மயிலாடும்பாறை – ஆதித்த கரிகாலன் கல்வெட்டு
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர்
வட்டம், பொ.மெய்யூர் என்னும் சிற்றூரில் மயிலாடும்பாறை என ஊர் மக்கள்
குறிப்பிடும் பாறையில் ஒரு கல்வெட்டைக் கண்டிருக்கிறார் அவ்வூரைச் சேர்ந்த
ச.குப்பன் என்பவர். அக்கல்வெட்டின் ஒளிப்படத்தை அனுப்பியிருந்தார்.
அது ஓர் அருமையான கல்வெட்டு.
இராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு. கல்வெட்டில்
ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக்குறிப்பிடப்பெறுகிறான்.
ஒளக் கண்டனாகிய சிங்க முத்தரையன்
என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக்
கொடுத்ததோடு ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து
கொடுத்துள்ளான். ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை “ஏரிப்பட்டி” என்று
குறிப்பிடப்படுகிறது. ”பட்டி”
என்பது நிலத்தைக் குறிக்கும்.
சில நடுகற்களில் வருகின்ற “உதிரப்பட்டி” என்னும் சொல்லை
ஒப்பிடுக. இறந்த வீரனின் குடும்பத்தாருக்கு (இரத்த உறவு உள்ளவர்) நிலம் கொடையாக
அளிக்கப்படுவதை “உதிரப்பட்டி” என்பார்கள்.
கல்வெட்டுப்பாடமும் கல்வெட்டுப்படமும் கீழே தரப்பட்டுள்ளன.
கல்வெட்டின் பாடம்
ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலை
கொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு
............வது மிலாடுக்குறுக்கைக் கூற்றத்து
..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க
....னேன் இவூர்க்கு நஞ்செயரை
..(ஏ)ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ(ப)
யஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு)
தரையனேந் இத்தர்மம் ரக்ஷித்தான் பா
தம் என்றலைமேலன இதிறக்கினான் கெ
ங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்
தார் செய்த பாவமெல்லாங்கொள்வான்
மேலை கற்றூபும் இட்டாருமிவரே
தூம்பு
என்பது கல்வெட்டில் தூபு என்று வருவது குறிப்பிடத்தக்கது.
திருக்கோவிலூர்
பகுதி சோழர் ஆட்சியின்போது மிலாடுக்குறுக்கைக் கூற்றம் என்னும் நாட்டுப்பிரிவில்
அமைந்திருந்தது.
நன்றி
: வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி, முதலாம் இராசராசனின் தமையன் என்றும்,
கல்வெட்டில் வரும் தூபு என்னும் சொல் கல்லால் செய்த தூம்பைக் (மதகு) குறிக்கும்
என்றும் தகவல் தந்த கல்வெட்டறிஞர் முனைவர் இராசகோபால் அவர்களுக்கு நன்றி.
து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி
: 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக