரசிம்ஹதேவ யாதவராயன் என்பவனின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இவனும் திருவொற்றியூர்க் கல்வெட்டில் காணப்படும் வீர நரசிம்ஹ தேவனான யாதவராயனும் ஒருவனா என்னும்  கருத்து எழுகிறது. இது, ஆய்வுக்குரியது). இவன் தன் பெயரில் வீரநரஸிம்ஹ ஈச்வரமுடைய நாயனாரை ஒற்றியூர்க் கோயில் சுற்றாலையில் எழுந்தருளுவித்தான் என்று கல்வெட்டு கூறுகிறது. அதாவது வீரநரசிம்ஹ ஈச்வரம் என்னும் பெயரில் சிறு கோயிலை எடுப்பித்தான். கோயிலை எடுப்பித்த இக்கல்வெட்டின் இருப்பிடம் தற்போது சுப்பிரமணியர் கோயில் என்று வழங்குவதால், இக்கோயிலே வீரநரசிம்ஹ ஈச்வரம் ஆகும் என்றும், கோயிலில் எழுந்தருளப்பெற்ற இறைவன் சிவலிங்க வடிவம் என்றும் உறுதியாகக் கூறலாம். காலப்போக்கில் முருகன் கோயிலாக மாற்றம் பெற்றது எனலாம்.  இந்தக் கல்வெட்டு இல்லையெனில் இச்செய்தி தெரியவராமல் போயிருக்கும். அரசன் நேரடியாகத் தன் ஆணையைத் தெரிவிக்கும் ஓலை மற்றும் கல்வெட்டுகளில்தாம் “நம் ஓலை” என்று வரும். இந்தக் கல்வெட்டிலும் அவ்வாறு வருகிறது.

தான் எடுப்பித்த வீரநரசிம்ம ஈசுவரம் கோயிலுக்கு மேற்படிச் சிற்றரசன் பெரியமுல்லைவாயில் ஊரிலிருக்கும் முப்பது வேலி நிலத்தைத் தேவதான இறையிலியாக (வரிகள் நீக்கி) அளிக்கிறான். பெரியமுல்லைவாயில் என்னும் இவ்வூர், நாயறு நாட்டில் அமைந்திருந்தது. நாயறு நாட்டில் நாயறு, மீஞ்சூர், திருக்காட்டுப்பள்ளி, புதூர், வல்லூர், பெரியமுல்லைவாயில் ஆகிய ஊர்கள் இருந்தன. பெரியமுல்லைவாயில் என்னும் ஊர், திருமுல்லைவாயிலினின்றும் வேறுபட்டது. ’கூகுள்’ வரைபடத்தில் மீஞ்சூரைச் சுற்றி நாயறு, புதூர், வல்லூர் ஆகிய ஊர்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் பெரியமுல்லைவாயில் காணப்படவில்லை.

தேவதான நிலத்துக்கு, நெல்லாயம், காசாயம், வெட்டி, பாடிகாவல், அரிமுக்கை ஆகிய வரிகள் விலக்களிக்கப்பட்டிருந்தன.

இக்கல்வெட்டு, இந்தியத் தொல்லியல் அளவீட்டு ஆய்வுத்துறையின் 1912-ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில் பதிவாகியுள்ளது. ஆனால், கல்வெட்டின் பாடம் எந்த நூலில் உள்ளது எனத் தெரியவில்லை.

ஒளிப்படத்தில் கண்ட கல்வெட்டுகள்

ஆதிபுரீசுவரர் கோயில் வாயிற்காவலர் சிற்பத்தை ஒட்டியுள்ள வெளிவாயில் சுவரில் தெரிந்த கல்வெட்டுப்பகுதியை முன்னர்க் குறித்தவாறு வெயிலின் வெளிச்சத்தில் மொத்தமாக ஓர் ஒளிப்படமாக எடுத்திருந்தேன்.  இப்படத்தில் ஐந்து கல்வெட்டுகள் கலந்து காணப்பட்டன. முழுக்கல்வெட்டாக இரு சிறு கல்வெட்டுகளும், முழுமையாகப் புலப்படாத பெரிய கல்வெட்டுகள் மூன்றின் பகுதிகளும் இருந்தன.  முழுக்கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது மூன்றாம் குலோத்துங்கனின் முப்பத்தொன்றாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும். அடுத்த முழுக்கல்வெட்டு, விசயநகர அரசர் தேவராயரின் காலத்தது. 

அ)
மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுப்பாடம் (முழுக்கல்வெட்டு)


1    ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையுமீழமுங் கருவூரும் பாண்டி
2    யன் முடித்தலையுங் கொண்டருளி வீர அபிஷேகமும் பண்ணியருளின 
3    ஸ்ரீதிரிபுவன(வீர்) தேவற்கு யாண்டு முப்பத்தொன்றாவது உடையார்
4    திருவொற்றியூருடைய நாயனாற்குச் சந்தி விளக்கு எரிப்பதற்கு வெண்கு
5    ன்றக்கோட்டத்துக் குளத்தூரில் குளந்தையாண்டார் மட
6    த்திலிருக்கும் பெற்றான் மகன் . . . . . . முகத்தான்  விட்ட பசு ஒன்று
7    நாகு ஒன்று கன்று ஒன்று



                                     பசு-நாகு கன்று  கொடை
மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு


கல்வெட்டுச் செய்தி


இக்கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தது. அவனுடைய ஆட்சிக்காலம் கி.பி. 1178-1218.  கல்வெட்டு அவனுடைய முபத்தொன்றாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டதாகையால் கல்வெட்டின் காலம் கி.பி. 1209. திருவொற்றியூர் கோயிலில் சந்திவிளக்கெரிக்க பசு ஒன்றும் அதனுடன் கன்றுகள் இரண்டும் கொடையாக அளிக்கப்பட்டன. கன்றுகளில் ஒன்று பெண் கன்று. நாகு என்று கல்வெட்டுக் குறிக்கிறது. ஆண்கன்று, கன்று என்னும் பொதுப்பெயராலேயே குறிக்கப்படுகிறது. கொடையாளி, குளத்தூரில் இருக்கும் குழந்தையாண்டார் மடத்தைச் சேர்ந்த பெற்றான் என்பவனுடைய மகன் என்று கல்வெட்டு கூறுகிறது. குளத்தூர் இன்றும் சென்னைப்பகுதியில் உள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் வெண்குன்றக்கோட்டம் என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது. வெண்குன்றம் என்னும் பெயரில் தற்போது ஊர் காணப்படவில்லை. திருவொற்றியூர் புழல் கோட்டத்தில் இருந்தது. புழல் தற்போதும் உள்ள ஊர். 

ஆ)
விஜயநகரர் காலத்துக் கல்வெட்டுப்பாடம் (முழுக்கல்வெட்டு)

1    வீரஸ்ரீப்ரதாப தேவராயற்குச் செல்லாநின்ற க்ரோதி வருஷம் கும்ப நாயற்று
2    பூர்வ பக்ஷத்து பௌர்ணையும் சனிக்கிழமையும் பெற்ற மகத்து நாள் ஜயங்கொண்
3    ட சோழமண்டலத்து புழற்கோட்டத்து நாயினார் திருவொற்றியூர் உடைய நாயினார்
4    ஸ்ரீபண்டாரத்துக்கு புழல் நாட்டில் மணலியில் ஊரவரோம் கல்வெட்டிக் குடுத்தபடி
5    ஸ்ரீபண்டாரம் படம்பக்கநாயகப் பேரளத்தில் எல்லைக்கல்லுக்கு மேற்க்கு எங்கள் எல்
6    லையில் அளங்கட்டி உப்புப்பயிற் செய்யலாந மட்டு இத்தனையும் குடிநீங்காத் தேவதா
7    நம் ஆக உடையவற்கு நாங்கள் குடுத்த அளவுக்கு இந்த எல்லை உப்புப்பயிற்(ச்) செய்யலாந மட்டு இத்தனை
8    யும் திருச்சூலத்தாபனம் பண்ணிக்கொண்டு  இந்த உப்புப்பயிற்ச் செய்து குடிவாரமளங்களுக்கு விட்
9    டு மேல்வாரம் முத[ல்] கைகொண்டு னாயினார் திருமாசித் திருநாள் ஏழாந்திருநாள் குறவறுப்ப உள்ள
10   து எங்கள் உபயம் (ஆக) சந்திறாதித்தவரைக்கும் குடி நீங்கா தேவதாநமாக கல் வெட்டிக் குடுத்தோம் மணலியில் ஊரவரோம் உ-



விஜய நகரர் தேவராயர் கல்வெட்டு

கல்வெட்டுச் செய்தி


இக்கல்வெட்டு, விஜயநகர அரசர் முதலாம் தேவராயர் காலத்தைச் சேர்ந்தது.  இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1406-1422. கல்வெட்டில் குரோதி வருடம் குறிக்கப்பட்டுள்ளது. குரோதி வருடம் அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சியில் கி.பி. 1424-ஆம் ஆண்டு அமைகிறது.  தேவராயரின் ஆட்சிக்காலத்துள் குரோதி ஆண்டு அமையவில்லை. எனவே, தமிழ் ஆண்டுக்குறிப்பு பிழையாக இருக்கலாம். கும்ப நாயறு என்பது கும்ப ஞாயிறு என்பதன் திரிந்த வடிவம். இது மாசி மாதத்தைக் குறிக்கும். (மேஷ இராசி முதல் மீன இராசி வரை உள்ள பன்னிரண்டு இராசிப்பெயர்களைச் சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களுக்குச் சூட்டும் வழக்கு இடைக்காலத்தில் இருந்தது. கல்வெட்டில் வானிலைக் குறிப்புகள் உள்ளன. ’பூர்வ பக்ஷம்’ என்பது வளர்பிறைக்காலம். பௌர்ணை என்பது முழுநிலாக்காலம் (பௌர்ணமி). மகத்து நாள் என்னும் தொடர், மக நட்சத்திரத்தைக் குறிக்கும்.

திருவொற்றியூர் கோயிலுக்கு உப்பளம் இருக்கும் ஊர்ப்பகுதியை குடிநீங்காத் தேவதானமாகக் கொடை அளிக்கிறார்கள் மணலி ஊரவர். உப்பளம் மூலமாகப் பெறும் வருவாயில் மேல்வாரம் என்னும் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியைக் கோயில் ஸ்ரீபண்டாரத்தில் (கருவூலத்தில்) செலுத்துவதாகவும், உப்பளக் குடிகளுக்குக் குடிவாரம் என்னும் வருவாய்ப் பகுதியை அளிப்பதாகவும் கோயில் ஸ்ரீபண்டாரத்துக்கு ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கிறார்கள் ஊரவர். ஏற்கெனவே, ’படம்பக்க நாயகப் பேரளம்’ என்னும் உப்பளம் மணலி அல்லது திருவொற்றியூர்ப் பகுதியில் இருந்துள்ளமை கல்வெட்டில் குறிக்கப்பெறுகிறது. உப்பளங்கள் பெரும்பாலும் அரசர் பெயர்களால் அழைக்கப்படும். இங்கிருந்த உப்பளம் திருவொற்றியூர்க் கோயிலின் இறைவன் பெயரால் அழைக்கப்படுகிறது.

உப்பினை ‘உப்புப் பயிர்’ என்று கல்வெட்டு குறிப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அக்காலத்தே, நெல்லுக்கு நிகரான மதிப்பை உப்பும் பெற்றிருந்தது. நெல் போலவே, உப்பையும் ஒரு பயிராகவே கருதினார்கள். வேளாண் கூலியாக நெல்லும் (சம்பு) உப்பும் (அளம்) கொடுக்கப்பட்டன என்பதிலிருந்து இதை உணரலாம். இதற்குச் சான்றாக, தமிழ் ஆய்வறிஞர் தேவநேயப் பாவாணரின் கூற்றைக் காண்க :

பழங்காலத்தில் சம்பளம் கூலமும் (கூலமாகக் கொடுக்கப்படுவது கூலி.) உப்புமாக
க் கொடுக்கப்பட்டது. கூலம் என்பது  தானியம் . கூலத்திற் சிறந்தது நெல்லாதலின்நெல்வகையிற் சிறந்த சம்பாவின் பெயராலும்உப்பின் பெயராலும்சம்பளம் என்னும் பெயர் உண்டாயிற்றுசம்பும் அளமும் சேர்ந்தது சம்பளம்சம்பு என்பது சிறந்த நெல்வகைக்கும் சிறந்த கோரை வகைக்கும் பொதுப்பெயர்.

ஓங்கிவளர்ந்த சம்பா நெற்பயிரும் சம்பங்கோரையும் ஒத்த தோற்றமுடையனவா யிருத்தல் காண்க.நெல்லைக் குறிக்கும் சம்பு என்னும் பெயர் இன்று சம்பா என வழங்குகின்றது. உகரவீற்றுச் சொற்கள் ஆகார வீறு பெறுவது இயல்பே.
-டு: கும்பு - கும்பா, தூம்பு - தூம்பா, குண்டு - குண்டா. கும்புதல் = திரளுதல்.

திருவொற்றியூர் கோயிலில் மாசி மாதம் ‘திருமாசித்திருநாள்’  என்னும் பெயரில் ஏழு நாள்கள் பெரியதொரு விழாக் கொண்டாடியுள்ளனர் என்பது அறியவருகிறது. இவ்விழாவுக்கான செலவினங்களுக்கு மேற்படி உப்பள வருவாயைப் பயன்படுத்தியுள்ளனர்.  குடி நீங்காத் தேவதானம் என்னும் தொடரும் கருதுதற்குரியது.  மணலி ஊரவர் தங்கள் உப்பளத்தைக் கோயிலுக்குக் கொடை அளித்தாலும், அங்கு பணிபுரிந்த குடிகள் தொடர்ந்து பணியில் நீடிப்பார்கள் என்றும் அவர்கள் அப்பணியிலிருந்து நீங்காமல் இருக்கலாம் என்று உறுதி அளிப்பதையே ‘குடி நீங்காத் தேவதானம்’ என்னும் தொடர் குறிக்கிறது.


இ)
பெரிய கல்வெட்டு – முழுக்கல்வெட்டையும் காட்டாத ஒளிப்படம் பகுதி - 1

கல்வெட்டின் பாடம்

1                            கோவிராசகேசரிபன்மரான த்ரிபுவனச் சக்கரவத்(தி)கள் ஸ்ரீராஜாதிராஜதேவர்க்கு யாண்டு ஒன்பதாவது ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற்கோட்டத்து

2                            (ஸ்ரீ)காரியம் அரியபிரான் ப(ட்)டனும் சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச்வர பண்டிதனும் காலும் பிடாருஞ்செய்துகொண்ட சோழமண்டல பிடாரனு

3                            பங்குனியுத்திரத்து ஆறாந்திருநாளான புதன்கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயிலையத்தன்று படம்பக்கநாயக தேவர் திருமகிழின் கீட் திருவோலக்கஞ்செய்தெழுந்தரு

4                            (வி)ண்ணப்பஞ்செய்ய நம்மூர்களில் இகணையூர் அமுதந் கிழவன் பெரியான் சோமனுக்குத் தண்டீசன் விலையாக விற்றுக் காணியாகக் கொடுக்கவென்று திருவாய்மொழி

5                            (பெரியா)ன் சோமனுக்கு ஸ்ரீபண்டாரத்திறையிறுக்கவும் இவநுக்குமிவன் வம்சத்தார்க்கும் விற்றொற்றி ப்ரதிக்ரயத்துக்குரித்தாவதாக விற்றுக் கொடுத்தோம் இப்படிக்கு இவை ம

6                            (இ)ப்படிக்கு இவை சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச்வர பண்டிதன் எழுத்து ||-  இப்படிக்கு இவை காலும் பிடாருஞ் செய்துகொண்ட சோழமண்டல பிடாரன் எழுத்து||- இப்படிக்

7                            (க்கினான்) எழுத்து ||-

                                                      பங்குனியுத்திரத்து ஆறாந்திருநாள்

ஸ்ரீராஜாதிராஜதேவர்க்கு யாண்டு ஒன்பதாவது 



கல்வெட்டுச் செய்தி

இக்கல்வெட்டு, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி ஐந்தில் காணப்படுகிறது. (க.வெ. எண் : 1359) இரண்டாம் இராசாதிராசன் காலத்தது. ஆட்சியாண்டு ஒன்பது. இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1166-1178 என்பதனால், கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 1175 ஆக அமையும்.

திருவொற்றியூர்க் கோயிலில் கொண்டாடப்பட்ட பங்குனி உத்திரத்திருநாள் விழாவின்போது ஆறாந்திருநாளில் அரசன், திருவோலக்கம் செய்தருளினான் என்கிறது கல்வெட்டு. (ஸ்ரீ)காரியம் அரியபிரான் ப(ட்)டன், சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச்வர பண்டிதன், காலும் பிடாருஞ்செயங்கொண்ட சோழமண்டல பிடாரன் ஆகியோர் விண்ணப்பம் செய்ய, அரசன், இகணையூர் அமுதந் கிழவன் பெரியான் சோமனுக்குத் தண்டீசன் விலையாக (நிலம்) விற்றுக் காணியாகக் கொடுக்கவென்று திருவாய் மொழிந்தருளுகின்றான். பயிரிடப்படாமல் கிடந்த நிலங்களைப் பயிர் செய்துகொள்ளுமாறு செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டின்படி, நிலத்தை விலைக்குப் பெற்றுக்கொண்ட அமுதன் கிழவன் பெரியான் சோமன் பொறுப்பேற்றுக் கொண்டு கோயில் ஸ்ரீபண்டாரத்துக்கு (கோயில் கருவூலம்) வரி செலுத்த ஒப்புக்கொள்கிறான். மேற்படி நிலம் பெரியான் சோமனுக்கும் அவன் சந்ததியாருக்கும் உடைமை என்றும் அவர்கள் விற்கவும், அடைமானம் (ஒற்றி) வைக்கவும் உரிமையுள்ளவர் என்று விற்பனை ஆவணம் குறிக்கிறது. சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச்வர பண்டிதன், காலும் பிடாருஞ் செயங்கொண்ட சோழமண்டல பிடாரன் ஆகியோர் சான்றொப்பம் இடுகிறார்கள். இக்கல்வெட்டைப் படித்தபோது தெரிந்துகொண்ட ஒரு சுவையான செய்தி கீழ் வருமாறு:

இக்கல்வெட்டில், மூன்றாம் வரியின் சில எழுத்துகளை நான் பிழையாகப் படித்தேன்.  அவ்வெழுத்துகள் ஆவன:

தி  ரு    கி  ழி    கி 

கல்வெட்டுகளில்,  எழுதப்பட்ட முறைப்படி நான் படித்தது சரியே. பிழையன்று. ஆனால், கல்வெட்டு எழுத்துகள் எழுதும்போது மெய்யெழுத்துக்குப் புள்ளியிடல் இருக்காது. சில போது எழுத்தமைதி, “ள”, “ன”  வேறுபாடு காட்டாது. அந்த வகையில், நான் “ன்”  எழுத்தைப் புள்ளியின்றியும் “ள” கரமாகவும் படித்தது ஒரு பிழை. ”கி”  எழுத்தை நெடிலாகப் படிக்காதது மற்றொரு பிழை. அது போலவே, “ட” கர எழுத்தைப் புள்ளியிடாது படித்ததும் பிழை.  இப்பிழைகளால்,  “திருமகிழிளகிட”  எனப் படித்ததால் பொருள் விளங்கவில்லை. திருமகிழ்+ இளகிடக எனக்கொண்டு சரியான பொருளை உணர இயலவில்லை.  பின்னர், சுந்தரர் கதையும், மகிழ மரமும் பற்றி அறிந்த பின்னரே கல்வெட்டுச் சொல் ”திருமகிழின் கீட்” (மகிழின் கீழ்) என்பதும் அதன் சரியான பொருளும் தெரியவந்தது. குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் அண்மையில் கோவையில் ‘வாணவராயர் அறக்கட்டளை’ சார்பாகச் சிறப்புச் சொற்பொழிவொன்று ஆற்றும்போது, கோயிற் சிற்பங்களின் அழகையும் உள்ளுறையாய் அமைகின்ற சிறப்பையும் புரிந்து கொள்ளப் புராணக் கதைகளைப் பற்றிய அறிவு மிகத்தேவையான ஒன்று என்பதாகக் குறிப்பிட்டார்.  அதுபோலவே, கல்வெட்டுப் படிக்கையிலும் சில பின்னணிகள் – சற்று நல்ல மொழியறிவு, சற்றே இலக்கியங்கள் பற்றிய அறிவு, கல்வெட்டு சொல்லவரும் செய்தியின் இடம், பொருள், ஏவல் ஆகிய சூழல்கள் - நமக்குத் தெரிந்திருக்கவேண்டும் என உணர்ந்தேன்.

கல்வெட்டு மகிழ மரத்தை “மகிழ்”  என்று கூறுவது மனங்கொள்ளத்தக்கது. இதுபோலவேதான்,  “ஊனமிலி”  என்னும் இறைவனைக் குறிக்கும் தேவாரச் சொல்லை அடையாளம் காண்பதும். 


ஈ)
பெரிய கல்வெட்டு – முழுக்கல்வெட்டையும் காட்டாத ஒளிப்படம் பகுதி - 2

கல்வெட்டுப் பாடம்


1           தை மனங்களிப்ப மனுநீதி தழைத்தோங்கச் சக்கரமுஞ் செங்கோலுந் திக்கனைத்துஞ் செல நடப்ப கெற்பகாலம் புவிகாக்கப் பொற்பமைந்த முடி புனைந்து வாழ வேங்கை
2           . (டின்பம்) வடதிசையில் மாமேருவில் மடங்கடிப்பத் திக்கானை யிருநாலையுஞ் செய(ஞ்) செய்து கொடு கொண்டு விக்கலனைத் தலையரிந்து செழு முத்தின் குடைநிழற்கீழ் முறைமை
3           யூருடையான் திருஆனித்திருநாள் ஆறாந்திருநாளில் ராஜராஜந் திருமண்டபத்து திருவோலக்கஞ் செய்தருளி (விநோதங்)கண்டருளாநிற்க மடபதியும் தாநத்தாரும் ஸ்ரீமாஹேச்வர கண்காணி செய்வாநும்
4           செய்யப் பண்ணுகவென்று திருவாய்மொழிந்தருள இவ்வூர்க்குத் தண்டேச்வர விலையாகத் திருவாஞ்சியமுடையான் ஆட்கொண்டான் மல்லகோவுக்கு இவ்வூரில் ஐஞ்சில் ஒன்றும் பருத்திக்குடையான் (அரு)
5           (வையம் புக்)கானுக்கு இருபதில் ஒன்றும் (இ . . தம) பொன்மலை(க்)  குன்றமுடையானுக்கு இருபதில் ஒந்றும் நன்மாங்கிழவன் உய்யவந்தான் மலையாழ்வாநுக்குப் பத்தில் ஒன்றும் சாத்தந்தை சிவக்(கொ)
6           (த்தோம்) இப்படிக்கு இவை (மடமுடைய ஸரஸ்வதி) பண்டிதன் எழுத்து ||- இப்படிக்கு இவை ஸ்ரீமாஹேச்வர கண்காணி திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து ||-  இவை ஸ்ரீகாரியம் வயல்நாட்டரையன் எழுத்து ||-



திருஆனித்திருநாள் ஆறாந்திருநாளில்


இக்கல்வெட்டும், தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி ஐந்தில் காணப்படுகிறது. (க.வெ. எண் : 1359) மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தது. ஆட்சியாண்டு பத்தொன்பது.  இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1178-1218 என்பதனால், கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 1197 ஆக அமையும்.  கல்வெட்டின் முதற் பகுதி அரசனது மெய்க்கீர்த்திப் பகுதியாகும். மெய்க்கீர்த்தி என்பது ஒருவகையில் அரசனை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். அவனுடைய பெயர், பீடு, போர்களில் பெற்ற வெற்றி ஆகிய சிறப்புச் செய்திகளைக் கொண்டது. 

திருவொற்றியூர்க் கோயிலில் ”இராஜராஜன்” என்னும் பெயரில் அமைந்த திருமண்டபத்தில் அரசன், கோயிலில் கொண்டாடப்பட்ட ஆனித்திருநாள் விழாவின்போது ஆறாந்திருநாளில் திருவோலக்கம் செய்தருளினான் என்கிறது கல்வெட்டு. திருவோலக்கம் என்பது அரசன் காட்சி தந்து வீற்றிருத்தலைக் குறிக்கும். அரசு அதிகாரிகள், மக்கள் சார்பாக நிற்கும் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து ஆட்சி நடப்பை அறிந்து கொள்ளுதல் மற்றும் மக்கள் குறைகளை விண்ணப்பம் மூலம் தீர்த்துவைத்து ஆணைகள் பிறப்பித்தல் ஆகியன இந்தத் திருவோலக்கத்தின் போது நிகழ்வன எனலாம். இக்கல்வெட்டிலும் அவ்வாறு விண்ணப்பம் ஒன்று செய்யப்படுகிறது. திருவொற்றியூரில் இருக்கும் மடபதி, தானத்தார்,  ஸ்ரீமாஹேச்வர கண்காணி செய்வான் ஆகியோர் அரசனிடம் விண்ணப்பம் செய்கின்றனர். புலியூர்க் கோட்டத்து ஆதன்பாக்கத்துக் காணியாளர்கள்  (உழுது பயிர் செய்யும் உரிமை பெற்றவர்கள்) சந்ததியில்லாமல் பயிர் செய்யாதொழிய, பயிர் நிலம் நெடுங்காலம் பாழ் பட்டுக் கிடந்ததென்று ஆவன செய்ய அரசனிடம் விண்ணப்பம் செய்கிறார்கள். அரசன், “பயிர் செய்யப்பண்ணுக” என்று திருவாய் மொழிந்தருளுகின்றான். அதற்காகத் திருவாஞ்சியமுடையான் ஆட்கொண்டான் மல்லகோ,  பருத்திக்குடையான், பொன்மலைக்குன்றமுடையான், நன்மாங்கிழவன் உய்யவந்தான் மலையாழ்வான், சாத்தந்தை சிவக்(கொழுந்து) ஆகியோரைக் கோயில் தானத்தார் நியமித்து அவர்களுக்குச் சில பங்குகள் தருகிறார்கள். இந்த ஏற்பாட்டுக்குக் கல்வெட்டி ஆவணப்படுத்துகிறார்கள். மூல ஓலை ஆவணத்தில் எழுதி, (மடமுடைய ஸரஸ்வதி) பண்டிதன், ஸ்ரீமாஹேச்வர கண்காணி திருச்சிற்றம்பலமுடையான், ஸ்ரீகாரியம் வயல்நாட்டரையன் ஆகியோர் சான்றொப்பம் இடுகிறார்கள்.


உ)
பெரிய கல்வெட்டு – முழுக்கல்வெட்டையும் காட்டாத ஒளிப்படம் பகுதி - 3

கல்வெட்டின் பாடம்

1      கு யாண்டு . . வது திருப்பங்குனி உத்திரத் திருநாளில் ஐந்தாந்திருநாள் இரவு இராஜராஜன் திருமண்டபத்திலே பெருமாள் திருவோலக்கம் செய்தரு(ளினபடி)
2      (டை)ப் பெருமாள் திருமடைப்பள்ளிப் புறத்துக்கு வேண்டுவன குறைவறுத்துப் போதக்கடவனாக தேவமண்டலத்து ஊர்களில் ஜயங்கொண்டசோழ ம
3      (லே) பையூர் நாடாழ்வான் வளையமழகியான் ஒற்றியாழ்வான் விலைகொண்டு (ப/ய ற)  அனுபவித்துப்போந்த இவ்வடுகப் பெரும்பாக்க
4      அருமொழிதேவ வளநாட்(டு) . . [ம்ப)லக்கூற்றத்துப் பனங்குடிப் பனங்குடையான் அழகிய மணவாளன் கண்ணுடைப் பெருமாள் பையூர் நாடாழ்வான்
5      . . . . . .  வேணுமென்று  விண்ணப்பஞ்செய்ய திரு(வன்ன)மாயருளி நங்கோவணவரும் தானத்தாரும் கோயில் முதற்கணக்குத் திருவொற்றியூருடையா
6      பொன்னும் . . . . . (லும்) இப்படிக்கு சிலாலேகை செய்துகொள்வதென்று திருவாய் மலர்ந்தருளுகையாலே இவ்வடுகப்(பெரும்பா)க்கம் செம்பியன் (பனங்குடியேன்)
7      . . . . . . .  கற்கடக நாயற்று அமரபக்ஷத்துப் பன்னிரண்டாந்(தேதி)யும் ப. . யும் உத்திரட்டாதியும் பெற்ற வெள்ளிக்கிழமை
8      (தோம் நிலவிலையான) கையெழுத்து தேவமண்டலத்து . . .(னில்) ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற்கோத்தமான விக்கிரம
9      . .  லைக்கு வடக்கும் இவ்வூர் எல்லைக்கு கிழக்கும் வடுகப்பெரும்பாக்கமான செம்பியன் (பனங்)குடி எல்லைக்குத் தெற்கும் தெனாற்பாலெ[ல்]லைக்கு
10     கோயிற்தானத்தோம் இவூனமிலி விளாகத்துக்கு நிலவிலை நிச்சயித்த . . . (ப)லக் கூற்றத்துப் பனங்குடிப் பனங்குடையான் அழகியமணவாளன் கண்ணுடைப் பெருமாளேன்  இத்திருனாமத்துக்காணியான  (ஊன)மிலி வி
11     அன்றாடு நற்பழங்காசு 67 இப்பழங்காசு அறுபத்தே(ழு)
12     னங்குடையான் கண்ணுடைப்பெருமாளுக்கும் இவந் வம்ஸத்தாற்கும் விற்றொற்றி ப்ரதிக்ரயங்களுக்குரித்தாவதாக(வும் பெய)
13     டைப்பெருமாளுக்கு விற்றுச் சிலாலேகை பண்ணச் சொன்னோம் இக்கோயிற் தானத்தோம் இப்படிக்கு இவை (மட)


திருப்பங்குனி உத்திரத் திருநாளில் ஐந்தாந்திருநாள்



கல்வெட்டுச் செய்தி

ஒளிப்படம் காட்டும் பகுதியில் அரசனின் பெயர் காணப்படவில்லை. ஆனால், அரசன், பங்குனி உத்திரத்திருநாள் விழாவின்போது ஐந்தாம் நாள்  திருவொற்றியூர்க் கோயிலில் இருந்த “இராஜராஜன்”  திருமண்டபத்தில் வீற்றிருந்து ஆணை பிறப்பிக்கிறான் என்பதை அறிகிறோம். நிலக்கொடை பற்றியும், கொடை நிலத்தின் எல்லைகள் பற்றியும் கல்வெட்டு கூறுகிறது. கொடை நிலம் கோயிலின் மடைப்பள்ளிப்புறத்துக்காகக் கொடுக்கப்படுகிறது. மடைப்பள்ளி என்பது உணவு சமைக்கும் அடுக்களையைக் குறிக்கும்.  கொடை நிலம் “விற்றொற்றி”  உரிமையுடன் பனங்குடையான் கண்ணுடைப் பெருமாளுக்கு விற்கப்படுகிறது.  கொடை நிலம் “ஊனமிலி விளாகம்” என்று கல்வெட்டில் குறிக்கப்பெறுகிறது.  ஊனமிலி என்பது இறைவனைக் குறித்த ஓர் அடைமொழியாகும் (ஏழாந்திருமுறைத் தேவாரப்பதிகம்-திருநனி பள்ளி) . இறைவன் பெயரால் அமைந்த நிலவளாகம். ’கோவணவர்’  என்னும் சொல் கோயிலில் பணிசெய்யும் ஊழியருள் ஒரு வகையினரைக்குறிக்கும். புழல் கோட்டம் என்னும் சொல் சற்றுப்பிழையாகப் ‘புழற்கோத்தம்’ எனக் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.

பொதுச் செய்திகள்

ஒற்றியூர் பெயர்க்காரணம்

ஒற்றியூர் பெயர்க் காரணம் பற்றி,  “மூத்த மொழி தமிழ்” என்னும் இணையப்பக்கத்தில்  கண்ட செய்தியை இங்கே தந்துள்ளேன்.

”ஒரு காலத்தில் தலங்கள் உள்பட எல்லா ஊர்களுக்கும் இறை விதித்து அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது அவனுக்கும் ஓலை நாயகத்திற்கும் தெரியாதபடி வரி பிளந்து ``இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க`` என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து அவ்வூர்க்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், பெருமானுக்கு எழுத்தறியும் பெருமான் என்றும் பெயர் ஆயிற்று. ``ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும் நாட்ட மலரும் திருநுதலார்`` என்னும் பெரியபுராணச் செய்யுளும் காண்க. ”

படம்பக்க நாயகன் – பெயர்க்காரணம்

வாசுகி என்னும் பாம்பு இறைவனை வழிபட, இறைவன் தன் திருமேனியில் வைத்துக்கொண்ட காரணத்தால் திருவொற்றியூர் இறைவனுக்குப் படம்பக்க நாயகன் என்னும் பெயர் அமைந்ததெனக் குறிப்புண்டு.

காபாலிகம்

திருவொற்றியூர்ப்பகுதியில் காபாலிகம் என்னும் ஒரு சைவப்பிரிவு  பரவியிருந்துள்ளது. காபாலிகத்தைச் சேர்ந்த “மயானமுடைய” சதுரானன பண்டிதர்  என்பவரின் காபாலிக மடம் திருவொற்றியூர்க் கோயிலில் இருந்தது என்று அறிகிறோம். காபாலிகரது சோமசித்தாந்தத்தை விரித்துப் படித்த வாகீச பண்டிதர் திருவொற்றியூரில் இருந்தமை மேலே கல்வெட்டொன்றில் குறிக்கப்பட்டதை நோக்குக. சோழ அரசன் முதலாம் பராந்தகனின் மகன் இராசாதித்தன் போரில் இறந்துபட, அவனுடைய சேனைத்தலைவனான வெள்ளன் குமரன் என்பான் மனமுடைந்து துறவறம் மேற்கொண்டு திருவொற்றியூர்ச் சதுரானனர் மடத்தில் சேர்ந்தார் என்று வரலாற்றுக் குறிப்புண்டு.

திருவொற்றியூர்க் கோயிலில் தேவரடியார்கள்

கோவில்களில் ஆடல் மகளிரும் பாடல் மகளிரும் இருந்து சமயப் பணியாற்றினர். இவருள் 'பதியிலார்' ஒரு வகையினர்; ரிஷபத் தளியிலார்' (சிவன் கோவிற் பெபண்டுகள்) மற்றொரு வகையினர்; திருவொற்றியூர்க் கோவிலில் சொக்கம், சந்திக்குணிப்பம் என்னும் நடன வகைகளைப் பதியிலார் ஆடும்போது, ரிஷபத்தளியிலார் மிழற்றுப் பாடலை வழங்கினர். ரிஷபத்தளியிலார் அகமார்க்கம், வரிக்கோலம் என்னும் நடன வகைகளை நடித்துக் காட்டினர். பதியிலார் திருப்பதிகக் கருத்துகட்கும், திருவெம்பாவைக் கருத்துகட்கும் ஏற்றவாறு நடித்தனர் என்பது திருவொற்றியூர்க் கல்வெட்டால் தெரிகின்றது.
(சைவசமயம் – டாக்டர் மா. இராசமாணிக்கனார் நூலிலிருந்து).

சுந்தரரும் மகிழ்(மகிழ) மரமும்

சைவக் குரவர் நால்வரில் சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரை இங்குள்ள மகிழ மரத்தடியில் உறுதியளித்து மணந்தார். இந்நிகழ்வை நினைவு படுத்தும் வகையில் திருவொற்றியூர்க் கோவிலில் ”மகிழடித் திருவிழா”  நடைபெற்றுவருகிறது. மேலே இ)  எனக்குறிப்பிட்ட கல்வெட்டுப்பகுதியில்,  இவ்விழா பண்டுதொட்டு நிகழ்ந்தமை பற்றிக்  குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்க. பங்குனி உத்திரம் ஆறாந்திருநாள் அன்று இந்நிகழ்வு நடைபெற்றது. இறைவர் திருப்படம்பக்க நாயக தேவர் மகிழமரத்தடியில் எழுதருளப்பெற்று வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் அரசனே நேரடியாக வந்திருந்து கண்டு மகிழ்ந்தான் எனக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். “திருமகிழின்கீட்”   என்பது கல்வெட்டுத் தொடராகும்.

திருவொற்றியூரின் பெருமை

இவ்வூர்க்கோயிலில் கல்வெட்டுகள் பொறிப்பித்த மன்னர்களின் பட்டியல் பெரிது.

சோழமன்னர்கள்:
முதலாம் பராந்தகன்
உத்தமசோழதேவன்
முதலாம் இராஜராஜ சோழன்
முதலாம் இராஜேந்திரசோழன்
முதலாம் இராஜாதிராஜ சோழன்
முதலாம் குலோத்துங்கசோழன்

கங்க பல்லவமன்னர்கள்
விஜய அபராஜித போத்தரையர்
கோவிஜய நிருபதுங்கவர்மர்
கோவிஜய கம்பவர்மர்

பாண்டியர்க
சடையவர்மன் சுந்தரபாண்டியன்

இராஷ்டிரகூட மன்னர்கள்
கன்னர தேவன்

விசயநகர வேந்தர்கள்
சாயண்ண உடையார்
தேவராய மகாராயரின் குமாரர் புக்கண்ண உடையார்
வீரப்பிரதாப தேவராய மகாராயர்

சம்புவராய மன்னர்கள்
ராஜ நாராயண சம்புவராயர்

கல்வெட்டுகளின் எண்ணிக்கையும் நூற்றுக்கும் மேல் எனலாம்.  இத்தனை மன்னர்கள் இத்தனைக் கல்வெட்டுகளைப் பொறித்துள்ளனர் எனில் பண்டு, திருவொற்றியூர் மிக முதன்மையான ஒரு கோயில்-ஊராக இருந்திருப்பதில் ஐயமில்லை. கடற்கரைக்கு அண்மையில் இருந்த காரணத்தால் ஒரு வணிக நகரமாகவும் சிறப்புற்றிருந்தமை அறியலாகும்.  வணிகர்கள் இருந்த பெருந்தெருக்கள் பற்றிய குறிப்புகளும் கல்வெட்டுகளில் உள்ளன. அரசர்கள் நேரில் வந்து சென்ற நிகழ்வுகள், கோயிலில் நடைபெற்ற சிறப்பு விழாக்கள், சமயங்களின் மைய இடமாக இருந்தமை  ஆகிய பலவேறு காரணங்களால் திருவொற்றியூரின் பெருமை அறியப்படுகிறது.  இக்கட்டுரையில் சுட்டப்பெற்ற சில கல்வெட்டுகள் அன்றி, மற்ற கல்வெட்டுகள் அனைத்தையும் ஆய்வு நோக்கில் பார்த்தால் எண்ணற்ற செய்திகளைத் தரவல்லதாகத் திருவொற்றியூர் கோயில்  திகழும் என்பதில் ஐயமில்லை.


இரவில் ஒளிரும் கோபுரம்





துணை நின்றவை
பார்வை நூல்கள் :

1.   கல்வெட்டில் தேவார மூவர்
2.   தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவத்தலங்கள்
3.   திருஅருட்பா (மூல நூல் அல்ல- இணையவழி)
4.   ஆய்வுப்பேழை – கா.ம. வேங்கடராமையா
5.   சைவ சமயம் – கட்டுரைகள் – டாக்டர் மா. இராசமாணிக்கனார்
6.   SOUTH INDIAN SHRINES -  P.V. JAGADISA AYYAR
7.   SOUTH INDIAN INSCRIPTIONS Vol-III
8.   SOUTH INDIAN INSCRIPTIONS Vol-V


இணையப்பக்கங்கள் :

thevaaram.org
(அண்ணாமலை சுகுமாரன்)

நன்றி கூறல் :
கல்வெட்டறிஞர் முனைவர் பூங்குன்றன் அவர்களுக்கு.









துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.